தீக்கதிர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தீக்கதிர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 26 ஜனவரி, 2025

சுவாமி சகஜானந்தாவையும் களவாட முயலும் இந்துத்துவ கும்பல்!

 

 

          கடலூர் மாவட்டத்தில் தோன்றிய இரு ஆளுமைகளில் ஒருவர் பிற்படுத்தாட்ட வகுப்பை சேர்ந்த இராமலிங்க வள்ளலார். மற்றொருவர் ஒடுக்கப்பட்ட வகுப்பை சேர்ந்த சுவாமி  சகஜானந்தா அவர்கள். வள்ளலார் மறைந்து 16 ஆண்டுகளுக்கு பிறகு பிறந்தவர் சுவாமி  சகஜானந்தா. வள்ளலார் சனாதனத்தை எதிர்த்து சண்டமாருதம் செய்தவர். சாதி, மத துவேசங்களை எதிர்த்து களமாடியவர். அணையா அடுப்பு ஏற்றி பசித்த  வயிற்றுக்கெல்லாம் உணவளித்த உத்தமர்.

          சுவாமி  சகஜானந்தா ஒடுக்கப் பட்ட மக்கள் வாழ்வில் கல்வி விளக்கேற்றிய மகத்தான மனிதர். ஒன்றுபட்ட தென்னார்காடு மாவட்டத்தில் உண்டு உரைவிட பள்ளியை துவங்கி ஒடுக்கப்பட்ட சமூகம் முன்னேற உழைத்தவர். வள்ளலார் சனாதனத்தின் உச்சம் என தமிழக ஆளுனர் ரவியை பேசவைத்து தங்கள் அணியில் சேர்த்துக்கொள்ள துடிக்கும்  ஆர்.எஸ்.எஸ்  கூட்டம், அடுத்து  சுவாமி சகஜானந்தாவை குறிவைக்கின்றனர். அவரது  135 ஆவது பிறந்த தினத்தில்  (ஜனவரி 27) அதே ஆளுநரை வைத்து  சிதம்பரத்தில் சுவாமி சகஜானந்தா நிகழ்வை நடத்த உள்ளனர்.

ஆலய நுழைவு உரிமை

எந்த சக்திகள் ஆண்டாண்டு காலமாக ஒடுக்கப்பட்ட மக்களை ஆலயத்திற்கு வெளியே நிற்கவேண்டும் என்று ஆசைப்படுகிறதோ அந்தக்கூட்டத்தை எதிர்த்துதான் சுவாமி சகஜானந்தா  போராடினார். 1939ல் ராஜாஜி முதலமைச்சராக இருந்த போது, சட்டமன்றத்தில் அனைத்து சாதியினரும் ஆலயத்திற்குள் நுழையலாம் என சட்ட மசோதா கொண்டு வந்தார். ஆனால் அந்த மசோதா தோற்கடிக்கப்பட்டது. ஆனாலும் ஆலய நுழைவுக்காக சுவாமி சகஜானந்தா தொடர்ந்து போராடினார். தேச விடுதலைக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு, 1947 ஏப்ரலில் அவரது கனவு நனவாகியது. அனைவரும் ஆலயத்திற்குள் சென்று ஆண்டவனை வழிபடலாம் என்ற சட்டம் நிறைவேற்றப் பட்டது.

          சுவாமி சகஜானந்தா 1926-32, 1936-47 ஆண்டுகளில் சென்னை மாகாண சட்டமேலவை நியமன உறுப்பினராகவும், 1947, 1952,1957 ஆகிய காலங்களில் சிதம்பரம் சட்ட மன்ற தொகுதி உறுப்பினராகவும் இருந்தவர். மொத்தம் 34 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராகத் திகழ்ந்தார். 

பிறப்பும் பின்னணியும்

          ஆரணிக்கு அருகில் உள்ள மேல் புதுப்பாக்கம் என்ற கிராமத்தில் அண்ணாமலை - அலமேலு தம்பதி யினருக்கு 1890ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27ஆம் தான் பிறந்தவர் சுவாமி சகஜானந்தா. அவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் முனுசாமி என்பதாகும். அவர் தனது கிராமத்தில் இருந்த அமெரிக்கன் ஆற்காட் புராட்டஸ்டன்ட் மிஷன் பாடசாலையில் தொடக்கக் கல்வியைப் பயின்றார். அதன் பிறகு  உயர்நிலைக் கல்விக்காக திண்டிவனத்தில் உள்ள பள்ளியில் சேர்ந்தார். அங்கு அவருக்குச் சிகாமணி என்று பெயர் சூட்டப்பட்டது. பிழைப்பு தேடி அவரது பெற்றோர் கோலார் தங்க வயலுக்கு இடம்பெயர்ந்தனர் அவர்களோடு அவரும் அங்கே சென்றார்.

