ஜான்சிராணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜான்சிராணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 26 மார்ச், 2013

வீழும் வரை போரிடு! விழும்போது விதையாய் விழு!


விடுதலை போரில் பெண்கள் - 5



வீழும் வரை போரிடு! விழும்போது விதையாய் விழு!

இந்தியாவை மெல்ல மெல்ல ஆக்ரமித்த ஆங்கிலேயர்கள் ஒன்று பணத்துடன் ஓய்வெடு அல்லது நாட்டைவிட்டு வெளியேறு என்றனர். இரண்டில் ஒன்றல்ல, ஒன்றில் ஒன்றை தேர்ந்தெடு, இதனால் ஜான்சி ராணி தனது வாழ்வில் முக்கியமான சவாலை சந்திக்கும் காலக்கட்டதில் இருந்தார். பெண்தானே எளிதில் அடக்கிவிடலாம் என்று நினைத்த ஆங்கிலேயர்களை தீரத்துடன் எதிர்த்து நின்ற வீரத்தை பார்த்து மிரண்டனர். நேரடி வாரிசு இல்லாத அரசுகளை தங்கள் ராஜியத்துடன் சேர்த்துக்கொள்வது என்ற ஆங்கிலேயரின் இந்த சதியை எதிர்த்து மற்ற மன்னர்களை அணிதிரட்ட துவங்கினார். மிகவும் தேசபக்தி மிகுந்த மகாராஜா மர்தன் சிங்குடன் தொடர்ந்து விவாதித்து வந்தார். உதாரணமாக அம்மன்னருக்கு அவர் எழுதிய கடிதம் கீழே உள்ளது.

"மகாராஜாதி ராஜ மகாராஜா மர்தன் சிங் பகதூர் ஜூ தேவின் நல்வாழ்வுக்கு மகாராணி லட்சுமிபாய் ஜூ தேவி தமது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறார். இங்கு அனைவரும் நலம். தாமோதர் ராவின் தத்து எடுத்தல் குறித்த நடவடிக்கைகளின் முன்னேறம் பற்றி நீங்கள் இங்கு வந்திருந்த சமயத்தில் நாம் பேசிக்கொண்டோம். ஆனால், இந்த தத்தெடுப்பை அங்கீகரிப்பதற்கான எண்ணம் எதுவும், பிரிட்டிஷாருக்கு இருப்பதாக தெரியவில்லை. அந்த அயல்நாட்டவர்கள் யாருக்குமே நண்பர்கள் அல்ல. தால்பேஹத் கோட்டையில் ஏற்கனவே இந்த விஷயம் பற்றி பேசினோம் அல்லவா? புந்தேலா வீரர்களின் தலைவரான உங்களை முழுமையான அளவுக்கு நம்புகிறோம். ஒவ்வொரு முறையும் உங்கள் அறிவுரையை நாடுகிறோம். தயைகூர்ந்து இந்தக் கடிதம் கண்டு மறு மடல் எழுத வேண்டுகிறோம்.(விக்ரம ஆண்டு 1914 முத்திரை)"  

இந்த நேரத்தில் 1857ஆம் ஆண்டு மே 10ம் தேதி இந்தியக் கிளர்ச்சி மீரட்டில் ஆரம்பமாகியது. போர் வீரர்களுக்குப் புதிதாக வழங்கப்பட்ட துப்பாக்கிக் குண்டுகளில் பசு மற்றும் பன்றி ஆகியவற்றின் கொழுப்புப் பூசப்பட்டதாகப் பரவிய செய்தியையடுத்தே இக்கிளர்ச்சி ஏற்பட்டுப் பரவத் தொடங்கியது. ஏற்கனவே புழுங்கிக்கொண்டிருந்த இந்திய சிபாய்களுக்கு இது ஒரு சரியான காரணமாய் இருந்தது. இச்சந்தர்ப்பத்தில், ஆங்கிலேயர்கள் இந்தியக் கிளர்ச்சி சம்பந்தமாகவே அதிகம் கவனம் செலுத்தினர். ஜான்சி பற்றி அதிகக் கவனம் செலுத்தவில்லை. இதன் காரணமாக, இராணி இலட்சுமிபாய் தனியாகவே ஜான்சியை ஆட்சி செய்தார். வடமத்திய இந்தியாவிலே ஜான்சி அமைதியான பிரதேசமாக இருந்தமையைக் காட்டுவதற்காகவும் ஜான்சி எந்த விதமான முற்றுகையை எதிர்கொள்வதற்கான அபாயத்தைக் கொண்டிருக்கவில்லை என்பதனைத் தெளிவுபடுத்துவதற்காகவும் இராணி இலட்சுமிபாயால் ஹால்டி குங்குமப் பண்டிகை ஏற்பாடு செய்யப்பட்டுக் கொண்டாடப்பட்டது.

