மதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 26 செப்டம்பர், 2015

ஆணவக் கொலைகள் சாதிய வன்மத்தின் கோரமுகம்





முதல் நாள் மாலை துவங்கி விடிய விடிய கைகள் கட்டப்பட்டு, அடி வாங்கி உடல் கிழிந்து தளர்ந்து கிடந்தார் முருகேசன். மறுநாள் காலை.. கடுமையாக தாக்கப்பட்டு தள்ளாடியபடி காரில் கொண்டு வரப்பட்ட கண்ணகியும் அவர் அருகில் கைகால் கட்டப்பட்டு கிடத்தப்பட்டார். முந்திரி காட்டில் ஊரார் கூடி நிற்க இருவருக்கும் விஷம் புகட்டினர். கண்ணகி வாயை திறக்க மறுத்ததும் அவர் காதில், மூக்கில் விஷம் ஊற்றப்பட்டது. கண்ணகியின் பெற்றோரும் உடனிருக்க இருவரின் உயிர் அடங்கும் நேரத்தில் கொளுத்தப்பட்டனர். உடல்களை எரிப்பதற்கு முன்னேற்பாடுகள் தயாராக இருந்தது. தனித்த சுடுகாடுகளில். மேற்கண்டது திரைப்படத்தின் காட்சியோ.. நாவலின் பகுதியோ அல்ல இது. கடலூர் மாவட்ட விருத்தாசலம் பகுதியில் உள்ள புதுக்கூரைப்பேட்டை கிராமத்தில் நடந்த கொடூரம் முருகேசனும் கண்ணகியும் செய்த குற்றம் சாதி மறுத்துகாதலித்ததுதான்.

அதிலும் வேதனை என்னவென்றால் முருகேசன் ஆதிதிராவிட சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் அவரது தாயாரும் உறவினர்களும் புதரின் மறைவிலிருந்து கத்தி அழக்கூட வாய்ப்பில்லாமல் இந்த நிகழ்வின் சாட்சிகளாய் நின்றதுதான். இதுதான் நமது `நாகரீக’ சமூகத்தின் கேவலமான சாதிய முகம். கவுரவத்தின் பெயரால் கொலைகள் நடப்பது இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. சமூக ஆய்வறிக்கைகள் கூற்றுபடி 25 நாடுகளில் கவுரவத்தின் பெயரால் கொடூரமான கொலைகள் நடக்கிறது. உலகில் அதிகமாக கவுரவத்தின் பெயரால் கொலைகள் நடப்பது துருக்கியில்தான். மைதானத்தின் மத்தியில் இடுப்புடன் மண்ணில் புதைத்துவிட்டு ஊரே கூடி நின்று கல்லால் அடித்து,சிதில் சிதிலாக உடலைசிதைப்பது என்னவகையான மனநிலை? கவுரவத்தின் பெயரால் இவை யாவும் நியாயப்படுத்தப்படுகிறது. இப்படி நடக்கும் கொலைகளுக்கு மதம், இனம், எல்லைகள் போன்ற ஏதோ ஒன்று காரணமாய் அமைகிறது. 
இந்தியாவில் மதமும் மதம் சார்ந்த பிரிவுகளும், சாதியும் அந்த அமைப்பு உருவாக்கும் சாதி ஆணவமும் கொலைகளை நோக்கி தள்ளுகிறது. இந்தியாவில் பஞ்சாப்பில்தான் அதிக சாதி மறுப்பு திருமண கொலைகள் நடக்கிறது. அடுத்த இடங்களில் உத்திர பிரதேசமும், ஹரியானாவும் தொடர்கிறது. சாதி மறுப்பு திருமணங்கள் அதிகம் நடப்பது பஞ்சாப்பில்தான். அங்கு நடக்கும் மொத்த திருமணங்களில் 22 சதம் சாதி மறுப்பு திருமணங்கள். அடுத்த இடத்தில் கேரளம் உள்ளது. அங்கு நடக்கும் திருமணங்களில் சாதி மறுப்பு திருமணங்கள் 19 சதமாகும். தமிழகத்தில் நடக்கும் சாதிமறுப்பு திருமணங்களில் எண்ணிக்கை வெறும் 2 சதம்தான். ஆனால் நடக்கும் திருமணங்கங்களின் எண்ணிக்கைக்கும் நடக்கும் கொலைகளுக்குமான சதவிகிதத்தில் முதலிடம் பிடிப்பது தமிழகம்தான். ஆனால் தமிழகத்தில் கவுரவத்தின் பெயரால்கொலைகளே நடக்கவில்லை என காவல்துறையினரும், முதலைமைச்சர்களும் சத்தியம் செய்கிறார்கள். 

இந்தியாவில் பிறப்பவர்கள் பிறக்கும்போதே சாதி முத்திரையோடுதான் பிறக்கிறார்கள். அவர்களின் உடல்களை வளர்ப்பது பெற்றோராக இருந்தாலும், அவர்களது மனநிலையை விஷம் கொடுத்து வளர்ப்பது சாதியம்தான். இந்திய சமூகத்தை பீடித்துள்ள சாதி என்ற பௌதீகம் நவீன உலகின்நுட்பங்களை தனதாக்கிக்கொள்ள முயற்சித்துக்கொண்டே இருகிறது. இந்த நூற்றாண்டின் இணையற்ற கண்டுபிடிப்பான இணைய வெளியை முழுமையாக பயன்படுத்திக்கொள்கிறது. சாதி பெருமிதம் குறித்து வெறுப்பேற்றும் பணிகளை இணையம் முழுவதும் செய்து வருகின்றனர்.இது, நிகழ் சமூகத்தின் பிரதிபிம்பம். சாதி மறுப்பு திருமணங்களை செய்யும் குடும்பங்களை சாதி உறவுகள்தான் அலைக்கழிக்கின்றது. உனது குடும்பம் இனி வெளியில் தலைகாட்ட முடியுமா? என்ற கேள்வியில் துவங்குகிறது அவர்களது கோரத்தாண்டவம். இதுநாள் வரையில் தனது குடும்பத்தின் மீதான கவுரவம் இனி என்னாகுமோ என்ற அச்சத்தை அந்த குடும்பங்களில் விதைக்கிறது.தனது உறவுகள் மத்தியில் இனி தலைகாட்ட முடியுமா என்ற எண்ணமும், தாழ்ந்த சாதியை சார்ந்த ஆணோ பெண்ணோ தனது குடும்பத்தில் வந்து சேர்ந்தால் என்னாகும் என்ற பதட்டமும், சமூகம் இனி என்ன சொல்லும் என்ற கற்பிதமும் கொலை அல்லது தற்கொலையை நோக்கி தள்ளுகிறது. 

இதுதான் தர்மபுரியில் திவ்யாவின் தந்தையையும், புதுக்கூரைப்பேட்டையில் கண்ணகி, முருகேசனையும் காவு வாங்கியது. மற்றொரு பக்கம்ஒவ்வொரு குடும்பத்தை உன்னிப்பாய் கவனித்து வரும் சாதியம், தனது சாதியில் இரத்த கலப்பு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறது. உலகின் எந்த மூலையில் நீங்கள் இருந்தாலும் உங்களது சாதிய சங்கங்களால் உங்களை எளிதாகதொடர்பு கொள்ள முடியும். மனித வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் சாதியை கடந்து போகாவண்ணம் நமது வாழ்க்கை கட்டமைக்கப்பபட்டுள்ளது. இது இன்று நேற்று ஏற்பட்டதல்ல. இதற்கான வரலாற்று பின்னணி இருக்கிறது. 

வனத்தின் மகளான தாடகையையும், நான்காம் வர்ணத்தவனாகிய சம்புகனையும் இராமபிரான் கொலைசெய்தது எதற்காக? ஏகலைவனின் கட்டைவிரல் துரோணனால் வெட்டப்பட்டது எதனால்? மாவீரன் கர்ணன் போட்டியிலிருந்து தூக்கி எறியப்பட காரணம் என்ன? எல்லாவற்றையும் நானே படைத்தேன்.. இந்த பாழாய் போன சாதி அமைப்பு முறையும்.. எனவே எதையும் படைத்த என்னால்கூட மாற்ற முடியாது என சூத்திரதாரி கண்ணனின் உபதேசம் மீண்டும் மீண்டும் போதிக்கப்படுவது எதனால்? சாதி மீறலில் எந்த எந்த குற்றத்திற்கு என்ன தண்டனை என சட்டமியற்றிய மனுவுக்கு ஏன் சிலைகள் நிறுவப்படுகிறது? எல்லாவற்றிற்கும் காரணம் ஒன்றுதான். சாதிய அமைப்பை பாதுகாப்பது. 

சாதிய அடுக்கில் உயர் வகுப்பை சேர்ந்த முத்துப்பட்டன் கடைநிலையில் உள்ள அருந்ததிய சமூகத்தை சார்ந்த அக்காள் - தங்கைகளின் மீது காதல் கொண்டான். அதன் பொருட்டு அவன் தன் நிலையை இறக்கிக்கொண்டு செருப்பு தைக்கும் தொழில் கற்றான், அந்த பெண்களை மணம் முடித்தான். அதன் விளைவாக ஆதிக்க வெறியர்களால் கொடூரமாக கொலை செய்யப்பட்டான். அதன்பின் அவன் தெய்வமாக்கப்பட்டன். இப்போதும் நெல்லை மாவட்டம் முத்துப்பட்டன் கோவிலில் செருப்பு வைத்து வழிபடுவது தொடர்கிறது. தருமபுரியில் இரயில் தடத்தில் மண்டை ஓடு சிதறக் கிடந்த இளவரசனும், திருச்செங்கோட்டில் தலை அறுக்கப்பட்டு கிடந்த கோகுல்ராஜூம், மாறுகால் மாறுகை வாங்கப்பட்ட மதுரை வீரன் கதையின் தொடர்ச்சிதானே!சாதி இந்துப் பெண்ணை காதலித்து சாதிமறுப்பு திருமணம் செய்தான் தஞ்சை சூரக்கோட்டை மாரிமுத்து. ஆத்திரம் கொண்ட ஆதிக்கவெறியர்களால் அவனது ஆணுறுப்பு அறுந்தெறியப்பட்டது. அப்போது சாதி மீறலுக்கு எதிராக சட்டமியற்றிய மனுவின் சிரிப்போசை கேட்டிருக்கும்தானே? இன்னும் நாட்டார் தெய்வங்கள் கதைகளை தேடிச்சென்றால் சாதி மறுப்பால் கொலையான சாமிகளின் எண்ணிக்கை நிறைய கிடைக்கும். 

ஆக வரலாற்று பூர்வமாக இச்சமூகத்தில்கவுரவத்தின் பெயரால் கொலைகள் நடந்துகொண்டே இருக்கிறது. எத்தனையோ சமூக சீர்திருத்தவாதிகள், புரட்சியாளர்கள் இம்மண்ணில் தோன்றி இதற்கெதிராக சண்டமாருதம் செய்துள்ளனர். ஆனாலும் அனைத்தையும் சாதி உள்வாங்கி செரித்து நிற்கிறது. முற்போக்கு கருத்துகளை கொண்ட இஸ்லாமிய மதமும், கிருத்துவ மதமும்கூட இந்திய சாதி அமைப்பிடம் தோற்றுப்போனது. ஏற்றத் தாழ்வான சமூகத்தின் பிரிக்கமுடியாத அம்சம் இதுவாகிப் போனது. சாதியத்திற்குள் இருக்கும் ஒருவர் தலித்துகளிலிருந்து தனது வாழ்க்கைத் துணையை தேர்தெடுப்பதையே சாதி மறுப்பு திருமணம் என சட்ட ரீதியாக வரையறுத்துள்ளது அரசாங்கம். அவ்வாறு மணம் புரிபவர்களை ஊக்கப்படுத்தவும், பாதுகாக்கவும், தேவையான உதவிகளை செய்வதற்கும் ஆற்றல் இல்லாமல் தவித்து நிற்கிறது அரசு நிர்வாகம். இதற்கு காரணம்,ஆட்சியாளர்களிலும், காவல் மற்றும் நீதித்துறையிலும் இன்னும் பிற அரசு இயந்திரங்களிலும் உள்ளவர்களிடம் ஓங்கியிருக்கும் சாதிய உணர்வுதான்.

