மரக்காணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மரக்காணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 8 நவம்பர், 2024

நினைவுகளின் சுழலில் - 3

 இங்கிலாந்து லெட்டரும், மின்சார கனவும்

மனித நினைவுகள் வரமாகவும் சாபமாகவும் இருக்கக் காரணம் அதன் மீது இருக்கும் நம்பிக்கைகள்தான். நினைவுகள் உருவாக்கும் நிகழ்வுகளின் நினைவுகள்தான் வாழுகின்ற நிலையின் எதார்த்தம். நிகழ்வுகளை மறப்பது எப்படி மனிதனின் வரமாகக் கற்பிதம் செய்யப்படுகிறதோ, அப்படியே மறதி சாபமாகவும் இருந்திடும். பால்ய காலத்து நினைவுகள் பெரும் சுவையாகக்கூடும், அல்லது சுமையாகக்கூடும். இந்த நெருக்கடியான எந்திர உலகில் மனித மனம் இன்பமான நினைவுகளை மட்டுமே அசைபோட விரும்புகிறது. அது தப்பித்துச் செல்லும் ஒரு வழியும்கூட..

அப்படிதான் எனது பால்ய வயது நினைவுகள் சுழன்று, சுழன்று வருகிறது. மரக்காணம் என்ற ஊரை நினைத்த உடன். கண்ணமாவை நினைத்து ”அமுதூற்றினை யொத்த இதழ்களும் - நிலவூறித் ததும்பும் விழிகளும்” என எட்டையபுறத்தான் பாடுவது போல, எங்கள் மரக்காணத்தின் மீதான ஆசை ஊறுகாயைச் சுவைத்ததுபோல உமிழ் நீரை உச்சுக்கொட்ட வைக்கிறது. அதுவன்றி எப்போதும் போலப் பால்யத்தை அசைபோட விரும்புகிறது.

காரணம் ஆயிரம் ஆயிரம். எனக்கு நினைவு நன்றாக தெரிந்த பின்பு, சேத்தியாத்தோப்பில் வாசவி தியேட்டரின் எதிரில், லூர்துசாமி குடியிருப்பில் குடியிருந்த காலங்களில், பள்ளி விடுமுறை நாட்களில் ஒரு கடிதத்திற்காகக் காத்திருப்போம். அந்த கடிதம் எங்கள் மரக்காணம் தாத்தா எழுதும் இங்கிலாந்து லெட்டர்!? (நீண்ட நாட்களுக்கு பிறகுதான் அது இங்கிலாந்து லெட்டர் இல்லை, INLAND LETTER CARD என தெரிந்து கொண்டேன்.)

பேரன்பின் வார்த்தைகளில் அந்த கடிதம் துவங்கும். ”சிரஞ்சீவி மகளுக்கும், மருமகனுக்கும்”.... அழகிய ஒழுங்குமுறையில், நீண்ட எழுத்துக்கள் கொண்ட, இங்க் பேனாவால் எழுதப்பட்ட கடிதம் அது. அந்த கடிதம் எங்கள் அனைவரையும் விடுமுறை நாட்களில் மரக்காணத்திற்கு வரக் கோரிக்கை வைத்து முடியும்.

அண்ணன் தம்பி என நாங்கள் நால்வரும் உற்சாகத்துடன் பயணத்திற்கு தயாராவோம். ஆனால் அன்று பார்த்து அந்த பழைய பாலாஜி பஸ் தாமதமாக (லேட்டா) வரும். அதைவிட அதிகமாய் எங்களுக்குக் கோபம் வரும் எனினும் பொறுத்துக்கொள்வோம். பிறகு என்ன செய்வது? அன்று அது மட்டும்தானே நீண்ட தூரம் செல்லும் வாகனம். அதாவது அந்த சமயத்தில் சிதம்பரத்தில் புறப்பட்டு சேத்தியாத்தோப்பு - வடலூர் வழியாக பண்ருட்டி செல்லும் ஒரே பேருந்து அதுதான். எனவே, அந்த பேருந்தைப் பெருந்தன்மையுடன் மன்னித்து அதில் ஏறி அங்கிருந்து வடலூர் செல்வோம்.

