பெண்கள் தினம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பெண்கள் தினம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 8 மார்ச், 2012

சமையல் குறித்த விவாதமும் சர்வதேச பெண்கள் தினமும்



----------------------------------------------------------------------
திருமண மண்டபங்களிலும்
உணவு விடுதிகளிலும்
சாலையோர கடைகளிலும் 
வேகிற பருப்பு வீடுகளில் மட்டும்
ஆண்களுக்கு வேவதே இல்லை..
பருப்பு என்பது உணவுப் பொருளே என்றறிக.

பொதுவெளியில் உலாவும்
அணைத்துப் பெண்களுமே
தன்னிடம் சிரித்துப்பழக
அலைகிற மனது தன்வீட்டுப் பெண்கள்
அடுத்தவனுடன் பேச பொறுப்பதில்லை..
பொறுப்புக்கும் பருப்புக்கும் சம்மந்தமில்லை அறிக.

ஆணாய் பிறந்தெழுந்து
திமிராக வளர்ந்திருந்து
மனிதம் மறந்து வாழங்கால்
ஆணாய் யோசிக்கும் மூளை விடுத்து
சமமாய் பார்க்கும் மனம் வந்தால்..
சமையல் குறித்து விவாதிக்க முடிமென்றறிக.
------------------------------------------------------------------------

1820ல் இங்கிலாந்தில் தையல் பணி செய்யும் பெண் தொழிலாளர்கள் தங்களின் கூலி உயர்வுக்காகவும், ஆண்களைவிட அதிக நேரம் வேலை வாங்கப்படுவதை எதிர்த்தும், அளவில்லாமல் செய்து வந்த வேலை நேரக் குறைப்பிற்காகவும், முதலாளிகளால் அவமானப் படுத்தப்படுவதற்கு எதிராகவும் ஒன்று சேர்ந்து சங்கம் அமைத்தனர். காவல்துறையின் தாக்குதலுக்கும் அஞ்சாது தீரமுடன் போராடினர். இவர்களின் போராட்டம்  பல ஆலைகளுக்கும் பரவியது. அங்கெல்லாம் அடக்குமுறையும் தொடர்ந்தது.

1900 மாவது ஆண்டில் பெண்கள் ஆடைப் பணியாளர் சங்கம் உருவாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 1903ல் சர்வதேச பெண்கள் தொழிற்சங்கமும் உருவானது. இந்தக் காலத்தில் 20 ஆயிரம் பெண்கள் பங்கேற்ற மாபெரும் எழுச்சிப் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டமும் வழக்கம்போல அரசாங்கத்தின் காட்டுமிராண்டிதனமான அடக்குமுறையால் நசுக்கப்பட்டது. 1908ல் பஞ்சாலையில் வேலைசெய்த பெண் தொழிலாளர்களின் எழுச்சி பற்றி எழுந்தது.

1901ல் கோபன்கேஹன் நகரில் நடைபெற்ற சர்வதேசத் தொழிலாளர் பிரதிநிதிகள் கூட்டத்தில் தொழிலாளர் போராட்டங்களில் பெண்களின் பங்கேற்பை போற்றும் வகையில் ஜெர்மன் தலைவர் கிளாரா ஜெட்கின் மார்ச் 8 ஐ சர்வதேசப் பெண்கள் தினமாக முன்மொழிந்தார். ரஷ்யாவில் கொடுங்கோலன் ஜாரின் ஆட்சியை வீழ்த்திய பிறகு 1917 மார்ச் 8ல் வரலாற்றுச் சிறப்புமிக்க சர்வதேச பெண்கள் தினம் செயின்ட் பீட்டர்ஸ் பர்க்கில் நடைபெற்றது. முதலாளிகள் கூட்டத்தின் தலைவன் கெரன்ஸ்கி என்பவனின் தற்காலிக ஆட்சி நடைபெற்ற ரஷ்யாவில் ரொட்டிக்காகவும் அமைதிக்காகவும் என்று ரஷ்யாவில் பெண்கள் மார்ச் 8 முதல் 5 தினங்கள் போராட்டம் நடத்தினர்.
1917 நவம்பர் சோஷலிஸப் புரட்சிக்குப் பின்னர் மார்ச் 8 சர்வதேச பெண்கள் தினமாக புதிய சோவியத் காலண்டர்களில் குறிக்கப்பட்டதுடன், 1921ல் சர்வதேசப் பெண்கள் தினம் அதிகாரப்பூர்வமாகவும் ஆனது. உலகத் தொழிலாளர்களின் மேதினம் போராட்டக் களத்தில் பிறந்தது போலவே சர்வதேச பெண்கள் தினமும் போராட்டக் களத்தில் பிறந்தது.

