மதவாதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மதவாதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 6 பிப்ரவரி, 2025

ஒரு திரைப்படத்தை இந்துமத அடிப்படைவாதிகள் எப்படி பயன்படுத்துவர்?



 இந்த பதிவு 2018 ஆம் ஆண்டு வெளிவந்த பத்மாவத் திரைப்படத்தை விமர்சனம் செய்து நான் தீக்கதிரில் எழுதியதாகும். திருபரங்குன்றத்தை இந்துமத அடிப்படைவாதிகள் அரசியல் களமாக மாற்ற முனையும் சூழலில்  இந்த பதிவு மீள் பதிவாகிறது. - எஸ்.ஜி.ரமேஷ்பாபு

-----------------------------------------------------------------------------------------


குதுப் மினார் சடலத்தை தோண்டுவதா?

வரலாற்று பின்புலத்தில் புனைவுகளை உருவாக்கும் போது மிகவும் சமூக பொறுப்புணர்வோடு உருவாக்கவேண்டியது அவசியமாகும். அதுவும் வரலாற்றில் வாழ்ந்த பாத்திரங்கள் எனும்போது அந்த பொறுப்பு இன்னும் கூடுதலாகிறது. கவிதையாக, காவியமாக உள புனைவுகளை திரைப்படமாக மாற்றுவதில் எந்த தவறும் இல்லைதான். ஆனல் நிகழ்கால அரசியல் சூழலையும், சமூக சூழலையும் புரிந்துக்கொள்வது அவசியமில்லையா? அக்கரையற்ற அப்படைப்பு சமூக தளத்தில் உருவாகும் எதிர் விளைவுகளை கணக்கில் கொள்ளாமல் எப்படி படைப்பின் ஜனநாயகத்தை பாதுகாக்கும்?

இஸ்லாமியர்களின் மீதான காழ்புணர்வையே மூலதனமாக முன் வைத்து இந்துத்துவா அமைப்புகள் தினம் ஒரு கலவரம் செய்யும் சூழலில், அவர்களை பாதுகாக்கும் ஆட்சியமைப்பு அமைந்துள்ள நிலையில், வரலாற்று காலம் தொட்டே இஸ்லாமிய ராஜாகள் இந்து ராஜாக்கள் மீது வன்மத்துடன், துரோகம் செய்து அல்லது போர்களத்தில் சூழ்ச்சியால் கொலை செய்வது போலவும், அவர்கள் பெண் பித்தர்கள் அதற்காக ஒரு நாட்டையே அழிப்பர்கள் என்ற படைப்பு எந்த விளைவை பொதுதளத்தில் உருவாக்கும்?

இப்படத்தின் கதை என்ன? 

சிங்கள தேசத்தில் முத்துகளைப் பெறுவதற்காகச் செல்கிறார் சித்தோடு அரசர் ராவல் ரத்தன் சிங் (ஷாகித் கபூர்). அப்போது காட்டில் இளவரசி பத்மாவதி (தீபிகா படுகோன்) மானைக் குறி வைத்து செலுத்தும் அம்பு, ரத்தன் சிங் மார்பைத் துளைக்கிறது. இதனால் காயம்பட்ட ரத்தன் சிங்குக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்து, அவரை குணமடையச் செய்கிறார். இதனிடையே இருவருக்கும் காதல் மலர, (முன் குறிப்பு இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது) திருமணம் புரிந்து பத்மாவதியை சித்தோடுக்கு அழைத்து வருகிறார் ரத்தன் சிங். பத்மாவதியின் அழகில் மயங்கும் ராஜகுரு, ரத்தன் சிங்- பத்மாவதி தனித்து இருக்கும் போது ஒளிந்திருந்து பார்க்கிறார். இதனால் பத்மாவதியின் கூற்றுப்படி, ரத்தன் சிங் உத்தரவால் ராஜகுரு நாடு கடத்தப்படுகிறார்.

டெல்லியை வந்தடையும் ராஜகுரு, அரசன் அலாவுதீன் கில்ஜியை (ரன்வீர் சிங்) சந்தித்து பத்மாவதியின் பேரழைக் கூறி மதி மயங்கச் செய்கிறார். கண்ணால் பார்த்திராத பத்மாவதிக்காக அலாவுதின் கில்ஜி டெல்லியில் இருந்து சித்தோடு நோக்கி படையெடுக்கிறார். சமாதானப் பேச்சுவார்த்தை என்று சொல்லி வஞ்சகமாக ரத்தன் சிங்கை சிறைபிடிக்கிறார். ரத்தன் சிங் விடுவிக்கப்பட வேண்டுமானால் பத்மாவதி டெல்லி வந்தாக வேண்டும் என்று கில்ஜி சொல்ல, பத்மாவதி டெல்லி சென்று ரத்தன் சிங்கை தந்திரமாக மீட்டு வருகிறார். அதனால் ஆத்திரமடைந்த அலாவுதீன் சித்தோடு மீடு படையெடுக்கிறார். போரில் ரத்தன் சிங்கை நயவஞ்சகமாக கொன்று கோட்டைக்குள் நுழையும் போது பத்மாவத் நூற்றுக்கனக்கான பெண்கள் கூட்டத்துடன் தீயில் இறங்கி கரைந்து போகிறார்கள். இதுதான் படம்.

இந்த கதை ஏது?

மாலிக் முகம்மது ஜயஸி என்னும் சூஃபி கவிஞர் 1540ல் எழுதிய பத்மாவத் என்னும் காவியத்தில் உள்ள கதாபாத்திரம்தான் பத்மாவதி என்னும் பத்மினி. அவர் வாழ்ந்தமைக்கான வரலாற்றுச் சான்றுகள் இல்லை. அலாவுதீன் மறைந்து ஏறத்தாழ இருநூற்றைம்பது ஆண்டுகளுக்குப்பின் எழுதப்பட்டது இக்காவியம். இக்காவியத்தின் அடிபடையில் எடுக்கப்பட்டப் படம் என்றுதான் அறிமுகத்தில் போடுகின்றனர். ஆனால் இந்த படம் இந்த காவியத்திற்கும் உண்மையாக இல்லாமல், வரலாற்றிற்கும் உண்மையாக இல்லாமல் எடுக்கப்பட்டுள்ளது. 

 பத்மாவதியின் கணவர் ரதன் சிங் கும்பல்கரின் தேவபாலரிடம் போரிட்டு இறந்ததாகவே காவியம் சொல்கிறது. வரலாறும் அதுவே. ஆனால் இப்படத்தில் அலாவுதீன் கில்ஜியிடம் போரிட்டு வஞ்சகமாகக் கொல்லப்பட்டதாக காட்சிப்படுத்தப்பட்டுளது. மாலிக் கபூர், தில்லி குதுப் மினார் வாளகத்தின் பின்புறத்தில் சுல்தான் அலாவுதீன் கில்ஜிக்கு கட்டிய சாமாதியை, 702 ஆண்டுகளுக்கு பின் தோண்டி எடுத்து கேவலப்படுத்தும் படைப்பு இது. 

பாத்திர படைப்புகள்:

பத்மாவத் படத்தின் பாத்திர படைப்புகளை கூர்ந்து நோக்கினால் பல அப்பட்டமான அநியாயங்கள் தெரியும். அதுவும் அலாவுதின் கில்ஜி, தனது தனது நிச்சயதார்த்த சமயத்தில் ஒரு பெண்ணை சுகிப்பதும், அதை கேட்கும் ஒரு மந்திரியை கொலைசெய்வதும், அத்தர் நறுமனத்தை பூசவேண்டும் என்றால்கூட தனது பணிப்பெண்னின் மார்பகங்களில் மொத்தமாய் ஊற்றி அவளை தன்னுடன் அணைத்து பூசிக்கொள்வது போலவும், ஒரு பெண்ணிற்காக ஆறுமாதம் கோட்டைக்கு வெளியில் கொத்தளம் அமைத்து காத்திருபது போலவும், ஒவ்வொரு நொடியும் காமம் ததும்பும் கண்களோடு உள்ள உடல்மொழி அசைவும், வெருக்கத்தக்க நடையும் என அலாவுதின் கில்ஜியை எப்படி வெறுக்க வைக்க முடியுமோ அப்படி வெறுக்கடிக்கின்றனர்.

