வரலாறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வரலாறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 11 அக்டோபர், 2024

மக்கள் சீன புரட்சி அறிமுகம் - 2

மஞ்சள் நதி வரைபடம்

 

லான்சுவில் உள்ள(Lanzhou)ஆற்றத் தாய் நினைவிடம்


 

மஞ்சள் ஆற்றை கடந்து செல்வோம்:

    'மஞ்சள் ஆறு' என்ற வார்த்தை சில தமிழக வாசகர்களுக்கு சாண்டில்யன் எழுதிய  மேவார் மன்னன் ராணா சங்கனுடைய  வரலாற்று நாவலை நினைவூட்டலாம். ஆனால் 60 லட்சம் மக்கள் உயிரை தன்னுள் செரித்த மஞ்சள் ஆறு சீன தேசத்தி சோகம். சீன வரலாற்றில் பல வம்ச ஆட்சிகளை அழித்தும், பல வம்ச ஆட்சிகளில் பாதுகாப்பு அரணாகவும் இருந்த ஆறு இது. தனது பள்ளதாக்கு பகுதிகளில் பல போர்களங்களை கண்ட வரலாற்று சாட்சி மஞ்சள் நதி. சீன நாகரிகம் மஞ்சள் ஆற்றும் படுகையிலேயே தோன்றியதாக நம்பப்படுகிறது. இது 'தாய் ஆறு' எனவும் 'சீன நாகரிகத்தின் தொட்டில்' எனவும் சீனர்களால் குறிப்பிடப்படுகிறது. இதற்கு சேற்று நீரோட்டம் எனவும் பெயர் உண்டு. 'மஞ்சள் ஆறு தெளிவாக ஒடும் போது' என்று சீனத்தில் சொலவடை உண்டு. அதாவது என்பது போல நடக்க இயலாத செயல்கள் குறித்து சொல்லப்படுவதுண்டு.

     சீனாவின் 2-வது நீண்ட நதி மஞ்சள் ஆறு (ஹுவாங் ஹெ) ஆகும். அதுமட்டுமல்ல, உலகின் 6-வது நீளமான ஆறும் இதுதான்.  மேற்கு சீனாவின் சிங்ஹாய் (Qinghai) மாகாணத்தில் உள்ள பாயன் ஹர் மலைத்தொடரில் தோன்றி, 9  மாகாணங்கள் வழியாக 5,464 கி.மீ  தொலைவு ஓடி பொகாய் கடலில் கலக்கிறது. மஞ்சள் ஆற்றுப் படுகை கிழமேற்காக 1900 கி.மீ  மற்றும் வடக்கு தெற்காக 1100 கி.மீ  வரை பரவியுள்ளது. இதன் படுகையின் மொத்தப்பரப்பு 7,42,443 சதுரகிமீ  என்பதிலிருந்து இதன் பிருமாண்டத்தை புரிந்துக் கொள்ளலாம்.  

    மஞ்சள் ஆறு சீன நாகரிகத்தின் தொட்டில் என அழைக்கப்படுகிறது. இங்கேயே வட சீன நாகரிகம் தோன்றியது. இவ்வாற்றுப்பகுதி பழங்காலத்தில் மற்ற பகுதிகளை விட மிகவும் செழிப்பாக வளம் மிகுந்து இருந்தது. பழங்கால சீன இலக்கியங்களில் மஞ்சள் ஆறானது ஹெ  என்று குறிக்கப்படுகிறது. அதற்கு தற்போதைய சீன மொழியில் ஆறு என்று பொருள். மஞ்சள் ஆறு என்ற பதம் முதலில் மேற்கு ஹான் வம்சத்தில் (கி.மு 206 - கி.பி 9) உருவானது.

            மஞ்சள் ஆறு அடிக்கடி முரண்டு பிடித்து ஓடும் ஜல்லிக்கட்டு காலையென, நினைத்த திசையெல்லாம் பாய்ந்திருக்கிறது.  தனது பாதைய நினைத்த பக்கமெல்லாம் திருப்பி இருக்கிறது. தனது பயணத்தில் கடந்த 3,000–4,000 ஆண்டுகளில் 1,593 முறை வெள்ள பெருக்காய் கரைகளை கடந்து மோதி உடைத்துள்ளது. குறிப்பாக கி.பி 1332-33 யுவான் வம்சத்தின் ஆட்சியின் போது 9 லட்சம் மக்களை காவு கொண்ட மஞ்சள் ஆறு, 1887 ஆண்டு குயிங் வம்ச ஆட்சியின் போதும்  லட்சம் மக்களை விழுங்கி சென்றது, 1931 சீனக் குடியரசு காலத்தில் சுமார்  லட்சம் மக்களை பலி வாங்கியது. இத்தனை துயரத்தை விளைவித்த மஞ்சள் ஆற்றுக்கு எப்படி மக்கள் சீன குடியரசு கடிவாளமிட்டது, எப்படி ஆற்றை கட்டுப்படுத்தி சோகத்தை மகிழ்ச்சியாய் மாற்றியது என இறுதியில் பார்போம்.

வம்சத்தை அழித்தா மஞ்சள் ஆறு:

     (Qin) வம்சத்து (221 - 206 கிமு) காலத்தை சார்ந்த வரை படங்கள் மஞ்சள் ஆறு தற்போது செல்லும் பாதையிலிருந்து வடக்கே ஓடியதாக தெரிவிக்கின்றன. அந்த வரைபடத்திலிருந்து லுயாங் மாகாணத்தை தாண்டியதும் இது சாங்சி (Shanxi) மற்றும் ஹெனான் (Henan) மாகாணங்களின் எல்லையிலும் பின்பு ஹெபெய் மற்றும் சாங்டங் (Shandong) மாகாணங்களின் எல்லையில் பாய்ந்து டியன்ஜிங் (Tianjin) அருகே பொகாய் குடாவில் (Bohai Bay) கலக்கிறது.  கிபி 11ம் நூற்றாண்டில் ஏற்பட்ட பெரும் வெள்ளமே ஜிங் வம்சம் வீழ்வதற்கு காரணமாகும். அப்போது ஆறு மீண்டும் தன் பாதையை வடக்கே டியன்ஜினிலிருந்து (Tianjin) தெற்கே சாங்டங் (Shandong) தீபகற்பத்துக்கு மாறியது.

    1194ம் ஆண்டு இதன் பாதையில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. கிட்டதட்ட 700 ஆண்டுகளுக்கு இது குஆய்(Huai) ஆற்றின் வடிகால் பகுதியை ஆக்கரமித்திருந்தது. மஞ்சள் ஆற்றின் சேறு மற்றும் சகதி குஆய் (Huai) ஆற்றின் கழிமுகத்தை தடுத்ததால் ஆயிரக்கணக்கானோர் வீடிழந்தனர். மஞ்சள் ஆற்றின் தற்போதைய பாதை 1897லிருந்து மாறாமல் இருக்கிறது.

    கடந்த 700 ஆண்டுகளில் குஆய் (Huai) ஆற்றின் பாதைக்கும் இதன் மூல பாதைக்கும் பல முறை மாறி மாறி மஞ்சள் ஆற்றின் போக்கு இருந்துள்ளது. இதன் காரணமாக உருவான வண்டல் படிமங்கள் அதிகளவில் இருந்ததால் மஞ்சள் ஆறு தன் போக்கை வடக்கே மாற்றிக்கொண்டதும் குஆய் (Huai) ஆற்றினால் தன் மூல பாதையில் செல்லமுடியவில்லை. அதற்கு பதிலாக இதன் நீர் ஹோன்ச் (Hongze) ஏரியில் தேங்கி பின் தெற்கு நோக்கி ஓடி  யாங்சே  ஆற்றில் கலக்கிறது.

மனித ஆசையினால் உடைக்கப்பட்ட கரைகள்:

     சீன வரலாற்றின் போர்களில் இந்த மஞ்சள் ஆற்றுக்கு முக்கிய பங்குண்டு.  தனது எதிர் படையை அழிப்பதற்காக தூண்டப்பட்ட இயற்கை பேரழிவை உருவாக்கி, வீரர்களுக்கு மாற்றாக தண்ணீரைப் பயன்படுத்தும் கலையை சீனர்கள் உருவாக்கினார்கள்.  1938 இல் நடந்த இரண்டாவது சீன - ஜப்பானிய போரின்போது, சியாங் கை - ஷேக்கின் படைகள்  ஹெனானில் உள்ள  ஹுவாயுவான்கோவ் கிராமத்திற்கு அருகே ஆற்றின் தடுப்பணைகளை உடைத்தன. தங்களை நோக்கி முன்னேறும் ஜப்பானியப் படைகளை நிறுத்த முயற்சி செய்வதே இந்த நடவடிக்கையின் குறிக்கோளாக இருந்தது.  ஆனால் மஞ்சள் நதி வேறொன்றை நிகழ்த்தியது.  

    54,000 கிமீ பரப்பளவில் ஏற்பட்ட வெள்ளம் சுமார் 5 லட்சம் முதல் 9 லட்சம் சீன உயிர்களையும், கணக்கிட முடியாத எண்ணிக்கையிலான ஜப்பானிய வீரர்களின் உயிர்களையும்  பறித்தது. இதனால் ஜப்பான் இராணுவம் மஞ்சள் ஆற்றின் தென் கரையில் உள்ள ஸெங் - சவ் பகுதியை எடுத்துக்கொள்வதை வெள்ளம் தடுத்தது, ஆனால் சீன அரசாங்கத்தின் தற்காலிக இடமாகவும் யாங்சே ஆற்றின் குறுக்கே இருக்கும் வுஹானைக் கைப்பற்றும் ஜப்பானிய படைகளின்  இலக்கை தடுக்கமுடியவில்லை.

