மானுட விடுதலை...

நேர்பட பேசு! வையத் தலைமைகொள்!



விடுதலைப் போரில் பெண்கள் - 26


""பொதுவாக வரலாற்று விழிப்புணர்வு என்பது வெகுஜன வரலாற்று விழிப்புணர்வாய் மாற வேண்டும். அப்படி வரலாறு வெகுஜன வரலாற்று விழிப்புணர்வாக மாற வேண்டுமெனில் நாம் உள்ளூர் வரலாற்றை தொகுக்க வேண்டியது அவசியமாகிறது. தேசிய கட்டமைப்பும் பிராந்திய வரலாறும் ஒன்றிணையவில்லை, உள்ளூர் வரலாற்றை தேசிய வரலாற்றுக்கு எதிராய் நிறுத்தக்கூடாது. நூண்ணியல் வரலாறு பேரியல் வரலாறு இரண்டுமே முக்கியம். ஆனால் இன்று வரை தேசிய வரலாறு கூறும் செய்திகள் என்ன? பிரபலமான வரலாறு மேலும் பிரபலப்படுத்தப்படுவதுதான் நடக்கிறது."" என்று வரலாற்று அறிஞர் கே.என்.பனிக்கர் கூறியதன் முக்கியத்துவம் விடுதலைப் போராட்ட வரலாற்றை தொகுப்பதில் அவசியப் பணியாகிறது.  
மேலும் மேலும் வரலாற்றை எழுதுபவர்கள் எதை முக்கியம் என கருதுகிறார்களோ அதுவே பதியபடுகிறது. மேலும் அதில் ஆண்களே அதிகம் ஈடுபடுவதால் அவர்கள் சார்ந்த பதிவே அதிகம் பதிவாகிறது. விடுதலைப் போராட்ட வரலாறும் இப்படியே பதியப்படுள்ளது. இதை மாற்ற வேண்டுமெனில் தேசத்தின் திசைகள்தோறும் விடுதலைப் போராட்ட வீராங்கனைகளின் வாய்மொழி வரலாற்றை தொகுப்பது அவசியமாகிறது. அப்படி பதியப்பட்ட ஒரு ஆச்சரியமான உள்ளூர் வரலாறு 11 ஆண்டுகளுக்கு முன் குழுதம் இதழில் வெளியாகி உள்ளது.  
சுந்தர ஆத்தா என்றால் திருப்பூர்வாசிகள் அந்த தொண்ணூற்றி ஐந்து வயதுப் பெண்மணியை மிகவும் மரியாதையாக, மிகவும் சந்தோஷமாக கை காட்டுகிறார்கள்.
எங்கள் ஊரின் இந்த ஆத்தாவும் நம் சுதந்திரப் போராட்டத்தில் பெரிய பங்கு வகித்தவர் தெரியுமா? என்ற சந்தோஷம் அவர்கள் கண்ணில் மின்னும்... கோடீஸ்வரக் குடும்பத்தைச் சேர்ந்த இந்தப் பெண்மணி, இந்த வயதிலும் வசதி மிக்கத் தன்னுடைய பங்களாவில், தன் வாரிசுகளுடன் வசிக்காமல், ஆசிரமத்திலேதான் இருக்கிறார். சுந்தராம்பாளின் அப்பா, திருப்பூர் ஏரியாவிலேயே பெரிய மணியக்காரர். நாடு முழுக்க காந்தியின் அஹிம்சா வழி சுதந்திரப் போராட்டம் பரவியிருந்த நேரம் அது... சுந்தராம்பாளின் அப்பாவுக்கும் காந்தியின் கொள்கைகளின் மேல் பற்று ஏற்பட்டிருக்கிறது. அப்பாவின் பற்று, மகளுக்கும் இயல்பாகவே வந்திருக்கிறது.
தியாகி சுந்தராம்பாள் அதை நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தார்... காந்தியடிகள், திருப்பூர் நொய்யல் ஆற்றங்கரையில் நடந்த கூட்டத்திற்காக வந்திருந்தார். நானும் என்னுடைய பெரியம்மா பெண் முத்துலட்சுமியும் அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளப் போயிருந்தோம். அப்போது எனக்குப் பதினைந்து வயதிருக்கும். பட்டுப்புடவையும் கழுத்து நிறைய கிலோ கணக்கில் நகைகளையும் அணிந்து கொண்டு போயிருந்தோம். 
காந்தியோ எளிமையே உருவாக இருந்தார். அவருடைய பேச்சும் செயலும் ஒன்றாகவே இருந்ததை அந்த கொஞ்ச நேரத்திலேயே உணர முடிந்தது. அந்தக் கூட்டத்தின் முடிவில் ஹரிஜன சேவா இயக்கத்திற்கு நிதி வசூல் செய்தார் காந்தி. அவருடைய பேச்சால் ஈர்க்கப்பட்ட நாங்கள் இருவரும், உடனே அணிந்திருந்த அத்தனை நகைகளையும் கழற்றி ஹரிஜன சேவா இயக்கத்துக்கு கொடுத்து விட்டோம். நகைகளைப் பெற்றுக் கொண்ட காந்தியடிகள், இது மட்டும் போதாது... பட்டுப் புடவைகளை விட்டு இனி நீங்கள் கதராடையை அணிய வேண்டும் என்றும் சொன்னார். அவர் சொன்னபடியே இன்று வரை கதராடையை மட்டுமே அணிந்து வருகிறேன்.
அந்தக் கூட்டத்திற்குப் பிறகுதான், நான் சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட ஆரம்பித்தேன். என்னையே அழித்தாலும் சரி, நாட்டின் அடிமை விலங்கை அறுக்கப் பாடுபடுவேன் என்று சபதமே எடுத்துக் கொண்டேன் என்று சொல்லும் இவரின் குரலின் கம்பீரம் இன்னும் குறையவில்லை.
சுதந்திரப் போராட்டத்திற்கு இடையே சுந்தராம்பாளுக்கு பதினேழு வயதில் திருமணம், இரண்டு குழந்தைகள் என்று குடும்ப வாழ்க்கையும் ஏற்பட்டிருக்கிறது. இதில் சோகம் என்னவென்றால் சுதந்திரப் போராட்டத்தில் சுந்தராம்பாள் ஈடுபடுவதை அவருடைய கணவர் விரும்பவில்லை. எத்தனையோ முறை இவருக்கும், கணவருக்கும் இடையே இந்த விஷயத்தில் பெரிய போராட்டமே ஏற்பட்டிருக்கிறது. நான் காந்தி வழியில் தீவிர மதுவிலக்குப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தேன். என் கணவரோ அப்போதுதான் ஊரைச் சுற்றியிருந்த அத்தனை கள்ளுக் கடைகளையும் ஏலத்தில் எடுத்திருந்தார். இத்தனை முரண்பாடுகள் எங்கள் இருவருக்குள்ளும் இருக்கும்போது எப்படி அவர் என்னுடன் குடும்பம் நடத்துவார்? அதனால்தான் அவர் என்னையும் இரண்டு குழந்தைகளையும் பிரிந்து சென்று இன்னொரு திருமணம் செய்து கொண்டார் என்று சொல்லும்போதே சுந்தராம்பாளின் முகத்தில் வெறுமையான புன்னகை.
அவர் என்னை விட்டுப் பிரிந்தது ஒரு விதத்தில் எனக்கு நன்மை என்றே நினைக்கிறேன். அவர் பிரிந்த பிறகுதான் நான் சுதந்திரப் போராட்டத்தில் இன்னும் தீவிரமாக ஈடுபட முடிந்தது. தனி நபர் சத்தியாகிரகப் போராட்டத்தில், என் மூன்று வயது கைக்குழந்தையுடன் ஜெயிலுக்குப் போனேன். கிட்டத்தட்ட ஏழு மாதங்கள் நான் ஜெயிலிலேயே இருந்தேன் என்று சொல்லும் சுந்தராம்பாள், சுதந்திரப் போராட்டக் காலத்தில் மூன்று முறை ஜெயிலுக்குப் போயிருக்கிறார். அந்தக் காலகட்டத்தில் அவருக்கு உற்ற துணையாக இருந்தது அவருடைய குடும்பம்தான். இன்றும் சுந்தராம்பாளின் குடும்பம்தான் திருப்பூரில் பெரிய பணக்காரக் குடும்பம். இருந்தும் அவர் குடியிருப்பது என்னவோ ஆசிரமத்தில்தான்!
சுதந்திரம் கிடைத்த பிறகு அமைந்த புதிய அரசின் அமைச்சரவையில் இடம் பெற எனக்கும் ஒரு வாய்ப்பு வந்தது. தேர்தலில் நில்லுங்கள், உங்களுக்கு அமைச்சர் பதவி கொடுக்கிறோம் என்றார்கள். ஆனால் சுதந்திரத்திற்குப் பிறகு இருந்த காங்கிரஸோ, அதன் நோக்கத்திலிருந்து நிறைய மாறி இருந்தது. வசதி படைத்தவர்கள் மட்டுமே பெரிய பதவிகளில் இருந்தார்கள். இந்தப் போக்கு எனக்குப் பிடிக்கவில்லை.
இந்தச் சமயத்தில்தான் எனக்கும் அழைப்பும் வந்தது. வினோபாபாவேயின் ஆலோசனைப்படி அதை நான் நிராகரித்து விட்டேன். அவர்தான் என்னை ஆதரவற்ற பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் ஒரு இல்லம் ஆரம்பிக்க யோசனை சொன்னார். இதோ அந்த இல்லத்தில்தான் நான் இத்தனை காலமும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்று தெரிவிக்கிறார். சுதந்திரம் கிடைத்த பிறகும்கூட, சுந்தராம்பாளின் போராட்டம் தொடர்ந்து கொண்டே இருந்தது. கோயம்புத்தூரைச் சுற்றியிருந்த நூற்றாலைகளில் பணிபுரிந்த பெண்களுக்காகவும் இவர் போராடியிருக்கிறார். அதோடு விவசாயிகளின் மின் கட்டணத்தை உயர்த்தியபோது நடுரோட்டில் மாடுகளை அவிழ்த்து விட்டு மறியல் போராட்டமும் நடத்தியவர் இவர்.
என்ன நோக்கத்திற்காக நாங்கள் போராடி சுதந்திரம் வாங்கினோமோ, அந்த நோக்கம் இன்னும் நிறைவேறவே இல்லை. வறுமை, ஏழ்மை, வன்முறை, பெண்ணடிமைத்தனம் வேலையில்லாத் திண்டாட்டம் இன்னும் மாறவேயில்லை. பெண்களின் நிலையிலும் பெரிசாக எந்த முன்னேற்றமும் இல்லை. ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கினாலும் கூட பெண்களால் இன்னும் தனிப்பட்ட ஒரு முடிவை தன்னிச்சையாக எடுக்க முடிவதில்லை. கணவன் அல்லது தந்தையை சார்ந்துதான் இருக்க வேண்டிய நிலைமை. இது மாற வேண்டும்! 
இத்த்கைய சுந்தர ஆத்தாக்கள் எல்லா இடங்களிலும் நிறைந்து உள்ளார்கள். அவர்கள் வரலாற்றை தொகுப்பது எப்போது?
(தொடரும்)


