மோடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மோடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 14 அக்டோபர், 2015

டவுசர் பாண்டிகள் மாநாட்டில் மத்திய அமைச்சர்கள்?!


கேள்வி: பா.ஜ.க.வை ஆர்.எஸ்.எஸ். தான் வழி நடத்துகிறது. என்பது உண்மையா?
பதில்: ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பா.ஜ.க.வை வழி நடத்துகிறது என்று சொல்ல முடியாது. அப்படிப்பட்ட நிலை இருந்தால், பா.ஜ.க. சுயமாக எந்த தீர்மானமும் செய்ய முடியாமல் திணறும். நிலைமை அப்படி இல்லை. பா.ஜ.க., வீட்டுப் பெரியவர் ஆர். எஸ்.எஸ். அவருடைய மனம் கோணாமல் நடந்து கொள்ள பா.ஜ.க., முயற்சிக்கும். சில சமயங்களில் உரசல் வருவதால் உறவு விட்டுப் போகாது.
இது சோ ராமசாமி கூறியது. ஆதாவது பிஜேபி ஆட்சிக்கு வருவதற்கு 15 மாதங்களுக்கு முன்னர்.
கேள்வி: பா.ஜ.க.வை ஆர்.எஸ்.எஸ். தான் வழி நடத்துகிறது. என்பது உண்மையா?
பதில்: மத்திய அரசை ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பின்னணியில் இருந்து இயக்குவதாக கூறப்படுவது தவறு.. அந்த குற்றச்சாட்டில் உண்மை எதுவும் இல்லை. நானும் பிரதமர் மோடியும் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள். அதனால் யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. டெல்லியில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் மாநாட்டில் மத்திய அமைச்சர்கள் பங்கேற்றது பதவி ஏற்பின் போது எடுத்துக் கொண்ட ரகசியகாப்பு பிரமாணத்தை மீறிய செயலில்லை.
இது உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி கூறியது. அதாவது அவர்கள் ஆட்சிக்கு வந்த 15 மாதங்களுக்கு பின்னர். “இருக்கு ஆனா இல்ல” என்ற பாணியிலான இந்த பேட்டியிகளின் பின்னணி என்ன?
டவுசர் பாண்டிகள் மாநாட்டில். . .
                கடந்த 15 மாதங்களாக ஆட்சியில் இருக்கும், பிரதமர் மோடி தலைமையிலான, பா.ஜ.க, அரசின் செயல்பாட்டை மதிப்பீடு செய்யும், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் மூன்று நாள் கூட்டம் கடந்த செப்டம்பர் 2,3,4 ஆகிய தேதிகள் டெல்லியில் நடந்தது. இந்த கூட்டத்தில், முன்னாள் ராணுவத்தினரின், ‘ஒரே பதவி; ஒரே ஓய்வூதியம்’ கோரிக்கை; மறைமுகமாக இடஒத்துக்கீட்டை ஒழிக்கும் வகையில் நடந்த படேல் சாதியினரின் ஓ.பி.சி., ஒதுக்கீடு கோரிக்கை; எதிர்க்கட்சிகளின் குரலால், மக்களின் போராட்டங்களால் முடக்கப்பட்ட நில மசோதா, தொழிலாளர்களை முடமாக்கும் தொழிலாளர் சீரமைப்பு நடவடிக்கைகள், காவிமயமாக்க முயற்ச்சிக்கும் கல்வித் துறை சீர்திருத்தங்கள் போன்றவை குறித்து விவாதிக இருப்பதாக செய்திகள் திட்டமிடப்பட்டு கசியவிடப்பட்டது. இருப்பினும் உள்நாட்டுப் பாதுகாப்பு, காஷ்மீர் பிரச்சனை ஆகியவைகள் குறித்து இக்கூட்டத்தில் அவர்கள் விவாதிப்பதை திட்டமிட்டு மறைத்தனர்.
                ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் மற்றும் ஆர்.எஸ்.எஸ் மூத்த தலைவர்களான “டவுசர் பாண்டிகள்” 95 பேர் கலந்துக்கொண்ட, இந்த ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தில் “அடால்ப்” மோடியும், “என்கவுண்டர்” அமித்ஷாவும் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துக்கொண்டனர். மேலும் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, வெளியுறவுதுறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிகர், போக்குவரத்துதுறை அமைச்சர் நிதின் கட்கரி, ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் வெங்கையா நாயுடு, உரம் மற்றும் இரசாயனத்துறை அமைச்சர் ஆனந்குமார், சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களில் தேர்ந்தெடுத்த சிலரும் கலந்துக்கொண்டனர்.
                இடதுசாரி கட்சிகள் குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்த அபாயகரமான போக்கை மிகுந்த கவலையுடன் சுட்டிக்காட்டியது. மாயாவதி “ஆர்.எஸ்.எஸ். தலைவர்களை மோடி அன்மையில் சந்தித்துப் பேசியிருப்பதன் மூலம், மத்திய அரசை இயக்குவது அந்த வகுப்புவாத – பாசிச அமைப்புதான் என்பது தெளிவாகிறது. மத்திய அமைச்சர்கள் பலர் தங்களது செயல்பாடுகள் குறித்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பிடம் அறிக்கை சமர்ப்பித்திருக்கின்றனர். தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசாங்கமானது சட்டத்துக்கும், மக்களின் உணர்வுகளுக்கும்தான் அடிபனிய வேண்டுமே தவிர, வகுப்புவாத சிந்தனையுடைய ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகளுக்கு அடிபனியக் கூடாது.” என விமர்சனம் செய்தார்.
கோரிக்கையோடு சென்று…
                இவைகளைதான்டி இந்த கூட்டத்தில் எழும் கேள்விகள் பல உள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசின் அமைச்சர்கள் மதவாத அமைப்பின் கூட்டத்தில் கலந்துக்கொண்டு தங்கள் துறையின் நடவடிக்கைகளை விவரிப்பதும், அந்த அமைப்பின் ஆலோசனைகளை கேட்பதும் மிகவும் ஆபத்தானது. இது ஏதோ கற்பனையின் விளைவாகவோ அல்லது பாஜக மீதான எரிச்சலாலோ சொல்லப்படும் குற்றச்சாட்டு அல்ல. ஒரு உதாரணம் போதும் இதை தெரிந்துக்கொள்ள.
