ஊழல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஊழல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 5 ஜூன், 2011

டுபாக்கூர் பாபா ராம்தேவ் - ஜோக்கு - கோரிக்கை - பார்வை



யாரு என்ன சொன்னாலும் உண்ணா விரதம் இருந்தே தீருவேன்னு பாபா ராம்தேவ் தலைகீழ நிக்குறாராமே?
அவரு எவ்வளவு பெரிய (அப்பாடக்கர்) யோகி தலைகீழ நிக்குறதெல்லாம் அவருக்கு பெரிய விஷயமா என்ன?
--------------
ஜெயலலிதா அண்ணா ஹசாரேவை ஆதரிக்கறாங்கன்னு எப்படி ஆணித்தரமா சொல்ற?

ஆமா எல்லா பேச்சு முடிவுலயும் அண்ணா நாமம் வாழ்கன்னு சொல்றாங்களே?
--------------------
வர வர எதுக்கு பெட்டு கட்டுறதுன்னே ஒரு விவஸ்தை இல்லாம போச்சு
ஏன்?

யோகி ராம்தேவ் உண்ணாவிரதம் அண்ணா ஹசாரே உண்ணா விரதத்தை விட டி.ஆர்.பி ரேட்டிங்க் ஜாஸ்தி போகுமான்னு பெட்டு கட்டுறாங்க !
-------------------------------
ஆனாலும் மன்னருக்கு குசும்பு ஜாஸ்தி ஆட்சியில ஊழல் மலிஞ்சுசுடிச்சின்னு உண்ணா விரதம் இருக்குற அந்த யோகி கிட்ட போய் வெறும் வயத்துல யோகா பண்ணலாமா பண்ணக்கூடாதான்னு டவுட்டு  கேக்குறாரு!
--------------------------------
அவரு வித்தியாசமான சமுதாய நோக்கமுள்ள டாக்டரு!
எப்படி சொல்ற?

யாராவது பேஷண்ட் டயட்டுல இருக்கணும்னா நீங்க ஏன் ஊழலை எதிர்த்து ஒரு உண்ணா விரதம் இருக்கக் கூடாதுன்னு அட்வைஸ்  பண்ணுவாரு!
----------------------------------------
ஊழல் எதிர்ப்பு மசோதாவுக்கு கீழ பிரதம மந்திரியை சேக்கலாமா வேணாமான்னு பாபா ராம் தேவ் சர்ர்சை கிளப்பி இருக்குறாரா அதப்பத்தி மன்மோகன் என்ன சொல்றாரு?

ஆட்சி ஆட்டத்துலயே தன்ன ராகுலும் சோனியாவும் சேத்துக்க மாட்டேங்குறாங்க இதுல சேர்த்தா என்ன சேர்க்கலன்னா என்னன்னு சொல்றாரோ!
------------------------------------------
இப்படி எல்லாம் நகைச்சுவை காட்சிகளை அரங்கேற்றும் பாபா ராம்தேவ் உண்ணாவிரதம் எதற்க்காக?
அவரின் கோரிக்கைகள் தான் என்ன?

1. கடுமையான லோக்பால் மசோதா  அதில் ஊழல் செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை தர அதிகாரம்.

2. வெளிநாட்டில் இருக்கும் அனைத்து கறுப்பு பணமும் உடனே இந்தியாவிற்கு திருப்பி அனுப்ப வேண்டும்.

3. சட்டத்துக்கு புறம்பாக இந்தியர்கள் வெளிநாட்டில் வைத்துள்ள சொத்துக்களை நாடுடமையாக்க வேண்டும்.

4. ஆயிரம் ரூபாய் மற்றும் ஐந்நூறு ரூபாய் நோட்டுக்கள் ஒழிக்கப்பட வேண்டும்.

5. ஐ நா சபை ஊழலுக்கு எதிராக தயாரித்திருக்கும் மசோதாவில் இந்தியாகையெழுத்திட வேண்டும்.

6. ஸ்விட்சர்லேண்ட் போன்ற டேக்ஸ் ஹேவன் உள்ள நாடுகளைச் சேர்ந்த வங்கிகள் இந்தியாவில் இயங்க தடை செய்ய வேண்டும்.

7. ப்ரிட்டிஷ் வகையிலான கல்விமுறை, அரசுமுறை, வரி, சட்டம் ஆகியவற்றை இந்திய ஸ்வட்ஹேஷி கல்வி, சட்டம், அரசுமுறை, வரியால் மாற்ற வேண்டும்.

8. பிரதமர் மக்களால் நேரிடையாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

9. எல்லா குடிமக்களும் தங்கள் ஆண்டு வருமானத்தை வெளியிட வேண்டும்.

10. வருமான வரி விவரத்தை தகவல் உரிமை சட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும்.

11. விவசாய உற்பத்திக்கு அரசு தரும் குறைந்த பட்ச விலையை ஏற்ற வேண்டும்.

12. பல வகையான தொழில்கள் செய்யும் தொழிலாளிகளின் சம்பளங்கள் சரிசமமாக்கப்பட வேண்டும்.

13. ஹிந்தி ஆங்கிலத்தை விட முன்னுரிமை கொடுக்கப்பட்டு வளர்க்கப்பட வேண்டும்.

14. உழவர்களின் நிலங்களை அரசாங்கம் தொழிற்சாலை தொடங்க, சட்டம் போட்டு எடுத்துக் கொள்ளும் முறை ஒழிக்கப்பட வேண்டும் 

இந்த கோரிக்கைகளை நன்றாக கவனியுங்கள்... இவைகளில் பல இன்றைய அரசின் சட்டங்களால் நடக்காது என தெரிந்தே வைத்த கோரிக்கைகள். இந்த  கோரிக்கைகளில் பலவற்றை பாபா ராம்தேவ்தான் வைத்தாரா அல்லது பல கோரிக்கைகளை முதலாளித்துவ ஊடகங்கள் சேர்த்துக்கொண்டனவா யாருக்கும் தெரியாது?

அதைவிட கொடுமை இந்த "அப்பாடக்கர்" போலி சாமியார் பாபா ராம்தேவ் இத்துனை நாள் எங்கிருந்தார்? யாருக்கும் தெரியாது. மாட்டு எலும்புகளை பயன்படுத்தி இவர் தயாரித்த லேகியம் சில ஆண்டுகளுக்கு முன்பு அம்பலப்பட்டது. அப்போது சாமியார் என்ற போர்வையில் இந்து மதவெறியை கிளப்பி தப்பித்ததை இப்போது நினைவு கூறுவது பலருக்கு பிடிக்காது. 