விடுதலைப்போரில் பெண்கள் – 25



தேசம் போற்றிக் கொண்டாடுகின்ற முதல் இந்திய விடுதலை போரின் நூறு ஆண்டுகளுக்கு முன்பே அதாவது  1757 ஆம் ஆண்டிலேயே  ஆங்கிலேயரை எதிர்த்து வீரசமர் புரிந்தவர் சிராஜ் – உத்- தெளலா என்கிற இஸ்லாமி மன்னர்தான். அதுபோலவே ஒரு இஸ்லாமிய பெண்ணும் முதல் விடுதலை போருக்கு முன்பே ஆங்கிலேயரை எதிர்த்து களமாடி உள்ளார். அவர் கண்ணனூர் ராணி பீபி கேரளாவின் துறைமுகப்பட்டினமாக விளங்கிய கண்ணனூரை பதினெட்டாம் நூற்றாண்டில் ஆட்சி செய்தவர் ராணி பீபி. ஆங்கிலேயருக்கு சிம்மசொப்பனமாய் விளங்கிய மைசூர் திப்பு சுல்தானின் ஆதரவாளராக கேரளத்தில் தாய்மண்ணை நேசித்தவர் இவர்.
இந்தியர்களை அடக்கியாளும், இந்திய வளங்களை சூரையாடும்  ஆங்கிலேயர்களின் படை வீரர்கள் வழியாகச் செல்லக்கூடாது என்று தடை விதித்தார். இதனால் ஆத்திரமடைந்த ஆங்கிலேயர்கள் இவர் மீது போர் தொடுத்தனர். 1783 ஆம் ஆண்டு திடீரென கண்ணனூரை ஆங்கிலேயர்கள் தாக்கினார்கள். நவீன ஆயுதங்களோடு நடத்தப்பட்ட  திடீர் தாக்குதலில் ராணி பீபியின் படை தோல்வியடைந்தது. அவரையும் அவரது குடும்பத்தினரையும் ஆங்கியேலர்கள் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறையில் அடைத்தவுடன் ராணியின் எல்லைப்பகுதியை தாங்கள் பயன்படுத்திக் கொள்ள ஒப்புதல் வழங்குவது போல போலி ஆவணம் தயாரித்து ராணியிடம் படித்துக் காண்பிக்காமல் ஒப்பந்தம் வாங்கி ஆங்கிலேயர் தங்களுடைய ராணுவ முகாமிற்கு பயன்படுத்திக் கொண்டனர். ராணி விடுதலை செய்யப்பட்டார். 
1784 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து கண்ணனூரில் ஆங்கியேலயரின் முகாம் செயல்படத்தொடங்கியது. மீண்டும் 1790 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மறுபடியும் ஓர் ஒப்பந்தத்தை தயார் செய்து கையெழுத்திடுமாறு ராணி பீபியை நிர்பந்தம் செய்தனர். ஆனால் முதல் முறை ஏமாற்றப்பட்ட ராணி பீபி இதை மறுத்ததுடன் திப்பு சுல்தான் படைக்கு ஆதராவாக செயல்பட போவதாக பகிரங்கமாக அறிவிப்பும் செய்தார். இதன் காரணமாகவே மீண்டும் ராணி கைது செய்யப்பட்டார். மீண்டு வரமுடியாத சூழலில் மறைந்தார் இவர்.
1857 ஆம் ஆண்டிலும் நடந்த முதல் விடுதலைப் போரில் அயோத்தியின் அடையாளமாய் மாறிப் போன ஹஜ்ரத் மஹல் வாரிசுகளாக விடுதலை அடையும்வரை போராடிய இஸ்லாமிய பெண்கள் குறித்த தகவல்கள் அறிதாகவே கிடைக்கிறது. பேகம் ஹஜ்ரத் மஹலின் சமகாலத்தில் ஜான்ஸி ராணியுடன் பிரிட்டீஷாருக்கு எதிராகப் போர்க்களத்தில் வாளேந்தி நின்ற மற்றொரு வீரமங்கை ஹஸன் மஹ்பர் பேகம். ஜான்ஸியின் ஒரு படைப்பிரிவுக்குத் தலைமை தாங்கிய வீரம் மிக்கவர் மஹ்பர், 1858 ஜுன் 18 – இல் நடைபெற்ற குவாலியர் யுத்தத்தில் ஜானஸியுடன் வீர மரணம் அடந்தார்.
திண்டுக்கல் மாவட்த்தில் உள்ள பேகம்பூருக்கு ஒரு வரலாறு இருக்கிறது. அது நிறைமாத கர்பினியாக ஆங்கிலேயரை எதிர்த்து போர்களத்தில் நின்ற ஹைதர் அலியின் சகோதரி பேகம் சாஹிபா  வாழ்ந்த மண் என்பதுதான். பேகம் சாஹிபா என்ற அந்த ஊர், அதன் பின்னர் பேகம் சாஹிபா நகராக மாறி, அதன் பின்னர் பேகம்பூர் என மருவியது. அவர் கணவர் நவாபு மீறா றசாலிக்கான் சாயபு. இவர் திண்டுக்கல் சீமை ஜாகீர்தாரராக இருந்தார். கி.பி.1772 குழந்தை பிறந்து ஏழாம் நாள் காலமானார் சாஹியா.  மீறா றசாலிக்கான் சாயபு போராளியான தன் மனைவி அடக்கம் செய்த இடத்தில் பள்ளிவாசல் கட்டி, கோரியும் கட்டி காசினாயி தோப்பு, பேகம்பூர், பனங்குளம், சின்னபள்ளபட்டி ஆகிய ஊர்களில் நன்செய், புன்செய் நிலங்களை மானியமாக விட்டு ஒன்பது குடும்பங்களுக்கு  நிலங்களை கொடுத்து பள்ளிவாசல் பணிகளை கவனிக்க ஏற்பாடு செய்தார்.
“ஆங்கிலேயர்களைக் கூண்டோடு அழித்து விடவேண்டும் என்று ஆண்டவனைத் தொழும்படி முஸ்லிம் தாய்மார்கள் குழந்தைகளிடம் கூறியதை நான் நேரில் கேட்டேன்என டில்லி மன்னர் மீது நடந்த வழக்கு சாட்சியத்தின் போது  ஆங்கில பெண் ஆல்ட்வெல் கூறியதை சாவர்க்கர் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். அத்துனை தேசபக்தி இஸ்லாமிய தாய்மார்களுக்கு.
1919ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13 அன்று பஞ்சாப் ஜாலியன் வாலாபாக்  மைதானத்தில் நடந்த கூட்டத்தில் கொடூரன் ஜென்ரல் டயர் நட்த்திய துப்பாக்கி சூட்டில் மரணமடைந்தவர்  உமர் பீபி. இவர் 1864 ஆம் ஆண்டு அமிதசரசில் பிறந்தவர். தொடர்ந்து பல்வேறு தேசவிடுதலை இயக்கங்களில் பங்கு கொண்டவர்.  இவரின் கணவர் இமாமுதீன் இவருக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார்.  இந்த துப்பாக்கிச் சூட்டில் இறந்த நூற்றுக்கனக்கானோரில் முக்கியமானவர் இவர். ஜாலியன் வாலாபாக் துப்பாக்கிச் சூட்டில் ஏராளமான முஸ்லீம்கள் கொல்லப்பட்டாலும் விபரங்கள் மிக்க்குறைவே.
