திங்கள், 13 ஜனவரி, 2025

காங்கிரஸ் துவங்கி விஜய் கட்சி வரை..

நினைவுகளின் சுழலில் - 5

 

 

விஜயரங்கம் தாத்தாவும் விஜியலட்சுமி பாட்டியும்

 

 

வையம் தகளியா வார்கடலே நெய்யாக

வெய்ய கதிரோன் விளக்காக - செய்ய

சுடர் ஆழியான் அடிக்கே சுட்டினேன் சொல் மாலை

இடராழி நீங்குகவே என்று

- பொய்கை ஆழ்வார்

 

          முன்பொரு காலத்தில், தனித்தனியாகத் தலயாத்திரை மேற்கொண்ட பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய மூன்று ஆழ்வார்களும் திருக்கோவிலூர் ஊருக்குள் ஒரே சமயத்தில் நுழையும்போது  பெருமழை பெய்துகொண்டிருந்தது. மழைக்கு ஒதுங்கும் பொருட்டு அலைந்தவர்கள், வேறு வழியின்றி ஒரு குடிசையை நெருங்கினர். ஆழ்வார்களைப் போல கடவுளை அறியாத அந்த குடிசையின் உரிமையாளரான, எளிய வாழ்வு வாழும் ஏழைப் பெண்ணின்  குரல் சொன்னது  " அன்புடையீர் இந்த குடிசையில் ஒருவர் படுக்கலாம், இருவர் அமரலாம், மூவர் நிற்கலாம்".

          வேறு வழி? கிடைத்த இடத்தின் குறுகிய அளவில் புகுந்தனர். மாலை துவங்கிய மழை தொடர்ந்து இரவு பெருமழையாக மாறியது. அந்த அடை மழை  நிற்கும் வரை இருக்க இம்மூவரும் அடைந்து நின்றனர். ஆனால் அங்குச் திடீரென ஒருவன் புகுந்து நின்றுகொண்டிருந்தவர்களில்  நான்காமவராகச் சேர்ந்து இருளில் நெருக்கத்தை உண்டுபண்ணினான். அவன் யார் என உணர்ந்து, அவன்தான்  இறைவன் என தெரிந்து, பொய்கை ஆழ்வார் இயற்றியதுதான் மேற்கண்ட பாடல். சரி எதற்கு இந்த தகவல் என்கிறீர்களா? காரணம் இருக்கிறது..             

          திருக்கோவிலூர் நகரத்தின் மையத்தில் அமைந்துள்ள உலகளந்த பெருமாள் கோயில் அல்லது திரிவிக்கிரம கோயில் கதைதான் இது. இந்த கோவில் விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும். இந்த கோவில் திராவிட கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டது. இந்த கோவில் குறித்து கிபி 6 - 9 ஆம் நூற்றாண்டுகளில் எழுதப்பட்ட நாலாயிர திவ்ய பிரபந்தம் சிறப்பித்துக் கூறுகிறது.  5 ஏக்கர்  பரப்பளவைக் கொண்ட, 192 அடி  உயரம் கொண்ட தமிழ்நாட்டின் மூன்றாவது உயரமான கோயில் கோபுரம் இதுதான்.

ஏன் இந்த கோவில் சிறப்புடையது ?

          மகாபலி மன்னன் தாராள மனப்பான்மை உடையவனாகவும், கடுமையான துறவறம் மற்றும் தவத்தில் ஈடுபட்டு உலகத்தின் பாராட்டைப் பெற்றவனாகவும் இருந்தான். அதைப் பொறுக்காத தேவர்கள் கிருஷ்ணனிடம் முறையிட,  வாமனன் என்ற ஒரு குட்டை பிராமணன் வேடத்தில், அரசனிடம் மூன்றடி நிலம் கேட்கச் சென்றான். ஆனால் மன்னனை ஏமாற்றிய கடவுள், முதல் அடியுடன் வானத்திலிருந்து பூமிக்கு அடியெடுத்து வைத்தார், இரண்டாவது அடியுடன் பூமியிலிருந்து பாதாள உலகத்திற்கு அடியெடுத்து வைத்தார்,  மன்னன் நேர்மையான மன்னன் மகாபலி, தன் வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல், மூன்றாவதாகத் தன் தலையைக் கொடுத்தான்.  எனவே திருக்கோவிலூரில் ஒருகால் தூக்கிய வண்ணம் கடவுளை நீங்கள் கானலாம்.

          சங்ககால புலவர் கபிலர்  தனது வாழ்க்கையின் கடைசி காலகட்டத்தில் திருக்கோவிலூர் பகுதியில் வசித்து தென்பெண்ணையாற்றின் கரை ஓரமாக உயிர் நீத்த காரணத்தால் கபிலர் குன்று அவர் நினைவாக அமைக்கப்பட்டது.  