வடலூரிலிருந்து கடலூர் செல்வதற்குப் பேருந்துக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டும். இப்போது இந்த எழுத்துக்களைப் படிக்கும் இளையோருக்கு இது நகைச்சுவையூட்டகூடும். எனினும் அதுதான் உண்மை. அப்போது நெய்வேலியிருந்து பேருந்துகள் வந்தால்தான் உண்டு. அங்கு பேருந்து ஏறி கடலூர் செல்ல வேண்டும். பின்னர் கடலூரிலிருந்து பாண்டி, அங்கு காத்திருந்து பின்பு அங்கிருந்து பேருந்தினை பிடித்து மரக்காணம் செல்ல வேண்டும். அங்கு சென்று சேர 6 மணி நேரம் ஆகிவிடும். ஆனால் பேருந்துக்கு முன்பு எங்கள் மனம் பறந்து சென்று மரக்காணத்தில் விளையாடிக்கொண்டிருக்கும். அது இருக்கட்டும். சைக்கிள் பயணத்தைத் தொடரலாம்...

1978
 அந்த ஆண்டுதான் நான் ஒன்றாம் வகுப்பு சேர்ந்த ஆண்டு. எனது தாத்தாவுடன் சைக்கிளில் சென்று பள்ளியில் இறங்கிய போது, பள்ளியிலிருந்த ஆசிரியர்கள் எங்கள் தாத்தாவை வரவேற்றது மகிழ்ச்சியளிப்பதாய் இருந்தது. இது நமக்கு ஆபத்தான இடம் இல்லை என்பது மட்டும் அந்த வயது புத்திக்குப் புரிந்தது. வகுப்பறையில் இருந்த அனைவருக்கும் மிட்டாய் கொடுத்தது நினைவுள்ளது. அன்றைய தினம்தான் நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்த தினமென மெல்லிய நினைவுகள் சொல்கிறது. மாலை வேலைகளின் இருள் சூழ்ந்த பொழுதை தெரு விளக்குகள் விரட்டியடிக்க துவங்கின. தெரு விளக்கென்றால் இப்போது உள்ளது போல பளீரென எரியும் விளக்குகள் கிடையாது. அவைகள் குறைந்த ஒளியை உமிழும் குண்டு பல்புகள்.

அடுத்த சில நாட்களில் எங்கள் வீடு விழாக்கோலம் பூண்டது. ஆமாம் எங்கள் மணி மாமாவின் திருமண ஏற்பாடுகள் துவங்கியது. மாமாவிற்கு எங்கள் பாட்டியின் வீட்டில்தான் கல்யாணம். மண்டப அரசியல் இல்லாத காலம் அது. வீட்டிலேயே பெரிய பந்தல். பந்தலுக்கு தேவையான தென்னங்கீற்றுகள் எல்லாம் எங்கள் வீட்டின் பின் உள்ள தென்னந்தோப்பில் தயாரானவைதான். தென்னம் மரத்தில் உருவாகும் பாளையை (பாளை என்பது தென்னம் பூவின் உறை) நீள் வாக்கில் கிழிந்து, கயிறு போலப் பயன்படுத்துவார்கள். கொட்டாய் போடத் தேவையான தலைமரத்தின் கழிகளும் இடையே வேயப்படும் குச்சிகளும் எங்கள் தோப்பில் எடுக்கப்பட்டதுதான்.

அப்போது எங்கள் தாத்தா வீட்டில் இரண்டு பேர் எப்போதும் வேலை செய்து கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு வீட்டிற்கு வெளியே வைத்து தென்னம்பாளையில் உணவு கொடுக்கும் முறை எனக்கு ஆரம்பத்திலிருந்தே ஏனோ பிடிப்பதில்லை. வயது முதிர்ந்த அந்த உழைப்பாளியை ஒருமையில் விளிப்பது எங்கள் வீட்டின் பழக்கம். பெரும்பாலும் நாங்கள் உணவருந்திய பின்பு வீட்டின் பின்புறம் காத்திருக்கும் அவர்களுக்கு உணவு கொடுப்பார்கள்.