என் பிள்ளைகள் சிறையில் இருக்கும் போது ஒரு வேளை ஆங்கிலேயர்களிடம் மன்னிப்பு கேட்டு விடுதலையானால் அவர்களின் குரல் வளையை நெறித்துக் கொல்வேன் என்று வீரமுழக்கமிட்டவர் தாயார் பீபியம்மாள். 1922 ஆம் ஆண்டு சுதந்திரப் போராட்டத்தைப் பற்றியும், கதர் ஆடையைப் பற்றி மக்களுக்கு எடுத்துரைக்கவும், சுதந்திரப் போராட்டத்திற்கு நிதி திரட்ட இளையான்குடி இப்ராகிம் ஷாவுடைய பங்களாவில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்த பீபியம்மாள், மீன்பஜார் முதல் காதர் பிச்சை தெருவரை மக்கள் வெள்ளத்தில் மிதந்து வந்தார்
இதே போல தென்காசி சையது குருக்கள் பள்ளிவாசல் மைதானத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஆக்ரோஷ்மாக உருதுமொழியில் பேசி நிதி திரட்டினார். தினமும் பயணங்கள் கூட்டங்கள் கலந்துரையாடல்கள் என இயங்கிக்கொண்டிருந்தார். இவ்வாறு சுதந்திர வேட்கையுடன் இந்தியா முழுவதும் சுற்றப்பயணம் செய்த பீபியம்மாள் 1924 ஆம் ஆண்டு 72வது வயதில் காலமானார். பீபியம்மாள் விருப்பபடி அவரது உடல் கதர் துணியால் சுற்றப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.
இவர் மட்டுமல்ல திருச்சி பீமநகர் வயன்வித்தார் தெருவில் வசித்த மரியம் பீவி என்னும் விடுதலைப் போராட்ட வீராங்களை நாகபுரியில் நடந்த  கொடிப் போராட்டத்தில் கலந்து கொண்ட்தால் கடலூர் சிறையில் ஆறுமாதம் அடைக்கப்படார்.
அதேபோல் 1937 ஆம் ஆண்டு உத்திரப் பிரதேச சட்ட மேலேவை உறுப்பினராகவும், 1969 ஆம் ஆண்டு முதல் 1971 ஆம் ஆண்டு வரை உத்திரப்பிரதேச அமைச்சராக பதவி வகித்த பேகம் அயிஜாஸ் ரசூல் ஒரு மகத்தான விடுதலைப் போராட்ட வீராங்கனையாவார்.
மேலும் கரூர் நன்னா சாகிப் மற்றும் அவரது மனைவி பியாரி பீவி ஆகிய இரண்டு பேர்களும் ஒத்துழையாமை இயக்கத்திலும், தனி நபர் சத்தியாகிரகத்திலும் பங்கேற்றார்கள். 1920 ஆம் ஆண்டிலிருந்து 1943 ஆம் ஆண்டுவரை விடுதலைப் போராட்டங்கள் பலவற்றில் ஈடுபட்ட நன்னா சாகிப் திருச்சி, அலிப்புரம் சிறைகளில் தண்டனை அனுபவித்திருக்கிறார். அவரது மனைவி பியாரிபீவி தனிநபர் சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டு நிறைமாதக் கர்ப்பிணியாகச் சிறை சென்றார். இஸ்லாமியரளை கொச்சைப்படுத்தும் காவி பயங்கரவாதத்திற்கு எதிராய் இவர்களை மக்களுக்கு அறிமுகம் செய்யவேண்டியுள்ளது.
இதைவிட உற்சாகமான செய்தி உண்டு. 1938 ல் இந்து முஸ்லிம் ஒற்றுமைக்காக பம்பாயில் காந்திஜியும் ஜின்னாவும் சந்தித்து பேசியபோது ஜின்னாவைச் சந்திக்க வந்த ஒரு பெண்ணும் வந்திருந்தாள். ஜின்னாவின் இல்லத்தில் மூன்று மணி நேரம் நடந்த பேச்சு வார்த்தை முடிந்த பின் காந்திஜி பத்திரிகை நிரூபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது “என்னிடம் உண்மை நிறைந்த பெண்ணொருத்தி இருக்கிறாள். இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காக அவள் தன் உயிரையும் சந்தோசமாகக் கொடுப்பாள் என்று சொல்லி தன் அருகில் நின்ற அப்பெண்ணை நிருபர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். அப்பெண்தான் குமாரி அமாதுல் ஸலாம். விடுதலைக்கு மட்டுமல்ல மக்கள் ஒற்றுமைக்கும் உழைத்தவர்கள் இஸ்லாமிய பெண்கள்.
“என் தோள்களின் மீது இரண்டு சிங்கங்கள் அமர்ந்திருக்கின்றனஎன காந்தியால் வருணிக்கப்பட்ட அலி சகோதரர்களின் தாயாரான ஹாஜியா ஆலாஜிபானு என்ற ஃபீயம்மாள் தன் கையால் நெய்த துணியைக் காந்திஜிக்கு  அளித்து,  இதனைக் கத்ராக (கௌரவமாக) ஏற்றுக் கொள்ளுங்கள் என்றார். அன்றிலிருந்து தான் அந்த ஆடைக்கு கதர் ஆடை என்ற பெயர் வந்தது என்ற தகவலும் உண்டு.
உதவிய  நூல்கள்: 1.மக்கள் தாரகை, மறைக்கப்பட்ட வரலாறுகளும் மறைக்கப்படும் உண்மைகளும். 2.விடுதலை போரில் முஸ்லிம்கள், வி.என்.சாமி, மதுரை. 3.மறுக்கப்பட்ட உண்மைகளும்..மறைக்கப்பட்ட நியாயங்களும், அனிஸ்தீன், அகமதுநிஸ்மா பதிப்பகம், சென்னை. 4. B.L. Grover, S. Grover, A New Look At Modern Indian History 5. தினமணி,29.04.1938.மறுபிரசுரம்:29.04.1977
(தொடரும்)
-       எஸ்.ஜி.ரமேஷ்பாபு



