சனி, 5 ஜூலை, 2025

அஜீத்குமார் கொலை - காவல்துறை அத்துமீறல்கள் : தேவை உறுதி மிக்க நடவடிக்கை

 


நீதி மன்றம் எழுப்பிய கேள்விகள்

* நகை காணாமல் போன வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படாதது ஏன்?

* சிறப்புப் படை எந்த அடிப்படையில் யார் சொல்லி இந்த வழக்கை கையில் எடுத்தது? 

* நகை திருட்டு வழக்கைத் தனிப்படையிடம் ஒப்படைத்தது யார்? அவர்களாகவே இந்த வழக்கைக் கையில் எடுத்து விசாரிக்க முடியுமா? 

* காவல்துறை மாமூல் வாங்குவது தொடர்பாகப் பல காணொளிகள் வருகின்றன. இது தொடர்பாகச் சிறப்புப்படை விசாரித்து 2 மணி நேரத்தில் நிறுத்த முடியும் என்றால் நிறுத்துங்கள். இது குறித்து விசாரிப்பீர்களா? 

* உயர் அதிகாரிகளைக் காப்பாற்ற முழுமையான விவரங்களை மறைக்கிறீர்களா? மக்களுக்கு வெளிப்படையாக இருக்க வேண்டும்? புலனாய்வு செய்வதற்குத் தான் காவல்துறையே தவிர அடிப்பதற்கு அல்ல. 

*அஜித் குமாரை இரண்டு நாட்களுக்கு வெவ்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று சுற்றிச் சுற்றி விசாரிக்க யார் அதிகாரம் கொடுத்தது? 

* அனைவர் மீதும் ஏன் வழக்குப் பதிவு செய்யவில்லை? காவல்துறை உயர் அதிகாரிகளின் சட்ட விரோத கட்டளைகளுக்கு அடி பணிய வேண்டிய அவசியம் இல்லை. 

* நீதிபதிக்கு உடனடியாக பிரேதப் பரிசோதனை அறிக்கையை அனுப்பாதது ஏன்? 

*நீதிபதியை அப்பகுதி மக்களை ஏன் சந்திக்க அனுமதிக்கவில்லை?

* காவல்துறை மற்றும் நீதித்துறை சேர்ந்தவர்களின் குடும்பங்களில் இப்படி நடந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள்? 

 * சீருடையால் கிடைக்கும் அதிகாரம் மக்களைக் காப்பதற்காகத்தான், அடிப்பதற்காக இல்லை. 

* தமிழ்நாடு கல்வி அறிவு கொண்ட மாநிலம். ஆனால் இதுபோன்ற சம்பவங்கள் இங்கு நிகழ்வது ஏற்கத்தக்கதல்ல

கொடூரத்தின் உச்சம்

இவையெல்லாம் சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் பத்தரகாளியம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றிய அஜீத்குமார் (வயது 28) உயிரிழந்த வழக்கில் நீதிபதிகள் எழுப்பிய கேள்விகள்.    மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வர் தாக்கல் செய்த அஜீத்குமாரின் உடற்கூராய்வு அறிக்கையில் 45  இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்த செய்தி மனதை உலுக்கி எடுக்கிறது. எத்துணை கொடூரமாக அவர் தாக்கப்பட்டார், எத்தனை வன்மத்துடன் அவர் தாக்கப்பட்டார் என்பதை இதன் மூலம் புரிந்துகொள்ள முடிகிறது.

கோவிலுக்கு வந்த ஒரு பெண்மணியின் நகை திருடுபோன விவகாரத்தில் அஜீத்குமார் உள்ளிட்ட நான்கு பேரைக் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்த காவல்துறை, அஜித்தைத் தவிர மற்றவர்களை அனுப்பிவிட்டு, அஜித்தைக் கோவில் வளாகத்தில் உள்ள மாட்டுக் கொட்டகை, தனியார் தோட்டம் என வெவ்வேறு இடங்களில் தலைகீழாகத் தொங்கவிட்டு கொடூரமாகத் தாக்கி சித்ரவதைக்கு உள்ளாக்கினர். இதில் அஜித் உயிரிழந்தார். இது குறித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில்  நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியன், மரியா கிளீட்  ஆகியோர் அமர்வு ஜூலை 1 விசாரணையில்தான் மேற்கண்ட கேள்விகளை எழுப்பினர்.