தன் சாதியின் தூய ரத்தத்தில் இன்னொரு சாதியின் இரத்தம் கலப்பதை தீட்டாக கருதாத ஒரு சமுதாயத்தில் மட்டுமே ஆணவக் கொலைகளை தடுக்க முடியும். சாதிய கொடுமைகளை அல்லது படிநிலையை வெறும் ரத்தக்கலப்பினால் மட்டுமே குலைத்துவிட முடியாது, ஆனால் ரத்தக்கலப்பு நிகழாமலும் மாற்றிவிட முடியாது. ஆனால் இதற்கான முயற்சிகள் இரத்த வெள்ளத்தில் மீண்டும் மூழ்கடிக்கப்படுகிறது. ஆனால் ஆதிக்கத்தை திணிக்கும் சாதியினரின் பிள்ளைகளுக்கு வேலை வாய்ப்பும், கல்வியும் நெடுங்கனவாய் இருந்தாலும் அதுகுறித்தெல்லாம் இவர்களுக்கு கவலை இல்லை. அரசியலை நாடகமாக நடத்தும் இவர்கள் காதலை நாடகம் என்கின்றனர்.எனவே உழைப்பாளி மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் சக்திகளுக்கு எதிராக போராடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சாதி ஆணவக் கொலைகளுக்கு எதிராக பிரமாண்டமான மாநாட்டை கடலூரில் நடத்துகிறது. எப்படியேனும் காதலை காரணம் வைத்து கலவரத்தை தூண்ட நினைக்கும் சாதி ஆதிக்க வெறிக்கெதிராக, உழைப்பாளி மக்களை திரட்டி சாதி மறுப்பு திருமணம் செய்வோருக்கு ஆதரவாக சமூக பொதுபுத்தியை மாற்றிட அழைக்கிறது. இது எதோ சாதி மறுப்பு திருமணங்களுக்கு ஆதரவான மாநாடு மட்டுமல்ல.. சாதி ஆதிக்கத்தை எதிர்த்து மக்களை ஒன்றுபடுத்தும் போராட்டத்தின் ஒரு பகுதியும் ஆகும்.

‪25.09.2015 #‎தீக்கதிர்‬ நாளிதழில் வெளியான எனது கட்டுரை

ஞாயிறு, 20 செப்டம்பர், 2015

மதம் அதன் இயல்பில் இல்லாதபோது ...



மோடி பதவியேற்றது முதல் நாடு முழுவதும் நாள் ஒன்றுக்கு இரண்டு மதக்கலவரங்கள் நடந்து வருகிறது என்ற தகவல் நமது ஊடகங்களால் அவ்வுளவு பெரிதாக கண்டுக்கொள்ளப்படவில்லை. மதத்தின் பெயரால் கலவரங்களில் அல்லது கொலைகளில் ஈடுபடுபவர்கள் எவ்வித அச்சமும் இல்லாமல் அதில் ஈடுபடமுடிகிறது. இதற்கு ஆதரவான தார்மீக உணர்வும், ஆதரவும் மோடியின் ஆட்சியில் எப்படி கிடைக்கிறது என்பது வரலாற்றுப் பூர்வமாக புரிந்துக்கொள்ளப்பட வேண்டியதாகிறது.   

பல்லாண்டுகாலமாக மக்களின் நம்பிக்கை சார்ந்து மட்டுமே இருந்த மதம், நவீன அரசியலின் முடிவெடுக்கும் அதிகாரத்தை எங்கிருந்து பெற்றது? அது நவீன அரசியலில் காலடி எடுத்துவைக்க அடிப்படை எங்கு உருவானது? மன்னர்களும் படைகளும் மட்டுமே கோலோச்சிய அரசியலில் மக்கள் பங்கெடுத்தது எப்போது? இவைகளை கொஞ்சமேனும் தொடர்பு படுத்தாமல் இன்றைய அரசியலின் மதவாத நடவடிக்கையை நம்மால் புரிந்துக்கொள்ள முடியாது.

ஒற்றுமையை குலைக்க பயன் படுத்தப்பட்ட மதம்:

1857ம் ஆண்டு நடந்த ஆங்கிலேயர்களுக்கு எதிரான முதல் விடுதலைப் போராட்டம் இஸ்லாமியர்களும் இந்துக்களும் மதம் கடந்து நடத்திய தீரம் மிகுந்த போராட்டம் ஆகும். பிரிடிஷ்காரர்களுக்கு எதிராக இந்திய சமூகத்தில் முதல் மாபெரும் ஒன்றினைவாக இது திகழந்தது. இந்தியாவை தொடர்ந்து ஆள வேண்டுமெனின் இந்த ஒற்றுமைமை சீர்குலைக்காமல் முடியாது என்பதையும் ஆங்கிலேயர்கள் புரிந்துக்கொண்டனர். அந்த போராட்டத்தை இரத்த வெள்ளத்தில் மூழ்கடித்த பிறகுதான் கிழக்கிந்திய கம்பெனியிடமிருந்து நேரடியாக ஆட்சியதிகாரத்தை ஆங்கிலேய அரசாங்கம் பெற்றுக்கொண்டது. 

அதன் பிறகு பல ஆண்டுகள் கழிந்து ஆயுதங்களற்ற அரசியல் போராட்டங்கள் துவங்கின. அரசியல் இயக்கங்கள் தோன்றின. முதல் விடுதலைப் போருக்கு 26 ஆண்டுகள் கடந்து 1885ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி தோன்றிய பின்னணி ஆங்கிலேய அரசாங்கத்திடம் இந்திய உயர் வர்க்கத்திற்கு சலுகைகள் பெறுவதாகவே இருந்தது. ஆனால் அதன் பிறகு வெகுஜனங்களை ஈர்க்கும் சக்தியாக மாற்றம் கொண்டது. அதுவும் காந்தி அவர்கள் தலைமையேற்றதும் அதன் வீரியம் அதிகமானது. இதே நேரத்தில்தான் நவீன அரசியல் சகாப்தம் இந்தியாவில் ஏற்பட்டது. தொழிற்சாலைகளும், ஒரு ஆலையின் கீழ் திரண்ட தொழிலாளர் திரளோடும், பரவலாக படித்த முதல் தலைமுறையோடு எழுந்தது.

இதற்கிடையில் நாடெங்கிலும் பரவிக்கொண்டிருந்த தேசிய விழிப்புணர்வும், ஆங்கிலேய எதிர்ப்பு போராட்டத்தையும் அடக்குவதற்காகா அனைத்து வழிகளையும் ஆங்கிலேயர்கள் பயன்படுத்த துவங்கினர். அதில் முக்கியமானது மதரீதியாக மக்களை பிரித்தாள்வது ஆகும். இதன் ஒரு பகுதியாக கேர்சன் பிரபு வங்காளத்தை பிரிக்க முயன்றது ஆகும். இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்குமிடையில் பகைமையை உருவாக்க இது பயன்பட்டது. தேசிய இயக்கத்தின் தலைமையில் இரு மத்தத்தை சார்ந்த மக்களும் போராடியதால் அந்த ஒற்றுமைக்கு வெற்றி கிடைத்தது.

இந்த தோல்வி ஆங்கிலேயர்கலை இரு பக்கம் உள்ள மதவாத அமைப்புகளுக்கும் தூபம் போட்டு வளர்க்க தேவையை உருவாக்கியது. ஒத்துழையாமை இயக்கமும், காங்கிரஸ் மற்றும் கிலாபத் இயக்கங்களும் சேர்ந்து வளர்த்து வந்த ஒற்றுமையும் ஆவேசமும் சௌரி சௌரா சம்வத்தை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டதால் தேக்க நிலையை அடைந்தது. இந்த நிலையை பயன்படுத்தி ஆங்கிலேயர்கள் இந்துமதவெறியர்களை தூபம் போட்டு வளர்த்தனர். பல்வேறு இடங்களில் வகுப்பு மோதல்கள் வெடித்தது.

இந்து முஸ்லீம் ஒற்றுமை, அகிம்சை, தீண்டமை ஒழிப்பு போன்ற முழுக்கங்கங்கள் வகுப்பு கலவரங்கள் மூலம் பின்னுக்கு தள்ள முயற்சிக்கப்பட்டது. இது ஒரு புறம் எனில் மற்றொரு பக்கம் ஆங்கிலேயர்கள் உருவாக்கிய வேலை வாய்ப்புகளில் வாய்ப்பு பெருவதற்காக வகுப்புவாத தீ பற்றவைக்கப்பட்டது, 

விடுதலை முழக்கத்துடன் இணைக்கப்பட்ட மதம்:

மதம் இந்திய விடுதலைப் போராட்டத்தின் மையப்பகுதிக்கு வர ஒரு முக்கிய காரணமாக இந்திய தேசிய காங்கிரஸ் தலைமை பீடத்தில் அமர்ந்திருந்த பால கங்காதர திலகர், பிபின் சந்திர பால், லாலா லஜபத் ராய் ஆகியோர் முக்கிய காரணமாய் இருந்தனர். பார்ப்பன சிந்தனைகளையும், பிற்போக்குதனங்களையும் இவர்கள் முழுமையாக உளபூர்வமாக நம்பினர். மேற்கண்ட மூவரும் ஆரிய சமாஜம், பிரம்ம சமாஜம் ஆகியவற்றுடன் கொண்டிருந்த நெருக்கத்தின் காரணமாகவும், தங்களுக்கே உரித்தானதொரு தினி சமூக கண்ணோட்டத்தின் காரணமாகவும் மற்றவர்களால் கூர்ந்து கவனிக்கத்தக்கவர்களாக இருந்தனர். 

காங்கிரசிலும் இந்துமகாசபையிலும் ஒரே நேரத்தில் அங்கம் வகித்து செயல்பட லாலா லஜ்பத் ராய்க்கு தடையேதும் இருந்ததில்லை. சிவாஜி பூஜைகளையும், வினாயகர் விழாக்களையும் விடுதலை போராட்டத்தின் ஒரு பகுதியாக சித்தரித்து காட்டுவதில் திலகருக்கு எந்த தயக்கமும் இருந்ததில்லை. ஆனால் 1920களுக்கு பின் காங்கிரசில் பிறந்த காந்தி யுகம் இந்த பாதைகளுக்கு நேர் எதிர் நிலைபாட்டை எடுத்தது. 1932 ஜூலை 13 தேதி  ""யங் இந்தியா""வில் காந்தி ''அரசியலில் திலகரின் கொள்கையைவிட கோகலே அவர்களின் கொள்கையைதான் நான் பெரிதும் ஆதரிப்பேன்"" என எழுதிய பின்னணியில் இதை புரிந்துக்கொள்ளலாம்.

