வெள்ளி, 8 நவம்பர், 2024

நினைவுகளின் சுழலில் - 3

 இங்கிலாந்து லெட்டரும், மின்சார கனவும்

மனித நினைவுகள் வரமாகவும் சாபமாகவும் இருக்கக் காரணம் அதன் மீது இருக்கும் நம்பிக்கைகள்தான். நினைவுகள் உருவாக்கும் நிகழ்வுகளின் நினைவுகள்தான் வாழுகின்ற நிலையின் எதார்த்தம். நிகழ்வுகளை மறப்பது எப்படி மனிதனின் வரமாகக் கற்பிதம் செய்யப்படுகிறதோ, அப்படியே மறதி சாபமாகவும் இருந்திடும். பால்ய காலத்து நினைவுகள் பெரும் சுவையாகக்கூடும், அல்லது சுமையாகக்கூடும். இந்த நெருக்கடியான எந்திர உலகில் மனித மனம் இன்பமான நினைவுகளை மட்டுமே அசைபோட விரும்புகிறது. அது தப்பித்துச் செல்லும் ஒரு வழியும்கூட..

அப்படிதான் எனது பால்ய வயது நினைவுகள் சுழன்று, சுழன்று வருகிறது. மரக்காணம் என்ற ஊரை நினைத்த உடன். கண்ணமாவை நினைத்து ”அமுதூற்றினை யொத்த இதழ்களும் - நிலவூறித் ததும்பும் விழிகளும்” என எட்டையபுறத்தான் பாடுவது போல, எங்கள் மரக்காணத்தின் மீதான ஆசை ஊறுகாயைச் சுவைத்ததுபோல உமிழ் நீரை உச்சுக்கொட்ட வைக்கிறது. அதுவன்றி எப்போதும் போலப் பால்யத்தை அசைபோட விரும்புகிறது.

காரணம் ஆயிரம் ஆயிரம். எனக்கு நினைவு நன்றாக தெரிந்த பின்பு, சேத்தியாத்தோப்பில் வாசவி தியேட்டரின் எதிரில், லூர்துசாமி குடியிருப்பில் குடியிருந்த காலங்களில், பள்ளி விடுமுறை நாட்களில் ஒரு கடிதத்திற்காகக் காத்திருப்போம். அந்த கடிதம் எங்கள் மரக்காணம் தாத்தா எழுதும் இங்கிலாந்து லெட்டர்!? (நீண்ட நாட்களுக்கு பிறகுதான் அது இங்கிலாந்து லெட்டர் இல்லை, INLAND LETTER CARD என தெரிந்து கொண்டேன்.)

பேரன்பின் வார்த்தைகளில் அந்த கடிதம் துவங்கும். ”சிரஞ்சீவி மகளுக்கும், மருமகனுக்கும்”.... அழகிய ஒழுங்குமுறையில், நீண்ட எழுத்துக்கள் கொண்ட, இங்க் பேனாவால் எழுதப்பட்ட கடிதம் அது. அந்த கடிதம் எங்கள் அனைவரையும் விடுமுறை நாட்களில் மரக்காணத்திற்கு வரக் கோரிக்கை வைத்து முடியும்.

அண்ணன் தம்பி என நாங்கள் நால்வரும் உற்சாகத்துடன் பயணத்திற்கு தயாராவோம். ஆனால் அன்று பார்த்து அந்த பழைய பாலாஜி பஸ் தாமதமாக (லேட்டா) வரும். அதைவிட அதிகமாய் எங்களுக்குக் கோபம் வரும் எனினும் பொறுத்துக்கொள்வோம். பிறகு என்ன செய்வது? அன்று அது மட்டும்தானே நீண்ட தூரம் செல்லும் வாகனம். அதாவது அந்த சமயத்தில் சிதம்பரத்தில் புறப்பட்டு சேத்தியாத்தோப்பு - வடலூர் வழியாக பண்ருட்டி செல்லும் ஒரே பேருந்து அதுதான். எனவே, அந்த பேருந்தைப் பெருந்தன்மையுடன் மன்னித்து அதில் ஏறி அங்கிருந்து வடலூர் செல்வோம்.

