செய்திகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செய்திகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 16 மார்ச், 2011

ஜப்பான் துயரம்: "இங்கதான் எங்க வீடு இருந்துச்சு"













ஜப்பானில் ஆயிரக்கணக்கான மக்களையும், வாழ்விடங்களையும், மனித உழைப்பின் அடையாளங்களையும் சில நிமிடங்களில் இயற்கை துடைத்தெறிந்தது. மானுடம் சந்தித்த கொடூர அழிவுகளில் என்றும் நிலைத்திருக்கும் அழிவு இது. தொலைக்காட்சிகளில் பதற பதற பார்த்த நிமிடங்கள் அப்படியே உறைந்துள்ளது. தொடர்ந்து வருகின்ற செய்திகளும், புகைப்படங்களும் மனதை உறைய வைக்கின்றன. பூகம்பம், சுனாமி, அணு உலை வெடிப்பு என நமது சகோதர மனித இனம் அங்கு கொடூரங்களை சந்தித்துக்கொண்டிருக்கிறது. பேரழிவு தாகுதலின் கடைசி நிமிடம் வரை வாழ்வின் கனவுகளை சுமந்து திரிந்த மனித இனம் சுதாரிக்க நேரம் இல்லாமல் அழிந்த துயரத்தின் சுவடுகளை விஞ்ஞான தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஊடகங்களில் பார்த்துகொண்டு இருந்த போது, நமது நாட்டின் சுனாமி நினைவுகள் எழுந்து வந்தது. 

ஆழிப்பேரலையின் தாக்குதல் முடிந்த அடுத்த சில நிமிடங்களில் கடலூர் மாவட்டம் கிள்ளை கிராமத்தின் பக்கம் உள்ள எம்.ஜி.ஆர் திட்டு பகுதியில் இருந்தேன். எம்.ஜி.ஆர் திட்டு என்ற கிராமம் புகழ் பெற்ற சுற்றுலா தளமான பிச்சவாரத்தின் அருகில் உள்ள கிராமம். மாவட்ட  நிலப்பரப்பின் இறுதியில் ஆற்றுக்கும் கடலுக்கும் இடையிலுள்ள ஒரு தீவு கிராமம். நாங்கள் சென்ற போது சுனாமியின் கோரதாண்டவம் முடிந்து மொத்த ஊரும் அழிந்திருந்தது. எங்கும் பிணங்கள் நிறைந்திருந்தது. மரங்களில், வீட்டு கூறைகளில், தெருக்களில் பிணங்கள் அடைந்திருந்தன. ஊரில் ஒரு மரணமெனில் ஊரே அழுவும் ஊரே மரணமடைந்தால் யார் அழுவது? அழுது கண்ணீர் வற்றிப்போன சொந்தங்களால் அழுவதற்கு சக்தி இல்லாமல் பிணங்கள் அள்ளிச் செல்லப்பட்டது. ஊரிலிருந்து திரும்பி தனது உறவினருடன் கிராமத்திற்கு வந்திருந்த ஒரு குழந்தை அழுதுக்கொண்டிருந்திருந்தது. அதிர்ச்சியில் உறைந்திருந்த நான் அந்த குழந்தையிடம் அமர்ந்து பேச்சுக்கொடுத்தேன். 

தம்பி உன் பேரென்ன?

......... அழுகைமட்டும்

சொல்லு கண்ணா உன் பேரென்ன?

"இங்கதான் எங்க வீடு இருந்துச்சு"

சரிம்மா.. உன் பேரென்ன?

"இங்கதான் எங்க வீடு இருந்துச்சு"

சரி செல்லம் .. ஒன்னும் ஆகல.. என்னை பார், உன் பேரென்ன?

''அந்த வீட்டுல எங்க அம்மா, அப்பா, அக்கா இருந்தாங்க"

அவனது இரு கைகளையும் பிடித்து " ஒன்னும் ஆகல அழுவாத என்றேன்.

"மாமா .. எங்க வீடு எங்க? அதுல இருந்த அம்மா எங்க?  

அந்த குழந்தையிடம் என்ன சொல்ல? 

எனது வாழ்வில் பதில் சொல்ல முடியாமல் நான் தவித்த அந்த கனங்கள் மீண்டும் நினைவுக்கு வருகிறது. 

ஒன்று நிச்சயம் ...அமெரிக்காவின் ஏகாதிபத்திய கனவு வெறியின் வன்முறையில், ஒரு பரிசோதனை கட்டத்திற்காக ஹிரோஷிமா, நாகசாகியில் லட்சம் மக்களை பலி கொடுத்து, அந்த கொடூரத்தை வென்று, மீண்டும் எழுந்து நின்று உலகை திரும்பிப் பார்க்க வைத்த எங்கள் சொந்தங்களே. உங்களுக்கு எங்கள் கண்ணீரை மட்டுமல்ல நம்பிக்கைகளையும் தருகிறோம். நாம் வெல்லுவோம் ஒர் நாள். 


சனி, 5 மார்ச், 2011

அர்ஜுன்சிங் நினைக்கப்படுவார்.