  மகத்தான சீனப் புரட்சியின் விளைவு:

    மகத்தான சீன புரட்சி முடிந்த துவக்க காலமான 1950ம் ஆண்டில் எடுக்கப்பட்டதை விட தற்போது ஐந்து மடங்கு நீர் அதிகமாக எடுக்கப்படுகிறது. 1999ம் ஆண்டு கணக்கின் படி இதன் நீரை ஆதாரமாக கொண்டு 140 மில்லியன் மக்களும் 74,000 சதுர கி.மீ நிலமும் பயன்பெறுகின்றன. மஞ்சள் ஆற்றின் கழிமுக பரப்பு 8,000 சதுர கி.மீ ஆகும், எனினும் 1996ம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் இது குறைந்து வருவதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதற்கு மண் அரிப்பே முதன்மையான காரணமாக கூறப்பட்டுள்ளது.

     இந்த மஞ்சள் நதியில் மாபெரும் பாசனத் திட்டத்தை சீன அரசு உருவாக்கியது. 1960-ஆம் ஆண்டு முதல் 2015-ஆம் ஆண்டுக்குள் 12 பெரிய அணைகள் கட்டப்பட்டன. மேலும் சில அணைகளைக் கட்டி வருகிறது. கடந்த 60 ஆண்டுகளில் 7 நீா் மின் சக்தி நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டன. இந்தத் திட்டங்களால் சுமார் 5,620 மெகா வாட் மின்சாரம் உற்பத்தியாகிறது. வெள்ளம் முழுமையாகத் தடுக்கப்பட்டது. பல ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெற்றன. பல கோடி மக்கள் வேளாண்மையில் தன்னிறைவு நிலையை அடைந்தனா். மஞ்சள் நதியால் சீனாவின் துயரம் என்று கதை பேசிய வரலாறு, சீனாவின் மகிழ்ச்சி என்று தற்போது பெருமை பேசுகிறது.

அடுத்து வரும் ஆபத்து: 

     கடுமையான மாசுபாடு சீனாவின் மஞ்சள் நதியில் மூன்றில் ஒரு பகுதியை பயன்படுத்த முடியாததாக ஆக்கியுள்ளது என்று புதிய ஆராய்ச்சிகள் கூறுகிறது. நாட்டின் "தாய் நதி" என்று அழைக்கப்படும் இது சீனாவின் வடக்கில் உள்ள மில்லியன் கணக்கான மக்களுக்கு தண்ணீர் வழங்குகிறது. ஆனால் சமீப ஆண்டுகளில் தொழிற்சாலை வெளியேற்றம் மற்றும் வேகமாக விரிவடைந்து வரும் நகரங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் காரணமாக அதன் தரம் மோசமடைந்துள்ளது. 

    நதியின் பல பகுதிகள் இப்போது விவசாயம் அல்லது தொழில்துறை பயன்பாட்டிற்கு கூட தகுதியற்றவையாக மாறி உள்ளது என ஆய்வு சுட்டிக்காட்டுகின்றன. 2009ல்  எடுக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில்  உலகின் மிக நீளமான நீர்வழிகளில் ஒன்றான ஆற்றின் 8,384 மைல்கள் மற்றும் அதன் துணை நதிகளை உள்ளடக்கி உள்ளது. நீர்வள அமைச்சகத்துடன் இணைந்த மஞ்சள் நதி பாதுகாப்புக் குழு, 2007 ஆம் ஆண்டில் 33.8% நதி அமைப்பின் நீர் மாதிரிகள் மோசமாக உள்ளதாக பதிவு செய்துள்ளது. அதாவது, ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டத்தால் பயன்படுத்தப்படும் அளவுகோல்களின்படி, இது குடி நீர், மீன்வளர்ப்பு, தொழில்துறை பயன்பாடு மற்றும் விவசாயத்திற்கு கூட தகுதியற்றது. காரணம்  மஞ்சள் ஆற்றின் மேல் மற்றும் நடுப்பகுதிகளில் உள்ள பல மாசுபடுத்தும் நிறுவனங்கள்தான்.

    ஆனாலும் சீனாவின் ஸ்டேட் கவுன்சில் கடந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் ஆற்றலைச் சேமிக்கவும், மாசுகளை வெளியேற்றுவதைக் குறைக்கவும் தொழில்துறை நிறுவனங்களிடையே நாடு தழுவிய பிரச்சாரத்தைத் தொடங்கியது. தொழிற்சாலைகள் அதிக செறிவு கொண்ட பகுதிகள் வழியாக ஆறு கடப்பதால் வரும் பிரச்சினைகளை எதிர்கொள்ள அரசு தயாராகி உள்ளது.

     தி,கார்டியன் இதழ் இது குறித்து ஒரு சிறப்பு கட்டுரையை வெளியிட்டுள்ளது. அதில் கடந்த ஆண்டு கணினியில் வெளியேற்றப்பட்ட கழிவு மற்றும் கழிவுநீர் மொத்தம் 4.29 பில்லியன் டன்கள் என்று அறிக்கை கூறியது. தொழிற்சாலை மற்றும் உற்பத்தி ஆற்றில் 70% வெளியேற்றப்படுகிறது, குடும்பங்கள் 23% மற்றும் பிற மூலங்களிலிருந்து 6% க்கும் அதிகமானவை.” என குறிப்பிட்டுள்ளது.

    சீனாவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சகம் இந்த கோடையில் சீனாவின் நீர்வழிகளின் மாசுபாடு "கடுமையானது" என்று எச்சரித்தது. ஏறக்குறைய 200 ஆறுகளில் சோதனை செய்யப்பட்ட 20% க்கும் அதிகமான நீர் பயன்படுத்த பாதுகாப்பானது அல்ல என்று அது மேலும் கூறியது. இந்த சூழலில் புதிய காலகட்ட சவால்களை எதிர்கொண்டு மஞ்சள் ஆற்றை பாதுகாக்க சீன மக்கள் குடியரசு போராடிக்கொண்டிருக்கிறது.

               சீன தேசத்தின் 5000 ஆண்டுகால மாற்றத்தினை கண்கண்ட சாட்சி எனப் போற்றப்படும் மஞ்சள் நதி கடந்து பயணிப்போம் வாருங்கள்

 

 மக்கள் சீன புரட்சி அறிமுகம் - 1

வெள்ளி, 4 நவம்பர், 2016

சுந்தர ஆத்தா: உள்ளூர் வீராங்கனைகளை கண்டடைவோம்!