ஜலாலுதீன் கில்ஜியும் அவரது மருமகன் அலாவுதீன் கில்ஜியும் முற்றிலும் பண்பாடற்ற காட்டுமிராண்டிகளை போல சித்தரித்திருப்பது மிகவும் திட்டமிட்ட சித்தரிப்பாகவே படுகிறது. தோலாடைகள், மூர்க்கமான முகங்கள், வெறிகொண்டவர்கள் போன்ற நடத்தைகள். சாப்பிடுவதில்கூட ஒருவகை காட்டுமிராண்டி தன்மை உருவாக்கப்பட்டுள்ளது. அதிலும் அலாவுதீன் கில்ஜி ஆடும் மோசமான வெறியேற்றும் நடனம் கேவலமான ரசனையின் வெளிப்பாடு.

உண்மையில் இவர்கள் யார்?

 
துருக்கிய சுல்தான்கள் இப்படத்தில் காட்டப்படுவதுபோல நாகரீகம் இல்லாத பாலைவனப் படையெடுப்பாளர்கள் அல்ல. இந்தியப் கலாச்சார அளவு தொன்மை பொருந்தியவை துருக்கிய, பாரசீகப் கலாசாரங்களும், அவற்றின்மேல் இஸ்லாம் மார்கம் உருவாக்கிய தாக்கத்தால் எழுந்த அரசர்கள் அவர்கள். நெடுங்கால கலாச்சரம் உருவாக்கிய மிக பொருத்தமான பழக்க வழக்கங்கள், நுண்கலைகள், உயர்தர இலக்கியங்கள் கொண்டவர்கள். இன்னும் சொல்லப்போனால் அத்தகைய பிரம்மாண்டமான அரசவைச்சூழல் அன்று இந்திவில் இருக்கவில்லை என்பதே உண்மை. சுல்தான்களுக்குப் பின் இந்திய அரசர்கள் பலரும் அவர்களின் மரபைத்தான் தொடர்ந்தனர் எனலாம். சிவாஜியும் கிருஷ்ணதேவராயரும் அணிந்துள்ள உடைகள் கூட இந்திய உடைகள் அல்ல, சுல்தானிய பாணியிலான உடைகளே.

இன்றைய வடிவில் உருவான இந்துஸ்தானி இசை சுல்தானிய அவைகளில் கிளந்தெழுந்த்துதான். தொன்மையான இந்திய இசைக்கும் துருக்கிய, பாரசீக இசைகளுக்கும் நடுவே நிகழ்ந்த கலப்பின் விளைவு. அலாவுதீன் கில்ஜியின் அவையில்தான் அமிர் குஸ்ரு இருந்தார். இந்திய இலக்கியத்திலும் இசைமரபிலும் இன்றும்கூட தவிர்க்க முடியாத செல்வாக்கு பெற்றவர் அவர்.

அலங்காரக்கலைகளின் அற்புதம் சுல்தான்களின் ஆட்சி. நகைகள் செய்வதில் இந்திய கைத்திறனிலும், இந்திய ஆலயங்களின் பட்டுநூல்பின்னல், அலங்காரப்பின்னல் பணிகளில்கூட இஸ்லாமியக் கைவினைஞர்கள் படந்திருக்க காரணம் இதுதான். நறுமணங்களை உருவாக்கும் கலை, சமையற்கலை ஆகியவற்றிலும் அவர்கள் சிறந்து விளங்கினர். எழுத்துருக்கலை உயர்ந்த்தும் அப்போதுதான். குர்ஆனை அலங்காரமாக பட்டிலும் தோலிலும் எழுதும் கலை அக்காலகட்டத்தில்தான் தொடங்கியது.

போர்த்திறனிலும் அலாவுதீன் கில்ஜி சலைத்தவர் அல்ல. தனது அரசை மங்கோலியர்களின் கொடூர அதிரடி தாக்குதல்களிலிருந்து காத்துக் கொள்ள வடமேற்கு எல்லைபுற பகுதி நெடுகிலும் கோட்டை கொத்தளங்கள் அமைத்து, காவலுக்கு பெரும் படையணிகள் நிறுத்தினார். தொடர்ந்து பலரையும் வென்றுள்ளார்.
நிர்வாகம் எப்படி? 

ஆட்சி நிர்வாகத்தை தொடந்து கண்காணிக்க கில்ஜி மிகச் சிறந்த உளவுப்படையை வைத்திருந்தார். எனவே தனக்கு எதிரான கலகங்களையும், சதித் திட்டங்களையும் முளையிலேயே கிள்ளி எறியமுடிந்தது. தனக்கு எதிராக செயல்படும் கலகக்காரர்களின் சொத்துகளையும், மதகுருமார்களின் சொத்துகளையும் கைப்பற்றப்பட்டது. அரச துரோகிகளுக்கு கடும் தண்டனை வழங்கினார். எனவே பிரபுக்களும், நெருங்கிய உறவினர்களும், மதகுருமார்கள் எவரும் கில்ஜிக்கு எதிராக சதித்திட்டம் அல்லது கிளர்ச்சி செய்ய முன் வரவில்லை. தனது நாட்டில் அரசு அலுவலர்கள், ஊழியர்கள் கையூட்டு பெறுவதை தடுத்து நிறுத்தினார். வேளாண்குடி மக்களிடமிருந்து கூடுதல் நிலவரி வசூலிப்பதை தடுத்தார்.

அலாவுதீன் கில்ஜி குறிகோளுடன் காட்டிய உறுதி மிக்க ஆட்சியாளர். தனது வெற்றியின் அடித்தளத்திற்கு வலுவான, நிலையான படையணிகளை நாடெங்கும் நிலை நிறுத்தினார். சந்தைப் பொருட்களுக்கு சரியாக கணக்கிட்டு விலை விதித்து, அதற்கான விதிகள் இயற்றினார். அதனை கண்காணிக்க அரசு அலுவலர்களை நியமித்தார். பெருஞ் சந்தைகளில் விளைபொருட்களுக்கு சரியான விலையில் விற்கப்படுவதை கண்காணிக்க அரசு மேற்பார்வையாளர்களை நியமித்தார். கூடுதல் விலையில் விளைபொருட்களை விற்கும் வணிகர்கள் மீது கடும் தண்டனை விதிக்கப்பட்டது. சரியான விலை கொடுத்து மக்கள் பொருட்கள் வாங்க இது உதவியது.. தேவைக்கு அதிகமான விளைபொருட்கள் அரசு கிட்டங்கிகளில் சேமிக்கப்பட்டது. இதனால் வறட்சி காலத்தில் விளைபொருட்கள் பற்றாக்குறை சமாளிக்கப்பட்டது.

இத்தகைய தரவுகளை சொல்ல அடிபடை காரணம் இத்தகைய மன்னரைதான் வெறும் காமம் கொண்டலையும் கொடூரனாக இப்படம் காட்சி படுத்தியிருபதே. சரி கில்ஜி எந்த தவறும் செய்யாத மன்னரா? அத்தகைய முடிவுக்கும் போக முடியாது. படைகள் சென்ற இடங்களில் கொலை, கொள்ளை நடந்தது உண்மை. அது அந்த கால போர்களங்களின் நேரடி விளைவு. ஏனெனில் போர்வீர்ர்களின் ஊதியம் அவர்கள் அடிக்கும் கொள்ளையையை வைத்தே தீர்மானிக்கப்பட்டது. சோமாநாதபுரம் ஆலையம் சூரையாடபட்டதும், தமிழகத்தில் மதுரை, சிதம்பரம் கோவில்கள் கொள்ளையிடப்பட்டதும் இதன் அடிப்படையில்தான். இஸ்லாமிய மன்னர்கள் மட்டடுமல்ல, இந்திய அரசர்களும் இதற்கு விதிவிலக்கல்ல.


