History of China லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
History of China லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 1 டிசம்பர், 2024

சீன விவசாயத்தின் தந்தை: ஷென்‌ நுங்‌ (அ) ஷென்னாங் (神農)

 

மக்கள் சீன புரட்சி அறிமுகம் - 7 

ஷென்‌ நுங்‌ (அ) ஷென்னாங்

 பான்‌ கூ, பூமியையும்‌ அதில்‌ மனிதர்களையும்‌ படைத்துப்‌ பல ஆண்டுகளான கதையைக் கடந்த வாராம் பார்த்தோம்... அதை தொடர்ந்து மிருகங்களை‌ போலவே மனிதர்களும்‌ நீண்ட காலம் வாழ்ந்து வந்தார்கள்‌. இவர்‌களை நாகரிகப்படுத்துவதற்கு, தெய்வ அம்‌சம் பொருந்திய மன்னர்கள்‌ ஒருவருக்கு பின் ஒருவராகத்‌ தோன்றினார்கள்‌ என்றும், அவர்கள் ஒவ்வொருவரும்‌ பதினெட்டாயிரம்‌ வருடங்கள் ஆண்டார்கள் எனவும் சீனர்களின் புராண கதைகள் தொடர்ந்தது. ஆனால் அதில் உள்ள மன்னர்களைச் சந்திப்பதும் சுவராசியம்தான். அதிலிருந்து பல பெயர்களில் துவக்கமாக்கும் வம்சங்கக்களில் விபரங்களை பார்க்கலாம்.

 சூயி சென் என்ற ஒரு மன்னன்‌ முதல் கதைகள் தொடர்கிறது. இவன்‌தான்‌ நெருப்பைக்‌ கண்டுபிடித்துக்‌ கொடுத்தாக தகவல் உண்டு. இவன்‌ காலத்திலிருந்துதான்‌ மக்கள் உணவுப்‌ பொருள்களை நெருப்பில்‌ வேக வைத்துச்‌ சாப்பிடத்‌ தெரிந்து கொண்டார்கள்‌. இந்த சூயி சென்னுக்குப்‌ பிறகு பூ ஸி என்பவன் அரியணை ஏறினான்

இவன்‌ கி.மு 2852-ஆம்‌ வருஷம்‌ முதல்‌ 2787-ஆம்‌ வருஷம்‌ வரையில்‌ ஆண்டதாக தகவல் உண்டு. இவனது ஆட்சிக் காலத்தில்‌தான், வலைகள்‌ வீசி மீன்கள்‌ பிடிக்கவும்‌, சில மிருகங்களை” வீட்டில்‌ வைத்துப்‌ பழக்கவும்‌, சங்கீதம்‌ பயிலவும்‌, எழுத்துக்களை எழுதவும்‌, ஆணும்‌ பெண்‌ திருமணம் செய்து கொண்டு வாழும் முறையையும் ற்றுக்கொண்டதாக கதைகள் உள்ளன.

பூ ஸிக்குப்‌ பிறகு ஷென்‌ நுங்‌ () ஷென்னாங் (神農). இதற்கு "தெய்வீக விவசாயி'’ அல்லது "தெய்வீக புருஷர்" என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இவர் பிறந்த ஜியாங் ஷினியன், சீனா மற்றும் வியட்நாமிய நாட்டுப்புற மதத்தில் தெய்வமாக மாறிய முதல் யான் பேரரசர் இவர். சீனாவிலும் வியட்நாமிலும் கலாச்சார நாயகனாகப் போற்றப்படுகிறார். வியட்நாமில், அவர் Thần Nông என்று குறிப்பிடப்படுகிறார். வரது ஆட்சிக் காலம்‌ கி.மு 2787 முதல்‌ 2697-ஆம்‌ வருஷம்‌ வரை, இவர் காலத்தில்தான்‌ விவசாயம்‌ செய்யும் முறை பெருகியது என்பர். நோய்களை குணப்படுத்தக்‌ கூடிய மூலிகைகளை உபயோகத்திற்குக்கா‌ கொண்டு வரப்பட்டன. வைத்தியத்‌ தொழிலின்‌ தந்தை எனச் சீனர்கள்‌ இவரை இப்போதும் கொண்டாடுகின்றனர்.