          தனது 17வது வயதில் பெற்றோரை விட்டு வெளியேறினார். பல்வேறு ஊர்களிலும் அலைந்து திரிந்து பல ஆன்மீக கல்வியைப் பெற்றார்.  சென்னை வியாசர்பாடியில் இருந்த சுரபாத்திர சுவாமிகளை அவர்  சந்தித்ததுதான் அவரது வாழ்வில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. அவரது பெயரை சகஜானந்தா என்று மாற்றியவரும் சுரபாத்திர சுவாமிகள் தான். மேலும்  அ. முருகேசம் பிள்ளை  அவர்கள் 1910 ஆம் வருடம் ஜூலை மாதம் சிதம்பரம் தரிசனத்திற்கு சுவாமி சகஜானந்தா அவர்களை அழைத்துச் சென்று சிதம்பரம் ஓமக்குளத்தின் கரையில் ஸ்ரீ ஆறுமுக சுவாமியவர்களும் பின்னத்தூர் ஸ்ரீமத் இலட்சுமணன் அவர்களும் கட்டியுள்ள சிறு கட்டிடத்தில் தங்க வைத்தனர்.

கல்விக் கழகம் கண்டார்

          நந்தனைத் தனது முன்னோடியாக எடுத்துக்கொண்ட சகஜானந்தா அவர்கள், நந்தனின் பெயரில் மடம் ஒன்றையும், கல்விச் சாலை ஒன்றையும் ஏற்படுத்த முடிவெடுத்து 1916 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஏழாம் தேதி  நந்தனார் கல்விக்கழகத்தை நிறுவினார். இதனிடையே அவருக்கு நாட்டுக்  கோட்டை செட்டியார்களின் நட்பு கிடைத்தது. அவர்களின் ஆதரவில் மலேசியா, சிங்கப்பூர், பர்மா, இலங்கை முதலான நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு அங்கெல்லாம் சைவ சமய பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

          அந்தப் பயணம் அவருக்கு உலகமெங்கும் அறிமுகத்தை ஏற்படுத்தியது மட்டுமின்றி அவர் உருவாக்க நினைத்த மடத்துக்கும், கல்விச் சாலைக்கும் நிதியுதவியைப் பெறுவதற்கு உதவியாகவும் அமைந்தது. சுவாமி சகஜானந்தா துவக்கிய நந்தனார் கல்விச்சாலையில் முதலில் 25 மாணவர்கள்தான் சேர்ந்திருந்தார்கள். அது ஒரு கூரைக் கொட்டகையில் நடந்துவந்தது. அதன் பிறகு 1918ஆம் ஆண்டு பள்ளிக்கூடம் கட்டுவதற்கு அப்போது சென்னை மாகாண உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த ஜஸ்டிஸ் சதாசிவ அய்யரால் அடிக்கல் நாட்டப்பட்டது.

          பெண் கல்வியே கூடாது என்று கருதிய 1920-ல், 20 மாணவிகளைக் கொண்டு தொடக்கப்பள்ளியைத் தொடங்கினார் சுவாமி சகஜானந்தா. இதில் மதுரை தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொன்னம்மாள்தான் முதல் பெண் மாணவி. முன்னாள் அமைச்சர் ராஜாங்கம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மருதூர் ராமலிங்கம், வானூர் மாரிமுத்து, சீர்காழி மணி, புதுச்சேரி முருகேசன், அரூர் அன்பழகன், ஐ.ஏ.எஸ். தங்கராஜ் என பலரும் இப்பள்ளியில் படித்த வர்கள்தான். இப்பள்ளியின் பெருமையினைக் கண்டு, மகாத்மா காந்தி, நேரு,  ராஜாஜி, முத்தையா செட்டியார், முன்னாள் முதல்வர்கள் காமராஜர், பக்தவச்சலம், கருணாநிதி, ஜனாதிபதிகள் கிரி, நீலம் சஞ்சீவி ரெட்டி, விஞ்ஞானி ஜி.டி.நாயுடு ஆகியோர் இப்பள்ளியைப் பார்வையிட்டுச் சென்றுள்ளனர். இப்பள்ளிக்கு மகாத்மா காந்தி, காமராஜர், கக்கன் ஆகியோர் புதிய கட்டடங்கள் கட்ட அடிக்கல் நாட்டியிருக்கிறார்கள். 6 நாடாளுமன்ற உறுப்பினர்களும், 28க்கும் மேற்பட்ட உயர் பதவி வகித்த அரசு அதிகாரிகளும் 10,000 க்கும்  மேற்பட்ட ஆசிரியர்களும் இந்தப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் 