                சிந்து சமவெளி நாகரிகம் சரசுவதி நாகரிகம் என்று இல்லாத நதியின் பேரால் நாகரீகத்தை உருவாக்குவதும், உலக புகழ்பெற்ற தாஜ்மகால் இராஜபுத்திர அரண்மனை என்று கட்டுக் கதைகளாகப்புகுத்துவதும், மொகலாயர் ஆட்சி எல்லாம் இந்துக்களுக்கு எதிரானது என்றும் கதையளக்கும் வரலாற்றாசிரியர்களை நிறைய தயாரித்து வைத்திருக்கிறது ஆர்.எஸ்.எஸ் கூட்டம். இதில் கைதேர்ந்த கிருஷ்ணா கோபால், சோனி, தத்தாத்ரேய ஆகிய மூவரும் கடந்த 2014 ஆம் ஆண்டு மத்திய அரசின் கல்வி அமைச்சர் சுமதி இராணியை சந்தித்து மூன்று கோரிக்கைகள் வைத்துள்ளனர்.
                தொடக்க கல்வி முதல் உயர்கல்வி வரை கல்விக்கட்டணங்கள் உயர்வாக இருக்கிறது. பள்ளிகளிலும் ஒழுக்கத்தைப் போதிக்கும் பாடத்தைச் சேர்க்க வேண்டும். வரலாற்றுப் பாடத்தில் பல தவறுகள் சொல்லிக் கொடுக்கப்படவேண்டும் என்பதாகும் அந்த கோரிக்கைகள். உலகம் அறிந்த இந்தியாவின் புகழ்பெற்ற இர்பான்ஃ ஹபீப், தொமிலாதாப்பர், கே.எம்.பணிக்கர் போன்ற கல்வியாளர்கள் இல்லை மேற்கண்ட மூவரும். அவர்கள் ஆர்.எஸ்.எஸ் விஷ சிந்தனையாளர்கள். இவர்கள் வைத்த கோரிக்கைகளில் மிக ஆபத்தானது பள்ளிகளில் ஒழுக்கத்தை போதிக்கும் பாடத்தை சேர்க்கவேண்டும் என்பதாகும். இதன் பொருள் ஏ :பார் அர்ஜூன், பி பார் பிரம்மா, சி பார் கவ், டி பார் துருவா, ஜி பார் கணேஷ் எனத் துவங்கி இராமாயணம், மகாபாரதம் ஆகியவைகள் முக்கிய பாடங்களாகும். சமஸ்கிருதம் வேதமொழி, வேதமே இந்நாட்டின் அடிப்படை எனவே சமஸ்கிருதம் படி என்பார்கள். இவர்களது ஆலொசனைகளை பரிசிலிப்பதாக சொன்ன மத்திய அமைச்சர் கடந்த கூட்டத்தில் இதைதான் விவாதித்திருப்பார் என்பதை தனியே சொல்லத்தேவையில்லை.
இப்போது மட்டுமல்ல…
அதே போல பிஜேபி ஆட்சியின் பரம இரகசியம்கூட ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு தெரியாமல் நடக்க இயலாது என்பதற்கு உலகறிந்த உதாரணம் எற்கனவே உள்ளது.1999 மே 11,13 ஆகிய இரு நாள்களில் வாஜ்பாய் தலைமையிலான அப்போதை பா.ஜ.க. கூட்டணி அரசு இராஜஸ் தான் மாநிலம் பொக்ரான் பாலைவனத்தில் அணு குண்டுகளை வெடித்துச் சோதனை செய்தது. மத்திய அரசாங்கத்தின் மிக முக்கியமான இரகசியம் இது. குடியரசுத் தலைவருக்குக்கூட முதல் நாள் மட்டுமே தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் அதே நாளில் ஆர்.எஸ்.எஸின் அதிகாரபூர்வ ஏடான ஆர்கனைசர் “அணு ஆயுத இந்தியா” என்ற தலைப்பில் ஒரு சிறப்பு இதழ் வெளியிட்டது. அணுகுண்டு வெடிப்புத் தகவல் முன் கூட்டியே ஆர்.எஸ்.எஸங்க்குத் தெரிந்திருந்தாலொழிய இந்தச் சிறப்பிதழைக் கொண்டு வந்திருக்க முடியாது எனது குழந்தைகள்கூட சொல்லிவிடமுடியும்.
இதுதான் அவர்களின் பாசிச செயலபாடு. ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு தெரியாமல் ஒரு அணுவைக்கூட அவர்களால் அசைக்க முடியாது. ஏனெனில் ஆட்சியாளர்கள் அனைவரும் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்களாக இருக்கும் போது “அவர்களுக்கு தெரியாது” என்பது பைத்தியகார மனிதனின் சித்தம் கலங்கிய வார்த்தையாகதான் இருக்க முடியும். ஆக இந்து அடிப்படிவாத அமைப்புகுத்தான் விபரம் புரியாமல் மக்கள் வாக்களித்து அமரவைத்துள்ளனர். அதற்கன அறுவடையை கொஞ்சம் கொஞ்சமாக அனுபவிக்க துவங்கியுள்ளனனர். விடுதலைப் போராட்டத்தில் ஆங்கிலேயர்க்கு ஆதவாக நின்ற அமைப்பான ஆர்.எஸ் எஸ், சிறையிலிருந்து தாப்பிக்க மண்ணிப்பு கடிதம் எழுதிக்கொடுத்த வாஜ்பாயை முன்பு பிரதமராக முன்நிறுத்தியது. அப்போது அதற்கு வாய்பாய் போல ஒரு சாந்தமான முகம் தேவைப்பட்டது. ஆனால் காங்கிரஸ் அடுக்கடுகாக தவறுகளால் மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு நின்றது. காங்கிரஸ் மீது இருந்த கோபத்தை தனது மூலதனமாக பயன்படுத்தியது. எதையும் செய்யமுடியும் என்பதுபோல ஆக்ரோஷ்மாக நடிக்கும் மோடியை முன்நிறுத்தியது.
மோடியும் தனது வெளிநாட்டு பயணங்களுக்கிடையில் சமயம் கிடைக்கும் போதெல்லாம் பாராளுமன்றத்திற்கு வந்து இந்திய மற்றும் பன்னாட்டு முதலாளிகளுக்கு ஆதரவாக நில கையகபடுத்தும் சட்டம், தொழிலாளர் உரிமைகளை மொத்தமாய் சீரழிக்கும் தொழிலாளர் சீரமைப்பு நடவடிக்கைகள், பொத்துறையை விற்பத்தற்கும் தரகு வேலைகளை, நாளைய பொது சமூகத்தில் ஆழமான பிளவை உருவாக்கும் கல்வித் துறையை காவிமயமாக்க சீர்திருத்தங்கள் ஆகியவற்றை அழுத்தமாக செய்து வருகிறார். ஆனால் இந்த வேகம் போதது என ஆர்.எஸ்.எஸ் நினைக்கிறது. அதனால்தான் அதன் மூன்றுநாள் கூட்டத்திற்கு பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்களை அழைத்து வேப்பில்லை அடித்து அனுப்பி உள்ளது. இந்தியாவின் வரலற்றின் அபாய கட்டம் வேகமாக நெருங்குவதை உணர முடிகிறது. எதின்விணையின் வேகம் இன்னும் விசையோடு புறப்படவேண்டியிருக்கிறது.
அக்டோபர் மாத இளைஞர் முழக்கத்தில் வெளியான எனது கட்டுரை

