கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 6 மே, 2013

சென்னை கோட்டைக்கு செல்லும் பாதை




சென்னை கோட்டைக்கு
செல்லும் பாதை
தருமபுரி துவங்கி
பாச்சாரபாளையம் புகுந்து
மரக்காணம் என
மருத்துவருக்கு யார் சொன்னது?

அவர்கள் சொன்ன பாதை
திருச்சிக்கு சென்றதும்தான்
தெரிந்தது.. சரியில்லா பாதையென..
மீண்டுவர திட்டமில்லாமல்
தொடர்ந்து வார்த்தைகளை
வீசிக்கொண்டிருக்கிறார்...


தொடர்கிறது கலவரங்கள்...
வாகனங்களும்
மனிதர்களும்
கால்நடைகளும்
தாவரங்களும்
தொடர்ந்து தாக்கப்படுகின்றனர்.

வீராதி வீரர்கள்
இருளில்
மறைந்திருந்து கற்களை
வீசி எரிகின்றனர்..
இலக்கு தெரியாமல்
அலையும் கற்கள்
எல்லோரையும் தாக்குகின்றன...

லாரி ஓட்டியான
அப்பா வாங்கி வரும்
மிட்டாய்க்காக காத்திருக்கும்
அந்த குழந்தைக்கு தெரியாது
அவர்கள் விட்ட கற்களில் ஒன்று
தந்தையின் உயிர் குடித்த கதை!

விழுந்ததை சரிசெய்ய
மீண்டும் கீழே விழும்
அறிவு படைத்தவர்கள் நாட்டில்
இன்னும் நிறைய
குழந்தைகளுக்கு இது
நிகழலாம். ............
மனிதர்கள் ஜாக்கிரதை



வெள்ளி, 9 டிசம்பர், 2011

உடையும்? உடையாது! கவிதை என்பதறிக...?



உடையும்? உடையாது!
உடையும்! உடையாது?
உடையும்? உடையாது!
கட்டு.. கட்டாதே.
கட்டு.. கட்டாதே.
கட்டு. கட்டாதே..

இரு பக்கமும் விவாதங்கள்
உடைந்தால் அங்கும் சேதம்
உடைந்தால்தானே..?
இங்கு வாதம்.

கட்டினால் கிடைக்காது
கட்டாவிடால் பிழைக்காது
ஆதலினால் கட்டுவோம்!
எனவே கட்டாதே!

உங்களுக்குள் ஆயிரம் அரசியல்
உங்களுக்குள் ஆயிரம் ஆலோசனைகள்..
எங்களுக்கோ  வாழ்க்கை குறித்த கவலை
எங்கள் கண்களில் நீர் திவலை.

பேசுவதை கடந்துவிட்டோம்
என நாங்களும்
பேசினால் என்ன தவறு
என நீங்களும் ....

என்றாகிலும்
கட்டப்போவதில்லை நீங்களும்
எதுவாகினும்
விடப்போவதில்லை நாங்களும்..

யார் அறிவார் உண்மையில்
பிரச்சனையின் மையம் எதுவென?
அறிந்தவர் கூறார்
அன்பில் உள்ளது உண்மையென!

உங்களின் தேவை
நீண்ட நாள் அரசியில்!
எங்களின் தேவை
ஒரு நாள் அரிசியில்?

ஒருவேலை..
உங்கள் தேர்தலுக்கு முன்பும்
இல்லையெனில்..
எங்கள் தேவைகளுக்கு பின்பும்
எப்படி முகம் பார்ப்போம்.

எல்லையோரம் கொய்யா விற்று
அப்பிழைப்பில் லாபம் பெற்று
எங்கள் பிழைப்பு நடப்பதினை
யாராரிவார்? என்றறிவார்?

சனி, 3 டிசம்பர், 2011

”மண்”மோகன் சிங் வகையறாக்களுக்கு மகாகவி பாரதியார் பாடிய சினிமா பாடல்..


(தினமணியில் வந்த கருத்து படத்திற்கும் இந்த பாடலுக்கும் எவ்வித சம்மதமும் இல்லை.. இல்லை இல்லவே இல்லை என்பதையறிக ..). 

நடிப்பு சுதேசிகள் 

நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமு மின்றி, 
வஞ்சனை சொல்வா ரடீ! - கிளியே! 
வாய்ச் சொல்லில் வீரரடி. 

கூட்டத்தில் கூடிநின்று கூவிப் பிதற்ற லன்றி, 
நாட்டத்தில் கொள்ளா ரடீ! - கிளியே! 
நாளில் மறப்பா ரடீ 

சொந்த அரசும்புவிச் சுகங்களும் மாண்பு களும் 
அந்தகர்க் குண்டாகு மோ? - கிளியே! 
அகலிகளுக் கின்ப முண்டோ ? 

யந்திர சாலை யென்பார் எங்கள் துணிகளென்பார், 
மந்திரத் தாலே யெங்கும் - கிளியே! 
மாங்கனி வீழ்வ துண்டோ ! 

உப்பென்றும் சீனி என்றும் உள்நாட்டுச் சேலை என்றும் 
செப்பித் திரிவா ரடீ! - கிளியே! 
செய்வ தறியா ரடீ! 

அச்சமும் பேடி மையும் அடிமைச் சிறு மதியும் 
உச்சத்திற் கொண்டா ரடீஸ்ரீ - கிளியே 
ஊமைச் சனங்க ளடீ! 

ஊக்கமும் உள்வலியும் உண்மையிற் பற்று மில்லா 
மாக்களுக் கோர் கணமும் - கிளியே 
வாழத் தகுதி யுண்டோ ? 

மானம் சிறிதென் றெண்ணி வாழ்வு பெரிதென் றெண்ணும் 
ஈனர்க் குலகந் தனில் - கிளியே! 
இருக்க நிலைமை யுண்டோ ? 