ஆன்மீகவாதி மட்டுமல்ல 

          சுவாமி சகஜானந்தாவை ஆன்மீக வாதியாக மட்டும் முன்நிறுத்தும்  போக்கு துவங்கப்பட்டுள்ளது. அவர் ஒரு ஆன்மீகவாதி மட்டுமல்லாமல்  தமிழிலும் சமஸ்கிருதத்திலும் புலவை பெற்றவர். ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த பிரதிவாதி பயங்கரம் சீனுவாசாச் சாரியிடம் அவர் சமஸ்கிருதத்தைப் பயின்றதாக தகவல் உள்ளது. வ.உ.சி. எழுதிய நூல்களுக்கு சுவாமி சகஜானந்தா சிறப்புப் பாயிரம் அளித்துள்ளார். இது அவரது தமிழ்ப் புலமையை எடுத்துக் காட்டுகிறது. வ.உ.சி. மறைந்தபோது அவரது குடும்பத்துக்காக சுவாமி சக ஜானந்தா அவர்களே முன்னின்று நிதி திரட்டி அளித்தார் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.

          அரசியலில் சுவாமி சகஜானந்தாவுக்குத் தெளிவான பார்வை இருந்தது. பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் புரட்சியாளர் அம்பேத்கர் போராடிப் பெற்ற இரட்டை வாக்குரிமையும், தனி வாக்காளர் தொகுதியும், பூனா  ஒப்பந்தத்தின் மூலமாகப் பறிக்கப் பட்டபோது அம்பேத்கருக்கு ஆதரவாகத் தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட மக்களைத் திரட்டிப் பொதுக் கூட்டங்களை நடத்திப் பிரச்சாரத்தை மேற்கொண்டவர் சுவாமி சகஜானந்தா. தாழ்த்தப்பட்ட மக்கள் எல்லா நிலைகளிலும் தமக்குரிய பங்கைப் பெறவேண்டும் என்று விடாமல் வலியுறுத்தியவர் அவர். கோயில்களில், தேவஸ்தான கமிட்டிகளில் ஆதிதிராவிடர்களை உறுப்பினர்களாக்க வேண்டும் என்று அவர் வாதாடினார். திருப்பதி தேவஸ்தானத்தில் அப்படி ஒருவரையாவது நியமியுங்கள் என்று வலியுறுத்தினார்.  

          அப்போது இருந்த ஜில்லா போர்டுகளில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு முறையான பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை. தென்னாற்காடு மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் நான்கில் ஒரு பகுதியாக இருக்கின்றனர். ஜில்லா போர்டில் 40 உறுப்பினர்கள் உள்ளனர். மக்கள்தொகை கணக்குப்படி தாழ்த்தப்பட்டவர்கள் குலம் குறைந்த பட்சம் பத்துப் பேராவது ஜில்லா போர்டில் இடம்பெற்றிருக்க வேண்டும். ஆனால் ஒரே ஒருவர்தான் இருக்கிறார். இது நியாயம் அல்ல என்று முழங்கியவர்.

மணிமண்டபம் அமைத்த  மார்க்சிஸ்ட் கட்சி

          அந்த மகத்தான மனிதருக்கு அவர் வாழ்ந்த மண்ணில் மணிமண்டபம் வேண்டும் என்று 2011 - 15 ஆம்  ஆண்டுகளில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த கே.பாலகிருஷ்ணன்  சட்டமன்றத்தில் குரல் கொடுத்தார். சுவாமி சகஜானந்தா குறித்த குறிப்புகளை அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அளித்து அதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.  இவருடன் சட்டமன்ற உறுப்பினர்  செ.கு. தமிழரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.ராமமூர்த்தி ஆகியோர் குரல் எழுப்பினர். கே.பாலகிருஷ்ணன் கோரிக்கையை ஏற்று   சிதம்பரத்தில் 1 கோடியே 41  லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 2.05 ஏக்கர் நிலத்தில்  சுவாமி சகஜானந்தா மணி மண்டபத்தை தமிழக அரசு அமைத் தது. 

