DYFI லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
DYFI லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 1 அக்டோபர், 2024

சமுத்திரத்தாயின் சரித்திரக் குழந்தை’ சேதுக்கால்வாய் போராட்டமும் தோழர் சீத்தாராம் யெச்சூரியும்!

இறப்பவர்கள் எல்லாம் காலமாவதில்லை. தன் வாழ்நாள் முழுவதும் மனித குலத்தை நேசித்து அதற்காக வாழ்க்கையை அர்ப்பணிப்பவர்கள் மட்டுமே காலமாகி நிற்பர். தோழர் சீத்தாராம் யெச்சூரி காலமாகி நிற்கிறார். 

எளிய மக்களுக்கு ஒளிவீசும் தாரகையாக என்றும் ஜொலிப்பார். சமூகத்தில் நடக்கும் எந்த ஒரு பிரச்சனையையும் அவர் மிகவும் ஆழமாக புரிந்துகொண்டு அதன் தத்துவ அடிப்படையில் தனது வாதங்களை முன்வைப்பார். சேது கால்வாய் திட்டம் என்ற தமிழக இளைஞர்களின் வேலை வாய்ப்பிற்கான வாசலை மதத்தின் பெயரால் மத வெறியர்கள், தடை செய்ய திட்டமிட்டு பிரச்சாரம் செய்தனர். 

“நாம் வணங்கும் ராமபிரான் கட்டிய இப்போதும் கடலுக்கடியில் இருக்கும் ராமர்பாலம் (ராமசேது) சேது சமுத்திரத் திட்டத்தால் உடையும் ஆபத்து உள்ளது; இந்துக்களின் நம்பிக் கையை மத்திய காங்கிரஸ் அரசும், திமுக வும் திட்டமிட்டு அழிக்க பார்க்கிறது’’ என்ற கூப்பாடு எழ ஆரம்பித்தது. ஒரு பக்கம் இந்திய ஜனநாயக வாலி பர் சங்கம் சேதுகால்வாய் திட்டத்தை அமலாக்க வேண்டுமென தொடர் போராட்டங்களை நடத்தி வந்தது. 

கலாச்சாரம் எனும் ஊடகம் 

அப்போது (2008) சென்னையில் தமுஎகச மாநாட்டில் தோழர் யெச்சூரி “மூட நம்பிக்கைகள், மதவெறி போன்றவற்றை எதிர்த்துப் போராடுவதற்காக ஒரு ஊடகமாக கலாச்சாரம் திகழ வேண்டும். இலக்கிய நயத்தை ரசித்துப் போற்றுகிற அதே நேரத்தில், புராணக் கற்பனையையும் வரலாற்று உண்மையையும் பாகுபடுத்தி பார்க்க வேண்டும்.  இன்றைய இலங்கை, இந்தியா உள்பட ஒரே நிலப்பகுதியாக இருந்த காலகட்டம் உண்டு. கடல் மட்டம் உயர்ந்ததைத் தொடர்ந்துதான் இலங்கை தனித் தீவாகியது. அதற்கு இடையே ஒரு பாலம் இருந்ததாக சொல்வது இனிய புராண கற்பனை. அதையே வரலாற்று உண்மையாகக் கூறி சேது சமுத்திரத் திட்டம் போன்றவற்றை முடக்க முயல்வார்களானால் அதை எதிர்த்துப் போராட வேண்டும்” என முழங்கினார். 

சேதுக் கால்வாய் திட்ட அமலாக்கத்திற்காக வாலிபர் சங்கம் நடத்திய போராட்டத்திற்கு ஆதரவாக அவர் எங்களுடன், பின்னாளில் ஜனாதிபதியாக உயர்ந்த பிரணாப் முகர்ஜியையும் பார்க்க வந்தார். தென்மாவட்டங்களில் நடைபெறும் சாதி மோதல்களின் அடிப்படைக் காரணிகளில் முக்கியமானது வேலையில்லா திண்டாட்டம் என தென்மாவட்ட கலவரங்கள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி மோகன் குழு குறிப்பிட்டது. அதற்கு சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று இடதுசாரி கட்சிகள் முதல் பல்வேறு அரசியல் கட்சிகளும் கோரிக்கை வைத்தன.  

சேதுத் திட்டம்... 