கோயில் கொள்ளை ஒரு கொள்கை
 

உதாரணமாக காவி மதவெறியர்கள் கொண்டாடும் வீரசிவாஜி இரண்டுமுறை சூரத்தை கொள்ளையிட்டார். இவை இரண்டு குறித்தும் விரிவான கணக்குகள் பதிவு செய்யபட்டுள்ளது. மராட்டியர்கள் கொள்ளையின் போது சிருங்கேரியில் உள்ள பெண் தெய்வம் சாராதாவின் கோவில் சேசப்படுத்தப்பட்டது. முஸ்லீம் மன்னரான திப்புசுல்தான் அதை மீண்டும் நிறுவினார் என்பது வரலாறு. காஷ்மீரை ஆண்ட மன்னர் ஹர்ஷா தேவ் இந்துக்கோவில்களை இடிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். அந்த சிலைகளை உருக்கும் முன்பு அவற்றின் மீது மனித மலங்களையும், சிறுநீரையும் கொண்டு அசிங்கப்படுத்தினார். இந்த எல்லா விவரங்களும் படங்களுடன் கல்ஹனரின் “ராஜத்தரங்கிணி”யில் கூறப்பட்டுள்ளது. அவர் தனது வருவாய்த்துறையில் “கடவுள் கவிழ்ப்பு” (தேவோட்படன்) எனும் தனிப்பிரிவையும் கூட்த் துவக்கினார். (ஆதரம்:கோவின் பன்சாரே எழுதிய மாவீரன் சிவாஜி)

கூட்டு தற்கொலைகள்:

மற்றொன்று இப்படத்தின் இறுதிக்காட்சி, பத்மாவதி தன்னுடன் நூற்றுகாணக்கான பெண்களுடன் சிதையில் இறங்கும் காட்சி. இதை சதி என்ற உடன்கட்டை ஏறுதல் என்பதோடு இணைத்துப்பார்க்க முடியுமா என விவாதத்திற்குறியதே. தெரியவில்லை. ஏனெனில் உலகின் நடந்த எல்லா போர்களும் இறுதியில் பெண்கள் உடலின் மீதுதான் ஆதிக்கத்தை நிலைநட்டியே வெற்றியை அறிவிக்கின்றன. ஒரு நாட்டை வெற்றி பெற்றதும் அங்குள்ள பெண்கள் கூட்டாக வன்புணர்வு செய்யப்படுவதும், கொடூரமாக கொள்ளப்படுவதும் மிக இயல்பாக நடந்துள்ளது. இதை எதிர்க்கும் ஒரு செயலாக பெண்கள் கூட்டு தற்கொலை செய்துகொள்ளும் மரபும் உருவாகியது.

இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போது இருதிசையை நோக்கி சென்ற கூட்டத்தில் உள்ள மதவெறியர்கள் செல்லும் வழியில் நடத்திய கொடூரங்கள் சகிக்கமுடியாத வடுக்களை எற்படுத்தின. இருபக்கமும் எல்லையில் உள்ள பல கிராமங்களில் எதிர் மத்த்தினர் கைகளில் சிக்கி கணவன், சகோதரன், தந்தை கண்முன்னால் கூட்டு வன்புணர்வுக்கு பெண்கள் ஆளாகும் நிலையில் குடும்பத்தார்கள் கூட்டாக எரிந்தோ, விஷமருந்தியோ தற்கொலை செய்துக்கொண்ட கண்ணீர் மிக்க கதைகள் ஏராளம் உண்டு நம்மிடையே. போர் என்றபெயரில் இலங்கையிலும், மியான்மரிலும் சமகாலத்தில் நடந்த சம்பவங்கள் என்ன சொல்கின்றன? ஆக இதை சதி என்பதா? எதிர்ப்பியக்கம் என்பதா? என்ற விவாதம் தவிர்க்க முடியாத ஒன்று.

வரலாற்று பதிவு என்பது மிகவும் நிதானத்துடன் விருப்பு வெறுப்பு இல்லாமல் பதிவு செய்யபடவேண்டியதாகும். ஆனால் இந்த கவலை கொஞ்சமும் இல்லாமல், மதவெறியர்கள் ஆட்சியில் இருக்கும் சூழலில் காவியத்தின் அடிப்படையில் நேர்மையற்ற ஒரு திரைப்பட்த்தை எடுப்பது, இந்த பொறுப்பற்ற படத்தை எதிர்த்து உண்மையில் இஸ்லாமியர்கள் எழுப்பவேண்டிய எதிர்ப்பை இந்து மதவெறியர்கள் எழுப்பியதும் சந்தேகத்திற்குரியதாக இருக்கிறது.

மிகவும் நுட்பமாக தனது மதவெறி முன்முடிவுகளை மெல்ல மெல்ல அமலாக்கிவரும் இந்துத்துவ மதவெறியர்கள் இப்படத்தை முன்வைத்தும் அரசியல் செய்வதும், போரட்டத்தை முன்னெடுப்பதும் தற்செயலான ஒன்றல்ல. மிகவும் திட்டமிடப்பட்டதே. வரலாற்றை மிகவும் கவனத்துடன் கையாளும் நிலைக்கு முற்போக்காளர்களை தள்ளுகின்றனர். கவனத்துடன் கையாளுவோம்

வெள்ளி, 26 ஆகஸ்ட், 2016

விடுதலைப் போரில் தமிழக இஸ்லாமியர்களின் தியாகம்



இன்றைய இளைய தலைமுறைக்கு இந்திய விடுதலைப் போரின்வரலாற்றை, அதன் வீரம் மிக்க நினைவுகளை, தியாக வேள்விகளை அறிமுகம்செய்ய வேண்டியது அவசியக் கடமையாகிறது.  காவி இருள் சூழும் அபாயம் இந்திய நாட்டை நோக்கி வேகமாய் நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. தேசத்தின்விடுதலைக்கு தங்கள் உயிரையே விலையாய் கொடுத்த தியாகிகளை மத துவேஷத்தால் தேச துரோகிகளாக சித்தரிப்பது எவ்வளவு பெரிய கயமைத்தனம், எத்தகைய வன்முறை அது? அகண்ட இந்து ராஷ்டிர கொடுங்கனவின் தத்துவ பின்னணி இஸ்லாமியர்களை குறிவைத்து வளர்வது எத்துனை பெருந்துயர்? வளர்ந்தெழுந்த  விடுதலைப் போரின் விதையாய் விழுந்த இஸ்லாமியர்கள் வரலாற்றை மீட்டெடுத்து, காவி இருளின், கொடுங்கனவின் தடுப்பு அரணாக முன்நிறுத்த வேண்டியது மதச்சார்பற்ற சக்திகளின் கடமையாகிறது. வரலாறு என்ன சொல்கிறது? கொஞ்சம் பயணிக்கலாம்.

1857ல் நடந்த முதல் விடுதலை போரின் நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஆதாவது 1757-ல் சிராஜ்-உத்-தௌலா ஆங்கிலேயரை எதிர்த்து நடத்திய பிளாசிப் போர்தான் பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராய் இம்மண்ணில் நடந்த முதல் பெரிய யுத்தம். அவரது வழியை பின்பற்றி அடுத்த 190 ஆண்டுகள் இஸ்லாமியர்கள் இந்த நாட்டின் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய வரலாறு மிகப்பெரியது. குறிப்பாக தமிழகத்தில் உள்ள இஸ்லாமியர்கள் இந்த வீரம் மிகுந்த போராட்டத்தில் கொஞ்சமும் பின்தங்கவில்லை.