 இப்பொழுதும் கூட, சீனாவிலுள்ள மருந்துக்கடைகள்‌ பலவற்றிலும்‌ இவன்‌ உருவம்‌ வைக்கப்பட்டுள்ளது. இவருக்கென்று கோவில்கள் உள்ளன. சீன மருத்துவத்திற்கு மட்டுமல்ல சீன விவசாயத்தின் தந்தை என்றும் இவர் அழைக்கப்பட்டார். உழவடை கருவிகள் பலதும் கண்டறிந்தார். இவர் குறித்த ஓவியம் இவர் கலப்பையுடன் இருப்பது போலச் சித்தரிக்கப்பட்டிருக்கும். அதுமட்டுமல்ல, குத்தூசி மருத்துவம் என்று அழைக்கப்படும் பழைமையான அக்குபஞ்சர் முறையை இவர்தான் உருவாக்கினார் என நம்பப்படுகிறது. அக்குபஞ்சர் மருத்துவ முறைக்கு ஆயிரம் ஆண்டு வரலாறு இருப்பதால் இது இவருடன் இணைக்கப்பட்டிருக்கலாம்

 சீன நாகரிகத்தின்‌ பிதாமகன்‌: ஹுவாங்‌டி  

 ஹுவாங்‌டி
 

ஷென்‌ நுங்‌குக்குப்‌ பிறகு ஹுவாங்‌டி தனது பதினாறாவது வயதில்‌ அரச பதவியேற்றார். சில கதைகள் இவர் 7 வயதில் பதவியேற்றதாகச் சொல்கின்றன. பண்டைய சீனாவின் புராணப் பேரரசர்களில் மூன்றாவதும், மற்றும் தாவோயிசத்தின் புரவலர் என்றும் அறியப்படுகிறார். கி. மு. 2697 முதல்‌ 2597-ஆம்‌ ஆண்டு வரை நூறு வருடகாலம்‌ திறம்பட ஆட்சி நடத்தியதாக தகவல் உண்டு. இவருக்கு “மஞ்சள்‌ சக்ரவர்த்தி! என்ற ஒரு பெயருண்டு. மஞ்சள்‌ நதி பிரதேசத்தில்‌ இவரது ஆட்சி டைபெற்று வந்ததும் அதற்கு காரணம். சீன நாகரிகத்தின்‌ பிதாமகன்‌ எனவும் அழைக்கப்படுகிறார்.

 தனது நாட்டை மாகாணங்களாகப் பிரித்து ஒவ்வொரு மாகாணத்திற்கும்‌ ஒவ்வோர்‌ அதிகாரியை நியமித்து, கடைசியில்‌ எல்லா மாகாணங்களையும்‌ ஒரு மத்திய அரசாங்கத்தின்‌ நிர்வாகத்திற்கு கொண்டு வந்தார். ஒழுங்‌கான அரசாங்க அமைப்பு இவர் காலத்திலேயே ஏற்பட்டது. நிலங்களை அளவை செய்வது. கோயில்கள்‌, அரண்‌மனைகள்‌ கட்டும் பணிகளையும் செய்தார். வண்டியும்‌ படகும்‌, வில்லும்‌ அம்பும்‌, மரப்பாத்திரமும்‌ மட்பாண்டமும்‌ இவர் ஆட்சியில் புழக்கத்தில்‌ வந்தது. நாட்களை குறிக்கும் நாட்காட்டி‌, நாணயச்‌ செலாவணி, அலங்காரமான உடைகள், திசை காட்டும் கருவி என வராது ஆட்சியில் பலது உருவாக்கப்பட்டது.

 தனது ஆட்சிக் காலத்தில் வரலாற்று ஆசிரியர்களை நியமித்து காலவரிசைப்படி வரலாறு எழுதும் முறையை உருவாக்கினார். வரலாறு எழுத ஆசிரியர்களை அரசவையில் முழு நேரமாக நியமித்த முதல் அரசர் இவர்தான். இந்த ஏற்பாட்டைப்‌ பிற்காலத்து அரசர்கள்‌ முறையாக‌ பின்பற்றினார்கள்‌. இதன் பின்னர்தான் ஒழுங்கான வரலாற்று நூல்கள் பல  வெளிவரலாயின

 பட்டு துணி குறித்த புனைவு:

பட்டு உற்பத்தியின் தோற்றம் பற்றி பல கட்டுக்கதைகள் மற்றும் புனைவுகள் உள்ளன. கன்பூசியஸ் மற்றும் பிற சீனமரபு கதையென இரண்டு எழுத்துக்களும் பேரரசி லீசுவைப் பற்றிய ஒரு கதையைக் கூறுகின்றன. இவர்தான் ஹுவாங்‌டி மன்னனின் பட்டத்து அரசி. ஒரு நாள், ஒரு பட்டுப் புழுவின் பட்டுக்கூடு அவளது தேநீர் கோப்பையில் விழுந்தது. 14 வயது சிறுமியான அவள் தன் பானத்திலிருந்து அதை எடுக்க விரும்பினாள், கூட்டின் நூலை அவிழ்க்க ஆரம்பித்தாள்.