ஞாயிறு, 20 செப்டம்பர், 2015

ஆப் கி பார் சோர் சர்கார்!


இந்திய நாட்டின் 69 வது சுதந்திர தினம் வழக்கமான சடங்குகள் நடந்து முடிந்துள்ளது. 282 உறுப்பினர்களுடன் ஆட்சியை கைப்பற்றியுள்ள அதிகார போதையில் தேர்தல் பிரச்சார நினைவிலேயே 90 நிமிட சுதந்திர தின உரையை நிகழ்த்தியுள்ளார் நரேந்திர மோடி. 

பூடான், பிரேசில், நேபால் (இருமுறை), ஜப்பான், அமெரிக்கா, பிஜி, மியான்மார், ஆஸ்திரேலியா, சிசெல்ஸ், மொரிசியஸ், இலங்கை, பிரான்ஸ், ஜெர்மனி, கனடா, சீனா, மங்கோலியா, கொரியா, வங்கதேசம், உஸ்பெஸ்கித்தான், கஜகஸ்தான் (இருமுறை), ரஷ்யா, துர்க்மேனிஸ்தான், ஐக்கிய அமீரக நாடுகள் என 15 மாதங்களில் 25 முறை வெளிநாடுகளுக்கு சென்று அவ்வப்போது இந்திய வருவதுபோல, சமீபத்தில் இந்தியா வந்த அவர் சுதந்திர தினத்தில் பேசிய பேச்சுக்களை புதிதாக யார் கேட்டாலும் உடல் சிலிர்த்து போவார்கள். ஆனால் நமக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. 

கைகளை அகளமாக இருபக்கமும் விரித்து, நேர்த்தியான உடைதரித்து, எல்லாப் பக்கமும் திரும்பி, ஊடகங்களை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டே ஏற்ற இரக்க பாவங்களுடன் அவர் ஆற்றிய சுதந்திரதின உரையில் அவரை அறியாமலேயே ஒரு பதட்டம் நிலவியது. அது தார்மீக பதட்டம். சுஸ்மாவையும், வசுதராவையும், சௌகனையும், அதானியையும் நினைத்ததால் வந்த பதட்டம். ஆனால் நமது பிரதமர் ஆகச்சிறந்த நடிகர் என்ற காரணத்தாலும், ஏற்கனவே இத்தகைய சூழல்களை சமாளித்தவர் என்பதாலும் மிக அழகாக உரையை முடித்தார். 

ஒரு பைசா கதை பாரீர்:
அவரது உரையின் மிகசிறந்த அங்கதம் கீழ்கண்ட அவரது பேச்சுதான் ""தேசிய கொடியேற்றி வைத்து சொல்கிறேன். இந்திய தேசிய கொடியை சாட்சியாக வைத்து சொல்கிறேன். கடந்த 15 மாத கால ஆட்சியில் ஒரு ஊழல் கூட நடைபெறவில்லை. ஒரு பைசா கூட மக்களின் பணம் ஊழலில் வீனாகவில்லை என்பதை பெருமையுடன் கூறிக்கொள்கிறேன்."" இதுதான் மோடியின் சிறப்பு. அவரது தாய்வீடான ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் அவர் பெற்ற பயிற்சியை மிக நேர்தியாக, தொழில் முறையில் கற்று தேர்ந்திருக்கிரார். பொய் சொல்லும்போது கொஞ்சமும் கூச்சநாச்சம் காட்டமல் உண்மையைவிட மிக அழகாக சொன்னால், அதையும் மீண்டும் மீண்டும் சொன்னால் மக்கள் நம்பிவிடுவார்கள் என்பது இந்து மதவெறி அமைப்பான ஆர்.எஸ்.எஸ் இன் பாலபாடம். இதில் முனைவர் பட்டம் பெற்ற காரணத்தால்தான் அத்வானியை மிதித்து அவரால் மேலே வரமுடிந்தது. போகட்டும் அது ஏன் நமக்கு? அவரது உரையின் நேர்மைக்கு வருவோம்!

