லெனின் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
லெனின் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 20 ஜனவரி, 2025

தோழர் லெனின்: சரித்திர மருத்துவர்

 



 

மாமேதை லெனின் மறைந்து 100 ஆண்டுகள் உருண்டோடிவிட்டது. அந்த மகத்தான மார்க்சியவாதியின் நினைவு தினம் நாளை (1942 ஜனவரி 21)  இன்றைய தீக்கதிர் நூலாற்றுப்படை பகுதியில் அவர் குறித்த என்னுடைய பதிவு வந்துள்ளது. படித்து உங்கள் நண்பர்களுக்கும் இந்த மகத்தான புரட்சித் தலைவரை அறிமுகம் செய்யுங்கள்.

- எஸ்.ஜி.ரமேஷ்பாபு 

------------------------------------------------------------------- 

கம்யூனிசம் என்றால் என்ன? கம்யூனிசம் என்பது பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்கான சூழ்நிலைகள் பற்றிய கொள்கை விளக்கம் ஆகும். பாட்டாளி வர்க்கம் என்றால் என்ன? பாட்டாளி வர்க்கம் என்பது சமுதாயத்தில் நிலவுகிற, முற்றாகத் தன் உழைப்பை விற்பனை செய்வதன் மூலம் மட்டுமே வாழ்ந்து வருகிற, எந்த வகையான மூலதனத்திடம் இருந்தும் லாபம் பெற்றுக் கொள்ளாத ஒரு வர்க்கமாகும். இந்த வர்க்கத்தின் இன்பமும் துன்பமும், வாழ்வும் சாவும், இதன் இருப்பும்கூட உழைப்புக்கான தேவையின் மீதே சார்ந்திருக்கின்றன. அதன் காரணமாக, மாறிக்கொண்டே இருக்கும் வணிக நிலைமையின் மீதும், கட்டுப்பாடற்ற வணிகப் போட்டியின் புரியாத போக்குகளின் மீதும் சார்ந்திருக்கின்றன. ஒரு சொல்லில் கூறுவதெனில், பாட்டாளி அல்லது பாட்டாளி வர்க்கம் என்பது 19-ஆம் நூற்றாண்டின் உழைக்கும் வர்க்கத்தைக் குறிக்கிறது. 

அழிக்க முடியாத திசைவழி

மாமேதை ஏங்கெல்ஸ் 1847-ல் கம்யூனிஸ்ட் லீக்கிற்காக எழுதிய கம்யூனிசத்தின் கோட்பாடுகள் (Principles of communism) என்ற வரைவில் மேற்கண்ட வரிகளை விவரித்தார். பாட்டாளி வர்க்க மக்களின் விடுதலைக்காக கார்ல் மார்க்சும் - பிரெடெரிக் ஏங்கெல்சும் உருவாக்கிய தத்துவத்தை நடைமுறைப் படுத்திய சரித்திர மருத்துவர்தான் லெனின்.  54 வயதுவரை மட்டுமே வாழ்ந்த மாமேதை விளாடிமிர் இலியிச் லெனின், பாட்டாளி வர்க்கப் புரட்சியின் மூலம் உலகம் முன்னேறிச் செல்ல  ஓர் அழிக்க முடியாத திசை வழியைக் காட்டிச்  சென்றுள்ளார். மார்க்சியம் எனும் அறிவியலின் சாராம்சத்தை உட்கிரகித்தவர் மட்டுமல்ல, தன்னுடைய நிகழ் காலத்திற்கு அதை நடைமுறைப் படுத்தி ரஷ்யப் புரட்சியை நடத்தி, உலகில் முதல் சோசலிச நாட்டை நிறுவிய மகத்தான  புரட்சித் தலைவர் ஆவார். 