மணி மாமாவின் திருமண நாள் எனக்கு அப்படியே நினைவில் சுழன்றாடுகிறது. எனது நினைவுகளின் அச்சாரம் அது. ஏனெனில்.. சிமினி விளக்கின் ஒளியிலிருந்து விடுபட்டு குண்டு பல்ப் ஒளிக்கு நாங்கள் வந்த நாள் அதுதான். அன்றுதான் எங்கள் பாட்டியின் வீட்டில் மின்சாரம் வந்தது. அது பேரதிசயம். நீண்ட கம்பங்களில் வரும் கொடிபோல ஒயர்கள் வழியாக மண்ணெண்ணெய் வருமா? அவ்வுளவு உயரத்தில் எப்படி விளக்கு எரிகிறது? கீழே இல்லாமல் ஏன் அந்த விளக்கு மேலே தொங்குகிறது? யார் அதில் தினமும் சாம்பல் போட்டு துடைப்பது? பாட்டியால் அத்துணை உயரம் ஏறித் துடைக்க முடியுமா? பெரியம்மாவுக்கு வாய்ப்பே இல்லை. என்னால் ஆச்சரியங்களை அடக்கவே முடியவில்லை.

பெண் அழைப்பு நடப்பதற்கு சில மணி நேரத்திற்கு முன்புதான் மின்சாரம் வந்தது. அந்த பொழுது எப்போதும் மறக்காது. சாம்பல் தேவை இல்லை. விளக்கை துடைக்கத் தேவை இல்லை. மண்ணெண்ணெய் இனி தேவையில்லை. ஒரு சுவிட்ச் போட்டால் விளக்கு எரிகிறது. அதுவும் மண்ணெண்ணெய் விளக்கைவிட பிரகாசமாய். என்ன ஆச்சரியம். 10 முறை சுவிட்சை போட்டுப் போட்டு அனைத்து பார்த்தேன். எப்போது போட்டாலும் எறிகிறது. ஒருமுறை விளக்கை ஊதி அணைத்தால் மீண்டும் அதை எரியவைக்க இதைவிட அதிக முயற்சிகள் தேவை.

அறியா பருவத்தில் நடக்கும் திருவிழாக்கள் எல்லாம் எப்போதும் மகிழ்ச்சிக்குரியது. கூட்டம் கூட்டமாய் வீட்டில் எல்லோரும் கூடுவதும். சடங்குகள் நடப்பதும் இனிய உணவுகள் கிடைப்பதும் அந்த நாள் கடந்தே போகக்கூடாது என மனம் நினைக்கும். திருமணத்திற்கு வந்தவர்கள் தெருவில் மின்சாரம் வந்த அதிசயத்தையும் பேசி மகிழ்ந்தனர்.

மின்சாரம் பல விசயங்களை எங்களுக்கு பளிச்சென காட்ட துவங்கியது...

(நினைவுகள் சுழலும் )

நினைவுகளின் சுழலில் - 1 

நினைவுகளின் சுழலில் - 2


திங்கள், 28 அக்டோபர், 2024

நினைவுகளின் சுழலில் - 2

 


மரக்கால் காணோம் மரக்காணம் ஆயிற்று!

            நீங்கள் சென்னை முதல் நாகப்பட்டினம் வரை செல்லும் கிழக்கு கடற்கரை சாலையின் ஒரு நிறுத்தமாக அந்த ஊரை அறிந்திருக்கக்கூடும். உப்பளங்களை கடந்து வரும்போது ”மரக்காணம் இறங்கே..” என்ற நடத்துனரின் வார்த்தைகளுடன்  ஒரிரு நொடிகளில்  நீங்கள் அந்த ஊரை கடந்திருக்க வாய்ப்பிருக்கிறது. என்று கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தேன். அந்த நிறுத்ததில் உள்ள சிவன் கோயிலை சுற்றிவிட்டு பிறகு என் நினைவுகளுடன் உங்களை அழைத்து செல்லாம் என நினைக்கிறேன். சுவை மிகுந்த கதைதான் வாசியுங்கள்.

