எனது தாத்தா செல்வராஜும் பாட்டி இரத்தினகண்ணமாளும் |
நினைவுகளின் சுழலில் 4
எல்லாத்தருணங்களிலும் அன்பால் ஆசிர்வதிக்கப்படுவது எல்லோர்க்கும் வாய்ப்பதில்லை. தங்களது பிள்ளைகள் மீதும், பேரப் பிள்ளைகள் மீதும் அளவில்லா அன்பு செலுத்தும் இதயங்களால் மட்டுமே அது சாத்தியம். எங்கள் பால்யம் எங்கள் தாத்தா பாட்டி வீட்டில் அப்படியே ஆசிர்வதிக்கப்பட்டது. விடுமுறை நாட்களில் பேரன்கள் எல்லோரும் மரக்காணம் பாட்டி வீட்டில் கூடி அடிக்கும் லூட்டிகளை அவர்கள் புன்னகையுடன் கடந்து செல்வர். மண் புழுதியில் சிறுவர்களுக்குள் எத்தனை சண்டைகள், எத்தனை காயங்கள்? எங்களை எங்கள் அம்மா, அல்லது பெரியம்மா திட்டினால் எங்கள் தாத்தாவும் பாட்டியும் அவர்களைத் திட்டும் எதிர்வினை இயல்பான ஒன்று.
தென்னந்தோப்பின் ஓரத்தில் ஒட்டு, நீலம் என இரண்டு மாமரங்கள் உயர்ந்து நிற்கும். அந்த மரங்களில் ஏறி செழித்த செங்காய்களைத் தேடி, கிளைகளில் வைத்தே அவற்றைக் கடித்துவிட்டு, அணில் கடித்த மாங்காய்களைப் பறித்துக்கொள்கிறோம் என மிகத் திறமையாகப் பொய் சொன்னதாக நினைவு. ஆனால் எங்கள் தாத்தா அறியமாட்டாரா கடித்தது எந்த நீண்ட வால் அணில்கள் என? அவர் எத்தனை அணில்களைப் பார்த்திருப்பார். தவழும் புன்னகையுடன் சொல்வார். “அச்சச்சோ அணில் கடித்த மாங்காய்களா? சரி பறித்துக்கொள்ளுங்கள்” என. ஓரிரு குழந்தைகளின் சேட்டைகளையே பழகிக்கொள்ள முடியாத இன்றைய தலைமுறை அன்றைய நாட்களை எப்படிப் புரிந்துகொள்ளும். கோடை விடுமுறை முழுவதும் கூட்டமாய் ஒன்று சேர்ந்து வீட்டை, மாமரங்களை, தென்னம் மரங்களை, தைலம் செடிகளை சூறையாடும் வாண்டுகள் கூட்டத்தின் வால் தனங்களை ரசித்த அந்த இதயங்கள் குறித்த நினைவுகள் ஊறி எழுகிறது.
விடியற் காலையில் வீட்டின் பின்புறம் உள்ள பெரிய கிணற்றில் குளித்து, தூய வெள்ளுடை அணிந்து, முருகா எனக் குரல் எழுப்பி நெற்றி முழுவதும் திருநீறு பூசி, மஞ்சள் நிறத்திலான முல்லை நிலத்திற்குரிய பூவான சரக்கொன்றை மலர்களைப் பறித்து முருகனுக்கு முன்வைத்து வழிப்படுவது எங்கள் தாத்தாவின் அன்றாட செயல்களில் ஒன்று. முல்லை நிலத்திற்குரிய பூவான சரக்கொன்றை மருத நிலத்திற்குப் பரவிய வரலாறு பின்பு அறிய வேண்டும். அந்த நினைவுகளின் மிச்சமாய் இப்போது சிதம்பரத்தில் நாங்கள் கட்டியுள்ள சூர்யா இல்லத்தின் முன்பு ஒரு சரக்கொன்றை தலையாட்டி வளர்ந்து வருகிறது. தன் பூசை கடமைகளை முடித்த தாத்தா தென்னம் மரங்கள் நிழல்தரும் வாசலில் வந்து அமர்ந்து, அன்றைய பணிகளைத் திட்டமிடுவார்.
திண்டிவனம், கடலூர் முதுநகர், புதுநகர் எனப் பல காவல் நிலையங்களில் தலைமைக் காவலராக இருந்தும் (இன்று உள்ள ஏட்டையா இல்லை) தனது அதிகாரத்தை யார் மீதும் காட்டாமல், நேர்மையாக பணியாற்றிய ஒரு காவல்துறை அதிகாரி தனது அப்பா என எனது அம்மா அடிக்கடி சொல்லும் போது பெரு மகிழ்ச்சியாய் இருக்கும். அரசியல் புரிதல் உண்டான பிறகுதான், காவல்துறை என்பது ஆளும் வர்க்கத்தின் அடக்குமுறை கருவி என்பதறிந்தேன். அதில் ஒரு படைவீரராய் தாத்தா இருந்ததிலிருந்து அவரது நெருக்கடிகளை புரிந்துக்கொள்ள முடிந்தது.