போராட்ட வரலாறு இப்படியாக மார்ச் 8 சர்வதேச பெண்கள் தினத்தை குறித்தாலும் ஏகாதிபத்திய உலகமயம் உருவாக்கிவரும் புதிய பண்பாட்டு அடையாளம் பெண்களை போகப் பொருளாக, லாபம் கொழிக்கும் விளம்பர கருவாக, அழகுப் பதுமைகளாக, எதுவாகினும் ஆண்களுக்கு அடுத்தவர்களாக சித்தரித்தே வருகிறது. லாபம் ஒன்றே தனது உயிர்வாழ்தலின் அடிப்படையாகக் கொண்ட மூலதனம் குறைந்தக் கூலியில் கிடைக்கும் ஆற்றல்  மிக்க படையாக பெண்களை சக்கையாய் பிழிந்து வருகிறது. 

கல்வி, அறிவியல்-தொழில் நுட்பம், மருத்துவம், விளையாட்டு, ஆட்சி நிர்வாகம் போன்ற ஏராளமான துறைகளில் இன்னும் விண்வெளிப் பயணத்திலும் பெண்ணின் ஆற்றல் விளங்கிய போதிலும் பெண் சமத்துவம், பெண்ணுரிமை என்பது சமுதாயத்தில் மறுக்கப்பட்டே வருகிறது. பெண்ணை இரண்டாம் நிலையில் வைக்கும் சமூகத்தின் மனோபாவம் காலங்காலமாய்த் தொடர்கிறது. பெண்ணுக்கு எதிரான கேலிவதை, பாலியல் வன்கொடுமை, வரதட்சணைக் கொடுமை, சம உழைப்பில் பெண்ணுக்கு குறைவான கூலியே கொடுக்கும் பாரபட்சம், ஆதிவாசிப் பெண்கள், தாழ்த்தப்பட்ட சமூகப் பெண்கள் என்றால் மேலும் கூடுதலான கொடுமைகளை அனுபவிக்க வேண்டிய நிலையே தொடர்கிறது.

தேசத்தில் இருக்கிற ஜனநாயகம் என்பது சம உரிமை கொடுக்கும் குடும்ப ஜனநாயகமாய் மலர வேண்டும். அப்போதுதான் சர்வதேச பெண்கள் தினம் மனிதகுலத்தில் மகத்தான தினமாய் மலரும்.  

செவ்வாய், 8 மார்ச், 2011

சர்வதேச பெண்கள் தினம்


இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படும் சர்வதேச மகளிர் தினம் உருவானதே ஒரு போராட்டக் களத்தில்தான். 1900ஆம் ஆண்டின் முதல் 10 ஆண்டுகளில் பெண்கள் பொருளாதார ரீதியாகவும் சமூகரீதியாகவும் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தனர். இவற்றிற்கு எதிராக உலகம் முழுவதும் பெண்கள் வெகுண்டெழுந்து போராடிக்கொண்டிருந்தனர். சில நாடுகளில் பெண்களுக்கான அமைப்புகள் தோற்றுவிக்கப்பட்டன.