இந்த சாமியார் உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்தால் அவருடன் நரேந்திர மோடியின் ஆத்ம நண்பர் அண்ணா ஹசாரேவும் இணைவது தவிர்க்க முடியாதது உண்மைதான். இந்த இணைப்பு ஏன்? விமாண நிலையத்தில் இந்திய நாட்டின் மத்திய மந்திரிகள் பதறிபோய் பேசுவது ஏன்? 

"வெளிநாட்டில் இருக்கும் அனைத்து கறுப்பு பணமும் உடனே இந்தியாவிற்கு திருப்பி அனுப்ப வேண்டும், விவசாய உற்பத்திக்கு அரசு தரும் குறைந்த பட்ச விலையை ஏற்ற வேண்டும், தொழிலாளிகளின் சம்பளங்கள் சரிசமமாக்கப்பட வேண்டும். உழவர்களின் நிலங்களை அரசாங்கம் தொழிற்சாலை தொடங்க, சட்டம் போட்டு எடுத்துக் கொள்ளும் முறை ஒழிக்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை அமுலாக்க கோரி இடதுசாரிகள் பல்லாண்டு காலம் போராடிய போதும், கடந்த 10 ஆண்டுகளில் வாழ்வியல் நெருக்கடியால் தற்கொலை செய்து கொண்ட ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் விவசாயிகளை கவனிக்காத மந்திரிகள், பிரதமர், மற்றும் ஊடகங்கள் இந்த சாமியாரின் உண்ணாவிரத்திற்கு உலக அளவு முக்கியத்துவம் கொடுப்பது ஏன்?   

இவர்களுக்குத் தேவை உண்மையான மாற்று அல்ல, மாற்றை முன்வைக்கும் மக்கள் இயக்கங்களை  ஒழிக்கும் ஒரு மாய தோற்றம்தான். நேற்று அண்ணா ஹசாரே.. இன்று பாபா ராம்தேவ்.. நாளை சுவாமி நிதியானந்தா வரலாம்? 

கொஞ்சம் யோசிக்கலாம்! உண்மையன மாற்றை தேடலாம்.
------------------------------------------------------------------------------------------------------
(இந்த பதிவு மூன்றாம் கோணம் வலைப்பூவின் உதவியுடன் எழுதப்பட்டது)

புதன், 2 மார்ச், 2011

இந்தியாவில் நடந்துள்ள ஊழல்களின் பணத்தை வைத்து என்ன செய்யலாம்?





மேலே நீங்கள் கண்டது சமீபத்தில் எனது மின்னஞ்சலுக்கு வந்த ஒரு ஸ்லைடு ஷோ வீடியோ காட்சி. இந்தியா குறித்து மிகவும் கவலைப்பட்டு உழலை ஒழிக்க என்ன செய்ய போகிறீர்கள் என கேட்டிருந்தது. வந்தே மாதர பாடலின் இசை பின்னணியில் முழங்க இந்தியாவில் நடந்த ஊழல்களை பட்டியல் போட்டது மட்டுமல்ல, இருக்கின்ற இந்தியாவையும் காட்சி படுத்தியது. 

- 80 கோடி மக்கள் நாள் ஒன்றுக்கு 20 ரூபாய் சம்பாதிக்கும் நாடு நமது நாடு?
- கடந்த 10 ஆண்டுகளில் 1,99,132 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்?
- கோடிக்கணக்கான மக்கள் தெருக்களில் வாழும் தேசம் இது?
- உணவு தானிய கிடங்குகளில் இருக்கும் அரிசியை எலிகள் சாப்பிடும் போது சாப்பாட்டுக்கு வழி இல்லாமல் பட்டினி சாவுகள் நடக்கும் புன்னிய பூமி இது? போன்ற விபரங்களுடன் காட்சிகள் வந்தன.

அடுத்து, இதுவரை இந்தியாவில் நடந்த ஊழல் பணத்தை வைத்து என்னென்ன செய்யலாம் என பட்டியல் போட்டது.

- 160 வாகனங்கள் நிற்கும் வசதியுடன், ஒரே நேரத்தில் 3 ஹெலிகாப்டர்கள் இறங்கும் வசதியுடன் பல்லாயிரம் கோடி மதிப்பில் அம்பானி கட்டி இருக்கும் வீட்டின் அருகில்தான், தாராவி என்ற பகுதியில் ஒரு ஏக்கரில் 18,000 மக்கள் வசிக்கும் நிலையும் உள்ளது?
- இந்தியாவிலுள்ள ஒவ்வொரு மூன்று கிராமங்களுக்கும் ஒரு ஆரம்ப சுகாதார நிலையங்களை கட்டி இருக்கலாம்!
- 24 லட்சம் பள்ளிக்கூடங்களை கட்டி இருக்கலாம்!
- 5 லட்சம் செலவில் 14 கோடி வீடுகளை கட்டி இருக்கலாம்! 
- 600 மெகாவட் உற்பத்தி திறன் கொண்ட 2700 அனல் மின் நிலையங்களை உருவாக்கி இருக்கலாம்!
- 6 லட்சம் கிராமங்களுக்கு மின்வசதி கொடுத்திருக்கலாம்!
- 14 லட்சம் கிலோமீட்டர் சாலை போட்டிருக்கலாம், அதாவது இந்தியாவை 97 முறை சுற்றுவதற்கு சமம்!
- ஒவ்வொரு குடிமகனுக்கும் 56,000 ரூபாய் கொடுக்கலாம்!( யப்பா கலைஞர் காதுல விழுந்துட போவுது)
- 56 முக்கிய நதிகளை 121 வருடங்களுக்கு சுத்தப்படுத்தலாம்! 
- 100 நாள் வேலை உறுதி சட்டத்தை 90 வருடங்களுக்கு அமலாக்கலாம்!
- 60 கோடி மக்களுக்கு நானோ கார் வாங்கிக்கொடுக்கலாம்!
- இந்த கொள்ளை 27 சதம் உள்நாட்டு உற்பத்திக்கு சமம்!

இப்படி பல தகவல்களை காட்சி படுத்திய இந்த நல்ல தொகுப்பில் முக்கியமான இரண்டு பிரச்சனைகள் உள்ளது. 1. இந்த ஊழல் வரலாற்றில் சற்றும் சலைக்காத இன்னூம் சொல்லப்போனால் இந்த தேசத்தினை எல்லையில் நின்று காக்கும்  ராணுவ வீரர்களின் பினங்களை வைத்து அரசியல் நடத்திய பி.ஜே.பி கட்சியை சார்ந்த அய்யோக்கியர்களை கண்டுக்கொள்ளவில்லை. 2. மாற்று என்ன என்பதில் மக்களை மதத்தின் பேரால் மயக்கும் ஃபிராடுகளான போலி சாமியார்கள் ரவிசங்கர் மற்றும் ராம்தேவ் போட்டோகள் இருப்பது.  