1857ம் ஆண்டு ஜூன் மதம் 4ம் தேதிக்குள்  ஆங்காங்கு சிப்பாய்கள் கலவரம் செய்யும் செய்தி சாகர் மற்றும் லலித்பூரில் இருந்த சிப்பாய்களுக்கு எட்டியது. அங்கிருந்த ஆங்கிலேயர்களை கொன்று மர்தன் சிங்கை தங்களது தளபதியாக ஏற்றுகொண்டனர்.  இச்சமயம் மகாராஜ ராணி லட்சுமி பாய்க்கு நீண்ட மடல் எழுதியிருந்தார் அதற்கு பதில் அளிக்கும் வகையில் கீழ்கண்ட கடிதத்தை லட்சுமிபாய் எழுதினார்.

"மகாராஜாதி ராஜ மகாராஜா மர்தன் சிங் பகதூர் ஜூ தேவின் நல்வாழ்வுக்கு மகாராணி லட்சுமிபாய் ஜூ தேவி தமது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறார். நாங்களனைவரும் நலம், திவான் கௌஸ் கொண்டுவந்த கடிதம்கண்டு பெருமகிழ்ச்சி அடைந்தோம். ஷாஹ்கட் மன்னர், மற்றும் தாத்யா தொபே முன்னிலையில் நம்மிடையே நடந்த ஆலோசனைக் குழுவில் நமது நாட்டிலே சொந்த ஆட்சி நிலவவேண்டும் என்று முடிவு செய்தோம். இது நம்முடைய சொந்த நாடு. நாம் வேண்டிய அளவு பீரங்கிகளும், குண்டுகளும் தயாரித்துவிட்டோம். இது விஷயம் ரகசியமாகவே இருக்கட்டும். ஏனென்றால் டீகம்கர் ராணி லடய் சர்காரும் திவான் நந்தேகானும் அந்நிய நாட்டவர் பால் நாட்டம் கொள்கின்றனர். ஆகவே இவ் விஷயத்தில் கவனமாக இருக்கவேண்டும். கடிதம் பெற்று விவரம் தெரிவிக்கவும். (ஐப்பசி, விக்கிரம ஆண்டு 1914 முத்திரை)

இதே நேரம் ஜான்சிராணி இலட்சுமிபாய் ஆங்கிலேயர்களை எதிர்க்கக்கூடும் என்ற அச்சம் ஆங்கிலேயர்களிடம் இருக்கவே செய்தது. இதனால், ஆங்கிலேயர்கள் 1857ஆம் ஆண்டு சூன் 8ம் தேதி ஜோக்கன் பாக்கில்  கிழக்கிந்திய நிறுவனத்தின் அதிகாரிகளைப் படுகொலை செய்ததில் ஜான்சிராணி இலட்சுமிபாய்க்கும் பங்கு உள்ளதாகக் கூறினர். பொதுமக்களும் விவசாயிகளும் ஜான்சிராணி இலட்சுமிபாய் மீது வைத்திருந்த மதிப்பைச் சீர்குலைக்கவே இவ்வாறு கூறினர்.