இந்திய பெருங்கடல் பகுதியில் இராமேஸ்வரம், பாம்பன் பகுதிகளுக்கும் நாகப்பட்டினத்துக்கும் இடைப்பட்ட கடல் பகுதி பாக் நீரிணை என்றும், பாம்பனுக்குப் பிறகான கன்னியாகுமரி வரையிலான கடல் பகுதி பாக் கடல் என்றும் அழைக்கப்படுகின்றது. இதில் பாக் கடல் பகுதி கப்பல்கள் சென்று வரத் தேவையான ஆழத்தோடு உள்ளது. இதனால் இங்கு கால்வாய் தோண்டத் தேவையில்லை. 

ஆனால், பாக் நீரிணை பகுதியும், அங்கு உள்ள மணற் திட்டுகளும் கப்பல்கள் செல்வதற்கு தேவையான ஆழமில்லாத பகுதிகள். இந்த பாக் நீரிணையையும், மணற் திட்டையும் ஆழப்படுத்தி ஒரு கால்வாய் அமைக்கும் பணியே சேது சமுத்திரத் திட்டமாகும். 

1860-ல் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இந்தியக் கடற்படையைச் சேர்ந்த ஆங்கிலேயரான கேப்டன் ஏ.டி.டெய்லர் பாம்பனுக்கும் தனுஷ்கோடிக்கும் இடைப்பட்ட நிலப்பகுதியை தோண்டும் திட்டத்தை 1863-ல் சென்னை மாகாண ஆளுநராக இருந்த சர் வில்லியம் டெனிசன் ஏற்றுக்கொள்கிறார். பின்பு 1872 - ல் சென்னை துறைமுகப் பொறியியலாளர் ராபர்ட்ஸன் ஒப்புதல் தர ஆய்வுப்பணிகள் துவங்கி நடந்து வந்தன. 

அந்த ஆய்வுகளைப் பின் பற்றி, நாடு விடுதலையானபின் 1955-ல் பிரதமர் ஜவஹர்லால் நேரு நியமித்த ராமசாமி தலைமையிலான சேது சமுத்திரத் திட்டக் குழு ரூ.998 லட்சம் ரூபாய்க்கான திட்ட மதிப்பீட்டை சமர்ப்பிக்கிறது. நீண்டகாலத்திற்குப் பிறகு 1983-ல் இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது நியமித்த லெட்சுமி நாராயணன் குழு, 282 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டத்தை தயாரிக்கிறது. 

2004ல் மத்தியில், இடதுசாரிகள் ஆதரவுடன் திமுக கூட்டணியுடன் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. புதிய ஆய்வுக்குழு போடப்பட்டது. அப்போது செலவாகும் என திட்டமிடப்பட்ட தொகை 2427 கோடி. 2004 டிசம்பர் 6 ஆம் தேதி சேது சமுத்திர கால்வாய்த் திட்ட நிறுவனம் அமைக்கப்பட்டது. இதன் துவக்கவிழா 2005 ஆம் ஆண்டு ஜூலை 2 ஆம் தேதி மதுரையில் நடைபெற்றது. 

இராமேஸ்வரம், தூத்துக்குடி, நாகப்பட்டினத்தில் அலுவலகங்கள் திறக்கப்பட்டன. ஆனால் மக்களின் மத நம்பிக்கையை தூண்டி, நீண்டநெடிய மிகப்பெரிய திட்டம் நிறுத்தப்பட்ட நிகழ்வு உலகிலேயே இதுவாகத்தான் இருக்கும். அதற்கு பாஜகவும் இந்து அடிப்படைவாத குழுக்களுமே காரணம். 

இந்நிலையில் தான், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் 2007 ஆம் ஆண்டு அன்றைய மாநிலத் தலைவர்களான எஸ்.கே.மகேந்திரன், எஸ்.கண்ணன், எஸ்.ஜி.ரமேஷ்பாபு, ஆர்.வேல்முருகன் ஆகியோர் தலைமையில் மதுரை, தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை ஆகிய முனைகளில் துவங்கி பிரம்மாண்டமான சைக்கிள் பேரணி நடத்தியது. 

