கடற்கரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கடற்கரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 12 மார்ச், 2015

பாலையாகும் நெய்தல் நிலம் ?


13 மாவட்டங்களை உள்ளடக்கி 1076 கிலோமீட்டரில் 551 கிராமங்களில் வசிக்கும் சுமார் எட்டு லட்சம் மக்கள் தொகையைக் கொண்டது தமிழகத்தின் நெய்தல் பகுதியான கடற்கரை. சரியாக பத்து ஆண்டுகளுக்கு முன்னர் கடற்கரையோர மக்களை வாரி சுருட்டி எறிந்த சுனாமிக்கு முன்புவரை தமிழகத்தின் சமவெளி மனிதர்களுக்கும் கடற்கரையோர சமூகத்திற்குமான உறவு என்பது சந்தையில் மீன்பேரம் பேசுவதைத் தவிர அதிகம் இருந்தது கிடையாது. சுனாமிதான் அம்மக்களின் துயரை வெளிஉலகிற்கு கொண்டு வந்தது. ஆனால் இந்திய மற்றும் பன்னாட்டு முதலாளிகளுக்கு இந்த சுனாமி கடற்கரையை ஒரு தங்கச் சுரங்கமாய் அடையாளப் படுத்தியது.

மூலதனக்குவிப்பு உள்நாட்டு, வெளிநாட்டு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களிடம் மறுவாழ்வு பணிகளை விட்டுவிட்டு அதை அதிகாரிகள் மூலம் ஒருங்கிணைக்கும் பணிகளைமட்டுமே தமிழக அரசு மேற்கொண்டது. எண்ணற்ற தொண்டு நிறுவனங்கள் வந்தன. உண்மையில் மக்களுக்காக சில அமைப்புகள் பணியாற்றவும் செய்தன. அதன் பிறகான ஆண்டுகளில் கடற்கரையில் கடுமையான மாற்றங்கள் துவங்கின.

பலவகையான கணக்கெடுப்புகள் நடந்தன. சுனாமியால் பாதிக்கப்பட்டவர் களை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் ஏராளமான படகுகள் குவிக்கப்பட்டன. படகுகள் அதிகமானதால் போட்டிகள் அதிகமாயின. விசைப்படகுகளின் விசை அதிகரிக்கப்பட்டது. சாதாரண வலைகளைப் பயன்படுத்திய கிராமங்களில் எல்லாம் இரட்டைமடி வலையும், சுருக்கு வலையும் சகஜமானது. கரையோரம் கட்டுமரங்களில் சென்று மீன் பிடித்தவர்களின் நிலை மோசமானது. உள்ளூர்ச் சந்தைகளுக்கான மீன் பிடிப்பு சர்வதேசச் சந்தையை நோக்கி திருப்பப்பட்டது.

பெரும் மூலதனம் மீன்பிடித் தொழிலில் இறங்கியது. மற்றொரு பக்கம் பேரிடரை முன்வைத்து புதிய வகையான மூலதனக் குவிப்பு கடற்கரையை நோக்கிவரத் துவங்கியது. பல்வகை தொழிற்சாலைகள், அனல் மின்நிலையங்கள், எண்ணெய்ச் சுத்திகரிப்பு மண்டலங்கள், நிறுவனங் களுக்கான சிறிய துறைமுகங்கள், ஜவுளிப் பூங்காக்கள், கப்பல் கட்டும் நிறுவனங்கள் என படையெடுக்கத் துவங்கின. உதாரணமாக கடலூர் ஓ.டி முதல்பரங்கிப்பேட்டை வரையிலான 30கி.மீ. தூரத்தில் மட்டும் சுமார் 8000 ஏக்கர்நிலங்கள் வாங்கப்பட்டுள்ளன. சுமார் 50 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் இப்படியான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஏற்கனவே `சிப்காட்’ ரசாயன வளாகங்களால் இந்தியாவின் அபாயமான கடற்கரையாக அறியப்பட்ட கடலூரின் நிலை மேலும் மோசமானது.