முன்னாள் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் அர்ஜூன் சிங்  மரணமடைந்தார். அவருக்கு வயது 81.பல்வேறு உடல் நலக் கோளாறுகளால் அவதிப்பட்டு வந்த அர்ஜூன் சிங் டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் 04.03.11 மாலை அவர் மாரடைப்பால் உயிரிழந்தார். மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவரான அர்ஜூன் சிங், மத்தியப் பிரதேச முதல்வர், மத்திய அமைச்சர் என பல்வேறு பதவிகளை வகித்தவர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர். முன்னாள் மத்தியப் பிரதேச முதல்வர் திக்விஜய் சிங், அமேதி தொகுதியின் முன்னாள் எம்.பி. சஞ்சய் சிங் ஆகியோர் அர்ஜூன் சிங்கின் நெருங்கிய உறவினர்கள் ஆவர். இதெல்லாம் அவரின் சில அடையாளங்கள்தான். அவருக்கான நிரந்தர அடையாளம் இரண்டு  உள்ளது. அது அவர் குறித்த புரிதல்களை கடைசிவரை குழப்பமாக வைத்திருந்தது. 
மறைந்த பி.வி. நரசிம்ம ராவ் பிரதமராக இருந்தபோது அர்ஜூன் சிங் அமைச்சராக இருந்தார். ஆனால் பாபர் மசூதி இடிப்பு சம்பவத்திற்குப் பின்னர் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன் பின்னர் அவர் காங்கிரஸிலிருந்து விலகினார். என்.டி.திவாரியுடன் சேர்ந்து திவாரி காங்கிரஸை உருவாக்கினார். பின்னர் மீண்டும் காங்கிரஸில் இணைந்தார். மத்தியப் பிரதேச முதல்வராக 3 முறையும், மத்திய அமைச்சராக இருமுறையும், பஞ்சாப் மாநில ஆளுநராக ஒருமுறையும் இருந்தவர் அர்ஜூன் சிங். இரு முறையும் இவர் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.பஞ்சாப் மாநில ஆளுநராக இவர் இருந்தபோதுதான் ராஜீவ்-லோங்கோவால் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. 2000மாவது ஆண்டு சிறந்த நாடாளுமன்றவாதியாக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆண்டர்சனை தப்ப விட்டவர்!
அர்ஜூன் சிங் மத்தியப் பிரதேச முதல்வராக இருந்தபோதுதான், போபாலில் விஷவாயுக் கசிவு சம்பவம் நடந்து பல ஆயிரம் பேர் உயிரைப் பறித்தது. அந்த சமயத்தில் யூனியன் கார்பைடு நிறுவனத் தலைவர் வாரன் ஆண்டர்சனை பத்திரமாக இந்தியாவிலிருந்து தப்ப உதவியவர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. போபால் நகரை விஷவாயு தாக்கிய அந்த நாளில், அதிலிருந்து தப்புவதற்காக நகரை விட்டு வெளியேறி தனக்குச் சொந்தமான கேர்வா டாம் அரண்மனைக்குப் போய் தங்கினார் அர்ஜூன் சிங் என்ற குற்றச்சாட்டும் அப்போது எழுந்தது.
பூலான் தேவியை சரணடைய வைத்தவர்!
நாட்டையே அதிர வைத்த பிரபல போராளி பூலான் தேவி, ஆயுதங்களைக் கீழே போட்டு விட்டு சரணடைய முன்வந்தபோது அப்போதைய ம..பி முதல்வராக இருந்த அர்ஜூன் சிங் முன்னிலையி்ல்தான் சரணடைய விருப்பம் தெரிவித்தார். அதேபோல அர்ஜூன் சிங் முன்புதான் அவர் ஆயுதங்களைப் போட்டு சரணடைந்தார் பூலான் தேவி. பூலான் தேவி சரணடையும் விவகாரத்தில் முக்கியப் பங்காற்றியவர் அர்ஜூன் சிங் என்பது குறிப்பிடத்தக்கது.
இட ஒதுக்கீட்டுக்காக பாடுபட்டவர்
அர்ஜூன் சிங் மீது பல்வேறு சர்ச்சைகள் இருந்தாலும் கூட இந்தியாவின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக அவரும் விளங்கினார். குறிப்பாக பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டுக் கொள்கையில் மிகவும் முக்கியமான பங்காற்றியவர் அர்ஜூன் சிங். அரசு உதவி பெறாத தனியார்ர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்ற சட்ட மசோதாவைக் கொண்டு வந்தவர் அர்ஜூன் சிங்.
மேலும் ஐஐடி, ஐஐஎம் போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தவர் அர்ஜூன் சிங். மேலும், அர்ஜூன் சிங், மன்மோகன் சிங் அமைச்சரவையில் மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்தபோது 32 மத்திய கல்வி நிலையங்களில் மட்டுமே அமல்படுத்தப்பட்டு வந்த பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை 100க்கும் மேற்பட்ட நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் செயல்படுத்த முயற்சி எடுத்து வந்தார். தனது இறுதிக் காலத்தில் காங்கிரஸ் தலைமையுடன் அவர் ஒத்துப் போக முன்வராததால் கட்சியால் கிட்டத்தட்ட கைவிடப்பட்டார். அரசியலிருந்தும் ஒதுங்கினார்.