விடுதலைப் போரில் பெண்கள் - 26


""பொதுவாக வரலாற்று விழிப்புணர்வு என்பது வெகுஜன வரலாற்று விழிப்புணர்வாய் மாற வேண்டும். அப்படி வரலாறு வெகுஜன வரலாற்று விழிப்புணர்வாக மாற வேண்டுமெனில் நாம் உள்ளூர் வரலாற்றை தொகுக்க வேண்டியது அவசியமாகிறது. தேசிய கட்டமைப்பும் பிராந்திய வரலாறும் ஒன்றிணையவில்லை, உள்ளூர் வரலாற்றை தேசிய வரலாற்றுக்கு எதிராய் நிறுத்தக்கூடாது. நூண்ணியல் வரலாறு பேரியல் வரலாறு இரண்டுமே முக்கியம். ஆனால் இன்று வரை தேசிய வரலாறு கூறும் செய்திகள் என்ன? பிரபலமான வரலாறு மேலும் பிரபலப்படுத்தப்படுவதுதான் நடக்கிறது."" என்று வரலாற்று அறிஞர் கே.என்.பனிக்கர் கூறியதன் முக்கியத்துவம் விடுதலைப் போராட்ட வரலாற்றை தொகுப்பதில் அவசியப் பணியாகிறது.  
மேலும் மேலும் வரலாற்றை எழுதுபவர்கள் எதை முக்கியம் என கருதுகிறார்களோ அதுவே பதியபடுகிறது. மேலும் அதில் ஆண்களே அதிகம் ஈடுபடுவதால் அவர்கள் சார்ந்த பதிவே அதிகம் பதிவாகிறது. விடுதலைப் போராட்ட வரலாறும் இப்படியே பதியப்படுள்ளது. இதை மாற்ற வேண்டுமெனில் தேசத்தின் திசைகள்தோறும் விடுதலைப் போராட்ட வீராங்கனைகளின் வாய்மொழி வரலாற்றை தொகுப்பது அவசியமாகிறது. அப்படி பதியப்பட்ட ஒரு ஆச்சரியமான உள்ளூர் வரலாறு 11 ஆண்டுகளுக்கு முன் குழுதம் இதழில் வெளியாகி உள்ளது.  
சுந்தர ஆத்தா என்றால் திருப்பூர்வாசிகள் அந்த தொண்ணூற்றி ஐந்து வயதுப் பெண்மணியை மிகவும் மரியாதையாக, மிகவும் சந்தோஷமாக கை காட்டுகிறார்கள்.
எங்கள் ஊரின் இந்த ஆத்தாவும் நம் சுதந்திரப் போராட்டத்தில் பெரிய பங்கு வகித்தவர் தெரியுமா? என்ற சந்தோஷம் அவர்கள் கண்ணில் மின்னும்... கோடீஸ்வரக் குடும்பத்தைச் சேர்ந்த இந்தப் பெண்மணி, இந்த வயதிலும் வசதி மிக்கத் தன்னுடைய பங்களாவில், தன் வாரிசுகளுடன் வசிக்காமல், ஆசிரமத்திலேதான் இருக்கிறார். சுந்தராம்பாளின் அப்பா, திருப்பூர் ஏரியாவிலேயே பெரிய மணியக்காரர். நாடு முழுக்க காந்தியின் அஹிம்சா வழி சுதந்திரப் போராட்டம் பரவியிருந்த நேரம் அது... சுந்தராம்பாளின் அப்பாவுக்கும் காந்தியின் கொள்கைகளின் மேல் பற்று ஏற்பட்டிருக்கிறது. அப்பாவின் பற்று, மகளுக்கும் இயல்பாகவே வந்திருக்கிறது.
தியாகி சுந்தராம்பாள் அதை நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தார்... காந்தியடிகள், திருப்பூர் நொய்யல் ஆற்றங்கரையில் நடந்த கூட்டத்திற்காக வந்திருந்தார். நானும் என்னுடைய பெரியம்மா பெண் முத்துலட்சுமியும் அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளப் போயிருந்தோம். அப்போது எனக்குப் பதினைந்து வயதிருக்கும். பட்டுப்புடவையும் கழுத்து நிறைய கிலோ கணக்கில் நகைகளையும் அணிந்து கொண்டு போயிருந்தோம். 
காந்தியோ எளிமையே உருவாக இருந்தார். அவருடைய பேச்சும் செயலும் ஒன்றாகவே இருந்ததை அந்த கொஞ்ச நேரத்திலேயே உணர முடிந்தது. அந்தக் கூட்டத்தின் முடிவில் ஹரிஜன சேவா இயக்கத்திற்கு நிதி வசூல் செய்தார் காந்தி. அவருடைய பேச்சால் ஈர்க்கப்பட்ட நாங்கள் இருவரும், உடனே அணிந்திருந்த அத்தனை நகைகளையும் கழற்றி ஹரிஜன சேவா இயக்கத்துக்கு கொடுத்து விட்டோம். நகைகளைப் பெற்றுக் கொண்ட காந்தியடிகள், இது மட்டும் போதாது... பட்டுப் புடவைகளை விட்டு இனி நீங்கள் கதராடையை அணிய வேண்டும் என்றும் சொன்னார். அவர் சொன்னபடியே இன்று வரை கதராடையை மட்டுமே அணிந்து வருகிறேன்.
அந்தக் கூட்டத்திற்குப் பிறகுதான், நான் சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட ஆரம்பித்தேன். என்னையே அழித்தாலும் சரி, நாட்டின் அடிமை விலங்கை அறுக்கப் பாடுபடுவேன் என்று சபதமே எடுத்துக் கொண்டேன் என்று சொல்லும் இவரின் குரலின் கம்பீரம் இன்னும் குறையவில்லை.
சுதந்திரப் போராட்டத்திற்கு இடையே சுந்தராம்பாளுக்கு பதினேழு வயதில் திருமணம், இரண்டு குழந்தைகள் என்று குடும்ப வாழ்க்கையும் ஏற்பட்டிருக்கிறது. இதில் சோகம் என்னவென்றால் சுதந்திரப் போராட்டத்தில் சுந்தராம்பாள் ஈடுபடுவதை அவருடைய கணவர் விரும்பவில்லை. எத்தனையோ முறை இவருக்கும், கணவருக்கும் இடையே இந்த விஷயத்தில் பெரிய போராட்டமே ஏற்பட்டிருக்கிறது. நான் காந்தி வழியில் தீவிர மதுவிலக்குப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தேன். என் கணவரோ அப்போதுதான் ஊரைச் சுற்றியிருந்த அத்தனை கள்ளுக் கடைகளையும் ஏலத்தில் எடுத்திருந்தார். இத்தனை முரண்பாடுகள் எங்கள் இருவருக்குள்ளும் இருக்கும்போது எப்படி அவர் என்னுடன் குடும்பம் நடத்துவார்? அதனால்தான் அவர் என்னையும் இரண்டு குழந்தைகளையும் பிரிந்து சென்று இன்னொரு திருமணம் செய்து கொண்டார் என்று சொல்லும்போதே சுந்தராம்பாளின் முகத்தில் வெறுமையான புன்னகை.
அவர் என்னை விட்டுப் பிரிந்தது ஒரு விதத்தில் எனக்கு நன்மை என்றே நினைக்கிறேன். அவர் பிரிந்த பிறகுதான் நான் சுதந்திரப் போராட்டத்தில் இன்னும் தீவிரமாக ஈடுபட முடிந்தது. தனி நபர் சத்தியாகிரகப் போராட்டத்தில், என் மூன்று வயது கைக்குழந்தையுடன் ஜெயிலுக்குப் போனேன். கிட்டத்தட்ட ஏழு மாதங்கள் நான் ஜெயிலிலேயே இருந்தேன் என்று சொல்லும் சுந்தராம்பாள், சுதந்திரப் போராட்டக் காலத்தில் மூன்று முறை ஜெயிலுக்குப் போயிருக்கிறார். அந்தக் காலகட்டத்தில் அவருக்கு உற்ற துணையாக இருந்தது அவருடைய குடும்பம்தான். இன்றும் சுந்தராம்பாளின் குடும்பம்தான் திருப்பூரில் பெரிய பணக்காரக் குடும்பம். இருந்தும் அவர் குடியிருப்பது என்னவோ ஆசிரமத்தில்தான்!
சுதந்திரம் கிடைத்த பிறகு அமைந்த புதிய அரசின் அமைச்சரவையில் இடம் பெற எனக்கும் ஒரு வாய்ப்பு வந்தது. தேர்தலில் நில்லுங்கள், உங்களுக்கு அமைச்சர் பதவி கொடுக்கிறோம் என்றார்கள். ஆனால் சுதந்திரத்திற்குப் பிறகு இருந்த காங்கிரஸோ, அதன் நோக்கத்திலிருந்து நிறைய மாறி இருந்தது. வசதி படைத்தவர்கள் மட்டுமே பெரிய பதவிகளில் இருந்தார்கள். இந்தப் போக்கு எனக்குப் பிடிக்கவில்லை.
இந்தச் சமயத்தில்தான் எனக்கும் அழைப்பும் வந்தது. வினோபாபாவேயின் ஆலோசனைப்படி அதை நான் நிராகரித்து விட்டேன். அவர்தான் என்னை ஆதரவற்ற பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் ஒரு இல்லம் ஆரம்பிக்க யோசனை சொன்னார். இதோ அந்த இல்லத்தில்தான் நான் இத்தனை காலமும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்று தெரிவிக்கிறார். சுதந்திரம் கிடைத்த பிறகும்கூட, சுந்தராம்பாளின் போராட்டம் தொடர்ந்து கொண்டே இருந்தது. கோயம்புத்தூரைச் சுற்றியிருந்த நூற்றாலைகளில் பணிபுரிந்த பெண்களுக்காகவும் இவர் போராடியிருக்கிறார். அதோடு விவசாயிகளின் மின் கட்டணத்தை உயர்த்தியபோது நடுரோட்டில் மாடுகளை அவிழ்த்து விட்டு மறியல் போராட்டமும் நடத்தியவர் இவர்.
என்ன நோக்கத்திற்காக நாங்கள் போராடி சுதந்திரம் வாங்கினோமோ, அந்த நோக்கம் இன்னும் நிறைவேறவே இல்லை. வறுமை, ஏழ்மை, வன்முறை, பெண்ணடிமைத்தனம் வேலையில்லாத் திண்டாட்டம் இன்னும் மாறவேயில்லை. பெண்களின் நிலையிலும் பெரிசாக எந்த முன்னேற்றமும் இல்லை. ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கினாலும் கூட பெண்களால் இன்னும் தனிப்பட்ட ஒரு முடிவை தன்னிச்சையாக எடுக்க முடிவதில்லை. கணவன் அல்லது தந்தையை சார்ந்துதான் இருக்க வேண்டிய நிலைமை. இது மாற வேண்டும்! 
இத்த்கைய சுந்தர ஆத்தாக்கள் எல்லா இடங்களிலும் நிறைந்து உள்ளார்கள். அவர்கள் வரலாற்றை தொகுப்பது எப்போது?
(தொடரும்)

வெள்ளி, 26 ஆகஸ்ட், 2016

விடுதலைப் போரில் தமிழக இஸ்லாமியர்களின் தியாகம்



இன்றைய இளைய தலைமுறைக்கு இந்திய விடுதலைப் போரின்வரலாற்றை, அதன் வீரம் மிக்க நினைவுகளை, தியாக வேள்விகளை அறிமுகம்செய்ய வேண்டியது அவசியக் கடமையாகிறது.  காவி இருள் சூழும் அபாயம் இந்திய நாட்டை நோக்கி வேகமாய் நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. தேசத்தின்விடுதலைக்கு தங்கள் உயிரையே விலையாய் கொடுத்த தியாகிகளை மத துவேஷத்தால் தேச துரோகிகளாக சித்தரிப்பது எவ்வளவு பெரிய கயமைத்தனம், எத்தகைய வன்முறை அது? அகண்ட இந்து ராஷ்டிர கொடுங்கனவின் தத்துவ பின்னணி இஸ்லாமியர்களை குறிவைத்து வளர்வது எத்துனை பெருந்துயர்? வளர்ந்தெழுந்த  விடுதலைப் போரின் விதையாய் விழுந்த இஸ்லாமியர்கள் வரலாற்றை மீட்டெடுத்து, காவி இருளின், கொடுங்கனவின் தடுப்பு அரணாக முன்நிறுத்த வேண்டியது மதச்சார்பற்ற சக்திகளின் கடமையாகிறது. வரலாறு என்ன சொல்கிறது? கொஞ்சம் பயணிக்கலாம்.