இதனையே காரணமாக வைத்து, 1858ஆம் ஆண்டு மார்ச்சு 23ம் தேதி ஹீ ரோஸ் தலைமையில் ஆங்கிலேயர்களின் படை ஒன்று ஜான்சியைக் கைப்பற்றுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஜான்சியின் படைகளுக்கு உதவி செய்வதற்காகத் தாந்தியா தோபேயின் தலைமையில் 20,000 பேரைக் கொண்ட படை அனுப்பி வைக்கப்பட்டது. ஆனாலும் அப்படை நவீன தொழில்நுட்பம் நிறைந்த பிருமாண்டமான ஆங்கிலேய எதிர்க்கமுடியவில்லை. இப்படை மார்ச்சு 31ம் தேதி ஆங்கிலேயர்களின் படையுடன் இணைந்த காரணத்தினால் தாந்தியா தோபேயினால் ஜான்சி ராணிக்கு உதவ முடியாமல் போனது. 

ஆனாலும் சான்சி இராணி ஆங்கிலேயருக்கு அடிபணிய மறுத்துத் தமது படைகளுடன் இணைந்து கடுமையாகப் போர் புரிந்தார். தனது நாட்டை விட்டுக் கொடுக்க மறுத்த ஜான்சிராணி இலட்சுமிபாய், தனது படை வீரர்களை முன்னின்று வழி நடத்திச் சென்று பெரும் ஆற்றலுடனும் மிகுந்த துணிச்சலுடனும் போர் புரிந்தார். எனினும் மூன்று நாட்களின் பின்னர், ஆங்கிலேயர்களால் அத்துமீறி நுழைந்து நகரத்தைக் கைப்பற்ற முடிந்தது. கடுங்கோபத்திலிருந்த ஆங்கிலேயர்கள், அரண்மனையைச் சூறையாடிப் பொருட்களைக் கொள்ளையடித்தனர்.

ஜான்சி இராணி 1858ம் ஆண்டு ஏப்ரல் 4ம் தேதி இரவு நேரத்திலே தனது மகனுடன் மதிலிலிருந்து பாய்ந்து தப்பித்தார். அதிகம் பெண்களைக் கொண்ட பாதுகாவலர் படையணியின் பாதுகாப்புடன் ஜான்சிராணி நகரத்தை விட்டு நீங்கினார். அவர் கல்பியிலுள்ள ஏனைய புரட்சிப் படைகளுடன் இணைவதாகவே திட்டம் போட்டிருந்தார். அவர் இங்கிருந்து தபிக்க அடிப்படையாக ஒரு வீராங்கனை இருந்தாள். அவள் ஜல்காரிபாய். தான் ஜான்சிராணி போல் முன்னின்று போர் புரிவதாகவும் அச்சந்தர்ப்பத்தில் ராணி லட்சுமிபாய் கோட்டையை விட்டுத் தப்பிச் செல்ல முடியும் என்று ஒரு வேண்டுகோளை ராணி லட்சுமிபாயிடம் முன்வைத்தார். ஜல்காரிபாயும் பெண் படையைச் சேர்ந்த சிலரும் ராணி லட்சுமிபாயை கடுமையான முயற்சிக்கு பிறகு தப்பிச் செல்ல வைத்தார்கள். ராணி கோட்டையிலிருந்து தப்பித்துக் கல்பிக்கு விரைந்து சென்றார். அதே சமயத்தில், ஜல்காரிபாய் ராணி லட்சுமிபாயைப் போல் உடை அணிந்து கொண்டு, படைக்குத் தலைமை தாங்கியபடி ஹீ ரோசின் முகாமுக்குச் சென்றார். ஜல்காரிபாய் மிகுந்த பராக்கிரமத்துடன் ஆங்கிலேயப் படையுடன் சண்டையிட்டார். ஆனால், கடைசியில் அவர்களிடம் பிடிபட்டார். 