அதேபோல நாகப்பட்டினம் மாவட்டத்தில் சீர்காழி, தரங்கம்பாடி, கீழையூர் ஆகிய வட்டங்களில் 14 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் 12 அனல் மின்நிலையங்களுக்கான பணிகள் துவக்கப்பட்டுள்ளன. மற்றொரு பக்கம் தூத்துக்குடி மாவட்டத்தில் 20 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய 16 அனல் மின்நிலையங்களுக்கான பணிகள் துவக்கப்பட்டுள்ளன. ஆக இந்த மூன்று மாவட்டங்களிலும் இன்னும் சில ஆண்டுகளுக்குள் 50 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிடல் உள்ளது.

ஆக்கிரமிப்புகள்... மீறல்கள்... அழித்தல்கள்...

தமிழகத்தில் இத்தனை அனல்மின் நிலையங்கள் துவக்கப்பட்டால் மின் தட்டுப்பாடு முழுமையாக நீங்கிவிடும் என்று பிரச்சாரம் செய்யப்படுகிறது. ஆனால் எந்த ஒரு நிறுவனமும் தமிழக அரசுடன் இதற்கான ஒப்பந்தம் போட்டதாகத் தெரியவில்லை. புதிய தொழிற்சாலைகள் ஒரு பகுதிக்குச் செல்லும் போது ஆட்சியாளர்கள் வைக்கும் முழக்கம் “நாட்டின் வளர்ச்சிக்கு இது அவசியம்” என்பதுதான்.

இந்த வளர்ச்சி என்றமுழக்கம் பலரை நம்பிக்கை கொள்ளச்செய்கிறது. இது யாருக்கான வளர்ச்சிஎன்ற கேள்வி எங்கும் எழுப்பப்படுவதில்லை. உலகமய அமலாக்கத்தின் முன் அனுபவங்களைப் பார்க்காமல் வளர்ச்சி வரும் என்ற வார்த்தைகளை நம்புகின்றனர். தொழில்மயம் வேலை வாய்ப்பை பெருக்கும் என்பது உலகமயச் சூழலில் பகல் கனவாய் மாறியதுதான் கடந்த இரு பத்தாண்டு கால அனுபவம். மிகப்பெரும் நிறுவனங்களை துவங்கும் போது அவர்கள் சொல்லும் உறுதி மொழிகள் கட்டமைப்புப் பணிகள் முடிந்ததும் வெற்று வாக்குறுதிகளாகவே இருந்து விடுவதுதான் வேதனை.

மற்றொரு பக்கம் இப்படி கடற்கரை சார்ந்து வரும் தொழிற்சாலைகள் செய்யும் சட்ட மீறல்களும், புதிய அரசியல் புரோக்கர்களை வைத்து செய்யும் அடாவடிகளும் வெளி உலகிற்குத் தெரிவதில்லை. நிறுவனங்களுக்கு இடைத்தரகர்களாக இருக்கும் இவர்கள் மக்களைப் பிரித்தாள மிக இயல்பாக சாதி, வட்டார வெறியைக் கிளப்பி விடுகின்றனர். நிறுவனங்களில் கிடைக்கும் ஒப்பந்தத் தொழிலுக்காக நில உடமையாளர்களை இந்த தரகர்கள் கட்டாயப்படுத்தி நிலம் அபகரித்த கதைகள் ஒரு நூறு இருக்கிறது.

பரங்கிப்பேட்டை பகுதியில் இரவு 12 மணி வரை பத்திரப் பதிவு அலுவல கங்கள் செயல்பட்டது ஒரு சிறிய உதாரணம். மக்கள் பயன்பாட்டில் உள்ள தரிசுநிலங்கள், சுடுகாடுகள், பள்ளி விளையாட்டு மைதானங்கள், மீனவர்களின் பாரம்பரியமான மீன்பிடித் தளங்கள் கைப்பற்றப்பட்டன. சுனாமியிலிருந்து இயற்கையாய் மக்களை பாதுகாத்த மணல் குன்றுகள்  சமப்படுத்தப்பட்டன. வரலாற்றுப் புகழ்மிக்க கால்வாய்கள் சீரழிக்கப்பட்டன.