சித்தாந்தமும் நடைமுறையும்

“தத்துவஞானிகள் அடிக்கடி உலகைப்  பல வழிகளில் வியாக்கியானம் செய்திருக்கிறார்கள், எனினும் முக்கிய பிரச்சனை என்ன வெனில் அதனை மாற்றுவதேயாகும்” என்ற மாமேதை கார்ல் மார்க்சின் வார்த்தைகளை அடியொற்றி, மார்க்சிய தத்துவத்தை நடை முறையில் இணைப்பதில் எப்போதுமே லெனின் தலைமகனாய் இருந்தார். அதற்கு ஆகச்சிறந்த உதாரணம் சோவியத் புரட்சியை நடைமுறைப்படுத்திக் காட்டியதாகும். புரட்சிகர இயக்கத்தைத் தடம் புரளாமல் அனைத்துவிதமான திரிபுகளையும் எதிர்த்து நின்ற லெனின், நடைமுறை உத்தியில் மேதையாகவும், மார்க்சியக் கோட்பாட்டாளராகவும், போர்த்தந்திர வாதியாகவும் இருந்தார். 

புரட்சியின் முன்னோடி

நம்மால் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாத சவால்களை அவர் எதிர்கொண்டார். போல்ஷ்விக் கட்சியிலிருந்த முக்கிய தலைவர்களே 1917ல் புரட்சி ஏற்படாது எனச் சொன்னபோது மிக அழுத்தமாக இல்லை அது நிகழும் என முன் அறிவித்தவர் லெனின் ஆவார். அவர் என்ன ஆருடம் சொன்னாரா? இல்லை ஒவ்வொரு சூழலுக்கும் தேவைக்கும் ஏற்ப சரியான மற்றும் பொருத்தமான நடை முறை உத்திகளை வகுத்து, பயன்படுத்துவதில் வல்லவராய் இருந்த காரணத்தினால் அவரால் முன்னறிவிக்க முடிந்தது. புரட்சியின் தத்துவம் “கம்யூனிசப் புரட்சி வெறுமனே ஒரு தேசிய நிகழ்வாக மட்டும் இருக்காது, அது நாகரிகமடைந்த நாடுகள் அனைத்திலும் ஏககாலத்தில் நிகழும். அதாவது குறைந்தபட்சம் இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளில் ஏககாலத்தில் நிகழும்” என ஏங்கெல்ஸ்  1847ல், அதாவது ரஷ்யப் புரட்சியின் 70  ஆண்டுகளுக்கு முன்னர் தனது கம்யூனி சத்தின் கோட்பாடுகள் என்ற புத்தகத்தில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் மேற்கண்ட நாடுகளைவிட ஒப்பீட்டளவில் தொழில்துறை முழு வளர்ச்சி பெறாத ரஷ்யாவில் மகத்தான பாட்டாளி வர்க்க புரட்சி வெற்றிபெற காரணம், மார்க்சியத்தை மேம்படுத்திய லெனினிசம் ஆகும். 

அமைதியும் புரட்சியும்

1917ல் சோவியத் ஒன்றியம் அமைந்த போது உலகப்போரின் கொடூரம் அச்சுறுத்திக் கொண்டிருந்தது. ரஷ்ய மக்களுக்கு வேண்டியது அமைதியும் உணவும் என்பதை முற்றாக உணர்ந்த லெனின் அமைதிக்காக எந்த விலையையும் கொடுக்க தயாராக இருந்தார். ஆனால் அவர் அளவு அவரது சகாக்கள் இல்லை என்பது வேதனையான உண்மை. உதாரணமாக ஜெர்மானியர்களை ஆசைகாட்டி மயக்குவதும் ஆனால் சமாதான உடன் படிக்கையில் கையெழுத்திட மறுப்பதுமாகத் தமது ஜாலவித்தைத் தந்திரத்தைக் காட்டிக் கொண்டிருந்தார் த்ரோத்ஸ்கிய் என்ற படைத் தளபதி. அப்போது லெனின் சொன்னார்: “அவர்களுடன் விளையாடாதீர்கள். முன் வைக்கப்படும் முதல் உடன்படிக்கையில், அது  எவ்வளவு மோசமாகயிருந்தாலும் சரி, கையெழுத்திடுங்கள். இல்லாவிட்டால் நாம் இன்னும் படுமோசமான உடன்படிக்கையில் கையொப்பம் இட நேரும்.” ஆனால் தாமதமானதால் மிக மோசமான சமாதான உடன்படிக்கையில் ருஷ்யர்கள் பிரேஸ்த்லித்தோவ்ஸ்க்கில் கையெழுத்திட வேண்டியதாயிற்று. 