விடுதலைப்போரில் பெண்கள் -24
      
கே.பி.ஜானகியம்மாள்

கே.பி.சுந்தராம்பாள்

டி.கே.பட்டம்மாள்

வை.மு.கோதைநாயகியம்மாள்
                                                                                                                 
        தேசம் என்ற கட்டமைப்பும், அது சார்ந்து உருவக்கப்படுள்ள சித்திரமும் தேசபக்தி பாடல்கள் மீது ஒருவித பொதுவான ஈர்ப்பு உணர்வை மனிதர்களுக்கு ஏற்படுத்தும். அதுவும் அடிமைப்பட்ட தேசத்தில் ஆர்த்தெழும் மக்களுக்கு கலைவடிவம் கொடுக்கும் உற்சாகம் அளவில்லாதது. உலக வரலாறு நெடுகிலும் கலைவடிவங்கள் விடுதலைப் போராட்டங்களில், புரட்சிகர மாற்றங்களில் ஆற்றிய பங்களிபுகள் அத்தகையது. பரிஸ் கம்யூன் துவங்கி சோவியத் புரட்சியின் வழியாக சீன புரட்சி வரை தொடர்ந்த வரலாறு இது.

      மேடையில் சுதந்திர முழக்கத்தை எழுப்பும் போதே உயிர் நீத்த விஸ்வநாததாஸ், பெண்களே நாடகங்களில் நடிக்க துனியாதபோது மேடையேறிய கே.பி.ஜானகியம்மாள் ஆகியோரின் பாரம்பரியம் தமிழக விடுதலை போரின் பாரம்பரியம்.

      சுதந்திரப் போராட்டம் தீவிரமாக நடைபெற்ற காலத்தில், தேசபக்தர்கள் தங்கள் குடும்ப நிகழ்ச்சிகளிலும் தேசபக்தி பாடல்களுக்கே முதலிடம் கொடுத்தனர். அரசியல் கூட்டங்களிலும் தேசபக்தி பாடல்கள் பாடப்படுவது வழக்கம். அந்நாளில் தேசபக்திபாடல்கள் பாடுவதில் ஆர்வம்காட்டி வந்த பெண்களில் கோதை நாயகி, கே.பி.சுந்தராம்பாள் மற்றும் டி.கே.பட்டம்மாளும் மிகவும் சிறப்புடையவர்கள. இவர்கள் கணீரெனப் பாடும் தேசபக்தி பாடல்களால் ஈர்க்கப்பட்டு போராட்ட இயக்கங்களில் பங்குகொண்ட இருதரப்பு தொண்டர்கள் ஏராளம். அதிலும் பாரதியின் பாடல்களை சிறப்பாக பாடும் வல்லமை பெற்றவர் கோதை நாயகியாவார். காங்கிரஸ் நிகழ்ச்சிகளில் இவர் பெயர் இடம் பெற்றாலே கூட்டம் ஏராளம் சேரும்.

      அதேபோல பின்னாளில் திரை உலகத்தால் எல்லோரும் அரியபட்ட கே.பி.சுந்தராம்பாள் அவர்கள் மதுரகவி பாஸ்கரதாஸ் இயற்றிய பாடல்களான
''காந்தியோ பரமஏழை சந்நியாசி''
''தாயிடம் அன்பில்லாத சன்மம் வீணே''
''நம்பிக்கை கொண்டெல்லோரும் ராட்டை சுற்றுவோம்''
''காந்தி லண்டன் சேர்ந்தார்'' ஆகிய நான்கு பாடல்களையும் அருமையான முறையில் இசைத்தட்டில் பாடி மக்களிடையே கொண்டு சேர்த்தார். பாரதியாரின் பாடல்களை சென்னை அரசு தடை செய்ததை எதிர்த்து நடத்தப்பட்ட கூட்டங்களில் இவர் "நெஞ்சு பொறுக்குதில்லையே" என்ற பாடலைப்பாடி மக்களை வீறுகொண்டெழச்செய்தார். உப்பு சத்யாக்கிரகத்தையட்டி காந்தி சிறை சென்ற போது ""காந்தியோ பரம ஏழை சந்நியாசி"" என்ற பாடல் எங்கும் பரப்பப்பட்டது.

      காங்கிரஸ் கொள்கையில் பற்று ஏற்பட்டு அதனால் ஓய்வு நேரங்களில் நூல் நூற்று அதை காங்கிரஸ் குழவிற்கு அனுப்பி வைத்து கொண்டிருந்தார். 1931 ஆம் ஆண்டு தனது வீட்டிலிருந்த வெளிநாட்டுத் துணிகளை தீயிட்டுக் கொளுத்தினார். தானே கதர் துணிகளை முதுகில் சுமந்து கொண்டு மயிலாப்பூரிலுள்ள அறுபத்து மூவர் திருவிழாவில் விற்று காங்கிரஸ் குழவிற்கு அனுப்பியிருக்கிறார்.

      1932 ஆம் ஆண்டு மாவீரர்களான பகத்சிங், இராசகுரு, சுகதேவ்  ஆகிய தேசபக்தர்கள் தூக்கிலிடபட்டபோது அதை கண்டித்து எழுதப்பட்ட பாடலான ""சிறைவாயிலில் கண்ணீர் வடித்தாள் பாரத மாதா.. பெறற்கரிய பகத்சிங், ராச குரு, சுகதேவைப் பிரிந்தே வருந்துகிறாள்... நம் அன்னை பாரத மாதா"" என்ற பாடலை கே.பி.சுந்தராம்பாள் பாடி இசைத்தட்டில பதிவு செய்துள்ளார். இதற்கும் தடைவரவே அது வெகுவாகப் பரவவில்லை. நாடகக்கலைஞர்கள் மூலமே இப்பாடல் பாமர மக்களைச் சென்றடைந்தது. இவ்வாறு பல பாடல்கள் மூலம் இவர் தேசபற்றினை மக்களிடம் ஏற்படுத்தினார். அந்நாளில் இவர் பாடியும், பேசியும் பெரும் கூட்டம் கூடியப் பிறகே காங்கிரஸ் தலைவர்கள் பேசத் தொடங்குவர்.