சிந்தையிற் கள்விரும்பிச் சிவசிவ வென்பது போல் 
வந்தே மாதர மென்பார்! - கிளியே! 
மனத்தி லதனைக் கொள்ளார் 

நாட்டில் அவமதிப்பும் நாணின்றி இழி செல்வத் 
தேட்டில் விருப்புங் கொண்டே! - கிளியே! 
சிறுமை யடைவா ரடீ! 

சொந்த சகோ தரர்கள் துன்பத்திற் சாதல் கண்டும் 
சிந்தை இரங்கா ரடீ! - கிளியே! 
செம்மை மறந்தா ரடீ! 

பஞ்சத்தும் நோய்க ளிலும் பாரதர் புழுக்கள் போல் 
துஞ்சத்தும் கண்ணாற் கண்டும் - கிளியே! 
சோம்பிக் கிடப்பா ரடீ! 

தாயைக் கொல்லும் பஞ்சத்தைத் தடுக்க முயற்சி யுறார் 
வாயைத் திறந்து சும்மா - கிளியே! 
வந்தே மாதர மென்பார்!

ஞாயிறு, 27 நவம்பர், 2011

மாற்றம் ஒன்றே மாறாதது ... உண்மையா?????????




எல்லாம் தெரிந்தே நடந்தது
நடக்குமென அறியாமல்..
நடக்குமென தெரிந்திருந்தும்
நடக்காது என்ற நம்பிக்கை இருந்தது.

மாற்றம் மட்டுமே மாறாது
என்றெல்லாம் கதைத்தோம்
மாற்றம் கானும்... 
இவரிடமும்
மாற்றம் வரும் என நம்பினோம்.

வந்தது குறைவு என்கிறார்கள்
உடன் வராதவர்கள்..
வருவது இன்னும் துவங்கவில்லை 
என்கிறார்கள் உடன் வந்தவர்கள்..
வந்ததே தாங்கவில்லை
வருவதை எப்படி தாங்க..
வருந்துகிறார்கள் 
பொதுவாய் நின்ற பலர்..

அதலினால் உலக்கத்தீரே
அல்லல் பட்டு அழுது - கண்ணீர்
ஆறாய் பெருகி வந்தும்  
ஆவதொன்றுமில்லை ஏனெனில் 



எல்லாம் தெரிந்தே நடந்தது
நடக்குமென அறியாமல்..
நடக்குமென தெரிந்திருந்தும்
நடக்காது என்ற நம்பிக்கை இருந்தது.


(பின் குறிப்பு படத்திற்கும் மேற்கண்ட வரிகளுக்கும் கொஞ்சம்கூட சம்பந்தம் இல்லை..இல்லை.. இல்லவே இல்லை)

புதன், 9 நவம்பர், 2011

களவின் தேசியகீதம் .... (அரவான் திரைப்படத்தின் ஒரு பாடல்)


அரவான் என்கிற பிருமாண்டமான திரைப்படம் வசந்தபாலன் இயக்கத்தில் மிக விரைவில் வெளிவர இருக்கிறது. அந்த படத்தின் பாடல் வெளியிட்டுவிழா சமிபத்தில் நடந்தது. நேற்றைய முன்தினம்தான் அமைதியான ஒரு வேளையில் அப்படத்தின் பாடல்களை கேட்டுக்கொண்டிருந்தேன். அதில் களவு குறித்த ஒரு பாடல் மிகவும் அற்புதமாக அமைந்திருந்தது. அற்புதமாக அமைந்தது மட்டுமல்ல வாசிப்பின் உச்சத்தில் உருவாகும் பாடலாகவும் அது இருந்தது.

இப்படம் முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநில பொது செயலாளர் சு.வெங்கடேசன் எழுதிய 1048 பக்கங்களை கொண்ட 590 விலையுள்ள தமிழினி பதிப்பகத்தில் வெளிவந்த காவல் கோட்டம் என்ற நாவலின் சிலப்பக்கங்க்களை கதையாகக் கொண்டது.

துசிப்படிந்து துருவேறிய போர்வாளை தனக்காவே சாமி அறைக்குளிருந்து கண்களில் பொங்கும் பெருமிதத்துடன் வெளியில் எடுத்துக்காட்டிய தாதனுர் மக்கள் வாழ்க்கையை, மாலிக்கபூர் மதுரையை நோக்கி படை எடுத்த காலத்தில் துவங்கி 300 ஆண்டுகளை கடந்த மதுரையின் வரலாற்றை 10 ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து எழுதிய அந்த எழுத்தாளனின் வரலாறு புனைவு இது.

புனைவு உலக இலக்கியங்களின் வரிசையை நோக்கி நடைபோடும் இந்த நாவலை முழுமையாக படிக்காமல் இவ்வுளவு சிறப்பாக ஒரு பாடலை எழுத முடியாது. களவில் விழுந்து களவில் எழுந்து களவோடு வாழ்ந்த கள்ளர்களின் களவை கொண்டாடும் இந்த பாடல் அப்புத்தகத்தின் பல்ல்வேறு பக்கங்களில் சிதறி விழும் மாணிக்க பரல்களை கோர்த்த மாலை போன்றது. 



மிகசசிறப்புடைய காவல் கோட்டம் நாவலின் அறிமுகமாக.. (அல்லது) அரவான் படத்தின் அறிமுகமாக இந்த பாடலை எழுதிய ந.முத்துகுமாருக்கு வாழ்த்துக்கள். பாடலை படியுங்கள் அப்படியே கேளுங்கள் .. முடிந்தால் காவல் கோட்டம் நாவலை வாங்கி படியுங்கள். 

அரவானை பார்க்க ஆவல் உண்டாகும் பாடல் இது.

பூசாரி பட்டி களவு
கோடாங்கி பட்டி களவு 
கொலைகாரன் பட்டி களவு 
கோடாலி பட்டி களவு 
பேய்க்காரன் பட்டி களவு 
காநாடு காத்தான் களவு 
நாட்டமை பட்டி...........