அவர் மரணமடைந்த தினத்தின் பிற்பகலில்தான் காங்கிரஸ் காரியக் கமிட்டி உறுப்பினர் பொறுப்பிலிருந்து அர்ஜூன் சிங்கை நீக்கியிருந்தனர். மசூதி இடிப்புக்காக தனது காங்கிரஸ் கட்சி பதவியை தூக்கிஎரிந்த, பூலாந்தேவியிடம் மனிதாபிமான அணுகுமுறையை கடைபிடித்த அர்ஜுன்சிங்கும் நமது மக்களை படுகொலை செய்த ஆண்டர்சனை தப்பவிட்ட அர்ஜுன்சிங்கும் முரண்படுவது முதலாளித்துவ அரசியலின் ஒரு பரிணாமம்.

அர்ஜுன்சிங் நினைக்கப்படுவார்.  

செவ்வாய், 22 பிப்ரவரி, 2011

ஊழலை ஒழிப்போம் ! நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஜோக்கு??


21 . 02 . 11 அன்று நமது நாட்டின் முதல் குடிமக்களான பிரதிபா பாட்டில் பாராளுமன்ற இரு அவைகள் இணைந்த கூட்டத்தில் ஐம்பது நிமிடங்கள் அவர் பேசியதின் சாரம்சம் இதுதான்.

- பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை.
- விலை உயர்வால் பாதிக்காத வகையில் ஏழை மக்களுக்குப் பாதுகாப்பு.
- பொது வாழ்க்கையில் ஊழலைத் தடுக்க உரிய நடவடிக்கை.
- பொருளாதார வளர்ச்சியின் பலன்கள் ஏழை மக்களைச் சென்றடைய நடவடிக்கை. 
- உள்கட்டமைப்பு துறையில் ரூ. 20 லட்சம் கோடி முதலீடு.
- உள்நாட்டு, வெளிநாட்டு தீய சக்திகளால் அச்சுறுத்தல் ஏற்படா வண்ணம் நாட்டின் பாதுகாப்புக்கு உறுதி.
- இந்தியாவின் நலனைக் காக்கும் வகையில் வெளியுறவுக் கொள்கை வடிவமைப்பு. 
- விவசாயிகளுக்கு நியாயமான கொள்முதல் விலை கிடைக்க உரிய நடவடிக்கை. விரைவில் உணவு பாதுகாப்புச் சட்டம்.
- ஊழலைத் தடுக்க புதிய வழிமுறைகளை உருவாக்கவும் நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை நிலைநிறுத்தவும் அமைச்சர் குழு அமைப்பு.
- அரசு அதிகாரிகள் ஊழியர்களுக்கு எதிரான ஊழல் புகார் விசாரணையை விரைவுபடுத்த நடவடிக்கை.
- தேர்தல் சீர்திருத்த நடவடிக்கைகளை விரைவுபடுத்த குழு அமைப்பு.
- மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா விரைவில் நிறைவேற நடவடிக்
- பாகிஸ்தானுடன் பேச்சு நடத்த நிபந்தனை.

மிகவும் நகைச்சுவை உணர்வுடன் அவர் கிழ்வருமாறு கூறினார் : "வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் கறுப்புப் பணத்தைப் பதுக்கி வைத்திருக்கும் விவகாரம் அரசுக்கு கவலையளிக்கிறது. இந்தப் பணம் ஊழல் மூலமாகவோ, வரி ஏய்ப்பு மூலமாகவோ பெறப்பட்டதாக இருக்கலாம். இந்தப் பிரச்னையை தீர்க்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக இருக்கிறது. இதற்கு மத்திய, மாநில அரசுகளின் சட்ட அமலாக்க அமைப்புகளின் ஒத்துழைப்பு அவசியம். இந்தப் பிரச்னை தொடர்பாக வலுவான சட்ட நெறிமுறையை உருவாக்குவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை அரசு ஏற்கெனவே எடுத்திருக்கிறது." இதை அவர் கொள்ளும் பொது பிரதமர் உள்ளிட்ட ஆளும்கட்சியினர் பக்கம் மறந்தும் திரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த உரையில் மக்களுக்கு இருக்கும் ஆப்பு என்னவெனில் காங்கிரஸ் அரசு பொருளாதார சிர்த்திருத்தத்தை தொடர்ந்து அமலாக்கம் செய்யும் என்பதுதான். இதன் விளைவு என்னவெனில் ஏற்கனவே தற்கொலை செய்து கொண்ட ஒன்னரை லட்சம் விவசாயிகளுடன் இன்னும் இரண்டு லட்சம் சடலங்கள் சேரும் என்பதுதான். கிராமப்புற வேலைவாய்ப்பு குறித்தோ, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவது குறித்தோ மறந்தும் வாயை திறக்கவில்லை என்பதையும் அறிக. 

வழக்கம் போல உப்பில்லாமல் உணவருந்த சொல்லும் ஒரு உரை.

வெள்ளி, 18 பிப்ரவரி, 2011

வெட்கமாய் இருக்கிறது பிரதமரே உங்களுக்கு எதுவும் தெரியாமல் இருப்பது!?!?


ஆறுகாலுடைய எருமைக்கன்று, மூன்று கண்ணுடைய மாடு, ஆண்பெண் இல்லாது இடையில் இருக்கும் கோழி, இருப்பக்கம் தலையுள்ள பாம்பு, கிளைகளை உடைய பனைமரம், பறக்காகத காகம் போன்றவற்றை இயற்கை விசித்திரம் என்பார், இயற்க்கைக்கு இவை மாறுபட்டிருப்பதால். இவற்றை நம்புவது தவறல்ல, அறிவற்ற செயலுமல்ல, சில விசித்திரங்கள் நடப்பதுண்டு கனிமொழி கவிஞர் என்று நம்பப்படுவதை போல..?