அடுத்து 2008ஆம் ஆண்டு டிசம்பர் 13 முதல் 28 தேதிவரை ‘வேண்டும் வேலை’ என்ற முழக்கத்துடன் கன்னியாகுமரி, கோவை, இராமேஸ்வரம் ஆகிய முனைகளில் எஸ்.கண்ணன், எஸ்.ஜி.ரமேஷ்பாபு, ஆர்.வேல்முருகன் தலைமையில் புறப்பட்ட சைக்கிள் பிரச்சாரம் 3000 கிலோமீட்டர் பய ணித்தும் 600 மையங்களில் பிரச்சாரமும், 100 பொதுக்கூட்டங்களையும் நடத்தியது. இதில் முக்கிய முழக்கமாக சேது சமுத்திர திட்டம் இருந்தது. 

இதன் தொடர்ச்சியாக 2010ஆம் ஆண்டு துவக்கத்தில் சேதுகால்வாய் திட்டத்தை அகில இந்திய கவனஈர்ப்பு இயக்கமாக மாற்றிட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாக தலைநகர் தில்லியில் 48 மணி நேர உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. தமிழகத்திலிருந்து நூற்றுக்கணக்கான இளைஞர்கள் தலைநகர் தில்லியை நோக்கி திரண்டனர். அன்றைய மாநிலத் தலைவர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு தலைமையில் கடுமையான மழையிலும் போராட்டம் நடந்தது. போராட்டத்தை முடித்து வைக்க தோழர் சீத்தாராம் யெச்சூரி வருகை தந்தார். 

அவரது வருகையும் உரையும் இளம் பட்டாளத்தை மிகவும் உற்சாகம் அடையச் செய்தது. தோழர் யெச்சூரிதான் அதன் பின் அன்றைய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து மனு கொடுக்க எங்களை அழைத்துச் சென்றார். வாலிபர் சங்கத்தின் அகில இந்திய பொது செயலாளர் தபஸ் சின்ஹா, மாநில நிர்வாகிகள் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, செ.முத்துகண்ணன், இல.சண்முகசுந்தரம், ஆர்.வேல்முருகன், மீனாட்சி, எஸ்.பாலா உள்ளிட்டோர் சென்றோம். 

அந்த பிரம்மாண்டமான நாடாளுமன்ற கட்டடத்துள் அவருக்கு இருந்த மரியாதை எங்களை சிலிர்க்க வைத்தது. அதுமட்டுமல்ல, அவர் சேதுகால்வாய் திட்டம் குறித்து பிரணாப் முகர்ஜியிடம் விவரித்தது எங்களை ஆச்சரியப்பட வைத்தது. காரணம், அவருக்கு அந்த பிரச்சனையில் இருந்த நுட்பமான ஞானம். ஒரு மனு கொடுக்கும் நிகழ்வாக அதை கருதாமல் அந்த திட்டம் வருவது தமிழகத்திற்கு எவ்வளவு முக்கியமானது என்பதை உள்ளார்ந்த நேசத்துடன் அவர் விளக்கினார். 

தமிழக வாலிபர் இயக்கம் அவரது நினைவுகளை என்றும் உயர்த்திப் பிடிக்கும்! 

எஸ்.ஜி.ரமேஷ்பாபு 

மாநிலக்குழு உறுப்பினர், சிபிஐ(எம்) 

(16.09.2024 தீக்கதிரில்  எனது நினைவஞ்லி கட்டுரை)

ஞாயிறு, 9 டிசம்பர், 2012

நாங்கள் வருகிறோம்!


நாங்கள் வருகிறோம்!




காடு மலை நதிப்படுகை
கடந்து வருகிறோம்!

வேலை,கல்வி உரிமையென
எழுந்து வருகிறோம்!

இளைஞர் கூட்டம் எழுகவென
உரைத்து வருகிறோம்!

இருளை நீக்க தமிழகத்தின்
வெளிச்சம் வருகிறோம்!

போதை எனும் விலங்கொடிக்க
அழைக்க வருகிறோம்!

இயற்க்கை வளங்கள் மக்களுக்கே
படைக்க வருகிறோம்!

லஞ்ச,ஊழல் அழுக்குகளை
வெளுக்க வருகிறோம்!

சாதி மறுப்பு திருமணங்கள்
காக்க வருகிறோம்!

உதிரம் சிந்தி உரிமைகாத்த
கூட்டம் வருகிறோம்!

