நடிகர் விஜய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நடிகர் விஜய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 4 அக்டோபர், 2025

அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும்

 



உயிரற்றுக் கிடந்த அந்தப் பிஞ்சுக் குழந்தையின் கன்னத்தைத் தடவிக்கொண்டிருந்தார் அந்தத் தாய். குழந்தையின் உதட்டையும் தனது கன்னத்தையும் மாறி மாறித் தொட்டுக் கொண்டிருந்தார். அவரால் பேச முடியவில்லை; இல்லை, அவரால் பேச முடியாது. அவர் ஒரு மாற்றுத்திறனாளி. தனது மாமியார் குழந்தையுடன் நடிகர் விஜய்யைக் காண சென்றபோது அவர் ஏதும் செய்ய இயலவில்லை. இப்போது “ஐயோ, என் பேரன் சாவுக்கு நானே காரணமாகிவிட்டேனே” என்று  அவரது மாமியார் கதறித் துடிக்கும்போது அவரால் ஏதும் செய்ய இயலவில்லை. 41 உயிர்கள், தன்னை அரசியல் கட்சியின் தலைவன் என நம்பும் ஒரு நடிகரின் அலட்சியத்தால் பலியாகியுள்ளன.

யார் காரணம்?

கரூரில் நடந்த கோரமான 41 உயிர்களின் ‘அரசியல் மரணங்கள்’ குறித்து நிறைய ஆதாரங்கள் வந்துகொண்டிருக்கின்றன. ஆனால் அவரது ரசிகர்கள் அல்லது அந்தப் போர்வையில் பலர் சமூக வலைத்தளங்களில் பதிவிடுவது மனிதத்தன்மையற்ற விவாதங்களை முன்வைக்கின்றது. “இந்தச் சம்ப வத்திற்கும் நடிகர் விஜய் அவர்களுக்கும் எந்தச் சம் பந்தமும் இல்லை” என்பன போன்ற விவாதங்களும், முழுக்க முழுக்க இது திமுக அரசின் அலட்சியப் போக்கு என ஒப்பாரி வைக்கின்றன.

பகல் 12 மணிக்கு விஜய் பேசுவதாக அதிகாரப்பூர்வ மாக அறிவிக்கப்பட்டிருந்தது. அன்று காலை 9 மணி முதலே மக்கள் சம்பவ இடத்தில் குவியத் தொடங்கினர். குடிநீர் வசதி, கழிப்பிட வசதி ஏற்பாடு ஏதும் இல்லை. இரவு 7 மணிக்கு மேல் விஜய்  வந்தார். வரும்போதே தன் பின்னால் ஆயிரக்கணக் கானோரை அழைத்து வந்தார்; இல்லை, இல்லை, இழுத்து வந்தார். ஆம், ஊரின் எல்லையில் அவர் வாகனத்தின் மீது ஏறித் தனது ரசிகர்களைச் சந்தித்திருந்தால் கூட்டம் இத்துணை முண்டியடித்து வந்திருக்காது. வாகனத்தில் உள்ளே விளக்குகளை அணைத்து இருட்டில் அமர்ந்து, கூட்டம் நடைபெறும் இடத்திற்கு அனைவரையும் இழுத்து வந்த கேவலம்தான் அடுத்த சம்பவங்களுக்குக் காரணம்.

ஒரே நேரத்தில் கூட்டம் அதிகமாகச் சேர்ந்து நெரிசல் ஏற்பட்டுச் சமாளிக்க முடியாமல் கூட்டத்தில் சிக்கித் தவித்த சோகத்தை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் சொல்லும்போது அந்த வெப்பம் நம்மைத் தாக்குகிறது. விஜய் பேசத் தொடங்கும் முன்னே நூற்றுக்கணக்கானோர் மயக்க நிலைக்குச்  சென்றனர். பலர் மரணத்தைத் தழுவினர். இறந்தவர்கள் உடலுடன் தொண்டர்கள் ஆம்புலன்ஸை நோக்கி ஓடும் காணொலிகள் நெஞ்சை அடைக்கச் செய்கின்றன.