பொய்யான ஆய்வுகள்... கசப்பான உண்மைகள்

கடற்கரையோரம் வருகின்ற பல்வேறு நிறுவனங்கள் அங்கு உள்ள நிலைமையை முழுமையாக ஆய்வு செய்வதில்லை, அப்படியே செய்தாலும் உண்மை நிலையைச் சொல்வதில்லை. பல்வேறு நிறுவனங்கள் தங்களது சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையில் பொய்யான தகவல்களையே சொல்லி உள்ளனர். உதாரணமாக கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் பணிகளை மேற்கொண்டுள்ள ஐ.எல்.எப்.எஸ் என்றஅனல்மின் நிலையம் தனது அறிக்கையில் மாங்குரோவ் காடுகள் உள்ள பிச்சாவரத்தை 12 கி.மீ. தூரத்திற்கு அதிகம் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

ஆனால் உண்மை அதற்கு மாறாக உள்ளது. 6 கி.மீ.க்குள்தான் மாங்குரோவ் காடுகள் உள்ளன. அதே போல வேளங்கி ராயன்பேட்டை கிராமத்தில் கப்பல் கட்டும் தொழிற்சாலைக்கு அனுமதி பெற்றுபொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட் டம் நடத்திய குட் எர்த் ஷிப் யார்டு என்றநிறுவனம் மறைமுகமாக பாஸ்பேட் இரசாயன நிறுவனத்தை கொண்டு வருவது கண்டறியப்பட்டு சி.பி,எம் சட்ட மன்ற உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் தடுத்து நிறுத்தப்பட்டது. நிறுவனங்கள் அமைந்தால் வேலைவாய்ப்பு பெருகும், இத்தனை ஆயிரம்பேருக்கு நேரடி, மறைமுக வேலைகள் கிடைக்கும் என தங்களது அறிக்கைகளில் நிறுவனங்கள் கூறும். ஆனால் உண்மை மிகவும் கசப்பானது. நாகைமாவட்டம் பிள்ளைபெருமாள் பேட்டையில் நிலம் கையகப்படுத்தும் போது உள்ளூர் மக்கள் அனைவருக்கும் வேலை கொடுக்கப்படும் என அறிவித்தனர். ஆனால் தற்போது அங்கு விரல்விட்டு எண்ணும் அளவில்தான் உள்ளூர் மக்கள் வேலை செய்கின்றனர். கட்டுமானப் பணிகளில் உள்ளூர் அல்லது தமிழகத்தைச் சார்ந்த தொழிலாளர்கள் ஈடுபடுத்தப் படுவதில்லை.

வடமாநில இளைஞர்களே ஈடுபடுத்தப்படுகின்றனர். திறன்மிக்க தொழிலாளர்கள் தேவை என்று அவர்கள் கூறினாலும் அதில் முழுமையான உண்மை இல்லை. குறைந்த கூலியில் உழைப்பைச் சுரண்ட அவர்களை கொத் தடிமைகளாய் கொண்டு வருகின்றனர். அப்பணிகளை உள்ளூர் இளைஞர்கள் செய்ய நேர்ந்தால் அவர்களுக்கு அதிகக் கூலி கொடுக்கவேண்டும் என்பதும், சங்கம் அமைப்பார்கள் என்பதும்தான் புறக்கணிப்புக்கான அடிப்படைக் காரணமாகும்.

மிரட்டலும் அகற்றுதலும் அப்புறப்படுத்தலும்

மீனவர்களின் வாழ்க்கை மோசமானதாக மாறிக் கொண்டிருக்கிறது. அவர்கள் பாரம்பரியமாக படகுகளை நிறுத்தும் இடங்கள், வலைகளை காயவைத்த இடங்கள், கடல் புறம்போக்கு நிலங்கள் எல்லாம் நிறுவனங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. நாகார்ஜூனா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம் கடற்கரையில் நீளமாக வேலி அமைத்து அந்நியர்கள் அத்துமீறி பிரவேசிக்கக்கூடாது என மீனவ மக்களை எச்சரிக்கிறது. கடற்கரை சார்ந்த பல்வேறு சட்டங்களை மீறி கடற்கரையில் மிகப்பெரிய கட்டுமானப் பணிகள் நடக்கின்றன.