அந்த பட்டுக்கூடு உருவாக்கிய நீண்ட இழைகளைப் பார்த்த பேரரசி ஆச்சரியம் அடைந்தால்! மற்ற பாட்டுக்கூடுகளைச் சேகரித்து துணியில் நெய்தாள். தனது கணவர் ஹுவாங்‌டி பேரரசர் பரிந்துரையின் பேரில் பட்டுப்புழுவின் வாழ்க்கையை கவனித்த அவர், பட்டுப்புழுக்களை வளர்க்கும் கலையைத் தனது பரிவாரங்களுக்கு கற்றுக்கொடுக்க தொடங்கினார். பட்டுப்புழு வளர்ப்பு இந்த கட்டத்தில் இருந்து தொடர்ந்தது இதனால் பேரரசி லீசு சீன புராணங்கக்களில் பட்டு தெய்வம் ஆனார் எனக் கதை முடிகிறது

ஹாுவாங்‌டி மன்னனுக்குப்‌ பிறகு சுமார்‌ 240 வருடங்கள் மிகவும் குழப்பமாக தொடர்ந்தது. ந்த விதத்திலும்‌ ஆள தகுதியற்றவர்கள் அரசர்களென்று பெயர்‌ சூட்டிக்கொண்டு ஆட்சி செய்தனர். கடைசியாக டீ ஷி என்ற ஒருவனுடைய கொடுங்கோலாட்சி தொடங்கியது. கொடுங்கோல் எத்தனை நாள் ஆட்சி செய்ய முடியும். விரைவில் அது நடந்தது. பிறகு சீன புராணங்கக்களில் புனைவு இன்னும் அழகாகத் தொடர்ந்தது

(தொடர்ந்து பயணிக்கலாம்)

மக்கள் சீன புரட்சி அறிமுகம் - 1  

மக்கள் சீன புரட்சி அறிமுகம் - 2  

மக்கள் சீன புரட்சி அறிமுகம் - 3  

மக்கள் சீன புராட்சி அறிமுகம் - 4  

மக்கள் சீன புரட்சி அறிமுகம் - 5  

மக்கள் சீன வரலாறு அறிமுகம் - 6  

ஞாயிறு, 17 நவம்பர், 2024

பூமி உருவாக்கிய சீன தேசத்து கதை

மக்கள் சீன புரட்சி அறிமுகம் - 6


 


 மனிதன் படைத்ததில் கதைகள் சுவராசியமானவை ஆகும். அவைகளுக்கு எல்லைகள் இல்லை. எந்த கட்டுப்பாடும் இல்லை. அறிவியல் விழிக்கின்ற வரை ஆதி மனித கூட்டம் தனது கதைகளால் யுகங்களை கடந்து வந்தன. உலகின் எப்பகுதியில் வாழ்ந்தாலும் அக்கூட்டத்திற்குக் கதைகளே ஆதாரமாய் இருந்தன. அப்படிதான் உலகில் உள்ள மனித குழுக்கள் அனைத்தும் கதைகளை உருவாகின. இந்த பூமிப் பந்தின் தோற்றத்தைப் பல வடிவங்களில் மனிதன் கதைகள் மூலம் படைத்தான். அதுவே உண்மையென அடுத்து வந்த தலைமுறை நம்பவும் செய்தது. மனித படைப்புகள் குறித்தும் அப்படியே கதைகளை உருவாக்கினான். டார்வின் பரிணாம கொள்கையும், பெருவெடிப்பு தத்துவம் இவற்றை கதைகளாகவே மாற்றின