மைய அரங்கிற்கு வர முயன்ற மதவாதம்:

இந்தியாவில் காங்கிரஸ்காரர்கள் - கம்யூனிஸ்டுகள் - சோசலிஸ்டுகள் - முஸ்லீம் லீக் அமைப்பினர் - பல்வேறு புரட்சிகர குழுக்கள் ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து தீரத்துடன் போராடிக்கொண்டிருந்த போது இந்து மாகா சபையும், ஆர்.எஸ்.எஸ் இயக்கமும் ஆங்கிலேயர்களுக்கு சேவை செய்துக்கொண்டிருந்தனர். அதிலும் குறிப்பாக ஆர்.எஸ்.எஸ் தன்னை ஒரு காலாச்சார அமைப்பு என்ற போர்வைக்குள் ஒளித்துக்கொண்டு ஒரு அகண்ட பாரதத்தை அமைக்கும் கனவில் இருந்தது. நானாஜி தேஷ்முக் வெளிபடையாகவே கூறினார் ""தங்களுக்கு அரசியல் ரீதியான கடைமைகளும் இல்லை, இந்து கலாச்சாரத்தை பாதுகாக்கின்ற இந்து ராஷ்டிரத்தை அமைப்பதற்கான கலாச்சார கடமைகள் மட்டுமே இருக்கிறது""

ஆனால் அவர்களின் நோக்கம் வகுப்புக் கலவரங்கள் மூலம் இந்த நாட்டை ஒரு மதவாத நாடாக மாற்றுறுவதாகவே இருந்தது. ஆர்.எஸ்.எஸ் துவங்கிய இரண்டாம் ஆண்டில் (1927) நாக்பூரில் நடந்த முதல் ஷாகா முடிந்த இரண்டாம் வாரத்தில் நன்கு திட்டமிடப்பட்ட வன்முறை கலவரத்தை இஸ்லாமிய மக்களுக்கு எதிராக துவக்கியது. அதன் தொடர்ச்சி விடுதலைக்கு பின்னரும் தொடர்ந்தது. ஜபல்பூர், ராஞ்சி, அலிகர், பீவாண்டி, அகமதாபாத், ஹைதராபாத், பகல்பூர், பதௌன், மீரட், கரீம்கஞ்ச், சயிஸ்ப, நாசிக், பம்பாய், கன்னியாகுமரி, கோவை, தலைச்சேரி என தொடர்கிறது.

1970ல் பிவாண்டி, ஜல்கோன், மகத் ஆகிய இடங்களில் நடந்த வகுப்பு கலவரங்கள் குறித்து விசாரித்த மதன் கமிஷன் கீழ்வருமாறு குறிப்பிடுகிறது. ""வகுப்பு மோதல்கள் திடீரென எதிர்பாராமல் தோன்றுபவை அல்ல. ஒரு குறிபிட்ட கால திட்டமிட்ட செயல்களின் மூலமே அவை வெடிக்கின்றன. வகுப்புவாத வன்முறையைத் தூண்டும் பிரச்சாரங்கள், வகுப்புவாத சாயம் பூசப்படும் சின்னஞ்சிறு மோதல்கள், இட்டுக்கட்டப்பட்ட பொய்கதைகளையும், அவதூறுகளையும் திட்டமிட்டு பிரச்சாரம் செய்தல். இவற்றின் மூலமாக மனித மனங்களில் மாச்சர்யங்களையும், பகைமையையும் விதைத்து அவர்களின் சிந்தனைப் போக்கை வன்செயல்களில் ஈடுபடத் தூண்டுவது இவைதான் கலவரங்களுக்கான செயல் திட்டம்""

இதர சமூதாயங்களின் ஆச்சாரங்களை நையாண்டி செய்தல், குறிப்பக முஸ்லீம்களை தேச துரோகிகள் - பாக்கிஸ்தான் ஏஜெண்டுகள் என பிரச்சாரம் செய்தல், ஓட்டு பெருவதற்காக முஸ்லீம்களை இங்குள்ள அரசியல் கட்சிகள் ஆதரிப்பதாக பிரச்சரம் செய்தல், இந்துக்களின் உரிமைகளையும், வாய்ப்புகளையும் முஸ்லீம்கள் தட்டிப்பரிப்பதாக கூறுதல், பிரிவினையின் போது முஸ்லீம்களால் நடத்தப்பட்டதாக கூறப்படும் கொடூரமான கற்பனை கதைகள், கடந்த கால முஸ்லீம் மன்னர்கள் கோவில்களை தகர்த்தார்கள் என தொடர்ந்து பிரச்சாரம் செய்தல் என சாதாரன மத நம்பிக்கை கொண்ட மக்களிடம் அவர்கள் செய்கின்ற பிரச்சாரம் சமூகத்தில் ஒருவிதமான ஆதரவை அவர்கள் பெற தளம் அமைக்கிறது.    

வினைக்கு எதிர்வினையாக:

இந்து மதவாதிகளில் இந்த திரட்டளுக்கு எதிராக இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளும் தங்களை ஒன்றினைக்க தொடர் முயற்சிகளை மேற்கொண்டன 1906 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட முஸ்லீம் லீக் விடுதலைப் போரில் முக்கிய பங்காற்றியது. ஆனால் 1925 ஆண்டுக்கு பின்னால் அதன் தலைவர்களில் ஒருசிலர் சிந்தனை மாறத்துவங்கியது. காரணம் 1925ல் துவங்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ். இயக்கம் இந்துஸ்தான் என்ற கோஷத்தை முன்வைத்து வகுப்புவாத திரட்டலை மேற்கொள்ளத் துவங்கியதும் அதற்கு எதிர்வினையாக பாகிஸ்தான் என்ற கோஷம் உருவாக துவங்கியது. 

பெரும்பான்மை இந்துக்கள் கொண்ட நாட்டில் சிறுபான்மை இஸ்லாமியர்களுக்கு எவ்வித பாதுகாப்பும் இருக்காது என பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. நாடு முழுவது நடந்த வகுப்புக் கலவரங்கள் இந்த அச்ச உண்ர்வை மேலும் வலுவூட்டியது. இதைதான் ஆங்கில ஆட்சியாளர்களும் எதிர்பார்த்து காத்திருந்தனர். 

இஸ்லாமியர்களுக்கான தனி தேசத்தின் தேவை வலியுறுத்தப்பட்டதை அவர்கள் மறைமுகமாக ஆதரித்தனர். ஏற்கனவே அவர்கள் 1.89 லட்சம் சதுர மைல் பரப்பளவு கொண்ட, 8 கோடி மக்கள் வசித்து வந்த வங்காத்தை 1905ம் ஆண்டு மத அடிப்படையில் பிரித்தத்ற்கு கடுமையான எதிர்ப்பு இருந்தது. இந்த எதிர்ப்பு அடங்கவேண்டுமாயின் இஸ்லமியர்கள் தனிநாடு கோரிக்கை அவர்களுக்கு அவசியமானதாக இருந்தது.

ஆனால் இஸ்லாமியர்களும் இந்துக்களும் இணைந்து அரசியல் ரீதியாக ஒற்றுமையாக தொடர்ந்து போராடியதன் விளைவாக 1911ம் ஆண்டு கிழக்கு வங்கமும் மேற்கு வங்கமும் ஒரே வங்கமாக மீண்டும் இணைந்தன. இந்த ஆங்கிலேயர்களின் தோல்வி அவர்களுக்கு தீரா வடுவாக இருந்தது. எனவே ஒரு பிருமாண்டமான நிலப்பரப்பும், மக்கள் தொகையும் கொண்ட நாட்டை அப்படியே வைத்திருத்தல் நலமல்ல என உண்ர்ந்தனர். அதற்கு இந்திய நாட்டின் ஒற்றுமையான இயல்பை உடைக்க மதத்தை பயன்படுத்தினர்.

இரு மத அடிப்படைவாத சக்திகளும் ஒன்றுக்கொன்று பரஸ்பரம் உதவிகொண்டன, இரு அடிப்படைவாத அமைப்புகளையும் ஆங்கிலேய அரசாங்கம் தூபம் போட்டு வளர்த்தது. அதன் விளைவுகளை தேசம் அறுவடை செய்து 68 ஆண்டுகள் ஆகின்றது. பாக்கிஸ்தான் போல இந்துஸ்தான் படைக்கத்துடிக்கும் அமைப்புகள் மெல்ல மெல்ல தேசமெங்கும் பரவி வருகிறது. அந்த கொள்கையை கொண்ட ஒரு அமைப்பில் நச்சு பாம்பு ஆட்சியதிகாரத்தை கைபற்ற முடிந்திருக்கிறது.

மதம் அதன் இயல்பில் இல்லாதபோது:

இப்போது பிரச்சினை மதம் அல்ல. மதவாதம்தான். காந்தியை விட சிறந்த இந்து மதபற்றாளர் யாரும் இல்லை. ஆனால் அவர் மதத்தை தனக்கான தனிபட்ட பண்பாக வைத்திருந்தார். அதனால்தான் அவரது பிராத்தனை கூட்டங்களில் ஈஸ்வர அல்லா தேரே நாம் என முழுங்க முடிந்தது. அவரது பிராத்தனைகளில் இந்து - இஸ்லாம்- கிருத்துவ மத வாசகங்களை சொல்ல முடிந்தது. ஆனால் மத அடிப்படைவாதம் பிற மதங்களின் மீது துவேஷ்த்தையே அடிப்படையாக கொண்டு இயங்குவது. அதனால்தான் மாற்று மதத்தவர் மீது அவர்களால் அன்பு பாராட்ட முடியவில்லை. கொடூர கொலைகளையும், அரக்கத்தனமான தாக்குதலைகளையும் நடத்த முடிகிறது.

இந்திய விடுதலைப் போரட்டத்தின் தலைமை பொறுப்பில் இருந்த இந்திய முதலாளிகளுக்கு நீண்டகாலம் காங்கிரஸ் பேரியக்கம் தங்களின் வளங்களை பெருக்க சேவை செய்யும் கருவியாக இருந்தது. இந்திய தேசிய முதலாளிகள் இப்போது மாபெரும் சர்வதேச சந்தையில் போட்டியிரும் அளவு பன்னாட்டு பெருமுதாளிகளாக வளர்ச்சி பெற்றுள்ளனர். காங்கிரஸ் மீதான கவர்ச்சி நவீன பொருளாதர கொள்கை அமலாக்கத்தால் உதிரத்துவங்கியதும் அந்த இடத்தில் அதே கொள்கையை அதைவிட அதிகம் நேசிக்கும் ஒரு கட்சியை அமர வைத்துள்ளனர். ஆனால் இப்போது நடந்திருப்பது ஆட்சி மாற்றம் மட்டுமல்ல.

இந்திய அரசியல் கட்டமைப்பை, மக்களின் வாழ்க்கை, மதசார்பற்ற பண்புகளை, மதத்தின் பெயரால் சிதைத்து போடும் ஒரு தத்துவ மாற்றம். இந்து மதவாத அமைப்புகளின், சித்பவன பார்பனர்களின் கனவான இந்து ராஸ்டிரம் அமைப்பதற்கான முயற்சி. அதனால்தான் ஆர்.எஸ்.எஸ் சேவகனான மோடியின் ஆட்சியில் நாள் ஒன்றுக்கு இரண்டு மதக் கலவரங்கள் நடப்பதை பார்த்துக்கொண்டு இருக்கிறோம். சமூக கட்டமைப்பில் மதம் அதன் இயல்பில் இல்லாமல் அரசியல் அரங்கில் நுழைகின்றபோது சமூக இயல்பை நாசப்படுத்தும் என்பதற்கான துவக்கம்தான் இது. இனிதான் அதன் முழு பரிமாணம் இனிதான் சமூகத்தின் பொதுபுத்தியை ஆட்கொள்ள இருக்கிறது.

இந்திய வரலாற்றின் வழிநெடுக மதம் தன் அடையாளத்தை தூவியபடியே வந்துள்ளது. மதம் மதவாதமாக மாறாமல் பாதுகாக்க அதை ஒட்டுமொத்தமாக புரக்கணிக்காமல், அதன் இயல்பை உள்வாங்கி செரிக்கவேண்டி இருக்கிறது, மார்க்ஸ் கூறுவது போல ""ஒடுக்கப்பட்ட மக்களின் ஏக்கப் பெருமூச்சாக, இதயமற்றவர்களின் இதயமாக, துன்பங்களை மறக்கச் செய்யும் (அபின்) போதைபொருளாக"" வினையாற்றும் போது நாம் இன்னும் ஆழமான விவாதங்களை முன்னெடுக்க வேண்டியுள்ளது. விவாதங்களை துவக்குவோம்!   