1800-1801 ஆண்டுகளில் ஆங்கிலேயர்க்கு எதிராகத் தென்னிந்திய குறு நில மன்னர்களும் பாளையக்காரர்களும் ஒருங்கிணைந்த கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர். மலபார் கேரளவர்மா, மருது பாண்டியர், திப்புசுல்தானின் குதிரைப்படைத் தலைவராகப் பணியாற்றிய கனீஷ்கான் (Khan-i-Jah-Khan), மராத்தியில் சிமோகா (Shimoga) பகுதியை ஆண்ட தூண்டாஜி வோக் (Dhondaji Waug), விருப்பாச்சி பாளையக்காரர் கோபால நாயக்கர், திண்டுககல் பாளையக்காரர் போன்றோர் மகத்தான கூட்டமைப்பை உருவாக்கினர்.

இக்கூட்டமைப்பின் சார்பில் வடக்கு-தெற்கு ஆட்சியாளர்களை இணைக்கும் வாயிலாக கனீஷ்கான் செயல்பட்டார். இந்தப் புரட்சிப்படை யுத்தத்திற்குத் தலைமைப் பொறுப்பு கனீஷ்கானிடம் ஒப்படைக்கப்பட்டது. இக்கூட்டமைப்பின் முக்கிய திட்டமே கோவை - சேலம் பகுதிகளைக்  கைப்பற்றுவதாகும். 4000 குதிரைப்படை வீரர்களுடன் இத்தாக்குதலில் கனீஷ்கான் ஈடுபட்டார்.  ரகசியமாகத் தீட்டப்பட்ட இத்திட்டம்  தோல்வியில் முடிந்தது. இக்கிளர்ச்சியில் கைதான 42 பேருக்கு சேலம் கலெக்டர் மாக்லியோட் (Macleod) உத்தரவுப்படி சேலம் ராணுவ கோர்ட்டில் தூக்குத்தணடனை என தீர்ப்பு வழங்கப்பட்டு அனைவரும் தூக்கிலிடப்பட்டனர் (1)

பாஞ்சாலங்குறிச்சி சீமையை ஆண்ட வீரப்பாண்டிய கட்டப்பொம்மன் இராமநாதபுரத்திற்கு கலக்டர் ஜாக்ஸன் துரையைச் சந்திக்க சென்றபோது அதில் வீரமிகு இஸ்லாமிய தளபதிகள் பலரும் அஞ்சாமல் சென்றனர்
மம்மது தம்பியும் முகம்மது தம்பியும்
மார்க்கமுள்ள தம்பி வரிசையுந்தான்
தர்ம குணவான் இபுராமு சாகிபும்
தம்பி இசுமாலு ராவுத்தனும்…
என்று அவரோடு சென்ற தளபதிகளைப் பட்டியலிட்டுக் காட்டுகிறது  வீரபாண்டிய கட்டபொம்மன் கதைப்பாடல். (2)

மலேசியாவின்  பினாங்கு தீவில் வாழும் தமிழர்கள் கிளிங்கர்கள் எனப் பிறமொழி பேசுபவர்களால் அழைக்கப்பட்டனர். இதன் பின்னால் சுதந்திரப் போராட்ட வீரர்களின்  தியாக வரலாறு மறைந்துள்ளது. மருது சகோதரர்கள் ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டு இறுதியில் தூக்கிலிடப்பட்ட பின்பு ஆங்கில அரசு அவரது குடும்பத்தைச் சார்ந்த இளைஞர்கள் மற்றும் தளபதிகள், வீரர்கள் என 72 பேரைப் பினாங்கு தீவிற்கு  நாடு கடத்தி விலங்கிட்டு, கைகால்களை இரும்புச் சங்கிலியால் பிணைத்து நடமாட விட்டிருந்தனர். அவர்கள் நடக்கும் போது சங்கிலிச் சத்தம் கிளிங் கிளிங் எனக் கேட்டதால் அக்கைதிகள் கிளிங்கர்கள் என அழைக்கப்பட்டனர். நாளடைவில் அப்பெயர் அங்கு குடியேறிய தமிழர்களை அழைப்பதற்குரிய பெயராக மாறியது.

அத்தகைய  கைதிகள் கூட்டத்தில் தலைமையேற்ற இருவரில் ஒருவர் இளைய மருதுவின் மகன் முத்துவடுகு என்ற துரைச்சாமி. மற்றவர் முக்கிய படைத் தளபதிகளில் ஒருவரான சேக் உசேன் என்ற இஸ்லாமிய இளைஞர். இச்சப்பட்டி அமில்தார் சேக் உசேன் என்று அழைக்கப்பட்ட இவர், கிளர்ச்சிப் படையின் முதல் தாக்குதலுக்குத் தலைமை தாங்கினார்.  (3)

சென்னையில் பிறந்து உத்திரப் பிரதேசத்தில் வாழ்ந்தவர் மௌல்வி செய்யது அஹ்மதுல்லாஹ் ஷாஹ். விடுதலைக்காக வடஇந்தியாவின் பல பகுதிகளில் யாத்திரை செய்தவர். லக்னோவில் ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் ''ஆங்கிலேயர்களைக் கொன்று குவித்து தேசத்திலிருந்து அவர்களை ஒழித்தாலன்றி நாம் நம் தாய் நாட்டை பாதுகாக்க முடியாது'' என்று முழக்கமிட்டார். ஆங்கில அரசு அவருக்குத் தூக்குத் தண்டனை விதித்தது.(4)

1920 - இல் ஈரோட்டில் நடைபெற்ற உலமாக்களின் மாநாட்டில் முழுக்க முழுக்க தேசிய பிரச்சனைகளே பேசப்பட்டன. மௌலான முகம்மது அலி இம்மாநாட்டில் ஆற்றிய உரை அன்று தமிழக உலமாக்கள் தேசிய நடவடிக்கைகளில் வேகமாக ஈடுபட உந்து சக்தியாக அமைந்தது. பள்ளிவாசல்களையும் அரபிக்கல்லூரி – மதரசாக்களையும் சுதந்திரத்தைப் பற்றிச் சிந்திக்கின்ற – பேசுகின்ற – செயல்பாட்டுக்குரிய களங்களாக மாற்றின. இக்காலகட்டத்தில் திண்டுக்கல்லை மையப்படுத்தி உலமாக்கள் பலர் இந்த தேசிய இயக்கத்தை ஆங்கிலேயருக்கு எதிராக உயர்த்திப் பிடித்துள்ளனர். மௌலானா அப்துல் ஹமீது பாக்கவி அவர்கள்  கதராடை அணியாத மணமகனின் திருமணத்தில் உலமாக்கள் கலந்து கொள்ளக்கூடாது என பகிரங்க அறிவிப்பை விடுத்தார்.  அதற்கு அன்றைய உலமாக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருந்தது.(5)

ஆண்களுக்கு நிகராக இஸ்லாமிய பெண்களும் களம் கண்டனர். 1922ல் தென்காசி சையது குருக்கள் பள்ளிவாசல் மைதானத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய தேசபக்தை பீபியம்மாள் ”என் பிள்ளைகள் சிறையில் இருக்கும் போது ஒரு வேளை ஆங்கிலேயர்களிடம் மன்னிப்பு கேட்டு விடுதலையானால் அவர்களின் குரல் வளையை நெறித்துக் கொல்வேன்” என்று ஆவேசம் பொங்க உருதுமொழியில் பேசி நிதி திரட்டினார். அவர் பேசியதை தமிழில் திருச்சியைச் சேர்ந்த முர்தஸா சாகிப் மொழி பெயர்த்தார். இதே சுதந்திர வேட்கையுடன் இறுதி வரை இந்தியா முழுவதும் சுற்றப்பயணம் செய்த பீபியம்மாள் 1924 ஆம் ஆண்டு காலமானார். பீபியம்மாள் விருப்பபடி அவரது பூதவுடல் கதர் துணியால் சுற்றப்பட்டே நல்லடக்கம் செய்யப்பட்டது.

