2015 மழை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
2015 மழை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 9 ஜனவரி, 2016

பெருநிறுவனங்கள் உருவாக்கிய செயற்கை வெள்ளம்




ஒரு தலைமுறை காணாத அடைமழை கடந்த நவம்பர் எட்டாம் தேதி துவங்கி பெருமழையாய் உருகொண்டு நின்றது. மாதம் முழுவதும் மழை. மெல்ல மெல்ல மக்கள் இயல்பு வாழ்க்கையை முடக்கியது. மிக எளிதாக பல்லாயிரம் ஆண்டுகளாய் கடலோடு கலந்த மழையின் பாதை எங்கும் அடைபட்டுக் கிடந்தன. நிலங்களில் தவழந்ததண்ணீர் மனிதன் செய்த தவறுகளை பயன்படுத்திக்கொண்டது. தன் வழக்கமான வழிதடம் தேடி அலைந்த மழை நீர், அடைக்கப்பட்ட கட்டமைப்புகளால் வெள்ளமென திரண்டது. உயர்ந்து நின்றவீடுகளுக்குள் புகுந்தது. புலம் பெயர்ந்து, பெருநகர் அடைந்து, உச்சமென உழைத்து, அலைந்தலைந்து கிளையின் மீது சேர்த்த தேனடை சேமிப்பு உரு குலைந்தது. இருபதாண்டுகால மனித உழைப்பு நாசமானது, இரு பத்தாண்டு சேமிப்பை 20 நொடிகளில் கவர்ந்து சென்றது மழை. மாநகர் மனிதர்கள் பித்தாகி நின்றனர். இருண்டகாலம் அனுபவமாய் மாறியது.

கழிக்க, குளிக்க, குடிக்க என எல்லாவற்றிற்கும் கழிவு நீரை முதலில் கண்டதுஇப்போதுதான். மெல்லிய புன்னகையுடன் வெள்ளம் நின்று ரசித்தது. “வரப்புயர” என அவ்வை பாட்டிச் சொன்னதை மாமன்னர்களும், மகாராணிகளும் தவறாக புரிந்துக்கொண்டதன் விளைவு இது. நிலங்களில் கரையான வரப்பு உயர்ந்தால் நீர் உயரும், நீர் உயர்ந்தால் நெல் உயரும். ஆனால் தங்கள் வரப்புகளை உயர்த்த நீர் வரப்புகளை கட்டிடங்களாய் மாற்றினர். வரப்புயர்ந்தது. அதனால்நீர் உயர்ந்தது. உயர்ந்த நீர் எங்கே செல்லும்? எளிதான மழைநீரின் கணக்கிது. எனினும் கோபப்படுகிறோம். நாசமாய் போன வெள்ளம் என சபிக்கின்றோம். நன்று! 

எப்படியாகினும் இந்த பெரு மழையும், வெள்ளமும் பல கதவுகளை திறந்துவைத்துள்ளது. அதில் ஒன்று ஆக்கிரமிப்புகளை அகற்றுவது. ஆக்கிரமிப்புகள் எனில் உடனடியாக குடிசைகளை அகற்றுவது என்ற சித்திரம்தான் எல்லோருக்கும் தோன்றுகிறது. அந்த கொடூர அரசியல் குறித்து பின்பு விவாதிக்கலாம், இப்போது பெருநிறுவனங்களின் ஆக்கிர மிப்பையும் அவர்களது மனித நேயத்தையும் விவாதிக்கலாம். பன்னாட்டு நிறுவனங்களும், பெருமுதலாளிகளும், கணினி துறைகளும்கூட தூய்மை பணிகளில் ஈடுபட்டுள்ளனர் என நமது நண்பர்கள் மகிழ்ச்சியாக பேசித்திரிகின்றனர். உண்மை அதுவா? பன்னாட்டு நிறுவனங்களும், கணினிதுறை முதலாளிகளும் எங்கு தூய்மை செய்கின்றனர்? அதிகமாக அவர்களது அலுவலகங்கள் எதிரில்தான். அதற்கும் விளம்பரம் அவர்களுக்கு! ஆனால் இவைகளில் பணியாற்றும் இளைஞர்கள் இவர்களை போல அல்ல. தவித்த மக்களுக்காக பொருட்களை அள்ளிக்குவித்து,