இந்த நேரத்தில் உயிர் பிழைக்க தப்பிக்கவில்லை மீண்டும் பெரும் போருக்கான தயாரிப்புக்காகவே அவர் சென்றார் என்பதை, அவர் மன்னர் மர்தன் சிங்கிற்கு எழுதிய கடிதம் அவரது கல்பி திட்டம் குறித்து கூறுகிறது. "மகாராஜாதி ராஜ மகாராஜா மர்தன் சிங் பகதூர் ஜூ தேவின் நல்வாழ்வுக்கு மகாராணி லட்சுமிபாய் ஜூ தேவி தமது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறார். ஷாஹ்கட் மன்னர் கடிதம் பற்றி அறிந்தோம். நீங்களும் அதுபற்றி குறிப்பிட்டிருந்தீர்கள். நீங்கள் உடனடியாக சாகரை நோக்கி படையெடுத்து வரவேண்டும். வழியிலே நிற்கும் வெள்ளையர்கள் படையின் இரண்டு கம்பெனிகளை வென்று ஷாஹ்கட் மன்னருடன் சேர்ந்து முன்னேறவும். என்னுடன் தாத்யா தொபே மற்றும் நானா சாகாப் போருக்கான ஆயத்தில் முனைந்துள்ளார்கள். நீங்கள் நேராக நௌட்காட்டிலிருந்து ஹ்யூ ரோஸைத் துரத்திவிட்டு கால்பி பக்கம் விரைந்து வரவும். குவாலியரில் ஆங்கிலேயர்கள் மீது கூட்டாக தாக்குதல் நடத்துவதற்காக நாம் அனைவரும் கால்பியில் சந்திப்போம் இதில் சற்றேனும் சுணக்கம் கூடாது இக்கடிதத்திற்கு உடனடியாக மறுமடல் எழுதவும்" என அந்த கடிதம் திட்டம் வகுத்துக் கொடுத்தது. 

ஆனால் வரலாறு வேரொரு திருப்பத்தை கொடுத்தது. மன்னர் மர்தன் சிங் வழியில் தொடர்ந்து ஆங்கிலேயர்கள் முன்னேருவதையும், பலர் கூட்டம் கூட்டமாய் உயிரிழபததியும் அறிந்து அவநம்பிக்கையடைந்து ஜான்சிராணிக்கு உதவுவதில் விலகிக்கொண்டார். ஆனால் ஜான்சிராணி லட்சுமிபாய், தாமோதர் ராவுடனும் தமது படைகளுடனும் கல்பிக்குச் சென்று தாந்தியா தோபேயின் படையுடனும் ராவ் சாஹிப்  படையுடனும் ஏனைய புரட்சிப் படைகளுடனும் இணைந்து கொண்டார். 

இவர்கள் குவாலியருக்குச் சென்று குவாலியரின் மகாராஜா ஜயாஜிராவ் சிந்தியாவின் படையைத் தோற்கடித்து, குவாலியரின் கோட்டையன்றைக் கைப்பற்றிக் கொண்டார்கள். வெள்ளையரின் படை குவாலியரைக் கைப்பற்ற முகாமிட்டது. அங்கு கடுமையான தாக்குதலும் எதிர்தாக்குதலும் நடந்தது. கொள்ளையடிப்பதையும் இந்தியாவின் வளங்களை சுரண்டும் நோக்கம் மட்டுமே கொண்ட ஆங்கிலேயப்படை கடுமையான தாக்குதலை தொடுத்தது.
ஒப்பிட்டு நோக்கும் போது ஆங்கிலேயப் படையின் ஆயுதங்களும், அளவும் தங்கள் தேசம் காக்க போராடிய வீரர்களிடம் இருந்ததை விட மிகவும் அதிகம். இருப்பினும் அவர்கள் கடுமியாக போர் புரிந்தனர். ஆங்கிலேயர்கள் கடந்து வந்த பாதைகள் முழுவதும் கொடூரமான கொலைகளை செய்து வந்தனர். அவர்கள் வந்த பாதைகளில் உள்ள மரங்களில் எவ்வுளவு கிளைகள் இருந்தனவோ அவிவுளவு கிளைகளிலும் இந்திய சிப்பாய்களின் உடல்கள் உயிரற்று தொங்கியது. இந்தியா முழுமைக்கும் அவர்கள் ஒரு அச்சத்தை உருவாக்க திட்டமிட்டு செயலாற்றினர்.