அதே போல திருச்சி பீமநகர் வயன்வித்தார் தெருவில் வசித்த மரியம் பீவி என்னும் விடுதலைப் போராட்ட வீராங்களை நாகபுரி கொடிப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறைத் தண்டனை பெற்றார். இவருடைய கணவர் பெயர் அப்துல் கரீம். இஸ்லாமிய பெண்கள் வீதியில் இறங்கி போராடினால் என்னாகும் என காட்ட ஆங்கிலேய அரசு மரியம் பீவிக்கு ஆறு மாத சிறைத் தண்டனை வழங்கி கடலூர் சிறையில் அடைத்தது.

கரூர் நன்னா சாகிப் மற்றும் அவரது மனைவி பியாரி பீவி ஆகிய இரண்டு பேர்களும் ஒத்துழையாமை இயக்கத்திலும், தனி நபர் சத்தியாகிரகத்திலும் பங்கேற்றார்கள். 1920 ஆம் ஆண்டிலிருந்து 1943 ஆம் ஆண்டுவரை விடுதலைப் போராட்டங்கள் பலவற்றில் ஈடுபட்ட நன்னா சாகிப் திருச்சி, அலிப்புரம் சிறைகளில் தண்டனை  அனுபவித்திருக்கிறார்.   தேசத்தின் மீது அளவில்லா பற்றுக்கொண்ட அவரது மனைவி பியாரிபீவி தனிநபர் சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டு நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்தாலும் வீரமுழக்கமிட்டு மகிழ்ச்சியுடன்  சிறை சென்றார்.

இந்திய தேசிய ராணுவத்தின ஒற்றர்ப் படைப்பிரிவு மலேசியாவிலுள்ள பினாங்கு தீவில் இயங்கி வந்தது. இந்த ஒற்றர் படையின் முதல்கட்ட நடவடிக்கையாக ஐந்து ஒற்றர் படை வீரர்கள் கேரளாவின் கோழிக்கோடு அருகிலுள்ள தண்ணூர் கடற்கரையில் 27-12-1942- இல் நீர் மூழ்கிக் கப்பல் மூலம் வந்திறங்கினர். இதே நேரத்தில் பர்மாவில் இருந்து அரகடகன் வழியாக மற்றொரு குழு இந்தியாவிற்குள் நுழைந்தது. இவ்வீரர்கள் தங்களது பணிகளை ரகசியமாக மேற்கொண்டு வரும்போது சிலரால் காட்டிக் கொடுக்கப்பட்டு அனைவரும் கைதானர்.

சென்னை கோட்டையில் விசாரிக்கப்பட்டு அனைவரும் சென்னை சிறையில் அடைக்கப்பட்டனர். விசாரணை நடத்திய நீதிபதி மாக்,  நால்வருக்கு மரணதணடனையும் 14 பேருக்கு ஐந்தாண்டுகள் சிறைத்தண்டனையும் வழங்கினார். மரண தண்டனைப் பெற்ற மற்ற நால்வர்  வைக்கம் அப்துல் காதர்,  பவுஜாசிங், எஸ்.சி.பரதன், ஆனந்தன். இந்த ஒற்றர்படை வழக்கில் ஐந்தாண்டுகள் கடுஞ்சிறைத் தண்டனைப் பெற்ற 14 பேருள் தமிழ்நாடு கீராம்பூரைச் சேர்ந்த முஹம்மது கனி என்ற இஸ்லாமிய இளைஞரும் உண்டு (7)

இதுமட்டுமல்ல சிப்பாய்க் கலகத்தின் போது கண்ணில் பட்ட இந்தியர்களைச் சுட்டுக் கொன்ற நீல் சிலை தகர்க்கும் போராட்டம் சென்னையில் 1927ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடை பெற்றது. இதில் பங்கேற்ற இராமநாதபுரம் முஹம்மது சாலியா முன்று மாதமும், சென்னையைச் சேர்ந்த அப்துல் மஜீது, லத்தீப், இராமநாதபுரம் மஸ்தான், பண்ருட்டி முஹம்மது உசேன் போன்றோர் 6 மாதம் முதல் 2 வருடம் வரையும் கடுங்காவல் தண்டனை பெற்றனர்

1921 - இல்  கள்ளுக்கடை மறியல் போராட்டத்தில் நிலக்கோட்டைத் தாலுகாவில் சிறை  சென்ற மதுரை ஹாஜி முகம்மது மௌலானா சாஹிப்,  உத்தமபாளையம் முகம்மது மீரான் என்ற ஹாஜி கருத்த ராவுத்தர், மதுரை நகரின் வீதிகளில் தான் இயற்றிய பாடல்களைத் தன் மனைவியுடன் பாடிக்கொண்டு உலா வந்து சுதந்திர எழுச்சியை ஊட்டிய வா. ஏ.ந.வ. முகையதீன் அபதுல் காதிர், வில்லுப்பாட்டில் ஒரு பாவலராகத் திகழ்ந்த தாராபுரம் பி.என்.அப்துல் கபீர் , ஒத்துழையாமை இயக்கப் பிரச்சார பாவலர் விருதுநகர்  அப்துல் ரகுமான்.  விஸ்வநாததாஸ்,  செங்கோட்டை கிட்டப்பா, கே.பி.சுந்தராம்பாள் போன்றோர் எழுச்சியூட்டி வந்த காலகட்டத்தில், அவர்களுக்கு நிகராகப் பல நாடக மேடைகளில் சுதந்திர கீதம் இசைத்தவர் காதர்பாட்சா. 'சுதந்திர முரசு' 'விலாவர் ஜரினா' போன்ற தேசபக்தி நாடகங்களில் பாடி நடித்து சுதந்திரப் போராட்டத்திற்கு  தனது பங்களிப்பைச் செய்தவர் மதுரை ஏ.பி.மொய்தீன்.  வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் தீவிரமாக பங்கேற்று 'ஆத்திரம் கொள்' என்பது போன்ற பல சுதந்திர கீதங்களைப் பாடியவர் கவிஞர் கா.மு. ஷெரிப். என தேசபக்தர்களின் பட்டியல் தொடர்கிறது.

1973ம் ஆண்டு தமிழக அரசு புத்தகம் ஒன்றை வெளியிட்டது. அதில் நேதாஜியின் தேசிய இராணுவத்தில் பணியாற்றிய தமிழர்களின் பட்டியலை வெளியிட்டிருந்தது. அப்பட்டியலில் 25% மேற்பட்ட முஸலி¬ம்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கெல்ல்லாம் உச்சமாய் இந்திய சுதேசி வர்க்ககத்தின் லட்சியக் கனவான 'சுதேசி ஸ்டீம் நேவிகேசன்' - என்ற சுதேசிக் கப்பல் கம்பெனியை வ.உ.சிதம்பரம் பிள்ளை 16-10-1906 - இல் நிறுவினார். இந்நிறுவனத்திற்கு பங்குதாரர்களைச் சேர்க்கும் முயற்சியில் அவர் இறங்கியபோது அவருக்கு நம்பிக்கைக் கரம் நீட்டியவர் ஹாஜி ஏ.ஆர். பக்கீர் முகம்மது ராவுத்தர் சேட் ஆவார். ரூபாய் இரண்டு லட்சம் மதிப்புள்ள 8000 பங்குகளை அவர் தனது கம்பெனி சார்பாக வாங்கினார்.