இறக்குமதி பொருட்களின் மதிப்பைக்கூட்டி பலாயிரம் கோடி மோசடி செய்த அதானியின் மீதான வழக்குகள் நிதியமைச்சகத்தில் மவுனமாய் உள்ளது. 7 ஆண்டுகள் சிறை தண்டனை வித்திக்கதக்க கருப்பபண வழக்கில் உள்ள பாபா ராம்தேவ் மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. 2ஜி வழக்கில் உள்ள இடைதரகர்கள் சுதந்திரமாய் சுற்றித்திரிகின்றனர். பொதுத்துறை வங்கிகளுக்கு வரவேண்டிய 5 லட்சம் கோடி வாராக்கடனில் பெரும்பகுதி தரவேண்டிய இந்தியநாட்டை சேர்ந்த 12 பெரும் முதலாளிகள் பிரதமரோடு உண்டு களிக்கின்றனர். ""பொதுப்பணத்த நானும் களவாட மாட்டேன், பிறறையும் களவாட விடமாட்டேன்"" என்று தேர்தல் பிரச்சாரத்தில் முப்பரிமாண தொழில் நுட்பத்தில் ஆக்ரோஷமாக முழங்கிய மோடியின் லட்சனம் இதுதான்.

சுஷ்மா - லலித் மோடி கூட்டு:
கிரிகெட் சூதாட்டத்தின் ஸ்தாபகர், அந்நிய செலாவணி மோசடி உள்ளிட்டு 16 பொருளாதார குற்றங்கள் விசாரணையில் உள்ள குற்றவாளி, 1680 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள சர்வதேச கிரிமினல் லலித் மோடியின் பாஸ்போட்டை இந்திய அரசாங்கம் கடந்த ஆட்சியின் போது முடக்கி வைத்தது. ஆனால் இந்த துறையை கையில் வைத்துள்ள மோடி அமைச்சரவையின் பிரபலமான சுஷ்மா சுவராஜ் அவரது துறைக்கு எதிராகவும், வெளியுறவுத் துறை செயலாளர் சுஜாதா சிங்கிற்கு தெரியாமலும், பிரிடிஷ் அரசாங்கத்திடம் பாஸ்போர்ட்டுக்காக பரிந்துறை செய்துள்ளார். இந்தியாவுக்கான பிரிடிஷ் தூதரை தனிபட்ட முறையில் தொலைபேசியில் அழைத்து லலித் மோடிக்கு உதவ சொல்லியுள்ளார். இது பொருளாதார குற்றம் இழைத்த குற்றவாளியை கண்காணிக்கும் அமைச்சகத்தின் தலைவரான நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்குக்கூட தெரியாது. 

ஓராண்டுக்கு பிறகு லலித் மோடிக்கு சுஷ்மா உதவி செய்த தகவல் வெளியே வந்தவுடன், போர்ச்சுகல் மருத்துவமணையில் மோடியின் மனைவிக்கு சிகிச்சை அளிக்க மனிதாபிமான அடிப்படையில் உதவினேன் என கதையை திருப்பிப்போட்டுள்ளார். ஆனல் இந்த மனிதாபிமானத்தின் பின்புலம் என்ன தெரியுமா? சுஷ்மாவின் கனவர் சுவராஜ் மோடியின் 22 வழக்கறிஞர். அவரது மகள் பான்சூரி சுவராஜ் பாஸ்போட் முடக்க வழக்கில் லலித் மோடிக்க்காக ஆஜரானவர். இன்டோபில் என்ற லலித் மோடியின் நிறுவன இயக்குனராக பதவியேற்க சுவராஜுக்கு கடந்த ஏப்ரல் மாதம் அழைப்பு வந்தது. இந்த விபரமெல்லாம் கனவான் நரேந்திரமோடிக்கு தெரியாது என நம்பச்சொல்கிறார்.

ரஜேவின் ராசியான கதை:
பாஜகவின் ராஜஸ்தான் முதலவர் வசுந்தரா ரஜே லலித் மோடியின் வளர்ச்சியின் வேர் என சொன்னால் மிகையாகாது. 10 ஆண்டுகளுக்கு முன்னர் ராஜஸ்தான் மாநில முதலவராக இருந்த வசுந்தரா ரஜே ஒரு அவசர சட்டத்தின் மூலம் அம்மாநில கிரிக்கெட் சங்கத்தின் தேர்தல் விதிகளை மாற்றி லலித் மோடியை அதன் தலைவராக்கினார். அங்குதான் துவங்கியது லலித் மோடியின் அசுர வளர்ச்சி பின் இந்திய கிரிக்கெட் அமைப்பின் துணை தலைவராக மாறியதும். ஐபிஎல் அமைப்பை துவக்கியதும், அதில் கோடிகோடியாய் கொள்ளையடித்ததும் பின் நடந்த எல்லோரும் அறிந்த கதை. 