1858ஆம் ஆண்டு ஜூன் 17ம் தேதி, கோட்டாகி சேராய் என்ற இடத்தில் வெள்ளையரை எதிர்த்துச் ஜான்சிராணி வீரத்துடன் போரிட்டார். கொஞ்சமும் சலைக்காமல் போரிட்ட இந்த வீராங்கனை இந்த வீரமிக்க போரின்போது படுகாயமடைந்து விழுந்தார். அவரது உயிர் அவரிடமிருந்து மெல்ல மெல்ல பிரிந்துக்கொண்டிருந்தது. அத்தினத்திலேயே வீரமரணம் அடைந்தார். எப்போதும் அந்நியருக்கு அடிபணியாத, அவர்கள் மிரட்டல்களுக்கு செவிமடுக்காத, மலையளவு பணம் தருகிறோம் இன்பமாய் ஓவ்வெடுங்கள் என்ற ஆசை வார்த்தைக்கு இணங்காத, வீழும் வரை போரிடு! விழும்போது விதையாய் விழு! என்ற வார்த்தைகளை உயர்த்தி பிடித்த அந்த மகத்தான வீரம் தனது சுவாசத்தை நிறுத்திக்கொண்டது. அன்றிலிருந்து மூன்று நாட்களுக்கு பின்னர் குவாலியரைக் ஆங்கிலேயர்கள் கைப்பற்றினர்.

ஆங்கிலேயர்களின் படையை வழி நடத்திய ஹீ ரோஸ் "அனைத்துப் புரட்சித் தலைவர்களிலும் மிகவும் ஆபத்தானவர் என்றும் வீரத்துக்காகவும் விவேகத்துக்காகவும் விடாமுயற்சிக்காகவும் குறிப்பிடத்தக்கவர்" என்றும் ஜான்சிராணியைப் புகழ்ந்தான். இவரது வீரதீரச் செயல்களும் ஆங்கிலேயரை எதிர்த்து இவர் புரிந்த போரும் ல் இன்றும் நாட்டுப்புறப் பாடல்களாகவும் நாடகங்களாகவும் பலரால் போற்றப்படுகின்றன. அமரத்துவம் பெற்ற ஒரு வீராங்கனையாக என்றென்றும் இவர் பெயர் அழியாப் புகழ் பெற்றுள்ளது.

                                                                                  (இன்னும் பலர் எழுந்து வருவார்கள்..)

வியாழன், 27 டிசம்பர், 2012

மங்காத வீரம் கொண்ட மணிகர்னிகா


விடுதலைப்போரில் பெண்கள் - 4

மங்காத வீரம் கொண்ட மணிகர்னிகா



நமது துணைக்கண்டத்தில் நிகழ்ந்த ஆங்கிலேய எதிர்ப்புகளிலேயே சிப்பாய்க் கலகமே அளவிலும் பங்கேற்பிலும் பெரியதாகையால் அதுவே இந்தியாவின் முதல் விடுதலைப்போர் எனக் கருதப்படுகிறது. ஏனெனில் இந்த போராட்டம் ஒருங்கினைக்கப்பட்ட விதமும் திரட்டுதலும் அப்படிபட்டது. ஆயினும் நாடெங்கிலும் அதற்கு முன்பே பல இடங்களிலும் பல்வேறு மன்னர்களிடமிருந்தும் ஆங்கிலேயர் ஆட்சிக்கு தொடர்ச்சியான எதிர்ப்புகள்  இருந்துவந்துள்ளன. 1857 இல் வெடித்த சிப்பாய்க் கலகத்திற்கு நூறு ஆண்டுகளுக்கு முன்னரே பூலித்தேவன் ஆங்கிலேயருக்கு எதிராக தீரத்துடன் போரிட்டு அதில் வெற்றி பெற்றார். அதன் பின் அவர் வீழ்ந்தாலும் கூட வெள்ளையைகள் வெள்ளமுடியாதவர்கள் அல்ல என்பதை அவர் நிருபனம் செய்தார். 