கட்டுரையின் நீளம் கருதி இத்தோடு முடிக்கிறேன். இத்தகைய தியாக சீலர்களை மத்தியில் ஆட்சி பொறுப்பேறுள்ள பிஜேபி கொச்சைப் படுத்துகிறது. என்ன செய்ய போகிறோம்? இந்த வரலாற்றை மக்களிடம் கொண்டு செல்வது நமது கடமையல்லாவா?

உதவியவை: 1 (* K.Rajayyan, South Indian Rebellion, The First War of Independence. 1800-1803,, PP.110-111.). 
2. பேராசிரியர்  நா.வானமாமலை பதிப்பித்து 1971-இல் வெளியான வீரபாண்டிய கட்டபொம்மு கதை பாடல்
 3.  Miltry consultations, Vol.307(19.1.1803), P.1249 - இல் பினாங்குக்கு நாடு கடத்தப்பட்ட 72 பேர் பெயர் பட்டியலில் சேக் உசேன் பெயர் இடம் பெற்றுள்ளது. 
4.சாவர்க்கர்,எரிமலை,பக்கம்.65. 
5.Shan Muhammad, Freedom Movement in India – The Role of Ali Brothers, P.153.  
6.மக்கள் தாரகை, மறைக்கப்பட்ட வரலாறுகளும்…மறைக்கப்படும் உண்மைகளும், சென்னை. 
7. மா.சு.அண்ணாமலை, சும்மா வரவில்லை சுதந்திரம். தினமணிச்சுடர்.4.8.1996.,பக்கம்.9. 
8.  ச.கா.அமீர் பாட்சா, 'இந்திய விடுதலையில் இஸ்லாமியரின் பங்களிப்பு',குர்ஆனின் குரல்,மார்ச் 1998,பக்கம் 39-40.. 

----------------------- 2016 ஆகஸ்ட்  இளைஞர் முழக்கம் இதழில் நான் எழுதிய கட்டுரை --------------------

ஞாயிறு, 20 செப்டம்பர், 2015

மதம் அதன் இயல்பில் இல்லாதபோது ...



மோடி பதவியேற்றது முதல் நாடு முழுவதும் நாள் ஒன்றுக்கு இரண்டு மதக்கலவரங்கள் நடந்து வருகிறது என்ற தகவல் நமது ஊடகங்களால் அவ்வுளவு பெரிதாக கண்டுக்கொள்ளப்படவில்லை. மதத்தின் பெயரால் கலவரங்களில் அல்லது கொலைகளில் ஈடுபடுபவர்கள் எவ்வித அச்சமும் இல்லாமல் அதில் ஈடுபடமுடிகிறது. இதற்கு ஆதரவான தார்மீக உணர்வும், ஆதரவும் மோடியின் ஆட்சியில் எப்படி கிடைக்கிறது என்பது வரலாற்றுப் பூர்வமாக புரிந்துக்கொள்ளப்பட வேண்டியதாகிறது.   

பல்லாண்டுகாலமாக மக்களின் நம்பிக்கை சார்ந்து மட்டுமே இருந்த மதம், நவீன அரசியலின் முடிவெடுக்கும் அதிகாரத்தை எங்கிருந்து பெற்றது? அது நவீன அரசியலில் காலடி எடுத்துவைக்க அடிப்படை எங்கு உருவானது? மன்னர்களும் படைகளும் மட்டுமே கோலோச்சிய அரசியலில் மக்கள் பங்கெடுத்தது எப்போது? இவைகளை கொஞ்சமேனும் தொடர்பு படுத்தாமல் இன்றைய அரசியலின் மதவாத நடவடிக்கையை நம்மால் புரிந்துக்கொள்ள முடியாது.

ஒற்றுமையை குலைக்க பயன் படுத்தப்பட்ட மதம்:

1857ம் ஆண்டு நடந்த ஆங்கிலேயர்களுக்கு எதிரான முதல் விடுதலைப் போராட்டம் இஸ்லாமியர்களும் இந்துக்களும் மதம் கடந்து நடத்திய தீரம் மிகுந்த போராட்டம் ஆகும். பிரிடிஷ்காரர்களுக்கு எதிராக இந்திய சமூகத்தில் முதல் மாபெரும் ஒன்றினைவாக இது திகழந்தது. இந்தியாவை தொடர்ந்து ஆள வேண்டுமெனின் இந்த ஒற்றுமைமை சீர்குலைக்காமல் முடியாது என்பதையும் ஆங்கிலேயர்கள் புரிந்துக்கொண்டனர். அந்த போராட்டத்தை இரத்த வெள்ளத்தில் மூழ்கடித்த பிறகுதான் கிழக்கிந்திய கம்பெனியிடமிருந்து நேரடியாக ஆட்சியதிகாரத்தை ஆங்கிலேய அரசாங்கம் பெற்றுக்கொண்டது. 

அதன் பிறகு பல ஆண்டுகள் கழிந்து ஆயுதங்களற்ற அரசியல் போராட்டங்கள் துவங்கின. அரசியல் இயக்கங்கள் தோன்றின. முதல் விடுதலைப் போருக்கு 26 ஆண்டுகள் கடந்து 1885ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி தோன்றிய பின்னணி ஆங்கிலேய அரசாங்கத்திடம் இந்திய உயர் வர்க்கத்திற்கு சலுகைகள் பெறுவதாகவே இருந்தது. ஆனால் அதன் பிறகு வெகுஜனங்களை ஈர்க்கும் சக்தியாக மாற்றம் கொண்டது. அதுவும் காந்தி அவர்கள் தலைமையேற்றதும் அதன் வீரியம் அதிகமானது. இதே நேரத்தில்தான் நவீன அரசியல் சகாப்தம் இந்தியாவில் ஏற்பட்டது. தொழிற்சாலைகளும், ஒரு ஆலையின் கீழ் திரண்ட தொழிலாளர் திரளோடும், பரவலாக படித்த முதல் தலைமுறையோடு எழுந்தது.

இதற்கிடையில் நாடெங்கிலும் பரவிக்கொண்டிருந்த தேசிய விழிப்புணர்வும், ஆங்கிலேய எதிர்ப்பு போராட்டத்தையும் அடக்குவதற்காகா அனைத்து வழிகளையும் ஆங்கிலேயர்கள் பயன்படுத்த துவங்கினர். அதில் முக்கியமானது மதரீதியாக மக்களை பிரித்தாள்வது ஆகும். இதன் ஒரு பகுதியாக கேர்சன் பிரபு வங்காளத்தை பிரிக்க முயன்றது ஆகும். இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்குமிடையில் பகைமையை உருவாக்க இது பயன்பட்டது. தேசிய இயக்கத்தின் தலைமையில் இரு மத்தத்தை சார்ந்த மக்களும் போராடியதால் அந்த ஒற்றுமைக்கு வெற்றி கிடைத்தது.

இந்த தோல்வி ஆங்கிலேயர்கலை இரு பக்கம் உள்ள மதவாத அமைப்புகளுக்கும் தூபம் போட்டு வளர்க்க தேவையை உருவாக்கியது. ஒத்துழையாமை இயக்கமும், காங்கிரஸ் மற்றும் கிலாபத் இயக்கங்களும் சேர்ந்து வளர்த்து வந்த ஒற்றுமையும் ஆவேசமும் சௌரி சௌரா சம்வத்தை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டதால் தேக்க நிலையை அடைந்தது. இந்த நிலையை பயன்படுத்தி ஆங்கிலேயர்கள் இந்துமதவெறியர்களை தூபம் போட்டு வளர்த்தனர். பல்வேறு இடங்களில் வகுப்பு மோதல்கள் வெடித்தது.