மக்களின் குரல்

எனினும் எப்படி கம்யூனிடுகள் வீரமாய் எழுந்தனர்? பொது மக்களின் எண்ணங்களை நேரடியாகப் பிரதிபலிக்கும் சாதனமாகவும் அவற்றை வெளியிடும் ஒலிக்கருவியாகவுமே, அங்கே கம்யூனிஸ்ட் கட்சி பணியாற்றியது. சோவியத்துக்களை கம்யூனிஸ்டுகள் உண்டாக்கவில்லை. மக்களின் வாழ்க்கையிலிருந்து அவை தாமே உதித்தன. கம்யூனிஸ்ட்டுகள் ஒரு செயல்திட்டத்தை தங்கள் மூளையில் உருவாக்கி, பிறகு  அதை வெளியில் எடுத்து மக்கள் மேல் ஒட்டி  வைக்கவில்லை. மாறாக நேரே மக்களிடமிருந்தே அவர்களின் செயல்திட்டத்தை எடுத்துக் கொண்டனர். ‘நிலம் குடியானவர்களுக்கு’, ‘தொழிற்சாலைகள் தொழிலாளர்களுக்கு’, ‘சமாதானம் உலகம்முழுவதற்கும்’ என்று  மக்கள் கோரி வந்தார்கள். இந்தக் கோஷங்களை அவர்கள் பதாகைகள் மீது பொறித்துக் கொண்டு மக்களுடன் சேர்ந்து அணிநடை நடந்து அதிகாரப் பீடத்தில் அமர்ந்தனர். மக்களைப் புரிந்துகொள்வதில்தான் அவர்கள் வலிமை அடங்கியுள்ளது. உண்மையில் கம்யூனிஸ்ட்டுகள் மக்களைப் புரிந்துகொள்ள வேண்டியதில்லை. அவர்களேதாம் மக்கள். கம்யூனிஸ்டுகள் மக்களின் உடலும் உயிருமாகத் திகழ்ந்தார்கள். 

புரட்சியின் சவால்கள்

உண்மையில் புரட்சியின் ஆண்டில் எல்லைகளை சுற்றி எதிரி நாட்டுப் படைகளும், உள்  நாட்டில் சதி செய்யும் கூட்டமும், ஆலைகளையும் நிலங்களையும் இழந்த அடிப்படைவாதிகளும் குழப்பத்தை உருவாக்கினர். அச்சமயத்தில் இரும்பு போன்ற உறுதியான அறிவுத் தெளிவும், எஃகு போன்ற நரம்புகளுமே நிலைமையைச் சமாளித்திருக்க முடியும். அது லெனின் என்ற மனிதரெனத் தனியாகச் சொல்லவும் வேண்டுமோ? கண்டிப்பான ஒழுங்கும், கட்டுப்பாடும் எல்லா துறைகளிலும் உருவாக்கப்பட்டன. தொழிலாளர்களின் மனப்பாங்கு கடுமையாகி, சோவியத் இயந்திரத்தின் தளர்வான பகுதிகள் சீர்செய்யப்பட்டன. கம்யூனிஸ்டுகள் செயலில் இறங்கியபோது, கடுமையாகவும், திறம்படவும் எதிரிகளைத் தாக்கினர். எங்கே சட்டெனச் செயலாற்ற வேண்டும் என்பதை லெனின் மிகச்சரியாக அறிந்திருந்தார். அதனால்தான் புரட்சி என்ற குழந்தை தவழத்துவங்கியது. 

