மார்க்சிஸ்ட் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மார்க்சிஸ்ட் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 21 மே, 2026

2026 தேர்தல்: இரு துருவம் மூன்று துருவமாக மாறியது மட்டுமே மாற்றமா?

 


நடந்து முடிந்துள்ள தமிழகச் சட்டமன்ற தேர்தல் தமிழக அரசியல் வரலாற்றில் மிக முக்கிய தடம் பதித்துள்ளது. 1967 முதல் தமிழகத்தை ஆண்டு வந்த திராவிட இயக்கங்களின் ஆட்சிகளுக்கு இப்போது ஒரு இடைவேளை வந்துள்ளது. .வெ.க வெற்றியை ஏதோ விசிலடிச்சான் பிஞ்சுகள் / மாணவர்கள் விபரம் இல்லாமல் ஆதரித்தால் வந்தது எனப் பலர் கடந்து செல்ல நினைக்கின்றனர். 60 ஆண்டுகள் கடந்து இரு துருவ ஆட்சி முடிவுக்கு வந்து மூன்று துருவ அரசியல் துவங்கி உள்ளது. அதுவும் எந்த வித அமைப்பு ரீதியான கட்டமைப்பும் முழுமையாக இல்லாமல், வாக்கு சாவடிகள் முகவர்கள் இல்லாமல், வேட்பாளர்கள் யாரென்றே தெரியாமல், வீடுவீடாக வாக்கு சேகரிக்காமல் ஒரு கட்சி ஆட்சியைப் பிடித்தது விபரமாக ஆய்வு செய்யப்பட வேண்டும்.

திமுக ஆட்சியைப் பிடித்த பின்னணி என்ன?

1967 வெற்றிக்கு வித்திட்டவர்கள் யார் என்ற வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால் பல சுவராசியமான தகவல்கள் கிடைக்கும்

 1. 1965-ல் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டம் தமிழக மாணவர்களைப் பெரிய அளவில் அரசியல் இயக்கங்களுடன் இணைத்தது. இந்தி திணிப்புக்கு எதிராக மாணவர்கள் தெருக்களில் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டங்கள் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிரான மனநிலையை உருவாக்கின.  

2. 1967 தேர்தலின் போது கிராமம் முதல் நகரம் வரை இளைஞர்கள் சைக்கிள் ஊர்வலங்கள், தெருக்கூட்டங்கள், சுவரொட்டிகள், துண்டுப்பிரசுரங்கள் போன்ற வழிகளில் தீவிரமாகப் பிரச்சாரம் செய்தனர். அக்காலத்தில் சமூக ஊடகங்கள் இல்லாததால் இளைஞர்களின் நேரடி பங்கேற்பு மிகவும் முக்கியமாக இருந்தது.  

3. சமூக நீதி, சாதி எதிர்ப்பு, தமிழர் அடையாளம், மாநில உரிமை போன்ற புதிய அரசியல் மொழியை அதன் கருத்துகளை மாணவர் மற்றும் இளைஞர் குழுக்கள் மக்களிடம் கொண்டு சென்றனர்

 4. அண்ணா அவர்களின் எளிய பேச்சு நடை, தமிழ் உணர்வு, மேடைப் பேச்சுகள் இளைஞர்களைப் பெரிதும் கவர்ந்தன

 5. கல்லூரிகள் அரசியல் விவாத மையங்களானது பல கல்லூரிகளில் மாணவர் அமைப்புகள் உருவாகி, அங்கிருந்து திமுகவுக்கு ஆதரவான கருத்துகள் பரவின

6. எல்லாவற்றையும் தாண்டி வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்ற திமுகவின் முழக்கம் பிராந்திய முதலாளிகளை திமுகவின் பக்கம் திருப்பியது.

1967 வெற்றி என்பது திமுகவின் வெற்றி மட்டுமல்ல; மாணவர் எழுச்சி, மொழி உரிமைப் போராட்டம், இளைஞர் இயக்கம் ஆகியவை ஒன்றிணைந்து உருவாக்கிய அரசியல் மாற்றமாகவும் பார்க்கப்படுகிறது. இது தமிழக அரசியலில் ஒரு திருப்புமுனையாக்க கருதப்படுகிறது

அது வெறும் தேர்தல் பிரச்சார ஆதரவு மட்டுமல்ல; சமூக, மொழி, அரசியல் போராட்டங்களின் தொடர்ச்சியாக உருவான சக்தியாகும். முழுக்க முழுக்க இளைய பட்டாளமே இதை சாத்தியப்படுத்தியது. திமுக 173 தொகுதிகளில் போட்டியிட்டு 138 தொகுதிகளை வென்றது. அதன் வாக்கு சதவிகிதம் சுமார் 40.8% ஆகும். 1977 ஆம் ஆண்டு அதிமுக 200 தொகுதிகளில் போட்டியிட்டு 130 தொகுதிகளை வென்றது. அதன் வாக்கு சதவிகிதம் சுமார் 30.4% ஆகும்.

2026ல் நடந்தது என்ன?

சென்னை, காஞ்சிபுரம், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், சிவகங்கை, மதுரை, தேனி, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய 11 மாவட்டங்களில் அதிமுக கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை. திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, அரியலூர், சிவகங்கை ஆகிய 11 மாவட்டங்களில் திமுக கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை. அதுவும் திராவிட இயக்கத்தை அரசியல் பாதையில் திருப்பிய அறிஞர் அண்ணா பிறந்த காஞ்சிபுரம் மண்ணில் இரண்டு கழகங்களும் அவர்கள் கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து ஒரு இடம்கூட பிடிக்கமுடியவில்லை என்பது சுவராசியம்தான். பெரியார் பிறந்த ஈரோடு மாவட்டத்தில் திமுக ஒரு தொகுதியும் கைப்பற்றவில்லை என்பது கூடுதல் தகவல்.