காலை முதல் இரவு வரை உணவு மற்றும் குடிநீர் இல்லாமல் நெடுநேரம் காத்திருந்ததே இக்கொடூரச் சம்பவத்திற்கு முக்கியமான காரணமாக, மரணத்தின் அருகில் சென்று பிழைத்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

திட்டமிட்ட தாமதம்:

மரங்கள் உடைந்து, கூரைகள் பிய்ந்து, கடைகள் நொறுங்கி, சாலையோர வியாபாரிகளின் எளிய விற்பனைப் பொருட்கள் நொறுங்கி, வீட்டின் உரிமையாளர்கள் கதறும் சம்பவங்கள் பெரம்பலூர், அரியலூர்,  நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் நடந்துள்ளன. உண்மையில் விஜய்யின் பயணத் திட்டப்படி செப்டம்பர் 27 அன்று திருவள்ளூர் மற்றும் வடசென்னை ஆகிய இடங்கள்தான் அவர் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும். ஆனால் எதற்காக அந்தத் தேதிகளில் நாமக்கல்லும் கரூரும் தேர்ந்தெடுக்கப் பட்டன? 25ஆம் தேதி எடப்பாடியின் பிரச்சாரம் முடிந்த சூழலில், முழுக்க முழுக்கத் தனது பலத்தைக் காட்ட வேண்டும் என்ற ஈகோ மட்டுமே காரணம். கரூருக்கும் முன் நாமக்கல்லில் மரணங்கள் நிகழ அதிக வாய்ப்பிருந்ததைப் பல காணொலிகள் இப்போது வெளியாகி வருகின்றன.

தனது கட்சியினர் () ரசிகர் கூட்டத்தினர் பலர் இதற்கு முன்னர் விபத்தில் மரணமடைந்துள்ளனர். ஆனால் அவர்களுக்காக அக்கட்சியின் கொடி இறங்கியதே இல்லை. ஒரே நேரத்தில் 41 பேர் மரணமடைந்தும்கூட அந்தக் கொடி இறங்க மறுக்கிறது. அதைவிடக் கொடுமை, அவர்கள் தலைமை அலுவலகம் ஆயுத பூஜை கொண்டாடுவதுதான்.

அவர் இல்லை என்றாலும் அவரது கட்சிக் கொடிக் கம்பம்கூடப் பலி கேட்கும். கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த 27ஆம் தேதி நடைபெற்ற த.வெ.க பிரச்சா ரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு 38 நாட்களுக்கு முன்பு, அதாவது  ஆகஸ்ட் 19 அன்று விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப் புத்தூர் அருகில் உள்ள வன்னியம்பட்டியில்  பட்டதாரியான கே.காளீஸ்வரன் என்ற மாணவர் த.வெ.க கொடி கட்டும் முயற்சியில் மின்சாரம் தாக்கி அநியாயமாகத் துடிக்கத் துடிக்க உயிரிழந்தார். இந்த மரணம் குறித்த எந்த விதமான அசைவும் விஜய்யிடம் கிடையாது.

வாய் பிளந்து நிற்கும் பாஜக:

அதிமுக, பாஜக இரண்டும் கிடைக்கும் வாய்ப்பை நழுவ விடுமா என்ன? மணிப்பூர் கொடுமை நிகழ்ந்து 2 ஆண்டு கடந்தாலும் அப்பக்கம் முகத்தைத் திருப்பப் பாஜகவால் முடியாது. அங்கு நடந்த நூற்றுக்கணக்கான துயர மரணங்கள் குறித்து ஒரு குழு அமைத்து விசாரணை செய்ய இயலாது. ஆனால் சம்பவம் நடந்த ஓரிரு நாட்களில் தில்லியிலிருந்து விசாரணைக்குழு கரூர் வந்து நாடகம் ஆடுகிறது. ‘பாசிச பாஜக’ எனப் பேசும் நடிகர் விஜய்க்குக் கடந்த மார்ச் மாதம் முதல் மத்திய அரசின் ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, துப்பாக்கி ஏந்திய 8 முதல் 11 பேர் வரையிலான போலீசார் மற்றும் கமாண்டோக்கள் அவரது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இப்போது அவர்களிடம் விஜய் பாதுகாப்பில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என அறிக்கை கேட்டுள்ளது ஒன்றிய அரசு.

ஏற்கெனவே அதிமுகவை விழுங்கியுள்ள பாஜக, இந்த மரணங்களை முன்வைத்து விஜய்யை விழுங்கத் தொடங்கியுள்ளது. தமிழக அரசின் ஒற்றில் அல்லது முன் அனுமானத்தில் அல்லது அரசின் பாதுகாப்பில் இருக்கும் முரண்களை ஆதாரத்துடன் சுட்டாமல், மொத்தச் சம்பவத்திற்கும் திமுக அரசுதான் காரணம் என எடப்பாடி கூவி வருவது அவரது தில்லி தலைமை இடும் கட்டளை என்பதைத் தமிழக மக்கள் அறிந்தே இருக்கின்றனர். பாவம், அவர் என்ன செய்வார்?