அதிலிருந்து தொடங்கி 1772ஆம் ஆண்டு முத்துவடுகநாதன், வீரமங்கை வேலு நாச்சியார் தலைமையிலும், 1795ஆம் ஆண்டு முத்துராமலிங்க சேதுபதி தலைமையிலும், 1799ஆம் ஆண்டு வீரப்பான்டிய கட்டபொம்மன் தலைமையிலும், 1801ஆம் ஆண்டு மருது பாண்டியர் தலைமையிலும் ஆங்கிலேய கடுமையாக எதிர்ப்பு எதிரொலித்தது. பின்னர் 1806ஆம் ஆண்டு திப்புவின் மகன்கள் சிறப்பட்டிருந்த வேலூர் சிறையில் சிப்பாய்க் கலகமாகவும் வெடித்து. இதுவே முதன் முதலில் ஆங்கிலேயருக்கு எதிராக ஏற்பட்ட முதல் கிளர்ச்சியாகும். அதன் தொடர்ச்சியாகவே 1857ஆம் ஆண்டு வட இந்தியச் சிப்பாய்க் கலகமாகம் மூண்டெழுந்தது. பின்னர் அது நாடு தழுவிய போராட்டமாக உருப்பெற்றது.

இந்தியாவில் வர்த்தக நோக்கங்களுக்காக நிறுவப்பட்ட பிரித்தானியரின் தொழில் மற்றும் தொழிற்சாலை பகுதிகளை நிருவகிக்க பிரித்தானிய கிழக்கு இந்திய கம்பெனி நிறுவப்பட்டது. ஆனாலும் இதன் எல்லை மீறிய லாப, ஆதிக்க வெறி நடவடிக்கைகளாலும் இந்திய மன்னர்களிடையே ஓயாமல் நடந்த தகராறுகளாலும், ஒற்றுமையின்மையாலும் 1757 ல் பிளாசி போரில் பெற்ற வெற்றியால் கிழக்கு இந்தியாவில் வங்காளம் வரை அதன் ஆட்சி பரவலாக்கப்பட்டது. அவர்கள் வெற்றிக்கு இந்திய குறுநில அல்லது பெரிய நிலப்பரப்பை ஆண்ட மன்னர்களும் முக்கிய காரணமாய் இருந்தார்கள் என்பது கசப்பான உண்மைதான். பக்சர் போரில் முகலாய பேரரசர் ஷா அலாம்  தோற்றபின் 1764ல் பீகாரும் கிழக்கிந்திய கம்பெனியால் எளிதாக கைப்பற்றப்பட்டது. இதன் காரணமாக வங்கம், பீகார் மற்றும் ஒரிசா மாநிலங்களில் வரி வசூல் செய்யும் உரிமை கிழக்கிந்தியக் கம்பெனிக்கு வழங்கப்பட்டது. இந்நிறுவனம் விரைவில் மும்பை, சென்னை போன்ற பகுதிகளில் தன்னை விரிவாக்கம் செய்தது. அதாவது இந்தியாவின் பெரும் நிலப்பரப்பை தன்வசம் கொண்டது.

ஆங்கில-மைசூர்ப் போர்கள் (1766-1799), ஆங்கில-மராட்டியப் போர்கள் (1772-1818), கர்நாடகப் போர்கள் ஆகியன பரந்த நர்மதா ஆற்றின் தெற்குப் பகுதியைத் ஆங்கிலேயர்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வழிவகுத்தது. அதுவரை இச்செயல்களுக்கு பேரளவில் பெரிய எதிர்ப்புகள் ஏதும் ஏற்படவில்லை.

எதிர்ப்பை விதைக்கும் பொறிகள் ஆங்காங்கு வித்தாக கனன்றுக்கொண்டிருந்தன. அப்படி ஒரு நெருப்பு பொறி பிறந்தது. அது ஆஸ்திரேலியாவில் மெல்போர்ண் நகரம் அமைக்கப்பட்ட, சார்லஸ் டார்வின் கடல் வழியே காலபாகசுத் தீவுகளுக்குச் சென்று தனது உயிரினங்களின் படிவளர்ச்சிக் கொள்கை பற்றிய ஆய்வுகளை மேற்கொண்ட, அதே 1835 ஆம் ஆண்டில் பிறந்தது. அவ்வாண்டு நவம்பர் 19 இல் வாரணாசியில் பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்த மௌரியபந்தர்-பகீரதிபாய் தம்பதியினருக்குப் பிறந்த வீரத்தின் பெயர் மணிகர்னிகா.