இது இந்துத்துவத்தின் நூதன மோசடி. இந்த வீடியோவில் அவர்கள் காட்சிப்படுத்தியது எல்லாம் முக்கியமானதா எனில் ஆம் என்பதே பதில். ஆனால் முழுமையான உண்மையை மறைப்பதும் ஒருவித ஊழல் அல்லது மோசடிதானே? இந்திய நாட்டின் வரலாற்றில், நாட்டிற்காக போராடி இறந்து போன ராணுவ வீரர்களின் சவப்பெட்டி வாங்குவதிலூழல் செய்த கட்சி பி.ஜே.பியாகும். டெகல்கா.காம் இணையதளம் பி.ஜே.பி தலைவர்களின் ஊழல் பேரத்தை ஒளிப்பதிவு செய்து வெளியிட்டது. அதே போல இந்து போலி சாமியார்களின் கபடதனங்களை மக்கள் தொடர்ந்து பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றனர். ஆக மாற்று இவர்கள் அல்ல. பல அண்டுகாலம் ஆட்சி செய்தாலும் இன்றுவரை ஊழல் கறைபடியாத இடதுசாரிகளே உண்மையான மாற்று. இதை இந்த இணைய தளம் சொல்ல மறுப்பது ஏனோ?
இந்திய ஊழல்களுக்கு எதிராக உண்மையை பேசச் சொல்லி  அதில் உண்மையை மறைக்கலாமா?

வெள்ளி, 18 பிப்ரவரி, 2011

வெட்கமாய் இருக்கிறது பிரதமரே உங்களுக்கு எதுவும் தெரியாமல் இருப்பது!?!?


ஆறுகாலுடைய எருமைக்கன்று, மூன்று கண்ணுடைய மாடு, ஆண்பெண் இல்லாது இடையில் இருக்கும் கோழி, இருப்பக்கம் தலையுள்ள பாம்பு, கிளைகளை உடைய பனைமரம், பறக்காகத காகம் போன்றவற்றை இயற்கை விசித்திரம் என்பார், இயற்க்கைக்கு இவை மாறுபட்டிருப்பதால். இவற்றை நம்புவது தவறல்ல, அறிவற்ற செயலுமல்ல, சில விசித்திரங்கள் நடப்பதுண்டு கனிமொழி கவிஞர் என்று நம்பப்படுவதை போல..?

சிவலிங்கம் சாட்சி சொல்வது, எலும்பு பெண்ணுருவாவது, பனை ஓலைத்துண்டு வெள்ளத்தை எதிர்த்துச்செல்வது, கருங்கல் பாறை மிதப்பது, நரி பரியாவது, அறுத்து கறி சமைத்த பிள்ளை உயிர் பெற்று எழுந்து வருவது, பன்றியும் அன்னமும் அடிமுடி தேடுவது, ஒருவர் முதுகில் பிறம்பால் அடித்தால் அனைவர் முதுகிலும் அடிவிழுவது, யானை கதறினதும் யானை வருவது, சிலந்தி பந்தல் போடுவது, சிவனரைப் பூஜித்த யானை சிவபாதம் அடைவது, ஆவிக்குறிய கூட்டங்கள் நடத்தி குருடர்கள் பார்வை பெருவது, முடவர்கள் நடப்பது என்பவை எல்லாம் நடக்காது என்பதால் யாரும் நம்புவதில்லை, ஆ.ராசா ஊழல் செய்யவில்லை என்பதை போன்று. இவற்றை எல்லாம் நம்ப முடியுமா? நம்பினால் இந்த உலகம்தான் ஒப்புமா?

இப்படிதான் நம்ப முடியாத கருத்துகளை சொல்கிறார் நமது பிரதமர். பத்திரிகை ஆசிரியர்களுடன் அவர் நடத்திய உரையில் ... அது அவர்களுடனான  பேட்டி அல்ல என்பது பார்த்தவர்களுக்கு தெரியும். இருக்கட்டும் பேட்டி என்றே வைத்துக்கொள்வோம். அவர்களுடன் பேசிய போது நடந்தது எதுவும் தனக்கு தெரியாது அல்லது தனக்கு சம்பந்தமில்லை என்கிறார். தன்னை நல்லவன் என்று நிருபனம் செய்வதில் முனைப்பாக இருந்ததாலேயே அம்பலப்பட்டு போனார். அவருக்கு எதுவுமே தெரியாமல் நடந்தால் பிரதமர் என்று அவரை நாம் அழைப்பது நமக்கு கேவலம் இல்லையா? அனைத்து அதிகாரங்களும் பிரதமருக்கு இருப்பதாக இதுநாள் வரை நம்பப்பட்டது, இப்போதுதான் தெரிகிறது இந்நாட்டின் ஜனாதிபதியை போல பிரதமர் பதவியும் வெறும் தலையாடி பொம்மை வேலை என.

ஆதர்ஷ், காமன்வெல்த், ஸ்பெக்ட்ரம், இஸ்ரோ, என நாளுக்கு நாள் கொள்ளையடிக்கும் தொகை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது மிஸ்டர் மன்மோகன். எதுவுமே தெரியாது என நிங்கள் சொல்வது கடைந்தெடுத்த பொய் என அனைவருக்கும் தெரியும். இதுவரை தேர்தலில் நிற்காமலேயே தாங்கள் வெற்றியடைந்தது எப்படியென இப்போதுதான் தெரிகிறது. எலும்புகளுக்கு அலைந்தாடும் பிராணிகள்  எப்போதாவது கோபப்படும் பிரதமரே .. ஆனால் நீங்கள் ??

எங்கள் தேசத்தில் காவி இருள் படர்ந்தபோது  அதை நாங்கள் விரட்டினோம் எப்படியெனில் அது மதவெறியை கொண்டுவந்த காரணத்தால்..... இப்போது கள்ளமவுன நிழல் நல்ல மனிதர் என்ற போர்வையில் கவிழ்ந்திருக்கிறது  என்ன செய்வது ?  உலகத்தில் பலநாடுகளில் ஆட்சியாளர்கள் ஓடி  ஒளிவதை  பார்த்துக்கொண்டுதானே இருக்கிறிர்கள். நல்லது. 