சர்வதேச மகளிர் தினம் தோற்றம்

1907-ல் ஜெர்மனியில், ஸ்டட்கார்ட் என்ற நகரில் முதன் முதலாக ‘சோசலிச பெண்கள் மாநாடு’ நடைபெற்றது. இந்த மாநாட்டில் 15 நாடுகளிலிருந்து 59 பெண் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். உலகம் முழுவதுமுள்ள பெண்கள் அமைப்புகளை ஒருங்கிணைப்பதற்கு ஒரு சர்வதேச பெண்கள் அமைப்பு இம்மாநாட்டில் உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பிற்கு கிளாரா ஜெட்கின் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

1908-ம் ஆண்டு முதன்முதலில் நியூ யார்க் நகரில், 15000-க்கும் மேற்பட்ட பெண்கள் பேரணியாக சென்று தங்களின் வேலை நேரத்தை குறைக்க வலியுறுத்தியும், தேர்தலில் வாக்களிப்பதற்கான உரிமை கோரியும், தங்களுக்கு நியாயமான, சமவேலைக்கு சமஊதியம் வழங்கவேண்டும் என்று வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

1909-ல் ஆடை தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்த மகளிர் தங்களுக்கு நியாய மான ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வேலைநிறுத்தம் மேற்கொண்டனர். அமெரிக்காவின் சோசலிஸ்ட் கட்சி தேசிய அளவிலான முதல் மகளிர் மாநாட்டை பிப்ரவரி 28-ம் தேதி நடத்தியது. அன்றைய தினத்திலிருந்து 1913 வரை பிப்ரவரி கடைசி ஞாயிற்றுக்கிழமை சர்வதேச பெண்கள் தினமாக கொண்டாடப்பட்டது.

ஜெர்மனியில், 1910-ல் கோபன்ஹேகன் நகரில் ஜெர்மனியின் சோசலிச ஜனநாயக கட்சி இரண்டாவது மகளிர் மாநாட்டை நடத்தியது. இதில் 17 நாடுகளிலிருந்து 100க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர். இவர்கள் பல்வேறு நாடுகளின் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளாகவும், சோசலிஸ்ட் கட்சியின் பிரதிநிதிகளாகவும், மகளிர் அமைப்புகளின் பிரதிநிதிகளாகவும் இருந்தனர். பின்லாந்து நாட்டின் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 3 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரதிநிதிகளாக வந்திருந்தனர். இந்த மாநாட்டில் சோசலிஸ்ட் ஜனநாயக கட்சியின் மகளிர் பிரிவு தலைவராக இருந்த கிளாரா ஜெட்கின், பெண்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச மகளிர் தினத்தை நடத்திட வேண்டும் என்ற தீர்மானத்தை முன் மொழிந்தார். இந்த தீர்மானம் அனைத்து பிரதி நிதிகளாலும் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

ரொட்டியும் ரோசாப்பூவும்

தொடர்ந்து 1911-ல் சர்வதேச மகளிர் தினம் முதன்முதலாக ஆஸ்திரியா, டென் மார்க், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் மார்ச் மாதம் 19-ந்தேதி கொண்டாடப்பட்டது. இந்த நாடுகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்ட பேரணிகள் நடைபெற்றன. இந்த பேரணிகளில் பெண்கள் வேலை செய்வதற்கான உரிமை. தேர்தல்களில் வாக்களிப்பதற்கான உரிமை, பயிற்சி பெறுவது, பொது அலுவலகங்களில் வேலை செய்வது, சமூகத்தில் பாகுபாடின்றி நடத்தப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