-- ஆகஸ்ட் இளைஞர் முழக்கம் இதழில் வெளியான எனது கட்டுரை

சனி, 28 பிப்ரவரி, 2015

காதல் ஒரு மதசார்பற்ற செயல்பாடு!




உலகின் எல்லா உயிரினங்களிடமும் நீக்கமற நிறைந்திருக்கிறது காதல். காதல் எல்லா அடக்குமுறைகளையும் கடந்து பயணிக்கிறது. மனிதன் தோன்றிய உடன் தனக்கான இணை தேடும் முயற்சியின் முதல் வெளிப்பாடான காதல், இப்புவியின் கடைசி மனித ஜீவராசி இருக்கும் வரை தொரடத்தான் போகிறது. காதல் மனித குலத்தின் மகத்தான உணர்வு. ப்ரியங்களை விதைத்து வாழ்க்கையை அறுவடை செய்யும் ஒரு மகோன்னதம். காதலர் தினம் என்று கார்ப்ரேட் உலகமயம் அடையாளப் படுத்திய தினத்தில் மட்டுமல்ல. ஒவ்வொரு தினத்திலும் காதலுடன் வாழும் மனிதர்களால் நிறைந்தது இந்த பூமி. எனினும் சமீப காலமாய் காதல் மீதும் காதலர்கள் மீதும் நிகழ்கின்ற பயங்கரங்கள் அதிர்ச்சிகரமாய் இருக்கிறது. சாதி மதம், இனம் இவைகள் சார்ந்த கவுரவம் ஆகியவை ஆங்காங்கே காதல் எதிர்ப்புகளை வன்முறையை நோக்கி அழைத்துச்செல்கின்றன.


காதலர் தினத்தில் கையில் தாலி கயிறுகளுடன் அலையும் மதவெறியர்கள் சகோதர சகோதரிகளைகூட காதலர் தினதன்று வெளியில் நடமாட முடியாமல் தடுகின்றனர். பொதுவெளியில் காதலுடன் செல்லும் இளம் பெண்கள் கடுமையாக தாக்கப்படுகின்றனர். மாதம் ஒரு ஒளிக்காட்சியாவது மின்னணு ஊடகங்களில் வெளிவந்து பதறசெய்கிறது. பூங்காக்களில் புகுந்து சிவசேன, பஜ்ரங்தள், ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சார்ந்தவர்கள் நேரடியாக தாக்குவது மோடி ஆட்சிக்கு வந்த பின் சட்டபூர்வமாக நடக்கிறது. காதலித்த காரணததால் ஊர் பஞ்சாயத்து முன்பு உயிரோடு கொளுத்தப்படுவதும், பெற்றோர்களே விஷம் கொடுத்து குழந்தைகளை கொள்ளும் செய்திகளும் இரத்தத்தை உரைய வைக்கிறது. எங்கிருந்து வருகிறது இந்த வன்மம்? சாதி மத கலப்பு நடந்தால் அது பெண்ணை முதலில் குறிவைப்பது ஏன்? இப்போது இந்திய சூழலில் இவைகளை ஆதரிக்கும் விவாதங்கள் பெருகுவது எப்படி என்பதை கூர்ந்து நோக்க வேண்டியுள்ளது.


இன்றைய காதல் எதிர்ப்பின் வெளிப்பாடு பிரிவினை அரசியல் சார்ந்து அறநெறிகளற்று மிகவும் கீழதரமான மதவாத திரட்டலை முன்வைக்கிறது. காதலால் கசிந்துருகி கண்ணீர் மல்க பல பெண்களை திருமணம் செய்யும் கடவுள்களை முதன்மையாக கொண்ட இந்து மதம் மட்டுமல்ல எல்லா மதங்களும் காதலை எதிக்கத்தான் செய்கின்றன. அதேபோல உலகில் உள்ள எல்லா மதங்களும் பெண்களை இரண்டாம் நிலையிலேயே வைத்துள்ன. பெண்களுக்கான வாழ்கை விதிகளை மிகவும் கவனத்துடனும், கட்டுப்பாட்டுடனும் வகுத்துள்ளன. அவர்களது நன்னடத்தையில்தான் சமூக ஒழுக்கம் கட்டுண்டு கிடப்பதாக போதிக்கின்றன. 


பெண்கள் கற்புநிலை அற்றவர்களாகவும், நிலையான மனம் அற்றவர்களாகவும், நட்புத்தன்மை அற்றவர்களாகவும் இயற்கையாகவே படைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தச் சுபாவம் பெண்களைப் படைக்கின்ற போதே பிரம்மனால் கொடுக்கப்பட்டிருக்கிறது. படுக்கை, ஆசனம், அலங்காரம், காமம், கோபம், பொய், துரோகசிந்தனை போன்றவைகள் பெண்களுக்காகவே படைக்கப்பட்டிருக்கிறது. பெண்களுக்கு என்று மந்திரங்கள் இல்லை. பெண்களுக்கு மனச்சுத்தி கிடையாது. பெண்களின் பாவத்தை போக்குவதற்கான மந்திர உபதேசமும் கிடையாது. பெண்கள் பொய்யைப் போன்று பரிசுத்தம் அற்றவர்கள். (மனுதர்மம், சுலோகம் 15 - 18)


ஆண்கள் பெண்களை நிர்வகிப்போர் ஆவர். இதற்குக் காரணம் அல்லாஹ் அவர்களில் சிலருக்குச் சிலரைவிட உயர்வை அளித்திருக்கிறான் என்பதும், ஆண்கள் தங்களுடைய செல்வத்திலிருந்து செலவு செய்கிறார்கள் என்பதுமாகும்;. எனவே, ஒழுக்கமான பெண்கள் கீழ்படிந்தே நடப்பார்கள். மேலும் ஆண்கள் இல்லாதபோது (அப்பெண்கள்) அல்லாவின் பாதுகாப்பிலும், கண்காணிப்பிலும் இருக்கின்ற காரணத்தால் அவர்களின் உரிமைகளைப் பேணுவார்கள். மேலும் எந்தப் பெண்கள் குறித்து அவர்கள் (தம் கணவர்கள்) மாறு செய்வார்கள் என்று நீங்கள் அஞ்சுகின்றீர்களோ அந்தப் பெண்களுக்கு, நல்லறிவு புகட்டுங்கள் படுக்கைகளிலிருந்தும் அவர்களை ஒதுக்கி வையுங்கள், மேலும் அவர்களை அடியுங்கள். (குர் ஆன் அத் 4.34,35)

இதுதான் மதங்களின் அடிப்படை பார்வையாக உள்ளது.. பெண்களை உடமையாக பார்க்கும் இந்த தத்துவ அடிப்படையில் இயங்கும் மதவாத அமைப்புகள் பெண்களுக்கான கட்டுப்பாடுகளை கடுமையாக்குகின்றன. தாலிபான்கள் புர்க்காவை கட்டாயப்படுத்தினால் இந்திய தாலிபான்கலான ஆர்.எஸ்.எஸ் இந்துக்கலாச்சாரம் என்ற பெயரில் கட்டுப்பாட்டை போதிக்கிறது. காதல் என்ற சொல் மத அடிப்படைவாதிகளுக்கு வேம்பாய் கசக்கிறது. காதல் ஒரு மதச்சார்பற்ற செயலபாடாய் இருப்பதால்தான் அதன்மீது கோபம் வருகிறது. மதம் மாறச்செய்யும் ஒரு கருவியாய் காதலை உருவகம் செய்து பிரச்சாரம் நடக்கிறது..  


இந்து மதவெறியர்கள் சமீபமாக லவ் ஜிஹாத் என்ற வார்த்தையை திட்டமிட்டு பிரச்சாரம் செய்து வருவது மதவாத திரட்டலின் புதிய பரிமாணம் ஆகும். இந்தியாவில் முஸ்லிம்கள் அல்லாத இளம் பெண்களை முஸ்லிம் இளைஞர்கள் காதல் வயப்படுத்தி, திருமணம் செய்து, பின்னர் அவர்களைத் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுத்துகிறார்கள் என்று தேசிய பெண்கள் ஆணையத்தின் தலைவர் லலிதா குமாரமங்கலம் ஊடகங்களில் அறிவிப்பதும், இது ஒரு சர்வதேச சதி என்றும் பாஜக கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்  யோகி அதியநாத் சொல்வதும்,

  உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சில இந்து மத அமைப்புகள், அம்மாநில இந்து மதப் பெண்கள் முஸ்லிம்களை நண்பர்களாக ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று பிரச்சாரம் செய்வதும், இந்து மதத்தைச் சேர்ந்த பெண்கள் அனைவரும் 'லவ் ஜிகாத்' குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்று சிவ சேனை கட்சி கூறுவதும் ஆபத்தான போக்காய் முன்வந்துளளது. .


இந்த 'லவ் ஜிகாத்' பிரச்சாரத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், சிவ சேனை கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் "உலகம் முழுவதிலும் உள்ள இஸ்லாமியத் தீவிரவாதிகள், இந்தியாவுக்கு எதிராக ஜிகாத் நடத்த திட்டமிட்டுள்ளனர். லஷ்கர்-இ-தொய்பா, சிமி, அல்-காய்தா போன்ற தீவிரவாத அமைப்புகள் இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்ற நினைக்கின்றனர். அதன் ஒரு பகுதிதான் 'லவ் ஜிகாத்'. நமது வீட்டு பெண்களை காதல் என்ற பெயரில் முட்டாளாக்கி, பின்னர் பர்கா அணிந்து கொண்டிருக்கும் ஐந்தில் ஒரு பெண்களாக மாற்றிவிடுகின்றனர்" என்று தலையங்கம் எழுதுகிறது.

இந்துமத அடிப்படைவாத ஆட்சியை நிறுவ காவி பரிவாரங்கள் தொடர்ந்து முயற்சியை எடுத்துவருவதும் அதற்கு தடையாக யார்வந்தாலும் பலியிடுவதும் இந்திய வரலாற்றில் ஒன்றும் புதிதாதனல்ல. ஆனால் ஆட்சி அதிகாரத்தை மதவெறியர்கள் முழு பலத்துடன் பெற்றுள்ள இன்றைய சூழல் ஆபத்தை அதிகரிக்கச்செய்கிறது. தினம் தினம் மதவெறியை தூண்டும் பேச்சுக்களையும், செயல்களையும் திட்டமிட்டு பலமுணையில் செய்து பதட்டத்தை தக்கவைத்துக்கொண்டே இருக்கின்றனர். அதன் ஒரு பகுதியாகதான் காதலும் காதலர்களும் காதல்தினமும் கையாளப்படுகிறது. எனவே காதலர் தினத்தத்தை ஊரைக்கூட்டி கொண்டாடுவது மதவெறி எதிப்பு நடவடிக்கயாக வடிவம் பெறுகிறது. சாதிமத பேதங்களை கடந்த ஒரு முற்போக்கு நிகழ்வாகிறது. ஆதலினால்...............


-------------2015 பிப்ரவரி இளைஞர் முழக்கம் இதழில் வெளிவந்தது-------------

சனி, 14 டிசம்பர், 2013

சூப்பர் ஸ்டாருக்கு ஒரு கடிதம்...