வெட்கமாய் இருக்கிறது பிரதமரே உங்களுக்கு எதுவும் தெரியாமல் இருப்பது!?!?

செவ்வாய், 8 பிப்ரவரி, 2011

இஸ்ரோவில் ராக்கெட் (ஏ) ராசாக்கள்


ஒரு ஊருல ஒரு கொடுமைகார ராசா இருந்தானாம் (ஏ.ராசா இல்லிங்க) அவன் ஆட்சியில் நடந்த கொடும தாங்காம மக்கள் அவன் செத்தா தேவலாம்னு நெனச்சாங்கலாம். அப்படி இருக்கும் போது அந்த ராசா சாகும் நாள் செருங்கிச்சாம். அப்ப அந்த ராசா தன மகனை குப்பிட்டு "மவனே எனக்கு மக்கள் கிட்ட நல்ல பேர் இல்ல, அதனால நான் செத்தா எனக்கு நல்லபேர் வாங்கி தருகிற மாதிரி ஆட்சி செய்யிடா" அப்பிடின்னு சொல்லிட்டு செத்தானாம். அடுத்து ஆட்சிக்கு வந்த அவன் மகன் அவங்க அப்பனோட கொடுமையா ஆட்சி நடத்த துவங்கினான். அப்ப மக்கள் இவங்க அப்பன் இவனோட ரொம்ப நல்லவன் என பேச துவங்கிய கதையாக..... ஆ.ராசா கொள்ளை அநியாயம்னு பேசிய மக்களை இந்த இஸ்ரோ உழல் தொகைய கேட்டு மிரண்டு போயிருக்கிறார்கள்.
என்னதான் இஸ்ரோ உழல்
இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) தனது வணிகப் பிரிவான ஆன்ட்ரிக்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட், தனியார் நிறுவனமான தேவாஸ் மல்டிமீடியா என்ற நிறுவனத்துடன் 2005-ம் ஆண்டு செய்துகொண்டுள்ள அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான ஒப்பந்தம்தான் இப்போது புதிதாக ஆராயப்படும் முறைகேடு. இதன் மூலம் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டைவிட அதிகம். அதாவது, ரூ. 2 லட்சம் கோடி (ரூ.2,00,000,00,00,000).

இந்த ஒப்பந்தத்தின்படி, இஸ்ரோ தனது தொழில் பங்குதாரர் நிறுவனமாகிய தேவாஸ் மல்டிமீடியா பயன்பெறுவதற்கென்றே இரண்டு செயற்கைக்கோள்களை – ஜிசாட் 6, ஜிசாட் 6ஏ – விண்ணில் ஏவும். இதற்காக இஸ்ரோ ரூ.2,000 கோடி செலவிடும். இந்தக் கோள்களில் தேவாஸ் தனக்காக 70 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றை ஒதுக்கீட்டை எடுத்துக் கொள்ளும். 20 ஆண்டுகளுக்கு எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாமல் பயன்படுத்தும்.
இந்த ஒப்பந்தத்தால்  செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவதற்காக ரூ.174 கோடி தொகையை தேவாஸ் மல்டிமீடியா இஸ்ரோவுக்கு வழங்கும். செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டு செயல்பாட்டுக்கு வந்த பின்னர் அலைக்கற்றை வாடகையாக ரூ.1,150 கோடியை இந்நிறுவனம் இஸ்ரோவுக்கு வழங்கும்.

2,500 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றைத் திறன்கொண்ட இந்த செயற்கைக்கோள்களில் 70 மெகாஹெர்ட்ஸ் அளவுக்குப் பயன்படுத்தும். (ஒரு வினாடிக்கு ஒரு தகவல் அல்லது டேட்டா அனுப்புவதை ஒரு ஹெர்ட்ஸ் என்று சொன்னால், ஒரு மெகாஹெர்ட்ஸ் மூலம் ஒரு வினாடிக்கு 70 லட்சம் டேட்டாக்கள் அனுப்பும் திறன் ஆகும்). செயற்கைக்கோள் செயல்படத் தொடங்கியவுடன் தனது தொழிலை தேவாஸ் மல்டிமீடியா தொடங்கிவிடும். இதற்காக அந்நிறுவனம் ரூ.2,300 கோடி முதலீடு செய்யத் தயாராக உள்ளது. 

யாராடோ கம்பெனி இந்த தேவாஸ் மல்டி மீடியா
2004-ல் பெங்களூரில் தொடங்கப்பட்ட தேவாஸ் மல்டிமீடியா நிறுவனத்தின் தலைவராக இருக்கும் எம்.ஜி. சந்திரசேகர், இஸ்ரோவின் முன்னாள் அறிவியல் செயலர். இந்த நிறுவனத்தின் 17 விழுக்காடு பங்கினை, டாயிஷ் டெலிகாம் என்ற அயல்நாட்டு நிறுவனம் 75 மில்லியன் டாலர்கள் கொடுத்து வாங்கியுள்ளது. கொலம்பியா கேபிடல், டெலிகாம் வென்சர்ஸ் ஆகிய நிறுவனங்களும் இடம்பெற்றுள்ளன. இதில் இந்திய ஜாம்பவான்கள் யார் இருக்கிறார்கள் என்பது இனிமேல்தான் தெரியும்.

தேவாஸ் மல்டிமீடியாவுக்கு இப்போது இணையதள சேவை அளிப்பு உரிமம் மட்டுமே இருக்கிறது. அன்னிய முதலீடு மேம்பாட்டு வாரியத்தின் அனுமதியுடன் 74 விழுக்காடு அன்னிய நேரடி முதலீடு கொண்டுள்ள இந்நிறுவனம், செயற்கைக்கோள் மூலமாக புவிமிசை தனிநபர் கைப்பேசி தகவல் தொடர்புக்கு இனிமேல்தான் உரிமம் பெறவுள்ளது. இந்த அலைக்கற்றை ஒதுக்கீட்டை வேறு எந்த செயல்பாட்டுக்கெல்லாம் தேவாஸ் மல்டிமீடியா பயன்படுத்தும் என்பது குறித்து ஒப்பந்தம் தெளிவாக இல்லை. இதே அளவு ஒதுக்கீட்டில் முன்னர் தூர்தர்ஷன் தனது ஒளிபரப்பை இந்தியா முழுவதும் சென்றடைய பயன்படுத்தியது. இந்த அலைக்கற்றையில் மொபைல் போன் மற்றும் இன்டர்நெட் இணைப்புக்கான பிராட்பேண்டு சேவை அளிக்க முடியும். இதனால் எஸ்-பாண்ட் அலைக்கற்றை, 4ஜி (நான்காம் தலைமுறைக்கான தொழில்நுட்பம்) எனச் சொல்லப்படுகிறது.