அஜீத்குமாரை காவல்துறையினர் தாக்கும் சம்பவத்தை காணொளியை எடுத்த சத்தீஸ்வரன், கோயில் பின்புறத்தில் உள்ள கழிவறையில் மறைந்திருந்து இந்த காணொளியை எடுத்ததாகவும், பின்னர் போலீசுக்குப் பயந்து சற்று நேரத்தில் வெளியே வந்து விட்டதாகவும் நீதி மன்றத்தில் தெரிவித்தது இந்த வழக்கில் முக்கிய திருப்புமுனையாக மாறியது.

அதிகார மமதையின் ஆட்டம்

திமுகவின் சேங்கைமாறன்(அவரது மனைவி பஞ்சாயத்துத் தலைவர்) திருப்புவனம் திமுக செயலர் மகேந்திரன், மானாமதுரை டி.எஸ்.பி  உள்ளிட்டோர் அஜீத்குமார் இறந்த பிறகு அவரது குடும்பத்தினரிடம் 50 லட்சம் ரூபாய் தருவதாகச் சமரசம் பேசியுள்ளதும், புகார் கொடுத்த நிகிதா ஒரு ஐஏஎஸ் அதிகாரியின் உறவினர் என்பதால் வழக்குப்பதிவு செய்யாமல் அஜீத்குமாரை தாக்கியுள்ளனர் என்பதும்,  

உடற் கூராய்வு தொடங்குவதற்கு முன் அஜிக்குமாரின் உடலை முழுமையாகப் பார்க்க அவரது தாய் மற்றும் சகோதரரை காவல்துறை அனுமதிக்கவில்லை.  பிரேதப் பரிசோதனை அறிக்கையை அஜீத்குமாரின் தாயிடம் வழங்கவில்லை.காவல்துறை கோயிலிலிருந்த அனைத்து சிசிடிவிகளையும் நீக்கியுள்ளனர் என்ற குற்றச்சாட்டுகளும், கோயிலில் உள்ள சிசிடிவி காட்சிகளை எஸ்ஐ ராமச்சந்திரன் எடுத்துச் சென்றதாகக் கோவில் உதவியாளர் நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.  அதைவிடக் கொடுமை அஜித் குமாரின் பிறப்புறுப்பிலும் வாயிலும், காதுகளிலும் மிளகாய்த் தூள் போடப்பட்டுள்ளது. அஜித் குமார் தாய் அளிக்கப்பட்ட புகார் மீது வழக்குப் பதிவு செய்யப்படவில்லை என்பதுதான் இவையெல்லாம் அதிகார மமதையின் உச்சம். 

எடப்பாடியின் நீலிக் கண்ணீர் 

இந்த சம்பவத்தில் 6 காவலர்களை கைது செய்தும், மானாமதுரை டிஎஸ்பி சண்முகசுந்தரத்தைத் தற்காலிக பணிநீக்கம் செய்ததுடன், சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத்தை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது.  அதைத்தொடர்ந்து, ஒட்டுமொத்த வழக்கையும் சிபிஐ விசாரணைக்கு மாற்றியும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் காவல்துறை காவலில் தந்தை - மகனான ஜெயராஜ் - பென்னிக்ஸ் இருவரும் தாக்கப்பட்டு உயிரிழந்த வழக்கில் காவல்துறையைக் காப்பாற்ற முயற்சி செய்து அம்பலப்பட்டுப் போன எடப்பாடி வேறு வழி இல்லாமல் விசாரணைக்கு உத்திவிட்டதும், ஸ்டெர்லை துப்பாக்கிச் சூட்டைச் செய்திகளை பார்த்துத்தான் தெரிந்துகொண்டேன் என்றதும் எவ்வுளவு கேவலமான நிர்வாகத்தின் சாட்சி! அவர்தான் இப்போது அஜீத்குமார் மரணத்திற்கு நீலிக் கண்ணீர் வடிக்கிறார்.