நடைமுறைத் தந்திரம்

அதே சமயம் எங்கே மெதுவாகச் செல்ல வேண்டும் என்பதும் மாமேதை லெனினுக்குத் தெரிந்திருந்தது. புரட்சிக்கு முன்பும் பின்பும் லெனின் நாட்களைப் பதிவு செய்த ரைஸ் வில்லியம்ஸ் பதிவை பார்க்கலாம்: தொழிலாளர்களின் பிரதிநிதிக் குழு ஒன்று லெனினிடம் வந்து தங்கள் தொழிற்சாலையைத் தேசிய உடைமையாக்கும் ஆணையை அவர் பிறப்பிக்க முடியுமா என்று கேட்டது. “முடியுமே” என்று ஒரு வெற்று நமூனாவை எடுத்தார் லெனின். “இதில் என் பங்கு மிக எளியது. நான் செய்ய வேண்டியதெல்லாம் இந்த நமூனாக்களை எடுத்து இதோ இந்த இடத்தில் உங்கள் தொழிற்சாலையின் பெயரை எழுதி, இதோ இங்கே என் பெயரை ஒப்பமிட்டு, கமிஸாரின் பெயரை இந்த இடத்தில் எழுதுவதுதான்” என்று கூறினார். தொழிலாளர்கள் மிக்க மகிழ்ச்சி அடைந்து அது “மிக நல்லது”  என்றார்கள்.

“ஆனால் இந்த நமூனாவில் நான் கையெழுத்திடுவதற்கு முன் உங்களைச் சில கேள்விகள் கேட்க வேண்டும். முதலாவதாக உங்கள் தொழிற்சாலைக்கு வேண்டிய கச்சாப் பொருள்களை எங்கிருந்து பெறுவது என்பதை அறிவீர்களா?” என வினவினார் லெனின். அவர்கள் தங்களுக்கு அது தெரியாது என்று வேறு வழியின்றி ஒப்புக் கொண்டார்கள். “கணக்கு வைத்துக் கொள்வது உங்களுக்குப் புரியுமா? உற்பத்தியைத் தொடர்ந்து நடத்துவதற்கான முறையைத் தயாரித்து வைத்திருக்கிறீர்களா?” என்று தொடர்ந்து கேட்டார் லெனின். இந்த அற்ப  விஷயங்கள் பற்றித் தங்களுக்கு அதிகமாகத் தெரியாது என்று தொழிலாளிகள் கூறினார்கள். “கடைசியாக, தோழர்களே, உங்கள் உற்பத்திப் பொருள்களை விற்பதற்கான சந்தையைக் கண்டுபிடித்து விட்டீர்களா?” என்று விடாது வினவினார் லெனின். “இல்லை” என்று அவர்கள் மீண்டும் பதில் அளித்தார்கள்.

முதலமைச்சர் சொன்னார்: “நல்லது தோழர்களே, உங்கள் தொழிற்சாலையை எடுத்துக்கொள்வதற்கு நீங்கள் இன்னும் ஆயத்தமாகவில்லை என்று உங்களுக்குப் படவில்லையா? வீடு சென்று இந்த விஷயங்களைப் பற்றி திட்டம் வகுங்கள். அது கடினமாயிருக்கும். நீங்கள் பல தவறுகள் செய்வீர்கள். ஆனால் கற்றுக் கொள்வீர்கள். பிறகு சில மாதங்கள் சென்றதும் வாருங்கள். உங்கள் தொழிற்சாலையைத் தேசிய உடைமை ஆக்குவோம்.” அதுதான் லெனின், இதுதான் அவரது மேதமை. துல்லியமான நிலைமைகள் குறித்து  துல்லியமான ஆய்வு என்பது இதுதான். இது மார்க்சியத்தின் அடிப்படை மட்டுமல்ல; உயிர்நாடியும்கூட!

தேசிய இனங்களின் விடுதலை

ஒரு தேசிய இனம் மற்ற தேசிய இனங்களை ஒடுக்கும் பொழுது ஒரு நாட்டின் உழைக்கும் வர்க்கம் விடுதலை அடைய முடியாது என்பதே, தேசிய இனம் பற்றிய விஷயத்தில் லெனினின் ஆழ்ந்த பார்வையாகும். இந்த புரிதலும் சோவியத் ஒன்றியத்தை உருவாக்க முக்கிய பங்களிப்பு செய்துள்ளது.  ஜாரின் ரஷ்யாவில் ஒடுக்கப்பட்ட அனைத்து தேசிய இனங்களுக்கும் மார்க்சிய அணுகுமுறையை  பின்பற்றி, சுய நிர்ணய உரிமை அளிக்க போல்ஷெவிக் கட்சிக்குள் லெனின் உறுதியான நிலைப்பாட்டை எடுத்திருந்தார். தேசிய இனங்களின் விடுதலை என்று பேசினால் மட்டும்  போதாது. இந்த விடுதலை தேசிய இனங்களுக்கு இடையே சமத்துவத்தை ஏற்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். தேசிய  இனங்களுக்கிடையே உள்ள பொருளாதார, சமூக ஏற்றத் தாழ்வுகள் நீக்கப்பட்டு சமத்துவத்திற்கான உண்மையான அடித்தளம் அமைக்கப்பட வேண்டும் என்றார். 