அது போகட்டும்.... இன்னொரு பக்கம் பஸ்டாண்டு மெயின் ரோட்டில் உள்ள பெரியம்மாவின் வீட்டின் பக்கம் போகலாம்! வீட்டின் எதிரில் உள்ளது அழகு முத்து மாரியம்மன் கோவில். கீற்றுக் கொட்டாயில் சிறியதாக இருந்த அந்த கோவிலை பெரியதாக கட்ட பெரியம்மாவின் இளைய மகனான, எனது அண்ணன் குமார் மற்றும் ரெங்கநாதன் வாத்தியார் உள்ளிட்டோர் கடும் முனைப்புக் காட்டினர். ஊரெல்லாம் வசூல் செய்து தினமும் வரவு செலவு பார்த்து நேர்மையாகக் கட்டினர்.
கோவில் கட்டும் கற்களைச் சுமந்து திருப்பணி செய்தவர்கள். தினமும் கட்டுமான பணிகளுக்கு நூற்றுக்கணக்கான குடங்கள் அடி குழாயில் தண்ணீர் இறைத்து ஒவ்வொரு கற்களை ஈரமாக்கியவர்கள். இன்றுள்ள சங்கிகளை போலக் கோவிலை வைத்துப் பிழைப்பு நடத்த தெரியாத எளிய மனிதர்கள் அவர்கள். அதுவும் எனது அண்ணன் கடவுள் பக்தியின் உச்சத்தில் இருந்தவர். பக்தி பரவசமாய் தனது இளைமை காலத்தில் தொடர்ந்து சபரிமலைக்கு மாலை அணிந்து, பூஜை செய்து, ஒரு மண்டலம் விருதம் இருந்து பல்லாண்டுகள் சபரி மலை சென்றவர்.
ஆனால் வாழ்வின் நகை முரண் என்னவெனில் எனக்கு கடவுள் மீதான நம்பிக்கைகள் முழுவதுமாக தகர்ந்ததற்கு முக்கிய சாட்சியாக இந்த கோவிலும் எனது அண்ணன் குமாருமே சாட்சியமாய் மாறினர். அதை இன்னொரு நாள் சொல்கிறேன்.
இந்த கோவிலில் தெருக்கூத்து நடப்பது வழக்கம். மைக் செட் அதிகம் புழக்கம் இல்லாத காலமாதலால் கூத்து கலைஞர்கள் வெறும் குரல் ஓசையில்தான் மொத்த கூட்டத்தையும் கட்டிப் போட முடியும். அவர்கள் குரலின் கம்பீரம் நம்மைக் கட்டி இழுக்கும். பீமசேனன் உச்ச ஸ்தாயில் சபதமிடும் போது பயம் நம்மை பற்றிக்கொள்ளும். இரவின் இருளை போக்க பெட்ரோமாக்ஸ் விளக்குதான் ஒரே வழி. ஜெர்மன் பெர்லின் நகரைச் சேர்ந்த 1851ல் பிறந்த மாக்ஸ் கிரெதஸ் என்பவர் இவ்விளக்கை முதன் முதலில் வடிவமைத்தார். பெட்ரோலியம் என்ற எரிபொருளின் பெயரும் மாக்ஸ் என்ற கிரெத்சின் முதற் பெயரும் சேர்க்கப்பட்டு பெட்ரோமாக்ஸ் என இவ்விளக்குக்குப் பெயரிடப்பட்டது. மண்ணெண்ணெய் எரிபொருளாகப் பயன்படும் இந்த விளக்கு 1916 ஆம் ஆண்டில்தான் உலகம் முழுவதும் பரவத் துவங்கியது. அப்படியே மரக்காணத்தின் மாரியம்மன் கோவிலுக்கும் வந்து சேர்ந்தது.
கூத்து துவங்குவதற்கு நெடுநேரம் முன்பே போர்வையுடன் சென்று இடம் பிடிப்பது எங்களைப் போன்ற சிறார்களின் அதி முக்கிய செயலாகும். எதுவுமே புரியாத கூத்தில் கட்டியக்காரன் வந்ததும் சிரிப்பொலிகள் கிளம்பும். கூத்து துவங்கிய சிறிது நேரத்தில் தூக்கம் வந்து அங்கேயே தூங்கிய நினைவுகள்தான் அதிகம். பல நாட்கள் கையில் வைத்திருந்த நொங்கு வண்டி தொலைந்து போய் அழுதுகொண்டே வந்ததும் உண்டு. (நொங்கு வண்டி செய்யும் முறை பின்னர் விவரிக்கப்படும் 😀)
வயதாக வயதாக தெருக்கூத்தின் சூட்சுமங்கள் புரிய ஆரம்பித்தது. பெண்கள் மீதான கொச்சையான வசவுகளும், கூத்தின் சாதிய சாயங்கள் வெளுக்கத் துவங்கின, அவைகள் குறித்தும் பேச நிறைய இருக்கிறது பிறிதொரு பொழுதில் பேசலாம்.
(நினைவுகள் சுழலும்..)
அருமையான கட்டுரை குடும்பம் குறித்து தெளிவுரை ....நினைவுகளின் பலம் நினைக்கும் வரை தெரிவதில்லை ...எழுதுவதை நிறுத்தி விடாதீர்கள் தோழர் நாங்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறோம்
பதிலளிநீக்குSuper .same memories i hadn't marakkanm
பதிலளிநீக்கு