அண்மையில், பாரத் சஞ்சார் நிகாம் லிட், மகாநகர் டெலிபோன் லிட் நிறுவனத்துக்கு 20 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டது. அப்போது அந்த அரசு நிறுவனங்கள் தலா ரூ.12,847 கோடி பணம் செலுத்தின. ஆனால் தனியார் நிறுவனமான தேவாஸ் மல்டி மீடியா வெறும் ரூ.1000 கோடியில் இந்த உரிமத்தைப் பெறுகிறது என்பது அதிர்ச்சித் தகவலாகும். இந்த 4ஜி தொழில்நுட்பத்துக்கான அலைக்கற்றை ஒதுக்கீட்டைப் பெற உலக அளவில் பல நிறுவனங்கள் போட்டி போடுகின்றன.

எழுந்துவரும் கேள்விகள்
ஏலம் நடத்தாமலேயே எஸ்-பாண்டு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஒதுக்கப்பட்டுள்ளதும்.  நிறுவனத்துக்குரிய (இஸ்ரோ) பாதுகாப்பு கட்டுப்பாடு முறைகள் கடைப்பிடிக்கப்படாததும்,  பிரதமர் அலுவலகம், அமைச்சரவை, விண்வெளி குழுமம் ஆகிய யாருக்குமே இந்த ஒப்பந்தம் பற்றிய விரிவான விவரங்கள் முறைப்படி தெரிவிக்கப்படாத்ததும், குறைத்து மதிப்பீடு செய்வதால் இஸ்ரோவுக்கு ஏற்படும் செலவுகள் உள்பட எதையும் தெரிவிக்கவிக்கபடாததும்  ஏன்?
ஒப்பந்தம் செய்துகொண்டவர் நலனுக்காக இரண்டு செயற்கைக்கோள்களை ஏவுவதற்கு மக்கள் பணம் செலவிடப்படுவதும், தேவாஸ் மல்டிமீடியாவின் நிபந்தனைகள், இதற்கு முன்னர் இஸ்ரோ செய்துகொண்ட வர்த்தக ஒப்பந்தங்களிலிருந்து விலகிச் சென்றுள்ளதும் ஏன்?

கேள்விகள் தொடர்கின்றன ஆனால் இந்த தேசத்தில் பொருப்பானவர்கலிடமிருந்து பதில்கள் மட்டும் எப்போதும் கிடைப்பதில்லை. நாட்டு முன்னேற்றத்திற்கு ராக்கெட்  விட சொன்னால் இவர்கள் மக்கள் பணத்தை புஸ்வானம் விடுவது சரியா?

வியாழன், 9 டிசம்பர், 2010

ஊழலின் பரிணாமம்



    ஊழல் என்பது அதிர்ச்சியான, அருவருப்பான செய்கையாய் பார்க்கப்படாமல், வெகு இயல்பாக பேசி கலைகிற சங்கதியாய் மாறி வருகிறது. இது தேசத்தை நேசிப்பவர்களை அச்சம் கொள்ள வைக்கிறது. பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்து மட்டங்களிலும்  ஊழலால் ஏதோ ஒரு முறையேனும் பாதிக்கப்படுகிற இந்திய குடிமகன் அதற்கு எதிராக கோபம் கொள்வது குறைந்துக்கொண்டே இருக்கிறது. "யாருதான் சார் தப்பு செய்யல, எல்லோருமே அப்படிதான்" என்ற சொல்லாடலுக்குப் பின்னால் அரசியலை அந்நியப்படுத்தும் போக்கும் ஊழலை ஏற்றுக்கொள்ளும் போக்கும் தலைதூக்கி நிற்கிறது. நமது தேச விடுதலைக்கு பிறகு நிறைய ஊழல்கள் நடந்துள்ளது. அது குறித்து கொஞ்சமேனும் உறுத்தல் இருந்தது. ஆனால் தற்போதெல்லாம் ஊழல் செய்யும் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் மிகவும் தெம்பாக இருக்கிறனர். 
  
    ஸ்பெக்ட்ரம் ஊழலில் 1.76 லட்சம் கோடி நமது நாட்டிற்கு இழப்பு ஏற்படுத்திய ராசாவை இன்றுவரை கருணாநிதி காப்பாற்றி வருகிறார். அவர் தலித் என்று சாயப்பூச்சு வேறு நடக்கிறது. 2ஜி அலைகற்றை ஒதுக்கீட்டில் இந்திய அரசுக்கு மொத்தம் கிடைத்தது 10,300 கோடி மட்டும். ஆனால் ஸ்வான் டெலிகாம் லைசன்ஸ் மதிப்பு 1537 கோடி இதில் 45 சதம் பங்கை விற்று அந்த நிறுவனம் சம்பாதித்த தொகை 4200 கோடி, யூனிடெக் நிறுவன லைசன்ஸ் மதிப்பு 1661 கோடி இதில் 60 சதம் பங்குகளை விற்று அந்த நிறுவனம் சம்பாதித்த தொகை 6200 கோடி. ஆக நமது தேசத்தின் இழப்பை விட "தலித் இனத்தின் தகத்தகாய கதிரவன்" ராஜாவின் இழப்பை கலைஞரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. எனவே நம்புங்கள் "பட்டிக்காட்டு பொட்டலில் பூத்துக் குலுங்கி வரும் புரட்சியாளர்" ராஜா நல்லவர்.

    காமவெல்த் போட்டிகளில் சீரமைப்புக்கு என ஜவகர்லால் நேரு விளையாட்டு அரங்கம் 961 கோடி, இந்திரா காந்தி விளையாட்டு அரங்கம் 669 கோடி, தியான் சந்த் ஹாக்கி அரங்கம் 262 கோடி, கர்னி சிங் துப்பாக்கிச் சுடும் மையம் 262 கோடி என பல சீரமைப்பு பணிகளுகாக 4500 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. ஆனால் நாக்பூரில் அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்ட விளையாட்டு அரங்கத்திற்கான மொத்த செலவு 84 கோடி என்பதுடன் ஒப்பிட்டால் இதில் நடந்த கொள்ளையின் அளவு தெரியும். காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர் கால்மாடி கடுமையான விமர்சனஙளுக்கு பின்புதான் விலகினார்.