            மரக்காணம் ஸ்ரீ பூமீஸ்வரர் கோயில் என்று அழைக்கப்படும் அக்கோவிலில் பூமீஸ்வரர் மற்றும் கிரிஜாம்பாள் அல்லது கிரிஜாம்பிகை சிலைகள் உள்ளது. இந்த பழமையான கோவில் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது மற்றும் சோழர் காலத்தைச் சேர்ந்தது என்று நம்பப்படுகிறது.

            கோயிலில் 47 கல்வெட்டுகள் உள்ளன. முதலாம் ராஜராஜ சோழன், முதலாம் ராஜேந்திர சோழன், முதலாம் விஜய ராஜேந்திரன் ராஜாதிராஜா சோழன், இரண்டாம் மற்றும் மூன்றாம் குலோத்துங்க சோழன் மற்றும் விஜயநகர வம்சம் வரை இக்கோவிலில் வழிபட்டுள்ளனர் என்ற கதையும் உண்டு.

            சிவபெருமான் பூமீஸ்வர தேவர், பொம்மீஸ்வரத்தாழ்வார், திருபூமீஸ்வரமுடைய நாயனார், பூமிஸ்வரமுடைய தம்பிரான், திருபூமியப்ப தம்பிரான் (விஜயநகர காலம்) என்று அழைக்கப்பட்டார். கல்வெட்டின்படி மரக்காணம் இராஜராஜ பேரளம், பட்டினம், எயில் பட்டினம், கண்டராதித்த நல்லூர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மரக்காணம் பட்டின நாட்டுக்கு உட்பட்டது, ராஜராஜ சோழன் காலத்தில், கண்டரரித்த நல்லூர் பட்டின நாட்டில், விஜய ராஜேந்திர சோழ வளநாடு ஜெயங்கொண்ட சோழ மண்டலத்தில் இருந்தது.

            விக்ரம சோழன் காலத்தில் மரக்காணம் பிராமணர்களுக்கு பரிசாக வழங்கப்பட்டு விக்ரம சோழ சதுர்வேதி மங்கலம் என்று அழைக்கப்பட்டது. சோழர் கல்வெட்டுகள் சில இந்த இடத்தை மணற்கானம் என்று குறிப்பிடுகின்றன, கடற்கரை மணல்  நிறைந்த பகுதி என்பதால்  அப்பெயரும், பின்னர் அதுவே மாற்றம் கண்டு மரக்காணம் என்றழைக்கப்பட்டிருக்கலாம்.

            புராணத்தின் படி, சிவபெருமான் முனிவர் வடிவில் ஒரு பக்தரின் வீட்டிற்கு வந்தார். பக்தர் உணவு அளித்தபோது, ​​முனிவர், பூஜை செய்த பிறகே உணவு எடுத்துக் கொள்வார் என்றார். பக்தர் தனது மரக்கால் (நெல் அல்லது உப்பை அளவிடும் பாத்திரம்) தலைகீழாக வைத்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டார். பூஜை முடிந்து முனிவர் உணவு உண்டுவிட்டு கிளம்பினார்.

            பக்தர் பூஜைக்கு பயன்படுத்திய அந்த மரக்காலை அகற்ற முயன்றார் ஆனால் முடியவில்லை. மாறாக கொஞ்சம் நேரத்தில் அது காணாமல் போனது. இதைப் பார்த்த பக்தர் மரக்கால் காணோம் என்று கத்திக் கொண்டே வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தார். பின்னர் அவர் கடலோரத்தில் உள்ள மரக்காலை கண்டு அங்கு  கோவிலைக் கட்டினார். “மரக்கால் காணோம்”, பின்னர் மரக்காணம் என்று மாறியது என்ற கதையும் உண்டு.