சிவலிங்கம் சாட்சி சொல்வது, எலும்பு பெண்ணுருவாவது, பனை ஓலைத்துண்டு வெள்ளத்தை எதிர்த்துச்செல்வது, கருங்கல் பாறை மிதப்பது, நரி பரியாவது, அறுத்து கறி சமைத்த பிள்ளை உயிர் பெற்று எழுந்து வருவது, பன்றியும் அன்னமும் அடிமுடி தேடுவது, ஒருவர் முதுகில் பிறம்பால் அடித்தால் அனைவர் முதுகிலும் அடிவிழுவது, யானை கதறினதும் யானை வருவது, சிலந்தி பந்தல் போடுவது, சிவனரைப் பூஜித்த யானை சிவபாதம் அடைவது, ஆவிக்குறிய கூட்டங்கள் நடத்தி குருடர்கள் பார்வை பெருவது, முடவர்கள் நடப்பது என்பவை எல்லாம் நடக்காது என்பதால் யாரும் நம்புவதில்லை, ஆ.ராசா ஊழல் செய்யவில்லை என்பதை போன்று. இவற்றை எல்லாம் நம்ப முடியுமா? நம்பினால் இந்த உலகம்தான் ஒப்புமா?

இப்படிதான் நம்ப முடியாத கருத்துகளை சொல்கிறார் நமது பிரதமர். பத்திரிகை ஆசிரியர்களுடன் அவர் நடத்திய உரையில் ... அது அவர்களுடனான  பேட்டி அல்ல என்பது பார்த்தவர்களுக்கு தெரியும். இருக்கட்டும் பேட்டி என்றே வைத்துக்கொள்வோம். அவர்களுடன் பேசிய போது நடந்தது எதுவும் தனக்கு தெரியாது அல்லது தனக்கு சம்பந்தமில்லை என்கிறார். தன்னை நல்லவன் என்று நிருபனம் செய்வதில் முனைப்பாக இருந்ததாலேயே அம்பலப்பட்டு போனார். அவருக்கு எதுவுமே தெரியாமல் நடந்தால் பிரதமர் என்று அவரை நாம் அழைப்பது நமக்கு கேவலம் இல்லையா? அனைத்து அதிகாரங்களும் பிரதமருக்கு இருப்பதாக இதுநாள் வரை நம்பப்பட்டது, இப்போதுதான் தெரிகிறது இந்நாட்டின் ஜனாதிபதியை போல பிரதமர் பதவியும் வெறும் தலையாடி பொம்மை வேலை என.

ஆதர்ஷ், காமன்வெல்த், ஸ்பெக்ட்ரம், இஸ்ரோ, என நாளுக்கு நாள் கொள்ளையடிக்கும் தொகை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது மிஸ்டர் மன்மோகன். எதுவுமே தெரியாது என நிங்கள் சொல்வது கடைந்தெடுத்த பொய் என அனைவருக்கும் தெரியும். இதுவரை தேர்தலில் நிற்காமலேயே தாங்கள் வெற்றியடைந்தது எப்படியென இப்போதுதான் தெரிகிறது. எலும்புகளுக்கு அலைந்தாடும் பிராணிகள்  எப்போதாவது கோபப்படும் பிரதமரே .. ஆனால் நீங்கள் ??

எங்கள் தேசத்தில் காவி இருள் படர்ந்தபோது  அதை நாங்கள் விரட்டினோம் எப்படியெனில் அது மதவெறியை கொண்டுவந்த காரணத்தால்..... இப்போது கள்ளமவுன நிழல் நல்ல மனிதர் என்ற போர்வையில் கவிழ்ந்திருக்கிறது  என்ன செய்வது ?  உலகத்தில் பலநாடுகளில் ஆட்சியாளர்கள் ஓடி  ஒளிவதை  பார்த்துக்கொண்டுதானே இருக்கிறிர்கள். நல்லது. 

வெட்கமாய் இருக்கிறது பிரதமரே உங்களுக்கு எதுவும் தெரியாமல் இருப்பது!?!?

ஞாயிறு, 13 பிப்ரவரி, 2011

தேர்தல் கமிஷன் தலைவர்: வெளயாட்டு புள்ள சார் நீங்க!!!!!!


தேர்தலில் பணம் விளையாடுவதைத் தடுக்க, பீகாரில் புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டன. அந்த விதிமுறைகள் தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்குவங்கம் ஆகிய ஐந்து மாநில தேர்தல் களிலும் பின்பற்றப்படும். தேர்தலில் வேட்பாளர்களுக்கான செலவு உச்சவரம்பை 60 சதவீதம் உயர்த்த முடிவு செய்துள்ளோம். எம்.பி., தேர்தலில் வேட்பாளரின் செலவு உச்சவரம்பை, 25 லட்ச ரூபாயிலிருந்து 40 லட்சமாகவும், எம்.எல்.ஏ., தேர்தலில் வேட்பாளரின் செலவு உச்சவரம்பை 10 லட்ச ரூபாயிலிருந்து 16 லட்சமாகவும் உயர்த்த, சட்ட அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்துள்ளோம். விரைவில் இதற்கான உத்தரவு வரும் என எதிர்பார்க்கிறோம். என  சென்னையில்  13 .02 .11 அன்று தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷி தெரிவித்தார். 