சரி த.வெ.க எல்லா மாவட்டங்களிலும் வென்றுவிட்டாதா என்று பார்த்தால் அதுவும் இல்லை. கன்னியாகுமரி, தென்காசி, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், நீலகிரி, விழுப்புரம் ஆகிய 8 மாவட்டங்களில் த.வெ.க ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை. தனிப்பட்ட கட்சிகளாக விஜய் கட்சி 1,72,26,209 வாக்குகள் (34.92), திமுக 1,19,29,144 வாக்குகள் (24.19), அதிமுக 1,04,62,146 வாக்குகள் (21.21) பெற்றுள்ளன. வாக்களித்த ஒட்டு மொத்த வாக்காளர்களில் சுமார் 65 சதமானவர்கள் விஜய் கட்சிக்கு எதிராக வாக்களித்துள்ளனர். இன்னொரு கோணமும் உள்ளது. திமுக அரசு வேண்டாம் என சுமார் 76 சதமானவர்களும், அதிமுக வேண்டாம் என சுமார் 79 சதமான வாக்காளர்களும் இந்த இருவரும் வேண்டாம் என சுமார் 55 சதமான வாக்காளர்களும் வாக்களித்து உள்ளனர்.

1949 ஆண்டு துவக்கப்பட்ட திமுக 18 ஆண்டுகள் போராடி 1967 ஆம் ஆண்டு ஆட்சியைப் பிடித்தது. 1953 ஆண்டு திமுகவில் இணைந்த எம்.ஜி.ஆர் 1972 ஆம் ஆண்டு அதிமுகவைத் துவக்கி 5 ஆண்டுகளில் 1977 ஆண்டு ஆட்சியைப் பிடித்தார். ஆனால் 2024 ஆம் ஆண்டு கட்சியைத் துவக்கிய ஜோசப் விஜய் இரண்டே ஆண்டுகளில் ஆட்சியைப் பிடித்தார்.

சமூக வலைத்தளங்கள் மட்டுமே த.வெ.க வெற்றியை சாத்தியப்படுத்தியதா?

தமிழகத்தில் 5.73 கோடி வாக்காளர்களில் சுமார் 2.38 கோடி பேர் 18–40 வயதுக்கு பட்டவர்கள். இவர்கள் சமூக வலைத்தளங்களில் அதிக நேரம் செலவிடுவதால் அவர்கள்தான் த.வெ.க ஆட்சியை அமைத்ததாக ஒரு பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. இதில் உண்மை இல்லாமல் இல்லை. ஆனால் இதுவே முழு உண்மை இல்லை.

1. 59 ஆண்டுகளாக நடந்துவந்த திராவிட இயக்க ஆட்சிகளில் பல முன்னேற்றங்கள் இருப்பினும், ஊழல் மயமான நிர்வாக சீர்கேடுகளும், எல்லா பக்கங்களிலும் புரையோடிப்போன லஞ்சமும் இளைய சமூகத்தை அசூசை கொள்ளச் செய்தது. மக்களை ஊழல் மயமாக்க வாக்கு அளிக்க பணம் கொடுப்பது புதிய பரிணாமத்தை தொட்டுள்ளது. அதாவது தாங்கள் அடிக்கும் கொள்ளையில் மக்களை பங்குதாரராக மாற்றுவதுதான் வாக்கிற்குப் பணம் கொடுப்பது.

2. வேலையின்மை, பாதுகாப்பற்ற பணிச்சூழல், புலம் பெயர்ந்து வேலைக்குச் செல்லும் அவலம். நிரந்தர பணிகள் முற்றிலும் அழிப்பு, எல்லாவற்றிலும் ஒப்பந்த முறை என்பதெல்லாம் இளம் தலைமுறையின் எதிர்காலம் குறித்த கேள்வியை உருவாக்கியது.

3. ஒப்பீட்டளவில் அரசின் சுகாதாரத்துறை மேம்பட்டது என்றாலும் மருத்துவ மபியாக்கள் கொள்ளை உச்சக்கட்டம் என்பதும் தமிழகத்தில்தான். தனியார் மருத்துவமனைகளில் கொள்ளை சொல்லி மாளாது. இவையெல்லாம் நீண்ட நாட்களாக மனதில் உழன்று வரும் பிரச்சினைகள்.

4. சமூகத்தை அரசியல் மயப்படுத்தும் சூழலை முற்றிலும் அழித்தது மிக முக்கிய காரணம். கல்லூரிகளின் மாணவர் பேரவை தேர்தல்களை நிறுத்தியது, அவர்களை அரசியலிலிருந்து முற்றிலும் அந்நியப்படுத்தியது. இது போதாதென பள்ளிகளில் விளையாட்டு, ஓவியம், நீதி போதனை, கைவினை வகுப்புகள் முற்றிலும் நீக்கப்பட்டது. மதிப்பெண் மட்டுமே கல்வி எனவே படிப்பை தவிர வேறெந்த கவனமும் பிள்ளைகளுக்கு வரக்கூடாது என டியூஷன் கலாச்சாரத்தை வளர்த்தது.

5. செய்தி தாள்கள் படிக்கும் பழக்கமற்ற இளம் பட்டாளம் இணையமே வாழ்க்கை என வாழத்துவங்கி இரு பத்தாண்டுகள் ஆகிறது. இணையத்தில் ஒவ்வொரு அலைபேசியும் ஒரு ஊடகமாக மாறியது. கார்ப்ரேட்டுகள் தங்களது லாபத்திற்காக புது புது யுக்திகளை உருவாக்கிக்கொண்டே வந்தனர். ரீல்ஸ் வரை வந்துள்ள இணைய உலகம் சாதி, மத, இன குழுக்களுக்கு புதிய உத்வேகத்தை கொடுத்துள்ளது. கட்டற்ற காம காட்சிகள் இலவசமாக கிடைக்கும் சூழலில் சமூக ஒழுங்குகள் எல்லாம் கேள்விக்குறிக்கு உள்ளாகி இருக்கிறது.