            களத்தில் தானியத்தை அளப்பதற்கு மரக்கால் பயன்பட்டது. பெரிய மரக்கால், சின்ன மரக்கால் வழக்கிலிருந்தன. வீட்டு உபயோகத்திற்குப் படி எனப்படும் இரும்பு அளவு பயன்பட்டது. பெரிய படி, அரைப்படி, கால்படி, அரைக்கால் படி, வீசம்படி, அரை வீசம்படி போன்ற படிகள் இன்றுகூட வீடுகளில் உள்ளன. படியை உழக்கு என்று குறிப்பிடுவார்கள். 11/2 லிட்டர் அளவு என்பது ஒருபடி ஆகும். நான்கு படி அளவு நெல் சேர்ந்தால் ஒரு பெரிய மரக்கால், இரண்டு படி அளவு நெல் சேர்ந்தால் ஒரு சிறிய மரக்கால் எனப்பட்டன.

            இந்த கோவிலில் வந்து வணங்கினால் நிலத் தகராறுகள் தீரும், புதிய சொத்துக்கள் வாங்கலாம், நல்வாழ்வு கிடைக்கும் என நம்பிக்கைகள் உண்டு. திண்டிவனம் கோர்டில் மரக்காணம் நில தகறாறு சார்ந்த வழக்குகள் குவிந்திருப்பதற்கும், ஊரில் தலைமுறையாக வாழ்ந்த பலர் சொத்துக்களை விற்றுவிட்டு  வெளியே சென்றபோதும் சாட்சாத் பூமீஸ்வரர் அவர்களை தடுதாட்கொள்ளவில்லை என்பது தனி கதை.

            கோயில் நுழைவு வளைவுடன் கிழக்கு நோக்கி உள்ளது. நுழைவாயிலுக்கு முன் அடிவாரத்தில் பல்வேறு தெய்வங்களின் திருவுருவங்களுடன் கூடிய மண்டபம் உள்ளது. இக்கோயிலில் வழக்கத்திற்கு மாறாக அம்மன் முன் நந்தியும், சிவன் முன் பாவை விளக்கும் உள்ளது. விஷ்ணு சிவனை வழிபடும் சிற்பங்களும், சிறுத்தொண்ட நாயனாரின் வரலாற்றை விளக்கும் சிற்பங்களும் சோழர்களின் தலைசிறந்த படைப்புகளுக்கு எடுத்துக்காட்டுகள். கோவிலில் 3 பெண்களின் நடனக் காட்சியைக் காட்டும் சிற்பம் உள்ளது. 3 பெண்களுக்கு 4 கால்கள் மட்டுமே செதுக்கப்பட்டுள்ளன, ஆனால் தனித்தனியாக கவனிக்கும்போது, ​​​​ஒவ்வொரு பெண்ணும் 2 கால்களுடன் இருப்பதைக் காணலாம். சோழர்களின் அற்புதமான சிற்பம் இது.

            ஆனால் இத்தகை ஊர்களில் உள்ள கோவில்களையெல்லாம் ஒரு காலத்தில் சமஸ்கிருதமயமாக்க, சமஸ்கிருத மந்திரங்கள் ஓத ஒரு கூட்டம் ஆக்ரமித்தது எங்கும் பேசப்படாத கதையாக உள்ளது. சரி தாத்தாவுடன் சைக்கிளில் சென்ற கதையை அடுத்து பார்க்கலாம்.

குறிப்பு: கோயில் குறித்த அடிப்படை தரவுகள் Light up Temples இணையத்திலிருந்து எடுக்கப்பட்டது.   

(நினைவுகள் சுழலும்)

 

நினைவுகளின் சுழலில் - 1 

வியாழன், 17 அக்டோபர், 2024

நினைவுகளின் சுழலில்...

 

இடது ஓரத்தில் 10 வயதில் நான்😀

            ஒவ்வொரு உயிருக்கும் ஒரு வரலாறு இருக்கிறதுதானே. அதுவும் நினைவுகளை சேகரித்து அதை பதிவு செய்ய தெரிந்த  மனித குலம், வரலாறு என்ற பெயரில் அதை ஆவணமாக மாற்றுகிறது. எந்த ஒரு மனித உயிருக்கும் வாழ்வில் ஏற்றதழ்வுகள் உண்டு இப்படியே நாட்கள் தொடராதா என்கிற மகிழ்சியான தருணங்கள், இன்றைய பொழுதை எப்படியும் கடந்தாக வேண்டும் என்ற கொடுர நாட்கள், அன்பும் துரோகமும் நிரம்பிய சுற்றமும் நட்பும் என பூமியில் இருக்கிற எந்த ஒரு பெண்ணும், ஆணும், மாற்று பாலினத்தவரும் எழுத ஆயிரமாயிரம் அனுபவங்கள் இருக்கிறது. எழுத வாய்ப்புள்ளோர் எழுதலாம்தானே? அறை நூற்றாண்டை கடந்த  எனது நினைவுகள் சுழல்கிறது.