பிரியமுள்ள பத்ம பூசன் ரஜினிகாந்த் அவர்களுக்கு வணக்கம்.
Rajinikanthஉங்கள் அபிமான ரசிகனின் கடிதம் இது. இந்த கடிதத்தை தாங்கள் பார்க்க வாய்ப்பில்லை என தெரிந்தும் எழுதுகிறேன். உங்கள் திரைப்படம் வெளியாகும் தினத்தில் வீட்டில் உணவில்லை. எனினும் உங்களுக்கு பாலாபிஷேகம் செய்யும் லட்சக்கணக்கான ரசிகர்களை தாங்கள் எப்படி அறிய முடியாதோ அப்படி இந்த கடிதமும் உங்கள் கண்களில் படாமல் போகலாம். ஆனால் நமக்குள்ளான உறவு 30 ஆண்டுகாலம் என்பதை மறந்துவிடாதீர்கள். அதாவது எனது 10 வயதில் போக்கிரி ராஜா ரிலீஸ் அன்று என் அண்ணனுடன் படத்திற்கு வந்ததிலிருந்து நான் உங்கள் ரசிகன். எனவே இந்த கடிதம் எழுத எனக்கு உரிமை உள்ளதாக நினைக்கிறேன்.
1950 இல் இதே நாளில் பிறந்த நீங்கள் ஐந்து வயதான போது உங்கள் தாயை இழந்தீர்கள். ஆனால் உங்களை இந்த தமிழகம்  தாயாக அணைத்துக் கொண்டது. பெங்களூரில் நடத்துனராக பணியாற்றிய நீங்கள் இன்று இந்தியாவின் உச்சம்  தொட்ட சூப்பர் ஸ்டார்.
1975 இல் எனக்கு மூன்று வயதாகும் போது அபூர்வ ராகம் திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தீர்கள். அதன் பின் மூன்று முடிச்சு, 16 வயதினிலே, காயத்ரி, போன்ற படங்களில் வில்லனாக நடித்தீர்கள். அப்போதும் எங்களை கவர்ந்தீர்கள்.
புவனா ஒரு கேள்விக்குறி, முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரை என ஒரு சிறந்த நடிகனாக அடையாளம் தந்தீர்கள். ஆனால் உங்கள் அடையாளம் பில்லா, போக்கிரி ராஜா என்றுதான் விரிந்து சென்றது. அதன் உச்சம் பாட்சா, அண்ணாமலை, படையப்பா போன்ற படங்கள். இன்று வரை தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, வங்காளம், ஆங்கிலம் என 156 படங்களில் நடித்துள்ளீர்கள். மிகவும் சந்தோஷம்.
உங்கள் பிறந்த நாள் வாழ்த்துச் சொல்ல மட்டுமல்ல இந்த கடிதம். உங்களிடம் கேட்க சில கேள்விகள் இருக்கிறது ரஜினிகாந்த் அவர்களே! தமிழக இளைஞர்களின் சராசரி நிறமும் அழகும் கொண்ட நீங்கள் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்பட அடிப்படைக் காரணம் உங்கள் நடிப்பு மட்டுமல்ல. அதையும் தாண்டிய உங்கள் இயல்பான நடவடிக்கைகள்தான்.
ஆனால் உங்களை சூப்பர் ஸ்டாராக ஏற்றுக் கொண்ட, உங்களுக்கு கோடி கோடியாய் சொத்துக்களை உருவாக்கிய, உங்களுக்காக உயிரையும் விட துணிந்த, உங்கள் பிரமாண்டத்தை பின்பற்றும் லட்சக்கணக்கான ரசிகர்களை பற்றி நீங்கள் எப்போதும் கவலைப்பட்டதாக தெரியவில்லை தலைவா!
தனது ரசிகர் மன்றங்களை நற்பணி மன்றமாய் மாற்றிய கமல்ஹாசனும், தனக்கு ரசிகர் மன்றம் வேண்டாம் என சொன்ன அஜித்குமாரும் உங்களுடந்தான் உலாவுகின்றார்கள் தலைவா!
இதுவரை எங்களுக்கு என எந்த செய்தியும் தாங்கள் சொன்னதில்லை, சொல்லவும் தயாரில்லை என நினைக்கிறேன். ஏனெனில் எதுவும் சொல்லாத வரை தங்கள் அந்தஸ்து குறையாது என்ற அரசியலை தாங்கள் நன்கு உணர்ந்துள்ளீர்கள்.
1990-களில் அரசியல் சாயம் கொண்ட வசனங்களை நீங்கள் பேசத் துவங்கியதும் தமிழக மக்களை பாதுகாக்க இன்னொரு தேவதூதன் வந்ததாய் ஊடகங்கள் உளறிக் கொட்டின. என்ன செய்வது அது இந்த தமிழகத்தின் சாபக்கேடு. இருக்கட்டும்.
அரசியலுக்கு எவரும் வரலாம் என்பதில் நான் நம்பிக்கை கொண்டவன் என்பதால் உங்கள் வசனங்களும் உற்சாகம் தந்தது உண்மைதான். ஆனால்  உங்கள் ரசிகர்கள் எல்லா அரசியல் கட்சியை சார்ந்தவர்கள் என்பதை தாங்கள் அடிக்கடி மறப்பதுதான் விசித்திரமாக இருக்கிறது.
1996 இல் அதிமுக ஆட்சியை எதிர்த்து த.மா.காங்கிரஸ் கட்சிக்கு உங்கள் அண்ணாமலை சைக்கிளை கொடுத்தீர்கள். அப்போது கூட மாற்றம் தேவைப்பட்டது. பொறுத்துக் கொண்டோம். 2004 இல் பா.ஜ.க ஆட்சிக்கு தாங்கள் ஆதரவு தருவதாக வந்த தகவல்களை தாங்கள் மறுக்காததுதான் உங்களை பற்றி என்னைப் போல ரசிகர்களை யோசிக்க வைத்தது.
இப்போது திருச்சிக்கு உங்கள் ரசிகர்களில் சரிபாதியாக உள்ள இஸ்லாமிய மதத்தினரை கொன்றொழித்த  நரேந்திர மோடி வந்தபோது உங்கள் புகைப்படங்களை அவர்கள் பயன்படுத்தினார்கள். அதை தாங்கள் கண்டித்திருக்க வேண்டும் தலைவா.. ஆனால் அதுகுறித்து இதுவரை வழக்கம் போல வாய் திறக்கவில்லை.
எனவே தலைவா உங்களுக்கு ஒரு வேண்டுகோள்: தயவு செய்து இப்போதாவது பேசுங்கள்! நான் மதவெறியனை ஆதரிப்பவன். அல்லது அவனுக்கு எனது ஆதரவு இல்லை. ஏதாவது ஒன்று சொல்லுங்கள். மதவெறியனை ஆதரிக்கவில்லை எனில் எனது புகைப்படங்களை யாரும் மோடிக்கு ஆதரவாகப் பயன்படுத்தக் கூடாது என கட்டளையிடுங்கள்..
நீங்கள் பேசாமல் இருப்பது ஆபத்து என்பதை இப்போதாவது உணருங்கள். அமைதி நல்ல ஆயுதம்தான். ஆனால் அது பயன்படுத்தும் விதத்தில்தான் இருக்கிறது. எல்லாம் முடிந்த பின்பு ஆயுதத்தை பயன்படுத்துவது பயனற்றது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
ஆகவே இந்த பிறந்த நாள் செய்தியாக அபத்தமாக எதையும் சொல்லாமல் வழக்கம் போல அமைதியாக இருப்பதையே உங்கள் பிறந்த நாள் செய்தியாக எங்களுக்கு சொல்லுவீர்கள் என்ற நம்பிக்கையுடன் உங்களுக்கு மீண்டும் பிறந்த நாள் வாழ்த்துக்களை சொல்லி விடை பெறுகிறேன் தலைவா!
தங்கள் அன்புள்ள
ரஜினி ரசிகன்
12.12.13 ரஜினிகாந்த் பிறந்த தினத்தில் மாற்று.காம் இணைய பத்திரிக்கையில் எழுதிய கடிதம்

வெள்ளி, 20 ஜூலை, 2012

இந்துத்துவத்தின் இன்றைய காவு நித்தியானந்தம்..



1978ல் திருவண்ணாமலையில் ஒரு சராசரி குடும்பத்தில் பிறந்த ராஜசேகரன் என்கிற நித்தியானந்தம் அரசு பள்ளியிலும் பின் அருணை பொறியியல் கல்லூரியிலும் படித்தவர். சரியான பிழைப்பு கிடைக்காமல் மயிலாப்பூர் ராமகிருஷ்ணா மடத்தில் இணைந்து பின் இமயமலை சென்று "ஞான அனுபூதி முக்தி"!? அடைந்ததாக அவர் குறித்த செய்திகள் உலா வருகிறது. 

2000 ஆண்டில் தியான பீடம் என்ற அமைப்பை துவக்கி இன்று 800 கிளைகளுடன் 21 நாடுகளில் கோடிக்கணக்கான சொத்துக்களுடன் ஒரு ராஜ்ஜி யத்தை விஸ்தரித்துள்ளார். பெங்களூர், மைசூர் சாலையில் பிடதியில்தான் தியான பீடம், ஆஸ்ரமம் 52 ஏக்கர் பரப்பளவில் குளிரூட்டப்பட்ட அடுக்கு மாடிகளை கொண்டுள்ளது. இதுவே நித்தியானந்தனின் தலைமையிடம். தற்சமயம் காவல்துறையின் கடுமையான கண்காணிப்பிலும் சோதனையிலும்  உள்ளது. 

பல்வேறு நுணுக்கங்களை பயன்படுத்தி பரபரவென தன்னுடைய தொழிலில் முன்னேற்றம் கண்ட ராஜசேகரன் என்கிற நித்தியானந்தம் கையைதூக்கி, தலையைத்தொட்டு, கட்டிப்பிடித்து ஆசி வழங்க பலவிதமான கட்டணங்கள் உள்ளது. பல சாமியார்களிடம் இருக்கும் வழக்கம் போலவே இவரிடமும் கோடீஸ்வர, அதிகாரவர்க்க பக்த வாடிக்கையாளர்கள் நிறைந்துள்ளனர். அவரிடம் சிக்கும் பக்தர்களை மீட்டெடுக்க காவல்துறையில் மனுகொடுக்கும் அளவுக்கு பக்தர்களை வசியம் செய்யும் வித்தைக்காரராய் மாறியுள்ளார். தொழில் போட்டியில் நிலைக்க இவையெல்லாம் அவசியம்தானே!?

குண்டலினி யாகம் இவரது சிறப்பு அம்சம் (ஸ்பெஷல் மசாலா)  அமைதியான நிலையை அடைய வானத்தைப் பார்க்கிறேன்! நிலவைப் பார்க்கிறேன்! நட்சத்திரங்களைப் பார்க்கிறேன் என யாகத்தின் போது பேசிய நித்தியானந்தம் தனது படுக்கை அறையில் இருந்த கேமிராவைப் பார்க்காமல் அகப்பட்டது சோகமான தனிக்கதை. இதெல்லாம் இருக்க தற்சமயம் மீண்டும் ஊடகங்களின் பரபரப்பு செய்திகளுக்கு மையப் புள்ளியாய் மாறியுள்ளார். அதற்குக் காரணம் மிகப்பழமையான மதுரை ஆதீனத்தின் 293வது தலைவராக நித்தியானந்தா நியமிக்கப் பட்டிருக்கிறார். நியிமித்தது அருணகிரி எனப்படும் 292வது நடப்பு ஆதீனம். 