இவர் மனு எனவும் அழைக்கப்பட்டார். இவருக்கு நான்கு வயதாகும்போது தாயார் பகீரதிபாய் இறந்து போனார். தாயை இழந்த குழந்தை அந்த சோகத்தின் சுவடுகூட தெரியாமல் வளர்ப்பதில் மிகவும் சிரமம் இருந்ததுதான். ஆனால் அவரது தந்தை அந்த சுமையை தன் தோலில் சுமந்து பாசத்துடன் வளர்த்தார். இவர் சிறு வயதிலேயே குதிரையேற்றமும் வாள் வீச்சும் கற்றுக் கொண்டார். மணிகர்ணிகாவின் தந்தை மௌரியபந்தர் பித்தூரிலுள்ள பேஷ்வா மன்னரின் நீதிமன்றத்தில் வேலை செய்தார். பித்தூரின் பேஷ்வா மணிகர்ணிகாவைத் தனது சொந்த மகள் போல வளர்த்தார். வளர்த்தது மட்டுமல்ல அவளது திருமணத்தையும் அப்படியே செய்துவைத்தார்.

ஜான்சியை ஆண்ட ராஜா கங்காதர ராவ் நெவல்கர் என்பவருக்கு 1842இல் மணிகர்ணிகாவைத் திருமணம் செய்து வைத்தார் அவரது தந்தை. அதிலிருந்து, மணிகர்ணிகா இராணி இலட்சுமிபாய் என அழைக்கப்பட்டதுடன் ஜான்சியின் ராணியாகவும் பதவியேற்றார். 

1851இல் அவர்களுக்குப் பிறந்த மகனான தாமோதர் ராவ் உடல்நல குறைவால் நான்கு மாதங்களில் இறந்து போனான். தாமோதர் ராவின் இறப்பின் பின் சோகம் அவர்களை வாட்டியது, நாடு, நகரம், அதிகாரம், போதுமான அளவு செல்வம் எல்லாம் இருந்தும் சொல்ல முடியாத வெறுமை அவர்களை வாட்டியது. எனவே ராஜா கங்காதர ராவ் நெவல்கரும் இராணி இலட்சுமிபாயும் கலந்து பேசி  ஆனந்த் ராவைத் என்கிற குழந்தையை தத்தெடுத்தனர். பின்னர், அக்குழந்தைக்குத் தங்களுடைய இறந்த குழந்தையான தாமோதர் ராவ் எனற பெயரை சூட்டினர். இருப்பினும் தனது மகனின் இழப்பின் துயரரம் ராஜாவை துரத்திக்கொண்டே இருந்தது. அந்த கொடுந் துயரத்திலிருந்து மீளாத ராஜா கங்காதரராவ் நவம்பர் 21, 1853இல் உடல் நலமிழந்து குறைந்து இறந்தார். அது பேரிடியாக ஜான்சிரானியை தாக்கினாலும் அவரது மனஉறுதி மட்டும் குறையவே இல்லை. அவர் மன உறுதியை சோதிக்கும் பல நிகழ்வுகள் இனிதான் நடக்க இருந்தது.