நான்காயிரம் கிலோ மீட்டர்
நடந்து வருகிறோம்!

எட்டுத்திக்கும் வின் அதிர
முழங்கி வருகிறோம்!

தமிழகத்தின் முகத்தோற்றம்
மற்ற வருகிறோம்! 

எதிர் காலம் காத்திடவே
நாங்கள் வருகிறோம்!

08.12.12 அன்று தீக்கதிரில் வெளியான கவிதை. 

புதன், 18 பிப்ரவரி, 2009

தீண்டாமைக்கு தீயிட.. கல்வியும், வேலையும் ஆயுதம்

  எஸ்.ஜி.ரமேஷ்பாபு

இந்த மண்ணில் வர்க்கம் இருக்கிறது. அதற்கு பக்கத்திலேயே சாதியும் இருக்கிறது. இங்கு காற்றுக்கும், பாசன கால்வாய்க்கும், விளையும் பூமிக்கும், கோவிலுக்கும், குளத்திற்கும், பள்ளி கட்டிடத்திற்கும், ஊர் பொது இடத்திற்கும், உண்ணும் உணவிற்கும், குடிக்கும் தண்ணீருக்கும், உடுத்தும் உடைக்கும், பேசும்மொழிக்கும், இலக்கியத்திற்கும், கலாச்சாரத்திற்கும், அரசுக்கும், அதன் சட்டத்திற்கும், நீதிக்கும், நீதிமன்றத்திற்கும், பிணத்திற்கும், மயானத்திற்கும், சாமிக்கும், பேய்க்கும் கூட சாதி இருக்கிறது.

இதற்கு சிறந்த உதாரணம், தமிழகத்தில் ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களில் தீண்டாமை இருப்பதை அரசே ஒப்புக் கொண்டது. நாகரீகம் உயர்ந்த நாடு என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் நாட்டில்தான், ஆலயங்களில் நுழையத் தடை, கோயில் விழாக்களில் பாரபட்சம், டீக்கடைகளில் இரட்டை கிளாஸ் முறை, பெஞ்சுகளில் உட் கார முடியாமல், பொதுக்குழாய்களில், கிணறு களில் தண்ணீர் எடுக்க முடியாமல், குளங்க ளில் குளிக்க முடியாமல், பொதுப்பாதைகளில் நடக்கமுடியாமல், குடைபிடிக்க முடியாமல், செருப்பு போட முடியாமல், தோளில் துண்டு போடமுடியாமல், பொது மயானத்தை பயன் படுத்த முடியாமல், தனி மயானத்திற்கு பாதை மறுக்கப்பட்டு, சலூன்களில் முடிவெட்ட முடியாமல், துணிகளுக்கு இஸ்திரி போட முடியாமல், பிணக்குழி தோண்ட கட்டாயப் படுத்தப்படுவது, மலம் அள்ள கட்டாயப்படுத் தப்படுவது, சாவு சேதிச் சொல்ல கட்டாயப் படுத்தப்படுவது, தப்படிக்க கட்டாயப்படுத்தப் படுவது, செத்த விலங்குகளை அப்புறப்படுத்த கட்டாயப் படுத்தப்படுவது, தலித் பெரியவர் களை ஒருமையில் அழைப்பது, தலித் பெயரில் மரியாதை பகுதியை அழைக்காமல் விடுவது, தலித் பெண்களை பாலியல் பலாத் காரம் செய்வது, அவர்களை துன்புறுத்துவது, சாதியின் பெயரால் திட்டுவது, தலித் தரும் பணத்தை கையால் தொடாமல் இருப்பது, தலித் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு உரிமை மறுப்பது, உரிமையை நிலைநாட்டினால் படுகொலை செய்வது, தலித் பகுதிகளில் தேர்தல் நடைபெறாமல் தடுப்பது, பள்ளிக ளில் தலித் மாணவர்களை பாரபட்சமாக நடத் துவது, கிராம பொது சொத்துக்களை தலித்து கள் பயன்படுத்தாமல் தடுப்பது, தலித்துகளின் நிலங்களை அபகரித்து திருப்பித்தர மறுப்பது, பொது விநியோகம் - அரசு அலுவலகங்களை தலித் குடியிருப்பு பகுதியில் அமைக்க மறுப்பது, தலித் குடியிருப்புகளில் அடிப்படை வசதி களை செய்துதர மறுப்பது, தலித் மக்களிடம் காவல் துறையின் பாரபட்சம் என தொடர் கிறது.... 