என் சாமி பேரு கருப்பு 
இம்புட்டு பேரு நெருப்பு 
கன்னக்கோல் எங்க துருப்பு 
களவுக்கு நாங்க பொறுப்பு 

கவுதாரி போல வதந்தி 
வவ்வால போல தப்பிச்சி 
ங்கிட்டு எல்லாம் மறைஞ்சி 
காத்தடிச்சு கெளம்புடா  


சாராயத்த ஊத்தி தாரேன் 
ரத்த துளி நானும் தாரேன் 
போற வழி காட்டு வழி 
பாதை எல்லாம் கூட வாடி 
ஜக்கம்மா ஜக்கம்மா  

மலையா தாண்டி 
போகும் போதும் 
மறுவ தாண்டி 
போகும் போதும் 
மனசுக்குள்ள 
ரொம்ப தாடி  

களவு களவு களவு 
களவு களவு களவு 
களவு களவு களவு 
இன்பமிங்கே களவு  

இம்புட்டு களவாணி பயலுகள பிடிங்களேன் 
ஈன எடுவட்ட பயலுகள புடிங்க புடிங்க புடிங்க  

போட்ட களவுக்கும் பீட்டா களவுக்கும் 
உடும்ப பிடிச்சாச்சு 
ஆட்டுக் களவுக்கும் 
மாட்டுக் களவுக்கும் 
சலங்கைய அவுத்தாச்சு

கடவுளும் நம்ம போல களவுக்கு வந்தவன்
கன்னதாசாச்சு 
களவுல மாட்டிகிட்டு கழுத்த இழந்தவன் 
கம்புக்கு பேராச்சு 
கொண்டி கம்போடு தயாளு நம்மோடு
கடத்து ராசா களவுக்கு வா 

டே எடு எடு எடு முந்திக்கோ 
புடி புடி புடி கொண்டி கம்பு 
தொடு தொடு கண்ணா வாசல் தோடு 
பேட்டை கிளி கெளம்பு 
இது களவுக்கு மந்திரமே  

என் சாமி பேரு கருப்பு 
இம்புட்டு பேரு நெருப்பு
கன்னக்கோல் எங்க துருப்பு 
களவுக்கு நாங்க பொறுப்பு 
கவுதாரி போல வதந்தி 
வவ்வால போல தப்பிச்சி 
இங்கிட்டு எல்லாம் மறைஞ்சி 
காத்தடிச்சு கெளம்புடா

திங்கள், 29 ஆகஸ்ட், 2011

எழுந்துவா என் மகளே.. இணைந்து போராடுவோம்!







செங்கொடி என்ற பெயர் கொண்ட

தாயே..
தங்கையே ..
என் செல்ல மகளே!
ஏன் செய்தாயடி...

உனது பிஞ்சு மொழியால்
குரல் உயர்த்தி இருக்கலாம்.
உனது கோபத்தால்
இன்னும் அதிர்ந்திருக்கலாம்..

மரணம்தான் உனது
குரலா
அல்லது
தீர்வா.?
தற்கொலைகள் இதுவரை
தீர்வானதில்லையடி
என் சோதரி..

மக்களை திரட்டி
நடத்திய
போராட்டம்தான்
இதுவரை வென்றிருக்கிறது..

எழுந்துவா என்
தங்கையே..
மகளே..
இணைந்து
போராடுவோம்!

ஞாயிறு, 12 ஜூன், 2011

திருட்டுக்கும் இருட்டென்று பெயர்?!!!


இருட்டு என்பது!?

வெட்க்கப்பட்டு மறைந்து
மெல்ல எழுந்து
சமவெளிகளில் நடந்து
குடில்களில் தவழ்ந்து
மஞ்சங்களில் படர்ந்து
தெருக்களில் மிதந்து
வெளிச்சத்தில் நழுவி
மரங்களை தழுவி
சட்டென நின்று
படீரென விலகி
சூட்சுமங்களை வைத்து
ரகசியங்கள் பேசி
ஒரு நதியை போல திமிரிச் செல்கிறது இருள்.

இது குறித்து ஒவ்வொரு மனித மனதிற்குள் ஒரு வடிவம் அல்லது ஒரு கற்பனை இருக்கும். இருள் குகைகளில் இருக்கும் சிற்பங்களைப்போல தன்னை மறைத்து காட்சிப்படுத்துகிறது. காவி இருள் தேசத்தை தின்பது போல கருப்பு நிழல் மனிதர்களை உட்கொள்கிறது. கருத்த நிழலில் ஒவ்வொரு மனித உயிரும் செரிக்கப்படுகிறது. சூரியனின் பணி முடித்து விலகும் போது இருள் தன்னை மண்ணில் நிறுவுகிறது. உங்கள் இல்லங்களில் விளக்குகள் ஏற்றப்படும் போது தன்னை மறைத்தாலும் அது தன் இயல்பை இழப்பதில்லை மனித ஆழ்மனதை போல.

நண்பனை, தோழனை, மனைவியை, சகோதரனை, சகோதரியை, தாயை, தந்தையை போன்ற வாழ்வின் சொந்தங்களையும், இவற்றிக்கும் மேலாக தங்களை நம்பும் தேச மக்களை துரோகிக்கும் எவரையும் இதுவே தின்று எச்சமாய் உமிழ்கிறது.

அகவே இருட்டு என்பது புழல், திகார் என்ற பெயரிலும் இருக்கலாம். அதனால்தான் திருட்டுக்கும் இடுட்டென பெயர் வந்தது.

வியாழன், 26 மே, 2011

கலகக்காரனின் குரல் - கவிதைகள் - 4


அது 2007 மே மாதம் இந்திய ஜனாயக வாலிபர் சங்கத்தின் அகில இந்திய மாநாடு சென்னையில் நடந்த சமயம். அந்த மாநாட்டிற்காக ஒரு பிரசார ஒலிநாடா வெளியிடுவது என முடிவு செய்து அந்த பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது நடந்த கயர்லாஞ்ச்சி கொடுரம் என்னை மிகவும் பாதித்து இருந்தது. சாதி ஆதிக்கம்  ஒரு குடும்பத்தை கொடுரமாக வேரறுத்த கதை அது. இந்திய நாட்டின் சாதி ஆதிக்கத்தை உலகம் காறிஉமிழ்ந்த கதை அது. இரண்டு ஏக்கர் நிலத்தை வைத்திருந்த பாவத்தின் சம்பளமாக அம்மா, மகள், இரண்டு மகன்கள் உயிரை கொடுத்த வன்மத்தின் கதை. அந்த வலியை இந்த ஒலிநாடாவில் கொண்டு வரவேண்டும் என நினைத்தேன்.  