 பரங்கிப்பேட்டையில் பிறந்து, மரக்காணம், சேத்தியாதோப்பு, சிதம்பரம், கடலூர், பாண்டிசேரி என வாழ்ந்ததும். மாணவர் இயக்க வேலை நிறுத்தங்களும், சுவர் எழுத்தும், உண்டியல் வசூலும், வாலிபர் இயக்கம் மாநிலம் தழுவிய அறிமுகமும், மார்க்சிஸ்ட் கட்சியில் போராட்ட களங்களில் வளர்ந்தவன் என்பதும், கட்சியின் முழுநேர ஊழியனான வாய்பின் காரணமாக வாசிப்பும் எழுதும் வாய்ப்பும் கிடைத்த ஒருவனின் அனுபவங்கள் ஒருவேலை உங்களை வசீகரிக்க கூடும்..

1. கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு நிறுத்தம்  

            மரக்காணம் சந்தைதோப்பு வீதியிலிருக்கும் எங்கள் அம்மா  வீட்டிலிருந்து  கம்பீரமான முருக்கு மீசையுடன் எனது தாத்தா, பாண்டிசேரி ரோட்டில் உள்ள நடுநிலைப் பள்ளியில் முதல் வகுப்பு சேர்க்க என்னை சைக்களில் அழைத்து சென்றது நினைவிருக்கிறது. பண்டிரோடு திரும்பும்போது மஞ்சு கபேவில் ”வெண்ணிற பற்களுக்கு கோபால் பல்பொடி, இந்தியா, இலங்கை, மலேசியா ஆகிய நாடுகளில் ஏராளமாக விற்பனையாவது கோபால் பல்பொடி” என்ற விளம்பரம் ஒளித்தது ஏனோ இப்போது நினைவாடுகிறது.

            முதல் மழை பொழிகிற போது எழுகிற மண் வாசனை போல, இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் பிடிக்கிற போது கிளர்ச்சியூட்டும் அந்த வாசம் போல, இதழ்களில் வந்தமரும் இளையராஜா பாடலின் முனுமுனுப்பு மாலைவரை தொடர்வது போல, சில காட்சிகள், சில மனிதர்களின் சாயல்கள், சில பாடல்கள், சில வார்த்தைகள், சில தூறல்கள், சில விளம்பரங்கள் உங்களுக்கு எதையாவது நினைவூட்டக்கூடும். அப்படிதான்  45 ஆண்டுகளை கடந்தும் எனது பள்ளி நினைவுகளுடன் ஒட்டிக்கொண்டு நீந்தி வந்திருக்கிறது கோபால் பல்பொடி.

            மரக்காணம் அது எப்போதும் என் நினைவுகளில் துள்ளல் கொடுக்கும் ஒரு ஊரின் பெயர். நீங்கள் சென்னை முதல் நாகப்பட்டினம் வரை செல்லும் கிழக்கு கடற்கரை சாலையின் ஒரு நிறுத்தமாக அந்த ஊரை அறிந்திருக்கக்கூடும். உப்பளங்களை கடந்து வரும்போது ”மரக்காணம் இறங்கே..” என்ற நடத்துனரின் வார்த்தைகளுடன்  ஒரிரு நொடிகளில்  நீங்கள் அந்த ஊரை கடந்திருக்க வாய்ப்பிருக்கிறது.