    மகாராஸ்டிர மாநில தாலைநகர் மும்பையில் கார்கில் போரில் உயிர் நீத்த தியாகிகளின் குடும்பங்களுக்கு ஆதர்ஷ் வீடுகட்டும் சங்கத்தின் சார்பில் கட்டப்பட்ட வீடுகளில் நடந்த ஊழல் மிகவும் மனித தன்மையற்றது. 6 மாடி மட்டுமே அனுமதி பெற்று கொலாபா மாவட்ட முக்கிய பகுதியில் 31 மாடி அடுக்கை கட்டினர். தியாகிகளுக்கு சேர வேண்டிய பல வீடுகளை ராணுவ அதிகாரிகளும் ஆளும் கட்சியினரும் பங்கு போட்டுக்கொண்டனர். அதைவிட கேவலம் போராட்டத்தில் ஈடுபடாத இரண்டு பெயர்களை பட்டியலில் இணைத்ததுதான். இந்த கொள்ளையை மத்திய புலணாய்வுதுறை அம்பலப்படுத்தி உள்ளது. வேறுவழி இல்லாமல் தேஷ்முக் பதவி விலகினார்.
    கர்னாடக மாநிலத்தில் அந்த மாநிலத்தின் முதல்வர் எடியூரப்பா பெங்களூருக்கு அருகில் உள்ள ஜிகனி தொழிற் பேட்டையில் தனது உறவினர்களுக்கு நிலம் ஒதுக்கிய முறைகேடு தொடர்பாக சர்ச்சை உருவாக்கி உளளது. அவர்கள் கட்சி உள்குத்து முடிந்ததும் இனிப்பு பரிமாறி எடியூரப்பா பதவி தொடர்கிறார். ஏதோ இவைகள் மட்டும் இந்திய நாட்டை உலுக்கிய ஊழல்கள் என்று நினைத்துவிடாதீர்கள். இந்த ஊழல்களுக்கு என நாட்டில் ஒரு பரிணாமம் இருக்கிறது. அது விடுதலை பெற்றபோதே துவங்கி விட்டது.
    1948 ஆம் ஆண்டு காஷ்மீர் யுத்தம் நடந்த போது போர்களத்திற்கு அவசரமாக 4063 ஜீப்கள் தேவைப்பட்டது. அமெரிகாவிலிருந்தும், இங்கிலாந்திலிருந்தும் ஜீப்கள் வாங்கப்பட்டது. பிரிட்டனின் ஹை கமிஷ்னராக இருந்த வி.கே.கே மேனன் ஜீப்களை வாங்குவதற்கு முன்பே 65 சதமான தொகையை செலுத்தியது இல்லாமல் பாதுகாப்பு அமைச்சகத்திற்கும் சொல்லாமல் முடிவு செய்தார். யுத்தம் முடிந்து இரண்டு மாதங்கள் கழித்து 155 ஜீப்கள் வந்தது. இன்னும் பல நிபந்தைனைகள் மீறப்பட்டன. இதில் பல கோடி கைமாறியது. ஜீப்கள் வாங்குவதில் ஊழல் நடந்ததால் அமைக்கப்பட்ட விசாரனை கமிஷ்னயும் மேனன் சந்திக்க மறுத்தார். கடுமையான எதிர்ப்பு கிளம்பியும் அவர் தண்டிக்கப்படவில்லை. அவருக்கு காங்கிரஸ் அரசு மத்திய ராணுவ அமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்த்தது.

    1957 ஆம் ஆண்டு ஹரிதாஸ் முந்திரா என்பவர் நட்டத்தில் இருந்த, மதிப்பிழந்த தனது கம்பெனி பங்குகளை டி.டி. கிருஷ்னமாசாரி என்ற அன்றைய நிதியமைச்சருக்கு தெரிந்தே எல்.ஐ.சி நிறுவனத்திற்கு விற்பனை செய்தார். இதில் கைமாறிய பணத்தின் திருவிலையாடலால் டி.டி.கே பதவி விலகினர்.

    1964 ஆம் ஆண்டு ஊழல் புகார் காரணமாக பதவி விலகிய முதல் முதல்வர் என்ற புகழை பஞ்சாப்பின் சர்தார் பிரதாப் சிங் கெய்ரோன் பெற்றார். அவரது ஆட்சியில் அவரின் செல்வாக்கை பயன்படுத்தி குடும்பத்தாருக்கும் உறவினர்களுகும் சலுகை செய்ததால் இது நடந்தது. அதே நேரத்தில் இப்படிப்பட்ட தவறை செய்த காரணத்தால் ஜம்மு - காஷ்மீர் முதல்வர் பக்சிகுலாம் முகமதுவும் ராஜினாமா செய்தார். பின்பு 1980 ஆம் ஆண்டில் மகாராஸ்டிர முதல்வராக இருந்த அப்துல் ரகுமான் அந்துலே ஊழல் புகார் காரணமாக ராஜினாமா செய்தார். இந்திராகாந்தி பெயர் உட்பட பல பெயர்களில் அறக்கட்டளைகளை துவக்கி அதன் மூலம் வசூல் என்ற பெயரில் அவர் குடும்பம் அடித்த கொள்ளையே காரணம்.

    கர்னாடகா முதல்வராக ராமகிருஷ்ண ஹெக்டே 1984ல் பதவி வகித்தார். அப்போது பெங்களூர் நகர வளர்ச்சி ஆணையம் 110 ஏக்கர் நிலத்தை வெளிநாட்டில் வாழும் இந்தியர்களூக்கான வீட்டுவசதி சங்கத்திடம் கொடுத்தது. 130 கோடி மதிப்புள்ள நிலத்தை 2 கோடியே 20 லட்சம் என்ற அடிமாட்டு விலைக்கு வழங்கியதுதான் பிரச்சனைக்கு அடிப்படை. இதில் நடந்த முறை கேட்டில் நீதிபதி குல்தீப்சிங் கமிஷன் ராமகிருஷ்ண ஹெக்டே மீது குற்றம் சுமத்தியது. தீர்ப்பின் போது அவர் திட்ட கமிஷ்ன் துனைத் தலைவராக இருந்தார். பதவியை ராஜினாமா செய்தார். அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இந்த காலகட்டத்திற்கு முன்பு தமிழகத்தில் சர்காரியா கமிஷனால் வீராணம் ஏரி ஊழலில் கருணாநிதி கண்டிக்கப்பட்டதும், அதன்பின் எம்ஜிஆர் ஆட்சியில் பல ஊழல்கள் நடந்ததும் வெளியானது. 1987 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சுவீடன் நாட்டின் ரேடியோ அறிவிப்பின் வழியே கசிந்த போர்பஸ் ஊழல் இந்தியாவை உலுக்கியது. "மிஸ்டர் ஜென்டில்மேன்" ராஜிவ்காந்தியின் ஊழல்முகம் அம்பலமானது. வி.பி.சிங் பிரதமராக இது ஒரு காரணமாய் அமைந்தது.