அந்த ஒலிநாடாவில் வரும் பாடல்களை எழுத திருகழிகுன்றத்தில் இரண்டுநாள் முகாம் நடத்தினோம். நிறைய நல்ல பாடல்கள் வந்தது.  அங்கு ஆதவன் தீட்சண்யா வந்திருந்தார். கயர்லாஞ்ச்சி குறித்து பாடல் கேட்டேன். பலமணி நேரம் ஏதும் பேசாமல் அமர்ந்திருந்தார். மாலை நான்கு மணிக்கு அவரிடம் சென்றேன் .. 
"தோழர்  ஒரு பாட்டுதானே கேட்டேன்...."
"ஆமாம் ரமேஷ் .... ஒரு பாட்டுதான் ..."
"இன்னும் எழுதலையா ..."
"எப்படி எழுதுவது .. அதான் யோசிக்கிறேன் ..."

அவரது முகத்தில் ஒரு இனம்புரியாத உணர்வு தெரிந்தது. மெல்ல அங்கிருந்து நகர்ந்தேன். கொஞ்சம் நேரம் கழித்து என்னை அழைத்தார். இந்த பாடலை கொடுத்தார். படித்ததும்தான் தெரிந்தது. ஒரு வலியை உள்வாங்கி எப்படி எழுதுவது என.

ஊரே மறந்த கதையொன்றை
உள்ளம் பதற சொல்ல வந்தேன்
பாரே புகழும் அகிம்சை மண்ணின்
பாவக் கதையொன்றை சொல்லவந்தேன்

தவமா தவமிருந்து நான் பெத்தப் பிள்ளைக - எங்க
தவத்துல துளுத்து வந்த கொழுந்து மல்லிக
சவமா கிடக்குதிப்போ பூமியிலே - இதை
சகிச்சுக் கிடப்பதும் சாமிகளா?

(ஊரே)

ஆலா விழுதிறங்கி அருகுபோல் வேரோடி
நாலா திசையுமெங்கள் நரம்பா கிளையோடி
வாழையடி வாழையா வாழப்பொறந்த பாதியில

(ஊரே)

அப்பன் ஆத்தா எங்களாட்டம் அடிமையா வாழ வேணாம்
ஆண்ட வூட்டு தொழுவத்துல சாணியள்ளி மாள வேணாம்
சாதி வெஷந் தீண்ட நுரை தள்ளிச் சாகாம
தாவித் தப்பியோட தங்கங்கள படிக்க வச்சோம்

(ஊரே)

படிச்சும் பலனில்லே பாவி மக்க பூமியில
அடிச்சே கொன்னாங்க கயர்லாஞ்சி வீதியிலே
தன்னந்தனி மரமா நான் கதறி அழுஞ்சத்தம் - இந்த
புண்ணிய பூமியைத்தான் புதைக்குழிக்கு தள்ளாதோ

(ஊரே)

எம் பொண்டுபுள்ள பொனம்தொட்ட புழுதி பறந்துவந்து
அவங்க கண்ணப் புடுங்காதோ கருவறுக்கப் பாயாதோ
வெம்பி அழும் எனது வேதனை சுடுமூச்சில்
வெந்து அழியாதோ வெங்கொடுமைச் சாதி மனம்
(ஊரே ) 

இன்னும் இந்த மண்ணில் சாதியின் பெயரால் நடக்கும் கொடுரங்களை ஆளும் வர்க்கங்கள் அனுமதித்துக்கொண்டுதான் இருக்கின்றன.இந்த அனுமதி  உங்களுக்கும் எனக்கும் கோபம் வரும்வரைதான் என்பதை நாம் உரத்து சொல்ல இந்த பாடல் ஒரு நெம்புகோலாய்  இருக்கும். 


ஞாயிறு, 17 ஏப்ரல், 2011

நான் ரசித்த கவிதைகள் -3



தோழர் எட்வின் பள்ளி ஆசிரியர். நல்ல நண்பர். நான் இளைஞர் முழக்கம் பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்த நேரத்தில் அவரிடம் இதழுக்காக கவிதைகள் கேட்பதுண்டு. அவரும் பல நல்ல கவிதைகளை எழுதி தந்துள்ளார். கிழே உள்ள கவிதை பகத்சிங் நினைவு தினத்திற்காக அவரிடம் எழுதிக்கேட்டது. பொதுவாக பகத்சிங் குறித்து நிறைய கவிதைகள் வந்துள்ளது. எனவே பொதுவாக வேண்டாம் என தொலைபேசியில் அவரிடம் கேட்டுக்கொண்டேன். எப்படி வேண்டும் என நிங்களே சொல்லுங்கள் என்றார். அப்போது அவரிடம் சொன்னேன் " பக்கத்தின் கடைசி நொடிகளை நினைத்துக்கொள்ளுங்கள். அவன் சிறை கொட்டடிக்கும் துக்கு கயிறு தொங்கும் இடத்திற்கும் இடையில் உள்ள சில அடி தூரங்களில் என்ன நினைத்திருப்பான் என்பதை கவிதையாக தாருங்கள்" என்றேன். அந்த நொடிகளை அவர் கவிதையாக்கியது வெயிலாய் கசிவேன் நான். படியுங்கள்  உங்களையும் இக்கவிதை வசீகரம் செய்யும். அதே போல இங்கே கொடுக்கப்பட்டுள்ள இரண்டாவது கவிதையான ராவண அவஸ்த்தையும் மிகவும் முக்கிய பகடி. படிக்கவும்.    