கட்டிடங்கள் எழுப்பப்படுகின்றன. கடலூரில் சிப்காட் வளாகத்தின் ரசாயனக் கழிவுகள் பரவனாற்றின் வழியாகவும், நேரடியாகவும் கடலில் கலக்கப்படு கிறது. மீன்பிடியைத் தவிர வேறு தொழில்களை இச்சமூகம் இன்னும் பழகவில்லை. அவர்கள் வெளியேற்றப்படுவது இன்னும் சில ஆண்டு களில் நடக்க அதிகம் சாத்தியம் உள்ளது. இது அந்த சமூகத்தில் கடுமையான நெருக்கடியை உருவாக்கும்.

கடற்கரையோரவாழ்க்கைச் சூழல் பாதிப்பு

கடற்கரை சார்ந்த மீனவர்களின் வாழ்க்கை மட்டும் பாதிக்கப்படவில்லை. கடற்கரையோரம் உள்ள நிலங்கள் கையகப்படுத்தப்பட்டதால் அதை நம்பிவாழ்ந்த விவசாயிகள் மற்றும் அதிக எண்ணிக்கையில் உள்ள விவசாயத் தொழிலாளர்கள் கடுமையான பாதிப்புக் குள்ளாகி உள்ளனர். குறிப்பாக பெண் கள் படும் துயரைச் சொல்லவும் வழி இல்லாமல் தவிக்கின்றனர். காடுகள் அழிக்கப்பட்டு சமவெளியாக மாற்றப்படுவதால் அவர்களது வாழ்க்கைச் சூழல் முழுமையாகப் பாதிக்கப்படுகிறது.

உள்ளூரில் அவர்களுக்கு கிடைத்த வேலைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டன. வேலைக்காக அருகில் உள்ள நகரங்களுக்கோ அல்லது பிற கிராமப் பகுதிகளுக்கோ செல்ல நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். மிக எளிதாக கிடைத்த உணவுக்கான பொருட்கள், விறகுகள் பணம் கொடுத்தால் மட்டுமே கிடைக்கும் சூழல் உருவாகி உள்ளது. இதனால் முதலில் பாதிக்கப்படுவது பெண்கள்தான். திடீரென அங்கு ஏற்பட்ட மாற்றங்கள் அவர்களை நிலைகுலையச் செய்துள்ளன.

கடற்கரையோர மாற்றமும் அங்கு எழுந்துள்ள பிரச்சனைகளும் வெறும் “தேச வளர்ச்சி” என்ற ஒற்றைச் சொல்லாடல் மூலம் புறம்தள்ளிச் செல்பவை அல்ல. மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. நிறுவனங்கள் மக்கள் வாழ்வாதாரத்தை பற்றி கொஞ்ச மும் கவலைப்படாமல், தங்களது மூலதனப் பெருக்கத்தை மட்டுமே குறிவைத்து அலைகின்றன, உழைப்பாளி வர்க்கத்திற்காக நிற்பவர்களுக்கு இது மிகப் பெரிய சவால்.இந்நிலையில் மக்கள் போராட்டங்கள் மட்டுமே வாழ்வாதாரத்திற்கு குறைந்த பட்ச பாதுகாப்பை உருவாக்கும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் போராடி, பல வழக்குகளை சந்தித்து தற்போதுதான் உள்ளூர் மக்களுக்கு பரங்கிப் பேட்டை அனல்மின் நிலையத்தில் வேலைவாய்ப்பில் ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது,

சுற்றி உள்ள கிராம மக்களுக்கு கான்கிரீட் வீடுகள், கழிப் பிட வசதிகள், பெண்களுக்கு வேலைவாய்ப்பு, கிராமங்களில் சீரழிந்த சாலைகளை புதிதாகப் போடுவது போன்ற ஒப்பந்தத்தின் மூலம் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் முதல் கட்ட ஒப்பந்தத்தை எட்டிஉள்ளது. தமிழகம் முழுவதும் கடற்கரை யோர மக்கள் வாழ்வாதாரத்தை பாதுகாத் திட ஒன்றுபட்ட போராட்டமே தீர்வாகும் என்பதுதான் அந்த ஒப்பந்தத்தின் செய்தி.போராட்டம் தொடர்கிறது. 1076 கிலோமீட் டரை ஒருங் கிணைக்கும் போராட்டமாக இதை விரிவாக்க வேண்டும்.