போர்ச்சுகல்லில் லலித் மோடியின் மனைவிக்கு சிகிச்சை அளித்த மர்ருத்துவமனை உரிமையாளருக்கு ராஜஸ்தானில் மருத்துவமணை துவங்க 96,000 சதுர மீட்டர் நிலத்தை அளித்துள்ளார். சிகிரெட் மீது முந்தைய காங்கிரஸ் அரசாங்கம் விரித்த வரியை 20% குறைத்து மோடியின் சிகிரெட் கம்பெனிக்கு கோடிக்கணக்கில் லாபத்தை சேர்த்துள்ளார். இதற்கு கைமாறாக லலித் மோடி ரஜேவின் மகனும் பாராளுமன்ற உறுப்பினருமான துஷ்யந்த் தனது மனைவி பெயரில் நடத்திவரும் நிகந்த் ஹெரிடேஜ் என்ற டுபாக்கூர் நிறுவனத்தின் 10 ரூபாய் மதிப்புள்ள பங்குகளை 96000 கொடுத்து வாங்கி அந்த நிறுவனத்தில் 11 கோடி முதலீடு (அதாவது அன்பளிப்பு) செய்துள்ளார். இதுவும் சுத்த சுயபிரகாசம் நரேந்திர மோடிக்கு தெரியாது என நம்பவேண்டும்.

வியாபாம் குண்டு: 
மத்திய பிரதேச மாநிலத்தில் மருத்துவம், உயர் தொழில்நுட்ப கல்வி மற்றும் அரசுத்துறை வேலைகளுக்கான ""மத்திய பிரதேச தொழில்முறைத் தேர்வணையம்"" சார்ந்து நடந்துள்ள ஊழல்கள் துவங்கியது பாஜக ஆட்சியில்தான். பணம் இருந்தால் எந்த தேர்வையும் எழுதி, எந்த வேலையும் பெறலாம் என்ற கேவலமான ஊழல் வழியை துவங்கியது பாஜகதான். ஒருவருக்கு பதிலாக மற்றொருவர் தேர்வெழுதி கொடுக்க அதை சமபந்தபட்ட துறையின் தேர்வாணைய அதிகாரிகளை, தேர்வு நிலைய கண்காணிப்பாளர்களை கவனிப்பது, விடை திருத்துபவர்களை கவனிப்பது மட்டுமல்லாமல் சமபந்தபட்ட துறையின் அதிகாரிகள் துவங்கி அமைச்சர்கள் வரை பணத்தை கொடுக்க எங்கும் தரகர்கள் நிறைந்திருந்தனர்.

இதுவரை சுமார் 2000 பேர் கைதுசெய்யப்படுள்ளனர். 300க்கும் மேற்பட்டோர் தலைமறைவாகியுள்ளனர். இதில் தொடர்புடைய 40க்கும் மேற்பட்டோர் கொலை செய்யபட்டுள்ளனர். மத்திய பிரதேச ஆளுனர் ராம் நரேஷ் யாதவ், பாரதிய ஜனதா கட்சி தலைவரும், முதல்வருமான சிவராஜ் சவுகான், அவரது மநைவி சாதனா, ஆர்.எஸ்.எஸ் தலைவர் கே.சி.சுதர்சனன், பாஜகவின் முன்னால் கல்வி அமைச்சர் லட்சுமிகாந் சர்மா, ஆர்.எஸ்.எஸ் புரோக்கரும் சுரங்க அதிபருமான சுதிர் ஷர்மா, சுரேஷ் சோனி, ஆர்.எஸ்.எஸ் தலைவர்களான தர்மேந்திர பிரதான், பிரமோத் ஜா, விக்ரம் பட்  உள்ளிட்டோர் குற்றவாளி கூண்டில் இருப்பதை பற்றி கள்ள மவுனம் காக்கும் நமோ நல்லவர் என்பதை நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும்.

ஆப் கி பார் அதானி சர்கார் :
2002ல் குஜராத்தில் மோடி அரசாங்கம் துவங்கியபோது அதானி குழுமம் நடத்திய வணிகத்தின் பங்கு 3741 கோடி, அதே மோடி 2014 அங்கிருந்து பிரதமாராக வந்தபோது அதானி குழுமத்தின் வணிகத்தின் பங்கு 75,559 கோடி அதாவது 20 மடங்கு வளர்ச்சி! தேர்தல் பிரச்சாரத்திற்கு அதானி விமானத்தில் பறந்த மோடி, தேர்தலுக்கு பிறகு அராசாங்க விமானத்தில் அதானியை அழைத்துச்செல்கிறார். அவருக்குத்தான் பறக்கும் விமானத்தில் பாரத் ஸ்டேட் வங்கி தலைவர் அருந்ததி பட்டாசார்யா மோடியின் முந்நிலையில் 6200 கோடி கடன் கொடுக்கிறார். அதாவது 81 ஆயிரம் கோடி கடன் உள்ள ஒரு நிறுவன தலைவருக்கு எந்த கேள்வியும் இல்லாமல் கடன் கொடுக்கிறார்.

இதன் அர்த்தம் என்ன? அதாவது குஜராத்தை 12 ஆண்டுகளில் கொள்ளையடித்த  அதானி -  மோடி கூட்டம் இப்போது வாக்காளர்கள் ஆசியோடு 5 ஆண்டுகளில் இந்தியாவை திருட வந்துள்ளனர் என்பதுதான். ஆனால் இதுவெல்லாம் வெளியிடப்படாத ரகசியம் என நமது பிரதமர் மோடி அறியார் என்பதை நாம் நம்பத்தான் வேண்டும். ஏனெனில் அவர் இப்போது மான்புமிகு பிரதமர் ஆயிற்றே..!    

இன்னும் நீண்ட பேச்சு:
""ஊழல் ஒரு அமைப்பாக மாறியுள்ளது, ஒப்பந்ததாரர்களே நாட்டை வழிநடத்தும் நிலை உள்ளது."" என்ற அவரது பேச்சின் அர்த்தம் அதானியையும், அம்பானி சகோதரர்களையும் நோக்கியது என  புரிந்துக்கொள்ளலாம். "ஒப்பந்தகாரர்களை வளர்த்துக்கொண்டே அவர்களால் நாடு ஊழல் அமைப்பாக மாறுகிறது என்று கம்பீரமாக பேச மோடியை தவிர யாராலும் முடியாது.