வெயிலாய் கசிவேன் நான்

கண்கள் கலங்க 
கைகள் நடுங்க ... 
என்ன இது? 

என் இறுதி நொடிகளின் 
சாட்சி நீ 
என் இறுதிப்   பயணத்தின் 
சக பயணி நீ 

கலங்காதே 
காயம் பட்டு விடும் 
என் மரணத்தின் கம்பீரம் 
எங்கே 
ஒரு புன்னகையோடு 
கதவு திற காவல் நண்பனே 

மரணம் வாங்க 
ஒரு மகத்தான பேரணி 
என்ன பேரணி...
முழக்கமேயில்லாமல் ? 
எங்கே 
என்னோடு சேர்ந்து 
நீயும் முழங்கு 

"இன்குலாப் இன்குலாப் 
இன்குலாப் ஜிந்தாபாத் "

நாளை போய் உலகு சொல் 
காற்று வாங்க 
கடற்கரை போகும் 
குதூகலத்தோடும் ...
விருது வாங்கப் போகும் 
வீரனின் மிடுக்கோடும் 
மரணம் வாங்க 
நடந்தான் பகத் என்று 
உலகை  நோக்கி 
உரக்க சொல் நண்பா!

எந்தத் தேவதையும் 
என் இறுதி வழியில் 
பூ மாறிப் பொழியவில்லை 

ஒளி வட்டம் முளைக்க
வானம் கிழித்து வந்த 
வாகனமேறி 
நான் 
வைகுந்தம் போகவில்லை 

போகிற பாதை எங்கும் 
தன் சொந்தப் புன்னகையை 
தூவிப் போனான் 
இவனென்று சொல் நண்பா 

மக்கள் போராளிகளின் 
உதிரத்திலும் 
வியர்வையிலும் 
கசிவேன் நான் 

நீ கதவில் கை வைத்த 
நொடி வரைக்கும் 
லெனின் படித்தேன் 

உனக்கு 
லெனின் தெரியுமா? 

நண்பா 
எனக்கே 
தாமதமாய்த் தெரியும் 

கிடைக்க வேண்டிய 
எங்களுக்கு 
லெனின் மட்டும் 
கிடைத்திருந்தால் 
நாங்கள் இதயத்தில் 
லெனினை ஏந்தியிருப்போம் 

அடடா... 
போராட்டப் பாதையே 
திசை மாறிப் போயிருக்கும் 

தேச விடுதலையோடு 
ஜனங்களின் விடுதலையும் 
சேர்த்தே வந்திருக்கும் 

இந்தா
இந்த முத்தத்தை 
சிந்தாமல் சிதறாமல் 
சேர்த்துவிட்டு 
துர்கா மகளிடம் 

இறுதி வரை 
மாமன் உன்னை 
நினைத்திருந்தான் 
என்று சொல் 

கருணை மனு தந்த 
சங்கடம் 
என் தூக்குமேடை வரைக்கும்
கூடவே தொடர்ந்ததாய்
என் தந்தையிடம் சொல் 

என்ன இது 
துக்கம் காட்டும் 
கருப்புத் துணி 
தூர எறி

பூமி பார்த்துப் பிறந்தால் 
பூமி வாங்குவானாம் 
பூமி பார்த்து சாகிறேன் 
என் மக்கள் 
பூமி மீட்கட்டும் 

அதிகாரிகளே 
கொடுத்து வைத்தவர்கள்:
நீங்கள் 
சிரித்துக் கொண்டே 
சாகும் மனிதனை 
உங்களைத் தவிர 
யார் பார்க்க முடியும்

"எல்லாம் முடிந்தது "
என்று சொல்ல 
நான் ஒன்றும் ஏசுவல்ல 
தொடங்கச் சாகிறேன் 
தொடர்வார்கள் என் தோழர்கள் 

விடுதலை பூமியில் 
உச்சி சூரியனின் 
வெயிலாய் கசிவேன் நான் 

"இன்குலாப் இன்குலாப் 
இன்குலாப் ஜிந்தாபாத் " 


ராவண அவஸ்தை


வியப்பு
ஆனந்தம்
சிலிர்ப்பு 
அச்சம் என 
எல்லாம் தரும் என் தலைகள் 

ராமனின் 
வீரமும் வெற்றியும் 
பத்து மடங்கு நீண்டன 
என் தலைகளின் எண்ணிக்கையால் 

லேபிளில் என் படம் 
பத்து மடங்கு 
விற்பனை கூட்டியது தைலமொன்று 

இப்படியாய்
ஆச்சரியப் படும்
அச்சப்படும் 
ஆதாயம் கொள்ளும் 
யாருக்கும் புரிவதில்லை 

பல் விளக்க 
தலை சீவ 
சவரம் செய்துகொள்ள 
ஒழுகும் 
ஒரு ஓரத்து மூக்கை சிந்த 
நான் படும் அவஸ்தை  

திங்கள், 21 மார்ச், 2011

ஏய் கிரிகெட் பைத்தியமே .. கொஞ்சம் கவனி !!







மட்ட பந்து கோவாலு நெலம பாத்தியா!
மொட்டப்போட்டு தேசபக்தி படத்த காட்டுறான்.
மசுருவெட்டி கலரடிச்சு மேப்பு போடுறான்!
மேட்ச்ஃபிக்சிங் தகவல்வந்தா சோர்ந்து போகுறான்.

பெப்சிகாரன் பணத்தகொடுத்து நடிக்க வைக்கிறான்!
கிரிக்கெட்ஸ்டாரு அதைவாங்கி குடிச்சித் தொலைக்கிறான்.
விளம்பரத்துல தாவித்தாவி கேட்சு பிடிக்கிறான்!
ஆட்டத்துல ஆடும்போது கோட்டை விடுகிறான்.