உயிரினங்களின் தோற்றம் பூமியின் தோற்றத்தோடு தொடர்புடையது. பெருவெடிப்புக் கோட்பாடு அண்டத்தின் தோற்றத்தை விளக்குகிறது. இக்கோட்பாடு, அண்டம் ஒரு பெரு வெடிப்பினால் 15 பில்லியின் ஆண்டுகளுக்கு முன் தோன்றியதாக முன்மொழிகிறது. அண்டமானது விண்மீன்கள், வாயு மேகங்கள் மற்றும் தூசிகளினால் ஆன விண்மீன் மண்டலங்களை உள்ளடக்கியது. வாயு மேகங்கள் தங்களின் ஈர்ப்பு விசை காரணமாக மோதிக் கொள்ளத் தொடங்கி, அணுக்களையும், துகள்களையும் உருவாக்கின. அப்போது சூரிய மண்டலம் உருவாகி இருக்கலாம். அணுக்கள், தூசித் துகள்கள் மற்றும் வாயு அடுக்குகள் திரளாக இணைந்து கோள்களை உருவாக்கின. இவை பால்வழி விண்மீன் திரளில் சூரிய மண்டலத்தை உருவாக்கின. ஏறக்குறைய 4.5 பில்லியின் ஆண்டுகளுக்கு முன்னால் பூமி உருவாகி இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. பூமி தோன்றிய 500 மில்லியன் ஆண்டுகளுக்குப் பின் உயிரினங்கள் தோன்றின என அறிவியல் நிரூபணம் செய்துள்ளது.

பான் கூ என்ற படைப்பாளியின் கதை 

 

உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும், அனைத்து மொழிகளிலும் உலகம் பிறந்த கதை ஒன்று இருக்கும் அல்லவா? அவரவர் நாட்டின் கலாச்சாரத்திற்கு ஏற்றது போல அந்த கதை பின்னப்பட்டிருக்கும். சீன தேசம் மட்டும் விதிவிலக்கா என்ன? மற்ற நாடுகளைப்போல் சீனாவிலும் அதன் புராதனத்தைப்பற்றி கதைகள் பல உண்டு. ஒரே கதை வேறு வேறு வடிவங்களில் அவற்றில் ஒரு கதை இது. இந்த மூலக் கதை சீன கலாச்சாரத்திலிருந்து வந்தது. இந்த கதை முதன் முதலில் சுமார் 1,760 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது. தோராயமாக கிமு 220 – 265 ஆண்டில் எழுதப்பாட்டிருக்கலாம். ஆனால் அதற்கும் நீண்ட காலத்திற்கு முன்பே இக்கதை வாய்வழியாக சொல்லப்பட்டிருக்க வேண்டும். வாய்மொழி கதைகளே பின்பு எழுத்து வடிவம் கண்டன.

ஆதியில் குழப்பம் கொண்ட சூழல் நிலவியது. அப்போது ஒரு பெரிய முட்டை இருந்தது, யின் என்ற பெண்ணும் யாங் ஆணும் மட்டுமே இருந்தனர். செயல்பாடும் செயல்பாடு இல்லாமலும், குளிராகவும் சூடாகவும், இருளாகவும் ஒளியாகவும் ஈரமாகவும் உலர்ந்த நிலையிலும் கலவை நிலையில் எல்லாம் இருந்தது. இந்த யின் மற்றும் யாங்கிற்குள் இருந்த பூமி மற்றும் வானம் உட்படப் பல எதிர்நிலைகளில் குழப்பத்தைப் பிரிக்கும் விதமாக அங்கிருந்த மாபெரும் முட்டையிலிருந்து வெளிவந்தான் பான் கூ (班固 இது சீன மொழியில் பான் கூ ).

அப்போது வானம் இத்தனை உயரத்தில் இல்லை. முட்டையில் இருந்து வெளிவந்த பான் கூ நடுவில் நின்றார், தலை வானத்தைத் தொட்டது, அவரது பாதங்கள் பூமியில் பதிந்தன. வானமும் பூமியும் ஒரு நாளைக்கு 10 அடி என்ற விகிதத்தில் வளர ஆரம்பித்தன, பான் கு அவற்றுடன் சேர்ந்து வளர்ந்து வந்தார். இப்படியாக வளர்ந்து வளர்ந்து 18,000 ஆண்டுகளுக்கு பிறகு வானம் உயர்ந்து மேலே சென்றது. கீழே பூமி தடிமனாகப் பறந்து விரிந்து இருந்தது. பான் கூ இவைகளுக்கு இடையே 30,000 மைல் உயரத்தில் ஒரு தூண் போல நின்றார். எனவே வானமும் பூமியும் மீண்டும் சேர முடியாமல் ஆனது.

