மரக்கால் காணோம் மரக்காணம் ஆயிற்று!
நீங்கள் சென்னை முதல் நாகப்பட்டினம் வரை செல்லும் கிழக்கு கடற்கரை சாலையின் ஒரு நிறுத்தமாக அந்த ஊரை அறிந்திருக்கக்கூடும். உப்பளங்களை கடந்து வரும்போது ”மரக்காணம் இறங்கே..” என்ற நடத்துனரின் வார்த்தைகளுடன் ஒரிரு நொடிகளில் நீங்கள் அந்த ஊரை கடந்திருக்க வாய்ப்பிருக்கிறது. என்று கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தேன். அந்த நிறுத்ததில் உள்ள சிவன் கோயிலை சுற்றிவிட்டு பிறகு என் நினைவுகளுடன் உங்களை அழைத்து செல்லாம் என நினைக்கிறேன். சுவை மிகுந்த கதைதான் வாசியுங்கள்.
மரக்காணம் ஸ்ரீ பூமீஸ்வரர் கோயில் என்று அழைக்கப்படும் அக்கோவிலில் பூமீஸ்வரர் மற்றும் கிரிஜாம்பாள் அல்லது கிரிஜாம்பிகை சிலைகள் உள்ளது. இந்த பழமையான கோவில் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது மற்றும் சோழர் காலத்தைச் சேர்ந்தது என்று நம்பப்படுகிறது.
கோயிலில் 47 கல்வெட்டுகள் உள்ளன. முதலாம் ராஜராஜ சோழன், முதலாம் ராஜேந்திர சோழன், முதலாம் விஜய ராஜேந்திரன் ராஜாதிராஜா சோழன், இரண்டாம் மற்றும் மூன்றாம் குலோத்துங்க சோழன் மற்றும் விஜயநகர வம்சம் வரை இக்கோவிலில் வழிபட்டுள்ளனர் என்ற கதையும் உண்டு.
சிவபெருமான் பூமீஸ்வர தேவர், பொம்மீஸ்வரத்தாழ்வார், திருபூமீஸ்வரமுடைய நாயனார், பூமிஸ்வரமுடைய தம்பிரான், திருபூமியப்ப தம்பிரான் (விஜயநகர காலம்) என்று அழைக்கப்பட்டார். கல்வெட்டின்படி மரக்காணம் இராஜராஜ பேரளம், பட்டினம், எயில் பட்டினம், கண்டராதித்த நல்லூர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மரக்காணம் பட்டின நாட்டுக்கு உட்பட்டது, ராஜராஜ சோழன் காலத்தில், கண்டரரித்த நல்லூர் பட்டின நாட்டில், விஜய ராஜேந்திர சோழ வளநாடு ஜெயங்கொண்ட சோழ மண்டலத்தில் இருந்தது.
விக்ரம சோழன் காலத்தில் மரக்காணம் பிராமணர்களுக்கு பரிசாக வழங்கப்பட்டு விக்ரம சோழ சதுர்வேதி மங்கலம் என்று அழைக்கப்பட்டது. சோழர் கல்வெட்டுகள் சில இந்த இடத்தை மணற்கானம் என்று குறிப்பிடுகின்றன, கடற்கரை மணல் நிறைந்த பகுதி என்பதால் அப்பெயரும், பின்னர் அதுவே மாற்றம் கண்டு மரக்காணம் என்றழைக்கப்பட்டிருக்கலாம்.
புராணத்தின் படி, சிவபெருமான் முனிவர் வடிவில் ஒரு பக்தரின் வீட்டிற்கு வந்தார். பக்தர் உணவு அளித்தபோது, முனிவர், பூஜை செய்த பிறகே உணவு எடுத்துக் கொள்வார் என்றார். பக்தர் தனது மரக்கால் (நெல் அல்லது உப்பை அளவிடும் பாத்திரம்) தலைகீழாக வைத்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டார். பூஜை முடிந்து முனிவர் உணவு உண்டுவிட்டு கிளம்பினார்.