அதே ஆண்டில் மார்ச் மாதம் 25-ந்தேதி அன்று நியூயார்க் நகரில் நடைபெற்ற ஒரு முக்கோண தீ விபத்தில், பணியில் ஈடுபட்டிருந்த 140 பெண்கள் உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர்கள். இந்த விபத்து அன்றைய தினம் அமெரிக்க நாட்டில் பெண்க ளுக்கு பாதுகாப்பற்ற நிலை இருந்ததை வெளிப்படுத்தியது. இதன் பின்னர், தொழிலாளர் சட்டங்களை கடுமையாக்க வேண்டிய நிர்ப்பந்தம் அரசுக்கு ஏற்பட இந்த நிகழ்ச்சி அடிகோலாக அமைந்தது. இதே ஆண்டில் பெண்கள் நடத்திய ‘ரொட்டியும் ரோசாப்பூவும்’ என்ற இயக்கம் பெண்களின் கோரிக்கைகளை வலியுறுத்துவதாக அமைந்தது. இத்தகைய தொடர்ச்சியான போராட்டங்கள் மூலமே பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையும் வேலை செய்யும் உரிமையும் சம ஊதியம் பெறும் உரிமையும் பிற்காலத்தில் கிடைத்தன.

மார்ச் 8 சர்வதேச பெண்கள் தினம்

1913-14-ல் ரஷ்ய நாட்டில் முதன் முறையாக சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப் பட்டது. 1913-ம் ஆண்டு பிப்ரவரி கடைசி ஞாயிறு அன்று நடைபெற்ற மாநாட்டில் மார்ச் 8 பெண்கள் தினம் கொண்டாட முடிவு செய்யப்பட்டது. 1914-ல் போருக்கு எதிராக பெண்கள் ஐரோப்பிய நாடுகள் முழுவதிலும் பேரணி நடத்தினர். 1917-ல் ரஷ்ய பெண்கள் ‘ரொட்டிக்காகவும் போருக்கு எதிராகவும்’ பிப்ரவரி கடைசி ஞாயிறு அன்று வேலை நிறுத்தம் செய்தனர். அப்போது நடைபெற்ற போரில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் உயிரிழந்திருந்தனர். இந்த வேலை நிறுத்தத்தை தடைசெய்ய ஆரம்பத்தில் அரசு முயற்சி செய்தபோதும் பின்னர் ரஷ்ய நாட்டு பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையை முதல் முறையாக தந்தது குறிப் பிடத்தக்கது. அந்த வீரஞ்செறிந்த வேலை நிறுத்தம் ரஷ்ய ஜூலியன் காலண்டர் படி பிப்ரவரி 23 என்றாலும் உலகம் முழுவதும் கடைப்பிடித்து வரும் காலண்டர் படி மார்ச் 8 ஆகும். அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளே நாம் இன்று கொண்டாடும் மார்ச் 8 சர்வதேச மகளிர் தினமாகும்.

இன்று சர்வதேச மகளிர் தினம் உலகில் அனைத்து நாடுகளிலும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. சீனா, வியட்நாம், ஒன்றுபட்ட ரஷ்ய நாடுகளில் இன்று மகளிர் தினத்திற்கு அரசு விடுமுறை விடப்படுகிறது. அமெரிக் காவில் மார்ச் மாதம் முழுவதும் பெண்கள் வரலாற்று மாதம் கொண்டாடப்படுகிறது.

இந்திய நாட்டில் பெண்கள் நிலை

நமது நாட்டிலும் மகளிர் தின கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. வணிக நிறுவனங்கள் இந்த நாளை பயன் படுத்திக்கொண்டு ஆடை அணிகலன்கள் விற்பனைக்கு, விளம்பரத்திற்கு பயன்படுத்திக் கொள்கின்றன. ஆனால் இந்திய நாட்டில் பெண்கள் நிலை மிகவும் மோசமாகவுள்ளது.

இந்திய நாட்டில் பணிபுரியும் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளதாக ‘அசோசெம்’ அமைப்பு சேகரித்த புள்ளி விபரங்கள் கூறுகின்றன. இரவு நேரங்களில், தகவல் தொழில்நுட்பத்துறையில் பணியாற்றும் பெண்களும், விமானப் போக்குவரத்துப் பணியில் பணியாற்றும் பெண்களும், மருத்து வமனையில் பணியாற்றும் பெண்களும் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர் என்றும், நிறுவனங்கள் இவர்களுக்கு போதுமான பாதுகாப்பை தரத்தவறியுள்ளன என்றும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இது தலைநகர் தில்லியில் அதிகபட்சமாக 65 சதவீதமும் ஹைதராபாத்தில் 28 சதவீதமும் மும்பையில் 28 சதவீதமும் என உள்ளது.