அதன் பிறகு ஒரு நாள் பான் கூ இறந்தபோது, ​​​​அவரது மண்டை ஓடு வானத்தின் உச்சியாக மாறியது, அவரது சுவாசம் காற்று மற்றும் மேகங்களாக மாறியது, அவரது குரல் உருளும் இடியாக மாறியது. ஒரு கண் சூரியனாகவும் மற்றொன்று சந்திரனாகவும் மாறியது. அவரது உடலும் உறுப்புகளும் ஐந்து பெரிய மலைகளாக மாறியது, அவருடைய இரத்தம் கர்ஜிக்கும் தண்ணீரை உருவாக்கியது. அவரது நரம்புகள் சாலைகளாக மாறியது மற்றும் அவரது தசைகள் வளமான நிலமாக மாறியது. வானத்தில் எண்ணற்ற நட்சத்திரங்கள் அவருடைய முடி மற்றும் தாடியிலிருந்தும் உதித்தன, பூக்கள் மற்றும் மரங்கள் அவரது தோலில் இருந்தும் வந்தன. அவரது மஜ்ஜை முத்துகளாக மாறியது. பூமியில் உள்ள அனைத்தையும் வளர்க்கும் நல்ல மழை மற்றும் இனிமையான பனி போல அவரது வியர்வை வழிந்தது. அவருடைய உடம்பிலிருந்த பூச்சிகள் மற்றும் பேன்கள் மனிதக்குலத்தின் முன்னோர்களாகத் தோன்றினார்.

(பிரமாவின் தலையிலிருந்து பிராமணர்கள், தோளிலிருந்து சத்திரியர்கள், தொடையிலிருந்து வைசியர்கள், பாதங்களிலிருந்து சூத்திரர்கள் அதற்கும் அப்பாற்பட்ட பாவ யோனியிலிருந்து புலையர்கள் பிறந்ததாக இங்கும் கதை உண்டு தானே. ஆனால் என்ன இது வர்ணங்கள் பெயரால் மக்களை ஒதுக்கப் பிறந்த கதை)

டிராகன் உருவாக்கம்

கதை இன்னும் முடியவில்லை பான்‌ கூவின்‌ படைப்புத்‌ தொழிலுக்கு உதவியாக, பறக்கும்‌ பாம்பு ஒன்றும்‌, ஒரு பறவையும்‌, ஒரு ஆமையும்‌ இருந்தன. பறக்கும்‌ பாம்பு என்பது, நமது மரபில் யாளி என்று சொல்லும் வகையைச்‌ சேர்ந்தது போல இருக்கும். இதற்கு இன்றுவரை அதிக முக்கியத்துவம்‌ கொடுத்துப்‌ பேசுவார்கள்‌ சீனர்கள்‌

மிகவும் சுவராசியமான அமைப்பு கொண்ட மிருகம் இது. ஒட்டகத்தின்‌ தலை, அதில்‌ இரண்டு மான்கொம்புகள்‌, ராட்சத‌ கண்‌கள்‌, பாம்புக்கழுத்து, புலியின்‌ பாதங்கள்‌, கழுகின்‌ நகங்கள்‌, நீண்ட மூக்கின்கீழ்‌ தாடி, அடர்த்தியான மயிருடைய வால்‌, மயிர்‌ நிறைந்த கால்கள்‌, உடம்பு பூராவும்‌ பொன்னிறமான செதிள்கள்‌, இவ்வகையாகத்‌ தோற்றமளிக்கும்‌ இந்த விசித்திர உருவம்‌தான்  இப்போது வடிவம் கொண்டுள்ள டிராகன்

 

இந்த டிராகன் தன்‌ வாயில்‌ எப்பொழுதும்‌ வெண் முத்துக்களை அடக்கிவைத்துக்‌ கொண்டு, அவ்வப்பொழுது, மனிதர்களின்‌ உபயோகத்திற்காக‌ பூமியின்‌ மீது உதிர்க்கிறது. நவரத்தினங்கள்‌ மீதும்‌, தங்கம், வெள்ளி முதலிய விலை மதிப்‌புடைய உலோகங்கள்‌ மீதும்‌ இதற்கு விருப்பம்‌ அதிகம்‌. ஆனால்‌ இரும்பை மட்டும்‌ வெறுக்கும்‌. அதுமட்டுமல்ல மேலே சொன்ன அங்க அமைப்புக்களில்‌ சில சில மாற்றங்‌களைக்‌ கொண்ட இந்தமாதிரியான உருவங்கள்‌ பல உண்டென்பதும்‌, இவை ஏரி, சமுத்திரம்‌ போன்ற நீர்‌ நிலைகளில்‌ வசிக்கின்றன. இவைகளே அவ்வப்பொழுது மழையைப்‌ பொழிய வைக்கின்றன என்பதும்‌ சீன மக்களின் நம்பிக்கை.

இந்த டிராகன் சில சமயங்களில்‌, சூரியனை விழுங்கப்‌ பார்க்கிறதென்றும்‌, அப்பொழுதுதான்‌ சூரிய கிரகணம்‌ ஏற்படுகிறதென்‌றும்‌ கூறுவார்கள்‌. சுருக்கமாக இதனை ஒரு தெய்வ மென்று கருதி சீனர்கள்‌ வழிபடுவார்கள்‌. பான்‌ கூ பூமியையும்‌ அதில்‌ மனிதர்களையும்‌ படைத்து‌ பல ஆண்டுகளாயின. மிருகங்களை‌ போலவே மனிதர்களும்‌ வாழ்ந்து வந்தார்கள்‌. இவர்‌களை நாகரிகப்படுத்துவதும்‌ ஒழுங்கான வழியில் நடத்திச் செல்வதும்‌ ௮வசியமாயின.

எனவே தெய்வ அம்சம் பொருந்திய மன்னர்கள்‌ பலர்‌ ஒருவருக்குப்பின்‌ ஒருவராகத்‌ தோன்றினார்கள்‌. ஒவ்வொருவரும்‌ பதினெட்டாயிரம்‌ வருடம் வீதம்‌ ஆண்டார்கள் எனக் கதை தொடர்ந்தது ஆனால்‌ மக்கள் சீனா குடியரசு உருவாகும் வரை ஆண்ட வம்சங்கக்கள் எவை எவை எனப் பார்ப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். அதிலும் ஷென்‌ நுங்‌ மற்றும் ஹுவாங்‌ தீ இருவரும் நாம கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய மன்னார்கள் ஆவார்கள். அடுத்த வாரம் அவர்களைச் சந்திக்கலாம்.

 (தொடர்ந்து பயணிக்கலாம்)

மக்கள் சீன புரட்சி அறிமுகம் - 1 

 மக்கள் சீன புரட்சி அறிமுகம் - 2

மக்கள் சீன புரட்சி அறிமுகம் - 3 

   மக்கள் சீன புரட்சி அறிமுகம் - 4

மக்கள் சீன புரட்சி அறிமுகம் - 5

 



திங்கள், 4 நவம்பர், 2024

சீனாவில் ஒரு நாட்டிற்குள் பல நாடுகள்

 

மக்கள் சீன புரட்சி அறிமுகம் - 5

1841 மற்றும் 1911 க்கு இடையில் வெளிநாட்டு ஏகாதிபத்திய சக்திகளால் இணைக்கப்பட்ட குயிங் வம்சத்தின் பிராந்திய இழப்புகள்.

 

1.சர்வதேச துறைமுகப் பட்டினங்கள்:  (international trade ports)  ; இன்று சீனாவில் 34 பெரிய துறைமுகங்களும், 2000க்கும் மேற்பட்ட சிறு துறைமுகங்களும் உள்ளன.  அன்று இத்தனை வளர்ச்சி கிடையாது. ஆனால் வியாபாரம் செய்ய வந்த ஏகாதிபத்திய நாடுகளுக்கு சீனாவின் துறைமுக நகரங்களே இலக்காய் இருந்தன. அன்றைய சூழலில் இந்த நகரங்களில் வெளிநாட்டினர்  பலரும் தாராளமாக வியாபாரம் செய்து வந்தனர். ஏற்றுமதி இறக்குமதி வியாபாரங்களில் ஈடுபட்ட  அன்னியர்களுக்கு எவ்வித கட்டுபாடுகளும் இல்லை. சீனாவுக்கும் மற்ற வல்லரசுகளுக்கும் இடையே மன்னர்கள் போட்ட  ஒப்பந்தங்கள் நாம் முன்பே பார்த்தபடி அப்போது நடைபெற்ற போர்களின் விளைவுகளாகவும் இந்த நகரங்கள் தங்கள் உரிமைகளை இழந்தன.

இந்த  பின்னணியில்தான் 19ஆம் நூற்றாண்டில் சீன அரசாங்கத்தின் பலவீனத்தை பயன்படுத்திக் கொண்டு அன்னிய வல்லரசுகள் இந்தத்துறைமுகங்களைப் பெற்றன. பிரிட்டன், ஜப்பான், பிரான்ஸ், இத்தாலி அமெரிக்கா அகிய நாடுகள் பல துறைமுகங்களை வைத்திருந்தன். அன்றைய சீனாவில் 100 வியாபார மையங்களில்  ஏறக்குறைய 70க்கும் மேல் இப்படியான துறைமுக நகரங்களே!

2. அந்நியர்கள் சலுகை பெற்று வாழ்ந்த பிரதேசங்கள்  (Foreign Concessions);           அந்நியர்கள் சலுகை பெற்று வாழ்ந்த பிரதேசங்களுக்கு "கன்ஸெஷன்கள் ” என்று பெயர் இவை பெரும்பாலும் துறைமுகப் பட்டினங்களிலேயே இருந்தன. இங்கே வசித்த வெளிநாட்டினர் சீன அரசாங்கத்தின் சட்ட திட்டங்களுக்கு கட்டுபட்டவர்கள் அல்ல. எந்தப் பகுதியில் எந்த நாட்டினர் வசித்தனரோ அந்த நாட்டினர் அந்தப் பகுதியின் நீதி நிர்வாகங்களைக் கவனித்துக் கொண்டனர்.

3. குத்தகைக்கு விடப் பெற்ற பிரதேசங்கள் (Leased Territories); குத்தகைப் பிரதேசங்கள் என்பவை, துப்பாக்கி முனையைக் காட்டிப் பயமுறுத்தி, அந்நிய வல்லரசுகள் சீன அரசாங்கத்திடமிருக்து குத்தகையாகப்பெற்ற இடங்கள் ஆகும். குத்தகைப் பிரதேசங்களென்று பெயரே தவிர, எந்த நாடு குத்தகையாகப் பெற்றதோ அந்த நாட்டின் ஆதிக்கமே இங்கு நிலவியது. பெரும்பாலான பிரதேசங்கள் 99 வருட குத்தகைக்கு விடப்பட்டிருந்தன. இந்தக் குத்தகைக் காலம் முடிந்த பிறகுகூட சில பிரதேசங்கள், திரும்ப சீனாவிடம் வந்து சேராமல் இருந்தன.

வெளிநாட்டு சலுகைகளின் தோற்றம்: அபினி யுத்தங்களில் பிரிட்டனுக்கு எதிரான சீனாவின் தோல்வியைத் தொடர்ந்து 19 ஆம் நூற்றாண்டின்  சமமற்ற ஒப்பந்தங்கள் உருவானது. 1842 ஆம் ஆண்டு சீனாவிற்கும்  பிரிட்டனுக்கும் இடையில் ஏற்பட்ட நான்ஜிங் ஒப்பந்தம், "பிரிட்டிஷ் குடிமக்கள், அவர்களது குடும்பங்கள் மற்றும் நிறுவனங்களுடன், கன்டன் நகரம் மட்டுமல்லாது மற்றுமுள்ள நகரங்களில் தடையின்றி பாதுகாப்பு குறித்து பயம் இல்லாமல் தங்கள் வணிகத் தொழிலை செய்யவும் குடியேறவும் அனுமதிக்கப்பட்டனர். 

பல துறைமுகங்களில் வெளிநாட்டினருக்கான தனி குடியிருப்புப் பகுதிகள், தங்களைத் தாங்களே ஆளும் உரிமை உருவானது. பிரிட்டிஷ்  முன்மாதிரியைப் பின்பற்றி, ஷாங்காயில் உள்ள பிரெஞ்சு தூதரகம் 1849 இல் சீன நகரத்திற்கும் பிரிட்டிஷ் குடியேற்றத்திற்கும் இடையே ஒரு நிலப்பரப்பில் ஒரு பிரெஞ்சு குடியேற்றத்தை நிறுவினர். அமெரிக்கர்கள் ஷாங்காயின் வடகிழக்கே ஹாங்கேவில் தங்கள் சொந்த குடியேற்றத்தை நிறுவினர். "ஷாங்காயின் வெளிநாட்டு சமூகத்திற்கான கவுன்சில்" என்று அதிகாரப்பூர்வமாக முனிசிபல் கவுன்சில் நிறுவப்பட்டது.

 சீனாவில் பிரிட்டிஷ் குடியேற்றம் 138 ஏக்கருடன் தொடங்கியது, இது 1848 இல் 470 ஏக்கராக அதிகரிக்கப்பட்டது. அமெரிக்கப் பகுதியின் இணைப்பு மற்றும் அடுத்தடுத்த பல சேர்க்கைகள் சேர்ந்து மொத்த பரப்பளவை 5,584 ஏக்கராகக் கொண்டு வந்தன. பிரெஞ்சு சலுகையின் 2,525 ஏக்கர் உட்பட, மொத்த பரப்பளவு விரிந்து விரிந்து சென்று இறுதியில் 12.66 சதுர மைல்களை எட்டியது.