அடிப்படைவாதிகளின் இலக்கு

1959ல் மறைந்த சுவாமி சகஜானந்தா சட்டமன்றத்தில் பேசிய பேச்சுக்கள் எல்லாம்  இப்போதும் ஆவணமாய் கிடைக்கிறது. அதை படிப்பவர்கள்  அவருடைய குரல் யாருக்காக  எழுந்தது என அறிந்துகொள்ள முடியும். இப்படிபட்ட  மகத்தான ஆளுமைகளை ஆன்மீகத்தின் பெயரால் தன்வயப்படுத்தி இவருக்கு பின்னால் இருக்கும், இவர் மீது அன்பு வைத்திருக்கும் ஆயிரக்கணக்கான ஒடுக்கப் பட்ட மக்களை இந்துத்துவ அமைப்புகளுக்கு ஆதரவாக  திரட்ட முயல்கின்றனர். ஆளுனர் ரவி ஓடோடி சென்று  இத்தகைய ஆளுமைகளை சனாதன வாதிகளாக சாயம் அடித்துகொண்டு இருக்கிறார். ஆனால் மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

          சுவாமி சகஜானந்தா அவர்களின் 135 வது பிறந்த  நாளில் அவரது புகழை எல்லோருக்கும் கொண்டு சேர்ப்போம்.

 - எஸ்.ஜி.ரமேஷ்பாபு , மாநிலக்குழு உறுப்பினர்

(25.01.2025 தீக்கதிர் நாளிதழில் வந்த கட்டுரை)

புதன், 25 டிசம்பர், 2024

வர்க்கப் போராட்டத்தின் தமிழக அனுபவம் வெண்மணி


 

அந்த சம்பவம் நிகழ்ந்து 56  ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. ஆனால் அதன் வெப்பம் இன்னும் ஆறாமல் கனன்றுகொண்டே இருக்கிறது. வெண்மணி ஒரு கிராமத்தின் பெயர்மட்டுமல்ல, வர்க்கப் போராட்டத்தின் தமிழக சாட்சியம். இப்போதுள்ள நாகை, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் சேர்ந்த ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டம் தமிழகத்தின் 30% விளைநிலங்களை தன்னகத்தே கொண்டதாக இருந்த காலத்தில், தஞ்சை மண்ணில் உச்சரிக்கப்பட்ட கபிஸ்தலம் மூப்பனார், பூண்டி வாண்டையார், குன்னியூர் சாம்பசிவ ஐயர், கோபாலகிருஷ்ண நாயுடு போன்ற பெருநிலவுடைமையாளர்களிடம் நிலங்கள் குவிந்து கிடந்தன.

கூலிதான் பிரச்சனையா?

அரைப்படி நெல் கூலி உயர்வு கேட்டதால் எழுந்த பிரச்சனை எனச் சிலர் எழுதி செல்கின்றனர். அப்படியா? அரைப்படி நெல் கூலிதான் பிரச்சனையா? இல்லை. அப்படியெனில் இரண்டு படியைக்கூடக் கொடுக்க நில உடைமையாளர்கள் தயாராக இருந்தனர். ஆனால் அவர்கள் அத்துடன் ஒடுக்கப்பட்ட மக்கள் உயர்த்திய செங்கொடியை இறக்கச் சொன்னார்கள். அவர்களுக்குச் செங்கொடிதான் பிரச்சனை. ஆனால் உழைக்கும் மக்கள் தாங்கள் ஏற்றிய செங்கொடியை இறக்க மறுத்தனர். காரணம் செங்கொடி தங்கள் ஊரில் உயர்ந்த பிறகுதான் அவர்கள் மனிதர்களாக வாழத் துவங்கினர்.

பண்ணை அடிமைகளாக, அடங்க மறுத்த அல்லது பண்ணையாரின் பேச்சை மீறுகின்ற தொழிலாளிக்குச் சாணிப்பால் கொடுக்கப்பட்டது. புளிய விளாறுகளில் தயாரிக்கப்பட்ட சவுக்கால் கொடூரமான அடியும் கொடுத்து மிருகங்களைப்போல  நிலங்களில் பிணைத்து வைத்திருந்தனர். பண்ணை அடிமைமுறை இயல்பான ஒன்றாக இருந்தது. ஆண்கள் கோவணத்துடன் இருக்க  வேண்டும், பெண்கள் கச்சை அணியக்கூடாது, பண்ணையார் மனம் கோணாமல் நடக்க வேண்டும். பண்ணையார்கள் சாதி இந்துக்களாக இருந்ததும், உழைப்பவர்கள் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்ததும், அவர்கள் முடை நாற்றம் எடுக்கும் சேரிகளில் உழன்றதும் தஞ்சையின் சமூக சித்திரமாய் இருந்தது.

கக்கத்திலிருந்து தோளுக்குமாறிய துண்டு

மணலூர் மணியம்மையும், சீனிவாசராவும் கிராமங்களில் செங்கொடிகளுடன்  செல்லத் துவங்கினர். சாணிப்பால் குடிக்காதே, சவுக்கடி படாதே, அடித்தால் திருப்பி அடி, சாதியின் பெயரால் தெருக்களில் நுழையத் தடை என்றால் அதை உடை, மீறி தெருவுக்குள் நுழை என்ற முழக்கத்தை எழுப்பினர். உன் உழைப்புக்கேற்ற கூலி கேட்பது உன் உரிமை என போர்ப்பறை அறைந்தனர். பொருளாதாரமும் சமூக நீதியும் வாழ்வின் அடிப்படை என்றனர். 

விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும்  ஒன்று சேர்ந்து கிராமங்கள் தோறும் விவசாயிகள் சங்கத்தை உருவாக்கினார்கள். நிலச்சுவான்தார்களும் ஒன்றுகூடி நெல் உற்பத்தியாளர் சங்கத்தை உருவாக்கினார்கள். ஒருபக்கம் தென்பறை முதல் வெண்மணி  வரை செங்கொடி கிராமங்கள் தோறும் உயர்ந்தன, மற்றொரு பக்கம் பச்சைக் கொடியை உயர்த்தச் சொல்லி நில உடைமையாளர்கள் கதறிக்கொண்டிருந்தனர். 

பண்ணையார் பக்கம் சென்றால் கக்கத்தில் இருக்கும் துண்டு இடுப்புக்கு வர வேண்டும். ஆனால் செங்கொடி உயர உயர, கக்கத்திலிருந்த துண்டு தோளுக்கு உயர்ந்தது. செங்கொடியின் அரசியல் எழுச்சி பண்ணையடிமைகளை நிமிர்ந்து நடைபோல வைத்தது. அதன் உச்சம் எது தெரியுமா? பண்ணை அடிமை குடும்பத்தில் பிறந்த, எழுதப்  படிக்கத் தெரியாத, சாணிப்பால் சவுக்கடிக்கு ஆளான, சவுக்கடியின் தழும்புகளை உடலில் அடையாளமாக சுமந்திருந்த பி.எஸ்.தனுஷ்கோடி 1967இல் சட்டமன்ற உறுப்பின ராக உயர்ந்து நின்றதுதான். 

திட்டமிட்ட சதி

இதனால்தான் பண்ணையார்கள் செங்கொடியை இறக்கச் சொன்னார்கள். இந்த தலைகீழ் மாற்றம் அவர்களின் தூக்கத்தைக் கெடுத்தது.  கீழவெண்மணிக் கொடூரம் நடந்த நாளே அது திட்டமிட்ட சதி என்பதைச் சொல்லிவிடக்கூடியது. போராடும் விவசாயத் தொழிலாளர்களைத் தாக்குவதற்கு 1968, டிசம்பர் 25 தீர்மானிக்கப்பட்டதற்குக் காரணம்  உண்டு. டிசம்பர் 23-29 தேதிகளில் மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு கேரளத்தின் கொச்சியில் நடைபெற்றுவந்தது. 

கீழத் தஞ்சையின் இரு சட்டமன்ற உறுப்பினர்கள் உள்பட விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் பெரும்பாலானோர் இதற்காகச் சென்றிருந்தனர். டிச. 25 கிறிஸ்துமஸ் நாளின் இரவு 10 மணிக்கு ஊர் அடங்கியிருந்தபோது கீழ வெண்மணியிலுள்ள 30 குடிசைகளுக்கு வன்முறைக் கும்பல் தீ வைத்தது. அப்போது வன்முறைக்கு அஞ்சி ராமய்யாவின் குடிசையில் ஒளிந்த 44 பேர் குடிசைக்குள் கருகி உயிரிழந்தனர்.  எதிர்ப்பட்டவர்கள் துப்பாக்கியால் சுடப்பட்டனர்; சிலர் அரிவாளால் வெட்டப் பட்டனர்; சிலர் சுளுக்கியால் குத்தப்பட்டனர்; பலத்த காயங்களுக்கு ஆளாயினர்.

அதன்பின் நடந்தவை உலகம் அறியும், காவல்துறையும், நீதிமன்றமும் ஆளும் அரசாங்கமும்  எந்த வர்க்கத்தின் பக்கம் நின்றன. பாதிக்கப்பட்டவர்கள் சிறையில் வாடியதும், கொடூரக் கொலை செய்தவர்கள் மிராசுதார்கள் என்பதால் விடுவிக்கப்பட்டதும் வரலாறு. ஆனால் முன்போல சமூக அந்தஸ்து பேசி சாதிய ஒடுக்குமுறையை அமலாக்க, நினைத்த கூலி கொடுத்து கொத்தடிமைகளாக நடத்திட வெண்மணி தீ தடை போட்டது.  