    நரசிம்மராவ் ஆட்சிகாலம்தான் குதிரை பேரம் வெளிப்படையாக நடந்திட துவக்கத்தை தந்தது. 1991 ஆம் ஆண்டு தனது சிறுபாண்மை அரசை பாதுகாத்துக்கொள்ள ஜாட்கண்ட் முக்தி மோர்ச்சாவின் நான்கு எம்.பிகளை தலா ஐம்பது லட்சம் கொடுத்து வாங்கினார். இந்த குற்றத்தை கண்டரிந்த சி.பி.ஐ நீதிமன்றம் நரசிம்மாரவுக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை வழங்கியது. அவர் தப்பித்தது கொடுமையிலும் கொடுமை. சற்றும் மனம் தளராத நரசிம்மராவ் 1986 ஆம் ஆண்டு சந்திராசாமி, அவரது உதவியாளர் கே.என்.அகர்வால் ஆகியோருடன் இணைந்து லண்டனின் ஊறுகாய் வியாபாரியான லக்குபாய் பகத் என்பவரிடம் இந்தியாவில் காகிதக்கூழ் ஒப்பந்தம் பெற்றுதருவதாக கூறி ஒரு லட்சம் அமெரிக்க டாலர் பெற்றனர், 1994 ஆம் ஆண்டு கரும்பு உற்பத்தி வீழ்ச்சி காரணமாய் சர்கரை உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதனை பயன்படுத்தி உள்நாட்டு கருப்பு சந்தைகாரர்கள் கொள்ளை லாபம் அடித்தனர். இதில் பல கோடிகள் பிரதமர் நரசிம்மராவ் உள்ளிட்ட பல அமைச்சர்களுக்கு கிடைத்தது. உயர்த்தப்பட்ட விலை காரணமாக ஐந்தாயிரம் கோடி பொதுமக்களின் பணம் வர்த்தக சூதாடிகளால் கொள்ளையடிக்கப்பட்டது. 1996 ல் 133 கோடி மதிப்புள்ள இரண்டு லட்சம் டன் உரியா ஊழல் வழக்கும் நரசிம்மராவ் ஆட்சியில் நாட்டின் பெயரை கெடுத்தது.
    ஊழல் வரலாற்றில் விநோத கூட்டணி அமைந்தது 1991 ஆம் ஆண்டு வெளியானது. பீகாரை சேர்ந்த சுரேந்திர குமார் ஜெயின் என்பவர் தனது பிலாய் என்ஜினியரிங் கார்ப்பரேஷன் மூலம் பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் மின் உற்பத்தி திட்டங்களை துவக்குவதற்கு உதவினார். அந்த நிறுவங்கள் மூலம் டாலராக வந்த லஞ்சப்பனத்தை 1988 முதல் 1991 வரை மூன்று காபினெட் அமைச்சர்கள், 30 அரசியல் வாதிகள், 32 அதிகாரிகள் உட்பட 115 பேருக்கு 65 கோடி கமிஷனாக அளித்தார். காங்கிரஸ், பா.ஜ.க, ஜனதா தளம் போன்ற அனைத்துக் கட்சியினரும் அம்ம்பலப்பட்டனர். இடதுசாரிகளை தவிர. இதுவே ஹவாலா ஊழல் என்று பெயர் பெற்றது.

    1992 ஆண்டு பங்கு சந்தையை பயன்படுத்தி ஹர்ஷத் மேத்தா 5000 கோடி ஊழல் செய்தான். இதை உதாரணமாகக் கொண்டு கேத்தன் பரேக் 6400 கோடி ரூபாய் ஊழல் செய்தான், இந்த இரு ஊழல்களிலும் எவ்வித உறுதியான நடவடிக்கை எடுக்காதது மட்டுமல்ல, இதிலிருந்து எந்த பாடத்தையும் நமது ஆட்சியாளர்கள் கற்றுக்கொள்ளவில்லை.
    1991 - 96 காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் செய்யாதவர்களே இல்லை என்ற நிலை உருவானது. தகவல் தொடர்பு அமைச்சராக இருந்த சுக்ராம் வீட்டில் 1996 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19 ஆம் தேதி படுக்கை விரிப்புகள், பிளாஸ்ட்டிக் பைகள், சூட்கேஸ் உள்ளிட்ட பல இடங்களில் ரூபாய்கள் கிடைத்தன. ரொக்க மதிப்பு மூனறைக் கோடி இதுவல்லாமல் பல விலை உயர்ந்த பொருட்கள் கிடைத்தன. தொலைதொடர்பு துறைக்கு ஆண்டுக்கு ஏழாயிரம் கோடி அளவில் பொருட்கள் வாங்கியதில் இவர் புகுந்து விளையாடினார். குற்றம் நிருபிக்கப்பட்டு மூன்றாண்டு சிறைதண்டனை விதிக்கப்பட்டும் அவர் சுதந்திரமாகத்தான் இருந்தார்.

    இதே ஆண்டில்தான் பீகாரில் 1000 கோடி அலவில் நடந்த கால்நடை தீவன ஊழலும் வெளியே வந்தது. விளைவு? அதன்பின் மத்திய ரயில்வே மந்திரியாக லாலு இருந்தார்.

    இதே காலத்தில் தமிழகம் யாருக்கும் சலைக்காமல் ஈடு கொடுத்தது. ஜெயலலிதாவின் ஆட்சியில் வரலாறு காணாத ஊழல்கள் நடந்தன. அவர் மீது மட்டுமல்ல அவரது அமைச்சரவை சகாக்கள் இந்திரகுமாரி, ராஜகண்ணப்பன், எஸ்.முத்துசாமி, சி.அரங்கநாயகம், கே.ஏ.செங்கோட்டையன், கே.பொன்னுசாமி, டி.எம்.செல்வகணபதி, சபாநாயகர் சேடபட்டி முத்தையா ஆகியோர் மீதும் ஊழல் வழக்குகள் தொடரப்பட்டது. விளைவு தமிழ் கூறும் நல்லுலகு அறிந்ததே!