புகார் கொடுத்த யோக்கிய சிகாமணி யார்?

புகார் கொடுத்த பேராசிரியராக பணியாற்றும் நிகிதா மீது பல்வேறு மோசடி புகார்கள் வெளிச்சத்திற்கு வந்த நிலையில் தற்போது கல்லூரி கல்வி இயக்குநர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.  கிட்டத்தட்ட 6 மோசடி வழக்குகளில் கைதாகியிருக்கும் நிகிதா சமூக வலைத் தளங்களில் பாஜக ஆதரவாளராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார். அண்ணாமலையுடன் நெருக்கமாக நின்று போஸ் கொடுத்த புகைப் படம் அவரது வலைத்தளங்களில் உள்ளன.  அதைக்கூட இவர்கள் சமாளிக்கக்கூடும்!

ஆனால் மூட நம்பிக்கைகளையும், அறிவியலுக்கு புறம்பான கருத்துக்களையும், திமுகவிற்கு எதிராக வெறுப்பு கருத்துக்களையும் தனது சமூக வலைத்தளங்களில் நிகிதா பதிவிட்டுள்ளார். தன்னை பாஜக ஆதரவாளராக காட்டிக்கொண்டது மட்டு மல்லாமல் தீவிரமாக செயல்பட்டதும் தெரிகிறது.  சமீபத்தில் மதுரையில் இந்து முன்னணி நடத்திய முருகன் மாநாடு குறித்தும், அதில் பங்கேற்ற அண்ணாமலை, பவன் கல்யாண் ஆகியோர்  புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.

சேகர் பாபுவை எச். ராஜா ‘அல்லேலூயா பாபு’ என்று திட்டிய பதிவையும், ‘மாட்டுக்கறி உண்பது மனித உரிமை கிடையாது’ என்று அலகாபாத் உயர்நீதி மன்ற நீதிபதியின் கருத்தை வெளியிட்டுள்ளார்.  கோவிலுக்குள் மட்டும் இந்துவாக போகாதே, வாக்குச் சாவடிக்குள் போகும் போதும் இந்து என்ற உணர் வோடு போக வேண்டும் என்றும் பதி  விட்டுள்ளார். இவர் வகுப்பறையில் என்ன பேசி இருப்பார் என யோசித்துக் கொள்ளுங்கள்.

இதனால்தான் ஆரம்பத்தில் பொங்கிய பாஜக பின்பு பம்மியது!

ஆனால் பிரச்சினை கட்சிகள் மட்டுமா?      

தேசிய மனித உரிமை ஆணையம் அளிக்கும் புள்ளிவிவரங்களின்படி, 2018-19ஆம் ஆண்டில்  தமிழ்நாட்டில் 11 காவல் மரணங்களும் 89 சிறை மரணங்களும் நடந்திருக்கின்றன. இந்திய அளவில் 137 காவல் மரணங்களும் 1797 சிறை மரணங்களும் நடந்திருக்கின்றன. 2019 - 20ல் தமிழ்நாட்டில் 12 காவல் நிலைய மரணங்களும் 57 சிறை மரணங்களும் நடந்திருக்கின்றன. தமிழ்நாட்டில் 2024ம் ஆண்டு ஏப்ரல் 5 முதல் 16ஆம் தேதிக்குள் 4 காவல் மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன.

அயனாவரம் ஏராங்கிபுரம் ஆகாஷ் , சீர்காழியைச் சேர்ந்த சத்தியவாணன், பாண்டமங்கலம் சேவல்கட்டுமூளை பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் மணிகண்டன், முதுகுளத்தூர்  மணிகண்டன் என்ற கல்லூரி மாணவர், மேலப்பாளையம் ஆமீன் புரத்தைச் சேர்ந்த சேர்ந்த சுலைமான், புரசைவாக்கம் விக்னேஷ், தட்டரணை  தங்கமணி, திருவள்ளூர் மாவட்டம் ராஜசேகர் எனப் பட்டியல் நீளுகிறது.