இந்த கொடுமைகளிலிருந்து அம்மக்கள் வெளியேற, ஒடுக்கப்பட்ட மக்கள் சமூக அந் தஸ்து பெற்றிட, அடிப்படையில் அவர்களுக்கு கல்வியும், வேலையும், நிலமும் அவசியமாகிறது. 

ஆனால் நடப்பதென்ன? ஒடுக்கப்பட்ட மக்களுக்காக துவக்கப்பட்ட சிறப்பு உட்கூறு திட்டங்களும், அவைகளுக்காக ஒதுக்கப் பட்ட நிதிகளும் அம்மக்களுக்கு முழுமை யாய் செலவிடப்படாதது மட்டுமல்ல; அந்த தொகை பல மாநில அரசுகளால் திருப்பி அனுப்பப்படும் அவலமும் நடக்கிறது. இந்த பின்னணியில் மனிநேயமற்ற, லாபத்தை மட்டுமே குறிகோளாய்க் கொண்ட உலகமயம், வேலைவாய்ப்புகளை வெட்டிச்சுருக்குவதும், ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை விழுங்குவதும் மேலும் மேலும் தலித் மக்க ளையே பாதிப்பிற்கு உள்ளாக்குகிறது. “பத்தாவது ஐந்தாண்டு திட்ட காலத்தில் 2002 - 2007 இந்தியாவில் வேலைசெய்வோரின் எண் ணிக்கையில் 35 மில்லியனாக அதிகரிக்கும் என்றும், 5 கோடி புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் கூறப்பட்டது. ஆனால் திட்டப் பணிகளை ஆய்வு செய்து வெளியிடப்பட்டுள்ள இடைக்கால அறிக்கை 2001-02 இல் 8.87 சதமாக இருந்த வேலை யின்மையின் விகிதம் 2004-05 இல் 9.11 சதமாக உயர்ந்திருக்கக் கூடும் எனக் கூறு கிறது. பத்தாவது ஐந்தாண்டு திட்ட காலத்தின் இறுதியில் இது இன்னும் அதிகரிக்கக் கூடும், உலகமய பொருளாதாரக் கொள்கை யை நமது அரசுகள் அமுலாக்க துவங்கிய பிறகு பத்து லட்சம் மத்திய அரசு பணிகள் ஒழித்துக்கட்டப்பட்டிருப்பதாக மதிப்பிடப் படுகிறது. அதாவது ஏழு லட்சம் பணியிடங் கள் ரத்து செய்யப்பட்டன, நான்கு லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படாமலேயே போய்விட் டன. இதன் விளைவு, இடஒதுக்கீட்டில் தலித் இளைஞர்களுக்கு கொஞ்சம் நஞ்சம் கிடைத்த வேலைவாய்ப்பும் பறிக்கப்பட்டுள் ளது. தனியார் துறையிலும் இடஒதுக்கீடு கிடையாது. அப்படி கேட்டால் தகுதி, திறமை குறித்து விவாதம் மீண்டும் நடத்தப்படுகிறது.

இந்த பின்னணியில், இருக்கும் வேலை யை பாதுகாக்க போராட்டம் நடத்த வேண்டிய அவசியம் உள்ளது, அதே நேரம் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க இளைஞர்களை திரட்ட வேண்டிய கடமையும் உள்ளது. அப் படி அனைத்து தரப்பு இளைஞர்களையும் திரட்ட, முன் நிபந்தனையாக தீண்டாமை ஒழிப்பு போராட்டம் நிற்கிறது. ஒன்றுபட்ட போராட்டங்கள் நடக்காமல் இருக்க சாதி, மத, இன, மொழி அடையாளங்களை தூண்டி விட்டு இளைஞர்களை பிளவுபடுத்தும் சக்தி களுக்கு எதிரான போரட்டம், வேலைக்கான போராட்டத்துடன் இணைக்கப்பட வேண்டும். 