    1998 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா ஆட்சி கவிழ்ந்து வாஜ்பாய் தலைமையில் காபந்து ஆட்சி நடந்தது. அப்போது அதுவரை வரலாறு கானாத 50,000 கோடி நட்டத்தை அரசுக்கு உருவாக்கினார்கள். செல்லுலார் நிறுவனங்களுக்கு லைசன்ஸ் சலுகை வழங்கியதில் இந்த நட்டம் உருவானது. இதில் பலகோடி கைமாறியது. குறிப்பாக வாஜ்பாய் குடும்பத்தை சார்ந்தவர்கள் 300 கோடி வாங்கியது வெளியானது. எதிர்வினை எதுவும் நடைபெறவில்லை.

    அடுத்து டெஹல்கா டாட் காம் என்ற இணைய பத்திரிக்கை அரசியல் வாதிகள் அதிகாரிகள் முகத்திரையை கிழித்தது. பொய்யான ராணுவ தடவாள கம்பெனி பெயரில் ஊழலை அம்பலப்படுத்தினர். அன்றைய பா.ஜ.க அகில இந்திய தலைவர் பங்காரு லட்சுமனன், சமதா கட்சி தலைவர் ஜெயாஜேட்லி ஆகியோர் பணம் வாங்கியது ஒளிநாடாவில் பதிவானது. அன்றைய பாதுகாப்பு துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் வீட்டிலேயே பேரம் நடந்தது மிகவும் அதிர்ச்சியானது. இவர்கள் மட்டுமல்ல ராணுவ அதிகாரிகள் மஞ்சித் சிங் அலுவாலியா, மேஜர் ஜெனரல் பி. எஸ்.கே. சௌத்ரி, மேஜர் ஜெனரல் முர்காய், பிரிகேடியர் இக்பால்சிங், பிரிகேடியர் அனில் ஷேகால், ஐ.எஸ் அதிகாரி எல்.எம்.மேத்தா ஆகியோர் அம்மபப்பட்டனர். உயிரை பணயம் வைத்து போராடும் வீரர்களுக்கு வாங்கும் தடவாளங்களில் இவர்கள் அடித்த கொள்ளை அந்த வீரர்களை கொச்சைப்படுத்துவதாக அமைந்தது.

    இவைகளை விவரிக்கத் துவங்கினால் பக்கங்கள் போதாது. 1996 யூரியா இறக்குமதி ஊழல், 1997 பன்சாலி பங்கு வர்த்தக ஊழல், 1998 தேக்கு மரக்கன்று ஊழல், 1999ல் நடந்த கார்கில் யுத்தத்தில் வீரமரணம் அடைந்தவர்களுக்கு வாங்கிய சவப்பெட்டியில் ஊழல், 2001ல் யூனிட் டிரஸ்ட் ஆப் இந்தியாவில் நடந்த 5,500 கோடி ஊழல், தினேஷ் டால்மியா பங்கு வர்த்தக ஊழல், 2002ல் சஞ்சய் அகர்வாலின் வீட்டு வர்த்தக ஊழல், 2003ல் போலி முத்திரைத்தாள் ஊழல், 2005ல் பங்கு வர்த்தக ஐபிஓ ஊழல், பீகார் வெள்ள நிவாரண ஊழல், ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பல் ஊழல், 2006ல் பஞ்சாப் சிட்டி சென்டர் ஊழல், உத்திரபிரதேசத்தில் தாஜ் காரிடார் ஊழல், 2008ல் சத்தியம் கம்பியூடர் நிறுவன ஊழல், பூனாவை சேர்ந்த ஹசன் அலிகான் வருமான வரி ஏய்ப்பு மற்றும் சவுராஸ்டிரா வங்கி ஊழல், ஜார்கண்ட் மருத்துவ உபகரண ஊழல், அரிசி ஏற்றுமதி ஊழல், ஒரிசா சுரங்க ஊழல், மதுகோடா ஊழல் என மலைப்பை தரும் ஊழல்கள் தொடர்கின்றன. 

    ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷ்னல் என்ற சர்வதேச அமைப்பு ஊழல் செய்வதில் இந்தியா வேகமாக முன்னேறிக்கொண்டிருப்பதாக அறிவித்துள்ளது. இது குறித்து கோபப்படவேண்டிய மக்கள் திரள் தொலைகாட்சியுனுள் அமிழ்ந்துக் கிடப்பதை எப்படி மாற்றுவது.

    நமது நாட்டிலிருந்து ஒவ்வொரு 24 மணி நேரத்திற்கும் 240 கோடி ரூபாய் திருட்டுத்தனமாக வெளியேறுகிறது. 1948 - 2008 வரை 9 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் நமது சட்டத்தின் கண்களுக்கு தெரியாமல் கடத்தப்பட்டுள்ளதாக உலக நிதி ஒழுங்கு நிலை அமைப்பு தெரிவித்துள்ளது. இதில் 2004 - 08 வரை மட்டும் 4 லட்சத்து 30 ஆயிரம் கோடி என்பது கவனிக்கத்தக்கது. நமது நாட்டின் கருப்பு பணம் ஸ்விஷ் வங்கியில் 70 லட்சம் கோடி இருப்பதாக தகவல் வந்ததும் யாரையும் கோபப்படுத்தவில்லை.

    நமது இந்திய நாட்டில் ஒரு நாளைக்கு 20 ரூபாய் வருமானத்தில் 80 கோடி மக்கள் வாழ்வதாக முறைசாரா துறைகளுக்கான தேசிய ஆணையம் தனது கவலையை வெளியிட்டுள்ளது. சாதாரண மக்களின் வாழ்க்கை மிகவும் பாதாளத்தை நோக்கி சென்றுக்கொண்டிருக்கிறது. சென்னையில் வளர்ச்சிப் பணிகளுக்கென கடந்த ஒரே ஆண்டில் 16 ஆயிரம் குடிசைகள் அவர்கள் குடியிருப்பை விட்டு விரட்டப்பட்டுள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் 1.62 லட்சம் விவசாயிகள் வறுமையின் கோரப்பிடியால் தற்கொலை செய்து மாண்டு போனார்கள். இவையெல்லாம் இருந்தால் என்ன? உலக வரலாற்றில் முதன்முறையாக நமக்கென பல திரைப்படங்கள் காத்திருக்கின்றன, இலவசங்களை பெற்று அமைதியாய் இருக்கப்போகிறோமா? அல்லது ஊழலை எதிர்த்து வீதியில் இறங்கப்போகிறோமா? பொது வெளியில் நடக்கும் சம்பவங்கள் நமது வீட்டிற்குள் வருமா என அலட்சியம் காட்டினால், நாடும் வீடும் வேறா?