ஓடி ஒளிந்த விஜய் கூட்டம்:

மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளுக்காக, அரசியல் பிரச்சனைகளுக்காக, பொருளாதாரப் பிரச்சனைகளுக்காக எப்போதும் போராடிப் பழக்கமற்ற கூட்டம் இது. காவல்துறையின் நெருக்கடிகளுக்கோ, அவசர சூழலில் செயல்படும் பாங்கோ தெரியாத கூட்டம் இது. விஜய் என்ற ஒற்றைப் பிம்பத்தை ஆராதிக்கும் அரசியலற்ற திரள் இது. இந்தக் கூட்டத்தைப் பயன்படுத்தி அதிகாரத்தைக் கைப்பற்றத் துடிக்கும் மேட்டிமை ஆலோசனைக் குழுவுடன் கார்ப்பரேட் அரசியல் செய்யும் கலாச்சாரத்தை விஜய் தொடங்கியுள்ளார்.

அதன் விளைவுதான் மரணங்கள் நிகழ்ந்ததும் விஜய் கட்சியின் மொத்தத் தலைமையும் ஓடி ஒளிந்தது. தன்னைக் காண வந்த ரசிகனின் மரணங்கள் அவர்களை உலுக்கவில்லை. மரணமடைந்த குடும்பங்களுடன் இணைந்து நிற்க வேண்டும் என்ற அற உணர்வு சிறிதும் இல்லாமல் தலைமறைவானார். இரண்டு தினங்கள் கடந்து, கொஞ்சமும் வெட்கமின்றி தமிழக அரசுக்கு எதிராக ஒரு வீடியோவை விஜய்யால் வெளியிட முடிகிறது. மாதம் ஒரு கட்சி மாறும் ஆதவ் அர்ஜுனால் அரசுக்கு எதிராகப் ‘புரட்சி’ உருவாக வேண்டும் எனப் பதிவிட முடிகிறது. தங்களின் குற்றம் இன்னும் இவர்களுக்கு உறைக்கவே இல்லை.

ஒன்று மட்டும் உண்மை: “அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும்.” அரசியலில் வெற்றி பெற்ற ஒருவர், அறத்தை (நீதி, தர்மம்) பின்பற்றாமல், தன்னலம், மோசடி, சுரண்டல், பொய்ச் செயல்கள் செய்து வந்தால், அது அவருக்கே எதிராக மாறி, அவரை அழிக்கும் என்பதே இதன் பொருள்.

- எஸ்.ஜி.ரமேஷ்பாபு

மாநிலக்குழு உறுப்பினர், சிபி()எம்

(04.10.2025 தீக்கதிர் நாளிதழில் வெளிவந்துள்ள கட்டுரை)


வெள்ளி, 1 நவம்பர், 2024

அல்வாவிற்கு பதிலாக பாயாசமா : விஜய் அண்ணனுக்கு ஒரு கடிதம்!

 


த.வெ.க தலைவர் அண்ணன் விஜய் அவர்களுக்கு!

அன்பு நிறைந்த வணக்கம்.

          வயதாகி அரசியலுக்கு வந்த நடிகர்கள், தன் படங்களின் வெளியீட்டின் போதெல்லாம் அரசியலுக்கு வருவேன் என பூச்சி காட்டி, தள்ளாத வயதானதும் அரசியலுக்கு வரவில்லை என அறிவித்த நடிகர், அரசியலுக்கு வந்தும் குழப்பாய் அலையும் நடிகர்களுக்கு மத்தியில் ஒப்பீட்டளவில் இளம் வயதில், புகழின் உச்சத்தில் இருக்கும் போது அரசியல் கட்சியை துவக்கிய உங்களுக்கு முதலில் வாழ்த்துக்கள்!

          'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று சொன்னபோதே நாம் நம் எதிரியை முடிவுசெய்துவிட்டோம். நாட்டைப் பாழ்படுத்தும் பிளவுவாத அரசியல் செய்வோர்தான் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை ரீதியான முதல் எதிரி, ”திராவிட மாடல் ஆட்சி என்று பெரியார், அண்ணா பெயரை வைத்து தமிழ்நாட்டைச் சுரண்டிக் கொள்ளையடிக்கும் ஒரு குடும்ப சுயநலக் கூட்டம்தான் அடுத்த எதிரி” என்ற வார்த்தைகளும்.