இந்து முஸ்லீம் ஒற்றுமை, அகிம்சை, தீண்டமை ஒழிப்பு போன்ற முழுக்கங்கங்கள் வகுப்பு கலவரங்கள் மூலம் பின்னுக்கு தள்ள முயற்சிக்கப்பட்டது. இது ஒரு புறம் எனில் மற்றொரு பக்கம் ஆங்கிலேயர்கள் உருவாக்கிய வேலை வாய்ப்புகளில் வாய்ப்பு பெருவதற்காக வகுப்புவாத தீ பற்றவைக்கப்பட்டது, 

விடுதலை முழக்கத்துடன் இணைக்கப்பட்ட மதம்:

மதம் இந்திய விடுதலைப் போராட்டத்தின் மையப்பகுதிக்கு வர ஒரு முக்கிய காரணமாக இந்திய தேசிய காங்கிரஸ் தலைமை பீடத்தில் அமர்ந்திருந்த பால கங்காதர திலகர், பிபின் சந்திர பால், லாலா லஜபத் ராய் ஆகியோர் முக்கிய காரணமாய் இருந்தனர். பார்ப்பன சிந்தனைகளையும், பிற்போக்குதனங்களையும் இவர்கள் முழுமையாக உளபூர்வமாக நம்பினர். மேற்கண்ட மூவரும் ஆரிய சமாஜம், பிரம்ம சமாஜம் ஆகியவற்றுடன் கொண்டிருந்த நெருக்கத்தின் காரணமாகவும், தங்களுக்கே உரித்தானதொரு தினி சமூக கண்ணோட்டத்தின் காரணமாகவும் மற்றவர்களால் கூர்ந்து கவனிக்கத்தக்கவர்களாக இருந்தனர். 

காங்கிரசிலும் இந்துமகாசபையிலும் ஒரே நேரத்தில் அங்கம் வகித்து செயல்பட லாலா லஜ்பத் ராய்க்கு தடையேதும் இருந்ததில்லை. சிவாஜி பூஜைகளையும், வினாயகர் விழாக்களையும் விடுதலை போராட்டத்தின் ஒரு பகுதியாக சித்தரித்து காட்டுவதில் திலகருக்கு எந்த தயக்கமும் இருந்ததில்லை. ஆனால் 1920களுக்கு பின் காங்கிரசில் பிறந்த காந்தி யுகம் இந்த பாதைகளுக்கு நேர் எதிர் நிலைபாட்டை எடுத்தது. 1932 ஜூலை 13 தேதி  ""யங் இந்தியா""வில் காந்தி ''அரசியலில் திலகரின் கொள்கையைவிட கோகலே அவர்களின் கொள்கையைதான் நான் பெரிதும் ஆதரிப்பேன்"" என எழுதிய பின்னணியில் இதை புரிந்துக்கொள்ளலாம்.

மைய அரங்கிற்கு வர முயன்ற மதவாதம்:

இந்தியாவில் காங்கிரஸ்காரர்கள் - கம்யூனிஸ்டுகள் - சோசலிஸ்டுகள் - முஸ்லீம் லீக் அமைப்பினர் - பல்வேறு புரட்சிகர குழுக்கள் ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து தீரத்துடன் போராடிக்கொண்டிருந்த போது இந்து மாகா சபையும், ஆர்.எஸ்.எஸ் இயக்கமும் ஆங்கிலேயர்களுக்கு சேவை செய்துக்கொண்டிருந்தனர். அதிலும் குறிப்பாக ஆர்.எஸ்.எஸ் தன்னை ஒரு காலாச்சார அமைப்பு என்ற போர்வைக்குள் ஒளித்துக்கொண்டு ஒரு அகண்ட பாரதத்தை அமைக்கும் கனவில் இருந்தது. நானாஜி தேஷ்முக் வெளிபடையாகவே கூறினார் ""தங்களுக்கு அரசியல் ரீதியான கடைமைகளும் இல்லை, இந்து கலாச்சாரத்தை பாதுகாக்கின்ற இந்து ராஷ்டிரத்தை அமைப்பதற்கான கலாச்சார கடமைகள் மட்டுமே இருக்கிறது""

ஆனால் அவர்களின் நோக்கம் வகுப்புக் கலவரங்கள் மூலம் இந்த நாட்டை ஒரு மதவாத நாடாக மாற்றுறுவதாகவே இருந்தது. ஆர்.எஸ்.எஸ் துவங்கிய இரண்டாம் ஆண்டில் (1927) நாக்பூரில் நடந்த முதல் ஷாகா முடிந்த இரண்டாம் வாரத்தில் நன்கு திட்டமிடப்பட்ட வன்முறை கலவரத்தை இஸ்லாமிய மக்களுக்கு எதிராக துவக்கியது. அதன் தொடர்ச்சி விடுதலைக்கு பின்னரும் தொடர்ந்தது. ஜபல்பூர், ராஞ்சி, அலிகர், பீவாண்டி, அகமதாபாத், ஹைதராபாத், பகல்பூர், பதௌன், மீரட், கரீம்கஞ்ச், சயிஸ்ப, நாசிக், பம்பாய், கன்னியாகுமரி, கோவை, தலைச்சேரி என தொடர்கிறது.

1970ல் பிவாண்டி, ஜல்கோன், மகத் ஆகிய இடங்களில் நடந்த வகுப்பு கலவரங்கள் குறித்து விசாரித்த மதன் கமிஷன் கீழ்வருமாறு குறிப்பிடுகிறது. ""வகுப்பு மோதல்கள் திடீரென எதிர்பாராமல் தோன்றுபவை அல்ல. ஒரு குறிபிட்ட கால திட்டமிட்ட செயல்களின் மூலமே அவை வெடிக்கின்றன. வகுப்புவாத வன்முறையைத் தூண்டும் பிரச்சாரங்கள், வகுப்புவாத சாயம் பூசப்படும் சின்னஞ்சிறு மோதல்கள், இட்டுக்கட்டப்பட்ட பொய்கதைகளையும், அவதூறுகளையும் திட்டமிட்டு பிரச்சாரம் செய்தல். இவற்றின் மூலமாக மனித மனங்களில் மாச்சர்யங்களையும், பகைமையையும் விதைத்து அவர்களின் சிந்தனைப் போக்கை வன்செயல்களில் ஈடுபடத் தூண்டுவது இவைதான் கலவரங்களுக்கான செயல் திட்டம்""

இதர சமூதாயங்களின் ஆச்சாரங்களை நையாண்டி செய்தல், குறிப்பக முஸ்லீம்களை தேச துரோகிகள் - பாக்கிஸ்தான் ஏஜெண்டுகள் என பிரச்சாரம் செய்தல், ஓட்டு பெருவதற்காக முஸ்லீம்களை இங்குள்ள அரசியல் கட்சிகள் ஆதரிப்பதாக பிரச்சரம் செய்தல், இந்துக்களின் உரிமைகளையும், வாய்ப்புகளையும் முஸ்லீம்கள் தட்டிப்பரிப்பதாக கூறுதல், பிரிவினையின் போது முஸ்லீம்களால் நடத்தப்பட்டதாக கூறப்படும் கொடூரமான கற்பனை கதைகள், கடந்த கால முஸ்லீம் மன்னர்கள் கோவில்களை தகர்த்தார்கள் என தொடர்ந்து பிரச்சாரம் செய்தல் என சாதாரன மத நம்பிக்கை கொண்ட மக்களிடம் அவர்கள் செய்கின்ற பிரச்சாரம் சமூகத்தில் ஒருவிதமான ஆதரவை அவர்கள் பெற தளம் அமைக்கிறது.    