6. அரசு நடத்தும் டாஸ்மாக் கடைகள் மட்டுமல்லாமல், கள்ள சந்தையில் விற்கப்படும் சாராய போத்தல்களும், பள்ளி கல்லூரி வரை விரித்து பரந்துள்ள கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களும் பெற்றோர்களை அதிர வைத்துள்ளது.

7. அமைப்புகள், போராட்ட வரலாறுகள், தியாகங்கள் எதுவும் அறிந்திடாத ஒரு பெருந்திரள் கூட்டம், இந்த மோசமான சூழலை மாற்ற ஒரு நாயகன் தேவைப்படுகிறான் என்று நம்புகிறது. அதைத்தான் உலகமயம் தொடர்ந்து போதிக்கிறது. நபர்கள் மாறினால் வாழ் நிலை மாறும் எனவே கொள்கை, கோட்பாடு எல்லாம் தேவையில்லை. இத்தனை ஆண்டுகள் நீங்கள் என்ன செய்து கிழித்துவிட்டீர்கள், அவர் வந்து ஆட்சி செய்யட்டுமே என்ற மனநிலை ஆழமாக நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

இவையெல்லாம் இனைந்ததுதான் இந்த மாற்றம்.

பொய்களின் உலகத்திலிருந்து த.வெ.க வெளிவரவேண்டும்:

உண்மையில் அமைச்சரவையில் 7 பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்களும், 4 பெண்களும் அமைச்சர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது பாராட்டுக்குரியதுதான். ஆனால் த.வெ.க கட்சியின் இணையக் கூட்டம் கட்டமைக்கும் பொய்யான உலகம் தனி உலகமாக உருவாகி வருகிறது.

தமிழக தேர்தல் வரலாற்றில் அதிகமான பொதுத்தொகுதியில் பட்டியலினத்தவரை த.வெ.க நிறுத்தியது (26 தொகுதி என சிலர் பதிவு செய்துள்ளனர்) என ஒரு பொய்யை கட்டமைத்தனர். ஆனால் உண்மையில் சங்கராபுரம் என்ற ஒரு பொதுத் தொகுதியில் மட்டும்தான் த.வெ.க தலித் வேட்பாளரை நிறுத்தியது. அவரும் தோல்வி அடைந்தார். ஆனால் நாம் தமிழர் கட்சி 8 தலித்துகளை பொதுத் தொகுதியில் நிறுத்தியது அதில் ஒருவர் எஸ்.டி (பழனி தொகுதி) அனைவரும் தோல்வி அடைந்தனர். பொது தொகுதியில் நின்று வென்ற ஒரே தலித் வேட்பாளர் மேலூர் தொகுதி விஸ்வநாதன் (காங்கிரஸ்) மட்டும்தான். உண்மை இப்படி இருக்க மீண்டும் மீண்டும் த.வெ.கவினர் இந்த பொய்யைப் பரப்பி வருகின்றனர்.

அடுத்து த.வெ.க வேட்பாளர்கள் மிகவும் ஏழைகள். இதுவரை திமுக/அதிமுக கோடீசுவரர்களை மட்டுமே நிறுத்தின. தேர்தல் வரலாற்றில் முதன் முதலாக மிகவும் எளிய குடும்பத்தை சேர்ந்தவர்களை த.வெ.கதான் நிறுத்தியது என்று பதிவுகளை இணையம் முழுவதும் பரப்பினர். ஆட்டோ ஓட்டுநர் என்று ஒருவரையும், காலில் செருப்பில்லாதவர் என்று ஒருவரையும், அடுத்த வேலை உணவுக்கு வழியில்லை என்று ஒருவரையும் பின்னணி இசையுடன் அறிமுகம் செய்தனர். உண்மை என்ன த.வெ.க நிறுத்திய வேட்பாளர்களில் 74 வேட்பாளர்கள் கோடீசுவர வேட்பாளர்கள்.

அதேபோல கல்வி தகுதி குறித்து த.வெ.கவினர் பரப்பும் செய்திகளும் மிகவும் மோசமானவை. யாரும் அவர்களது கல்வித் தகுதி குறித்து கேள்வி எழுப்பாத சூழலில் பலரும் தங்களை மருத்துவர்கள் என்றும் மெத்தப் படித்த மேதாவிகள் எனவும் காட்டிக்கொள்ள மிகவும் முயற்சி செய்து அம்பலப்பட்டு நிற்கின்றனர். இதன் உச்சம் தமிழக கல்வி அமைச்சர் த.வெ.க இணைய தளத்தில் தான் பி.டெக் படித்ததாகப் பதிவேற்றம் செய்ததுதான். ஆனால் அவர் உண்மையில் அவர் படித்தது பி.ஏ தான். இன்னும் நிறையச் சொல்லிக்கொண்டே செல்ல முடியும் நமது நோக்கம் இப்படியெல்லாம் பொய் உலகில் மக்களைத் தள்ளாமல் நேர்மையாக அரசாள வேண்டும் என்பதே!

முதலாளித்துவத்திற்கு முதலாளித்துவம் மாற்றல்ல..

புதிய அரசு என்ன செய்யப் போகிறது? பொறுத்துத்தான் பார்க்க முடியும். ஆனால் ஒன்று இன்று உள்ள சமூகச் சூழலை, கார்ப்ரேட் அரசியலை, நில குவியலை ஒரு கீற்று கூட இவர்களால் மாற்ற முடியாது என அறுதியிட்டுக் கூறமுடியும். திமுக மற்றும் அதிமுகவை விட கவர்ச்சியான பல திட்டங்களை அறிவித்ததிலிருந்தே இவற்றைப் புரிந்துகொள்ள முடியும். உண்மையான மாற்றின் அடிப்படை என்ன?