இதுதான் தற்சமயப் பிரச்சனையின் மையப்புள்ளி. திருவாவடுதுறை, தருமபுரம், திருப்பனந்தாள், குன்னக்குடி உள்ளிட்ட பெரும் ஆதீனங்களும், லோக்கல் அளவில் கல்லாக் கட்டும் சிறிய  மடங்களும் ஒன்று கூடித் தங்களது  எதிர்ப்பை ஓரளவு தெரிவித்திருக்கிறார்கள். (ஆதீனம் என்பதற்கும் சிறிய மடங்கள் என்பதற்கும் உள்ள வித்தியாசம் அவர்களது சொத்துப் பட்டியலை வைத்துதான் முடிவு செய்யப்படுகிறது என்பது கிளைக் கதை.)

தற்போது 292வது நடப்பு மதுரை ஆதினமாக இருக்கும் அருணகிரி, முரசொலியில் நிருபராகப் பணியாற்றி பின்னர் சொத்துக்கு ஆசைப்பட்டு எதிர்பாராமல் ஆதீனமானர். இவர் ஆடாத ஆட்டம் இல்லை, இவர் மீதும் பல பாலியல் குற்றச்சாட்டுகள் வந்ததுண்டு. ஆனால் இவர் ஆதீனமான போது இத்தனை எதிர்ப்பில்லை. ஆனால் நித்தியனந்தா மீது ஏன் இத்தனை பிரச்சனைகள்? நித்தியானந்தம் மதுரை ஆதீனத்தின் இளைய சன்னிதானமாக நியமிக்கப்பட்டதில் எழுந்துள்ள மரபு மீறல்கள், சாதி துவேஷங்கள், ஒழுக்கம் சார்ந்த பிரச்சனைகள் உள்ளிட்டவைகள் குறித்து ஊடகங்கள் விவாதித்து வருவது கிரைம் நாவல்களை மிஞ்சும் திருப்பங்களைக் கொண்டதாய் இருக்கிறது! 

  மடங்களின் பின்னணி....

உழைப்பாளி மக்களை ஏமாற்றிப் பிழைக்க வருணாசிரமத்தை  கட்டிக்காக்கும் இந்து மதத்தில் ஆரம்பத்தில் வேள்வி வழிபாடே பிரதானம். உருவ வழிபாடும், கோவில்களும் இந்து மதத்திற்கான பழக்கங்கள் இல்லை. மடங்களும், பள்ளிகளும்  புத்த, சமண மதத்திற்குரியவை. பார்ப்பனியம் நிலைபெறத் துவங்கியவுடன் பரவலான மக்களிடம் சென்றடைந்த இவற்றை திருடிக் கொண்டது. தமிழகத்தில் பிற்கால சோழர்கள் காலத்தில் மன்னர்களின் ஆதரவுடன் இந்துமதம் நிறுவனமயமானது அதன் ஒருபகுதியாக மடங்களும், ஆதீனங்களும் எழுந்தன. ஜோடிக்கப்பட்ட புராண புரட்டுக்கதைகளால் இவர்களது வரலாற்றுக் காலம் ஆயிரம் ஆண்டுகள் பின்தள்ளப்பட்டன. பழமையானவை என கதையளக்கப்பட்டது.

இந்தியாவில் கோயில்களே அரசியல், பொருளாதார மையங்களாய் இருந்து வந்தன. பொக்கிஷங்கள் இருக்குமிடம் கோயில்களே. இன்று கோயில்களுக்குள் பூக்கட்டி வியாபாரம் செய்யும் பண்டாரம் என்ற சமூகப் பிரிவினர் ஒரு காலத்தில் பண்டகசாலையை பாதுகாத்தவர்கள். எல்லா மன்னர்களுமே எதிரி நாட்டுக் கோயில்களின் பண்டகசாலையைக் கொள்ளையடித்து பொக்கிஷங்களைக் கைப்பற்றுவதை செய்துள்ளனர். இந்துமதம் தன்னை விஸ்தரித்த போது கோயில்களின் துணை நிறுவனமாக ஆதீனங்கள் தோன்றியது. ஏராளமான மக்களும், கிராமங்களும், இலவச சமூக உழைப்பும் தானமாக இந்த மடங்களுக்கு கொடுக்கப்பட்டன.  இந்தப் பின்னணியில்தான் ஆதீனங்களின் உறவினர்களும், சாதிக்காரர்களும், மறைமுக வாரிசுகளும், பினாமிகளும் இத்தகைய மக்கள் சொத்துக்களை பல்லாண்டு காலமாக அனுபவித்து வருகின்றனர்.

1930களில் தமிழகத்தில் உள்ள கோயில்களை நீதிக்கட்சி அரசுடைமை ஆக்கியது ஆனால் ஆதீனங்களின் சொத்துக்களில்  யாராளும் கைவைக்க முடியவில்லை. திராவிட இயக்கங்கள் நீண்ட காலம் ஆளும் தமிழகத்தின் நிலை இதுதான். கோடி கோடியாய் அசையா, அசையும் சொத்துக்கள் மீது இயங்கும் ஆதீனங்களின் இருப்பும், பிறப்பும், நிறைய மர்மங்களையும், வன்முறைகளையும் கொண்டிருக்கின்றன. முற்றும் துறந்த சாமியார்கள், மடாதிபதிகளின் வன்முறைகளும் ஆபாச வக்கிரங்களும் பேட்டை ரவுடிகளையும் கொலைகாரர்களையும் மிஞ்சும் வன்மம் கொண்டவை. புட்டபர்த்தியில் நடக்காத கொலைகள் இல்லை. பாலியல் வக்கிரங்களில் சாயி பாபா,  ரஜ்னீஷ் உள்ளிட்டோர் சிக்கினர். சங்கராச்சாரியின் யோக்கியதையை இறந்து போன எழுத்தாளர் அனுராதா ரமணன் விலாவாரியாக எழுதவில்லையா? பாபா ராம் தேவ் செய்யாத வருமான வரி ஏய்ப்பா ஆனால் அவரை பா.ஜ.க பாதுகாக்கிறது, ஆர்.எஸ்.எஸ் ன் ராமஜென்ம பூமி முக்தி மோர்ச்சா தலைவர்கள் நடத்திய ஹவாலா மோசடியா அனைவரும் அறிந்ததுதான். 

ஜெயேந்திரர் என்ற சங்கராச்சாரியும், அமிர்தானந்தா மாயி ஆகியோரும் கொலை வழக்கில் சிக்கவில்லையா? ஆனால் பிரேமானந்தா, நித்தியானந்தம் போன்றவர்களின் தவறுகளை வெளிச்சம் போட்டுக்காட்டும் ஊடகங்கள் மேற்கண்டவர்கள் அயோக்கியத்தனத்தை மூடிமறைப்பது ஏன்? நாம் அனைத்து ஊடகங்களையும், மடங்களையும் குற்றம்சாட்டவில்லை எல்லாவற்றையும் விமர்சனம் செய்யும் ஊடகங்களும், குன்னங்குடி போன்ற நியாயமான மடங்களும் இருக்கத்தான் செய்கின்றன.

சாதி, மரபு மீறல்கள்...?

தி.மு.க ஆதரவு, ஈழ ஆதரவு என்று அரசியல் ஆதரவும் தடாலடி இமேஜும் தற்போதைய சன்னிதானம் அருணகிரி ஆட்டம் போட உதவியிருக்கிறது. அவரைப் போலவே அனைத்து வகையிலும் வளர்ந்துவரும் நித்தியானந்தம் அருணகிரி கண்ணில் பட்டிருக்கலாம் அதனால் தனது வாரிசை சரியாகத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறார்.

சன்னிதானம் தனது வாரிசாக, இளைய சன்னிதானமாக நித்தியானந்தத்தை நியமித்தார் என்றதும் மற்ற ஆதீனங்களால் அதை  அதாவது வெளிப்படையாக எதிர் கலகம் செய்யாமல் "மதுரை ஆதீனம் மரபை மாற்றிவிட்டார்" என்று ஈனக்குரலில் பேசுகின்றனர். நித்தியானந்தா சைவப்பிள்ளை இல்லை, தீட்சை பெறவில்லை, திருமேனியில் 16 இடங்களில் திருநீறு பூசவில்லை, மொட்டையடிக்கவில்லை, தனியாக மடம் வைத்திருக்கிறார் மேலும் பாலியல் குற்றச்சாட்டு உடையவர் என்கிறார்கள்.

சைவ ஆதீன  சன்னிதானங்கள் கண்டு பிடித்த மரபு மீறல்கள் இவைகள்தான் எனில்  எது மரபு என்பதும் எவை மரபு மீறல் என்பதும் விவாதத்திற்குறியதாகும்? சங்கர மடத்திலிருந்து  தனது காதலியுடன் ஓடிப்போன ஜெயேந்திரர் போகும் போது தண்டத்தை கொண்டு செல்லவில்லை. எனவே அவரது சங்கரமட பதவி இதனால் தானாகவே இல்லாமல் போகும் என்றார்கள். இது கடுமையான மரபு மீறல் என்றனர். சில நாட்களுக்கு பிறகு திரும்பி வந்த ஜெயேந்திரர் மீண்டும்  பட்டத்தை பெற்றார். இந்த மரபு மீறல்களெல்லாம் எந்த கணக்கில் வரும்?.

பிறகு சைவ வேளாளர், சைவ முதலியார், சைவ செட்டியார் சாதிகளைச் சேர்ந்தோர்தான் ஆதினமாக வரமுடியும். நித்தியானந்தம் ஆற்காடு முதலியார் என்பதால் சந்நிதானமாகத் தகுதி இல்லை என்கிறது ஒரு தரப்பு வாதம் செய்கிறது. ஆனால் நித்தியானந்தா "சுத்த அக்மார்க்" தொண்டை மண்டல முதலியார்தான், தகுதியுள்ளவர்தான் என்று  மதுரை ஆதீனம் அருணகிரி எதிர்வாதம் செய்கிறார். ஆமாம் நானும் சைவ வேளாளர் பிரிவைச் சேர்ந்தவர்தான் என்று உறவினர்களை பட்டியலிட்டு நித்யானந்தம் "ஐ.எஸ்.ஓ" தரச்சான்று காட்டுகிறார். பறையரும் சன்னிதானமாக மகுடம் சூட்டலாம், சக்கிலியரும் சங்கராச்சாரியாக பட்டமேற்கலாம் என்ற நிலையை நோக்கி போகவேண்டிய காலத்தில் சாதி, மரபு என உழைக்கும் மக்களை இந்த விவாதத்திற்கு வெளியே நிறுத்தி மடாதிபதிகளும், நித்தியானந்தம் போன்ற அயோக்கியர்களும் சண்டையிடுவது யாரை ஏமாற்ற? 

ஒழுக்கம் சார்ந்த விவாதங்கள்..

துறவிகளின் ஒழுக்கத்தை தீர்மானிக்கும் விசயங்கள் குறித்து ஆதீனங்கள் யாரும் வாயைத் திறக்க முடியாமல் தவிப்பது புரிகிறது. நித்தியானந்தாவே மிகவும் நக்கலாக சவால் விடுகிறார். தனது படுக்கையறையை 24 மணிநேரமும் கேமரா கண்காணிப்பிற்குள் வைத்திருக்க முடியும், ஆனால் மற்ற ஆதீனங்கள் இந்த சவாலுக்கு தயாரா? என்கிறார். கையில் ஒரு கோடி, ஆர் யூ ரெடி என அவர் சவால் விடாததுதான் மிச்சம். தனது படுக்கையறை காட்சிகள் ஹவுஸ்புல் காட்சியாக ஓடியதால் முடி தவிர மானம், மரியாதை என எதுவுமில்லாத காரணத்தால் தைரியமாக சவால் விட்டிருக்கலாம்.