சமத்துவத்தின் வெற்றி

இந்த கொள்கையின் விளைவுகள் உண்மையிலேயே அற்புதமானவை. பொருளாதார, சமூக, கலாச்சார தளங்களில், நூற்றுக்கும் மேற்பட்ட தேசிய இனங்கள் அடைந்த முன்னேற்றம் மிக வேகமாகவும் முன் எப்போதும் காணாத விதத்திலும் இருந்தது. புதிய சோவியத் அரசு ரஷ்ய இனம் அடைந்த முன்னேற்றத்தை இதர வளர்ச்சி அடையாத இனங்களும் அடைய உதவ வேண்டும் என்பதைத் தேசிய இனக் கொள்கையின் அடிநாதமாக வலியுறுத்தியது.

சோவியத் சாதனைகள் 

தொழில்துறையில், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், ஜியார்ஜியா மற்றும் அர்மேனியா ஆகிய பகுதிகள்  ரஷ்யக் குடியரசுக்குக் கூடுதலாக முன்னேறின. கல்வியில் மோசமாக, பின்தங்கிய நிலையிலிருந்த மத்திய ஆசியக் குடியரசுகள் முன்னேற்றம் அடைந்து, பல மேற்கத்திய நாடுகளில் உயர் கல்வி பெறும் மாணவர்கள் எண்ணிக்கையை விடக் கூடுதலான எண்ணிக்கையிலிருந்தனர். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, 1940 வாக்கில், மத்திய ஆசியக் குடியரசுகளில் ஆயிரம் மக்களுக்கான மருத்துவர் விகிதம் இந்தியாவில் 1956-ல் இருந்ததை விட அதிகமாக இருந்தது. சம வேலைக்குச் சம கூலி என்ற கொள்கை தொடர்ந்து கூலியைச் சமப்படுத்துவதை உறுதி செய்தது.

வரலாற்றின் புதிய அத்தியாயம்

இதுவரை இப்படி ஒரு புரட்சிக்கும், தொழிலாளி வர்க்க ஆட்சிக்கும் எந்த முன் மாதிரியும் இல்லை. பாதை இல்லாத கரடுமுரடான சூழலில், புதிய பாதையில் சோசலிசம் பயணிக்கத் துவங்கிய ஆண்டு 1917. அதன் பிரதான மேய்ப்பர் எந்த அதிகாரத்திலும் இருந்து பழக்கப்பட்டவர் இல்லை.  

புரட்சியின் தாக்கம்

சோவியத் புரட்சியின் அதிர்வுகள் மூன்றாம் உலக நாடுகளின் விடுதலையை விரைவு  படுத்தியது. காலனித்துவத்திலிருந்து விடுதலைப் பெற்று புதிதாக உருவான நாடுகளுக்குப் பாதுகாப்பு அரணாக, அவர்கள் வளர்ச்சியில் பரிவுகொண்ட உற்ற தோழனாகச் சோவியத் நாடு விளங்கியது.  1990களில் சோவியத் தகர்வுக்கு பின் ஏகாதிபத்தியம் உலகில் ஒற்றை துருவ ஆட்சியை நோக்கி நடைபோடத் துவங்கியது. தாளார மயம், உலகமயம், தனியார் மயம் என்ற தாரக மந்திரத்தை முழங்கி மக்களைத் துயரத்தின் பிடியில் ஆழ்த்தி உள்ளனர். உலகம் முழுவதும் வலதுசாரிகள் மேலெழுந்து வருகின்றனர். கம்யூனிடுகள் ஆட்சி அமைத்தால் எத்தகைய சமூகம் உருவாக்கப்படும் என்பதற்கு அத்தாட்சியாக லெனினும் சோவியத் சாதனைகளும் முன்னே நிற்கின்றது. அது உழைப்பாளி வர்க்கமாக மக்களைத் திரட்ட வழிகாட்டுகிறது.