கரடு முரடாண பாதைகளில் பயணித்து வந்தனர். உண்மையான அக்கரையுடன் மக்களுக்கு நிவாரணங்களை வழங்கினர். ஆனால் பெருமுதலாளிகள் செய்தது என்ன? கடலூர் மாவட்ட அனுபவம் பார்ப்போம். கடலூர் மாவட்ட கடற்கரையோரம் தனது கட்டுமானப் பணிகளை செய்து வரும் அனல்மின்நிலையம் ஒரு மாதம்வேலைவாய்ப்பு இல்லாமல் முடங்கிக் கிடந்த மக்களுக்கு செய்தது என்ன? சைமாசாயக்கழிவு ஆலை என்ன செய்தது? இந்த ஒரு நிறுவனங்களும் மக்களின் வாழ்க்கையை அழித்ததுதான் அதிகம். கடலூர் கடைமடை பாசன பகுதியாகும். எவ்வளவு மழை பொழிந்தாலும் வெள்ளம் சூழும் நிலை அரிதுதான்.

வெள்ளாறு, பரவனாறு, பெண்ணையாறு, கெடிலம் ஆறு, மணிமுத்தாறு, உப்பனாறு, வட வாறு என்ற ஆறுகளும் இவைகளில் பிரியும் ஏரிகளும் உண்டு. 18 கிலோ மீட்டர் நீளம் 5 கிலோ மீட்டர் அகலம் கொண்ட வீராணம் ஏரி, பிருமாண்டமான பெருமால் ஏரி, வெல்லிங்டன் ஏரி, கொத்தவாச்சேரி ஏரி, பக்கிம்காம் கால்வாய், கான்சாகிப் வாய்க்கால், பாசிமுத்தன் ஓடை, 450க்கும் மேற்பட்ட ஏரிகளும், பெரிய குளங்களும் இருந்த மாவட்டம் இது. எவ்வளவு மழை பொழிந்தாலும் தண்ணீர் கடலோடு ஓடி அடையும் நில அமைப்புக்கொண்டது. ஆனால் கடலூர் மாவட்டத்தின் கடற்கரையோரம் மெல்ல மெல்ல பெரும் நிறுவனங்கள் ஆக்கிரமிக்கத் துவங்கின. கடலூர் முதுநகரின் அருகில் துவங்கிய சிப்காட் மெல்ல மெல்ல சிதம்பரம் நோக்கி விஸ்தரித்து செல்கிறது.

சிப்காட் 2, சிப்காட் 3 என விரிவாக்கம் அடைந்துக்கொண்டு இருக்கிறது. கடலூரிலிருந்து 25 கிலோ மீட்டருக்கு அப்பால் சிப்காட் 3 என்ற பகுதி சைமா சாயக்கழிவு அலைகளை தற்போது சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு அமைத்துக்கொண்டு இருக்கிறது. இடையில் நாகார்ஜூனா எண் ணெய் சுத்திகரிப்பு ஆலை 1200 ஏக்கர்நிலங்களை கடற்கரையோரம் கையகப் படுத்தி வேலைகளை செய்து வருகிறது. பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் ஐ.எல்.எப்.எஸ் என்ற அனல் மின்நிலையம் சுமார் 1400 ஏக்கர் நிலங்களை வலைத்து தனது மின் உற்பத்தியை துவங்கி உள்ளது.

இவர்கள் கடற்கரையோரம் செய்த கட்டுமானப் பணிகள் உருவாக்கிய விளைவுகள் என்ன? சைமா சாயக்கழிவு நிறுவனங்கள் கட்டுமான பணிகளை மேற்கொண்டுள்ள பகுதியில் தரை மட்டத்தை இயற்கையாய் உள்ளதைவிட மூன்று அடி உயர்த்திவிட்டனர். 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு காம்பவுண்ட் சுவர் எழுப்பி விட்டனர். அதிலும் குறிப்பாக பெரியபட்டு, ஆண்டார்முள்ளிபள்ளம், தச்சமபாளையம், வாண்டியாம் பள்ளம், சின்னாண்டிகுழி, பெரியாண்டிகுழி, மடவாபள்ளம், சாமியார்பேட்டை உள்ளிட்ட பல கிராமங்களில் உள்ள நான் காயிரம் ஏக்கர் நிலங்களின் வடிகால் வாய்க் காலை உள்ளே வைத்து காம்பவுண்டு சுவரை அடைத்துவிட்டனர். இதன் விளைவாக அப்பகுதியில் இருந்த நெற்பயிர்கள் மொத்தமாய் மூழ்கின, சவுக்கை நாற்று மொத்தமாய் கருகியது, காய்கறிகள் அழிந்தன. ஆனால் இந்த நிறுவனம் எந்த கவலையும் கொள்ளவில்லை.

சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் அவர்களுடன் நாங்கள் சென்று பார்வையிட்ட அன்றைய மாலையே சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு மக்கள் நலக் கூட்டியக்கம் சார்பில் போராட்டத்தை துவக்கியதன் விளைவு உடனடியாக நிறுவன சுவர் உடைக்கப் பட்டு, வாய்க்கால்களை வெட்டும் பணிதுவக்கப்பட்டது. அடுத்த இரண்டுநாள் கிட்டதட்ட 3 கிலோ மீட்டர் வாய்க்கால்கள் வெட்டப்பட்டு அங்கு தேங்கிய தண்ணீர் பக்கிம்காம் கால்வாயில் கலக்கப்பட்டது. அதனால் சில ஆயிரம் ஏக்கர் நிலங்களில் உள்ள பயிர்கள் பாதுகாக்கப்பட்டது. ஆனால் அப்பகுதியில் உள்ள சவுக்கை நாற்று விவசாயிகளில் எட்டுமாத உழைப்பு கருகிப்போனது. மற்றொரு பக்கம் ஐ.எல்.எப்.எஸ் என்றஅனல் மின்நிலையம் புதுசத்திரம் ரயில் நிலையத்திலிருந்து கரிகுப்பத்தில் உள்ளதனது நிறுவனத்துள் நிலக்கரியை கொண்டு செல்ல ஒரு புதிய வழித் தடத்தை போட்டது. நிலத்திலிருந்து சுமார் 7 அடி உயரம் கொண்ட இரும்பு ரயில்பாதை சுமார் 6 கிலோமீட்டர் செல்கிறது. இப்பாதை பல கிராமங்களில் வடிகால் வழித்தடத்தை மொத்தமாய் அடைத்துச் செல்கிறது. ஒரு இடத்தில் மட்டும் சிறு குழாய்கள் அமைத்து வடிகால் எற்படுத்தி உள்ளனர். இந்த பெருமழை உருவாக்கிய வெள்ளம் அவ்வழியாக செல்லபல நாட்கள் ஆனது. அதற்கும் ஆயிரக் கணக்கான ஏக்கர் நிலங்களில் உள்ள பயிர்கள் அழிந்தன. ஆனால் 15 ஆயிரம் கோடி முதலீட்டில் துவங்கப்பட்டுள்ள இந்த நிறுவனத்தினர் இது குறித்து கொஞ்சமும் கவலை கொள்ளவில்லை. தொடர்ந்து வரும் நிறுவனங்களால், சமவெளியில் ஓடிவருகிற மழைநீர் நிலங்களை கடந்து கடலில் கலக்கும் இயற்கைசமன்பாட்டை தொலைத்த கடற்கரையோரமாக கடலூர் மாறியுள்ளது. 

யாருமே எதிர்பாராத இந்த தொடர் மழையும் அது உருவாக்கிய வெள்ளமும் சுமார் ஒன்றரை மாதம் மக்கள் வாழ்க்கை யை முடக்கி போட்டது. எவ்வித வேலைவாய்ப்பும் இல்லாமல் மக்கள் பசியுடன் வீட்டில் முடங்கிக்கிடந்தனர். இயற்கை யுடன் இணைந்து இந்த நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட செயற்கையான வெள்ளமும் கடலூர் மாவட்ட மக்களை அவதிக்குள்ளாக்கியது. பாதிக்கப்பட்ட பல்லாயிரம் மக்களுக்கு பல்லாயிரம் கோடிமுதலீட்டில் உருவாகியுள்ள இந்த நிறு வனங்கள் என்ன செய்தன? இவர்களின் மனித நேயம் என்ன? ஏற்கனவே உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்காத இந்த நிறுவனங்கள், அப்படியென்ன இவர்கள் மீது அக்கறை கொள்ள போகின்றன! மூன்று அடியில் நீர் கிடைக்கும் கடற்கரையை நாசப்படுத்தியவர்கள் இவர்கள், விவசாய விளை நிலங்கள் நெற்பயிரை இழந்து உள்ளது. ஒரு பட்டத்திற்கு சவுக்கு விவசாயத்தில் 4000 ரூபாயும், தைலம் வளர்ப்பில் 6000 ரூபாயும் பெற்றவர்கள் வாழ்க்கைநாசமாகியுள்ள சூழலில் இந்த நிறுவனங்கள் இரண்டு மூன்று கிராமங்களுக்கு மட்டும் ஓரிரு கிலோ அரிசியும், ஒருபோர்வையும் கொடுத்து தங்கள் கடமை யை முடித்துக்கொண்டன. எந்த மக்கள் கூலி வேலை செய்து பிழைத்தார்களோ அந்த நிலங்களை பிடுங்கிக்கொண்டு, அவர்களுக்கு அங்கு வேலைவாய்ப்பும் தராத இந்த நிறுவனங்கள், மழை வெள்ளத்தால் உருகுலைந்த இப்பகுதி மக்களுக்கு ஒருமாதகால உணவு தேவையை பூர்த்தி செய்திருக்கலாம். அப்படி செய்தால்கூட அவர்கள் நிறுவனத்திற்கு காம்பவுண்ட் சுவர் எழுப்ப பள்ளம் தோண்டிய பணத்தில்பத்தில் ஒரு பங்குதான் செலவாகி இருக்கும்.