          ”கொள்கை கோட்பாட்டளவில் திராவிடம், தமிழ் தேசியம் ஆகிய இரண்டும் நமது இரண்டு கண்கள், நம்மோடு கூட்டணி வைப்பவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கீடு” என நீங்கள் விடுத்த அழைப்பும், அதிகாரப் பகிர்வு, சாதிவாரி கணக்கெடுப்பு ஆதரவு,  சாதி, மதம், இனம், மொழி, பாலினம், பணம் என்று பிரிக்கும் பிளவுவாத அரசியலையும், ஊழல் மலிந்த அரசியல் கலாசாரத்தையும் எதிர்ப்பது என்று சிறப்பாக பேசினீர்கள். வாழ்த்துக்கள்.

          ஆனால் உங்கள் குழுப்பம் எங்கு துவங்கியது? “ஒரு கூட்டம் யார் அரசியலுக்கு வந்தாலும் அவர்கள் மீது குறிப்பிட்ட ‘கலரைப்’ பூசி, ‘ஃபாசிசம்’ என்று பேசிக்கொண்டு, சிறுபான்மை, பெரும்பான்மை பயத்தைக் காட்டுகிறார்கள்” என்பதில்தான் துவங்கியது.

          திருமலை படத்தில் வாழ்க்கை ஒரு வட்டம்டா எனும் போதும், போக்கிரி படத்தில் கஞ்சா பிடிக்க போலிஸ் வரும் கைப்பந்தாட்ட காட்சியிலும், பிகில் படத்தில் ”பிகிலு கப்பு முக்கியம் பிகிலு” என அப்பா விஜய் சொல்லும் போது மகனாக நீங்கள் தோன்றும் காட்சியிலும், சர்கார் படத்தில் பழ.கருப்பையாவை மேடையில் வைத்துக்கொண்டு பேசும் காட்சியிலும் இருந்த அந்த அபாரமான நடிப்பாற்றலை விக்கிரவாண்டி மேடையிலும் கண்டு உங்கள் ரசிகர்களை போல நானும் பிரமித்தேன்.

          அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் “திமுகவுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி முதல் நிலையில் நின்று போராடிக் கொண்டிருக்கிறார். எங்கள் போராட்டக் களத்தின் மறு வடிவமாகத்தான் தவெக மாநாட்டை பார்க்கிறோம். எங்களின் எண்ணங்கள் ஒன்றாக இருக்கின்றன. எங்களுடைய எதிரிகள் ஒன்றாக இருக்கிறார்கள்”என்று சொன்னது கொஞ்சம் குழப்பமாகதான் இருக்கிறது. எனெனில் நீங்கள் திமுக மட்டுமே ஊழல் கட்சி என குறிப்பிட்டது, அவரை உற்சாகபடுத்தி இருக்கக்கூடும்.

          நேற்று வரை என் தம்பி விஜய் என் அரசியலைத்தான் பேசுகிறார் என வழக்கம்போல உளறிக்கொட்டிக்கொண்டிருக்கும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ”திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்று இல்லை. அது இரண்டும் கண்களாக இருக்க முடியாது, கொடிய புண்ணாகத்தான் இருக்கும்” என்று பொரிந்து தள்ளி இருப்பதும் கவனத்தில் கொள்ளதக்கதுதான். அது இருக்கட்டும்,

          மாநாடு நடைபெறும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்-அவுட்கள் குறித்து சமூக ஊடகங்களிலும் அரசியல் அரங்கிலும் பரவலாக விவாதிக்கப்படுகிறது. ஒருபுறம் வேலுநாச்சியார், காமராஜர், பெரியார், மறுபுறம் அம்பேத்கர், சுதந்திர போராட்டர் வீரர் அஞ்சலை அம்மாள் ஆகியோருக்கு நடுவே நீங்கள் நிற்பது போன்று கட்-அவுட் அமைக்கப்பட்டுள்ளது. அண்ணா, இந்தா கட் அவுட்டுகளுக்கு பின்னால் இருக்கும் சாதிய கணக்கீடு தெரியாத அப்பாவிகள் அல்ல தமிழக மக்கள்!