            ஆனால் அந்த ஊரில் மின்சாரம் முழுமையாக அறிமுகமாகாத தலைமுறையில் ஆரம்ப பள்ளி வாழ்க்கையை வாழ்ந்தவர்கள் நாங்கள். எங்கள் பெரியம்மா வீட்டின் மண்ணெண்ணை விளக்குகள் அதிகபட்சம் இரவு எட்டு மணிக்கு மேல் எரிந்தது கிடையாது. மாலை வேலைகளில் எனது பாட்டி இரத்தினகண்ணம்மாளும்,  பெரியம்மா பழனியமாளும் சாம்பல் வைத்து விளக்கின் மீது இருக்கும் கண்ணாடி சிம்னிகளை துடைப்பதை ஒரு முக்கிய பணியாக வைத்திருந்தனர். அடுப்பில் இருக்கும் சாம்பலை அப்படியே போட்டு கண்ணாடியை துடைக்க முடியாது, அதில் உள்ள திருநீரு போன்ற மெல்லிய சாம்பலினை பிரிப்பது எங்கள் பணி. மின்சாரம் வீடுகளுக்குள் வரும் வரை மாலை வேலையில் இது எப்போது நடைபெறும் நிகழ்வு.

            இப்போது சென்னை ஈ.சி.ஆரில் செல்வோர் மரக்காணம் போருந்து நிறுத்ததில் இருக்கும் ஒரு சிவன் கோவிலை பார்க்க முடியும். சாலை விரிவாக்கம் ஊரின் முகத்தோற்றத்தை மாற்றிவிட்டது. முன்பெல்லாம் மாலை 6 மணிக்கு மேல் சிவன் கோவில் பக்கம் செல்வதோ, சால்ட் ஆபிஸ் உள்ள பங்களாரோட்டிற்கு செல்வதோ சாகசம்தான். எங்களை போன்ற சிறியவர்களுக்கு இப்பகுதி எல்லாம் தடை செய்யபட்ட பகுதிகளாகும். சிவன் கோயில் எதிர் பக்கம்தான் எங்கள் ஊரின் சுடுகாட்டு பாதை. தாமரை குளங்களால் நிறைந்த பகுதி அது. வரிசையாக இருக்கும் தாமரை குளங்களுக்கென கதைகள் உண்டு. மகாபாரத போரில் கடோத்கஜனோ கும்பகர்ணனோ சென்ற காலடி தடங்களால் ஏற்பட்ட பள்ளங்கள்தான் குளங்களாக மாறின என்பர். புனைவுகளுக்கு உள்ள பலமே அதுதானே! யாரையும் எங்கேயும் நடக்க வைக்க முடியும்.    

            என் அம்மாவை பெற்ற எங்கள் தாத்தா செல்வராஜ் அவர்கள் போலீஸ் ஏட்டு. கடலூர் புதுநகரில் பணியாற்றியவர். எங்கள் தாத்தா செல்வராஜிக்கும் எங்கள் பாட்டி ரத்தினகண்ணாம்பாளுக்கும் முன்று குழந்தைகள். முதலில் எனது பெரியம்மாள் பழனியமாள், அடுத்து எனது தாயார் ஞானமணி, அடுத்து பாலசுப்பிரமணியன் என்கிற எங்கள் மணி மாமா.  சந்தை தோப்பு தெருவில் சுமார் 50 செண்ட் அளவிளான தென்னை தோப்புடன் கூடிய வீடு அது. கல்லும், சுண்ணாம்பும், மண்ணும் வைத்து எழுப்பிய சுவர்தான், ஆனால் அது எத்தனை வலிமையானது என அந்த வீட்டை இடிக்கும்போதுதான் தெரிந்தது. வீட்டின் மேலே பணை வாரைகள், அதன் மீது தெண்ணங்கீற்று, அதன் மீது ஜம்பு எனும் விழல் அடுக்கப்பட்டு கம்பீரமாக நிற்கும் வீடு அது. வீட்டின் முன்பு அகல வாக்கில் நான்கு தென்னை மரம்.