பக்தர் பூஜைக்கு பயன்படுத்திய அந்த மரக்காலை அகற்ற முயன்றார் ஆனால் முடியவில்லை. மாறாக கொஞ்சம் நேரத்தில் அது காணாமல் போனது. இதைப் பார்த்த பக்தர் மரக்கால் காணோம் என்று கத்திக் கொண்டே வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தார். பின்னர் அவர் கடலோரத்தில் உள்ள மரக்காலை கண்டு அங்கு கோவிலைக் கட்டினார். “மரக்கால் காணோம்”, பின்னர் மரக்காணம் என்று மாறியது என்ற கதையும் உண்டு.
களத்தில் தானியத்தை அளப்பதற்கு மரக்கால் பயன்பட்டது. பெரிய மரக்கால், சின்ன மரக்கால் வழக்கிலிருந்தன. வீட்டு உபயோகத்திற்குப் படி எனப்படும் இரும்பு அளவு பயன்பட்டது. பெரிய படி, அரைப்படி, கால்படி, அரைக்கால் படி, வீசம்படி, அரை வீசம்படி போன்ற படிகள் இன்றுகூட வீடுகளில் உள்ளன. படியை உழக்கு என்று குறிப்பிடுவார்கள். 11/2 லிட்டர் அளவு என்பது ஒருபடி ஆகும். நான்கு படி அளவு நெல் சேர்ந்தால் ஒரு பெரிய மரக்கால், இரண்டு படி அளவு நெல் சேர்ந்தால் ஒரு சிறிய மரக்கால் எனப்பட்டன.
இந்த கோவிலில் வந்து வணங்கினால் நிலத் தகராறுகள் தீரும், புதிய சொத்துக்கள் வாங்கலாம், நல்வாழ்வு கிடைக்கும் என நம்பிக்கைகள் உண்டு. திண்டிவனம் கோர்டில் மரக்காணம் நில தகறாறு சார்ந்த வழக்குகள் குவிந்திருப்பதற்கும், ஊரில் தலைமுறையாக வாழ்ந்த பலர் சொத்துக்களை விற்றுவிட்டு வெளியே சென்றபோதும் சாட்சாத் பூமீஸ்வரர் அவர்களை தடுதாட்கொள்ளவில்லை என்பது தனி கதை.
கோயில் நுழைவு வளைவுடன் கிழக்கு நோக்கி உள்ளது. நுழைவாயிலுக்கு முன் அடிவாரத்தில் பல்வேறு தெய்வங்களின் திருவுருவங்களுடன் கூடிய மண்டபம் உள்ளது. இக்கோயிலில் வழக்கத்திற்கு மாறாக அம்மன் முன் நந்தியும், சிவன் முன் பாவை விளக்கும் உள்ளது. விஷ்ணு சிவனை வழிபடும் சிற்பங்களும், சிறுத்தொண்ட நாயனாரின் வரலாற்றை விளக்கும் சிற்பங்களும் சோழர்களின் தலைசிறந்த படைப்புகளுக்கு எடுத்துக்காட்டுகள். கோவிலில் 3 பெண்களின் நடனக் காட்சியைக் காட்டும் சிற்பம் உள்ளது. 3 பெண்களுக்கு 4 கால்கள் மட்டுமே செதுக்கப்பட்டுள்ளன, ஆனால் தனித்தனியாக கவனிக்கும்போது, ஒவ்வொரு பெண்ணும் 2 கால்களுடன் இருப்பதைக் காணலாம். சோழர்களின் அற்புதமான சிற்பம் இது.
ஆனால் இத்தகை ஊர்களில் உள்ள கோவில்களையெல்லாம் ஒரு காலத்தில் சமஸ்கிருதமயமாக்க, சமஸ்கிருத மந்திரங்கள் ஓத ஒரு கூட்டம் ஆக்ரமித்தது எங்கும் பேசப்படாத கதையாக உள்ளது. சரி தாத்தாவுடன் சைக்கிளில் சென்ற கதையை அடுத்து பார்க்கலாம்.
குறிப்பு: கோயில் குறித்த அடிப்படை தரவுகள் Light up Temples இணையத்திலிருந்து எடுக்கப்பட்டது.
(நினைவுகள் சுழலும்)
கோவில் சித்தரிப்புகளும் மரக்கால் காணோம் மரக்காணமான கதையும் சுவை. ஒரு புத்தகம் உருவாகிக்கொண்டிருக்கிறது. வரவேற்பும் வாழ்த்தும்.
பதிலளிநீக்குமிக்க நன்றி தோழர்
பதிலளிநீக்கு