வர்க்க முழக்கம்

பி.சீனிவாசராவ், மணலூர் மணியம்மை, மணலி கந்தசாமி, கோ.வீரையன், என்.வெங்கடாசலம், கோ.பாரதிமோகன், வாட்டாக்குடி இரணியன்,  ஆம்பலாபட்டு ஆறுமுகம்,  சிவராமன்,  எம்.காத்தமுத்து, வே.மீனாட்சி சுந்தரம், ஏ.எம்.கோபு, ஆர்.அமிர்தலிங்கம், பட்டுராசு, பி.வேங்கடேச சோழகர், ஏ.ஜி.கஸ்தூரிரங்கன், எம்.மாசிலாமணி, எம்.சண்முகம், ஆர்.ரங்கசாமி, ஆர்.கோவிந்தசாமி, சம்பா ராமசாமி,  நல்லகண்ணு, டி.தொப்பியாஸ், பாலன்  ஆகிய பெயர்களை நினைவில் வையுங்கள். இவர்கள் குறித்து திருவாரூர் முன்னாள் வாலிபர் இயக்க தலைவர் பி.கந்தசாமி எழுதிய சமத்துவ போராளிகள் புத்தகத்தில் முழுமையாகப் படியுங்கள்.  

இவர்கள் பெயரை இங்கே குறிப்பிடக் காரணம் என்ன? இவர்களில் ஒருவரும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கிடையாது! ஆம் அவர்கள் கம்யூனிஸ்டுகள். ஒடுக்கப்பட்ட மக்களில் கூலி உயர்வு போராட்டத்தில், அவர்களுக்கு இழைக்கப்பட்ட தீண்டாமைக்கு எதிரான போர்க்களத்தில் சுட்டுக் கொல்லப் பட்டவர்கள், உடலே கிடைக்காமல் காணாமல் அடிக்கப்பட்டவர்கள் இதில் உண்டு. வர்க்க ஒற்றுமைக்காகச் சாதி ஒழிப்பை முன்பணியாகக் கொண்டவர்கள். பொருளாதார முன்னேற்றம்தான் அடிப்படை தீர்வெனினும் அதன் முன் நிபந்தனையாக சமூக சமத்துவம் நிற்பதை அறிந்தவர்கள். வெண்மணி மாற்றுப் பாதையைக் கற்றுக்கொடுக்கிறது. 

ஏஜிகே. என்ற தோழர் ஏ.கஸ்தூரிரங்கன் எழுதிய செங்கொடி சங்கம் என்ன சாதித்தது ன்ற கவிதையில் சில வரிகள்..

 

நியாயமான கூலி கேட்டோம் 
சரியான அளவில் கேட்டோம் 
உரிய நேரத்தில் கேட்டோம் 
மரியாதைக்குறைவாக பேசுவதைத் தடுத்தோம் 
பெண்களுக்கு இழைக்கப்பட்ட அனைத்து 
அநீதிகளுக்கும் ஒரு தீர்வு கண்டோம் 

சாதியின் பெயரால் இழிவுபடுத்தினால் 
சட்டப்படியும் நியாயப்படியும் 
நடவடிக்கை எடுத்தோம் 

பண்ணைகளில் அடிமைகளாகக் கட்டி வைத்து 
சவுக்கால் அடித்து சாணிப் பால் குடிக்கச் செய்யும் 
கொடுமைகளுக்கு முடிவு கட்டினோம் 

நம் வீட்டுத் திருமணத்தை 
பண்ணைகள் முடிவு செய்வதைத் தடுத்தோம்
விடுமுறை கேட்பதில்லை 
எடுத்துக் கொண்டோம் 

அரசியலில் ஓட்டுப் போடுவது 
ஆண்டைகள் சொல்லி 
நாட்டாமைகள் முடிவு செய்வது அல்ல 
அது நம்மை ஆள்பவர்களை 
நாமே தேர்ந்தெடுக்கும் ஒரு முறை 
என்பதைத் தெளிவுபடுத்தவும் 

தோளிலே துண்டு போட்டும் 
காலிலே செருப்பு அணிந்தும் 
சட்டை வேட்டி துண்டுடன் 
நெஞ்சு நிமிர்த்தி நடக்க வைத்தோம் 

உரிமைகளுக்காக போராட 
துணிவு உண்டாக்கினோம்
மரியாதையாக வாழத் தொடங்கினோம் 
மானத்துடன் வாழத் தொடங்கினோம்

 

(-எஸ்.ஜி.ரமேஷ்பாபு, மாநிலக்குழு உறுப்பினர், சிபிஐ(எம்) 25.12.2024 அன்றைய தீக்கதிரில் வெளிவந்த கட்டுரை)

 

புதன், 30 செப்டம்பர், 2015

சாதி ஆணவக் கொலைகளை எதிர்க்க - அனைத்து சமூகங்களும் திரள்க!