1857ல் நடந்த முதல் விடுதலை போரின் நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஆதாவது 1757-ல் சிராஜ்-உத்-தௌலா ஆங்கிலேயரை எதிர்த்து நடத்திய பிளாசிப் போர்தான் பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராய் இம்மண்ணில் நடந்த முதல் பெரிய யுத்தம். அவரது வழியை பின்பற்றி அடுத்த 190 ஆண்டுகள் இஸ்லாமியர்கள் இந்த நாட்டின் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய வரலாறு மிகப்பெரியது. குறிப்பாக தமிழகத்தில் உள்ள இஸ்லாமியர்கள் இந்த வீரம் மிகுந்த போராட்டத்தில் கொஞ்சமும் பின்தங்கவில்லை.

1800-1801 ஆண்டுகளில் ஆங்கிலேயர்க்கு எதிராகத் தென்னிந்திய குறு நில மன்னர்களும் பாளையக்காரர்களும் ஒருங்கிணைந்த கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர். மலபார் கேரளவர்மா, மருது பாண்டியர், திப்புசுல்தானின் குதிரைப்படைத் தலைவராகப் பணியாற்றிய கனீஷ்கான் (Khan-i-Jah-Khan), மராத்தியில் சிமோகா (Shimoga) பகுதியை ஆண்ட தூண்டாஜி வோக் (Dhondaji Waug), விருப்பாச்சி பாளையக்காரர் கோபால நாயக்கர், திண்டுககல் பாளையக்காரர் போன்றோர் மகத்தான கூட்டமைப்பை உருவாக்கினர்.

இக்கூட்டமைப்பின் சார்பில் வடக்கு-தெற்கு ஆட்சியாளர்களை இணைக்கும் வாயிலாக கனீஷ்கான் செயல்பட்டார். இந்தப் புரட்சிப்படை யுத்தத்திற்குத் தலைமைப் பொறுப்பு கனீஷ்கானிடம் ஒப்படைக்கப்பட்டது. இக்கூட்டமைப்பின் முக்கிய திட்டமே கோவை - சேலம் பகுதிகளைக்  கைப்பற்றுவதாகும். 4000 குதிரைப்படை வீரர்களுடன் இத்தாக்குதலில் கனீஷ்கான் ஈடுபட்டார்.  ரகசியமாகத் தீட்டப்பட்ட இத்திட்டம்  தோல்வியில் முடிந்தது. இக்கிளர்ச்சியில் கைதான 42 பேருக்கு சேலம் கலெக்டர் மாக்லியோட் (Macleod) உத்தரவுப்படி சேலம் ராணுவ கோர்ட்டில் தூக்குத்தணடனை என தீர்ப்பு வழங்கப்பட்டு அனைவரும் தூக்கிலிடப்பட்டனர் (1)

பாஞ்சாலங்குறிச்சி சீமையை ஆண்ட வீரப்பாண்டிய கட்டப்பொம்மன் இராமநாதபுரத்திற்கு கலக்டர் ஜாக்ஸன் துரையைச் சந்திக்க சென்றபோது அதில் வீரமிகு இஸ்லாமிய தளபதிகள் பலரும் அஞ்சாமல் சென்றனர்
மம்மது தம்பியும் முகம்மது தம்பியும்
மார்க்கமுள்ள தம்பி வரிசையுந்தான்
தர்ம குணவான் இபுராமு சாகிபும்
தம்பி இசுமாலு ராவுத்தனும்…
என்று அவரோடு சென்ற தளபதிகளைப் பட்டியலிட்டுக் காட்டுகிறது  வீரபாண்டிய கட்டபொம்மன் கதைப்பாடல். (2)

மலேசியாவின்  பினாங்கு தீவில் வாழும் தமிழர்கள் கிளிங்கர்கள் எனப் பிறமொழி பேசுபவர்களால் அழைக்கப்பட்டனர். இதன் பின்னால் சுதந்திரப் போராட்ட வீரர்களின்  தியாக வரலாறு மறைந்துள்ளது. மருது சகோதரர்கள் ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டு இறுதியில் தூக்கிலிடப்பட்ட பின்பு ஆங்கில அரசு அவரது குடும்பத்தைச் சார்ந்த இளைஞர்கள் மற்றும் தளபதிகள், வீரர்கள் என 72 பேரைப் பினாங்கு தீவிற்கு  நாடு கடத்தி விலங்கிட்டு, கைகால்களை இரும்புச் சங்கிலியால் பிணைத்து நடமாட விட்டிருந்தனர். அவர்கள் நடக்கும் போது சங்கிலிச் சத்தம் கிளிங் கிளிங் எனக் கேட்டதால் அக்கைதிகள் கிளிங்கர்கள் என அழைக்கப்பட்டனர். நாளடைவில் அப்பெயர் அங்கு குடியேறிய தமிழர்களை அழைப்பதற்குரிய பெயராக மாறியது.

அத்தகைய  கைதிகள் கூட்டத்தில் தலைமையேற்ற இருவரில் ஒருவர் இளைய மருதுவின் மகன் முத்துவடுகு என்ற துரைச்சாமி. மற்றவர் முக்கிய படைத் தளபதிகளில் ஒருவரான சேக் உசேன் என்ற இஸ்லாமிய இளைஞர். இச்சப்பட்டி அமில்தார் சேக் உசேன் என்று அழைக்கப்பட்ட இவர், கிளர்ச்சிப் படையின் முதல் தாக்குதலுக்குத் தலைமை தாங்கினார்.  (3)

சென்னையில் பிறந்து உத்திரப் பிரதேசத்தில் வாழ்ந்தவர் மௌல்வி செய்யது அஹ்மதுல்லாஹ் ஷாஹ். விடுதலைக்காக வடஇந்தியாவின் பல பகுதிகளில் யாத்திரை செய்தவர். லக்னோவில் ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் ''ஆங்கிலேயர்களைக் கொன்று குவித்து தேசத்திலிருந்து அவர்களை ஒழித்தாலன்றி நாம் நம் தாய் நாட்டை பாதுகாக்க முடியாது'' என்று முழக்கமிட்டார். ஆங்கில அரசு அவருக்குத் தூக்குத் தண்டனை விதித்தது.(4)

1920 - இல் ஈரோட்டில் நடைபெற்ற உலமாக்களின் மாநாட்டில் முழுக்க முழுக்க தேசிய பிரச்சனைகளே பேசப்பட்டன. மௌலான முகம்மது அலி இம்மாநாட்டில் ஆற்றிய உரை அன்று தமிழக உலமாக்கள் தேசிய நடவடிக்கைகளில் வேகமாக ஈடுபட உந்து சக்தியாக அமைந்தது. பள்ளிவாசல்களையும் அரபிக்கல்லூரி – மதரசாக்களையும் சுதந்திரத்தைப் பற்றிச் சிந்திக்கின்ற – பேசுகின்ற – செயல்பாட்டுக்குரிய களங்களாக மாற்றின. இக்காலகட்டத்தில் திண்டுக்கல்லை மையப்படுத்தி உலமாக்கள் பலர் இந்த தேசிய இயக்கத்தை ஆங்கிலேயருக்கு எதிராக உயர்த்திப் பிடித்துள்ளனர். மௌலானா அப்துல் ஹமீது பாக்கவி அவர்கள்  கதராடை அணியாத மணமகனின் திருமணத்தில் உலமாக்கள் கலந்து கொள்ளக்கூடாது என பகிரங்க அறிவிப்பை விடுத்தார்.  அதற்கு அன்றைய உலமாக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருந்தது.(5)

ஆண்களுக்கு நிகராக இஸ்லாமிய பெண்களும் களம் கண்டனர். 1922ல் தென்காசி சையது குருக்கள் பள்ளிவாசல் மைதானத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய தேசபக்தை பீபியம்மாள் ”என் பிள்ளைகள் சிறையில் இருக்கும் போது ஒரு வேளை ஆங்கிலேயர்களிடம் மன்னிப்பு கேட்டு விடுதலையானால் அவர்களின் குரல் வளையை நெறித்துக் கொல்வேன்” என்று ஆவேசம் பொங்க உருதுமொழியில் பேசி நிதி திரட்டினார். அவர் பேசியதை தமிழில் திருச்சியைச் சேர்ந்த முர்தஸா சாகிப் மொழி பெயர்த்தார். இதே சுதந்திர வேட்கையுடன் இறுதி வரை இந்தியா முழுவதும் சுற்றப்பயணம் செய்த பீபியம்மாள் 1924 ஆம் ஆண்டு காலமானார். பீபியம்மாள் விருப்பபடி அவரது பூதவுடல் கதர் துணியால் சுற்றப்பட்டே நல்லடக்கம் செய்யப்பட்டது.

அதே போல திருச்சி பீமநகர் வயன்வித்தார் தெருவில் வசித்த மரியம் பீவி என்னும் விடுதலைப் போராட்ட வீராங்களை நாகபுரி கொடிப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறைத் தண்டனை பெற்றார். இவருடைய கணவர் பெயர் அப்துல் கரீம். இஸ்லாமிய பெண்கள் வீதியில் இறங்கி போராடினால் என்னாகும் என காட்ட ஆங்கிலேய அரசு மரியம் பீவிக்கு ஆறு மாத சிறைத் தண்டனை வழங்கி கடலூர் சிறையில் அடைத்தது.