- எஸ்.ஜி.ரமேஷ்பாபு

 

“லெனின் வாழ்க்கையில் சில ஏடுகள்”

சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக்குழு சார்பில் மார்க்சிய - லெனினியக் கழகத்தின் ஆய்வாளர்களால் எழுதப்பட்ட நூலின் மறுபதிப்பு

வெளியீடு : திசைகள் பதிப்பகம், சிதம்பரம் பக்கங்கள் : 112 / விலை : ரூ.110

 

புதன், 6 நவம்பர், 2024

மனித குலத்தின் மகத்தான யுகப்புரட்சி நீடூடி வாழ்க!

     


 இன்றைய தினத்திலிருந்து 13 ஆண்டுகளுக்கு முன் நான் எழுதிய கட்டுரை இது.  மகத்தான சோவியத் யூனியன் புரட்சி ஏன் இப்போதும் உயிர்ப்புடன் இருக்கிறது என்பதற்கு உதாரணம் இந்த கட்டுரை. மீள் பதிவுதான், ஆனால் சமூக மாற்றத்திற்கான தேடல் உள்ளோருக்கு இந்த கட்டுரை பல நினைவுகளை உருவாக்கக்கூடும்!

 

 


நவம்பர் புரட்சியும் வால் ஸ்டிரீட் போராட்டமும்

திங்கள், 7 நவம்பர், 2011

 


     2001 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம்தான் அது நடந்தது. உலகம் அதிர்ந்து பார்த்த சம்பவமது. உலகின் வல்லரசு என மார் தட்டிக்கொண்டு நின்ற, யாரும் நெருங்க முடியாது என யூகிக்கப்பட்ட அமெரிக்காவின் ராணுவ தலைமையகம் உள்ளிட்ட இரட்டை கோபுர மீதான தாக்குதல் நடந்த நாள். அமெரிக்காவின் நிலப்பரப்பு முழுவதும் மரண ஓலத்தை எழுப்பிய நாள் அது. அந்த சம்பவம்  நடந்து 10 ஆண்டுகள் வேகமாய் ஓடிவிட்டது.

            இதோ 2011 மீண்டும் அதே செப்டம்பரில் அமெரிக்காவின் அரசுக்கு மீண்டும் ஒரு தலைவலி துவங்கியுள்ளது. இது மரணத்தை முன் வைத்தல்ல, வாழ்வதற்கான உரிமை கேட்டது. அதனால் உலகின் கவனம் ஈர்த்தது.

            அமெரிக்க ராணுவ தலைமையகம் யாருக்காக உகலம் முழுவதும் படுகொலைகளை செய்து வருகிறதோ, யாரின் நலன் காக்க எளிய மக்கள் மீது குண்டுகளை வீசுகிறதோ, அந்த முதலாளிகளின் தலைமையகமான வால் ஸ்டிரீட்டை கைப்பற்றுவோம் என்று போர்க்குரல் எழுப்புகிறார்கள் அமெரிக்க மக்கள்

            செப்டம்பரில் சிலநூறு போராளிகள் மூலம் துவங்கியப் போராட்டம் அது. ஆனால் இரண்டு மாதங்களில் பல்லாயிரக் கணக்கான மக்களை வீதியில் இறக்கியுள்ளது. இரட்டைக் கோபுர தாக்குதலுக்கூட அதிராத அமெரிக்கா "வால் ஸ்டிரீட் நம் வாழ்க்கையைக் கைப்பற்றியதால், நாம் வால் ஸ்டிரீட்டை கைப்பற்றுவோம்" என மக்கள் போராடுவதை பார்த்து பதறி துடிக்கிறது.