இந்த செய்தியை படித்ததும் அவருடைய நகைச்சுவை உணர்வு எவ்வுளவு மகத்தானது என தெரிந்தது. வடிவேலு பாணியில்  வெளயாட்டு புள்ள சார்  நீங்க! என்று  சொல்லத்தான் தோன்றுகிறது. தேர்தல் கமிஷன் எத்தகைய உச்ச வரம்பை சொன்னாலும் தமிழ்நாட்டில் அதை அமல்படுத்த முடியாது என்பதை அவர் அறிவாரா மாட்டாரா நமக்கு தெரியவில்லை. கடந்த பாராளுமன்ற தேர்தலில் தேர்தல் கமிஷன் கடுமையான கட்டுபாடுகளை விதித்தும் தமிழகத்தின் ஒரே "அஞ்சா நெஞ்சன்" அழகிரி  நடத்திய திருவிளையாடல்கள் தமிழாக்கம் அறியாதது அல்ல. இரவில் ஆட்டோக்களில் சென்று புடவை பார்சலில் பணம் வைத்து எறிந்ததையும், காலையில் அதை நினைவு படுத்தி வாக்கு கேட்டதையும் , அரிவாளுடன் அஞ்சா நெஞ்சனின் அடிபொடிகள் எதிர் கட்சிகளை மிரட்டியதையும் இன்னும் மதுரை மக்கள் மறக்கவில்லை. அந்த சமயத்தில் பலமுறை  புகார் கொடுத்தும் தேர்தல் கமிஷன்  ஒரு ம .......... சரி வேணாம் விடுங்க.

நமது தேர்தல் கமிஷனரின் ஆசை நியாயமானதுதான். ஆனால் ஸ்பெக்ட்ரம், கலைஞர் காப்பிடு திட்டம், கலைஞர் கான்கிரிட் வீடுகட்டும்  திட்டம், 100 நாள் வேளை உறுதி  சட்டம் , அண்ணா மறுமலர்ச்சி திட்டம் , இலவச வண்ண தொலைகாட்சி திட்டம், தமிழகம் முழுவதும் நடந்த வளர்ச்சி பணிகள் போன்றவற்றில் கிடைத்த பணத்தை என்னதான் செய்வதாம். அதற்காவது அவர் ஒரு வழி சொல்ல  வேண்டாமா?  அரசாங்கம் என்னதான் வேட்பாளரின் செலவு உச்சவரம்பை நிர்ணயம் செய்தாலும் ஆளும் கட்சி செய்யும் அத்துமீரல்களை தேர்தல் கமிஷனால் எதுவும் செய்யமுடியாது என்பதுதான் நமது நாட்டின் வரலாறு. இருப்பினும் நமது கமிஷனர் ஆசை படுகிறார்.

செவ்வாய், 8 பிப்ரவரி, 2011

இஸ்ரோவில் ராக்கெட் (ஏ) ராசாக்கள்


ஒரு ஊருல ஒரு கொடுமைகார ராசா இருந்தானாம் (ஏ.ராசா இல்லிங்க) அவன் ஆட்சியில் நடந்த கொடும தாங்காம மக்கள் அவன் செத்தா தேவலாம்னு நெனச்சாங்கலாம். அப்படி இருக்கும் போது அந்த ராசா சாகும் நாள் செருங்கிச்சாம். அப்ப அந்த ராசா தன மகனை குப்பிட்டு "மவனே எனக்கு மக்கள் கிட்ட நல்ல பேர் இல்ல, அதனால நான் செத்தா எனக்கு நல்லபேர் வாங்கி தருகிற மாதிரி ஆட்சி செய்யிடா" அப்பிடின்னு சொல்லிட்டு செத்தானாம். அடுத்து ஆட்சிக்கு வந்த அவன் மகன் அவங்க அப்பனோட கொடுமையா ஆட்சி நடத்த துவங்கினான். அப்ப மக்கள் இவங்க அப்பன் இவனோட ரொம்ப நல்லவன் என பேச துவங்கிய கதையாக..... ஆ.ராசா கொள்ளை அநியாயம்னு பேசிய மக்களை இந்த இஸ்ரோ உழல் தொகைய கேட்டு மிரண்டு போயிருக்கிறார்கள்.
என்னதான் இஸ்ரோ உழல்
இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) தனது வணிகப் பிரிவான ஆன்ட்ரிக்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட், தனியார் நிறுவனமான தேவாஸ் மல்டிமீடியா என்ற நிறுவனத்துடன் 2005-ம் ஆண்டு செய்துகொண்டுள்ள அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான ஒப்பந்தம்தான் இப்போது புதிதாக ஆராயப்படும் முறைகேடு. இதன் மூலம் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டைவிட அதிகம். அதாவது, ரூ. 2 லட்சம் கோடி (ரூ.2,00,000,00,00,000).