வடலூரிலிருந்து கடலூர் செல்வதற்குப் பேருந்துக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டும். இப்போது இந்த எழுத்துக்களைப் படிக்கும் இளையோருக்கு இது நகைச்சுவையூட்டகூடும். எனினும் அதுதான் உண்மை. அப்போது நெய்வேலியிருந்து பேருந்துகள் வந்தால்தான் உண்டு. அங்கு பேருந்து ஏறி கடலூர் செல்ல வேண்டும். பின்னர் கடலூரிலிருந்து பாண்டி, அங்கு காத்திருந்து பின்பு அங்கிருந்து பேருந்தினை பிடித்து மரக்காணம் செல்ல வேண்டும். அங்கு சென்று சேர 6 மணி நேரம் ஆகிவிடும். ஆனால் பேருந்துக்கு முன்பு எங்கள் மனம் பறந்து சென்று மரக்காணத்தில் விளையாடிக்கொண்டிருக்கும். அது இருக்கட்டும். சைக்கிள் பயணத்தைத் தொடரலாம்...

1978
 அந்த ஆண்டுதான் நான் ஒன்றாம் வகுப்பு சேர்ந்த ஆண்டு. எனது தாத்தாவுடன் சைக்கிளில் சென்று பள்ளியில் இறங்கிய போது, பள்ளியிலிருந்த ஆசிரியர்கள் எங்கள் தாத்தாவை வரவேற்றது மகிழ்ச்சியளிப்பதாய் இருந்தது. இது நமக்கு ஆபத்தான இடம் இல்லை என்பது மட்டும் அந்த வயது புத்திக்குப் புரிந்தது. வகுப்பறையில் இருந்த அனைவருக்கும் மிட்டாய் கொடுத்தது நினைவுள்ளது. அன்றைய தினம்தான் நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்த தினமென மெல்லிய நினைவுகள் சொல்கிறது. மாலை வேலைகளின் இருள் சூழ்ந்த பொழுதை தெரு விளக்குகள் விரட்டியடிக்க துவங்கின. தெரு விளக்கென்றால் இப்போது உள்ளது போல பளீரென எரியும் விளக்குகள் கிடையாது. அவைகள் குறைந்த ஒளியை உமிழும் குண்டு பல்புகள்.

அடுத்த சில நாட்களில் எங்கள் வீடு விழாக்கோலம் பூண்டது. ஆமாம் எங்கள் மணி மாமாவின் திருமண ஏற்பாடுகள் துவங்கியது. மாமாவிற்கு எங்கள் பாட்டியின் வீட்டில்தான் கல்யாணம். மண்டப அரசியல் இல்லாத காலம் அது. வீட்டிலேயே பெரிய பந்தல். பந்தலுக்கு தேவையான தென்னங்கீற்றுகள் எல்லாம் எங்கள் வீட்டின் பின் உள்ள தென்னந்தோப்பில் தயாரானவைதான். தென்னம் மரத்தில் உருவாகும் பாளையை (பாளை என்பது தென்னம் பூவின் உறை) நீள் வாக்கில் கிழிந்து, கயிறு போலப் பயன்படுத்துவார்கள். கொட்டாய் போடத் தேவையான தலைமரத்தின் கழிகளும் இடையே வேயப்படும் குச்சிகளும் எங்கள் தோப்பில் எடுக்கப்பட்டதுதான்.

அப்போது எங்கள் தாத்தா வீட்டில் இரண்டு பேர் எப்போதும் வேலை செய்து கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு வீட்டிற்கு வெளியே வைத்து தென்னம்பாளையில் உணவு கொடுக்கும் முறை எனக்கு ஆரம்பத்திலிருந்தே ஏனோ பிடிப்பதில்லை. வயது முதிர்ந்த அந்த உழைப்பாளியை ஒருமையில் விளிப்பது எங்கள் வீட்டின் பழக்கம். பெரும்பாலும் நாங்கள் உணவருந்திய பின்பு வீட்டின் பின்புறம் காத்திருக்கும் அவர்களுக்கு உணவு கொடுப்பார்கள்.