ஆக ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவிலை. உலகிலேயே அதிகம் என்கவுண்டர் கொலைகள் நடப்பது உத்திர பிரதேசமென்றே இருப்பினும் அடிப்படையில் மாற்ற வேண்டியது காவல்துறையின் அதிகார வர்க்க போக்கும், எளிய மனிதர்களை மதிக்கும் பக்குவமும்தான்.   

காவல்துறை ஆணையங்கள் எதற்காக?

காவல் துறையின் பணி நிலைமைகளில் சீர்திருத்தங்களை தொடங்குவதைப் பொறுத்தவரை, 1969 1989 மற்றும்  2006ஆம் ஆண்டு மூன்றாம் ஆணையம் எனக் கலைஞர் அவர்கள் ஆட்சியில் மூன்று காவல்துறை ஆணையங்கள் அமைக்கப்பட்டது. அதிமுக ஆட்சிக் காலத்தில் நிறுவப்பட்ட ஒரே காவல்துறை ஆணையம் 2014 ஆம் ஆண்டு, முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஷீலா பிரியா தலைமையில் அமைக்கப்பட்டது. இருப்பினும், சென்னை உயர் நீதிமன்றம் (மதுரை அமர்வு) ஓய்வு பெற்ற நீதிபதியைத் தலைவராகக் கொண்டு அதை மறுசீரமைக்க உத்தரவிட்டது. 

அதன்படி, தற்போதைய திமுக அரசு செல்வம் ஆணையத்தை அமைத்துள்ளது, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி கே. அலாவுதீன், முன்னாள் டி.ஜி.பி. கே. ராதாகிருஷ்ணன், மனநல மருத்துவர் சி. ராமசுப்பிரமணியன், முன்னாள் பேராசிரியர் நளினி ராவ் ஆகியோர் உறுப்பினர்களாகவும், கூடுதல் டி.ஜி.பி. மகேஷ் குமார் அகர்வால் உறுப்பினர்-செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த ஆணையங்கள் காவல்துறையினர் பிரச்சினைகளை தீர்வுக் கான அமைக்கப்பட்டாலும் இவைகளால் மக்களுடன் காவல்துறை பழகும் முறையை மாற்ற இயலவில்லை என்பதுதான் உண்மை.

ஆளும் வர்க்கத்தின் அடக்குமுறை கருவி

அதிகாரிகள் கட்டளை இட்டால் கண்ணை மூடிக்கொண்டு தாக்குவதும், உயிர் போக அடிப்பதும் காவலர்களின் அடிப்படை குணமாக காரணம் காவல்துறையின் அமைப்பு அதுதான். கேள்வி கேட்காமல் கட்டளையை செய்வது அவர்களின் அடிப்படை பணி.   ஆளும் பெரு முதலாளிகளில் தலைமையிலான முதலாளித்து  நிலபிரபுத்துவ வர்க்கத்தின் நலனை பாதுகாப்பதே காவல்துறையின் அடிப்படை கடமையாகும். தொழிலாளர்கள் உள்ளிட்ட  எளிய மக்களின் போராட்டங்களை ஒடுக்க அவர்கள் எடுக்கும் பயிற்சி  தனி மனித தாக்குதலில் கொடூர வடிவமாக எழுது நிற்கிறது.

இந்த நிலையில் “முதலமைச்சர் தலையிட்டு காவல்துறையின் அணுகுமுறையில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும்” என கடந்த காவல்துறை மானிய கோரிக்கை மீது நடந்த விவாதத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் நாகை மாலி அவர்கள் பேசியது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தாக அமைகிறது.  கம்மாபுரம் ராஜகண்ணு துவங்கி இன்று அஜித்குமார் வரை காக்கிச்  சட்டைகளின் பூட்ஸ் கால்களின் கீழ் நசுங்கிய எளிய மனிதர்களின் உதிரம் உளராமல் வழிந்தோடிக் கொண்டே இருக்கிறது. இதற்கெதிரான உறுதி மிக்க நடவடிக்கைகள்தான் மீண்டும் இவைகள் நிகழாமல் தடுத்திடும். 

- எஸ்.ஜி.ரமேஷ்பாபு

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக