புதன், 25 டிசம்பர், 2024

வர்க்கப் போராட்டத்தின் தமிழக அனுபவம் வெண்மணி


 

அந்த சம்பவம் நிகழ்ந்து 56  ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. ஆனால் அதன் வெப்பம் இன்னும் ஆறாமல் கனன்றுகொண்டே இருக்கிறது. வெண்மணி ஒரு கிராமத்தின் பெயர்மட்டுமல்ல, வர்க்கப் போராட்டத்தின் தமிழக சாட்சியம். இப்போதுள்ள நாகை, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் சேர்ந்த ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டம் தமிழகத்தின் 30% விளைநிலங்களை தன்னகத்தே கொண்டதாக இருந்த காலத்தில், தஞ்சை மண்ணில் உச்சரிக்கப்பட்ட கபிஸ்தலம் மூப்பனார், பூண்டி வாண்டையார், குன்னியூர் சாம்பசிவ ஐயர், கோபாலகிருஷ்ண நாயுடு போன்ற பெருநிலவுடைமையாளர்களிடம் நிலங்கள் குவிந்து கிடந்தன.

கூலிதான் பிரச்சனையா?

அரைப்படி நெல் கூலி உயர்வு கேட்டதால் எழுந்த பிரச்சனை எனச் சிலர் எழுதி செல்கின்றனர். அப்படியா? அரைப்படி நெல் கூலிதான் பிரச்சனையா? இல்லை. அப்படியெனில் இரண்டு படியைக்கூடக் கொடுக்க நில உடைமையாளர்கள் தயாராக இருந்தனர். ஆனால் அவர்கள் அத்துடன் ஒடுக்கப்பட்ட மக்கள் உயர்த்திய செங்கொடியை இறக்கச் சொன்னார்கள். அவர்களுக்குச் செங்கொடிதான் பிரச்சனை. ஆனால் உழைக்கும் மக்கள் தாங்கள் ஏற்றிய செங்கொடியை இறக்க மறுத்தனர். காரணம் செங்கொடி தங்கள் ஊரில் உயர்ந்த பிறகுதான் அவர்கள் மனிதர்களாக வாழத் துவங்கினர்.

பண்ணை அடிமைகளாக, அடங்க மறுத்த அல்லது பண்ணையாரின் பேச்சை மீறுகின்ற தொழிலாளிக்குச் சாணிப்பால் கொடுக்கப்பட்டது. புளிய விளாறுகளில் தயாரிக்கப்பட்ட சவுக்கால் கொடூரமான அடியும் கொடுத்து மிருகங்களைப்போல  நிலங்களில் பிணைத்து வைத்திருந்தனர். பண்ணை அடிமைமுறை இயல்பான ஒன்றாக இருந்தது. ஆண்கள் கோவணத்துடன் இருக்க  வேண்டும், பெண்கள் கச்சை அணியக்கூடாது, பண்ணையார் மனம் கோணாமல் நடக்க வேண்டும். பண்ணையார்கள் சாதி இந்துக்களாக இருந்ததும், உழைப்பவர்கள் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்ததும், அவர்கள் முடை நாற்றம் எடுக்கும் சேரிகளில் உழன்றதும் தஞ்சையின் சமூக சித்திரமாய் இருந்தது.

கக்கத்திலிருந்து தோளுக்குமாறிய துண்டு

மணலூர் மணியம்மையும், சீனிவாசராவும் கிராமங்களில் செங்கொடிகளுடன்  செல்லத் துவங்கினர். சாணிப்பால் குடிக்காதே, சவுக்கடி படாதே, அடித்தால் திருப்பி அடி, சாதியின் பெயரால் தெருக்களில் நுழையத் தடை என்றால் அதை உடை, மீறி தெருவுக்குள் நுழை என்ற முழக்கத்தை எழுப்பினர். உன் உழைப்புக்கேற்ற கூலி கேட்பது உன் உரிமை என போர்ப்பறை அறைந்தனர். பொருளாதாரமும் சமூக நீதியும் வாழ்வின் அடிப்படை என்றனர். 

விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும்  ஒன்று சேர்ந்து கிராமங்கள் தோறும் விவசாயிகள் சங்கத்தை உருவாக்கினார்கள். நிலச்சுவான்தார்களும் ஒன்றுகூடி நெல் உற்பத்தியாளர் சங்கத்தை உருவாக்கினார்கள். ஒருபக்கம் தென்பறை முதல் வெண்மணி  வரை செங்கொடி கிராமங்கள் தோறும் உயர்ந்தன, மற்றொரு பக்கம் பச்சைக் கொடியை உயர்த்தச் சொல்லி நில உடைமையாளர்கள் கதறிக்கொண்டிருந்தனர். 

பண்ணையார் பக்கம் சென்றால் கக்கத்தில் இருக்கும் துண்டு இடுப்புக்கு வர வேண்டும். ஆனால் செங்கொடி உயர உயர, கக்கத்திலிருந்த துண்டு தோளுக்கு உயர்ந்தது. செங்கொடியின் அரசியல் எழுச்சி பண்ணையடிமைகளை நிமிர்ந்து நடைபோல வைத்தது. அதன் உச்சம் எது தெரியுமா? பண்ணை அடிமை குடும்பத்தில் பிறந்த, எழுதப்  படிக்கத் தெரியாத, சாணிப்பால் சவுக்கடிக்கு ஆளான, சவுக்கடியின் தழும்புகளை உடலில் அடையாளமாக சுமந்திருந்த பி.எஸ்.தனுஷ்கோடி 1967இல் சட்டமன்ற உறுப்பின ராக உயர்ந்து நின்றதுதான். 

திட்டமிட்ட சதி

இதனால்தான் பண்ணையார்கள் செங்கொடியை இறக்கச் சொன்னார்கள். இந்த தலைகீழ் மாற்றம் அவர்களின் தூக்கத்தைக் கெடுத்தது.  கீழவெண்மணிக் கொடூரம் நடந்த நாளே அது திட்டமிட்ட சதி என்பதைச் சொல்லிவிடக்கூடியது. போராடும் விவசாயத் தொழிலாளர்களைத் தாக்குவதற்கு 1968, டிசம்பர் 25 தீர்மானிக்கப்பட்டதற்குக் காரணம்  உண்டு. டிசம்பர் 23-29 தேதிகளில் மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு கேரளத்தின் கொச்சியில் நடைபெற்றுவந்தது. 

கீழத் தஞ்சையின் இரு சட்டமன்ற உறுப்பினர்கள் உள்பட விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் பெரும்பாலானோர் இதற்காகச் சென்றிருந்தனர். டிச. 25 கிறிஸ்துமஸ் நாளின் இரவு 10 மணிக்கு ஊர் அடங்கியிருந்தபோது கீழ வெண்மணியிலுள்ள 30 குடிசைகளுக்கு வன்முறைக் கும்பல் தீ வைத்தது. அப்போது வன்முறைக்கு அஞ்சி ராமய்யாவின் குடிசையில் ஒளிந்த 44 பேர் குடிசைக்குள் கருகி உயிரிழந்தனர்.  எதிர்ப்பட்டவர்கள் துப்பாக்கியால் சுடப்பட்டனர்; சிலர் அரிவாளால் வெட்டப் பட்டனர்; சிலர் சுளுக்கியால் குத்தப்பட்டனர்; பலத்த காயங்களுக்கு ஆளாயினர்.

அதன்பின் நடந்தவை உலகம் அறியும், காவல்துறையும், நீதிமன்றமும் ஆளும் அரசாங்கமும்  எந்த வர்க்கத்தின் பக்கம் நின்றன. பாதிக்கப்பட்டவர்கள் சிறையில் வாடியதும், கொடூரக் கொலை செய்தவர்கள் மிராசுதார்கள் என்பதால் விடுவிக்கப்பட்டதும் வரலாறு. ஆனால் முன்போல சமூக அந்தஸ்து பேசி சாதிய ஒடுக்குமுறையை அமலாக்க, நினைத்த கூலி கொடுத்து கொத்தடிமைகளாக நடத்திட வெண்மணி தீ தடை போட்டது.  

வர்க்க முழக்கம்

பி.சீனிவாசராவ், மணலூர் மணியம்மை, மணலி கந்தசாமி, கோ.வீரையன், என்.வெங்கடாசலம், கோ.பாரதிமோகன், வாட்டாக்குடி இரணியன்,  ஆம்பலாபட்டு ஆறுமுகம்,  சிவராமன்,  எம்.காத்தமுத்து, வே.மீனாட்சி சுந்தரம், ஏ.எம்.கோபு, ஆர்.அமிர்தலிங்கம், பட்டுராசு, பி.வேங்கடேச சோழகர், ஏ.ஜி.கஸ்தூரிரங்கன், எம்.மாசிலாமணி, எம்.சண்முகம், ஆர்.ரங்கசாமி, ஆர்.கோவிந்தசாமி, சம்பா ராமசாமி,  நல்லகண்ணு, டி.தொப்பியாஸ், பாலன்  ஆகிய பெயர்களை நினைவில் வையுங்கள். இவர்கள் குறித்து திருவாரூர் முன்னாள் வாலிபர் இயக்க தலைவர் பி.கந்தசாமி எழுதிய சமத்துவ போராளிகள் புத்தகத்தில் முழுமையாகப் படியுங்கள்.  

இவர்கள் பெயரை இங்கே குறிப்பிடக் காரணம் என்ன? இவர்களில் ஒருவரும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கிடையாது! ஆம் அவர்கள் கம்யூனிஸ்டுகள். ஒடுக்கப்பட்ட மக்களில் கூலி உயர்வு போராட்டத்தில், அவர்களுக்கு இழைக்கப்பட்ட தீண்டாமைக்கு எதிரான போர்க்களத்தில் சுட்டுக் கொல்லப் பட்டவர்கள், உடலே கிடைக்காமல் காணாமல் அடிக்கப்பட்டவர்கள் இதில் உண்டு. வர்க்க ஒற்றுமைக்காகச் சாதி ஒழிப்பை முன்பணியாகக் கொண்டவர்கள். பொருளாதார முன்னேற்றம்தான் அடிப்படை தீர்வெனினும் அதன் முன் நிபந்தனையாக சமூக சமத்துவம் நிற்பதை அறிந்தவர்கள். வெண்மணி மாற்றுப் பாதையைக் கற்றுக்கொடுக்கிறது. 

ஏஜிகே. என்ற தோழர் ஏ.கஸ்தூரிரங்கன் எழுதிய செங்கொடி சங்கம் என்ன சாதித்தது ன்ற கவிதையில் சில வரிகள்..

 

நியாயமான கூலி கேட்டோம் 
சரியான அளவில் கேட்டோம் 
உரிய நேரத்தில் கேட்டோம் 
மரியாதைக்குறைவாக பேசுவதைத் தடுத்தோம் 
பெண்களுக்கு இழைக்கப்பட்ட அனைத்து 
அநீதிகளுக்கும் ஒரு தீர்வு கண்டோம் 

சாதியின் பெயரால் இழிவுபடுத்தினால் 
சட்டப்படியும் நியாயப்படியும் 
நடவடிக்கை எடுத்தோம் 

பண்ணைகளில் அடிமைகளாகக் கட்டி வைத்து 
சவுக்கால் அடித்து சாணிப் பால் குடிக்கச் செய்யும் 
கொடுமைகளுக்கு முடிவு கட்டினோம் 

நம் வீட்டுத் திருமணத்தை 
பண்ணைகள் முடிவு செய்வதைத் தடுத்தோம்
விடுமுறை கேட்பதில்லை 
எடுத்துக் கொண்டோம் 

அரசியலில் ஓட்டுப் போடுவது 
ஆண்டைகள் சொல்லி 
நாட்டாமைகள் முடிவு செய்வது அல்ல 
அது நம்மை ஆள்பவர்களை 
நாமே தேர்ந்தெடுக்கும் ஒரு முறை 
என்பதைத் தெளிவுபடுத்தவும் 

தோளிலே துண்டு போட்டும் 
காலிலே செருப்பு அணிந்தும் 
சட்டை வேட்டி துண்டுடன் 
நெஞ்சு நிமிர்த்தி நடக்க வைத்தோம் 

உரிமைகளுக்காக போராட 
துணிவு உண்டாக்கினோம்
மரியாதையாக வாழத் தொடங்கினோம் 
மானத்துடன் வாழத் தொடங்கினோம்

 

(-எஸ்.ஜி.ரமேஷ்பாபு, மாநிலக்குழு உறுப்பினர், சிபிஐ(எம்) 25.12.2024 அன்றைய தீக்கதிரில் வெளிவந்த கட்டுரை)

 

3 கருத்துகள்:

  1. வெண்மணி வரலாற்றின் கனமான உண்மைகளை உரைத்துள்ள இந்த கட்டுரை, வர்க்க போராட்டத்தின் தமிழ்நாடு சாட்சியத்தைக் கொண்டாடும் உன்னத ஆவணமாகிறது. இதன் ஊடாக, அடிமைமுறையைக் களைய அப்போதைய தியாகிகள் மேற்கொண்ட போராட்டமும், ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சியும் வலியுறுத்தப்பட்டுள்ளன. சமூக சமத்துவம் மற்றும் பொருளாதார நீதியின் அடிப்படைகளை முழங்கிய இந்த வரலாறு, நமது சமூகத்திற்கான கற்றுக்கொடுத்த பாடமாக விளங்குகிறது. சமமான உரிமைகள் மற்றும் மரியாதைக்கான இந்த போராட்டத்தின் தீவிரத்தை, எழுச்சியையும் அழகிய மொழியில் சித்தரித்துள்ளது. இதன் வார்த்தைகள் ஒவ்வொன்றும் சுதந்திரத்தின் வீரக் கீதமாக ஒலிக்கின்றன.
    நன்றி!
    ராஜேஷ் கொடைக்கானல்

    பதிலளிநீக்கு
  2. இன்றைக்கும் வர்க்கப் போரின் ரத்த சாட்சியாக தமிழக மண்ணில் உழைப்பாளி மக்களின் உந்து விசையாக வெண்மணி நினைவுகள் திகழ்கின்றது..
    வெண்மணி தியாகிகள் நாமம் வாழ்க.. வர்க்கப் புரட்சி ஓங்குக..

    பதிலளிநீக்கு