அந்த கிராமத்தின் பெயர் வெய்யலூர். அக்கிராமத்தின் தலித் பகுதியில் யாராவது மரணமடைந்தால் பிணத்தை ஊரினுள் எடுத்துச்செல்ல அனுமதி இல்லை. வயல்வெளியில் இறங்கிதான் எடுத்துச்செல்ல வேண்டும். மழைக் காலத்தில் யாராவது இறந்தால் வயல்வெளியில் தண்ணீரில் இறங்கிச்செல்ல முடியாதே? இருக்கட்டும் தண்ணீர் வடிகின்றவரை பிணத்தை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள்! இதுதான் அந்த ஊரின் வழக்கமாக இருந்து வந்தது. ஒரு மழைக்காலத்தில் கர்ப்பிணி பெண் ஒருவர் இறந்துப் போக பிணத்தை ஊருக்குள் அனுமதிக்க முடியாது என மறிக்கின்றனர். எந்த சாதி ஆதிக்க வெறியர்கள் அனுமதி மறுத்தார்களோ அதே சமூகத்தைச் சேர்ந்த ஒரு மனிதநேய உள்ளம்இத்தகவலை மார்க்சிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்ட அலுவலகத்திற்குச் சொன்னது. கட்சியின் அன்றைய மாவட்ட செயலாளரும், இன்றைய கட்சியின் மத்திய குழு உறுப்பினருமான கே. பாலகிருஷ்ணன், செங்கல்மேடு ஜி.கலியபெருமாள், பண்ணப்பட்டு ஏ. கணபதி உள்ளிட்டோர் தலைமையில் நூற்றுக்கணக்கான தோழர்கள் திரண்டு அக்கிராமத்திற்கு சென்றனர். சவ ஊர்வலம் தயாரானது.

ஊருக்குள் தலித் பிணத்தை அனுமதிப்பதில்லை என சாதி வெறியர்கள் திரண்டு நின்றனார். மனித நாகரீகத்தின் அநீதிக்கெதிரான போர்க்களத்தில் செங்கொடி எப்போது பின்வாங்கியது? ஒரு கையில் செங்கொடியை உயர்த்தி, மற்றொருகையில் பாடையைச் சுமந்தனர் மார்க்சிஸ்ட் தலைவர்கள். தோழர்கள்கள் புடைசூழ ஊர்வலம் ஊருக்குள் புகுந்தது. ஆயுதங்களுடன் நின்றவர்கள் மெல்ல மெல்லப் பின் வாங்கினர். காரணம் பாடையை சுமந்து, அதற்கு பாதுகாப்பு அரணாக வந்தவர்களில் அவர்களுடைய சாதியைச் சேர்ந்தவர்களும் அரணாக வந்துகொண்டிருந்தார்கள். ஆம். அந்த அதிசயம் நடக்கதான் செய்தது. அவர்கள் சாதி உணர்வுகளை கடந்த மார்க்சிஸ்ட்டுகள். அப்பகுதி விவசாயிகளின் பிரச்சினைக்காகவும், பிற்படுத்தபட்ட மக்களின் நலனுக்காவும் இதே செங்கொடியும், இதே தலைவர்களும் பல போராட்டங்களை நடத்தியதை அம்மக்கள் அறிந்து வைத்திருந்தார்கள். இதுதான் செங்கொடியின் பாரம்பரியம்.

இம்மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக சாதி கவுரவத்தின் பெயரால் கொலைகள் நடப்பதும், சாதி மறுப்பு திருமணம் செய்பவர்கள் மிரட்டப்படுவதும், தாக்கப்படுவதும் அதிகரித்து வருகின்ற சூழலில்தான் மார்சிஸ்ட் கட்சி ஆணவக் கொலைகளுக்கு எதிரான மாநாட்டை இன்று (செப்.29) கடலூரில் நடத்துகிறது. சாதியின் பெயரால் ஆண்டாண்டுகாலமாக ஒடுக்கிவைக்கப்பட்ட மக்கள் திரள் தங்களின் உரிமையை பல வழிகளில் மீட்க எழுகின்றபோது அவர்களுடன் நின்று ஆதரவளிப்பதுதான் ஜனநாயக இயக்கங்களின் கடமையாகும்.ஆனால் சாதிய மோதல்கள் நடக்கும்போதெல்லாம் தமிழகத்தை ஆண்ட கட்சியும் சரி, ஆளும் கட்சியும் சரி கண்களை இறுக்க மூடிக்கொள்கின்றன. பிரச்சனையில் பங்கெடுக்கும் இயக்கங்களை தவிர மற்ற அனைத்து முதலாளித்துவ கட்சிகளும் அமைதியாகவே இருக்கின்றன. ஊருக்குள் வரும் தேரைக் கொளுத்தினாலும் சரி, அல்லது சேரி என்றழைக்கப்படும் ஊரையே கொளுத்தினாலும் சரி அதை சாதி ஆதிக்க தாக்குதலாக பார்க்காமல் “சாதி கலவரம்“ என்றே சொல்கிற ஊடகங்கள் பொதுவிவாதத்தை தூண்ட மறுக்கின்றன.