கரூர் நன்னா சாகிப் மற்றும் அவரது மனைவி பியாரி பீவி ஆகிய இரண்டு பேர்களும் ஒத்துழையாமை இயக்கத்திலும், தனி நபர் சத்தியாகிரகத்திலும் பங்கேற்றார்கள். 1920 ஆம் ஆண்டிலிருந்து 1943 ஆம் ஆண்டுவரை விடுதலைப் போராட்டங்கள் பலவற்றில் ஈடுபட்ட நன்னா சாகிப் திருச்சி, அலிப்புரம் சிறைகளில் தண்டனை  அனுபவித்திருக்கிறார்.   தேசத்தின் மீது அளவில்லா பற்றுக்கொண்ட அவரது மனைவி பியாரிபீவி தனிநபர் சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டு நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்தாலும் வீரமுழக்கமிட்டு மகிழ்ச்சியுடன்  சிறை சென்றார்.

இந்திய தேசிய ராணுவத்தின ஒற்றர்ப் படைப்பிரிவு மலேசியாவிலுள்ள பினாங்கு தீவில் இயங்கி வந்தது. இந்த ஒற்றர் படையின் முதல்கட்ட நடவடிக்கையாக ஐந்து ஒற்றர் படை வீரர்கள் கேரளாவின் கோழிக்கோடு அருகிலுள்ள தண்ணூர் கடற்கரையில் 27-12-1942- இல் நீர் மூழ்கிக் கப்பல் மூலம் வந்திறங்கினர். இதே நேரத்தில் பர்மாவில் இருந்து அரகடகன் வழியாக மற்றொரு குழு இந்தியாவிற்குள் நுழைந்தது. இவ்வீரர்கள் தங்களது பணிகளை ரகசியமாக மேற்கொண்டு வரும்போது சிலரால் காட்டிக் கொடுக்கப்பட்டு அனைவரும் கைதானர்.

சென்னை கோட்டையில் விசாரிக்கப்பட்டு அனைவரும் சென்னை சிறையில் அடைக்கப்பட்டனர். விசாரணை நடத்திய நீதிபதி மாக்,  நால்வருக்கு மரணதணடனையும் 14 பேருக்கு ஐந்தாண்டுகள் சிறைத்தண்டனையும் வழங்கினார். மரண தண்டனைப் பெற்ற மற்ற நால்வர்  வைக்கம் அப்துல் காதர்,  பவுஜாசிங், எஸ்.சி.பரதன், ஆனந்தன். இந்த ஒற்றர்படை வழக்கில் ஐந்தாண்டுகள் கடுஞ்சிறைத் தண்டனைப் பெற்ற 14 பேருள் தமிழ்நாடு கீராம்பூரைச் சேர்ந்த முஹம்மது கனி என்ற இஸ்லாமிய இளைஞரும் உண்டு (7)

இதுமட்டுமல்ல சிப்பாய்க் கலகத்தின் போது கண்ணில் பட்ட இந்தியர்களைச் சுட்டுக் கொன்ற நீல் சிலை தகர்க்கும் போராட்டம் சென்னையில் 1927ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடை பெற்றது. இதில் பங்கேற்ற இராமநாதபுரம் முஹம்மது சாலியா முன்று மாதமும், சென்னையைச் சேர்ந்த அப்துல் மஜீது, லத்தீப், இராமநாதபுரம் மஸ்தான், பண்ருட்டி முஹம்மது உசேன் போன்றோர் 6 மாதம் முதல் 2 வருடம் வரையும் கடுங்காவல் தண்டனை பெற்றனர்

1921 - இல்  கள்ளுக்கடை மறியல் போராட்டத்தில் நிலக்கோட்டைத் தாலுகாவில் சிறை  சென்ற மதுரை ஹாஜி முகம்மது மௌலானா சாஹிப்,  உத்தமபாளையம் முகம்மது மீரான் என்ற ஹாஜி கருத்த ராவுத்தர், மதுரை நகரின் வீதிகளில் தான் இயற்றிய பாடல்களைத் தன் மனைவியுடன் பாடிக்கொண்டு உலா வந்து சுதந்திர எழுச்சியை ஊட்டிய வா. ஏ.ந.வ. முகையதீன் அபதுல் காதிர், வில்லுப்பாட்டில் ஒரு பாவலராகத் திகழ்ந்த தாராபுரம் பி.என்.அப்துல் கபீர் , ஒத்துழையாமை இயக்கப் பிரச்சார பாவலர் விருதுநகர்  அப்துல் ரகுமான்.  விஸ்வநாததாஸ்,  செங்கோட்டை கிட்டப்பா, கே.பி.சுந்தராம்பாள் போன்றோர் எழுச்சியூட்டி வந்த காலகட்டத்தில், அவர்களுக்கு நிகராகப் பல நாடக மேடைகளில் சுதந்திர கீதம் இசைத்தவர் காதர்பாட்சா. 'சுதந்திர முரசு' 'விலாவர் ஜரினா' போன்ற தேசபக்தி நாடகங்களில் பாடி நடித்து சுதந்திரப் போராட்டத்திற்கு  தனது பங்களிப்பைச் செய்தவர் மதுரை ஏ.பி.மொய்தீன்.  வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் தீவிரமாக பங்கேற்று 'ஆத்திரம் கொள்' என்பது போன்ற பல சுதந்திர கீதங்களைப் பாடியவர் கவிஞர் கா.மு. ஷெரிப். என தேசபக்தர்களின் பட்டியல் தொடர்கிறது.

1973ம் ஆண்டு தமிழக அரசு புத்தகம் ஒன்றை வெளியிட்டது. அதில் நேதாஜியின் தேசிய இராணுவத்தில் பணியாற்றிய தமிழர்களின் பட்டியலை வெளியிட்டிருந்தது. அப்பட்டியலில் 25% மேற்பட்ட முஸலி¬ம்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கெல்ல்லாம் உச்சமாய் இந்திய சுதேசி வர்க்ககத்தின் லட்சியக் கனவான 'சுதேசி ஸ்டீம் நேவிகேசன்' - என்ற சுதேசிக் கப்பல் கம்பெனியை வ.உ.சிதம்பரம் பிள்ளை 16-10-1906 - இல் நிறுவினார். இந்நிறுவனத்திற்கு பங்குதாரர்களைச் சேர்க்கும் முயற்சியில் அவர் இறங்கியபோது அவருக்கு நம்பிக்கைக் கரம் நீட்டியவர் ஹாஜி ஏ.ஆர். பக்கீர் முகம்மது ராவுத்தர் சேட் ஆவார். ரூபாய் இரண்டு லட்சம் மதிப்புள்ள 8000 பங்குகளை அவர் தனது கம்பெனி சார்பாக வாங்கினார்.

கட்டுரையின் நீளம் கருதி இத்தோடு முடிக்கிறேன். இத்தகைய தியாக சீலர்களை மத்தியில் ஆட்சி பொறுப்பேறுள்ள பிஜேபி கொச்சைப் படுத்துகிறது. என்ன செய்ய போகிறோம்? இந்த வரலாற்றை மக்களிடம் கொண்டு செல்வது நமது கடமையல்லாவா?

உதவியவை: 1 (* K.Rajayyan, South Indian Rebellion, The First War of Independence. 1800-1803,, PP.110-111.). 
2. பேராசிரியர்  நா.வானமாமலை பதிப்பித்து 1971-இல் வெளியான வீரபாண்டிய கட்டபொம்மு கதை பாடல்
 3.  Miltry consultations, Vol.307(19.1.1803), P.1249 - இல் பினாங்குக்கு நாடு கடத்தப்பட்ட 72 பேர் பெயர் பட்டியலில் சேக் உசேன் பெயர் இடம் பெற்றுள்ளது. 
4.சாவர்க்கர்,எரிமலை,பக்கம்.65. 
5.Shan Muhammad, Freedom Movement in India – The Role of Ali Brothers, P.153.  
6.மக்கள் தாரகை, மறைக்கப்பட்ட வரலாறுகளும்…மறைக்கப்படும் உண்மைகளும், சென்னை. 
7. மா.சு.அண்ணாமலை, சும்மா வரவில்லை சுதந்திரம். தினமணிச்சுடர்.4.8.1996.,பக்கம்.9. 
8.  ச.கா.அமீர் பாட்சா, 'இந்திய விடுதலையில் இஸ்லாமியரின் பங்களிப்பு',குர்ஆனின் குரல்,மார்ச் 1998,பக்கம் 39-40.. 

----------------------- 2016 ஆகஸ்ட்  இளைஞர் முழக்கம் இதழில் நான் எழுதிய கட்டுரை --------------------

வெள்ளி, 26 ஜூன், 2015

போதைக்கெதிரான போர்க் களத்தின் இரத்த சாட்சிகள்


உடல் முழுவதும் ஆழமான பல அரிவாள் வெட்டுக்களுடன் இரண்டு உடல்கள், இல்லை இல்லை, இரண்டு தோழர்கள்கள் துடித்து அடங்கிய அந்த நிமிடங்களை.. அந்த தவிப்பை... அந்த அழுகையை... அந்தகோபத்தை எப்படி விவரிப்பதென பலநாட்கள் வார்த்தைகளை தேடியலைந்திருக்கிறேன், அவர்களை மருத்துவமனைக்கு தூக்கிச்சென்று கண்ணெதிரில் தவிக்க தவிக்க அவர்கள் சுவாசம் அடங்கிய 1999ம் ஆண்டு ஜூன் 26ம் தேதியின் அந்த கொடூர இரவு இப்போதும் என் வாழ்வில் மறக்க முடியாத இரவாய் அசைந்தாடிக்கொண்டே இருக்கிறது, எனக்கு மட்டுமல்ல,அப்போது இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தில் பணியாற்றிய மாநிலம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான ஊழியர்களுக்கும் அந்த இரவு மறக்கமுடியாத இரவுதான். 16 ஆண்டுகள் கழித்து இப்போதும் என்னால் அதே கசிந்துருகும் உணர்வோடு அந்த இரவை உணர முடிகிறது.