      அதேபோல மிகச்சிறந்த தேசபக்தரான எஸ்.ஆர்.ரமாமணிபாய் பாடிய ""ஆடு ராட்டே மகிழ்ந்தாடு ராட்டே... சுய ஆட்சியைக் கண்டோமென்றாடு ராட்டே"" என்ற பாடல் கதராடை உற்பத்தி மூலம் சுய ஆட்சியை பெறமுடியுமென்ற கருத்தை வலியுறுத்தியது. மதுரை எம்.கண்ணம்மாள் பாடிய ""சத்யமெங்குமே தளரா நாடு - இந்து தேசமதைப் புகழ்ந்துபாடு"" என்ற பாடலும் பிரபலமானவை. புகழ்பெற்ற ஆர்மோனிய கலைஞரான எம்.ஆர்.கமலவேணி பல தேசிய பாடல்களை பாடியவர். மக்களின் தேசிய உணர்வை தூண்டிய இவரது பாடல்கள் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது தடைசெய்யப்பட்டது. குறிப்பாக ""அண்டம் கிடுகிடுங்க... லண்டன் நடுநடுங்க"" என்ற பாடலையும் ""அகிம்சைப்போர் தொடுத்தார் காந்திமகான்"" என்ற பாடலும் மிகவும் புகழ் பெற்றவை. இவர் மேடையில் ஆர்மோனியம் வாசித்து பாடிகொண்டிருந்தபோது காவல்துறையினர் இவரை கைது செய்தனர். தனது ஆறு வயது குழந்தையுடன் ஆறுமாதம் சிறையில் இருந்தார்.

      காஞ்சிபுரத்தை அடுத்துள்ள தாமல் கிராமத்தை சேர்ந்த அலமேலு என்ற இயற்பெயர் கொண்ட டி.கே.பட்டம்மாள் ""தேசிய குயில்"" என போற்றப்பட்டவர் ஆவார். காந்தியடிகள் காஞ்சிபுரம் வந்த போது அவரது முன்னிலையில் ""வீர சுதந்திரம் வேண்டி நின்றார் பின்னர் வேறொன்று கொள்வாரோ என்ற பாடலையும், ""கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினால் கை கொட்டி சிரியாரோ"" என்ற பாடலையும் பாடி உத்வேகமூட்டினார். தொடர்ந்து சுதந்திட வேட்கைமிக்க காங்கிரஸ் மேடைகளில் பாடினார். நாடு விடுதலை அடைந்த அன்று இரவு ""ஆடுவோமே பள்ளு பாடுவோமே"" ""விடுதலை விடுதலை விடுதலை"" போன்ற பாடல்களை அகில இந்திய வானொலியில் பாடினார் அதற்கு ஊதியம் பெற மறுத்துவிட்டார்.

அதேபோல அக்காலத்தின் பாடகியும் நடிகையுமான எம்.ஆர்.கமலவேனி தேசபக்தி பாடல்கள் தவிர வேறு எந்த பாடலும் பாடுவதில்லை என உறுதிமொழி எடுத்திருந்தார். தங்களின் எழுத்துக்கள் மூலமும் பலர் தேசபக்தியை மக்களிடம் பரப்பினர். அவர்களில் பெண்களும் அடங்குவர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் பண்டிதை அசலாம்பிகை அம்மையார். அவர் இயற்றிய நூல்களான காந்திபுராணம் மற்றும் திலகர் புராணம் இவரின் தேசபற்றிற்கு எடுத்துக்காட்டு.

செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த 115 நாவல்கள் எழுதிய பத்திரிகையாளராக, நாவலாசிரியராக மட்டுமிருந்த வை.மு.கோதைநாயகியின் இன்னொரு முகம் விடுதலை போராட்ட வீரர்.  அன்னி பெசன்ட் அம்மையார் மூலமாக தேசபக்தர், சமூகத் தொண்டர் அம்புஜம் அம்மாளின் நட்பு ஏற்பட்டது. தந்தை சீனிவாச ஐயங்கார் இல்லத்துக்கு 1925-ஆம் ஆண்டு மகாத்மா காந்தி வருகை தந்த போது கோதை நாயகி அம்மாள் காந்தியைச் சந்தித்தார். இந்நிகழ்வு  அவரது வாழ்க்கையில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. காந்தியின் எளிமையான தோற்றம் மிகவும் கவர்ந்தது. பட்டாடையே உடுத்திப் பழக்கப்பட்டவர் அன்று முதல் கதர் புடவையையே அணியத்தொடங்கினார். பின்பு அம்புஜம் அம்மையார், ருக்மணி இலட்சுமிபதி, வசுமதி இராமசாமி ஆகியவர்களுடன் இணைந்து சமூக சேவையில் ஈடுபட்டார்.

1931 இல் மகாத்மா காந்தி கள்ளுக்கடை மறியலில் ஈடுபட வேண்டும் என்று அழைப்பு விடுத்தபோது இவர் அதை ஏற்று திருவல்லிக்கேணியில் தற்போதைய பெசண்ட் ரோட்டில் திருமலாச்சாரி பள்ளி இருக்குமிடத்தின் அருகே இருசப்ப கிராமணித் தெருவில் இருந்த கள்ளுக்கடை முன் மறியல் செய்தார். சென்னை சைனா பஜாரில் தடையை மீறி ஊர்வலம் சென்றதால், தலைவர்கள் பலருடன் கோதைநாயகியும் கைது செய்யப்பட்டார். ஆறு மாதச் சிறைத் தண்டனையும் நூறு ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதம் கட்ட மறுத்ததால் கூடுதலாக நான்கு வாரம் சிறைத் தண்டனை  விதிக்கபட்டது.

1932 இல்லோதியன் கமிஷனுக்குஎதிராக நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டும், அன்னியத் துணி எதிர்ப்பு இயக்கத்தில் கலந்துகொண்டதற்காகவும் கோதையை வேலூர் சிறையில் அடைத்தார்கள். ஒரு எழுத்தாளர் என்ற முறையில் சிறையில் இருந்த காலத்தைப் பயனுள்ளதாகப் பயன்படுத்திக் கொண்டார். ஒவ்வொரு கைதியையும் தனித்தனியாக சந்தித்து அவர்கள் சிறைக்குள் தள்ளப்பட்ட காரணங்களைக் கேட்டு அவற்றை நாவலாக எழுதத் தொடங்கினார். சிறைக்கைதிகளை வன்முறை பாதையிலிருந்து திசை திருப்பி காந்திய பாதைக்குக் கொண்டு செல்ல முயன்றார். அதில் ஓரளவு வெற்றியும் பெற்றார். சிறையில் இருந்தபோது "சோதனையின் கொடுமை", "உத்தமசீலன்" ஆகிய புதினங்களை எழுதினார்.
(இன்னும் வருவார்கள்)
- எஸ்.ஜி.ரமேஷ்பாபு