அவர்களின் செயல்பாடுகள்: இந்த சிறப்பு பகுதிகளில், ஒவ்வொரு வெளிநாட்டு குடிமக்கள் சுதந்திரமாக வாழவும், வர்த்தகம் செய்யவும், மிஷனரி சுவிசேஷம் செய்யவும், பயணம் செய்யவும் உரிமை வழங்கப்பட்டது. அவர்கள் தங்கள் சொந்த  கலாச்சாரங்களை உருவாக்கினர், தனிமைப் பண்பு கொண்ட  உள்ளார்ந்த சீன கலாச்சாரத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டவர்கள் இவர்கள். காலனித்துவ நிர்வாகங்கள் அவர்களின் பகுதிகளுக்கு  தங்கள் நாட்டின்  குணங்களை அதாவது அவர்களது நாடு போல ஒரு குட்டி நாடுகளை உருவாக்க முயற்சித்தன. 

தேவாலயங்கள், பொது வீடுகள் மற்றும் பல்வேறு மேற்கத்திய வணிக நிறுவனங்கள் இப்பகுதிகளில் முளைத்தன. ஜப்பானைப் பொறுத்தவரை, அதன் சொந்த மரபுகளும் மொழியும் இயற்கையாகவே வளர்ந்தன. இந்த பகுதிகளில் தங்கள் நாட்டின் கலாச்சாரத்தின் மேம்பட்ட கட்டிடக்கலையை உருவாக்கினர். காலப்போக்கில் முறையான அனுமதியின்றி, பிரிட்டன், பிரான்ஸ், ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகியவை தங்களின் பிரதேசங்கள் மற்றும் வர்த்தகப் பகுதிகளுக்குள் தங்கள் சொந்த அஞ்சல் அமைப்புகளை உருவாக்கின. தபால் வருவாய் இழப்பு மற்றும் சுங்க ஆய்வுகள் இல்லாதது குறித்து சீன புகார்களைத் தொடர்ந்து, அவை அனைத்தும் 1922 ஆம் ஆண்டுதான் ரத்து செய்யப்பட்டன

அவர்களின் சட்டங்கள்:     ஒவ்வொரு பகுதியும் அதன் சொந்த தனியான சட்டங்களுடன், அதன் சொந்த காவல் படை மற்றும் வெவ்வேறு சட்ட அதிகார வரம்புகளைக் கொண்டிருந்தது. எனவே, ஒரு செயல்பாடு ஒரு பகுதியில் சட்டப்பூர்வமாக இருக்கலாம், ஆனால் மற்றொன்றில் சட்டவிரோதமானது. பல சலுகைகள் தங்களுடைய சொந்த இராணுவப் படையையும், நிலையான இராணுவத்தையும் பராமரித்தன. சீன அரசாங்கத்தின் இராணுவம் மற்றும் போலிஸ் படைகள் சில சமயங்களில் இப்பகுதிக்கு வந்திருந்தன. சில போலீஸ் படைகள் சீனர்களை அனுமதித்தன, மற்றவை அனுமதிக்கவில்லை. 

வெளிநாட்டினர் பகுதிகளுக்கும் மற்றும் வெளியே சுற்றியுள்ள பகுதிகளுக்கும் இடையே பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் இருந்தன. ஐரோப்பிய சக்திகள் சீன கடல்சார் சுங்க சேவையின் உள்ளே குடிமக்களை பணியமர்த்தியது. இந்த சேவை சீனாவிற்கு இறையாண்மையாக இருந்தன. ஐரோப்பியர்கள் பெரும்பாலும் தங்கள் சொந்த நலனுக்காக விதிக்கப்பட்ட வரிகள் மற்றும் வெளிநாட்டு சலுகைகள் மீது சுமத்தப்பட்ட கட்டணங்களை கொடுத்தனர். ஆனால் வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள்  பகுதிகளின் உள்ளே உள்ளூர் வரிகளை சுமத்துவதன் மூலம் பயனடைந்தன.

இந்த நிலையை போக்க சீனா நிறைய விலையை கொடுத்தது. ஆனால் இன்னும் வரலாற்றில் நாம் பின்னோக்கி சென்று இதன் பின்னணியை கண்டறிய வேண்டியுள்ளது.

 (தொடர்ந்து பயணிக்கலாம்)

மக்கள் சீன புரட்சி ஒரு அறிமுகம் - 1  

  மக்கள் சீன புரட்சி அறிமுகம் - 2

 மக்கள் சீன புரட்சி அறிமுகம் - 3

மக்கள் சீன புரட்சி ஒரு அறிமுகம் - 4