இரண்டு போராளிகள், அதுவும் இளம் தோழர்கள், அவர்கள் குடும்பத்தின் எதிர்கால கனவுகள், அவர்களின் காதல் கதைகள், அவர்கள் சந்ததியின் தொடர் கண்ணிகள் அறுபட்டது, தேசத்தின் அடையாளமான கூலிப் பட்டாளத்தால் கருவருக்கப்பட்ட கதை இது. சமூகத்தின் மீது ஆளும் வர்க்கத்தின் அக்கறையற்ற அரசியல் விளையாட்டின் அத்தாட்சிகள் அவர்கள். பணம் கிடைத்தால் எதையும் செய்யலாம் என்ற உலகமய அரசியலின் உதாரணங்கள் அவர்கள். காவல்துறை ஏவல்துறையாய் மாறும் என்பதன் இரத்த சாட்சிகள் அவர்கள்.அவர்கள்? குமார் - ஆனந்தன் என்ற மாவீரர்கள். மக்கள் வாழ்வின் உன்னதத்திற்காக கடலூர் மண்ணில் விதைக்கப்பட்ட வீரிய விதைகள். போதைக்கு எதிரானபோர்களத்தில் இப்போதும் வாலிபர் இயக்கத்திற்கு உத்வேகம் அளிப்பவர்கள். அந்த போராளிகள் வீழ்த்தப்பட்ட சரிதத்தின் சாரம் இது. அப்போது அரசாங்கம் மொத்த சாராயகடைகளையும் நடத்தத் துவங்கவில்லை.

தனியார்ஒயின் ஷாப்புகள் பச்சை விளக்குகளை தெருத்தெருவாக எரியவிட்ட காலம் அது. இவைகளுக்கு இணையாக கள்ளச்சாராயம் ஆறாக ஓடி ஆளும் கட்சியினருக்கும், காவல் தூறையினருக்கும் மாமுல் வாழ்க்கையை சீர்படுத்திய நாட்கள் அவை. ஊரில் வேலையற்று திரிந்த இளம் தலைமுறைக்கு வேலைவாய்ப்பு அலுவலங்களாய் சாராயம் காய்ச்சும் இடங்கள் மாறிய பொழுது அது. கல்லைத்தான், மண்ணைததான், காய்ச்சித்தான், குடிக்கத்தான், கற்பித்தானா என பராசக்தியில் வசனம் எழுதிய தமிழினத் தலைவரின் ஆட்சியில் சாராயம் காய்ச்சுதல் மாடி மற்றும் குடிசைத் தொழிலாக நடந்துகொண்டிருந்தது. ஆனால் இதுகுறித்து யாராவது பேசினாலோ, எழுதினாலோ தமிழக முதல்வர் பொறுத்துக்கொள்ள மாட்டார். உடனடியாக வீர வசனங்களை அள்ளி வீசுவார்.

கள்ளச் சாராயப் பானைகள் மீது எனது அரசின் துப்பாக்கி தோட்டாக்கள் பாயும். கள்ளச்சாரயத்தை எதிர்த்து போராடுபவர்களை நான் மாலையிட்டு வரவேற்பேன்‘’ என சட்டமன்றத்தில் தலைவர் ஓங்கிமுழங்கி, அந்த ஓசை அடங்கும் முன்பு, கள்ளச்சாராய வியாபாரிகளின் வீச்சரிவாள்கள் இரண்டு இளைஞர்களின் உடல்களில் இறங்கியது. வியாபாரிகளால் வெட்டி வீழ்த்தபட்ட இரண்டு இளம் உடல்களுக்கு மாலை அணிவிக்கக்கூட அவர் வரவில்லை. அதைவிட கேவலம் உடனடியாக கடலூர்மாவட்டம் கள்ளச்சாராயம் இல்லாத மாவட்டமாக அறிவிக்கப்பட்டதுதான். கள்ளச்சாராயம் இல்லாத மாவட்டமாக அறிவிக்கப்பட்டால் அதற்கு ஆதாரம் வேண்டாமா? 2,39,304 லிட்டர் கள்ளச்சாராயம், 8,03,780 லிட்டர் ஊறல், 69,589 லிட்டர் கள் ஆகியவைகள் அழிக்கப்பட்டது. 2,646 போலி மது பாட்டில்களும், 4,620 லிட்டர் எரி சாராயமும், கடத்தலில் ஈடுபட்ட 164 வாகனங்களும் கைப்பற்றப்பட்டதாக 28.06.1999ஆம் தேதி கடலூர் மாவட்ட காவல்துறை அறிக்கை முதல்வர் அறிக்கையின் முகத்தில் கரி பூசும் விதமாக செய்தித்தாள்களில் வெளிவந்தது. இந்த அன்றைய காவல்துறையின் அறிக்கை குமார் ஆனந்தன் படுகொலைக்கு இரண்டு நாள்களுக்கு பிறகு வந்தது.

கள்ளச்சாராயமே இல்லாத மாவட்டத்தில் ஐந்து மாதங்களில் கிட்டத்தட்ட பத்தாயிரம் பேர் கள்ளச்சாராயம் விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டதன் ரகசியம் வெளிப்பட்டது. உண்மை எப்போதும் உறங்குவதில்லை என்பதற்கு இதைவிட சாட்சி தேவையா? காட்டுநாயக்கர் என்ற இருளர் சமூகத்தில் படித்து முன்னுக்கு வந்த முதல் தலைமுறை இளைஞன் குமார், காவல்துறையில் வேலை கிடைத்து சாதி சான்றிதழ் கிடைக்காமல் காத்திருந்தான். ஆனந்தன் சிறுவயதில் தந்தையை இழந்து பள்ளி படிக்கும் பருவத்தில் வேலைக்குச் செல்லும் நிலையில் வளர்ந்தவன். இந்த இரு இளைஞர்களும் கடலூர் புதுப்பாளையம் பகுதியில் நற்பணி மன்றத்தில் பல சமூகச் சேவைகளை செய்துவந்தனர். அப்போது அவர்களுக்கு அறிமுகமான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் அவர்களை தனது நடவடிக்கையால், போராட்ட குணத்தால் ஈர்த்தது.தெருவை மட்டும் சுத்தம் செய்தால் போதாது தேசம் முழுவதும் சுத்தம் செய்யப்பட வேண்டும் என்ற அரசியலை புரிந்துகொண்ட அந்த இருவரும் சிகப்பு நட்சதிரம் பொறிக்கப்பட்ட வெள்ளைக் கொடியை கையில் ஏந்தி கடலூர் நகராட்சியின் அவலங்களை மட்டுமல்ல ஆளும் வர்க்கத்தின் கொள்கைகளையும் எதிர்த்து போராட கற்றுக்கொண்டனர்.

இந்நிலையில் கெடிலம் ஆற்றின் கரையில், புதுப்பாளையம் பகுதியில் கள்ளச்சராயம் எல்லையை மீறி ஓடத்துவங்கியது. பெண்கள் மாலை வேலையில் வெளியே வரவே அஞ்சினர், இளம் தலைமுறை சாராயத்திற்கு அடிமையாகும் கொடூரம் அரங்கேறத்துவங்கியது. வாலிபர் சங்கத் தோழர்கள் காவல்துறையினருக்கு மனுகொடுக்கத்துவங்கினர். காவல்துறை வாரராவாரம் ஒப்பந்தம் போட்டு மமூல் பெறுவதால் அக்கடைகளை அப்புறப்படுத்துவதுபோல் நடிப்பார்கள். பிறகு மீண்டும் கடைகள் இயங்கத்துவங்கும். மீண்டும் மனு, மீண்டும் கவல்துறை நாடகம் என தொடர்ந்தது. ஒருகட்டத்தில் வாலிபர் சங்கத்தின் தொடர் இயக்கத்தால், மாவட்ட காவல்துறை அதிகாரிகள் தலையீட்டால் கள்ளச்சாராய கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. சிலர் கைது செய்யப்பட்டனர். சிலமாதங்கள் அவர்களால் கடைகளை நடத்த முடியவில்லை. கடைகள் மூட காரணமாக இருந்த வாலிபர் சங்கதோழர்கள் மீது கள்ளச்சாராய வியாபாரிகள் வன்மத்துடன் திரிந்தனர். 

வாலிபர் சங்க தோழர் கனகராஜ் 1998ம் ஆண்டு பட்டபகலில் மார்கெட் பகுதியில் விரட்டிவிரட்டி கொடூரமாக வெட்டப்பட்டார், அவர் பிழைத்தே அதிசயமானது. அதைகண்டித்து இயக்கங்கள் நடத்தப்பட்டது. அப்போதே காவல்துறை விழித்துக்கொண்டிருந்தால் ஓராண்டு கழித்து இரண்டு உயிர்களை பாதுகாத்திருக்க முடியும். ஆனால் ஆளும் கட்சி பிரமுகர்கள், காவல்துறை கரும் புள்ளிகள், கள்ளச்சாராய வியாபாரிகள் என்றமுக்கோணக் கூட்டு ஒன்றாய் நின்றதால் உத்வேகம் பெற்ற சமூகவிரோதிகள் கூட்டம் 1999 ஆம் ஆண்டுஜூன் மாதம் கூலிப்பட்டாளத்தை தயார் செய்தது. கொலை நடந்த அன்று மீண்டும் மீண்டும் காவல்துறையினருக்கு எச்சரித்துக்கொண்டே இருந்தோம். ஆனால் காவல்துறையின் மிகமோசமான அலட்சியத்தால் அன்று இரவு தேசத்தை நேசித்த அந்த இரண்டு இளைஞர்களும் வெட்டி வீழ்த்தப்பட்டனர்.