இந்த ஒப்பந்தத்தின்படி, இஸ்ரோ தனது தொழில் பங்குதாரர் நிறுவனமாகிய தேவாஸ் மல்டிமீடியா பயன்பெறுவதற்கென்றே இரண்டு செயற்கைக்கோள்களை – ஜிசாட் 6, ஜிசாட் 6ஏ – விண்ணில் ஏவும். இதற்காக இஸ்ரோ ரூ.2,000 கோடி செலவிடும். இந்தக் கோள்களில் தேவாஸ் தனக்காக 70 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றை ஒதுக்கீட்டை எடுத்துக் கொள்ளும். 20 ஆண்டுகளுக்கு எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாமல் பயன்படுத்தும்.
இந்த ஒப்பந்தத்தால்  செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவதற்காக ரூ.174 கோடி தொகையை தேவாஸ் மல்டிமீடியா இஸ்ரோவுக்கு வழங்கும். செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டு செயல்பாட்டுக்கு வந்த பின்னர் அலைக்கற்றை வாடகையாக ரூ.1,150 கோடியை இந்நிறுவனம் இஸ்ரோவுக்கு வழங்கும்.

2,500 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றைத் திறன்கொண்ட இந்த செயற்கைக்கோள்களில் 70 மெகாஹெர்ட்ஸ் அளவுக்குப் பயன்படுத்தும். (ஒரு வினாடிக்கு ஒரு தகவல் அல்லது டேட்டா அனுப்புவதை ஒரு ஹெர்ட்ஸ் என்று சொன்னால், ஒரு மெகாஹெர்ட்ஸ் மூலம் ஒரு வினாடிக்கு 70 லட்சம் டேட்டாக்கள் அனுப்பும் திறன் ஆகும்). செயற்கைக்கோள் செயல்படத் தொடங்கியவுடன் தனது தொழிலை தேவாஸ் மல்டிமீடியா தொடங்கிவிடும். இதற்காக அந்நிறுவனம் ரூ.2,300 கோடி முதலீடு செய்யத் தயாராக உள்ளது. 

யாராடோ கம்பெனி இந்த தேவாஸ் மல்டி மீடியா
2004-ல் பெங்களூரில் தொடங்கப்பட்ட தேவாஸ் மல்டிமீடியா நிறுவனத்தின் தலைவராக இருக்கும் எம்.ஜி. சந்திரசேகர், இஸ்ரோவின் முன்னாள் அறிவியல் செயலர். இந்த நிறுவனத்தின் 17 விழுக்காடு பங்கினை, டாயிஷ் டெலிகாம் என்ற அயல்நாட்டு நிறுவனம் 75 மில்லியன் டாலர்கள் கொடுத்து வாங்கியுள்ளது. கொலம்பியா கேபிடல், டெலிகாம் வென்சர்ஸ் ஆகிய நிறுவனங்களும் இடம்பெற்றுள்ளன. இதில் இந்திய ஜாம்பவான்கள் யார் இருக்கிறார்கள் என்பது இனிமேல்தான் தெரியும்.

தேவாஸ் மல்டிமீடியாவுக்கு இப்போது இணையதள சேவை அளிப்பு உரிமம் மட்டுமே இருக்கிறது. அன்னிய முதலீடு மேம்பாட்டு வாரியத்தின் அனுமதியுடன் 74 விழுக்காடு அன்னிய நேரடி முதலீடு கொண்டுள்ள இந்நிறுவனம், செயற்கைக்கோள் மூலமாக புவிமிசை தனிநபர் கைப்பேசி தகவல் தொடர்புக்கு இனிமேல்தான் உரிமம் பெறவுள்ளது. இந்த அலைக்கற்றை ஒதுக்கீட்டை வேறு எந்த செயல்பாட்டுக்கெல்லாம் தேவாஸ் மல்டிமீடியா பயன்படுத்தும் என்பது குறித்து ஒப்பந்தம் தெளிவாக இல்லை. இதே அளவு ஒதுக்கீட்டில் முன்னர் தூர்தர்ஷன் தனது ஒளிபரப்பை இந்தியா முழுவதும் சென்றடைய பயன்படுத்தியது. இந்த அலைக்கற்றையில் மொபைல் போன் மற்றும் இன்டர்நெட் இணைப்புக்கான பிராட்பேண்டு சேவை அளிக்க முடியும். இதனால் எஸ்-பாண்ட் அலைக்கற்றை, 4ஜி (நான்காம் தலைமுறைக்கான தொழில்நுட்பம்) எனச் சொல்லப்படுகிறது.

அண்மையில், பாரத் சஞ்சார் நிகாம் லிட், மகாநகர் டெலிபோன் லிட் நிறுவனத்துக்கு 20 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டது. அப்போது அந்த அரசு நிறுவனங்கள் தலா ரூ.12,847 கோடி பணம் செலுத்தின. ஆனால் தனியார் நிறுவனமான தேவாஸ் மல்டி மீடியா வெறும் ரூ.1000 கோடியில் இந்த உரிமத்தைப் பெறுகிறது என்பது அதிர்ச்சித் தகவலாகும். இந்த 4ஜி தொழில்நுட்பத்துக்கான அலைக்கற்றை ஒதுக்கீட்டைப் பெற உலக அளவில் பல நிறுவனங்கள் போட்டி போடுகின்றன.