--------------------------------------12.03.2015 தீக்கதிர் நாளிதழில் வெளியான கட்டுரை

செவ்வாய், 2 ஆகஸ்ட், 2011

கடல்வளமும், நிலவளமும் கார்பரேட் கைகளில்?


 
கடந்த திமுக அட்சியின் போது கடலூர் மாவட்டம் துவங்கி நாகை மாவட்ட எல்லைவரை உள்ள கடற்கரை பகுதிகளை மொத்தமாக இந்திய பெரு முதலாளிகளிடமும், பன்னாட்டு நிறுவனங்களிடமும் விற்பனை செய்த அவலம் நடந்தது. இந்த பகுதிகளில் பல்வேறு நிறுவனங்களை தங்களது கடுமான பணிகளை துவங்கி உள்ளனர். விவசாய நிலங்களும், கடற்கரையும் இந்த நிறுவனங்களால் ஆக்ரமிக்கபட்டன. குறிப்பாக கடலூரில் இந்த ஆக்ரமிப்பு அதிகம் நடத்தது. கிட்டதட்ட 7000 ஏக்கர் மேல் நிலங்கள் பல நிறுவனங்களால் வாங்கப்பட்டது. அடிமாட்டு விலைக்கு வாங்கப்பட்ட இந்த நிலங்கள் ஏதோ எதற்கும் பயன்படாத நிலங்கள் அல்ல. சவுக்கை, முந்திரி, மணிலா, நெல் என பல வகை சாகுபடிகள் நடந்த இடங்களாகும் 

மற்றொரு பார்வையில் இது விவசாயிகளுக்கும் நிறுவனங்களுக்குமான வியாபாரம் மட்டுமல்ல. இந்த நிலங்களை நம்பி வாழ்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாய கூலித்தொழிலாளிகள், மீனவர்கள் வாழ்வாதாரம் சம்பந்தப்பட்டதும் ஆகும். ஆனால் இதுபற்றியெல்லாம் கவலைப்படாமல் நிலங்கள் வாங்கப்பட்டுள்ளன. கடலூரில் இரவு 12 மணிவரை பத்திர பதிவு அலுவலகங்கள் இயங்கிய அவலம் நடந்தது. தங்கள் தாய்மடியான நிலத்தை கொடுக்க மறுத்த விவசாயிகள் காவல்துறை மிரட்டலுடன் அடக்கப்பட்டனர், அவர்களுக்கும் அடங்காதவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் மூலம் மிரட்டப்பட்டனர். இன்று கடலூர் மாவட்ட கடற்கரையோரம் நாளைய வாழ்க்கையை தொலைத்து பல்லாயிரக்கணக்கான மக்கள் என்று விரட்டப்படுவோம் என தெரியாமல் அலைந்து வருகின்றனர்.

வரும் நிறுவனங்கள்

1270 ஏக்கர் பரப்பளவில் கடலூர் பவர் கார்பரேஷன் லிமிட்டெட் என்கிற அனல் மின்நிலையம் தியாகவெளி, நொச்சிகாடு, நடுதிட்டு, சித்திரப்பேட்டை ஆகிய கிராமங்களை உள்ளடக்கி வருகிறது. 1380 ஏக்கர் பரப்பளவில் எஸ்.ஆர்.எம் அனல் மின்நிலையம் பூவாலை, பால்வாத்துன்னான், வேலங்கிப்பட்டு, அலமேலுமங்காபுரம், மணிக்கொள்ளை ஆகிய கிராமங்களை உள்ளடக்கி வருகிறது. 1210 ஏக்கர் பரப்பளவில் நாகார்ஜுனா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை பெரியகுப்பம், பேட்டை நகர், அய்யம்பேட்டை ஆகிய கிராமங்களை உள்ளடக்கி வருகிறது. 730 ஏக்கர் பரப்பளவில் குட் எர்த் கப்பல் கட்டும் தொழிற்சாலை வேலங்கிராயன் பேட்டை, புதுக்குப்பம், கரிகுப்பம் ஆகிய கிராமங்களை உள்ளடக்கி வருகிறது. 400 ஏக்கர் பரப்பளவில் சைமா டெக்ஸ்டைல் பார்க் கோபாலபுரத்தருகில் வருகிறது. 1181 ஏக்கர் பரப்பளவில் ஐ.எல் & எப்.எல் அனல்மின் நிலையம் கொத்தட்டை, அரியகோஷ்டி, வில்லியநல்லூர், பரங்கிப்பேட்டை ஆகிய பஞ்சாயத்துகளில் பல கிராமங்களை உள்ளடக்கி வருகிறது. 