 காஞ்சி மடம் இது குறித்து தெரியாமல் வாயை திறந்தது அவ்வுளவுதான், உடனே நடிகை ரஞ்சிதா ஜெயேந்திரர் மீது வழக்கு போட்டிருக்கிறார். இப்போது ரஞ்சிதாவிடம் ஜெகத்குரு சார்பில் பலர் தூது சென்றுகொண்டிருக்கின்றனர். பொதுவாகவே தமிழகத்தின் வரலாற்றை திரும்பிப் பார்த்தால் பல்லாண்டு காலமாய் ஆயிரக்கணக்கான சாமியார்கள் மாட்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள். கோயில் கருவறைக்குள் பெண்ணிடம் சல்லாபம் கொள்ளும் தேவநாதன் துவங்கி, பீடி சாமியார், கோட்டர் சாமியார், மொட்டை சாமியார், சாக்கடை சாமியார் என புதுப்புது டிஸைன்களில் சாமியார்கள் வருகிறார்கள். சாமியார்கள் எத்துணை முறை அம்பலப்பட்டாலும் புதிது புதிதாய் வந்துகொண்டே இருக்கிறார்கள். வாழ்க்கை நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் மக்கள் எதைத் தின்றால் பித்தம் தெளியுமென வருகின்ற புதிய சாமியாரை நம்பி மோசம் போகின்றனர்.

சென்னை மடிப்பாக்கத்தில் ஆசிரமம் நடத்திவந்த சுருட்டு சாமியார் என்கிற பழனிசாமி  பெண்களை ஏமாற்றி திருமணம் செய்ததால் கைது செய்யப்பட்டது நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. அப்போது சென்னைக்குள் 50 க்கும் மேற்பட்ட குறிசொல்லும் சாமியார்கள் இருப்பதாகவும் இவர்களது நடவடிக்கைகளை காவல் துறையினர் ரகசியமாக கவனிப்பதாகவும் சொல்லப்பட்டது.  அதன் பிறகு இது குறித்து எந்த செய்தியும் இல்லை. இன்னும் காவல்துறை ரகசியமாய் என்ன செய்கிறது என தெரியவில்லை. ஒழுக்கக்கேடான சாமியார்களுக்கு ஒரே மாதிரியான தண்டனையும், ஊடக விமர்சனங்களும் இருப்பதில்லை. தற்போது நடப்பதையே எடுத்துக்கொள்ளலாம் நித்தியானந்தத்தின் ஒழுக்கம் குறித்து பேசும் தமிழக அறிவு ஜீவிகளும் ஊடகங்களும் ஜெயேந்திரரின் ஒழுக்கம் குறித்து பேசாமல் கள்ள மவுனம் சாதிப்பதற்கு பின் எந்தவிதமான அரசியலும் இல்லை என்பதை நம்ப இயலுமா? சாதி, மதம், இனம், நபர் குறித்து மாறும் அளவுகோளுள்ள ஒழுக்கம் குறித்து விவாதிக்காமல் இருக்க முடியுமா?

இந்துத்துவம் என்பது பார்ப்பனியத்தின் அடிப்படையை காக்க கட்டமைக்கப்பட்டது. இந்துத்துவத்தின் வலிமை இன்றும் குறையாமல் இருப்பதற்கு நல்ல உதாரணம் சைவ ஆதீனங்கள் அனைத்தும் இதன் அடிப்படையை பாதுகாப்பதுதான்.  அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவதை எதிர்க்கும், கருவறையில் தமிழ் மொழி கூடாது என்றுரைக்கும் பார்ப்பன சிவாச்சாரியர்களுக்கு இவர்கள்தான் ஆதரவு கொடுத்தனர். இம்மடங்களின் கோயில்களில் உள்ள புரோகிதர்கள் யார் என்பதைப் பார்த்தால் உண்மை தெரியும். குன்னக்குடி போன்ற ஒரிரு விதிவிலக்குகளைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால் இந்துத்துவத்தின் அடிப்படையை அனைத்து ஆதீனங்களும் தாங்கிப்பிடிக்கின்றன. ஆனால்  இங்கும் கூட சைவ வேளாளர் சாதிகளைச் சேர்ந்தோர் மட்டும்தான் தம்பிரான்களாகவும், ஆதீனமாகவும் வர முடியும். தற்போது நித்தியானந்தா விவகாரத்தில் மரபு என்ற பெயரில் இதைத்தான் எழுப்புகிறார்கள். ஆயிரத்து எட்டு சாதிகளை தன்னுள் வைத்து தன்னை இன்னும் உயிரோடு வைத்திருக்க இந்து மதம் வரலாற்றில் செய்த சாகசங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல.

சமூக அவலங்களை கேள்வி கேட்ட சமண புத்த மதங்கள் இரத்தத்தால் அழிக்கப்பட்டது. இதில் ஆதீனங்களுக்கும் மிகமுக்கிய இடமுண்டு. சமணத் துறவிகளை கழுவிலேற்றிக் கொன்ற திருஞான சம்பந்தர்தான் மதுரை ஆதீனத்தின் நிறுவனர் என்பது ஒரு வரலாற்று செய்தி மட்டுமல்ல! புத்த, சமண, சாருவாகன, சித்தர்களின் சிந்தனைகள் இந்துத்துவத்தின் எதிர் மரபாய் இருந்தது, இந்துத்துவத்தின் அடிப்படை மீது கேள்விகளை எழுப்பினார்கள். அதனால்தான் மன்னர்களின் ஆயுத பலத்தால் ஒழிக்கப்பட்டார்கள். அவர்களது இலக்கியங்களும் அழிக்கப்பட்டன

இந்துத்துவம் மாற்று சிந்தனையை மட்டுமல்ல தன் இருப்புக்கு தேவையெனில் தன்னிடம் உள்ள சில உறுப்புகளையும் இழக்க எப்போதும் தயாராகவே இருக்கும். இந்துத்துவத்திற்கு பீடி சாமியாரும் வேண்டும் கோடி சாமியாரும் வேண்டும், மடங்களும் வேண்டும் கிராமக் கோயில்களும் வேண்டும், சங்கர மடமும் வேண்டும் தியான பீடமும் வேண்டும். பிரச்சனை எனில் கண்டிப்பாக சங்கரமடத்தின் பக்கமே உறுதியாய் நிற்கும் என்பதற்கு ஆயிரம் சாட்சிகள் உண்டு. இப்போதைய சாட்சி நித்தியானந்தம். ஏனெனில் இந்துத்துவத்தின் அடிப்படை பிராமணியத்தின் மீது எழுந்து நிற்கிறது. தனது அஸ்திரவாரத்தை பாதுகாப்பது அதன் கடமை.

-------------------ஜூலை 2012 - இளைஞர்முழக்கத்தில் எழுதியது--------------

செவ்வாய், 24 ஜனவரி, 2012

சல்மான் ருஷ்டி: எழுத்தாளரை விரட்டும் தேசம்!



ஜூன் 19, 1947  இந்தியாவில் பிறந்த பிரித்தானிய எழுத்தாளர் சர் அகமத் சல்மான் ருஷ்டி. இவரின் 1981இல் வெளிவந்த இரண்டாம் புதினம் "மிட்னைட்ஸ் சில்ட்ரென்" காரணமாக பெரும் புகழ் அடைந்தார். இந்த நாவல் புக்கர் பரிசு வென்றது. இவரது நாவல் இந்திய தீபகற்பம்|இந்தியச் சூழலில் எழுதப்பட்டவைகளாகும்.. இவரது இலக்கிய வகை மாய யதார்த்தவாதம் என்ற தன்மையிலானது. கிழக்கு மற்றும் மேற்கு உலகங்களிடையே உள்ள தொடர்புகள். தாக்கங்கள் மற்றும் குடிப்பெயர்வுகளை அதுசார்ந்த பிரச்சனைகளை அடிப்படையாக கொண்டு எழுதுபவர்.

1988இல் இவரின் நான்காம் நாவலான த சாத்தானிக் வெர்சஸ் வெளிவந்தது. இந்த நாவல் இஸ்லாமிட அடிப்படை வாதத்தை கேள்வி எழுப்பிய காரணத்தால் உலகில் பல முஸ்லிம் அமைப்புகள் ருஷ்டிக்கு எதிராக போராட்டம் செய்தனர். அப்போதைய ஈரானின் தலைவர் அயத்தொல்லா கொமெனி ருஷ்டியை கொலை செய்யவேண்டும் என்று பெப்ரவரி 14, 1989 அன்று ஒரு ஃபத்வா வெளியிட்டுள்ளார். இதனால் ருஷ்டிக்கு பிரித்தானிய காவல்துறை பாதுகாப்பு கொடுத்துள்ளது. ஜப்பானில் இப்புதினத்தை மொழிபெயர்ப்பு செய்தவர் 1991இல் கொல்லப்பட்டார்.

2007ஆம் ஆண்டில் பிரித்தானிய அரசி இவரது இலக்கியச் சேவைக்காக "நைட் பேச்சிலர்" என்ற சர் பட்டம் வழங்கியது. பிரான்சின் கலை மற்றும் எழுத்திற்கான கௌரவ அமைப்பில் இவருக்கு கமாண்டர் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 2007இல் அட்லான்டா, ஜோர்ஜியாவின் எமரி பல்கலைக்கழகத்தில் சிறந்த எழுத்தாளர் என்ற ஐந்தாண்டு பதவியில் அமர்ந்தார். 2008இல் அமெரிக்க கலை மற்றும் எழுத்து அகாடெமியில் தேர்ந்தெடுக்கப்பட்டார். டைம்சு இதழ் 1945க்குப் பிறகான 50 மிகச்சிறந்த பிரித்தானிய எழுத்தாளர்களில் இவரை பதின்மூன்றாவது இடத்தில் மதிப்பிட்டுள்ளது.

இவரது அண்மைய புதினம் லூக்கா அண்ட் ஃபயர் ஆஃப் லைஃப் நவம்பர் 2010இல் வெளியாகியுள்ளது. தனது நினைவுக்குறிப்புகளை எழுதப்போவதாக அறிவித்துள்ளார். தற்போது ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடக்கும் இலக்கிய விழாவில் எழுத்தாளர் சல்மான் ருஷ்டி வீடியோ கான்பரன்சிக் மூலமாக பேசும் நிகழ்ச்சிக்கு ஏராளமான எதிர்ப்புகள் கிளம்பியதால், அது ரத்து செய்யப்பட்டு விட்டது. ராஜஸ்தான் அரசும், முஸ்லிம் மக்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர். இன்று 24.01.12 காலை முதலே இலக்கிய விழா நடைபெறும் அரங்கிற்கு முன்பாக பல்வேறு அமைப்புகள் சார்பில் தொடர்ந்து எதிர்ப்புப் போராட்டங்கள் நடைபெற்றதால், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படக் கூடாது என்பதால் நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் சல்மான் ருஷ்டி நிகழ்ச்சியை ரத்து செய்வதாக அறிவித்துள்ளனர்.

"ஜெய்ப்பூரில் நடக்கும் இலக்கிய விழாவில் தான் கலந்துகொள்வதைத் தடுத்துடன், வீடியோ கான்பரன்ஸிங் மூலம் பேசுவதற்கும் அனுமதிக்காமல் இருந்ததற்காக இந்தியாவில் பேச்சு சுதந்திரம் பறிபோய்விட்டது" என குற்றச்சாட்டைக் கூறியுள்ளார் சல்மான் ருஷ்டி.

"ஜெய்ப்பூர் போலீஸார் இந்த விவகாரத்தில் இரட்டை வேடம் போடுவதாகவும், தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகவும், தான் கலந்து கொண்டால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதை உத்தேசித்து பெரும் பிரச்னைகள் ஏற்படலாம் என்று எச்சரிக்கப்பட்டதாகவும் போலீஸார் கூறினர். அதனால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் வற்புறுத்தலால் பயணத்தை ரத்து செய்துவிட்டு, வீடியோ கான்பரன்ஸிங் மூலம் பேசுவதற்கு எண்ணினேன். ஆனால், குறிப்பிட்ட ஒரு சிலருக்காக போலீஸார் அதையும் அனுமதிக்க மறுத்துவிட்டனர். இந்தியா எங்கு போய்க்கொண்டிருக்கிறது என்று தெரியவில்லை." என அவர் கூறியது ஜனநாயகம் குறித்து பேசுவோர் யோசிக்க வேண்டிய விஷயமாகும்.