இதற்குபின்னால் சாதிய சமூகத்தின் வன்மம் மறைந்துள்ளது. “அதுசரி அவன் ஏன்யா ஊருக்கார பொண்ணைக் காதலிக்கிறான்,” என்ற கேள்வியில் ஒளிந்திருப்பது என்ன விதமான உணர்வு? தன் மகன் எதிர்கால தமிழக முதல்வராகவே மாறிவிட்ட கனவில் இருக்கும் அய்யாஅவர்கள் “தலித் இளைஞர்கள் கூலிங் கிளாஸ் அணிந்தும், டி சர்ட், ஜீன்ஸ் அணிந்தும்தங்கள் சாதி பெண்களை கவர்கிறார்கள்,” என்று கூறியதன் வேறுவகை வெளிப்பாடுதானே? அறிவியல் தொழில்நுட்பமும், நாகரீகம் வளர்ந்த காலத்தில் இளைஞர்கள் பழகுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ள சூழலில் கொஞ்சமேனும் நம்பிக்கை அளிக்கும் சாதி மறுப்பு திருமணங்களை குற்றமாகவும், அந்த திருமணங்களை எற்றுக்கொள்ளும் பெற்றோர்களை குற்றவாளிகளாகவும் உணரவைக்கும் நிலையை மாற்ற வேண்டாமா? தன் சமூக பெண்ணை காதலித்த குற்றத்திற்காக கோகுல்ராஜின் தலையை அறுத்தெரிந்ததற்காகத் தேடப்படும் நபர் வாட்ஸ் அப்பில் தினமும் காவல்துறைக்கு ஆணை பிறப்பிக்க முடிகிறது!

கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரித்த டி.எஸ்.பி. விஷ்ணு பிரியாவின் மரணத்திற்கு ஆதாரம் கொடுப்பதாக தன்னை தியாகியாக்கிக் கொள்ள குரல் பதிவை அனுப்ப முடிகிறது! படை பல பராக்கிரமம் பொருந்திய தமிழககாவல்துறையோ வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. சாதி ஆணவக் கொலைகளை தடுத்துநிறுத்த அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றால் நிச்சயமாக இந்த வன்முறை அதிகரிக்கவே செய்யும். சமூக சீர்த்திருத்த தலைவர்கள் வாழ்ந்தமண் என பெருமிதம் பேசிக்கொண்டிருப்பதில் மட்டும் பயன் இல்லை. அரசு இயந்திரத்தின் அடிமுதல் நுனிவரை புரையோடிப்போய் உள்ள சாதி உணர்வை கலைந்திட அறிவியல்பூர்வமான நடவடிக்கையும் அணுகுமுறையும் தேவை. தமிழகத்தை ஆள்பவர்களும் ஆண்டவர்களும் தங்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் தேர்விலேயே சாதிபார்க்கும்போது அதிகாரம் கையில் இருக்க சாதியத்தின் ஆணிவேரை அல்ல அதன் நுனியைக்கூட சாய்க்கப்போவதில்லை. 

ஒன்றுபட்ட மக்கள் இயக்கம் மட்டுமே அரசு எந்திரத்தை நடவடிக்கை எடுக்கவைக்கும்.இந்திய நாடு முழுவதுமே சாதி அணவக் கொலைகளை எதிர்த்து போராடிவரும் மார்க்சிஸ்ட் கட்சி பொது சமூகத்திற்குவேண்டுகோள் விடுக்க இந்த மாநாட்டைநடத்துகிறது. பொதுச் செயலாளர் சீத்தாரம் யெச்சூரி கலந்துகொள்ளும் இம்மாநாடு, இப்போதே இப்பிரச்சினையை பரவலான மக்களின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளது.மக்களிடையே விவாதத்தையும் தூண்டி விட்டுள்ளது. அந்த விவாதம் விரிவடைய, சமுதாய மனசாட்சி விழிப்படைய “சாதி ஆணவக் கொலைகளுக்கு எதிராக இணைந்து நிற்போம் வாரீர்” என அனைத்து சமூக மக்களையும் அறைகூவி அழைக்கிறது மாநாடு.

29அன்றைய தீக்கதிர் நாளிதழில் வெளியான எனது கட்டுரை