ஏற்கனவே கடலூர் முதுநகர் துறைமுகத்தினை தொடர்ந்து சிப்காட் 1 இல் கிட்டதட்ட 600 ஏக்கரில் 25 மருந்து மற்றும் இரசாயன கம்பெனிகள் இயங்கி வருகின்றன. இதுவல்லாமல் கியூஸெக்ஸ், கிளாரியண்ட், பயோனியர், பாண்டியன் கெமிகல்ஸ், பாயர், ஆரோகிமா நிறுவனங்களும், சிப்காட் 2 இல் 200 ஏக்கர் பரப்பளவில் கெப்ம்ளாஸ்ட் கெமிக்கல் கம்பெனியும் இயங்கி வருகின்றன. இதுவல்லாமல் 100 ஏக்கர் பரபளவில் ஈ.ஐ.டி பாரி கம்பெனி நிலத்தை வளைத்துள்ளது.

ஆக மொத்தத்தில் இரசாயணம், மருந்துவகைகள், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், அனல் மின்நிலையம் ஆகியவைகள் கடலும் கடல் சார்ந்த விவசாய நிலங்களையும் கைகளில் வைத்துள்ளன. கடலூர் முதுநகரிலிருந்து பரங்கிப்பேட்டை வரை உள்ள 100 சதுர கிலோமீட்டர் இவர்களது ஆளுகைக்குள் வந்துள்ளது அல்லது வரப்போகிறது. அதாவது கிட்டதட்ட 75 கிராமங்கள் அடியோடு விரட்டப்படும் நிலை விரைவில் உருவாகும்.