            லட்சுமி என எங்கள் பாட்டி பெயர் சொல்லி அழைக்கும் பசுமாடு, அந்த மாடு இறந்தபோது எங்கள் பாட்டி ஓங்கி அழுதது இப்போதும் நினைவிருக்கிறது. எப்போதும் குளிர்ந்த நீர் நிறைந்து நிற்கும் கிணறு. அந்த கிணற்றை ஒட்டி நிற்கும் பிருமாண்டமான பலா மரம், தென்னை தோப்பிற்குள் அத்துனை சுவை மிக்க இரண்டு மாமரங்கள், நாங்கள் ஊஞ்சல் கட்டி ஆடும் கிளேரியா மரங்கள், தோப்பை சுற்றி மண்ணால் எழுப்பபட்டிருக்கும் கடகால் மீது வளர்க்கப்படும் காட்டாமணி செடிகள், (கடகால் பேய் கதை இருகிறது அதை வேறொரு நேரத்தில் சொல்கிறேன்)  தோப்பின் இறுதி எல்லையில் எழுந்து நிற்கும் யூக்ளிபட்டீஸ் என அழைக்கபடும் தைல மரங்கள் என அந்த வீட்டின்  சித்திரம் எங்கள் எல்லோருக்கும் அத்தனை பிரியமானது.

            கபாலி கடை கெட்டி சட்னியுடன் வரும் மசால் வடையும், முருகேசன் கடை தோசையும் மிகவும் பிரியமான உணவுகள். மாலையில் சந்தைதோப்பில் லட்சுமி ஆயா கூறு கட்டி விற்கும் மரவள்ளி கிழங்கும் பிடித்தமானவை. கனகராஜ் அண்ணாச்சி கடை அப்போதுதான் விரிவாக்கம் பெற துவங்கியது. ஊருக்கு பரோட்டா அறிமுகமான காலமும் அதுதான். பெரிய தோசை கல்லில் இரண்டு நீண்ட தோசை திருப்பிகளை வைத்து மிகவும் தேர்ந்த ஒரு இசை கலைஞன் வாசிப்பது போல ”டகட.. டகட.. டகடி.. டகட... டக்டிகடட...  என பரோட்டா மாஸ்டர் எழுப்பும் இசை, தூரத்தில் இருளில் இருக்கும் எங்கள் பெரியம்மா வீட்டில் மட்டுமல்ல, ஊர் முழுவதும் இசையாய் மிதந்து செல்லும். இரைச்சலற்ற இரவு பொழுதுகள் அவை. டேப் ரிக்கார்டர் இருந்தால் அது பெரிய கவுரவ பொருளாக பார்க்கப்பட்டது.

            பல அக்காக்கள் குறித்தும் பல அத்தைகள் குறித்து சாடைமாடையாக பல கதைகள் உலா வந்தன. எனது பெரியப்பா வழி அண்ணனின் நண்பர்கள்  தங்கள் மரியாதையை உயர்த்திக்கொள்ள குறிப்பிட்ட ஒரு யுவதியுடன் தன்னை இணைத்து சிலாகித்து பேசிக்கொண்டனர். எங்கள் ஊரின் காதல் மையமாக தைலந்தோப்புகளே பணியாற்றின. சாதி இறுக்கம் இருந்த ஊராக இருந்தாலும் காதலை சாதி என்ன செய்துவிட முடியும்? சாதி ஒழுங்கை கண்காணிக்கும் பெருசுகள்  மீசை முறுக்கி நடைப்போட்டனர். அதில் ஒரு பெரிய மனிதரின் சாயலில் ஒரு குறவர் இன பெண்ணுக்கு ஒரு மகன் இருந்ததை நீண்டகாலம் நமுட்டு சிரிப்புடன் பெரியவர்கள் பேசிக்கொள்வதை பத்து வயது நிறப்பிய எங்களை போன்ற சிறுவர்கள் புரியாமல் கேட்டுக்கொண்டிருந்தோம்.பின்புதான் புரிந்தது ஆணாதிக்க வக்ரங்களுக்கும், வன்முறைகளுக்கும்  சாதி தடையில்லை என...

            தாத்தாவுடன் சைக்கிளில் சென்று பள்ளிக்கு வெளியில் இறங்கினேன்....

(மிச்சம் இருக்கிறது நினைவுகள்)