எதிர் கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்ள முடியாத இலாமிய அடிப்படை வாதிகள் இந்து அடிப்படைவாதிகளுக்கு கொஞ்சமும் சலைத்தவர்கள் அல்ல என்பது மீண்டும் நிருபனமாகியுள்ளது. எந்த மதம் சார்ந்து வந்தாலும் அடிப்படைவாதமும், பயங்கரவாதமும் எதிர்க்கக்கூடியதாக இருந்தால்தான் ஒரு நாடு தன்னை ஜனநாயக நாடு என பறைசாற்ற முடியும். இந்தியா ஜனநாயகம் பேசும் நாடு என நம்பப்பட்டாலும் கயர்லாஞ்சி துவங்கி பரமகுடிவரை தலித் மக்களுக்கு எதிரான வன்முறைகளிலும், தஸ்லிமா நஸ்ரின், சல்மான் ருஷ்டி போன்ற எழுத்தாளர்கள் சம்பவங்களிலும் அப்பட்டமாய் ஜனநாயா முகம் கிழிந்து நிற்பது அருவருப்பாய்தான் இருக்கிறது. எழுத்தாளனை விரட்டும் தேசம் யாரை வாழவைக்கும்?  

செவ்வாய், 20 டிசம்பர், 2011

சனிப்பெயர்ச்சி ராசி பலன்கள் (அல்லது) Why This கொலவெறி பார்ட் - 2


கடந்த பல தினங்களாக அனைத்து ஊடகங்களும் சனிப்பெயர்ச்சியை பற்றி பக்கம் பக்கமாக அடித்து துவைத்துக்கொண்டு இருக்கிறார்கள். திருநள்ளாருக்கு சிறப்பு பேருந்துகளை அம்மையார் அரசு முடுக்கி விட்டுள்ளது. கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு சனி மாறுவதால் ஏற்படும் நன்மைதீமைகள் பற்றி தொலைக்காட்சிகளில் பல அக்கப்போர்களின் தொல்லை தாங்க முடியவில்லை. நமது பங்குக்கு நாமும் ஏதாவது செய்ய வேண்டாமா? 

சனியின் நன்மை தீமைகள் குறித்து குத்துமதிப்பாக ஜோதிட வள்ளுனர்கள் எழுதியதை கேள்விகேட்டாள் என்னவாகும்? அவர்களுக்கு நம்மீது கொலவெறி உண்டாகுமா இல்லையா? இவிங்க அக்கிரும்பு ஜோதிடத்தை கேள்வி கேட்டது மட்டுமே நாம்.

துலாம் ராசிக்காரர்களே! 

இதுகாறும், குடும்பத்திற்காகவும், தன்னை அண்டியிருக்கும் பெற்றோர், சகோதர சகோதரிகளுக்காகவும், மாமன், சொந்த அத்தை அத்தை, எதிர்த்த வீட்டு ஆண்டி, பக்கத்து வீட்டு பாட்டி. தாத்தா, அம்மம்மா, பெரியம்மா, இவர்களுக்காகவும் ஏதோ ஒரு வகையில் விரயம் செய்து, கடன் காட்சி என்று அவஸ்தையுற்றிருந்தால், இவற்றுக்கு ஒரு விமோசன காலம் பிறந்துவிட்டது. 

*நீங்கள் வெளிநாடு போகப்போறீங்களாண்ணா?

சனி பகவான் ஜென்ம சனியாகச் சஞ்சரிக்கும்போது உங்களுடைய உடம்பைத்தான் அதிகமாக பாதிப்படையச் செய்வார். (அதனால?)

1. உங்கள் உடம்பின் நிறம் மங்கும்

* கருப்பா இருக்கறவா கண்டுகாதீங்கோ. 

2. ஆரோக்கியம் வெகுவாக பாதிக்கப்படும்

* ஏற்கனவே சீக்காளியா இருந்தா அபீட்டு! 

3. உடம்பில் ஒரு சோம்பேறித்தனம் குடிகொள்வதால் வேலை நடக்காது.

* எப்பவுமே நாம இப்பிடிதானுங்க! 

4. எந்த வேலையையும் எடுத்தோம் முடித்தோம் என்று முடிக்கமாட்டீர்கள் 

* அப்புறம் வேற வேலை வேண்டாமா?  

5. உங்களை ஒப்பனை செய்துகொள்வதைக்கூட வெறுப்பாக உணர்வீர்கள் 



*என்னா மேக்கப் பன்னாலும் ம்ஹ¨ம் நம்ப மூஞ்சி தேறாது! 

6. ஜென்ம சனி என்பது திரேக பாதிப்புகளை ஏற்படுத்தத் தயங்காது. முறையான வைத்தியம் செய்துகொள்வதின் மூலம், ஆரோக்கியத்தைப் பெற முடியும்

* வைத்தியம் பார்த்தா சரியா பூடும்னு எங்களுக்கு தெரியாதாடா டுபுக்கு? 

7. இக்காலக்கட்டம் அறுவை சிகிச்சைக்கான அவசியத்தைக்கூட  ஏற்படுத்தலாம் ஏற்படுத்தாமலும் போகலாம். 

*கரக்கிட்டா சொல்லிட்டா அப்புறம் என்ன ஜோசியம்? 

8. ஆனாலும் நிவாரணம் கிடைக்கும். சனீஸ்வரருக்குரிய ஆயுஷ் ஹோமம், ஷேத்ராடனம் முதலியவை பெரிய பாதிப்புகள் ஏற்படாவண்ணம் உங்களைக் காப்பாற்றும். சனியால் நோய் வாட்டமும், மனவேதனையும் ஏற்படும், என்றாலும் உரிய பரிகாரங்களை மேற்கொண்டால், நன்மை கிடைக்கலாம்.

*அதுசரி மத்த ராசிகாரவங்களுக்கு இதெல்லாம் நடகாதாடா அப்பாடக்கருங்களா?

9. பொதுவாக சூழ்நிலைகள் உங்களுக்கு அநேகமாக சாதகமாக இருக்காது. *எலேய் இத சொல்றத்துக்கு எதுக்குடா நீங்க

10. பணவரவு சீராக இருக்கும்

*அப்பா... டேய்...  நீ சொன்னதுல இதுதான் கொஞ்சம் உருப்படியானதுடா?

இனி சனி பகவானின் பார்வை பலன்களைப் பற்றி பார்க்கலாம்.

 (மக்களே இனிவருவது பலன்களாம்!  படிங்கோ)

 சனி பகவான் தனது பார்வைகளான அ3,7,10-ம் இடத்து பார்வைகளின் மூலம் உங்களது தைரிய-பராக்கிரம-ஜெய ஸ்தானம், களத்திரஸ்தானம்;  ஜீவன காரியஸ்தானம் ஆகிய இடங்களைப் பார்வையிடுகிறார். இதனால் மனைவி/கணவனின் ஆரோக்கியம் அடிக்கடி பாதிக்கப்படும். கணவன்-மனைவிக்கிடையே கருத்துவேற்றுமை தலை தூக்கும். அடிக்கடி வாக்குவாதங்கள் சண்டை சச்சரவுகள் என்று இருந்துகொண்டே இருக்கும்.  கணவன்- மனைவிக்கிடையே ஒரு மகிழ்ச்சியான சூழலைப் பார்க்க முடியாது.

 *இந்த பலன்கள் போதுமா இன்னும் கொஞ்சம் வேண்டுமா?

சனி பகவான் தன்னுடைய பத்தாம் பார்வையினால் உங்களுடைய ஜீவன -காரிய ஸ்தானத்தைப் பார்ப்பதன்மூலம் வேலை தேடுபவர்களுக்கு எளிதில் வேலை கிட்டாது. ஏதாவதொரு காரணத்தால் தள்ளிக்கொண்டே போகும். ஏற்கெனவே வேலையில் இருப்பவர்களுக்கு ஏதாவதொரு காரணத்தால், மேலதிகாரிகளிடமிருந்து மெமோ வரும். வேலை நீக்கம் செய்யப்படுதல், விருப்பமில்லாத பணியிட மாற்றம்  தற்காலிக -பணிநீக்கம் முதலியவை ஏற்படும். புதிதாக தொழில் ஏதாவது தொடங்கலாம் என்றாலும் அதற்கான சமய சந்தர்ப்பங்கள் சரியாக அமையாமல், முகாந்திர வேலைகளிலேயே நஷ்டத்தை ஏற்படுத்திவிடும். 

ஆக ஒன்னும் உருப்படாது என முடிக்கலாம்? 

அது சரி ஜோசிய சிகாமணிகளே! இந்த பால் விலையேற்றம், பஸ் கட்டண உயர்வு, 15 ஆயிரம் மக்கள் நலப் பணியாளர்கள் டிஸ்மிஸ், அண்ணா நூலக இடமாற்றம், பரமகுடி துப்பாக்கிச்சூடு, முல்லைபெரியாறு, கூடங்குளம் போன்ற பாதிப்புகள் எந்த ராசிகாரர்களை பாதிக்காது என சொல்லுவீர்களா? சனியாவது வந்துதான் பிடிக்கும்.. நாம போயி பிடிச்ச சனிக்கு என்ன பரிகாரம்??    

செவ்வாய், 7 ஜூன், 2011

அப்பாடக்கர் அவார்ட் - பாருங்கள் - சிரியுங்கள் - யோசியுங்கள் (முடிந்தால்)

ஏகாந்த அலைகளில் அல்லாடும் இளைஞர்களின் எல்லையில்லா புகழ்பாடும் நித்திய ஆனந்தத்தின் அதிபர் நித்தியானந்தாவுக்கு  கொடுக்கும் பட்டம்    


இந்தியாவில் பிரச்சனைகளை தீர்ப்பது போலவே பேசி அந்த பிரச்சனைகள் பக்கம் தலைவைத்தும்  படுக்காத வருங்கால டுபாக்கூர் பிரதமர் ராகுல் காந்திக்கு கொடுக்கும் பட்டம்  


ஸ்பெக்ட்ரம் புகழ் ராசாவுக்கு என்ன பட்டம் தந்தாலும் தகும் இருப்பினும் நமது பட்டம் இதுவே....... எனினும் அய்யா கலைஞரின் அன்பையும் சேர்த்து  தருவோம்  


ராசாவுக்கு பட்டம் கொடுத்தது யார் ? சாதாரண குடும்பமா? அல்லது சாதாரண அரசா இல்லை இல்லை .. இது தமிழகத்தின் முக்கிய பட்டம் பெரும் 



இந்த வம்சம் தவறாக விளம்பரம் செய்தாலும், இறுதியில் வென்ற நமது வருங்கால .......
கேப்டன் வாங்கும் பட்டம் 


எனவே அறிமுகம் தேவைப்பாடாத இன்னும் சில பட்டங்கள் வருகிறது . பாருங்கள் .............


































 இதை எல்லாம் துக்கி சாப்பிடும் இரண்டு அப்பாட்டக்கர் அதாவது டுபாகூர்களின் படத்தை பாருங்கள் இவர்களுக்கு என்ன பட்டம் தரலாம் என பின்னுட்டம் அனுப்புங்கள் .. இந்த இருவர் வேறு யார் .......... இன்றைய இந்தியாவின் ரியல் பிலிம் ஸ்டார்கள் அண்ணா ஹசாரே மற்றும் பாபா ராம்தேவ்தான் ..