எழுந்துவரும் கேள்விகள்
ஏலம் நடத்தாமலேயே எஸ்-பாண்டு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஒதுக்கப்பட்டுள்ளதும்.  நிறுவனத்துக்குரிய (இஸ்ரோ) பாதுகாப்பு கட்டுப்பாடு முறைகள் கடைப்பிடிக்கப்படாததும்,  பிரதமர் அலுவலகம், அமைச்சரவை, விண்வெளி குழுமம் ஆகிய யாருக்குமே இந்த ஒப்பந்தம் பற்றிய விரிவான விவரங்கள் முறைப்படி தெரிவிக்கப்படாத்ததும், குறைத்து மதிப்பீடு செய்வதால் இஸ்ரோவுக்கு ஏற்படும் செலவுகள் உள்பட எதையும் தெரிவிக்கவிக்கபடாததும்  ஏன்?
ஒப்பந்தம் செய்துகொண்டவர் நலனுக்காக இரண்டு செயற்கைக்கோள்களை ஏவுவதற்கு மக்கள் பணம் செலவிடப்படுவதும், தேவாஸ் மல்டிமீடியாவின் நிபந்தனைகள், இதற்கு முன்னர் இஸ்ரோ செய்துகொண்ட வர்த்தக ஒப்பந்தங்களிலிருந்து விலகிச் சென்றுள்ளதும் ஏன்?

கேள்விகள் தொடர்கின்றன ஆனால் இந்த தேசத்தில் பொருப்பானவர்கலிடமிருந்து பதில்கள் மட்டும் எப்போதும் கிடைப்பதில்லை. நாட்டு முன்னேற்றத்திற்கு ராக்கெட்  விட சொன்னால் இவர்கள் மக்கள் பணத்தை புஸ்வானம் விடுவது சரியா?

வியாழன், 3 பிப்ரவரி, 2011

அமைச்சர் ராசா கைது - கலைஞர் டெல்லி பயணம் கொடுத்த பரிசு

 """""""""""""நாங்கல்லாம் மோசமானவங்கள்ளேயே முக்கியமானவங்க"""""""""""""""""""""""

எனவே பெரியோர்களே தாய்மார்களே........
2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் நாட்டுக்கு ரூ. 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுத்தியதாக மத்திய கணக்கு தணிக்கைக்குழு அறிக்கை அளித்தது. இதனை தொடர்ந்து எழுந்த எதிர்ப்பு அலைகளால் ராஜா, அமைச்சர் பதவியை கடந்த நவம்பர் 14ம் தேதியன்று ராஜினாமா செய்தார் என்பது தாங்கள் அறிந்த ஒன்றே.... இந்த சுழலில்    ராஜா வகித்து வந்த பதவி கபில் சிபலிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் ராஜா எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்ற சூழல் நிலவி வந்தது. அகில உலகமே எதிர்பார்த்த இந்த மகிழ்சியான உற்சாகமான காட்சி எதிர்பார்க்கப்பட்டது போல நேற்று நடந்துள்ளது
என்பதை
மகிழ்ச்சியோடு
தெரிவித்துக்கொள்கிறோம்............

இதனை தொடர்ந்து  வந்த செய்திகள்...
1 . முன்னாள் அமைச்சர் ராசா கைது செய்யப்பட்டது, திமுகவுடனான காங்கிரஸ் கூட்டணியைப் பாதிக்காது என்று காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.ஆனால் தொகுதிப் பங்கீட்டு விவகாரத்தில் திமுகவுக்கு நெருக்கடி தருவதற்காகவே ராசா மீதான நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக பரபரப்பாக முனுமுனுக்கப்படுகிறது.
2 .  ராசா கைது விவகாரம் குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜனார்த்தன் திவிவேதி "இது சட்ட நடவடிக்கையின் ஒரு பகுதி. அரசியல் சம்பந்தப்பட்டதல்ல. சட்டம் தனது கடமையை செய்யும் என்று ஆரம்பத்திலிருந்தே காங்கிரஸ் கூறி வருகிறது. இந்த நடவடிக்கையால் தமிழகத்தில் திமுகவுடன் காங்கிரஸ் வைத்துள்ள கூட்டணிக்கு எந்தப் பாதிப்பும் வராது என்றார்.
அதே போல இந்தக் கைதால் காங்கிரசுடனான உறவில் எந்தப் பிரச்சனையும் வராது என்று திமுக அறிவித்துள்ளது. (எவ்வுளோ அடிச்சாலும் தாங்குறான் இவன் ரொம்ப நல்லவன்னு சொன்னாங்களோ )
3 . ஸ்பெக்டரம் வழக்கில் ராஜா கைது செய்யப்பட்டுள்ளது குறித்து மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் கபில் சிபலிடம் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார். அவர் , அனைத்து கேள்விகளையும் சி.பி.ஐ.,யிடம் கேளுங்கள் எனவும் கூறியுள்ளார்.( அப்ப இந்த விவகாரத்தில் இழப்பு எதுவும் இல்லைன்னு சொன்னது சி.பி.ஐய கேட்டுதானா தலைவா )
4 . ஸ்பெக்ட்ரம்  முறைகேடு காரணமாக ராஜா கைது செய்யப்பட்டார். இதனை அறிந்த பெரம்பலூர் தி.மு.க., வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். படம் எடுக்கச் சென்ற நிருபர்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். ( அவர்கள்  அவரு சொந்தகாரங்களாம்)
5 . ஸ்பெக்ரம் முறைகேடு தொடர்பாக மாஜி மத்திய அமைச்சர் ராஜா கைது செய்யப்பட்டிருப்பதை அ.தி.மு.க., வினர் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகிறார்கள். திருநெல்வேலியில் அ.தி.மு.க., வினர் ராஜா கைதை வரவேற்கும் விதமாக பட்டாசு வெடித்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். (அம்மா கைதானப்ப உடன்பிறப்புகளுக்கு இந்த ஐடியா தெரியல பாத்திங்களா?)
6 .  ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் கைது செய்யப்பட்டுள்ள ராஜா, ராஜாவின் சகோதரர் கலியபெருமாள் மற்றும் தொலை தொடர்பு துறை மாஜி அதிகாரிகள் ஆர். கே.சந்தோலியா, பெஹீரியா ஆகியோர் இன்று  பாட்டியாலா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என சி.பி.ஐ., அறிவித்துள்ளது. மேலும் விசாரணையின் போது கிடைத்த தகவல் அடிப்படையில் ராஜா கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் சி.பி.ஐ., அறிவித்துள்ளது.
7 . "ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் ராஜா கைது மட்டும் போதாது. இந்த விவகாரத்திற்கு காரணமான முதல்வர் குடும்ப உறுப்பினர்களையும் கைது செய்ய வேண்டும்"அ. தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை. (எப்படி எப்படி !!!!)