"15 ஆயிரம் கோடி எரிவாயு மானியம் நிறுத்தப்பட்டு, 20 லட்சம் இந்தியர்களிடம் சிலிண்டர்கள் பிடுங்கப்பட்டுள்ளதை"" ஏதோ மக்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் மானியங்களை வேண்டாம் என்றது போலவும் இன்னும் இது ஒரு கோடியை உடனடியாக தாண்டும் என்பதுபோலவும் அவர் பேசியது. அடுத்து ஊதியுள்ள அபாயச்சங்கு.

""ஜி 20 மாநாட்டில் கருப்பு பணத்தை மீட்க சர்வதேச நாடுகளின் உதவியை நாடியுள்ளேன்."" என்று அவர் பேசியதுபோது அவராலே அடக்க முடியாத சிரிப்பு இதழோரம் வந்திருக்கும்.  கருப்பு பணத்தை மீட்டு 100 நாளில் உங்கள் வங்கி கணக்கில் 15 லட்சம் பணம் போடுவேன் என்று சொன்னதை நம்பிய நாடல்லவா இது. இதையும் நம்பத்தான் போகிறது என்ற நினைபால் பூத்த புன்னகை அது.

அவரது 300 நாள் ஆட்சியில் நூற்றுகனக்கான விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதை பற்றி கொஞ்சமும் கவலை கொள்ளாமல், அதுகுறித்து ஒரு வார்த்தைக்கூட உதிர்க்கமல் கூச்சமில்லாமல் மேடையில் முழுங்குகிறர் மோடி ""ஒவ்வொரு விவசாபியும் நாட்டுக்கு போர் வீரனைப்போன்று முக்கியமானவர்கள்."" என்று. டிஜிட்டல் இந்தியாவைப் பற்றி அவர் முழங்கும் நேரத்தில்தான் 18,500 கிராமங்களில் இன்னும் மின்சார வசதி இல்லை. என்ற உண்மையை வேறு வார்த்தைகளில் கூறுகிறார்.

அவரது 300 நாள் ஆட்சியில் 600 கலவரங்கள் நடந்துள்ளது ""இந்தியாவில் சாதியவாதம், மதவாதம் போன்றவற்றிற்கு ஒருபோதும் இடமில்லை."" என வெட்கம்மில்லாமல் அவரால் பேசமுடிகிறது. தமிழகத்துல் ஏற்கனவே உள்ள சாதிய சிக்கல்கள் போதாதென அமித்ஷா ஒரு புதிய கணக்கை துவக்கி உள்ளார். பாசிச சக்திகளின் சதுரங்க விளையாட்டில் எத்தனை காய்கள் வெட்டுபட்டாளும் அதிகாரம் அவர்களிடம் இருக்க வேண்டும். பிணங்கள் விழ விழ அவர்களுக்கு அது ஏணிப் படியாய்தான் மாறி இருக்கிறது.

ஊழல்வாதிகளை, இடைதரகர்களை, மதவெறியர்களை, சாதி ஆதிகவாதிகளை தன்னுடன் வைத்துக்கொண்டே சுதந்திர தின உரையில் அவர்களை கண்டிப்பதுபோல, அவர்களை எதிர்ப்பது போல மோடியால் பேசமுடியும் எனில்.. மகாத்மா காந்தியை படுகொலை செய்துவிட்டு, பாபர் மசூதியை இடித்துவிட்டு இல்லவே இல்லை என்று சாதித்துக்கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மிகச்சரியான வார்ப்பு அவர்தான் என்பதை நிருபித்துக்கொண்டிருக்கிறார்.
(பின் குறிப்பு: சோர் என்ற ஹிந்தி வார்த்தைக்கு திருடன் என பொருள்)   

---- செப்டம்பர் இளைஞர் முழக்கம் இதழில் வெளியான எனது கட்டுரை

சனி, 14 டிசம்பர், 2013

சொல்லுங்க மோடி சொல்லுங்க..

மோடிமஸ்தானிடம் 18 கேள்விகள்......

1. 2004 ஜூன் 15 அன்று அகமதாபாத் - காந்தி நகர் நெடுஞ்சாலையில் தீவிரவாதி என பட்டம் சூட்டி 19வயது இளம்பெண் இஷ்ரத் ஜகானை மற்ற நான்கு இளைஞர்களுடன் டி.ஐ.ஜி வன்சரா என்கவுண்டர் செய்தது சட்டபடி தவறு என 2009ல் அகமதாபாத் நீதிமன்றம் தீர்ப்பளித்ததும், 2011ல் சி.பி.ஐ சிறப்பு புலனாய்வுக் குழு என்கவுண்டர் நாடகத்திற்கு முன்தினமே அவர்கள் கொல்லப்பட்டதை கண்டறிந்து வெளிகொண்டு வந்தது மோடிக்கு தெரியாதா?

2. 2005 நவம்பர் 23ஆம் தேதி பேருந்தில் பயணம் செய்த ஷொராபுதீன் அவரது மனைவி கவுசர்பீயும் குஜராத் அதிரடிப்படையால் கைது செய்யப்பட்டு, மூன்று தினங்கள் கழித்து அகமதாபாத் அருகே துப்பாக்கியால் துளைக்கப்பட்ட ஷொராபுதீன் உடல் கண்டெடுக்கப்பட்டது. இதுவும் சட்டவிரோத என்கவுண்டர்தான். பிறகு டிஜிபி வன்சரா கிராமத்தில் கவுசர்பீ கழுத்து நெரிக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டதும் மோடிக்கும் சம்பந்தம் இல்லையா?