            எங்களுக்கு வேலை இல்லை. குடியிருக்க சொந்த வீடில்லை, அதைவிட கொடுமை வாடகை வீடும் இல்லை. தண்ணீர் வரி கட்ட முடியாததால், குடிநீரும் ரேஷன்தான். நாங்கள் நடுத்தெருவுக்கு வந்துவிட்டோம். எங்கள் உடல் உழைப்பை, அதன் மூலம் கிடைத்த பணம், வசதிகளை எல்லாம் வர்த்தக, தொழில், நிதி நிறுவன பணமுதலைகள் ஆக்ரமித்துக்கொண்டு, எங்களை அடிமையாக்கி விட்டன. மக்களுக்கு நல்லது செய்யத்தான் அரசு. ஆனால், பட்ஜெட்டில் வரி போடுவது, மானியத்தை ரத்து செய்வதெல்லாம் அதன் பின்னால் உள்ள இந்த பண முதலைகள் நிர்ணயிக்கின்றனர்.

            ஓட்டு போட்டு அரசை தேர்ந்தெடுப்பது நாங்கள் ஆனால், ஆட்சியில் அமர்ந்திருப்பவர்களை கையில் போட்டுக்கொண்டு ஆதிக்கம் செலுத்தி நாட்டை நடத்துவது இந்த பண முதலைகளா? எங்களுக்கு சமத்துவம் வேண்டும்; அமெரிக்காவில் உள்ள எல்லா வளங்களை, பணத்தை, வசதியை ஒரு சதவீத பண முதலைகள் அனுபவிக்க, 99 சதவீதம் அப்பாவி மக்கள் ஒதுக்கப்படுவதா? நாகரிக அடிமை வாழ்க்கையை அனுபவிப்பதா? விடமாட்டோம் இனி. எங்கள் வாழ்க்கையை நீங்கள் முடக்கினீர்கள் இதோ உங்களை நாங்கள் முடக்க வருகிறோம் என அணிதிரண்டுள்ளனர்.

 

   அமெரிக்காவில் 10 கோடி மக்கள் வறுமையில் தவிக்கிறார்கள். 5 கோடிப்பேருக்கு மருத்துவக் காப்பீடு இல்லை. 2.5 கோடிப் பேருக்கு வேலை இல்லை. இருப்பினும் பணக்காரர்களுக்கு வரிவிலக்கு தாராளமாக வழங்கப்படுகிறது. அமெரிக்காவின் குடியரசுக்கட்சியும் ஜனநாயகக் கட்சியும் பெயர்களில்தான் வேற்றுமையுடையவை. அவை இரண்டும் முதலாளிகளின் கைக்கூலி கட்சிகள்தான். அவர்களின் நிதியால்தான் இவர்கள் மாறிமாறி ஆட்சியை பிடிக்கின்றனர். ஆகவேதான் வால் ஸ்டிரீட் முற்றுகையை வர்க்கப் போர் என்று புரிந்துக்கொண்டு ஆட்சியாளர்கள் அலறுகின்றனர்.

            முதலாளித்துவப் பொருளாதாரத்தை வீழ்த்துவதற்கு நடக்கும் உலகு தழுவிய கம்யூனிஸ்டுகளின் சதி என்று அலறுகின்றனர், அச்சுறுத்துகின்றனர். பாக்ஸ் நியூஸ் என்ற தெலைக்காட்சி வால் ஸ்டிரீட்டை எது தாக்குகிறதோ அதுதான் உலகின் முதன்மை அபாயம் என அறிவிக்கிறது.

              வர்க்க போர் என்ற சொல்லாடல் ஏன் உலக முதலாளிகளை, அல்லது ஏகாதிபத்திய சக்திகளை ஏன்அச்சுறுத்துகிறது? அதுதான் நவம்பர் புரட்சியின் வெற்றி

 *          *          *

              நவம்பர் 7- உழைக்கும் வர்க்கத்தின் பெருமையை, வலிமையை இந்த பூவுலகம் உணர்ந்த நாள். அன்றுதான் ரஷ்ய தேசத்தில் பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் ஒரு புதிய அரசு முறை அமைந்தது. ”ஆஹா என்றெழுந்தது பார் யுகப்புரட்சி” என்று மகாகவி பாரதி பாடிய புரட்சி. இந்த உலகை தங்கள் உழைப்பால் உருவாக்கிய தொழிலாளர்கள் மனித தன்மையில்லாமல் சுரண்டப்பட்டனர். பாட்டாளிகளின் உழைப்பை முதலாளிகளும் நிலப்பிரபுக்களும் ஒட்டச் சுரண்டினர். மாமேதை லெனின் தலைமையில் தொழிலாளி வர்க்கப் புரட்சி ஜாரின் சர்வாதிகார ஆட்சிக்கு முடிவு கட்டியது