சாதிவாரி சமூக பொருளாதார கணக்கெடுப்பு 2011ன் படி தமிழக கிராமங்களில் 73 சதமான மக்களிடம் நிலம் கிடையாது. நில ஏகபோகத்தைத் தகர்க்கும் முழுமையான நில சீர்திருத்தம் என்பது அடிப்படைத் தேவையாகும். இதனைச் சாதிப்பதன் மூலம்தான் கிராமங்களில் நில உடமை அடிப்படையில் ஆதிக்க சக்திகளாக விளங்கும் பணக்கார ஆளும் வர்க்கங்களின் பிடியை தளர்த்த முடியும். விவசாயத்தில் உற்பத்தி சக்திகள் வேகமாகவும் ஜனநாயகத் தன்மையுடனும் வளர முடியும். சாதி ஆதிக்க சக்திகளைத் தகர்க்கவும் இது மிகவும் அவசியமான நடவடிக்கை. உள்நாட்டு சந்தை விரிவடையவும் ஊரகப்பகுதிகளில் வேலை வாய்ப்பு பெருகவும் இது அவசியம்.

மொத்த சமூகத்தையும் உயர்த்தும் இந்த துவக்கட்ட பணியை எந்த முதலாளித்துவ அரசும் செய்திடாது. அதற்கு புது அரசும் விதி விலக்கல்ல. அவர்களது தேர்தல் அறிக்கையில் இது குறித்து ஒரு எழுத்தும் கிடையாது. அதை நாம் எதிர்பார்க்கவும் முடியாது. ஆனால் ஒன்று சோசலிசம் ஒன்றுதான் முதலாளித்துவத்திற்கு மாற்று அதை நோக்கி தமிழக மக்களை திரட்டுவதுதான் நிரந்தர தீர்வின் ஒரே வழி!


- எஸ்.ஜி.ரமேஷ்பாபு



ஞாயிறு, 6 அக்டோபர், 2024

சாம்சங்: முதல்வருக்கு பராசக்தி படத்திலிருந்து ஒரு நினைவூட்டல்

 



ஆர்ப்பாட்டத்தை மறியலாக மாற்றிய காவல்துறை

            ஒரு தொழிற்சாலையில் சங்கம் வைக்கும் அடிப்படை உரிமையை மறுக்கும் நிகழ்வுக்கு எதிராக கடந்த சனிக்கிழமையன்று (2024 அக்டோபர் 5) சென்னை ராஜரத்தினம் மைதானம் அருகே நடந்த போராட்டத்தை காவல்துறையினர் மிகவும் கீழ்தரமாக எதிர்கொண்டனர்..

            அந்த தொழிற்சாலை சாம்சங் தொழிற்சாலை. அங்குதான் தொழிலாளர்களின் அடிப்படை உரிமையான சங்கம் அவைக்க அனுமதி மறுக்கப்படுகிறது. சங்கத்தை பதிவு செய்ய  மறுக்கும் அரசின்  ”தொழிலாளர் நல அலுவலர்” அங்குதான் இருக்கிறார். பல நாள் நடக்கும் போராடத்தை கண்டும் காணாமல் இருக்கும் தமிழ அரசின் இந்த  நிலைப்பாட்டை மாற்றிடவும், தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டுமெனவும்.  இந்தப் பிரச்சனையில் தமிழ்நாடு முதலமைச்சர்  தலையிட வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது.       

            மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய  கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) லிபரேசன் ஆகிய  இடதுசாரிக் கட்சிகள் சார்பில்  போராட்டத்திற்கு அறைகூவல் விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், காவல்துறையினர் அனுமதி  மறுத்துள்ளனர். இத்தனைக்கும் இந்த போராட்டம் தமிழக அரசை கண்டித்தல்ல, ஒரு வெளி நாட்டு நிறுவனத்தை எதிர்த்த போராட்டம்.

            காவல்துறையில் அடக்கு முறையை எதிர்த்தே வளர்ந்த கம்யூனிஸ்டுகள் தடையை மீறி போராட்டக்களத்திற்கு வந்தனர். ஆனால்,  கொடிகள் கட்டவும், நாற்காலிகள் போடவும் அனுமதிக்காமல் காவல்துறையினர் தடுத்தனர். போராட்டத்தில் பங்கேற்றவர்களை  கைது செய்து ஆர்ப்பாட்டத்தை மறியல் போராட்டமாக மாற்றினர். ஆம் மறியல் செய்ய காவல்துறைதான் காரணம்.  தேவையற்ற தள்ளு முள்ளு ஏற்பட காவல்துறைதான் காரணம். தேவையற்ற பதட்டத்தை உருவாக்கி தோழர்களை வலுக்கட்டாயமாக  செய்தனர்.

            தமிழகம் அறிந்த தலைவர்களுக்கே, மக்கள் போராளிகளுக்கே இதுதான் நிலமை எனில், போராட்ட களத்தில் உள்ள தொழிலாளர்களை காவல்துறை என்னன்ன செய்யும்? தொழிலாளர்களின் வீடிற்கு சென்று மிரட்டுவது, சங்க நிர்வாகிகள் மனைவிகளை மிரட்டுவது, தொழிற்சங்க தலைவர்களை கைது செய்து எங்கிருக்கிறார்கள் என பல மணி நேரம் சொல்ல மறுப்பது என ஒரு ”சாங்சங் ஆட்சியை” காவல்துறை செய்து வருகிறது.

            எதற்கு காவல்துறைக்கு இத்தனை வன்மம். தமிழக அரசுக்கு தொரியாமல்  அரசியல் கட்சிகளின் மாநில தலைவர்களை காவல்துறை இப்படி கையாளுமா? ஒரு வெளி நாட்டு தனியார் நிறுவனம் அத்துனை செல்வாக்கு படைத்ததா? வாக்களித்த மக்களைவிட சாம் சங் நிறுவனம் தமிழக அரசுக்கு முக்கியமானதா?

என்னதான் பிரச்சினை?

            காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரத்தில் சாம்சங் இந்தியா நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்துக்கு இந்தியாவில் நொய்டாவிலும் காஞ்சிபுரத்திலும் ஆலைகள் உள்ளன. காஞ்சிபுரத்தில் உள்ள சாம்சங் இந்தியா நிறுவனத்தில் சுமார் 1800க்கும் மேற்பட்ட நிரந்தரத் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். வாஷிங் மெஷின், குளிர்பதனப் பெட்டி, தொலைக்காட்சி உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்களை சாம்சங் இந்தியா நிறுவனம் தயாரித்து வருகிறது. கடந்த ஜூலை மாதம், இந்நிறுவனத்தில் சி.ஐ.டி.யு (இந்திய தொழிற்சங்க மையம்) சார்பில் சங்கம் தொடங்குவதற்கு தொழிலாளர்கள் முடிவு செய்தனர்.

            இதற்கு சாம்சங் இந்தியா நிர்வாகம் அனுமதி அளிக்கவில்லை. இதை எதிர்த்து தொழிற்சாலையில் இருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள எச்சூர் என்ற இடத்தில் தொழிலாளர்கள் கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி முதல் போராடி வருகின்றனர்.

            இதற்கிடையில் சாம்சங் இந்தியா நிறுவனத்துக்கு எதிரான போராட்டம் தொடர்பாக நீதிமன்றத்தில் மூன்று வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இதில், இரண்டு வழக்குகளை சாம்சங் இந்தியா நிறுவனம் தொடர்ந்துள்ளது. ஒரு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்திலும் மற்றொரு வழக்கு காஞ்சிபுரம் கூடுதல் நீதிமன்றத்திலும் தொடரப்பட்டுள்ளது.

தொடரும் போராட்டம்

            இதற்கிடையில், தமிழகம் முழுவதும் போராடும் தொழிலாளர்களுக்கு ஆதரவாக பல அமைப்புகள் போராட்டங்களை நடத்தி வருகின்றன. கடந்த 1ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் பேரணி நடத்தியுள்ளனர். இவர்களில் 900க்கும் மேற்பட்டோரை விஷ்ணுகாஞ்சி போலீசார் கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதே நாளில் சி.ஐ.டி.யு சார்பாக தமிழகம் முழுவது மறியல் போராட்டம் நடத்தியது. அதில் 10 ஆயிரம் பேரை காவல்துறையினர் கைது செய்தனர். காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல இடங்களில் மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகங்கள் காவல்துறையால் முற்றுகையிடப்பட்டது.

      அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தியன்று உண்ணாவிரத போராட்டத்தையும் சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் நடத்தியுள்ளனர். பிறகு 5 ஆம் தேதி சென்னை போரட்டம் அதில் காவல்துறையின் அடக்கு முறை என நாட்கள் செல்கிறது. ஆனால் ஒரு வெளி நாட்டு நிறுவனம், தமிழக அரசுக்கு ஆணை பிறப்பிக்கும் அவலம் தொடர்கிறது.

சட்டம் என்ன சொல்கிறது

            தொழிற்சாலையில் சங்கம் தொடங்குவது என்பது அரசியல் அமைப்புச் சட்டம் 19 (1) (c) இன்படி அடிப்படை உரிமைகளில் ஒன்று,  இந்திய தொழிற்சங்க சட்டம் 1926 இன்படி, தொழிற்சாலையில் ஏழு பேர் இருந்தால் சங்கத்தைப் பதிவு செய்யலாம். தலைவர், செயலாளர், பொருளாளர், செயற்குழு உறுப்பினர்கள் எனப் பதவிகளை உருவாக்க வேண்டும். சங்கத்துக்கான துணை விதிகளையும் ஏற்படுத்த வேண்டும். ஆலைகளில் சங்கத்தைத் தொடங்குவது பிரச்னை இல்லை. ஆனால், புதுப்பிக்கும்போது மொத்த தொழிலாளர்களில் 10 சதவீதம் இருக்க வேண்டும் என்று விதி சொல்கிறது. இந்தியாவில் உள்ள அனைத்து நிறுவனங்களுக்கும் நாட்டின் சட்டங்கள் பொருந்தும். காஞ்சிபுரம் இருப்பது இந்தியாவில். தென் கொரியாவில் இல்லை! சட்டம் தெளிவாக இருந்தாலும் சாம் சங் தெளிவாக இல்லை. ஏனெனில் தமிழக அரசு தொழிலாளர்கள் குறித்த புரிதலோடு இல்லை.

            சங்கம் தொடங்குவதற்கு அரசின் தொழிற்சங்கப் பதிவாளரிடம் கடிதம் கொடுக்க வேண்டும். அதன்பேரில 45 நாட்களுக்குள் அனுமதி கொடுக்க வேண்டும் என்பது விதி. ஆனால் மக்கள் வரி பணத்தில் நடக்கும் தொழிலாளர் நலத்துறை, முதலாளி நலத்துறையாக செயலபடுவதால் அனுமதி கொடுக்க மறுக்கிறது.

       அதைவிட கொடுமை சங்கத்தின் பெயரில் 'சாம்சங்' என்ற பெயர் வரக்கூடாது என அந்நிறுவனம் எதிர்ப்பு தெரிவிக்கிறது. என்ன கொடுமை இது?  ஆனால் கொரியாவில் 'நேஷனல் சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் எம்ப்ளாயீஸ் யூனியன்' என்ற பெயரில்தான் சங்கம் செயல்படுகிறது. அங்க ஒன்னு இங்க ஒன்னு இதுதான் சாம் சங் கொள்கை.

        சாம்சங் இந்தியா நிறுவனத்தைப் போலவே பண்ணாட்டு நிறூவனங்கள்தான் யமஹா, ஜே.கே.டயர்ஸ், அப்போலோ டயர்ஸ் உள்பட 30க்கும் மேற்பட்ட பெருநிறுவனங்கள் அங்கெல்லாம் சி.ஐ.டி.யு தொழிற்சங்கம் செயலபடுகிறது. ஆனால் அவைகளையும் போராடிதான் பெற முடிந்தது. குறிப்பாக யமஹா நிறுவனத்தில் 55 நாள்கள் வேலை நிறுத்தப் போராட்டம் நடந்த பிறகே சங்கம் தொடங்க அனுமதி கிடைத்தது.