விளம்பரத்துக்கு நடுவுலதான் ஆட்டம் நடக்குது!
ஆட்டத்துக்கு பின்னாலதான் பணமும் சிரிக்குது.
டிக்கெட்டுக்கு கியூவில்நிக்க போலிஸ் ஒதைக்குது!
பிளாக்டிக்கெட் காரனுக்கு சலாம் போடுது.

பாரம்பரிய ஆட்டமெல்லாம் தொலைஞ்சு போச்சுது!
மட்டபந்து ஆட்டம் மட்டும் தாவிகுதிக்குது.
காமன்வெல்த் உழல் இப்போ சந்திசிரிக்குது!
உலககோப்பை தடுகிடுதான் காத்து நிக்குது.

நாடுபோகும் நெலமைய-நீ பார்த்து நடந்துக்கோ!
விளையாட்ட விளையாட்டா ரசிக்க கத்துக்கோ.
ராசாக்கள் மந்திரியாகும் நாடு இதுதான்பா!
எதிர்க்கலனா தேசத்துக்கே மொட்ட தானப்பா.  



வெள்ளி, 11 மார்ச், 2011

நான் ரசித்த கவிதை - 2 (தேர்தல் ஸ்பெஷல்)

கடந்த வாரம் நான் ரசித்த கவிதை என்ற பகுதியை பல தோழர்கள் பாராட்டி இருந்தனர். பின்னுட்டம் இல்லாமலும் எனது மின்னஞ்சலில் செய்தி அனுப்பி இருந்தனர். அனைத்து தோழர்களுக்கும் நன்றி. இது இந்த வாரம்  நான் ரசித்த கவிதை. நிலாச்சாரல் என்ற வலைத்தளத்தில் படித்தது. தமிழகத்தில் உள்ள  ஆற்றல் மிகு கவிதை படைப்பாளிகளில்  ஒருவர்  கவிஞர் ஈரோடு தமிழன்பன்.   அவரது கவிதைகளில் எனக்கு பிடித்தவை பல ...  அவற்றில் இப்போது ஒரு  கவிதையை உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன்.    






இன்னொரு சுதந்திரம் வேண்டும்?



இரவில்
எதைக் கொடுத்தான்?
எதை வாங்கினோம்?
எவர் வாங்கினோம்?
ஏதும் தெரியவில்லை.

ஒரு பகற் பொழுதில்
உச்சி வெயிலில்
ஒரு சுதந்திரம் வேண்டும்.

வேதித்தும்
சோதித்தும் அதை
உண்மைச் சுதந்திரம் என்று
வயல்வெளிகள் வனாந்திரங்கள்
சொல்ல வேண்டும்;

குடிசைகள் கிராமங்கள்
சொல்ல வேண்டும்.
வேர்வையும் கண்ணீரும்
நம்ப வேண்டும்.

'ஆகஸ்டு 15'...
மாஜி மனிதர்களின்
அந்தப்புரங்கள் சொல்லும்
சுலோகமா?

இந்தியனிடமிருந்து
இந்தியாவை விடுதலை செய்ய எழட்டும்
இன்னொரு சுதந்திரப் போர்!

கட்சிகளின்
படுக்கை அறைகளில்
கசக்கி எறியப்பட்டது இந்த
ஜன நாயகம்!
எந்தத்
தீக்குளிப்பாலும் தீராது சந்தேகம்!

ஆட்சிக்கட்டிலின்
ஐந்தாண்டுப் புருஷர்கள்
பசிக்கப் பசிக்கப் புசிப்பது
இந்தியாவின் ஈரல்.

ஊழல்
நாட்டின் சுவாசப் பையில்
ஓட்டைகள் போட்டது!
கங்கைக் கரை முதல்
காவேரிக் கரை வரை
எங்கும்
அடையாளம் தெரியா அபலைப்
பிணங்களாய்ச்
சட்டமும் ஒழுங்கும்!

இங்கே,
கடத்தல்காரனிடம்
தேசபக்தி, தங்க பிஸ்கட்!
கலப்படக்காரன் கையில்
தேசபக்தி, கறுப்புப்பணம்!

அரசை
ஆட்டி வைப்போனிடம்
தேசபக்தி, கள்ளச் சாராயம்!

அறிவாளியிடம்
தேசபக்தி, சபலங்கள்!
நியாயவான் வாசலில்
தேசபக்தி, தண்டனை!

இன்னொரு சுதந்திரம்
வேண்டும் ...
இப்போதிருப்பது சுதந்திரம் அல்ல
என்பதை இடிகளில் சொல்ல
மின்னல்களில் எழுது! 

ஞாயிறு, 27 பிப்ரவரி, 2011

நான் ரசித்த கவிதைகள் - 1



பிரியமுள்ள நண்பர்களே! ஒவ்வொரு வாரமும் என் கண்ணில் பட்டு நான் ரசித்த கவிதைகளை உங்களிடமும் பகிர்ந்துக்கொள்ள ஆசைபடுகிறேன். நம்மை சுற்றி நடக்கும் பல சம்பவங்களை கவிதையாக மொழிபெயர்க்கும் அற்புதமான படைப்பாளிகள் எழுந்து வருகிற காலமாய் இன்றைய காலம் உள்ளது. எல்லோருக்கும் அறிந்த கவிஞர்களாய் இருக்கலாம் அல்லது பெயர் தெரியாத புதிய கவிஞர்களாய் இருக்கலாம் அவர்களது கவிதை நம்மை ஈர்ப்பதாய்  இருப்பின் அவைகளை பிறருடன் பகிர்த்துககொள்வது மகிழ்ச்சியான விடயம்தானே. 
இந்த வாரம் நான் ரசித்த கவிதைகளில் மூன்றை தருகிறேன். இவை மூன்றும் கவிஞர் ஜெயபாஸ்கரன் கடந்த வார ஆனந்தவிகடன் இதழில் எழுதிய கவிதைகள். ஓங்கிக்குரல் எடுத்து உரக்க பேசவேண்டியவைகளை   எப்படி பெண்கள் விழுங்கி செரிக்கின்றனர் என்பதை மிகவும் நுட்பத்துடன் எழுதி இருக்கிறார்.  என்னைப் பெண் பார்த்த படலம் என்ற தலைப்பில் அவர் எழுதி இருக்கும் எட்டுக் கவிதையில் இவை மூன்று.