          அதுவல்லாமல், ஜனநாயகத்தில் மன்னர்களுக்கு எந்த வேலையும் இல்லை, ஆனாலும் சேர, சோழர், பாண்டிய மன்னர்களுக்கும் கட் - அவுட் வைத்தது அபத்ததின் உச்சத்தை தொட்டுள்ளீர்கள்! இருக்கட்டும் உங்களுக்கு உள்ள குழப்பத்தை எப்படியும் பேசி தீர்கலாம்.

          ஆனால் உங்கள் மாநாடு உரையில் நீங்கள் திட்டமிட்டு தவிர்த்த மூன்று  பிரச்சினையின் தீவிரத்தை சுட்டிகாட்ட விரும்புகிறேன்.

1.  உங்கள் உரையில் எங்கும்  இந்திய நாட்டை சுரண்டி கொழுக்கும் கார்ப்ரேட் சக்திகள் குறித்த வார்த்தைகளை தப்பி தவறியும் சொல்லவில்லை.  கத்தி படம் முழுக்க முழுக்க விவசாயத்தில் கார்ப்ரேட் கம்பெனிகள் அடிக்கும் கொள்ளையை பற்றி வசனங்களுக்கு வாய் அசைத்தது நீங்கள்தான். ஆனால் உழைப்பாளி மக்களின் சொத்துக்களையெல்லாம் கார்ப்ரேட் கம்பெனிகளுக்கு தாரைவார்க்கும் அரசியலை நீங்கள் தொடவே இல்லை.  நூறு நாள் வேலைக்கு  இரண்டு லட்சம் கோடியை வெட்டி சுருக்கிய ஒன்றிய பிஜேபி அரசு, அதானிகளுக்கும் அம்பானிகளுக்கும் பல லட்சம் கோடிகளை வரி சலுகையாக வழகுவது உங்களுக்கு பெரிய பிரச்சினையாக தெரியவில்லை போலும்.

2. ஊழலுக்கு எதிராக சிலம்பாட்டம் ஆட தயார் என அறிவித்த நீங்கள் ஊழல் வழக்கால் தண்டனை பெற்ற ஒரு கட்சி குறித்து எதுவும் பேசாததும், தேர்தல் பத்திரங்கள் மூலம் கோடி கோடியாய் வாரி சுருட்டியவர்களையும், கொடுமையான கொரோனா நோய் தொற்று காலத்தில் பி.எம் கேர்ஸ் மூலம் பல்லாயிரம் கோடி கொள்ளை அடித்தவர்கள் குறித்தும் வாய் திறக்காததும் உங்கள் ஊழல் எதிர்ப்பை பல் இளிக்க வைக்கிறது என்பதை புரிந்து கொள்வீர்களா?

3. இறுதியாக பாசிசம் குறித்த உங்கள் பேச்சு எத்தனை புரிதல் அற்றது என்பதை அறிவீர்களா? பாசிசம் என்பது மதத்தின் பெயரால், சாதியின் பெயரால், இனத்தின் பெயாரால் அல்லது ஏதோ ஒரு அடையாளத்தின் பெயரால் எதிரிகளை கட்டமைத்து அவர்களை வெறுத்தொதுக்குவது. அரசிலை அதிகாரத்திற்காக படுகொலைகளை செய்வது. சிறுபான்மையினரை குறிவைத்து அழிப்பது. இந்த அம்சங்கள் அனைத்து பொருந்துகிற பாசிச பாஜக குறித்து ஒரு வார்த்தைகூட பேசாமல் உங்களால் ஒரு மாநாடு நடத்த முடியும் என்றால், தமிழக மக்களுக்கு அல்வாவுக்கு பாயாசம் கொடுப்பது நீங்கள்தான் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்! 

          இதுவரை தமிழக மக்களுக்கு பல கட்சிகள் அல்வா கொடுத்தனர், புதிதாக நீங்கள் பயாசம் கொடுக்க கிளம்பி உள்ளீர்கள் என்பதை தவிர வேறென்ன உங்களிடம்  வித்தியாசம் உள்ளது. சமதர்மம் என்பது வார்த்தைகளில் இல்லை அண்ணா, அது கொள்கையின் வெளிபாடு. உங்கள் கொள்கை பிரகடனம் வெற்று வார்த்தைகளாய் காற்றில் கரையாமல் இருக்க வேண்டுமெனில் சமூகத்தின் உண்மையாக பிரச்சினைகளை கண் கொண்டு பாருங்கள்! நன்றி!

அன்புடன்

எஸ்.ஜி.ரமேஷ்பாபு