முதல்வருக்கு  பராசக்தி படத்திலிருந்து ஒரு நினைவூட்டல்

            பிச்சைக்காரர்களை மிகக் கேவலமாக சித்தரித்து நகைச்சுவை செய்கின்றன இன்றையத் தமிழ் சினிமாக்கள். ஆனால் அந்தக் காலத்திலேயே,  பிச்சைக்காரர்களை மரியாதைக்குரியவர்களாக காட்டிய ஓரே படம் பராசக்திதான். அதன் கதை வசனகர்த்தா கலைஞர்.

            ரங்கூனில் இருந்து சிவாஜி கப்பலில் வந்து சென்னையில் இறங்கியவுடன், தன்னிடம் பிச்சை கேட்கும் குரலை, விமர்சிப்பார். அந்த விமர்சனம்கூட பிச்சைக்காரரை குறைசொல்வதாக இல்லாமல், சமூகத்தைகுறை சொல்வதாகதான் இருக்கும். பிறகு எஸ்.எஸ.ஆர்., பிச்சைகாரர்களுக்காக சங்கம் வைத்து அவர்களின் உரிமைக்காக போராடுபவராகவும் வருவார்.

“மெட்ராஸ்ல மனுஷன் மிருகமாகத்தானிருக்கிறான். உங்களை சொல்லவில்லை…. முதுகெலும்பு உடைய மூட்டை வண்டியை இழுக்கிறானே, குதிரைக்கு பதிலாக நரம்பு தெறிக்க தெறிக்க ரிக்சா இழுத்து கூனிப்போயிருக்கிறானே, நாயை போல சுருண்டு நடைப்பாதையில் தூங்குகிறானே அந்த நல்லவனை, நாதியற்றவனை, நாலு கால் பிராணியாய் ஆக்கப்பட்ட மனிதனை சொன்னேன்.” என்ற வசனம் உழைப்பாளியின் துயரை பேசியது.

            அக்காலத்திற்கு முன்பு துவங்கிய தொழிலாளர்களில் போராட்டம்தான் இந்த வசனங்களை எழுத வைத்தது. தொழிலாளர்கள் உரிமை ஆட்சியாளர்கள் போட்ட பிச்சை அல்ல, அது தொழிலாளர்களின் உதிரத்தில் முளைத்த வீரிய விதை. “அடிப்படை உரிமைக்கான போராட்டத்தை ஒருபோதும் அடக்கு முறையால் ஒடுக்கிவிட முடியாது” என்பதை நினைவில் வையுங்கள்.

 - எஸ்.ஜி.ரமேஷ்பாபு


செவ்வாய், 1 அக்டோபர், 2024

மே தினத்தை முதலில் பாடிய கவிஞர் தமிழ் ஒளி நூற்றாண்டு

 

வஞ்சகக் காலன் வருவதும் போவதும்
வாழ்க்கை நியதியடா - எனில்
செஞ்சொற் கவிதைகள் காலனை வென்று
சிரிப்ப தியற்கையடா !
 
ஆம். இந்த வரிகளை எழுதிய, காலனை வென்று வாழும் கவிதைகளை இயற்றிய மகத்தான மக்கள் கவிஞர் தமிழ் ஒளி பிறந்த நூறாண்டு விழா ஆண்டு இது. இந்திய நாடு விடுதலை பெற்றபோது 23 வயது இளைஞன், பாவேந்தர் பாரதிதாசனுக்கு 33 வயது இளையோன் கவிஞர் தமிழ் ஒளி பிறந்தது 1924 செப்டம்பர் 21 தேதியாகும்.
 
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியை அடுத்த ஆடூர் என்னும் சிற்றூரில் சின்னையா, செங்கேணி அம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். விசயரங்கம் என்பது தமிழ் ஒளியின் இயற்பெயர். பட்டுராசு என்றும் அவர் அழைக்கப்பட்டார். குறிஞ்சிப்பாடி அருகில் பிறந்தாலும், தமது தொடக்கக் கல்வியைப் புதுவை முத்தியாலுப்பேட்டை நடுநிலைப் பள்ளியில் கற்றார். உயர்கல்வியைக் கலவைக் கல்லூரியில் படித்தார். இடையில் சென்னையில் வாழ்ந்த பத்தாண்டுகள் போக 1965 மார்ச் 24 ஆம் தேதி 41 ஆம் வயதில் அவர் இறக்கும் வரை மீதம் உள்ள வாழ்க்கையை புதுச்சேரியில் கழித்தார்.
 
பாவேந்தரை அறிமுகம் செய்த முரசு
 
கவிஞர் தமிழ் ஒளி மாணவராக இருந்தபோதே பாரதியார், பாரதிதாசன் கவிதைகளில் மனம் பறிகொடுத்தார். பாரதிதாசனின் தொடர்பும் அவருக்குக் கிடைத்தது. நாள்தோறும் குயில் தோப்புக்குச் சென்று பாரதிதாசனிடம் தாம் எழுதிய கவிதைகளைப் படித்துக் காட்டிப் பாராட்டும் பெற்றார். எப்படி இந்த பழக்கம் ஏற்பட்டது என்றால், புரட்சிக் கவிஞர் மகன் மன்னர் மன்னனும், தமிழ் ஒளியும் ‘முரசு’ என்ற கையேடு இதழை நடத்தினர். அதில் தமிழ்ஒளி எழுதிய கவிதைகள் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் கவனத்தைக் கவர்ந்தன. பாரதிதாசன் தமிழ் ஒளியை அழைத்துப் பாராட்டி அவரை உற்சாகப்படுத்தினார். ‘முரசு’ இதழை அரசு தடை செய்தது. அதை நடத்தியவர்கள் மீது வழக்கு தொடர்ந்தது. மன்னர் மன்னன் இளம் வயது காரணமாக விடுதலை செய்யப்பட்டார். தமிழ் ஒளி பிணையில் வெளிவந்தார்.
 