மணி மாமாவின் திருமண நாள் எனக்கு அப்படியே நினைவில் சுழன்றாடுகிறது. எனது நினைவுகளின் அச்சாரம் அது. ஏனெனில்.. சிமினி விளக்கின் ஒளியிலிருந்து விடுபட்டு குண்டு பல்ப் ஒளிக்கு நாங்கள் வந்த நாள் அதுதான். அன்றுதான் எங்கள் பாட்டியின் வீட்டில் மின்சாரம் வந்தது. அது பேரதிசயம். நீண்ட கம்பங்களில் வரும் கொடிபோல ஒயர்கள் வழியாக மண்ணெண்ணெய் வருமா? அவ்வுளவு உயரத்தில் எப்படி விளக்கு எரிகிறது? கீழே இல்லாமல் ஏன் அந்த விளக்கு மேலே தொங்குகிறது? யார் அதில் தினமும் சாம்பல் போட்டு துடைப்பது? பாட்டியால் அத்துணை உயரம் ஏறித் துடைக்க முடியுமா? பெரியம்மாவுக்கு வாய்ப்பே இல்லை. என்னால் ஆச்சரியங்களை அடக்கவே முடியவில்லை.

பெண் அழைப்பு நடப்பதற்கு சில மணி நேரத்திற்கு முன்புதான் மின்சாரம் வந்தது. அந்த பொழுது எப்போதும் மறக்காது. சாம்பல் தேவை இல்லை. விளக்கை துடைக்கத் தேவை இல்லை. மண்ணெண்ணெய் இனி தேவையில்லை. ஒரு சுவிட்ச் போட்டால் விளக்கு எரிகிறது. அதுவும் மண்ணெண்ணெய் விளக்கைவிட பிரகாசமாய். என்ன ஆச்சரியம். 10 முறை சுவிட்சை போட்டுப் போட்டு அனைத்து பார்த்தேன். எப்போது போட்டாலும் எறிகிறது. ஒருமுறை விளக்கை ஊதி அணைத்தால் மீண்டும் அதை எரியவைக்க இதைவிட அதிக முயற்சிகள் தேவை.

அறியா பருவத்தில் நடக்கும் திருவிழாக்கள் எல்லாம் எப்போதும் மகிழ்ச்சிக்குரியது. கூட்டம் கூட்டமாய் வீட்டில் எல்லோரும் கூடுவதும். சடங்குகள் நடப்பதும் இனிய உணவுகள் கிடைப்பதும் அந்த நாள் கடந்தே போகக்கூடாது என மனம் நினைக்கும். திருமணத்திற்கு வந்தவர்கள் தெருவில் மின்சாரம் வந்த அதிசயத்தையும் பேசி மகிழ்ந்தனர்.

மின்சாரம் பல விசயங்களை எங்களுக்கு பளிச்சென காட்ட துவங்கியது...

(நினைவுகள் சுழலும் )

நினைவுகளின் சுழலில் - 1 

நினைவுகளின் சுழலில் - 2


7 கருத்துகள்:

  1. தொடரட்டும் வாழ்க்கை சூழல் நட்பும். தொடர்ந்து எழுதி புத்தகமாக கொண்டு வாருங்கள். கல்லூரி வாழ்க்கை போராட்டம் அனைத்தையும் எளிமையாக கொண்டு வாருங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாணபரே .. உங்கள் பெயரையும் குறிப்பிட்டு இருக்கலாம். நிச்சயம் போராட்டங்களின் காத இல்லாமல் நமது வாழ்க்கையா?

      நீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  3. இதில் எனக்குப் பரிச்சயமானது என் பள்ளி தேர்ச்சி சான்றிதழ் வரும் இன்லேண்ட் கடிதம் தான். தபால் காரர் தெருவில் வந்தால் பின்புறமாக அந்த தெரு நண்பர்கள் அனைவரும் ஓடி கடிதம் வாங்கும் நினைவுகள் அருமை.
    மின்விளக்கு பற்றி கேள்விப்பட்டு இருக்கிறேன்.
    இதில் மாறாதது பேருந்திற்காகக் காத்திருப்பது மட்டும் தான். 😆

    பதிலளிநீக்கு
  4. நினைவுகள் இன்னும் நிறைய மீள சுழலட்டும்.. ஒவ்வொரு மனிதர்களுக்கும் வெவ்வேறு கணங்களில் மீட்டெடுக்க ஆயிரம் ஆயிரம் நினைவுகள் காலச்சுவடுகளில் புதைந்து கிடக்கின்றது.. அவ்வகையில் மகிழ்ச்சியே.. வாழ்த்துக்கள் தோழர் 🎉

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் தமிழவன் எல்லோருக்குமான நினைவுகள் ஆயிரம் ஆயிரம் இருக்கிறது. அதை பதிவ செய்ய வாய்ப்பு உள்ளவர்கள் செய்கின்றனர். வாய்ப்பு தான் வாசல்களை திறக்கின்றன. நன்றி

      நீக்கு