             இந்தப்புரட்சியைத் தொடர்ந்து சோவியத் யூனியன் என்ற அதுவரை உலகம் கண்டிராத புதிய அரசு முறை அமைந்தது. உழைக்கும் மக்களின் உதிரத்தை குடித்து, கொள்ளையடித்து சேர்க்கப்பட்ட சொத்துக்கள் அனைத்தும் பொதுவுடைமை ஆக்கப்பட்டன. லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் நிலமற்ற கூலி ஏழை விவசாயிகளுக்கு பிரித்து கொடுக்கப்பட்டன. தொழிற்சாலைகள் அனைத்தையும் நிர்வகிக்கும் பொறுப்பு தொழிலாளிகளிடமே விடப்பட்டது.

            அதுவரை இருந்த வாழ்க்கை முறை முற்றிலும் மாறியது. மக்கள் ஆட்சியாளர்களை சந்திக்கும் முறை மாறி அரசு மக்களை சந்தித்தது. மக்கள் வாழ்க்கை முன்னுக்கு நிறுத்தப்பட்டு அவர்களுக்கான வாழ்க்கை உத்திரவாதம் செய்யப்பட்டது. அதனால்தான் முதலாளித்துவ நாடுகளில் கூட தவிர்க்க இயலாமல் சில சலுகைகளை தொழிலாளர்களுக்கு முதலாளிகள் வழங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. சேமநல அரசு என்ற சொல்லாடல் இதன் பின்தான் வந்தது.

             சோவியத் யூனியனிலும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் சோசலிச அமைப்பு முறைக்கு பின்னடைவு ஏற்பட்டபோது, இனி சோசலிசத்திற்கு எதிர்காலம் இல்லை என்றனர். ஆனால் இன்றைக்கு அமெரிக்காவிலேயே தொழிலாளர்கள் போராடுகிறார்கள். இதன் கதிர்வீச்சு ஐரோப்பிய கண்டத்தையும் கடந்து உலகம் முழுவதும் பரவி வருகிறது. ஏற்கனவே பிரிட்டன், பிரான்சு,  கிரீஸ், ஸ்பெயின், பேர்த்துகல், இத்தாலி என்று கடந்த 3 ஆண்டுகளாக தாவிப்பரவும் போராட்டம் இஸ்லாமிய நாடுகளிலும் பற்றியுள்ளது

             பின்லேடனுடன் ஆயுதம் சுமந்த எகிப்து இளைஞர்கள் ஆயுதங்களை தூர எரிந்து உழைப்பதற்கு வேலை கொடு! பசித்தவனுக்கு உணவு கொடு என போராட்டகளத்தில் குதித்தனர். இருப்பவருக்கும் இல்லாதவருக்குமான போராட்டம் உலக அரங்கில் உக்கிரமாக நடந்து வருகிறது. இந்தியாவில் உள்ள அரசு  தாராளமயமாக்கல் என்ற கொள்கை செயல் படுத்திய பிறகு தொழிலாளர்களைச் சுரண்டுவது அதிகரித்துள்ளது. பன்னாட்டு நிறுவனங்கள் நம்நாட்டுச் செல்வங்களை கொள்ளையடிப்பதோடு தொழிலாளர்களின் உரிமைகளையும் ஒடுக்க முயல்கின்றன.

             இப்போது நம்முன் ஒரே கேள்விதான் முன் நிற்கிறது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கொள்கைகளை இந்திய அரசாங்கம் கடைபிடிக்கிறது. மக்களை கொள்ளையடிக்கிறது. அமெரிக்க மக்கள் சுரண்டலுக்கு எதிராக அணிதிரண்டு நிற்கின்றனர். போராடுகின்றனர். இந்திய அரசு அமெரிக்க அரசை பார்க்கிற போது, இந்திய மக்கள் அமெரிக்க மக்களை பார்க்க வேண்டாமா? அவர்கள் போராடுகின்றனர். நாம் என்ன செய்யப்போகிறோம்