3. இந்த என்கவுண்டர் படுகொலைகளை நடத்திய டிஜிபி வன்சரா இப்போது சிறைக்கம்பிகளுக்கு பின்னால் இருந்து இந்த கொலைகளை முதல்வர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் அனுமதி கொடுத்த பிறகுதான் செய்தோம் என சொன்னது மோடியின் லட்சணத்தை காட்டவில்லையா?

4. குஜராத் மாநிலம் பிரிக்கட்ட 1960 முதலே ஜவுளி, உரம், இரும்பு போன்றவை அங்கு பிரபலம். பிஜேபி கட்சியே துவக்கபடாத காலத்தில் துவக்கப்பட்ட குஜராத் மாநில பெட்ரோலிய கழகமும், மோடி பிறக்காததன் முன்பே துவக்கபட்ட அமுல் கம்பெனியும் குஜராத் வளர்ச்சியில் மக்களுக்கு சேவை செய்வதும், மோடியின் ஆட்சிகாலத்தில் புதுப்புது முதலாளிகள் வளர்ந்ததும், அவர்கள் கொள்ளை லாபம் சம்பாதித்ததும் யாருக்கும் தெரியாது என நினைக்கிறாரா மோடிஜி?

5. எஸ்ஸார், ரிலையன்ஸ், எல்.டி, போர்டு இந்தியா ஆகிய நிறுவனங்களுக்கு அடுமாட்டு விலைக்கு தண்ணீர், மின்சரம், சாலை வசதி ஆகியவை கொடுக்கப்படுகிறது. மோடிக்கு நெருக்கமான அம்பானி குழுமத்திற்கு 7500 கோடி மதிப்புள்ள 5 கோடி சதுர மீட்டர் நிலத்தை வெறும் 160 கோடிக்கு கொடுத்து கார்ப்பரேட் சேவை செய்ததும், அந்த இடத்தை அந்நிறுவனம் பிளாட் போட்டு விற்பனை செய்ததும் அனைவரும் அறிந்ததுதான். ஆக மோடியின் குஜராத் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கான மாடல் என்பது சரிதானா? 

6. இரண்டே ஆண்டுகளில் இப்படி பன்னாட்டு, உள்நாட்டு பெரும் முதலாளிகளுக்கு மோடி காட்டிய சட்டவிரோத சலுகைகளால் அங்குள்ள மக்களுக்கு சேரவேண்டிய 17 ஆயிரம் கோடி ரூபாய் அரசின் கஜானாவில் சேரவில்லை என மத்திய தணிக்கைக்குழு சுட்டிகாட்டியதை தீர்க்கதரிசியானமோடியின் கள்ள மவுனம் செரித்துவிடவில்லையா?

7. கடந்த 8 ஆண்டுகளில் குஜராத்துக்கு 87 ஆயிரத்து 800 கோடி அமெரிக்க டாலர்கள் முதலீடு பெற்றதாக மோடி புளுக, இல்லை இக்காலத்தில் வந்த முதலீடு வெறும் 720 கோடிதான் என அந்த புளுகு எட்டே நாளில் ரிசர்வ் வங்கி அறிக்கை மூலம் வெளுத்ததை காவிக் கூட்டம் சொல்ல மறந்தது ஏன்? 

8. நர்மதா ஆற்றின் தண்ணீரையும், நிலத்தடி நீரையும் பெருமுதலாளிக்கு தாரை வார்க்கும் மோடி அரசை எதிர்த்து அங்கு விவசாயிகள் போராடுவதையும், அங்கு நடக்கும் விவசாயிகள் தற்கொலைகளையும் ஊடகங்கள் மூடி மறைப்பதும், பல லட்சம் விவசாயிகள் பலனடையும் சர்தார் சரோவர் அணை திட்டத்தை அமலாக்காமல் ஏமாற்றுவதை எழுதாமல் இருப்பதும் மோடி அரசின் விளம்பரங்களுக்காகதானே?

9. ஆண் பெண் விகிதாசாரத்தில் மிகவும் மோசமான இடத்தில் குஜராத் இருக்கிறது. 1000க்கு 919 பெண்களே உள்ளனர். ஊட்டசத்து குறைந்த பெண்கள் நிறைந்த மாநிலமும் இதுவே. இதற்கு மோடி சொன்ன காரணம் என்ன தெரியுமா? “நகர் புறத்து பெண்கள் சாப்பாட்டைவிட மேக்கப்பில்தான் கவனம் செலுத்துகிறார்கள் அதற்குதான் செலவு செய்கிறார்கள்” என்று நக்கல் அடித்ததும், கடுமையான எதிர்ப்பு கிளம்பியது பல்டி அடித்ததும் மோடியின் குரூர புத்தியின் ஒரு துளி அல்லவா?

10. கார்ப்பரேட் முதலாளிகளுக்கு மின்மிகை மாநிலமாய் இருக்கும் குஜராத்தில் இன்றுவரை 11 லட்சம் வீடுகள்மின் இணைப்பு இல்லாமல் இருகிறது. அதுமட்டுமா 1 கோடியே 20 லட்சம் குடும்பங்களில் 63 லட்சம் குடும்பங்கள் சமையல் எரிவாயு இணைப்பு இல்லாமல் இருப்பதும், பல லட்சம் மக்கள் குடிநீருக்காக பல கிலோமீட்டர் அலைவதும் வளர்ச்சியின் குறியீடா மிஸ்டர் மோடி?

11. மனுநீதியை அமலாக்க ஆர்.எஸ்.எஸ் கொடுத்த பயிற்சியை குடிநீர் கொடுப்பதில்கூடவா காட்டவேண்டும். பாவ்லா தாலுகா தன்வாடா கிராமத்தில் எந்த எந்த சாதியினருக்கு எப்போது தண்ணீர் விடப்படும் என பம்பு செட்டு சுவற்றில் பட்டியல் எழுதிவைக்கும் அளவுக்கு மோசமாக இருக்கிறது. கடைசியாக தண்ணீர் இருந்தால் தலித் மக்களுக்கு கிடைகும் நிலைதான். வன்கொடுமை சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டிய இதை ரசித்தபடியே மோடி பவணி வருவது நியாயமா?