வினைக்கு எதிர்வினையாக:

இந்து மதவாதிகளில் இந்த திரட்டளுக்கு எதிராக இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளும் தங்களை ஒன்றினைக்க தொடர் முயற்சிகளை மேற்கொண்டன 1906 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட முஸ்லீம் லீக் விடுதலைப் போரில் முக்கிய பங்காற்றியது. ஆனால் 1925 ஆண்டுக்கு பின்னால் அதன் தலைவர்களில் ஒருசிலர் சிந்தனை மாறத்துவங்கியது. காரணம் 1925ல் துவங்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ். இயக்கம் இந்துஸ்தான் என்ற கோஷத்தை முன்வைத்து வகுப்புவாத திரட்டலை மேற்கொள்ளத் துவங்கியதும் அதற்கு எதிர்வினையாக பாகிஸ்தான் என்ற கோஷம் உருவாக துவங்கியது. 

பெரும்பான்மை இந்துக்கள் கொண்ட நாட்டில் சிறுபான்மை இஸ்லாமியர்களுக்கு எவ்வித பாதுகாப்பும் இருக்காது என பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. நாடு முழுவது நடந்த வகுப்புக் கலவரங்கள் இந்த அச்ச உண்ர்வை மேலும் வலுவூட்டியது. இதைதான் ஆங்கில ஆட்சியாளர்களும் எதிர்பார்த்து காத்திருந்தனர். 

இஸ்லாமியர்களுக்கான தனி தேசத்தின் தேவை வலியுறுத்தப்பட்டதை அவர்கள் மறைமுகமாக ஆதரித்தனர். ஏற்கனவே அவர்கள் 1.89 லட்சம் சதுர மைல் பரப்பளவு கொண்ட, 8 கோடி மக்கள் வசித்து வந்த வங்காத்தை 1905ம் ஆண்டு மத அடிப்படையில் பிரித்தத்ற்கு கடுமையான எதிர்ப்பு இருந்தது. இந்த எதிர்ப்பு அடங்கவேண்டுமாயின் இஸ்லமியர்கள் தனிநாடு கோரிக்கை அவர்களுக்கு அவசியமானதாக இருந்தது.

ஆனால் இஸ்லாமியர்களும் இந்துக்களும் இணைந்து அரசியல் ரீதியாக ஒற்றுமையாக தொடர்ந்து போராடியதன் விளைவாக 1911ம் ஆண்டு கிழக்கு வங்கமும் மேற்கு வங்கமும் ஒரே வங்கமாக மீண்டும் இணைந்தன. இந்த ஆங்கிலேயர்களின் தோல்வி அவர்களுக்கு தீரா வடுவாக இருந்தது. எனவே ஒரு பிருமாண்டமான நிலப்பரப்பும், மக்கள் தொகையும் கொண்ட நாட்டை அப்படியே வைத்திருத்தல் நலமல்ல என உண்ர்ந்தனர். அதற்கு இந்திய நாட்டின் ஒற்றுமையான இயல்பை உடைக்க மதத்தை பயன்படுத்தினர்.

இரு மத அடிப்படைவாத சக்திகளும் ஒன்றுக்கொன்று பரஸ்பரம் உதவிகொண்டன, இரு அடிப்படைவாத அமைப்புகளையும் ஆங்கிலேய அரசாங்கம் தூபம் போட்டு வளர்த்தது. அதன் விளைவுகளை தேசம் அறுவடை செய்து 68 ஆண்டுகள் ஆகின்றது. பாக்கிஸ்தான் போல இந்துஸ்தான் படைக்கத்துடிக்கும் அமைப்புகள் மெல்ல மெல்ல தேசமெங்கும் பரவி வருகிறது. அந்த கொள்கையை கொண்ட ஒரு அமைப்பில் நச்சு பாம்பு ஆட்சியதிகாரத்தை கைபற்ற முடிந்திருக்கிறது.

மதம் அதன் இயல்பில் இல்லாதபோது:

இப்போது பிரச்சினை மதம் அல்ல. மதவாதம்தான். காந்தியை விட சிறந்த இந்து மதபற்றாளர் யாரும் இல்லை. ஆனால் அவர் மதத்தை தனக்கான தனிபட்ட பண்பாக வைத்திருந்தார். அதனால்தான் அவரது பிராத்தனை கூட்டங்களில் ஈஸ்வர அல்லா தேரே நாம் என முழுங்க முடிந்தது. அவரது பிராத்தனைகளில் இந்து - இஸ்லாம்- கிருத்துவ மத வாசகங்களை சொல்ல முடிந்தது. ஆனால் மத அடிப்படைவாதம் பிற மதங்களின் மீது துவேஷ்த்தையே அடிப்படையாக கொண்டு இயங்குவது. அதனால்தான் மாற்று மதத்தவர் மீது அவர்களால் அன்பு பாராட்ட முடியவில்லை. கொடூர கொலைகளையும், அரக்கத்தனமான தாக்குதலைகளையும் நடத்த முடிகிறது.

இந்திய விடுதலைப் போரட்டத்தின் தலைமை பொறுப்பில் இருந்த இந்திய முதலாளிகளுக்கு நீண்டகாலம் காங்கிரஸ் பேரியக்கம் தங்களின் வளங்களை பெருக்க சேவை செய்யும் கருவியாக இருந்தது. இந்திய தேசிய முதலாளிகள் இப்போது மாபெரும் சர்வதேச சந்தையில் போட்டியிரும் அளவு பன்னாட்டு பெருமுதாளிகளாக வளர்ச்சி பெற்றுள்ளனர். காங்கிரஸ் மீதான கவர்ச்சி நவீன பொருளாதர கொள்கை அமலாக்கத்தால் உதிரத்துவங்கியதும் அந்த இடத்தில் அதே கொள்கையை அதைவிட அதிகம் நேசிக்கும் ஒரு கட்சியை அமர வைத்துள்ளனர். ஆனால் இப்போது நடந்திருப்பது ஆட்சி மாற்றம் மட்டுமல்ல.

இந்திய அரசியல் கட்டமைப்பை, மக்களின் வாழ்க்கை, மதசார்பற்ற பண்புகளை, மதத்தின் பெயரால் சிதைத்து போடும் ஒரு தத்துவ மாற்றம். இந்து மதவாத அமைப்புகளின், சித்பவன பார்பனர்களின் கனவான இந்து ராஸ்டிரம் அமைப்பதற்கான முயற்சி. அதனால்தான் ஆர்.எஸ்.எஸ் சேவகனான மோடியின் ஆட்சியில் நாள் ஒன்றுக்கு இரண்டு மதக் கலவரங்கள் நடப்பதை பார்த்துக்கொண்டு இருக்கிறோம். சமூக கட்டமைப்பில் மதம் அதன் இயல்பில் இல்லாமல் அரசியல் அரங்கில் நுழைகின்றபோது சமூக இயல்பை நாசப்படுத்தும் என்பதற்கான துவக்கம்தான் இது. இனிதான் அதன் முழு பரிமாணம் இனிதான் சமூகத்தின் பொதுபுத்தியை ஆட்கொள்ள இருக்கிறது.

இந்திய வரலாற்றின் வழிநெடுக மதம் தன் அடையாளத்தை தூவியபடியே வந்துள்ளது. மதம் மதவாதமாக மாறாமல் பாதுகாக்க அதை ஒட்டுமொத்தமாக புரக்கணிக்காமல், அதன் இயல்பை உள்வாங்கி செரிக்கவேண்டி இருக்கிறது, மார்க்ஸ் கூறுவது போல ""ஒடுக்கப்பட்ட மக்களின் ஏக்கப் பெருமூச்சாக, இதயமற்றவர்களின் இதயமாக, துன்பங்களை மறக்கச் செய்யும் (அபின்) போதைபொருளாக"" வினையாற்றும் போது நாம் இன்னும் ஆழமான விவாதங்களை முன்னெடுக்க வேண்டியுள்ளது. விவாதங்களை துவக்குவோம்!   

-- ஆகஸ்ட் இளைஞர் முழக்கம் இதழில் வெளியான எனது கட்டுரை