விடுதலைப்போரில் பெண்கள் - 23



1930களின் துவக்கம் இந்திய தேசத்தை அதிரவைத்த பல சம்பவங்களை கொண்டதாய் இருந்தது. பல்வேறு போராட்டங்களை சந்திக்கும் வருடங்களாகவும் இருந்தது, காந்தி - இர்வின் ஒப்பந்தத்தை தொடர்ந்து கைவிடபட்ட சட்ட மறுப்பு இயக்கமும், உப்பு சத்யாகிரகமும் வீதியில் நின்ற போராளிகளை அவநம்பிக்கை கொள்ளச்செய்தது. வேறு பல வடிவங்களையும் வேகங்கொள்ளச்செய்தது. லாகூர் சதிவழக்கில் கைது செய்யப்பட்ட சிறையில் இருந்த ஜதின் தாஸ் உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்ததும், சிட்டகாங்கில் சூர்யா சென் தலைமையில் ஆயுத புரட்சியும், பஞ்சாப்பில் மாவீரர்கள் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகியோர் தூக்கிலிடப்பட்டதும், வங்கத்தில் 9 கொலைகள் உள்ளிட்ட 92 தீவிரவாத தாக்குதல் சம்பவங்கள் நடந்ததும் 30களின் துவக்கம்தான். அச்சமயம் கொலையுண்டவர்களில் மிட்னாபூரின் மாவட்ட ஆட்சியர் ஜேம்ஸ் பெட்டியும், திப்பெராவின் மாவட்ட ஆட்சியர் ஸ்டீவன்சும் அடங்குவர். இதில் சாந்தி, சுனிதி சவுத்திரி என்ற இரு மாணவிகலால் ஸ்டீவன்ஸ் கொள்ளப்பட்டது அப்போதைய உத்வேகத்தில் பெண்களின் உணர்வை தெரிந்துக்கொள்ள ஒரு உதாரணமாகும். 
இந்த 1930களின் துவக்கத்தில் தமிழக பெண்களும் தங்கள் பங்களிப்பை மிகவும் சிறப்பாக செய்தனர். அந்நியத்துணிக்கடைகள் மறியல் போராட்டத்தில்  சென்னை எஸ். அம்புஜம்மாள் தன் தந்தை எஸ். ஸ்ரீனிவாச ஐயங்கார் எதிப்பையும் பொருட்படுத்தாமல் காந்தியடிகள்பால் கொண்ட பற்றினால் 1930-ஆம் ஆண்டில் பத்து நாட்கள் தொடர்ந்து துணிக்கடைமறியல் செய்தார். இப்போது கற்பனை செய்தாலும் பிரமிப்பாக இருக்கும். 10 நாள் தொடர் இயக்கம்.  இவருடன் ஞானம்மாள உள்ளிட்ட பல பெண்களும் சென்னையில் ராட்டன் பஜாரில் உள்ள அந்நியத் துணிக்கடைகளின் முன்னால் கடுமையான மறியல் போராட்டங்களை நடத்தினர்.
இதைத் தடுப்பதற்காக இவர்கள் மீது மிகவும் கீழ்த்தரமான அனுகுமுறையை மேற்கொண்டது காவல்துறை. கொஞ்சமும் மனசாட்சி இல்லாமல், கேவலமான முறையில்  ரப்பர் குழாய் மூலம் சாக்கடைநீர் வீசியடிக்கப்பட்டது. இருந்தாலும் கொஞ்சமும் அச்சமில்லாமல் தொடர்ந்து மறியல் செயதார்கள். அப்போது இப்பெண்களை பிரித்தாள சூழ்ச்சி செய்த அரசு அம்புஜம்மாளை மட்டும் கைது செய்யாமல் அவருடன் போராட்டத்தில் ஈடுபட்ட ஏழு பெண்களை மட்டும் கைது செய்தனர்.

அதே நேரம் தமிழகத்தின் கடைகோடி பகுதியில் அந்நியத்துணிக்கடை மறியல் போராட்டத்தில் பி.லீலாவதி மற்றும் லலிதா பிரபு ஆகியோர் விடாப்பிடியாக ஈடுபட்டனர். இதனால்  அவர்கள் கைது செய்யப்பட்ட தலைச்சேரி நீதிமன்றத்திற்கு அழைத்துச்சென்றனர். செல்லும் வழியில் அன்றைய சூழலில் நவீன ஆனால் கொடூரமான தண்டனையை அவர்களுக்கு காவல்துறையினர் வழங்கினர். செல்லும் வழியிலேயே அவர்களது தாலி அறுக்கப்பட்டது. இன்றும்கூட தாலியறுத்தல் அல்லது அகற்றுதல் கடுமையாக சர்ச்சையை உருவாக்கும் சூழலில் அந்று இது எத்தகைய தாக்கத்தை உருவாக்கும் என சொல்லத்தேவையில்லை. அந்த சம்பவம் நடந்த இடமே """தாலியறுத்தான் தலைச்சேரி""" என்று பெயர் சூடும் அளவு பரபராப்பான செய்தியாக மாறியது,

1930-ஆம் ஆண்டு செப்படம்பர் 3-ஆம் தேதி கல்லூரிகளுக்கு முன்பு  மறியல் போராட்டத்தை டாக்டர் பிச்சைமுத்து அம்மாள் தொடங்கினார். அவரோடு சேர்ந்த போராளிகள் கல்லூரிகளில் மாணவர்களும், ஆசியர்களும் நுழையாதவாறு தடுத்தார்கள். மேலும் மாணவர்கள் கல்லூரிகளைப் புறக்கணிக்க வேண்டும் என துண்டு பிரசுரங்களை கொடுத்தனர். இந்த போராட்ட வடிவம் ஏராளமான மாணவர்களை படிப்பை விட்டுவிட்டு போராட்டத்தில் ஈடுபட தூண்டியது. இதனால் டாக்டர் பிச்சமுத்து அவர்கள் போராட்டம் தொடங்கப்பட்ட அடுத்த நாளே கைது செய்யப்பட்டார். ஆறு மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. எவ்வித பச்சாதாப உணர்வும் இல்லாமல் தேசத்திற்காக அந்த தண்டனையை அனுபவித்தார். இவரது கைதை கண்டித்து சென்னை இராணிமேரிக் கல்லூரியை சேர்ந்த மாணவிகள் கல்லூரியைப் புறக்கணித்தனர்.

மற்றொரு பக்கம் விடுதலை போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய வா.வே.சு. ஐயர் அவர்களின் மனைவி பத்மாவதியம்மள் வேறு சில பெண்களும் தடை உத்தரவை மீறித் காங்கிரஸ் அறிவித்த தேசிய கொடிக்கு வணக்கம் செய்தமையால் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டனர். அந்த சமயம் தினசரி தெருக்கள் தோறும் உணர்ச்சிதரும் பிரச்சாரங்கள் நடைபெற்ற்ன, பல் நூற்றுக்கணக்கான தலைவர்கள் கைது செய்யப்பட்டதால் கடையடைப்பு, வேலை நிறுத்தம், ஊர்வலம், பொதுக்கூட்டங்கள் என தகிதகித்து கிடந்தது தமிழக மண்..

வக்கீல்கள், மாணவர்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் என அனைவரும் ராட்டையும்; கையுமாகவே அலைந்தனர். தினசரி ஆங்காங்கு நடைபெறும் கூட்டங்களில் காந்தியடிகள் அறைகூவி அழைத்த சத்தியாக்கிரகத்திற்காக பணமும், காசும், நகையும், பொருட்களாகவும் பலர் கொடுத்தனர். பலர் சிறை செல்வது வாடிக்கையாகிபோனது. இச்சமயத்தில்தான் பத்மாசனி அம்மாளும் சிறைத் தண்டனை பெற்றார். ஆங்கில அரசாங்கத்தின் அடக்கிமுறை சொல்லொன்னா உச்சத்தை நோக்கிச்சென்றது. அரசாங்கத்தின் அடக்குமுறையை எதிர்த்து உயர் பதவி வகித்த பெண்கள் தங்கள் பதவிகளை தூக்கியெறிந்தனர். சென்னை சட்டசபையைச் சேர்ந்த ருக்மணிலட்சுமிபதியும், கமலாதேவி சட்டோபாத்யாவும் ராஜினாமா செய்தார்கள். காந்தியடிகள் கைதானதை எதிர்த்து திருமதி. முத்துலட்சுமி ரெட்டி சென்னை சட்டசபையின் துணை தலைவர் பதவியை உதறித்தள்ளினார்..