பெங்களூரில் உள்ள 2200 தொழில் நிறுவனங்களில் 1600 நிறுவனங்கள் மட்டும் தொழில்துறையில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நிறுவனங்களில் 75000 முதல் 95000 பெண்கள் பணியாற்றி வருகின்றனர். மருத்துவமனைகள், விமானப்போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பத் துறைகளில் பணியாற்றும் இவர்களில் 56சதவீத பெண்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர் என ‘அசோசெம்’ புள்ளிவிபரம் கூறுகிறது.

மகாத்மா காந்தி, பண்டிட் ஜவஹர்லால் நேரு, தந்தை பெரியார் போன்றவர்கள் பெண்களுக்கு சம உரிமை வழங்குவது குறித்து பேசியிருந்தாலும், பெண்களுக்கென தனிச் சட்டங்கள் இயற்றப்பட்டிருந்தாலும், அவையெல்லாம் ஏட்டுச் சுரைக்காயாகவே உள்ளன. நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் பெண்களுக்கான 33 விழுக்காடு இட ஒதுக்கீடு பிரச்சனையில் இன்று இந்திய அரசியல்வாதிகளின் முகமூடிகள் கிழித்தெறி யப்பட்டு அடையாளம் காணப்பட்டுள்ளது. இடதுசாரிக் கட்சித் தலைவர்களை தவிர ஏனையோர் இரட்டை நிலைப்பாடு கொண்டிருப்பது வெட்ட வெளிச்சமாகிவிட்டது. மாநி லங்களவையில் நிறைவேற்றப்பட்ட இட ஒதுக்கீடு மசோதா, மக்களவையில் நிறை வேற்ற முடியாமல் உள்ளது வெட்கக்கேடானது.

இன்று பெண்கள் தினத்தை கொண்டாடு வதில் ஒவ்வொருவருக்கும் ஒரு நோக்கம் உள்ளது. அதே போல் உழைப்பாளி மக்களுக்கும் ஒரு நோக்கம் உள்ளது.

பெண்களுக்கு, சமூகம், அரசியல், பொருளாதாரம் மற்றும் தொழிற்சங்கத்தில் சமத்துவம் கிடைத்திடவும், சொத்து உரிமை, சட்டம் இயற்றக் கூடிய அவைகளில் இடம் பெற்றிடவும்,

வேலை செய்யுமிடங்களில் ஆண்- பெண் என்ற பாகுபாடு இல்லாமலிருக்கவும், வேலை செய்யுமிடங்களில் பாதுகாப்பினை உத்தரவாதப்படுத்திடவும், குழந்தைகள் காப்பகங்கள் ஏற்படுத்திடவும், பாலியல் பலாத்காரத்தை தடுத்து நிறுத்திடவும், வரதட்சணைக் கொடுமைகளை களைந்திடவும், பெண்களை வணிக விளம்பரத்திற்கு அருவருக்கத்தக்க முறையில் பயன்படுத்துவதை தடுத்து நிறுத்திடவும், சாதியக் கொடுமைகளிலிருந்தும், மதரீதியான, சம்பிரதாய, மூட பழக்க வழக்கங்களிலிருந்தும் பெண்களை மீட்டெடுத்திடவும், உலகமயத்தினால் முதலில் பாதிக்கப்படுவது பெண் என்பதால் அவற்றிற்கு எதிரான போராட்டங்களில் பெண்களை ஈடுபடுத்துவதும் 

இன்று உழைப்பாளி மக்கள் முன் உள்ள தலையாயக் கடமைகளாகும். இந்த உணர்வோடு 101-வது சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடுவோம்!

(08 .03 .11 தீக்கதிர் நாளிதழில் தோழர் க.ராஜ்குமார் எழுதிய கட்டுரை )