தமிழகத்தின் இன்றைய நிலை என்ன? கிராமங்களிலிருந்து குடும்பம் குடும்பமாக மக்கள் வேலைதேடி பல பகுதிகளுக்கு அலைகின்றனர். வளர்ச்சிப் பணிகள் என்ற பெயரால், தங்கள் இருப்பிடங்களிலிருந்து மக்கள் வெளியேற்றப் படுகின்றனர். தங்கள் கைகளில் கிடைத்த துண்டு துக்காணி நிலத் தை விவசாயம் செய்ய முடியாமல் இழந் துள்ளனர். கடந்த பத்தாண்டுகளில் மட்டும் இருபது சதமான விவசாய நிலங்கள் ரியல் எஸ்டேட்டுகளாக, தரிசு நிலங்களாக மாறி யுள்ளது. தொழிற் பேட்டைக்கு என்று அர சாங்கம் கொடுத்த மானிய விலை, நிலங்களை கோடி கோடியாய் கொள்ளையடிக்க பிளாட் போட்டு விற்கும் ஒசூர் தொழிற்பேட்டை கொள்ளையர்களை அரசு எதுவும் செய்யாது. தொழில் நடக்கவில்லை எனில் எந்த மக்க ளிடமிருந்து நிலங்கள் பிடுங்கப்பட்டதோ அந்த மக்களுக்கு அவர்களின் நிலங்களை திரும்ப கொடுக்க வேண்டும் என்ற நியாயம், அரசின் அகராதியில் கிடையாது. தங்கள் வாழ்விடங்களை இழந்து, அரசு கொடுத்த சொற்ப தொகையில் தங்கள் வாழ்க்கையை நடத்த முடியாத மக்கள் எங்கெங்கு அலை கிறார்களோ?

கிராமங்களிலிருந்து வேலைதேடி செல்லும் இளைய சமூகத்திற்கு வேலை கொடுக்கும் இடமாக தமிழகத்தில் திருப்பூர் முதலிடத்தை பிடிக்கிறது. இங்கு மூன்றரை லட்சம் தொழிலாளர்களில் இரண்டரை லட்சம் தொழிலாளர்கள் வெளிமாவட்டங்களை சார்ந்தவர்கள். அங்கும் தற்சமயம் வேலை மிகப்பெரிய பிரச்சனையாக மாறி உள்ளது. எவ்வித சமூக பாதுகாப்பும் இல்லாத அத்தக் கூலிகளாக அலைகின்றனர். வேலையில் லாக் கூட்டம் அதிகமாக அதிகமாக, முதலாளிகள் கொடுக்கும் கூலியின் அளவு குறைகிறது, நியாயம் கேட்டால் உடன் வெளி யேற்றப்படுவது உறுதி.. 

அடுக்குமாடி கட்டிடங்களும், உயர உயர மாய் குடியிருப்புகளும், வணிக வளாகங்களும் பார்ப்போரை பிரமிக்க வைக்கிறது. நகரங்களுக்கு வெளியே நகரங்களை இணைக்க பிரம்மாண்டமான புறவழிச்சாலைகள் வழுக்கிச் செல்கின்றன. கண்களை விரியச்செய்யும் பாலங்கள் மிரள வைக்கின்றன. ஆம் இந்தியா நகர்மயமாகி வருகிறது. கவனிக்கவும் நகர்மயமாகி வருகிறது ஆனால் தொழில்மய மாகவில்லை. தொழில்வளர்ச்சி இல்லாத நகர்மயம், சேரிகளையும், சமூக குற்றங்களை யும் அதிகரிக்கின்றது. உலகமயம், சமூகத்தில் ஒடுக்கப்பட்ட பிரிவினரான தலித் மக்கள் மீது இரண்டு வகையில் இரக்கமற்ற தாக்குதலை தொடுக்கிறது. ஒன்று- அவர்களை நிலங்களிலிருந்து வெளியேற்றுகிறது. இரண்டு- கிடைக் கும் வேலைவாய்ப்புகளை விட்டு அறவே துடைத்தெறிகிறது. காலங்காலமாய் ஒடுக்கப் பட்ட, ஊருக்கு வெளியே நிறுத்தி வைக்கப் பட்ட அம்மக்களின் வாழ்க்கை குறித்து எவ்வித அக்கறையுமற்ற ஆட்சியாளர்களை எதிர்த்து தமிழக இளைஞர்கள் போராட்டக் களம் காணும் நிகழ்வுதான் பிப்ரவரி 18ம் தேதி வாலிபர் சங்கம் நடத்துகிற மறியல் போராட்டம்.