வேலை வாய்ப்பு உருவாகிறது?
பல்லாயிரம் கோடி முதலீட்டில் இங்கு துவக்கபடும் கம்பெனிகளால் இம்மாவட்டத்தில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெருகும் என கடந்த ஆட்சி தம்பட்டம் அடித்தது. மாவட்ட முழுவதும் உள்ள இளைஞர்களுக்கு கூட வேண்டாம், அப்பகுதியில் நிலங்களை கொடுத்த, நிலங்களில் வேலை செய்து வாழ்ந்து வந்த உழைபாளிகளுக்காவது வேலை கிடைத்திருக்கிறதா? அல்லது மிக விரைவில் கடற்கரையிலிருந்து விரட்டப்பட உள்ள மீனவர்களுக்காவது வேலை வாய்ப்பு உருவாகி உள்ளதா? இந்த கேள்விகள் மிகவும் முக்கியமானது. இந்த பகாசூர தொழிற்சாலைகள் நிலங்களை கொள்ளை கொண்டது மட்டுமல்ல தங்களது நிறுவனங்களை உருவாக்க கொடூரமான உழைப்புச் சுரண்டலையும் செய்து வருகின்றனர். நிறுவனங்களின் கட்டுமான பணிகளில் வட மாநில இளைஞர்களே எங்கும் வியாபித்துள்ளனர். மிகவும் சொச்சமான பணிகளிலே தமிழக இளைஞர்கள் ஒட்டிக்கொண்டிருக்கின்றனர். வடமாநில இளைஞர்கள் வேண்டாம் என்பதல்ல இப்பகுதி இளைஞர்களின் கோரிக்கை. அவர்களை அடிமை போல நடத்துவதும். சமவேலைக்கு சமகூலி கொடுக்காமல் சுரண்டுவதும் தங்களை பாதிக்கிறது என்கிறார்கள். 
அதாவது தமிழக இளைஞர்களுக்கு ஒரு நாள் கூலி 300 எனில் வடமாநில இளைஞர்கள் ஒரு நாளைக்கு 100 ரூபாய்தான் பெருகின்றனர். குறைந்த கூலிக்கு வட மாநில இளைஞர்களை புரோக்கர்கள் பிடித்து வருவதால் இப்பகுதி இளைஞர்களுக்கு அதுக்கூலி வேலைக்கூட கிடைப்பதில்லை. ஆயிரக்கணக்கில் கடலூரின் கடற்கரையோர கிராமங்களில் வடமாநில இளைஞர்கள் தங்கி உள்ளனர். இந்த உழைப்புச் சுரண்டல் கடுமையான சமூக முரண்பாடுகளை கடலூர் மாவட்டத்தில் உருவாக்குகிறது. மொத்த கம்பெனிகளும் பல்லாயிரம் மக்களை விரட்டிவிட்டு, நிலங்களை எடுத்து வேலை கொடுப்பது மிகவும் சிலருக்கே. கேட்டால் திறமை உள்ளவர்களுக்கு மட்டுமே வேலை கொடுக்கமுடியும் என்ற வாதம் அறிவுஜீவிகளால் முன்வைக்கப்படுகிறது. அவர்களிடம் உள்ள மீன்பிடிக்கும் திறமையும், விவசாய சாகுபடி திறமையும் கட்டாயமாக பிடுங்கப்படுவது ஏன் கணக்கில் கொள்ளப்படுவது இல்லை. சராசரியாக ஒரு ஏக்கர் விவசாய நிலத்தில் பத்து பேருக்கு வேலை கிடைக்கும் என்றால் இப்பகுதியில் பிடுங்கபட்டுள்ள நிலங்களில் எவ்வுளவு மக்கள் பிழித்திருப்பார்கள் என்பதையும், 20 க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் எவ்வுளவு பேர் வேலையிழக்கப் போகிறார்கள் என்பதையும், இப்படி வேலை இழப்பவர்கள் மாவட்டத்தின் நகர்புறங்களை நோக்கி புலம்பெயரும் போது ஏற்படும் சமூக மாற்றங்களும் மிகவும் சிக்கலை உருவாக்கும் தன்மை சார்ந்தவை.  

விவசாயிகளுக்கு இழப்பீடு!

கடந்த ஐந்து ஆண்டுகளாக அப்பகுதியில் நிலங்கள் பல புரோக்கர்கள் மூலம் எதற்கு நிலம் வாங்கப்படுகிறது என்று சொல்லாமலே வாங்கப்பட்டது. அடிமாட்டு விலைக்கு வாங்கப்பட்ட நிலங்கள் கம்பெனிகள் வேலையை துவங்கிய உடன் விலையேறத் துவங்கியது. குறிப்பாக நாகார்ஜுனா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம் ஒருபுறம் அரசாங்கத்தின் மூலம் விவசாயிகளிடமிருந்து நிலங்களை வாங்கியது. மற்றொரு பக்கம் நேரடியாக புரோக்கர்கள் மூலம் நிலங்களை வாங்கியது. இப்படி வாங்கியதுதான் அதிகம். இன்றைய சந்தை நிலவரத்தில் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் வழக்கு போட்டதும் அரசு வாங்கிக்கொடுத்த நிலங்களுக்கு விலையேற்றப்பட்டது. ஆனால் அவர்கள் நேரடியாக வாங்கிய நிலங்களின் விவசாயிகள் ஏமாற்றப்பட்டார்கள். 
ஆரம்பத்தில் மிகக்குறைந்த விலைக்கு விற்பனை செய்த விவசாயிகள் பல சங்கங்களை அமைத்து போராடத்துவங்கினர். இதில் பல கருத்துக்கள் உள்ள அமைப்புகள் உள்ளது. சில அமைப்புகளின் நோக்கம் கூடுதல் பணம். சில அமைப்புகள் விவசாயத்திற்கு என்று வாங்கப்பட்ட நிலங்களில் கம்பெனியை அனுமத்திக்க முடியாது என்று கூறுகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக விவசாயிகள் அவர்கள் சார்ந்த பிரச்சனையாக மட்டுமே இப்பிரச்சனை அணுகப்பட்டது. ஆனால் இந்த நிலங்களை நம்பி வாழ்ந்த நிலமற்ற தொழிலாளிகள், குத்தகை விவசாயிகள் அவர்களது குடும்பங்கள், கடலோரத்தில் வாழும் மீனவ மக்களின் வாழ்வாதாரம் போன்றவை பொது வெளியில் விவாதத்திற்கு வரவில்லை. அவை தற்போதுதான் பேசப்படுகிறது.
தமிழநாடு விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம், இந்திய தொழிற் சங்க மையம், வாலிபர், மாதர், போன்ற அமைப்புகள் அங்கம் வகிக்கக்கூடிய "கடற்கரையோர மக்கள் வாழ்வுரிமை இயக்கம்" என்ற அமைப்பின் சார்பில் இப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தினை பாதுகாக்க முயற்சிகள் மேற்கொளபடுகிறது.  