கைது செய்யப்பட்டவர்கள் 1931 ஆம் ஆண்டில் ஏற்பட்ட காந்தி-இர்வின் ஒப்பந்தத்தின் காரண்மாக விடுதலை செய்யபட்டனர். இருப்பினும் மதுரையில் அக்டோபர் மாதம் வரை அந்நியத் துணிக்கடைகள் மறியல் தீவிரமாக நடைபெற்றது. இதில் டாக்டர் பிச்சைமுத்து அம்மாள் தலைமையில் சுமார் ஐம்பது பெண்கள் செய்த மறியம் மிகவும் பேசப்பட்ட போராட்டமாகும். இதனை தீவிரப்படுத்த மதுரை பத்மாசனி அம்மாளும்,  சீதாலட்சுமி, தாயம்மாள் ஆகியோர் செய்த பிரச்சாரங்கள் குறிப்பிடத்தக்கவை. சென்னை நகரில் இப்போராட்டத்தை பெரும்பாலும் பெண்களே நடத்தினர். இப்போராடங்களுக்கு பெரும்பாலும் துர்காபாய் அம்மாளும், திருமதி கஸினுமே தலைமை தாங்கி வழிநடத்தினர்.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த லட்சுமி அம்மாவும், திருவல்லிக்கேணியை சேர்ந்த கமலாபாயும் இத்தகைய மறியல் போராட்டங்களை தீவிரமாக கொண்டு சென்ற வீராங்களைகள் ஆவார்கள். இதனால் இவர்கள் இருவருக்கும் ஆங்கில அரசாங்கம் ஆறுமாதம் சிறை தண்டனை கொடுத்தது. சென்னை எஸ். அம்புஜம்மாள்  போலவே கிருஷ்ணாபாய் என்ற பெண்மணி எண்பது தொண்டர்களை திரட்டி சென்னை ராட்டன் கடை வீதி துணிக்கடைகளை மறியல் செய்தபோது கைது செய்யப்பட்டு சிறை வைக்கபடபட்டார்கள், இவர்களின் தொடர் முயற்சியால், கடுமையான போராட்டத்தால் ஏராளமான அந்நியத் துணிகடைகள் மூடப்பட்டது.

1932-ஆம் ஆண்டு தொடக்கத்தில் வைசிராய் வெல்விங்டன் காந்தியடிகளைக் கைது செய்து காவலில் சூழலில் தேசம் முழுவதும் கடையடைப்பு, வேலை நிறுத்தம் மற்றும் பொதுக் கூட்டங்கள் நடத்தி மக்கள் தங்கள் கண்டனத்தை முழங்கினர். நாடு முழுவதும் கடுமையான அடக்குமுறை  தொடங்கியது. முக்கிய தலைவர்கள் மட்டுமல்ல ஆங்காங்கு போராடிய அனைவரும் கைது செய்பப்பட்டனர். காங்கிரஸ் அமைப்புகள் சட்ட விரோதமானவைகள் என அறிவித்து அவைகலை காவல்துறையினர் தடை செய்தனர்.

தமிழகத்திலும் பத்மாசனி அம்மாள், தாயம்மாள் மற்றும் சீதாலட்சுமி, முத்தம்மாள், சித்து பாக்கியலட்சுமி அம்மாள், கொண்டாலட்சுமி அம்மாள், கே.டி. கமலா ஆகியோர் உள்ளிட்ட முப்பது பெண்கள் மதுரையில் போராடி, கைதாகி சிறை சென்றனர். முன்பு கைது செய்யப்படாமல் போராட்டத்தை தொடர்ந்த அம்புஜம்மாள் இரண்டாவது தடவையாக 1932 ஆம் ஆண்டில்  துணிக்கடை மறியல் செய்ததால் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். சென்னையைச் சேர்ந்த ஞானம்மாளும் இப்போராட்த்தில் ஈடுபட்டதற்காக சிறை வைக்கப்பட்டார். இப்போராட்டத்திலும் ருக்மணி லட்சுமிபதியும்;, துர்காபாயும் ஈடுபட்டார்கள். போர்க்களம் தொடர்ந்து தகித்துக்கொண்டிருந்தது.
(கனல் இன்னும் அனையவில்லை)
- எஸ்.ஜி.ரமேஷ்பாபு


விடுதலைப்போரில் பெண்கள் - 22


இந்த தேசத்திற்காக உழைத்தவர்கள் எப்போதுமே தாமதமாதான் கவுரவம் செய்யப்படிருக்கின்றனர். இந்த உதாரணத்தின் ஒரு எடுத்துகாட்டு அருணா. இந்திய விடுதலைப் போரில் ஈடுபட்ட பெருமைமிகு இப்போராளி 87 ஆண்டுகள் இந்த மண்ணின் மக்களை நேசித்த ஒரு உன்னதம் அவர். அவர் இறந்த அடுத்த ஆண்டாண 1997 -ல் தான் அவருக்கு பாரத் ரத்னா விருது வழங்கப்பட்டது. இந்திய அரசு அவரை மிக தாமதமாக பாரத்த ரத்தினமாய் ஏற்றுக்கொண்டாலும் அவர் உண்மையில் இந்தியாவின் நவரத்தினாமக தனது வாழ்க்கை மூலமாக ஜொலித்தார்.

1909 ஆம் ஆண்டு இன்று அரியானா மாநிலத்தில் உள்ள கல்காவில் பிறந்தார். வங்க குடும்பத்தில் பிறந்த அவரது தந்தையின் பூர்வீகம் கிழக்கு வங்காளம் ஆகும். அவர்கள் கொல்கத்தாவில் அவரது பணி நிமித்தமாக நிறந்தரமாக தங்கினர். அவரது தந்தை  உபேந்திரநாத் கங்குலி சிறந்த பத்திரிக்கையாளராக திகழ்ந்தார். அருணா லாகூரில் கத்தோலிக்க கிருத்துவ பள்ளியில் கல்வி கற்றார். அவருக்கு கிருத்துவ மதத்தின் மீது அளவிடமுடியாத பற்றுதல் ஏற்பட்டது. படிப்பில் சிறந்த மாணவியாக திகழ்ந்த அவர் ஒரு சமயத்தில் திருமணம் செய்துகொள்ளாமல் இறை சேவையிலேயே வாழவை கழிக்க எண்ணினார். ஆனால் அவரது அடுத்த கல்வி நிலையமான நைனீடாவில் உள்ள பிராட்டஸ்டன்ட் அக்கருத்தை மாற்றி அமைத்தது.

அச்சமயம் அவருக்கு மாப்பிள்ளை பார்க்கும் படலத்தை குடும்பத்தில் துவக்கினர் ஆனால் அவர் அதற்கு விருப்பம் தெரிவிக்கவில்லை. மேலும் உயர் கல்விக்கான படிப்பு செலவை தானே சமாளித்து நிற்பதற்காக ஒரு பள்ளியில் ஆசிரியர் பணியில் சேர்ந்தார். அருணாவின் சகோதரி பூர்ணிமா தனது கனவருடன் அலகாபாத்தில் வசித்துவந்தார். கோடை விடுமுறை காலத்தில் அலகாபாத் சென்று சிலகாலம் அருணா தங்கி இருந்தார். அங்குதான் அவர் இலக்கிய ஆர்வமும், அரசியல் வேட்கையும் நிறைந்த போராளியான ஆசாப் அலியை சந்தித்தார். 

இலக்கியம், அரசியல் என துவங்கிய இவர்கள் விவாதம் காதல் என்ற புள்ளியில் சந்தித்தது. இருவரும் மனதார விரும்பினர். ஆனால் குடும்பத்தில் பிரச்சனை மாற்று மதங்களை சார்ந்தவர்கள் என்பதால் மட்டும் வரவில்லை, இருவருக்குமான வயது வித்தியாசம் ஒரு தடையாக சுட்டிக்காட்டப்பட்டது. ஆம் அப்போது ஆசாப் அலிக்கு 41 வயது, அருணாவுக்கு 18 வயது. இருப்பினும் இருவரும் மணம் புரிந்துக்கொண்டனர். லாலா லஜபதிராயை தடியால் அடித்து கொலை செய்த சாண்ட்ரஸை பக்தசிங்க் சுட்டு கொன்ற அதே 1928 ஆம் ஆண்டுதான் அருணா - ஆசாப் அலி இருவருக்கும் திருமணம் நடந்தது. இந்த சம்பவம் ஏன் இங்கு சுட்டிக்காட்ட படுகிறது எனில், ஆசாப் அலி இந்திய தீவிரவாத இயங்களின் நியாயத்தை தொடர்ந்து கவனித்து வந்தார். கவனித்து வந்தது மட்டுமல்ல பகத்சிங், பி.கே.தத் ஆகியோருக்காக பின்னாளில் வாதடிய வழக்கறிஞரும் இவர்தான்.