எழுகுரலும் அழுகுரலும்

அமர்ந்த நிலையிலேயே
அப்பா அதிர அதிர
சன்னமான குரலில்
நிதானமாக அரங்கேற்றிய
வரதட்சணை பேரத்தின்
வலி தங்க முடியாமல்
கதவை சாத்திக்கொண்டு
காற்றொலியோடு கட்டுப்படுத்தி
குலுங்கியழுகிறேன்
எஞ்சியிருந்த
என் கைப்பையைப்
பறித்துக்கொண்டு ஓடிய
எவனோ ஒருவனைத் துரத்தி
விடாதே பிடியென்று
வீதியே திரும்பிப் பார்க்க
குரலெழுப்பிய நான்!

பார்க்க வந்தவர்கள் 

அவர்கள்
கேட்டால் சொல்வதற்கு
என்னிடம்
ஏராளமான செய்திகள்
இருக்கின்றன.

அவர்களோ
என்னைப் பார்க்க மட்டுமே
வந்திருக்கிறாரகளாம்!


எனக்கும் மாப்பிள்ளைக்கும்

என்னைப் பெண் பார்க்க வரும்
மாப்பிள்ளை வீட்டார் முன்பு
அடக்க ஒடுக்கமாக
நடந்துகொள்ளும்படியும்
அவ்வாறே நடந்து வருமாறும்
அதட்டலான உரத்த குரலில்
அறிவுறுத்தப்பட்டேன் நான்.

நிமிர்ந்து உட்காருமாறு
காத்துக்குள்
கிசுகிசுப்பாகச் சொல்லபட்டது
மாப்பிள்ளைக்கு!

நண்பர்களே உங்களுக்கு பிடித்த கவிதையை அல்லது உங்களுடைய  கவிதையை கட்டாயம் இந்த ஈ மெயில் முகவரிக்கு அனுப்பிவையுங்கள். வாரம் ஒருமுறை பதிவிடலாம்.

sgrbabu@yahoo.com  

வியாழன், 1 ஜூலை, 2010

மு.முருகேஷின் கடவுளோடு விளையாடும் குழந்தைகள்



நிகழ்


ஆண்டெனா கம்பிகளில்
கூடுகட்டி
வாழத் தொடங்கிய
குருவியும் மறந்த்து...
தமிழை.

வலி


கடலை விட்டு
பிரிந்து வந்த சோகத்தை
இன்னமும் சொல்லித் தீரவில்லை.
காதோரம் வரும் போதெல்லாம்
ஓயாது கேட்கிறது...
சங்கின் விசும்பல்.

ஈரம்


கீழே விழுந்து
அடிபட்ட இடத்தில்
எச்சிலை தொட்டுவைத்து
மண்ணெடுத்துப்
பூசி விட்டுப் போனாய்.
வலிக்காத இடத்தில்
உலராமல் இருக்கிறது..
இன்னமும் உன் ஈரம்.

சரி/தவறு


செத்துத் தொலை என்கிறாய்
கோபம் தலைக்கேறி.
செத்துப் போய்
தொலைந்துவிடவா..
அல்லது
தொலைந்து போய்
செத்துவிடவா..
சரியாய் சொல்லித் தொலை
முதலில்.

உயிர்ப்பு


வீட்டுக்குள்
விழுந்து கிடந்த
கண் திறக்காத
அணில்குஞ்சை
கையில் பொத்தியெடுத்து
தோட்டத்தில் விடும் பொழுதில்
கைகளை நடுங்க வைக்கிறது..
மெலிதாய் அதிரும்
அதன் உடல் துடிப்பு.

வேர்க்குரல்


தொட்டிச் செடியிலிருந்து
சொட்டிக்கொண்டிருக்கும்
நீர் சொல்கிறது...
பரவ முடியாமல்
முடங்கியே கிடக்கும்
வேர்களின் சோகத்தை.

நிழல் பார்த்தல்


பூச்சற்று
அஸ்திவாரத்தோடு
பாதியில் நின்றுபோன
கட்டடத்தை
வெறித்துப் பார்த்தபடியே
தினமும் கடந்து போகிறான்...
வீட்டுக் கடன்
விண்ணப்பத்தை
பூர்த்தி செய்யாத ஒருவன்.

சிதைதல்


தோட்டத்து மரம் அறுத்து
செய்த நாற்காலியில்
சாய்ந்து உட்கார்ந்தேன்.
கயிறு கட்டி
அதே மரத்தில்
ஊஞ்சலாடிய சுகம்
வாய்த்ததேயில்லை ஒருநாளும்.

மு.முருகேஷின் கடவுளோடு விளையாடும் குழந்தைகள் என்ற கவிதை தொகுப்பில் உள்ள சில கவிதைகள் மேலே உள்ளவை. மிகவும் நுட்பமான இதயம் படைத்தால் மட்டுமே இப்படியான கவிதைகள் உருவாகக்கூடும். உலகத்தை, இயற்கையை, மனிதத்தை நேசிக்கும் இதயம் படைத்த முருகேஷின் பணிரென்டாவது புத்தகம் இது. 
விரல் நுனியில் வானம் (1993),
என் இனிய ஹைக்கூ (1995),
பூவின் நிழல் (1996),
கொஞ்சும் ஹைக்கூ, கொஞ்சம் புதுக்கவிதை (1998),
தரை தொடாத காற்று (2001),
நீ முதல் நான் வரை (2001),
36 கவிதைகளும் 18 ஓவியங்களும் (2001),
நிலா முத்தம் (2002),
மின்னல் பூக்கும் இரவு (2003),
குழந்தைகள் ஊருக்குப் போய்விட்டன (2005),
என் இனிய ஹைக்கூ (2007)
போன்றவை அவரது பிற படைப்புகள்.
புரிந்த மொழியில் புரியாத நடையில் எழுதுவது மட்டுமே கவிதை என்று பலர் சாதித்துக்கொண்டு இருக்க, தினம் நாம் கடக்கும் பாதைகளில் எதிர்ப்படும் சராசரி விஷயங்களை மிகவு நுட்பத்துடன் எளிய வார்த்தைகளில் படைப்பது இவரது பாங்காக இருக்கிறது. காரணம் கேட்க்கும் போது அவர் சொல்வது இதைத்தான் "கலை மக்களுக்கானது" மனித நேயம் நிரம்பும் அவரது படைப்புகள் தொடர வாழ்த்துவோம். மேற்கண்ட கவிதைகள் அடங்கிய தொகுப்பை வெளியிட்டுள்ளது "அகநி வெளியீடு" 3. பழைய பள்ளிக்கூட வீதி, வந்தவாசி - 8, தொலைபேசி: 04183 - 226543, 94443 60421. வாய்ப்பு இருப்பின் படித்துப்பாருங்கள். 