12. “பூரண மதுவிலக்கு அமலாக்கப்பட்ட குஜராத்தில் போன் செய்தால் சாராயம் வீடுதேடிவரும்” இது தமிழக சட்டமன்றத்தில் அமைச்சர் நத்தம் விசுவநாதன் பேச்சு.. சட்டமன்ற பதிவேட்டில் உள்ளது. அங்கு காங்கிரஸ் ஆட்சியில் குழாய் மூலம் சாரயம் விற்றவர்கள் இப்போது டோர் டெலிவரி செய்கிறார்கள். மோடி அவர்களே தாங்கள் வித்தியாசமான தலைவர்தானா?

13. வறுமை ஒழிப்பில் குஜராத் மிகவும் பின்தங்கி இருக்கிறது. பழங்குடியினர், இஸ்லாமிய சமுதாயத்தினர் வறுமையை ஒழிப்பதிலும் நாட்டில் மிகவும் பின்தங்கிய மாநிலம் குஜராத்தான். குழந்தை இறப்பை தடுப்பதில் தோல்வி, பொதுவிநியோக முறை சீரழிந்த நிலை.மக்களின் சுகாதார நலன் புறக்கணிக்கப்படுவது அதாவது கிராமப்புறத்தில் 67 சதவீத மக்களுக்கு கழிப்பிட வசதி இல்லை போன்றவை திட்ட கமிஷன் அறிக்கையின் ஆதாரங்கள். வெறும் வாய் சவடால் மூலம் இதை மூட முயற்சிப்பது நியாமதானா மோடி?

14 கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசு 2 லட்சம் வேலை வாய்ப்புகளை வெட்டிச் சுருக்கிவிட்டது., அனைத்து துறைகளிலும் 2500 ரூபாய் சம்பளத்தில் அத்துக்கூலிகளாக இளைஞர்களை அலையவிடுவதுதான் இந்தியாவுகான முன் மாதிரியா? 

15. ஐசோதாபென் என்கிற பெண்ணை உங்களுக்கு தெரியுமா? 14 வயதான சிறுமியை 17 வயதில் திருமணம் செய்த தாங்கள் இன்றுவரை அவரை நிம்மதியாய் வாழவிடாமல், கண்காணிப்புடன் வெளியே பேசவிடமல் வைத்திருப்பது யாருக்குத் தெரியும்? ஓப்பன் என்கிற பத்திரிகை இச்சம்பவத்தை வெளியே சொல்லும் வரை. ஏனெனில் நீங்கள் பிரம்மச்சாரி என்ற பிம்பத்தை கட்டிக்காத்து வருகிறீர்கள் அப்படிதானே? தன்னை நம்பிவந்த பெண்ணை காப்பாற்றாத எந்த ஒரு மனிதனும் தன் நாட்டை காப்பாற்றுவான் என்ற நம்பிக்கை எப்படி வரும்? 

16. ஆசிஷ் கேத்தானை தெரியுமா மோடி? எப்படி மறப்பீர்கள்! உங்கள் அமைச்சரவையில் இருந்த மாயா கோட்னானிக்கு 28 வருட சிறைத் தண்டனையும், பாபு பஜ்ராங்கிக்கு ஆயுள் தண்டனையும் வாங்கிக் கொடுத்த தெகல்கா நிருபர் அவர்.
2002 ல் நீங்கள் செய்த இன அழிப்பில் உங்கள் கையில் படிந்த இரத்த கரையின் சாட்சி அவர். நீங்களும் சிறைக்கு செல்லும் காலம் நெருங்குகிறது. ஆகவே கார்ப்ரேட் கைகளில்தஞ்சம் அடைந்து, அவர்களுக்கு சேவகம் புரிந்து, இந்த நாட்டின் உட்ச பதவியை அடைய கனவு காண்கிறீர்கள். கனவு காண்பது அனைவருக்கும் உரிமை! உங்களுக்கு என்ன தடை? 

17. நவீன ஊடகங்களான இணையத்தில் மிகப்பெரிய தொழில்நுட்ப கூலிப்பட்டாளத்தை வைத்து உங்களை பின்தொடர்பவரகள் 18 லட்சம் பேர் என ஆகாசபுளுகை அள்ளிவிட்டுக்கொண்டிருந்தீர்கள், கூலிக்கு மார் அடிக்கும் ஐ.டி கம்பெனிகளை நீங்கள் வாடகைக்கு வைத்துதான் இணைய உலகை ஏமாற்றுகிறீர்கள் என்பதை கோப்ரா போஸ்ட் அம்பலப்படுத்திவிட்டது. உண்மையை ஒருநாளும் நீங்கள் நம்பப் போவதில்லையா மோடி அவர்களே?

18 உங்கள் காவி கட்சியில் அகில இந்திய தலைவராக இருந்த பங்காரு தொலைகாட்சியின் மூன் லஞ்சம் வாங்கியது பழைய சம்பவமாக இருக்கட்டும். சமீபத்தில் லைம்டோன் சுரங்க வழக்கில் 54 கோடி கொள்ளையடித்த பாபு போக்கிரியாவுக்கு மந்திரி பதவி கொடுத்ததாகட்டும் எதற்காகவாவது வெட்கப்பட்டிருக்கிறீர்களா? 

சொல்லுங்க மோடி... சொல்லுங்க!

(கேள்விகளுக்கு உதவிய ஆதார நூல்: நரேந்திர மோடி நாமம் - கோவி.லெனின்)