இதோ அந்த சம்பவம் நடந்து 16 ஆண்டுகள் கடந்துவிட்டது. இப்போது சாராய கடைகளை அரசாங்கமே ஆகப்பெரும் உற்சாகத்துடன் நடத்திக்கொண்டிருக்கிறது. இளம் தலைமுறையினர் போதைக்கு அடிமையாவது அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. வேலையும், கல்வியும் கேட்டு உயரவேண்டிய இளைஞர்களின் கரங்கள் போதயால் நடுங்கிக்கொண்டிருக்கிறது. கடலூர் மாவட்டத்தில் இப்போது நாள் ஒன்றுக்கு 1.75 கோடி ரூபாய் மதிப்புள்ள சாராயம் விற்பனையாகிறது. தமிழகத்தில் ஆண்டுக்கு 25 ஆயிரம் கோடிக்கு மேல் லாபம் வருகிறது என்ற காரணத்தால் தமிழக அரசு, பள்ளிகள், நீதிமன்றங்கள், கோவில்கள், பேருந்து நிலையங்கள் என மக்கள் கூடும் இடங்களாய் பார்த்து சாராயக் கடைகளை திறந்து வருகிறது.வேலையில்லா திண்டாட்டத்தை எதிர்த்து மட்டுமல்ல, சாதிய கலவரங்களுக்கு எதிராக மட்டுமல்ல, ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதில் மட்டுமல்ல, போதை கலாச்சாரத்திற்கு எதிராகவும் ஆயிரக்கணக்கான குமார் - ஆனந்தன்கள் போராடி வருகின்றனர். நம்பிக்கை இருக்கிறது அவர்களுக்கு, ஒரு குமார் வீழ்த்தப்பட்டால் ஓராயிரம் தோழர்கள் எழுந்துவருவார்கள் என்று. அதுதான் வாலிபர் சங்க வரலாற்றில் நடந்தது. இப்போது போதையெனும் சீரழிவிலிருந்து தமிழக இளைஞர்களை பாதுகாக்கும் கடமையை வாலிபர் சங்கத்தின் தோள்களில் வரலாறு சுமத்தி உள்ளது. தியாக வரலாறு கொண்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் இந்த சவாலை ஏற்று இதோ குமார் - ஆனந்தன் என்ற தியாகிகள் கொடுத்த அக்னியை கையில் ஏந்தி புறப்பட்டு வீதிவீதியாக சென்றுகொண்டிருக்கிறது. வெந்து தணியும் காடு.

------------------------------------------------------------------------------26.06.2015 தீக்கதீர் நாளிதழ்

சனி, 28 பிப்ரவரி, 2015

தமிழகத்தில் எழுந்த வீராங்கனைகள்

விடுதலைப்போரில் பெண்கள் - 19

                                                  
                                                                                                    -
               1919 ஆண்டு ''இந்திய அரசுச் சட்டம் -1919'' பிரிடிஷ் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டது. இது  இந்தியாவில் சில அரசியல் மாற்றங்களை கொண்டு வந்தது. இந்திய விடுதலை இயக்கத்தின் ஒரு சில வேண்டுகோள்களைப் பூர்த்தி செய்யவும் இச்சட்டம் இயற்றப்பட்டது. ஆனாலும் அவர்கள் அதில் திருப்தி அடையவில்லை என்பது வேறுவிஷயம். பிரிடிஷ் அரசின் இந்தியத் துறைச்செயலர் எட்வின் மோண்டெகு மற்றும் இந்திய வைசுராய் கெம்ஸ்ஃபோர்ட் பிரபு ஆகியோரின் பரிந்துரைகளான மோண்டெகு - கெம்சுஃபோர்ட் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த இச்சட்டம் இயற்றப்பட்டது.
               
     இச்சட்டம், இந்தியாவில் மத்திய அளவிலும் மாகாண அளவிலும் இரட்டை ஆட்சி முறையை அறிமுகப்படுத்தியது. இவ்வாட்சி முறையில், நிர்வாகத் துறைகள் இரு வகையாக பிரிக்கப்பட்டன. சட்டம், நிதி, உள்துறை முதலிய முக்கிய துறைகள் பிரித்தானிய ஆளுனர் அல்லது வைசுராயின் நிர்வாகக் குழுவின் நேரடிக் கட்டுப்பாட்டிலும், கல்வி, சுகாதாரம், உள்ளாட்சி, விவசாயம், தொழில் முதலியவை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய சட்டமன்றங்களின் கட்டுப்பாட்டிலும் இயங்கின. அதுவரை ஆளுனருக்கு பரிந்துரைகள் மட்டுமே செய்யக் கூடிய சட்ட மன்றம் விரிவு படுத்த்தப்பட்டு சட்டங்கள் இயற்றும் அதிகாரமும் அதற்கு வழங்கப்பட்டது. ஆனால் எல்லாம் ஒரு கட்டுக்குள்தான்.

  நாடாளுமன்றமும், மாநில சட்டமன்றங்களும் விரிவுபடுத்தப்பட்டன. சட்டமன்ற உறுப்பினர்களுள் ஒரு பகுதியினரை நேரடித் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. புதிய மேலவையாக மாநிலங்களவை உருவாக்கபப்ட்டது. மன்னர் அரசுகளுக்கு (சமஸ்தானங்கள்) மாநிலங்களவையில் இடங்கள் ஒதுக்கப்பட்டன. 1919-29 வரை பத்து ஆண்டுகளுக்கு இந்த புதிய ஆட்சிமுறை நடைமுறையிலிருக்குமென்றும் அதன்பின்னர் அதன் செயல்பாட்டை ஆராய ஒரு குழு அமைக்கபபடு மென்றும் தீர்மானிக்கபப்ட்டது. அதாவது தங்களுக்கு ஒத்துவந்தால் சரி இல்லையேல் வேறு ஒரு சட்டம் அறிமுகமாகும் என்துதான் இதற்கு அர்த்தம். இப்புதிய ஆட்சிமுறையின் கீழ் 1920 ஆம் ஆண்டு முதல் தேர்தல்கள் நடத்தப்பட்டன.

               இச்சட்டம் தமிழகத்தில் நீதிக்கட்சி போன்ற கட்சிகளால் வரவேற்கப்பட்டது. ஆனால் இந்திய தேசிய காங்கிரஸ் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை; தேர்தல்களிலும் பங்கு கொள்ள மறுத்துவிட்டது. இதனால் இந்த தேர்தலில் தமிழகத்தில் நீதிக்கட்சி ஆட்சியை அமைத்தது. இந்த பின்னணியில்தான் விடுதலைப் போரட்டம் தொடர்ந்தது. தமிழகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட பல தேசபக்தர்கள் கடுமையான அடக்குமுறைகளை தொடர்ந்து சந்தித்து வந்தனர். குறிப்பாக தமிழகத்தில் பெண்கள் பெருமளவில் போராட்டக் களத்தி இறங்கிய காலமாய் அது இருந்தது.  

   அடிப்படைவாத கருத்துக்கள் மேலோங்கிய சமூக கட்டுப்பாட்டின் எல்லைகள் ஒரு வரம்புக்குள் பெண்களை அடைத்து மூடியது. ஆனால் வீடுகளில் அடைப்பட்டுக் கிடந்த தமிழக பெண்களை விடுதலைப் போரும், அன்றைய அரசியலும் வீதிக்கு அழைத்து வந்தது. அன்னிபெசன்ட் அம்மையார் காங்கிரஸின் ஆதரவோடு சென்னையில் துவக்கிய ஹோம்ரூல் (சுயஆட்சி) இயக்கத்தில் பலர் பங்கெடுத்தனர்.  பிரிடிஷ் அரசை எதிர்த்து போர்க்கொடி தூக்கியதால் அன்னிபெசட் சிறை வைக்கப்பட்டார். இந்த சம்பவம் ஏராளமான பெண்களை இவர் இயக்கத்தில் சேருமாறு தூண்டியது. அதில் குறிப்பிடத் தக்கவர் பம்பாய் மருத்துவக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த சென்னையைச் சேர்ந்த மாணவி சிவகாமு அம்மா ஆவார். தான் மருத்துவராகி நாட்டிற்கு சேவை செய்வதைவிட விடுதலைப் போராட்டத்தின் மூலம் ஏராளமான தேச சேவை செய்ய முடியமென்றுணர்ந்தார். 

   அதனால் தனது மருத்துவ படிப்பை விட்டுவிட்டு 1917-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னை வந்தார். அப்போது அன்னிபெசன்ட்  கைதினை கண்டித்து சென்னையைச் சேர்ந்த சுமார் 300 பெண்கள் திருமதி டாரதி ஜீன ராசதாஸா தலைமையில் பொதுக் கூட்டம் நடத்தினர். அக்கூட்டத்தில் சிவகாமு அம்மாள் வீர உரையாற்றினார். அதைத் தொடர்ந்து அன்னிபெசன்ட் அம்மையார் படமும் சுயஆட்சி கொடியும் கையில் ஏந்தி கடுமையான அடக்குமுறைகளையும், தடை உத்தரவையும் மீறி பெண்கள் ஊர்வலமாகச் சென்றார்கள். பின்னர் அவர்  விடுதலை பெற்று சென்னை வந்தபோது ஏராளமான பெண்கள் அவரை சூழ்ந்து வாழ்த்துத் தெரிவித்தனர்.