கண்ணுக்குத் தெரியாத ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு நாட்டையே உலுக்கியது. நாட்டுக்கு பேரிழப்பை எற்படுத்திய 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு குறித்து பார்லிமெண்ட் கூட்டு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கூறி எதிர்கட்சிகள் ஏற்படுத்திய அமளியால், பார்லிமென்ட் குளிர் கால கூட்டத் தொடர் முற்றிலுமாக முடங்கியது. எதிர்ப்பு வலுக்கவே பதவியை ராஜினாமா செய்தார் ராஜா. இருப்பினும் தான் தவறு ஏதும் செய்யவில்லை என விளக்கங்களையும், பேட்டிகளையும் அளித்து வந்தார். முதல் முறையாக கடந்த டிசம்பர் 8ம் தேதியன்று ‌டில்லி மற்றும் சென்னை, பெரம்பலூரில் இருக்கும் ராஜாவின் வீடுகள், அவரது உறவினர்கள் வீடுகளில் ஒரே நேரத்தில் அதிரடியாக ரெய்டு நடத்தப்பட்டது. ராஜா தொலைதொடர்பு துறை அமைச்சராக இருந்தபோது அவரது தனிச்செயலர் ஆர்.கே. சண்டோலியா, மாஜி செயலர் சித்தார்த்த பெஹூரியா, தொலைதொடர்பு துறை உறுப்பினர் ஸ்ரீதர், துணை இயக்குநர் ஸ்ரீவஸ்தவா ஆகியோரது வீடுகளிலும் ரெய்டு நடைபெற்றது. 

அதன் பிறகு அவர் ராஜினாமா செய்தது முதல் நடந்த நாடகங்களை தாங்களே அறிவீர்கள். ஆனால் கலைஞர் டெல்லி சென்ற மறு தினத்தில் இந்த கைது நடந்திருப்பது காங்கிரஸ் விரும்பியபடி அவர்களுக்கு சட்டசபை தேர்தலில் இடங்கள் கிடைக்காததே காரணம் என  நமது "டெல்லி" வட்டாரங்கள் கூறுகிறது.  அல்லது நமது அரசியல் "வல்லுனர்கள்"கூறுகின்றனர்.

முன்னாள் தொலைதொடர்பு அதிகாரி ஏ. கே .ஸ்ரீவத்சவா, அக்கா நிரா ராடியா, ஹவாலா தரகர்கள் மகேஷ் ஜெயின், அலோக் ஜெயின், கிரின் ஹவுஸ் புரமோட்டர் சாதிக் பாஷா, அண்ணா  பல்கலைகழக ஏ.ராமசந்திரன் உள்ளிட்ட இன்னும் பலரின் கைதுகளை மக்கள் ஆவலுடன் எதிர்பாத்திருப்பதால் இன்னும் ஓரிரு தினங்களில் அவை நடக்கலாம் அல்லது காங்கிரஸ் திமுக சீட்டு பேரம்  அதற்குள் முடித்தால் நடக்காமலும் போகலாம் என்பதை பொதுமக்கள்  அறிக.

இருப்பினும் அரசியல் சாணக்கியர், இந்திய அரசியலின் சூத்திரதாரி, தென்னாட்டு அரசியல் வித்தகர் என்றெல்லாம் புகழ்ப்பட்டவரின் டெல்லி பயண பரிசாக இந்த கைது நடந்திருப்பதுதான் முதலாளித்துவ அரசியலின் கோரமுகம். நேர்மை இல்லாமல் முதுகில் குத்திக்கொண்டே முகத்தில் குறுநகை காட்டி மக்களை ஏமாற்றுவது முதலாளித்துவ அரசியலின் அடிப்படை. ஊழல்  அவர்களது உடன்பிறப்பு. இந்த முதலாளித்துவ அரசியலை விழத்தாமல் ஊழலை ஒழிப்பது சாத்தியமில்லை.