அதே காலத்தில்தான் இந்திய நாடு முழுவது பல மாற்றங்கள் நடந்துவந்தது. அந்நிய ஆட்சியின் மீது கடுமையான கோபம் ஆங்காங்கே மூன்டுக்கொண்டிருந்தது. காரணம் அவர்கள் கொண்டுவந்த கடுமையான சட்டங்கள்தான். ஒருபக்கம் அவர்களது படையில் இந்திய நாட்டு சிப்பாய்களை அதிக அளவு சேர்த்துக்கொண்டே வந்தார்கள். அதிலும் குறிப்பாக இந்திய கிராமங்களில் சாதியின் பெயரால் ஒடுக்கிவைக்கப்பட்ட சமூகத்தினர் சேர்க்கப்பட்டனர். இந்த ராணுவ வாய்ப்பை பெருமையாகவும் ஒருவித விடுதலையாகவும் கருதினர். அது ஒருவிதத்தில் உண்மையும் கூட இதுகுறித்து பின்னர் பார்க்கலாம். ஆங்கிலேயரின் படை விஸ்தரிப்பு அவர்களது ஆட்சியை இங்கு முழுமையாக நிறுவிட உதப்வியது. அதே நேரம் அவர்களுக்கான எதிர்ப்பும் இதனாலேயே அதிகரித்ததையும் மனதில் வைப்போம். இந்தியாவில் எழுந்த கிளச்சிகளை இந்தியர்களை வைத்தே அடக்குவது என்ற தந்திரம் எப்போதும் பலிக்காதுதனே!  

இந்த சம்பவங்களூடாக மன்னர் கங்காதர ராவ் மறைந்த பின், தங்களின் வளர்ப்பு மகன் தாமோதர் ராவை ஆட்சியில் அமர்த்த எண்ணினார் ஜான்சி ராணி. ஆனால், அப்போதைய ஆங்கியேல ஆளுனர் டல்லவுசி, பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்தின் கொள்கையின்படி, தத்துப்பிள்ளையை ஆட்சியின் அதிகாரபூர்வமாக ஏற்றுக் கொள்ள மறுத்தார். ஒரு மன்னருக்கு நேரடி வாரிசு இல்லையென்றால், அந்த அரசு தங்களுக்கே சொந்தம் என உரிமை கொண்டாடி வந்த ஆங்கிலேயர்கள் ஜான்சி நாட்டைத் தமது ஆட்சிக்குட்படுத்த முடிவெடுத்தனர். இப்படி பல இடங்களில் செய்தும் இருந்தனர். இது அவரகளது செல்வாக்கு விரவில் பல இடங்களுக்கு பரவ வழிவகை செய்தது. தங்களது அடகுமுறையை மிகவும் இயல்பாக செய்தனர். ஆங்கிலேயர்கள் 1854ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் ஜான்சிராணி லட்சுமிபாய்க்கு 60,000 ரூபாயை ஓய்வூதியமாகக் கொடுத்து ஜான்சிக் கோட்டையை விட்டு வெளியேறச் சொன்னார்கள்.

ஒன்று பனத்துடன் ஓய்வெடு அல்லது நாட்டைவிட்டு வெளியேறு இதுதான் அவர்கள் கொடுத்த வாய்ப்பு. இரண்டில் ஒன்றல்ல, ஒன்றில் ஒன்றை தேர்ந்தெடு. ஜான்சி ராணி தனது வாழ்வில் முக்கியமான சவாலை சந்திக்கும் காலக்கட்டதில் இருந்தார். பெண்தானே எளிதில் அடக்கிவிடலாம் என்று நினைத்த ஆங்கிலேயர்களை தீரத்துடன் எதிர்த்து நிற்க எழ வேண்டிய கட்டாயத்தி இருந்தார்.

அப்போது ஆங்கிலேயர்கள் செய்த செயலே அவர்களுக்கு எதிராக எழுத்தது. இந்தியாவில் எழுந்த கிளச்சிகளை இந்தியர்களை வைத்தே அடக்குவது என்ற தந்திரம் எப்போதும் பலிக்காது என்பது மிக விரைவில்  நிருபணம் ஆனது. ஆம் இந்தியாவில் உள்ள இந்து மற்றும் இஸ்லாமிய சிப்பாய்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராய் திரளும் காலம் வந்தது. அது ஜான்சி ராணியின் ஆட்சிக்கும், பல மன்னரகளை ஒன்று திரட்டவும், மன்னகள் மூலமாக மக்கள் திரளை திரட்டவும் பயன்பட்டது. இனிதான் ஜான்சியின் போர்களம் துவங்கியது.  
(போராட்டம் தொடரும்)