 சுதந்திர நாளையொட்டி அகில இந்திய வானொலியில் பன்மொழிப் புலவர் பேராசிரியர் தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் தலைமையில் நடை பெற்ற கவிதை நிகழ்ச்சியில் பங்குகொண்டு ‘சுதந்திரம்’ என்ற தலைப்பில் தமிழ் ஒளி கவிதை வாசித்தார். எல்லோரும் உணர்வு மிகுந்து சுதந்திரத்தை கொண்டாடி மகிழ்ந்த போது, உழைக்கும் மக்களின் வாழ்வை மேம்படுத்த இந்தச் சுதந்திரம் பயன்பட வேண்டும் என்ற அறிவு நோக்கில் கவிதை புனைந்தவர் கவிஞர் தமிழ் ஒளி. அக்கவிதையை ஓமந்தூர் இராமசாமிரெட்டியார் அருகிலிருந்து கேட்டு வெகுவாகப் பாராட்டினார் என்பது முக்கிய செய்தி.
 
துவக்க கால அரசியல் களம்
 
கவிஞர் தமிழ் ஒளி திராவிடர் மாணவர் கழகத்தில் தொடக்கக் காலத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார். திராவிடர் கழக மாணவர் மாநாட்டில் கலந்து கொண்டு பாரதிதாசன் கொடுத்தனுப்பிய வாழ்த்துக் கவிதையை அம்மாநாட்டில் படித்தார். அந்த தொடர்பி னூடாக எழுந்த சிந்தனைகள் கவிதைகளாக வெளிப்பட்டது.
 
“இந்தியை இங்கே அழைக்கின்றீர்கள்-கூர் / ஈட்டியை நெஞ்சில் நுழைக்கின்றீர்கள்” / “காரிருள் இன்றும் விடியவில்லை-எம் / காற்றனை இன்றும் ஒடியவில்லை! / “ இதர்மிசை இந்தி உயர்குவதோ-எங்கள் / செந்தமிழ் அன்னை அயர்குவதோ?” -என்று ‘தமிழ்நாடு’ என்ற ஏட்டில் எழுதி இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்கு வலுவூட்டினார்.
 
சி.பா.ஆதித்தனாரின் ‘நாம் தமிழர்’ இயக்கத்தின் சார்பாக ஈரோடு சின்னசாமி நடத்திய ‘சமநீதி’ மற்றும் ‘தமிழன்’ ஆகிய ஏடுகளில் இந்தி மொழித் திணிப்பை எதிர்த்து கவிதைகள் எழுதினார்.
 
மொழிவழி மாநிலம் அமைத்து கன்னியாகுமரியை தாய்த் தமிழகத்துடன் இணைக்கும் எல்லைப் போராட்டம் நடைபெற்றபோது கவிஞர் தமிழ்ஒளி தமிழர்களுக்கு பின்வருமாறு அழைப்பு விடுக்கின்றார்.
 
“தன்குமரி எல்லை தனைச் சார்ந்த தமிழகத்தில்/ எல்லாம் தமிழர்க்கே என்றெழுந்த போர் முரசம் / எல்லோரும் கேட்டே எழுகின்ற நேரமிது”
“தம் மொழிக் கல்வியைக் கற்பதிலார்- அவர்/ துமிழ்மொழி கற்க நமை வருத்தி வாய் மொழி பெற்று மகிழ்ந்திடுவார்-அவர் / வாழ்க்கையில் ஞானம் வருவதயில்லை” -என்ற கவிதை வரிகள் மூலம் தாய் மொழிப் பற்றினையும், 
தமிழ் வழிக் கல்வியையும் அன்றே வலியுறுத்தியுள்ளார். விஜயரங்கம், விஜயன் சி.வி.ர என்பன கவிஞர் தமிழ் ஒளியின் புனை பெயர்கள் ஆகும். முன்னணி, புதுமை இலக்கியம், சாட்டை போன்ற இதழ்களில் பணியாற்றினார். மாணவப் பருவத்தில் திராவிட நாடு, குடியரசு, புதுவாழ்வு ஆகிய திராவிட இதழ்களிலும் கவிதைகளை எழுதினார்.
 
வாழ்க்கை கற்றுக்கொடுத்த சிகப்பு சிந்தனை
 
மற்றொரு பக்கம் உலக நிகழ்வுகளை, சமகால அரசியலை, உழைக்கும் மக்கள் வாழ்க்கைப் பாடுகளை, சாதியின் பெயரால் நடக்கும் கொடுமைகளை, வீதியில் அலையும் மனிதர்களை நேரடியாக கண்ணுற்ற கவிஞரின் சிந்தனைகள் விரிந்த களம் நோக்கி பேசத் துவங்கியது. பொதுவுடமைக் கொள்கையே உண்மையான சமூக மாற்றத்திற்கான திறவுகோல் என கண்டார். 
 
சனயுகம் என்னும் மாத இதழைத் தம் சொந்த முயற்சியில் நடத்தி மார்க்சியக் கருத்துகளைப் பரப்பத் துவங்கினார். இரண்டாம் உலகப்போர் நடந்துகொண்டிருந்த காலக்கட்டத்தில் பாசிசத்துக்கு எதிராக உலகத்தில் இருக்கும் அனைத்து எழுத்தாளர்களும் குரல் எழுப்ப வேண்டும் என்ற அறைகூவல் உலகம் முழுக்க எழுந்தது. அதன் ஒரு பகுதியாக இந்திய முற்போக்கு எழுத்தாளர் அமைப்புகள் உருவாயின. முதலில் தோன்றியது லண்டனில்தான். தொடர்ந்து இந்தியாவில் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தொடங்கப்பட்டது. அதற்குப் பிறகு, தமிழ்நாட்டில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை தொடங்கியவர் கவிஞர் தமிழ் ஒளி.
 