வெள்ளி, 26 டிசம்பர், 2008

வெயிலில்...மழையில்...குளிரில்...

தமிழக இளைஞர்களின் தீராத பிரச்சனையாக தொடர்கிறது இந்த வார்த்தை. வேலை கொடு அல்லது நிவாரணம் கொடு என்ற கோரிக்கையில் துவங்கி, இன்றைக்கு சமூக பாதுகாப்புடன் வேலை கொடு என்ற முழக்கத்துடன் கடந்த 30 ஆண்டு காலமாக தமிழ்நாட்டின் நீள அகலத்தை சைக்கிள்களால் கடந்து, இளைஞர்களை தட்டியெழுப்பிய ஒரு இயக்கம் உண்டென்றால் அது இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மட்டுமே.

2008ல் சேதுகால்வாயை வலியுறுத்தி தென் மாவட்டங்களிலிருந்து ராமேஸ்வரம் நோக்கி சைக்கிள் பிரச்சாரம் நடத்திய வாலிபர்சங்கம், தற்போது குமரி, கோவை, இராமேஸ்வரத்திலிருந்து சென்னை நோக்கி தமிழகம் முழுவதும் வெண்கொடி ஏந்தி முழக்கமிட்டு முன்னேறிச்சென்று கொண்டிருக்கிறது.

கோவையிலிருந்து மாநிலத்தலைவர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு தலைமையிலும், குமரியிலிருந்து மாநிலச்செயலாளர் எஸ்.கண்ணன் தலைமையிலும், ராமேஸ்வரத்திலிருந்து மாநில துணைச் செயலாளர் ஆர்.வேல்முருகன் தலைமையிலும் சென்று கொண்டிருக்கும் இந்த வெண்கொடிப்படை, 28ம் தேதி சென்னையில் சங்கமிக்கின்றன. டிச.13ஆம் தேதி துவங்கி டிச.28ஆம் தேதி வரை 15 நாட்கள் சம்பளம் கிடைக்காது, வீட்டுக்கு காசுதர முடியாது என்று தெரிந்தும்கூட சென்னை வரை நாங்கள் வந்தே தீருவோம் என்று தாங்களாகவே முன்வந்த தோழர்களும் உண்டு; தனது சித்தப்பா இறந்துபோனபோதிலும் கூட, பயணத்திலிருந்து விலக விரும்பவில்லை என்று கூறி தொடரும் தோழனும் உண்டு; உடல்நிலை சரியில்லை என்ற போதிலும், அதை மறைத்து, நான் சைக்கிள் ஓட்டியே தீருவேன் தோழர் என்று விடாப்பிடியாக சைக்கிள் ஓட்டும் இளம் பெண்களும் உண்டு; கடும் வெயிலிலும், மாலை ஆனதும் செவிப்பறையைக் கிழிக்கும் குளிர்காற்றிலும் சைக்கிள் மிதித்தாலும், வரவேற்பு கொடுக்குமிடத்தில் சற்று கூட ஓய்வெடுக்காமல் பம்பரமாய் சுழன்று பொதுமக்களிடம் பிரசுரம் விற்பது, உண்டியலில் நிதி திரட்டுவது என தொடர்கிறது இந்த இளைஞர் படையின் பெரும்பயணம்.