செவ்வாய், 29 ஜூன், 2010

வெவ்வாலாய் மாறியதன் காரணமறிய...



அனாதி காலம் தொட்டே
தலைகீழாய் தொங்கியபடி இருந்த 
வெவ்வால்கள் திடுமென நேராய் நின்றன
சூரியவெளிச்சம் பட்டுமறையும் 
அவைகளின் இயல்புகள் 
மாறத்துவங்கின மாற்றொமொன்றே
மாறாது என்கிறபடியாக..
பல்லாயிரம் ஆண்டுகளாய்
நேராகவே நடந்த மனிதர்கள்
தலைகீழாய் தொங்கினர்
வெளிச்சம் பட்டு மகிழும் 
மகிழன்கள் மருகினர் ஒளிபார்த்து
கோர்வையாய் இடைவெளி நகர்ந்தது
காலப்பெருவெளி மாற்றி செய்தது.
காலங்களின் எழுச்சியுடன்
கலகங்கள் முளைக்கும் காலங்களில்
களம் மாறிய காலமாய் தலைகீழாக நின்றனர்.
தங்கத்தால் ஆன தொட்டில்கள் 
தலைகீழாய் நின்ற மனிதர்களுக்கு எதிரே நின்றது 
அவர்கள் 
தலைகீழாய் நின்றதால் இருள் கவிழ்ந்தது.
எழுந்த பரவச நிலையில்
தலைகீழாக இருக்கவே
விரும்பினர்.
சொற்களை அடுக்கி 
வேட்டையாடுபவர்கள்
இடைவெளி இல்லா 
இலவசங்களை வீசியதன் விளைவெனவும்
செவ்வக பெட்டியில் எண்களை மாற்ற
ரெக்கைகளை வளர்த்து
அலைவரிசை பார்த்து 
வெளியே வந்த கண்களும்
நீண்ட காதுகளுமாய் நடந்தவர்கள்
எல்லாம் நல்லபடியாக நடப்பதாக நம்பி
வானம் பார்த்துக்கொண்டே இருந்ததால்
வருவதை முதலில் சுகிக்க எண்ணி
உயர்ந்த இடங்களில்
தலைகீழாய் தொங்க துவங்கினர் 

புதன், 20 ஜனவரி, 2010

மெயிலில் வந்த ரயில் கவிதை

துரிகையுடன் துணையுடன் எவனோ ஒருவன் வரைந்த வண்ண கவிதைகள்

உங்களுக்கு இந்த படங்களை பார்த்ததும் தோன்றும் உணர்வுகளை கவிதை எழுதுங்கள் நண்பர்களே... இதை படைத்த அந்த முகம் தெரியாக கவிதக்காரன் மகிழ்வான் .   

புதன், 30 டிசம்பர், 2009

வன்னி முகாம் ஓரத்தில ... சாவு பிச்ச கேட்குறோமே ....


வன்னி முகாம் ஓரத்தில

முள்ளுக் கம்பி கக்கத்துல

ஏங்கி நிக்கும் பிஞ்சு முகம்

உங்க மனசாட்சிய கொல்லலையா?




ரெண்டு பக்கம் துப்பாக்கி

நடுத் தெருவுல நிப்பாட்டி

வெந்த சோறு திங்கச் சொன்னா

நெஞ்சுக் கூடு தாங்கிடுமா?



முள்ளுக் கம்பி நடுவினிலே

கொஞ்சம் நாள் வாழ்ந்திடுங்க

அவங்க வெச்ச கன்னி வெடி

சாகாம நிக்குதுன்னு சொன்னிகளே




கன்னி வெடி வாழுமிடம்

நஞ்சு குஞ்சும் அறிஞ்சிடுமே

இருபத் தஞ்சு வருச கால

வாழ்க்கை யெல்லாம் இங்கேதான்!




துள்ளி வரும் ஆட்டுக்குட்டி

ஊஞ்சல் கட்டி ஆடுமிடம்

ஊருணிக்கர மீன் குஞ்சு எல்லமே

நாங்க இல்லாம தேடிடுமே!



வயது வந்த செல்லமக

அவசரமா ஒதுங்கி நிக்க

இருட்டும் வரை காத்திருந்தா - அவ

அடி வயிறு தாங்கிடுமா?



மாற்றம் வரும் என்று

வட்ட முரசறைந்து சொன்னிங்களே

மாற்றம் ஏதும் இங்க இல்ல

மக்க மனசொடஞ்சு போனோமே?



நேற்று தடுத்தாண்டு கொண்டிகளே

கையில் தட்டேந்த வச்சிகளே

தம்பி தங்கை தொலைத்த நாங்கள்

சொந்த வீடு போவதெப்போ?



அழிஞ்ச சனம் மீதம்போக

மிஞ்சி வாழும் எங்கசனம்

சொந்த மண்ணில் உயிர் போக

சாவு பிச்ச கேட்குறோமே?!!



- எஸ்.ஜி.ரமேஷ்பாபு