தொழில்மயமும் சுற்றுசூழலும்..

தொழிற்சாலைகள் வருவதை யாரும் வரவேற்கவே செய்வார்கள். ஆனால் அது என்ன தொழிசாலை, எவ்வுளவு பேருக்கு வேலை கொடுக்கும், என்ன உற்பத்தி செய்யும், எத்துனை பேரின் வாழ்வை அழிக்கும், சுற்றுசூழலை எப்படி பாதிக்கும் போன்ற பக்க விளைவுகளை பார்க்காமல் தொழிற்சாலை வந்தால் வேலைவாய்ப்பு பெருகும் என்று கூறுவதால் எந்த பயனும் இல்லை. உலகமயம் மூலதனம் லாப வேட்டைக்காக எந்த கொடூர செயலுக்கும் தயாராக இருக்கும். ஒருப்பக்கம் அத்துகூலிகளாக தொழிலாளிகளின் உழைப்பைச் சுரண்டி மற்றொரு பக்கம் எந்திரங்களை புகுத்தி முடிந்த அளவு ஆட்களை குறைக்கும். இயற்கை வளங்களின் மீது எந்தவித அக்கரையும் இல்லாமல் சுரண்டுவார்கள். 

கடலூர் கடற்கரையோரம் இரசாயணம், மருந்து, எண்ணெய், நிலக்கரியை பயன்படுத்தும் அனல் மின்நிலையம், கப்பல்கட்டும் தொழிற்சாலை போன்றவை வரிசையாக வருவதால் இனி கடலூர் கடற்கரை மீன்பிடிக்க இயலாமல் போகும். மேற்கண்ட அத்துனை கம்பெனிகளின் கழிவுகளும் கடலில்தான் கலக்கும். அனல் மின்நிலையங்களின் கொதிநீர் கடலில் கலந்துக் கொண்டே இருக்கும். மற்றொரு பக்கம் மக்கள் நெருக்கமாக வாழும் 75 கிராமங்களுக்குள் அருகருகில் மூன்று அனல் மின்நிலையங்கள் வருவதால் அவைகளின் சாம்பம் மற்றும் மாசு கிராமங்களை போர்வை போல பரட்ந்து போர்த்தும். இராட்சச ஆழ்துளை குழாய்கள் மூலம் நிலத்தடி நீர் உரிஞ்சு எடுக்கப்படுவதால் கடல்நீர் விவசாய விளைநிலங்களை நோக்கி ஈர்க்கப்படும்.

ஆக மீன்வளம், நீர்வளம், நிலவளம், மனிதவளம் இவைகள் மொத்தமாக புறக்கணிக்கப்படும் தொழில்மயம் யாருக்காக? முலதனம் மேலும் மூலதனத்தை பெருக்க மக்களை சுரண்டுகிறது. வளர்ச்சி என்ற பெயரில் இதை ஆதரிப்பதா அல்லது உற்பத்தி சாதனங்களை இழந்த மக்களின் வாழ்வாதரத்தை பாதுகாக்க அவர்கள் பக்கம் நிற்பதா? நீங்கள் மூலதனத்தின் பக்கமா அல்லது உழைக்கும் மக்கள் பக்கமா? என்ற முரண்பாடு முற்றி வருகிறது.