குமரியில் துவங்கி திருச்சியை கடந்துவிட்டோம் எனக்குறிப்பிட்ட மாநிலச்செயலாளர் எஸ்.கண்ணன், இதுவரை சுமார் 600 கி.மீ தூர பயணத்தில் 85க்கும் அதிகமான இடங்களில் வாலிபர்சங்கத்தினர் மட்டுமின்றி, கமல்ஹாசன், அஜீத், விஜய் ரசிகர் மன்றங்களைச் சேர்ந்தவர்கள், ஆதித்தமிழர் அமைப்பைச் சேர்ந்தவர்கள், ஐயப்பபக்தர்கள் என பல்வேறு தரப்பினரும் உற்சாக வரவேற்பளித்தனர் என்றார். குறிப்பாக பெண்கள் எங்கள் பயணத்தை பேராதரவுடன் வாழ்த்தி வரவேற்றனர். வேலை வேண்டும், அரசு காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டுமென்று பிரச்சாரக்கூட்டத்தில் பல்வேறு ஆதாரங்களுடன் எங்கள் தோழர்கள் பேசியதை தலையசைத்து ஆமோதித்த ஏராளமான தாய்மார்களை காணமுடிந்தது. அது அவர்களது உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தியது என்று குறிப்பிட்ட அவர், பல இடங்களில் சாலையில் சைக்கிள் மிதித்து கொண்டிருந்த எங்களை வழியில் கார்களில் செல்வோர், இருசக்கர வாகனங்களில் செல்வோர் நிறுத்தி பழங்கள், பிஸ்கட்டுகள், குடிநீர் என தாங்களாகவே முன்வந்து, எந்த அறிமுகமும் இன்றி வாங்கிக்கொடுத்து வாழ்த்தினார்கள் என்று பெருமிதம் பொங்க கூறினார்.

கோவையில் துவங்கி 500 கி.மீ தூரம் பயணம் செய்து வேலூர் மாவட்டம் ஆரணியை அடைந்துவிட்ட எஸ்.ஜி.ரமேஷ்பாபு தலைமையிலான சைக்கிள் பயணக்குழுவிற்கு சுமார் 90 இடங்களில் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்தப்பயணத்தில் பங்கேற்றுள்ள 32 இளைஞர்களும், தமிழகச் சாலைகளில் மிக உயரமான இடத்தில் இருக்கும் சாலையாக கருதப்படும் தர்மபுரி மாவட்டம் தொப்பூர்மேடு பகுதியில் சைக்கிள் மிதிக்கும்போது மிகவும் சிரமப்பட்டார்கள் எனக்குறிப்பிட்ட அவர், நாமக்கல் பகுதியிலும் மலையை ஒட்டி அமைந்துள்ள சாலைகள் சைக்கிள் பயணத்திற்கு சவாலாகவே இருந்தது என்றாலும், விவசாயத்தொழிலாளர்களும், பெண்களும் பெருமளவில் திரண்டு நின்று அளித்த வரவேற்பு எங்கள் களைப்பை காணாமல் போகச்செய்தது என்றார்.

ராமேஸ்வரத்தில் துவங்கி தமிழக கடலோர மாவட்டங்கள் வழியாகவே சுமார் 420 கி.மீ பயணம் மேற்கொண்டு கடலூரை நெருங்கியுள்ள ஆர்.வேல்முருகன் தலைமையிலான குழு முதல் ஐந்துநாட்கள் முழுக்க முழுக்க கனமழையில் நனைந்துகொண்டே மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்டது என்பது நினைவுகூரத்தக்கது. மழையில் நனைந்தபோதிலும் உற்சாகம் குன்றாமல் வந்த இக்குழுவினர் வெள்ளச்சேதம் ஏற்பட்ட காவேரி டெல்டா மாவட்டங்களின் உண்மையை நிலையை வழி நெடுக நேரில் காணும் வாய்ப்பை பெற்றனர். விவசாயத் தொழிலாளர்கள் படும்பாடு, இந்த மாவட்டங்களில் வெள்ளத்தாலும், மழையின்மையாலும் மாறி மாறி துயரத்தை அனுபவிக்கும் விவசாயி வீட்டு பிள்ளைகளுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டிய கட்டாயத்தை கண்கூடாகக் காட்டியது என்று வேல்முருகன் குறிப்பிட்டார். திருவாரூர், நாகை மாவட்டங்களில் கிராமம் கிராமமாக திரண்டு நின்று மக்கள் வரவேற்பளித்தனர் எனக்குறிப்பிட்ட அவர், நூற்றுக்கும்மேற்பட்ட மையங்களில் வெகுசிறப்பான வரவேற்பு நிகழ்ச்சிகள் நடந்தன என்றும் கூறினார்.

மூன்று குழுக்களும் சென்னையில் சந்திக்கும்போது, தமிழகம் முழுவதையும் அலசிவிட்டு ஏராளமான அனுபவங்களைப்பெற்ற இளைஞர்களாக, தமிழகத்தின் கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு வழிகாட்டும் தலைவர்களாக மாறியிருப்பார்கள் என்றால் அது மிகையல்ல.