இதற்கிடையில் இளம் பெண்ணான அருணாவுக்கு இந்திய அரசியல் செல்லும் பாதை வேதனையை கொடுத்தது. விடுதலை போரில் தானும் முழுமையாக ஈடுபட விரும்பினார். இதற்கு அசாப் அலி மிகவும் உற்சாகம் கொடுத்தார். தன்னுடைய முழு திறமையையும், வாய்புகளையும் பயன்படுத்திக்கொண்டார். ஆசாப் அலி முலீம் லீக்கில் பணியாற்றினாலும் அருணா காங்கிரஸில் பற்று கொண்டு உழைத்தார். கணவரிடமிருந்து உருது மொழி கற்றுக்கொண்டு வங்க மொழிக்கு நிகராக அம்மொழியிலும் மேடையில் சிறப்பாக பேசினார். காங்கிரஸ் சோசலிஸ்டாக அவர் அறியப்பட்டார்.   

காந்தியடிகள், மொளலானா ஆசாத் போன்ற தலைவர்களின் கூட்டங்களில் உத்வேகம் அடைந்த அவர், ஜெயபிரகாஷ் நாராயணன், அச்சுத்பட்டவர்தன், ராம் மனோகர் லோகிய போன்ற சோசலிஸ்ட்  அரசியல் தலைவர்களுடன்தான் போர் கொடி ஏந்தி களம் கண்டார். எதையும் வைராக்கியத்துடன் செய்யும் ஆற்றல் கொண்ட அருணா விடுதலை போரில் தீவிரமாக இறங்கினார். 1930 களில் நடந்த உப்பு சத்தியா கிரகத்தில் ஈடுபட்டு சிறக்கு சென்றார். அவரது கணவரும் கைது செய்யப்படார். பெரும் பேரணிக்கு தலைமையேற்றுச் சென்றதால் அருணா கைது செய்யப்பட்டார். காந்தி - இர்வின் ஒப்பந்தபடி அனைத்து அரசியல் கைதிகளும் விடுதலை செய்யபடாலும்ம் அருணாவை மட்டும் பிரிடிஷ் அரசாங்கம் விடுதலை செய்யவில்லையெனில் அதிலிருந்து அவரது தீவிரத்தை புரிந்துக்கொள்ளலாம். அவரது விடுதலைக்காக கடுமையான போராட்டங்கள் நடந்த பிறகுதான் அவர் விடுதலை செய்யபடார்.

மீண்டும் 1932 ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டதில் பங்கு கொண்டு சிறைக்குச் சென்றார். நீதிமன்றம் அவருக்கு 200 ரூபாய் அபராதம் விதித்தது. அவர் அதை கட்ட மறுத்ததால் சிறை இருப்பது தொடர்ந்தது. இவர் அபாயமானவர் என அறிவித்து அவரை மட்டும் அரசாங்கம் அம்பாலா சிறைக்கு மாற்றியது. 1940ம் ஆண்டு காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்க போராட்டத்திற்கு தேர்ந்தெடுத்த தலைவர்களில் அருணாவும் ஒருவர். இதிலேயும் சிறைக்கு சென்றார். அச்சமயம் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செயற்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1942 ஆம் ஆண்டு பம்பாயில் துவங்கிய வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் தீவிரமாக பங்கேற்றார். அந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி வரலாற்று முக்கியதுவம் வாந்த வெள்ளையனே வெளியேறு தீர்மாணம் நிறைவேற்றப்பட்டது. இரவோடு இரவாக அனைத்து தலைவர்களும் கைதுசெய்யப்பட்டனர். அடுத்த நாள் பம்பாயின் புகழ் பெற்ற கோவாலி டேங்க் மைதானத்தில் வெளையனே வெளியேறு இயக்கத்தின் துவக்க நிகழ்ச்சி இருந்தது. எங்கும் பரபரப்பாக இருந்தது, காவல்துறையும், ராணுவம் ஆயுதங்களுடன் சுற்றிலும் நின்றது. இந்த இயக்கத்தை தேசிய கொடியை ஏற்றி வைத்து மொளலானா ஆசாத் துவக்குவதாத அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் முந்நாள் இரவே கைது செய்யப்பட்டிருந்தார். மைதானத்தில் குழப்பம், எபடியும் தேசிய கொடியை ஏற்றுவது, வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை துவக்குவது என்பது நடக்கத்தான் போகிறது. ஆனால் முதல் அடியை யார் எடுத்து வைப்பது? கவல்துறையும் இராணுவமும் உயர்த்திய தடிகளும், துப்பாகிகளையும் வைத்து குறிபார்த்துக்கொண்டிருந்தது. 

திடீரென வந்தே மாதரம் என்ற முழக்கமும், இன்குலாம் ஜிந்தாபாத் என்ற முழக்கமும் வின்னை முட்டும்மளவு உயர்ந்தது. காரணம் அருணா என்ற வீரமங்கை எதற்கும் அஞ்சாமல் தேசிய கொடியை கம்பீரமாக ஏற்றிக்கொண்டிருந்தார். இதை சற்றும் எதிர்பார்காக காவல்துறையும், இராணுவமும் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர், கூட்டம் அசராமல் முழக்கமிட்டது. திடீரென தோட்டாக்கள் சீறிபாய்ந்தது. பலர் சுருண்டு விழுந்து இறந்தனர். அருணாவை அங்கிருந்து தேசபக்தர்கள் தப்பவைத்தனர். அருணாவின் தலைக்கு ஆங்கிலேய அரசு ஐந்தாயிரம் விலைவைத்தது. அன்று தலைமறைவான அந்த வீராங்கனை 1946 ஆம் ஆண்டுதான் வெளியில் வந்தார்.

இந்த தலைமறைவு காலத்தில் அவரது தாயார் மரணமடைந்தார், கணவர் உடல் நலம் குன்றி மருத்துவமணையில் அனுமதிக்கப்படார். அருணாவின் சொத்துக்களை அரசாங்கம் கைப்பற்றியது, கொடுமையான வாழ்க்கை இருப்பினும் மணம் தளராமல் போராட்டங்களில் ஈடுபட்டுக்கோண்டே இருந்தார். சோசலிஸ்ட், கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைகளை அவர் உள்வாங்கி பணியாற்றியது பின்னாளில் நடந்தது.

இந்தியா விடுதலை பெற்றதும் அவர் டெல்லியின் முதல் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அமைதிக்கான லெனின் விருதை 1975 ஆம் ஆண்டும், சர்வதேச புரிதலுக்கான நேரு விருதை 1991 ஆண்டும் அவர் பெற்றார். 1996 ஆம் ஆண்டு அவர் மரணம் அடையும் வரை மக்களை நேசித்து வந்தார். எல்லா வளங்களும் கொண்ட குடும்பத்தில் பிறந்து, போராட்ட களத்தையே தனது வாழ்க்கையாக மெற்கொண்டு, தனது சொந்த இழப்புகளை பொருட்படுத்தாமல் வாழ்ந்து மறைந்த போராளி அவர். விடுதலைப் போராட்டத்தில் அருணாவை போல மகத்தானவர்கள் நம்முடைய ஈர்ப்பு சக்தியாக விளங்குகின்றனர்.   
(தொடரும்)
- எஸ்.ஜி.ரமேஷ்பாபு

bookmark
bookmark
bookmark
bookmark
bookmark