          இந்த விபரங்கள் எல்லாம் தெரியாத காலத்தில் இந்த கோவிலை நாங்கள் சுற்றி விளையாடிய நினைவுகள் அலையாடுகிறது. இங்கு விளையாடக் கரணம், இக்கோவிலை அடுத்துள்ள பெருமாள் நாயகர் தெருவில்தான் எங்கள் தாத்தா வீடு இருக்கிறது. விஜய ரங்கம் - விஜயலட்சுமி என்னுடைய அப்பாவின் தந்தையும் தாயும் ஆவார்கள்.

          இன்று உள்ள திருக்கோவிலூர் அல்ல எங்கள் பால்யத்தில் நாங்கள் விளையாடிய ஊர். இப்போது புதிய நகர்களில் நிறைய வீடுகள் முளைத்துப் பறந்து விரிந்து நிற்கிறது. அப்போதெல்லாம் சந்தை பேட்டைவரை  ஓடி வருவதும் எப்போதாவது சினிமா செல்வதும் மகிழ்ச்சிக்குரியது. பெண்கள் பள்ளி அருகில் இப்போது ஈஸ்வரி எனப் பெயர் மாற்றம் கொண்ட ஸ்ரீதரன் தியேட்டரும், சந்தை பேட்டையில் உள்ள தனலட்சுமி திரையரங்கமும் உற்சாகத்தின் ஊற்றாய் இருக்கும்.

குளங்கள் இருக்கிறதா?

     உலகளந்த பெருமாள் கோயிலின் அருகே தீர்த்த குளம், பெரிய கோபுரத்தின் பக்கத்தில் தெப்பக்குளம், சந்தப்பேட்டையில் கனகனந்தல் சாலையில் நல்லதண்ணீர் குளம், தனலட்சுமி திரையரங்கம் அருகில் செட்டி குளம், சந்தப்பேட்டையில் பாக்கு திண்ணா குளம்,  உப்பு குளம்,  காவேரி சந்து அருகில் ஒரு குளம்,  சந்தப்பேட்டை தனியார்ப் பள்ளி பின்புறம்  ஒரு குளம், பைபாஸ் சாலையில் ஒரு குளம் உள்ளிட்ட பத்து குளங்கள் இருந்தன ஆனால் இப்போது எத்துணை உள்ளது எனத் தெரியவில்லை. நீர் நிலைகளை அழிப்பதில் மனிதர்களுக்கு அத்துணை அலாதி இன்பம்!?

          திருக்கோவிலூர் சினிமா நினைவு என்றால்..  புதிய இயக்குனர் கே.பாக்கியராஜ் இயக்கி அப்போதுதான் ரிலீஸ் ஆகிப் பரபரப்பாக ஓடிக்கொண்டிருந்த விடியும் வரை காத்திரு படமும் அதற்கு முன்பே ரிலீஸ் ஆகி அப்போது திருக்கோவிலூர் திரையரங்கில் ஓடிக்கொண்டிருந்த விட்டாலாசாரியாவின் ஜகன் மோகினியும் போட்டிப்போட்டு ஓடின. எங்கள் தாத்தா வீட்டிலிருந்து இரு குழுவாகத் திரைப்படத்திற்கு புறப்பட்டுச் சென்றது நினைவுள்ளது. எங்கள் வயதையொத்த வாண்டுகள் ஜகன்மோகினிக்கும், கொஞ்சம் பெரியவர்கள் விடியும்வரை காத்திரு படத்திற்கும் சென்றனர்.

          எங்கள் தாத்தா வீட்டுக் கூட்டம் போனால் பாதி தியேட்டர் நிறம்பிவிடும்! என்ன குழப்பமாய் இருக்கிறதா? எங்கள் மக்கள் தொகை அப்படி. எங்கள் தாத்தா - பாட்டிக்கு 14 பிள்ளைகள். அதில் ஒரு குழந்தை சிறுவயதில் தவறியது போக, 13 குழந்தைகளும் நன்கு படித்து வளர்ந்தவர்கள்தான். அதாவது எனது பெரியப்பா, சித்தப்பா, அத்தைகள் அனைவரும் அரசு ஊழியர்கள் அதைவிடச் சிறப்பு அவர்கள் மணந்தவர்களில் பெரும்பாலும்  அரசு ஊழியராய் இருந்தனர்.  உதாரணம் எனது அப்பா சுகாதாரத்துறை அதிகாரி அம்மா ஆசிரியர்.

காங்கிரஸ் துவங்கி விஜய் கட்சி வரை

          விஜயசுந்தரம் - சந்திரா, லட்சுமிகாந்தன் - சாரதா, செளந்திரராஜன் - ஞானமணி, செல்வம் - தனலட்சுமி, சேகரன் - கிரிஜா, போஸ் - கவிதா, புஷ்பவல்லி - பெருமாள், கனகவல்லி - தனபாலன், சந்திரா - ராமாணுஜம், ராதா - குருநாதன், மீரா - சுப்பிரமணி, கஸ்தூரி - ஷண்முகம், எத்திராஜாம் - ராமாணுஜம் இதுதான் எங்கள் அப்பாவுடன் பிறந்த உடன்பிறப்புகள் அவர்களது இணையர்கள் பட்டியல். இவர்கள் அனைவரும் தங்களது பிள்ளைகளுடன் விடுமுறைக்கு ஒரு வீட்டில் கூடினால் என்னவாகும். ஒரே கொண்டாட்டம்தான்.