               புதிய ஆட்சிமுறையின் கீழ் முதன்முறையாக தேர்தல்கள் நடத்தப்பட்ட அதே 1920 ஆம் ஆண்டுதான் காந்தியின் தலைமையில் ஒத்துழையாமை இயக்கம் துவங்கியது. அப்போது தமிழகத்தில் நீதிகட்சி ஆட்சி அமைந்தது. சட்டமன்றத்தில் பிராமணர் அல்லாதாருக்கான இட ஒதுக்கீடு, இந்து அறநிலையத் துறை, தேவதாசி முறை ஒழிப்பு, பள்ளிகளில் இலவச சத்துணவு திட்டம், தொடர் வண்டியில் பிரமாணர்களின் தனி உரிமை பறிப்பு, கல்லூரிகளில் பிராமணர் அல்லாதார் இட ஒதுக்கீடு, பெண்ணகளுக்கு சொத்துரிமை போன்ற முற்போக்கு திட்டங்களை நீதிக்கட்சி ஆட்சி அறிவித்தாலும் தேசியம், தேசிய விடுதலை போன்ற கோஷங்களுக்கு பின்னால்தான் மக்கள் திரண்டனர். 

              பிருமாண்டமமாக நடந்த ஒத்துழையாமை போராட்டத்தின் அடிப்படை சத்தியம், அகிம்சை, சாத்வீக எதிர்ப்பு என காந்தி அறிவித்தார். இதனால்தான் காந்தியடிகள் இப்போராடங்களில் பெருமளவில் பெண்கள் கலந்து கொள்வதை விரும்பினார். அதற்காக பெண்கள் நாடு முழுவதும் திரட்டப்பட்டனர், பின்பு திரண்டனர்.  அந்நியத் துணிகளைப் புறக்கணித்தல், அத்துணிக் கடைகள் மற்றும் மதுபானக்கடைகள் இவற்றை மறியல் செய்தல், கதர் துணி நெய்தல் போன்ற செயல்களில் பெண்கள் உற்சாகத்துடன் தொடர்ந்து ஈடுபட்டார்கள். ஒத்துழையாமை இயக்கத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது மதுபான கடைகள் மறியலாகும். தமிழகத்தில் இப்போராட்டத்தை தந்தை பெரியார் முன்னின்று நடத்தினார். போராட்டம் வெற்றிகரமாக நடைப்பெற்றுக் கொண்டிருந்தபோது சென்னை அரசு அவரையும் மற்றும் பல தொண்டர்களையும் கைது செய்து சிறையிலடைத்தது.
          
     ஆனால் போராட்டம் அதன் பின்தான் உச்சத்தை அடைந்தது. தந்தை பெரியாரின் மனைவி நாகம்மாளும், தந்தை பெரியாரின் சகோதரி கண்ணம்மாளும் மறியல் போராட்டத்தை ஈரோட்டில் தொடர்ந்து நடத்தினர். நூற்றுகணக்கானவர்கள் தினமும் இப்போராடத்தில் கலந்துக்கொண்டனர். இப்போராட்டத்தை நிறுத்திவிடலாமா என்று காங்கிரஸார் காந்தியடிகளிடம் கேட்டபோது, அவர் உண்மையான மனதுடன் சொன்னார் ""கள்ளுக்கடை மறியல் போராட்டத்தை நிறுத்தி விடுவது என்பது என் கையில் இல்லை, அது ஈரோட்டில் உள்ள இரண்டு பெண்களிடம் தான் இருக்கிறது"" அந்த இரு பெண்களின் தலைமையில் நடந்த போராட்டம் அவ்வுளவு தீவிரமாக இருந்தது.

               இந்த ஒத்துழையாமை இயக்கத்தின் மற்றொரு அம்சம், கதர் உற்பத்தியைப் பெருக்குவதன் மூலம் அந்நியத் துணிகளைப் புறக்கணித்து அரசுக்கு  நஷ்டத்தை உருவாக்குவது. இந்த கதர் விற்பனையை மிகச் சிறப்புடன் நிறைவேற்றியவர் மதுரையைச் சேர்ந்த பத்மாசனி அம்மாள் ஆவார். இவரது கணவர் ஸ்ரீனிவாச வரதன் கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டு கைதானவுடன் அவர் நடத்தி வந்த பாரத ஆசிரமத்தை திறம்பட நடத்தியதோடு, கதர் விற்கவும், பெண்களை காங்கிரஸ் அங்கத்தினராகச் சேர்க்கவும், பொதுக் கூட்டங்களில் பேசவும் அயராது உழைத்தார். நகைகளை அணிவதை தவிர்த்தார். ஒரு வேளை சாப்பாடு, அதுவும் தனக்கு சாப்பாட்டிற்கு தேவையான வசதியிருந்தும் காலையிலெழுந்து நூல்நூற்று அதில் வரும் வருமானத்தைக் கொண்டுதான் சாப்பிடுவார். மாலையில் வீடு வீடாகச் சென்று கதர் விற்பார். கதர் நெய்வதும், விற்பதும், வாங்குவதும் தண்டனைக்குரிய செயல்களாக இருந்த நேரத்தில்தான் இந்த தீரச்செயலைச் செய்தார். 

  அரசின் ஆணையை மீறி அரசாங்க பதவியிலிருப்பவர்களாயிருந்தாலும் கண்டிப்பாக ஒரு கெஜம் துணியாவது வாங்கும்படி செய்து விடுவார். பெண்களை ஒரு முழம் ரவிக்கைத் துணியாவது வாங்கும்படி தூண்டுவார். 1857-ஆம் ஆண்டு புரட்சி வீரர்களின் சரித்திரங்களை உணர்ச்சியுடன் எடுத்துச் சொல்லி கூட்டத்தி இருப்போரை எழுச்சியிற செய்யும் உரைவீச்சாளராய் திகழ்ந்தார். ஏராளமான சொற்பொழிவுகள் ஆற்றி தமிழ் மக்களிடம் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தியதோடு ஐநூறுக்கும் மேற்பட்ட பெண்களை காங்கிரஸ் உறுப்பினர்களாகவும் ஆக்கினார்.

               கதர் உற்பத்தியை பெருக்க வேண்டுமென்று 1924-ஆம் ஆண்டில் இவ்வம்மையாரும் மேலும் தாயம்மாள், திருமதி. ஜோஸப், திருமதி. சுந்தரமையங்கார், சுப்புலட்சுமி அம்மாள், டி.வி.எஸ். சௌந்தரம் ஆகிய பெண்களும் காங்கிரஸின் உதவியால் மதுரையில் "சகோதரிகள் சங்கம்" என்ற அமைப்பை நிறுவினார். அச்சங்கத்தில் வெள்ளிக்கிழமை தோறும் சுமார் முப்பது பெண்கள் இரண்டு மணிநேரம் நூல் நூர்பார்கள். அவர்களுக்கு வேண்டிய ராட்டினமும் பஞ்சும் தேசியப் பள்ளிக்கூடத்திலிருந்து கொடுக்கப்பட்டு வந்தது. இவர்களுடன் தாயாரம்மாள், சீதையம்மாள், முனியம்மாள், டாக்டர் பிச்சைமுத்து அம்மாள் ஆகியோரும் பணி புரிந்தனர். பல தேசியம் சம்பந்தமான செய்திகளையும் இவர்கள் விவாதித்தார்கள். இங்கு வரும் பெண்களுக்கும் ராட்டின பயிற்சி அளித்ததோடு அவர்களுக்கு கல்வியும் கற்றுக் கொடுத்தனர். போராட்ட காலங்களில் ஈடுபட்ட பெண்களுக்கு பெருத்த ஊக்கமளித்தது இச்சங்கம். அந்நியத் துணிகளைப் புறக்கணிப்பதற்கு இவர்கள் தொண்டு மிகவும் உதவியது.

               இரண்டு ஆண்டுகள் தொடர்ந்த ஒத்துழையாமை இயக்கம் உண்மையில் ஒரு கட்டத்தில் மிகவும் எழுட்சியை உருவாக்கியது. இந்திய நாடே எழுந்து நின்றது. பல இடங்களில் காவல்துறையினர் அடித்தால் திருப்பி அடிக்க மக்கள் தயாரானார்கள். அதன் உச்சம்தான் சொளரி சொளரா எனும் இடத்தில் காவல் நிலையம் கொளுத்தப்பட்டது. இதையே காரணமாக வைத்து காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கததை வாபஸ் வாங்கினார். இது போராட்டத்தில் ஈடுபட்ட லட்சக்கணகான மக்களை சோர்வுற செய்தது, கோபப்பட செய்தது, காந்தியின் மீதும் காங்கிரஸ் மீது நம்பிக்கையின்மையை விதைத்தது. இவ்வியக்கத்தில் ஈடுபட்ட பல பெண்கள் வேறு திசையில் போராடத்தை முன்னெடுக்கதுவங்கியதும் நடந்தது.

               ஆயுதமேந்திய போராடங்களிலும், சாத்வீக போராடங்களிலும், சமூக சீர்திருத்த போராங்களிலும், உழைப்பாளி மக்களின் உரிமைப் போராட்டங்களிலும் எப்போதும் பெண்கள் சலைத்தவர்கள் அல்ல என்பதை நிருபிக்க இன்னும் பல வீராங்கனைகளை நாம் சந்திக்க இருக்கிறோம்.

(தொடரும்)