1947 ஆம் ஆண்டு வாக்கில் அவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராக தன்னை இணைத்துக் கொள்கிறார். மேதினத்தை முதலில் அரசியல் களத்தில் கொண்டாடியது மாமேதை சிங்காரவேலன் என்றால் முதலில் அதை கவிதையாக வடித்தது கவிஞர் தமிழ் ஒளி ஆவார். சோவியத் புரட்சியை தமிழில் முதலில் பாடியது எட்டயபுரத்து கவிஞர் என்றால் சீனப் புரட்சி குறித்து தமிழில் நான்கு கவிதைகள் புனைந்தது ஆடூர் கவிஞனாவார்.
 
1948 இறுதியில் ‘கம்யூனிஸ்ட் கட்சி’ இந்திய அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டபோது, கட்சி பிரச்சார சாதனங்கள் அனைத்தும் முடக்கப்பட்டன. அந்தச் சூழலில் ‘முன்னணி’ ஏடு முகிழ்ந்தது. கவிஞர் குயிலனும், தமிழ் ஒளியும் இணைந்து செயல்பட்டனர். இந்த ஏட்டில்தான் சீனப் புரட்சி குறித்த அவரது கவிதைகள் வெளி வந்தன.
 
‘உழவனின்’ பொங்கல் கனவு, ‘நெசவாளி’ விரும்பாத தீபாவளி, துயரச் சுமை தூக்கும் ‘துறைமுகத் தொழிலாளி’ கடலைப்பார்த்து கண்ணீர் சிந்தும் ‘மீனவர்’, மீளாத் துயரில் ஆழ்ந்திருக்கும் ‘சலவைத் தொழிலாளி’, எப்போதும் ஏக்கப் பெருமூச்சுவிடும் ‘அரிசன மக்கள்’, வீதியில் நின்று கையேந்தும் ‘கழைக்கூத்தாடி’, விதியை நொந்து விடிவு காணாத விதவையர் பற்றிய கவிதைகள் அனைத்துமே தமிழ் ஒளியின் புரட்சிப் பாடல்கள் தாம். கவிஞன் அடிப்படையில் ஒரு கலைஞன். கற்பனை ஊற்றெடுக்கும் அவன் உள்ளம், பரந்த உள்ளம். அங்கே உவமைகள் ஒளி வீசும். அணி நலன்கள் அலை புரளும். கலை ஓவியமாகக் கவிதை வடிவம் பெறும் என்று சஞ்சீவி கூறுவது உண்மைதான். வாழ்க்கைப் பாடுகள் அவருக்கு கவிதைகள் உருவாக கச்சாவானது(மூலமானது).
 
ஆணவக் கொலையை காவியத்தில் பதிவு செய்த கவிஞர்
 
கவிஞர் தமிழ்ஒளியின் காப்பியம் வீராயி. சிதைந்த சேரி, வீராயி தப்பினாள், நிலைபெற்ற உறவு, வாழ்வில் இடி, அண்ணன் எங்கேடி, கொலைகாரன், மன்றினில் வீரன், சிதறிய குடும்பம், தேயிலைத் தோட்டத்திலே, மாரி இறந்தான், காதலன் கிடைத்தான், கண்ணீர் வெள்ளம், கப்பல் ஏறினர், மங்கையுடன் வந்தான், பறைச்சியா?, பயப்படாதே, புரட்சி மணம், நாடு செய்த தீமை, முடிந்தது வாழ்வு ஆகிய உட்பிரிவுகளால் ஆனது. கவிதை வடிவில் இயற்றப்பட்ட காப்பியம் இது.
 
வீராயி என்ற ஒடுக்கப்பட்ட சாதியைச் சார்ந்த பெண்ணின் வாழ்க்கைப் பாடுகளை, சாதியின் பெயரால் அவள் விரட்டப்பட்ட நிலையை, நாடுவிட்டு நாடு கடந்தும் விரட்டும் அவலத்தை பேசும் காவியம் இது. ஆனந்தன் என்ற மாற்று சாதி இளைஞர் இவளை விரும்பி திருமணம் செய்து கொள்கிறான். தங்களை உயர் சாதி என்று நம்பும் அவனது சாதியை சேர்ந்த சாதி ஆதிக்கவாதிகள் ஆனந்தனையும் வீராயியையும் ஆணவப் படுகொலை செய்வதுடன் கப்பியம் நிறைவு பெறுகிறது. அனேகமாக ஆணவக் கொலையை காவியத்தில் பதிவு செய்த கவிஞர் தமிழ் ஒளியாகத்தான் இருப்பார்.
 
பொதுவாக கம்யூனிஸ்டுகள் சாதிப் பிரச்சனையிலும், மொழி பிரச்சனையிலும் அக்கரை காட்டியதில்லை என போகிற போக்கில் எப்போதும் விமர்சனங்களை வீசுவோர் உளர். அத்தகையோர்களுக்கு தோழர் தமிழ் ஒளியை அறிமுகம் செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
 
கவிஞர் தமிழ் ஒளி, 9 காப்பியங்கள், 2 குறு நாவல்கள், 30 சிறுகதைகள், 20 ஓரங்கநாடகங்கள், 3 மேடைநாடகங்கள், 100 குட்டிநாடகங்கள், 3 ஆய்வு நூல்கள், பல்வேறு ஆய்வுக்கட்டுரைகள் எழுதியு ள்ளார். அவை அனைத்தும் வாழ்க்கை குறித்து எழுதப்பட்ட படைப்புகளாகும். சிவாஜிகணேசன் நடித்த வணங்காமுடி திரைப்படம் தமிழ் ஒளியின் நாடகத்தை வைத்து எடுக்கப்பட்டது. சில படங்களில் பாடல்கள் எழுதி உள்ளார்.
 
அந்த மகத்தான மக்கள் கவிஞர் நூற்றாண்டு விழாவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பெருமையுடன் கொண்டாடுகிறது.
 

( - எஸ்.ஜி.ரமேஷ்பாபு / 27.09.2024 அன்று தீக்கதிர் நாளிதழில் வெளியான கட்டுரை)