          குறைந்தபட்சம் 60 பேருக்காவது காலை காபி துவங்கி, சிற்றுண்டி, மதிய உணவு தயாரிக்க வேண்டுமெனில் வீட்டின் பெண்களின் உழைப்பை நீங்கள் புரிந்துகொள்ள முடியும். பல பத்தாண்டுகள் கடந்து நினைக்கையில் அப்படியெல்லாம் ஒரு வீடும் குழந்தைகளைத் தாங்கி கொண்டாடிய அத்தைமார்களும் இருப்பார்களா என்ற ஏக்கம் பிறக்கிறது. கோபமாக இருந்தால் இஷ்டமா - கஷ்டமா அதாவது காயா  - பழமா என்பதற்கு புது பெயர் சூட்டி எங்களுக்கு முத்தமிட்ட கஸ்தூரி அத்தை, இளம் வயதில் தனது கணவனை இழந்தாலும் கோமளா அக்காவையும் பாபு அண்ணனையும்  கம்பீரத்தோடு வளர்த்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சந்திரா அத்தையும், ஹிந்தி அறிந்த ஆசிரியர் போஸ் சித்தப்பா உள்ளிட்ட அனைவரும்   நினைவு அடுக்குகளில் பொதித்துக் கிடக்கின்றனர்.

          1885ல் துவக்கப்பட்ட காங்கிரஸ் கட்சி துவங்கி 2024ல் துவக்கப்பட்ட விஜய் கட்சிவரை எங்கள் வீட்டில் எல்லா கட்சி பிரதிநிதிகளும் உள்ளனர். ஆம் தமிழக வெற்றிக் கழக கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் பரணி பாலாஜி எனது தம்பி அதாவது எனது சேகர் சித்தப்பாவின் மகன். அரசியலில் எல்லோரும் வருவது மிகவும் நல்லதுதானே!

          எல்லாவற்றையும் மீறி நினைவுகளில் ஒரு சிறு கசப்பு என்னோடு பயணித்துக்கொண்டுதான் இருக்கிறது. நான் சுயசாதியில் திருமணம் செய்யவில்லை என்ற காரணத்தால்  திருக்கோவிலூர் சொந்தங்களில் பலர் எனது திருமணத்திற்கு வரவில்லை. ஆனால் அதுவே சொந்தங்கள் குறித்த பல அனுபவங்களை கொடுத்த சம்பவமாகவும் இருந்தது.  தோழர்களுக்கும் சொந்தங்களுக்குமான வித்தியாசம் அன்று புரிந்தது.

           (நினைவுகள் சுழலும்)

 நினைவுகளின் சுழலில் - 1

நினைவுகளின் சுழலில் - 2 

நினைவுகளின் சுழலில் - 3 

நினைவுகளின் சுழலில் - 4 

1 கருத்து:

  1. இந்தக் கட்டுரை, திருக்கோவிலூர் நகரம் மற்றும் அதன் வரலாற்று சிறப்புகள் குறித்து கலாச்சாரம், பாரம்பரியம் ஆகியவை ஒருங்கே பின்னிப் பிணைந்து ஆவணமாக்கிய நெகிழ்வான பதிவு.

    ஆழ்வார்களின் திருக்கோவிலூர் சம்பவத்தை நினைவுகூர்ந்து தொடங்கும் கட்டுரை, அப்பகுதி கோயில்களின் வரலாறையும், அதன் கலாச்சார முக்கியத்துவத்தையும் வாசகர்களுக்கு அழகாக எடுத்துரைக்கிறது. உடன், ஒவ்வொரு பகுதியில் நினைவான குடும்பத் தகவல்களும், பழைய திருக்கோவிலூர் நகரத்தின் வீடுகள், குளங்கள், திரையரங்குகள் ஆகியவை பற்றிய எளிய நினைவுகளும் உயிர்ப்பூட்டுகின்றன.

    தோழர்களுக்கும் சொந்தங்களுக்கும் உள்ள உணர்வு வேறுபாடுகளை குறிப்பிட்டும், குடும்ப உறவுகளின் சிக்கல்களையும் நேர்மையாக விவரித்தும், சமூக உறவுகளின் பரிணாமத்தைக் கலக்கமின்றி வெளிக்கொண்டு வந்துள்ளீர்கள்.

    நெருக்கமான நடையில், உணர்ச்சிகள் நிரம்பிய இந்த பதிவு, வாசிப்பவர்களை ஒரு பசுமையான நினைவு பயணத்திற்கு அழைத்து செல்கிறது.

    நன்றி,
    ராஜேஷ்
    கொடைக்கானல்

    பதிலளிநீக்கு