ஆனால் வெள்ள நிவாரணப் பணிகளில் அதிகாரிகள் புடைசூழ மாவட்டத்தின் அனைத்து சாலைகளிலும் குறுக்கும் நெடுக்குமாக சென்ற அமைச்சர்கள் கண்களுக்கு இப்பகுதி மக்கள் பிரச்சனை எட்டாதது அதிசயம்தான். எப்போதும் போல இப்போதும் பெருநிறுவனங்களுக்கு எதிராக எதையும் செய்யாமல் அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது. முதலாளித்துவம் எப்போதும் எளிய மக்கள்வாழ்க்கையை கண்கொண்டு பார்த்த தில்லை பார்க்கப்போவதும் இல்லை. அதற்கு இந்த பெருமழையில் உருவான இந்த செயற்கை வெள்ளமே ஒரு சாட்சி.

09.01.2016 அன்று தீக்கதிர் நாளிதழில் வெளியான எனது கட்டுரை

செவ்வாய், 1 டிசம்பர், 2015

மரணம் மீண்டும் நினைவூட்டுகிறது...


நடுங்கித்தான் போனேன்.. எட்டு மாத பிஞ்சுக் குழந்தையின் உயிரற்ற உடலை “அய்யோ தோழரே குழந்தைய பாருங்க” என என் கைகளில் வைத்த போது. பரங்கிப்பேட்டை அகரம் தலித் குடியிருப்பு தோழர்கள் சூழ்ந்து நிற்க, அந்த குழந்தையின் பெற்றோர்களுக்கு என்ன பதில் சொல்வது என தெரியாமல் தவித்து நின்ற தருணம் அது. பிஞ்சுக் குழந்தை தூங்குவது போல என் கைகளில். அந்த களங்கமற்ற முகம் இப்போதும் கண்களில் நிழலாடிக்கொண்டே இருக்கிறது. சுனாமியில் பிணங்களை சுமந்த அனுபவம் உண்டு எனினும் இது வேறு கொடூரம். குடியிருப்புகளைச் சுற்றித் தேங்கி நின்ற தண்ணீரில் தவழ்ந்து விழுந்து மூழ்கி இறந்த இரண்டாவது குழந்தையின் உடல் இது. அக்குழந்தையின் வீட்டை பார்வையிட்டபோது அங்கு தண்ணீரோடு வறுமையும் சூழ்ந்திருந்தது தெரிந்தது. அதற்கு முதல் நாள்தான் கரிகுப்பம் இருளர் குடியிருப்பில் தேங்கி நின்ற தண்ணீரில் 3 வயது குழந்தை மூழ்கி இறந்து கிடந்தது. மதிமுக பொது செயலாளர் வைகோவும், சிபிஎம் மத்தியக் குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணனும் அக்குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறினர்.

வெள்ளத்தால் மரணமடைந்த கணக்கை முடிந்த அளவு வெட்டிச் சுருக்க நினைக்கும் அதிகாரிகள், குழந்தைகளை உயிரினக் கணக்கில் சேர்த்துக்கொள்ள மறுத்தனர். ஆடுகளைக்கூட கணக்கெடுக்கும் அதிகாரிகள் குழந்தைகளைச் சேர்த்துக்கொள்ள மறுத்து சொன்ன காரணம் விசித்திரமானது. 18 வயதுக்கு மேல் இறந்தால்தான் கணக்கில் வருவார்கள். அப்போதுதான் நஷ்டஈடு கிடைக்கும் என்று புதிய கதையை சொன்னார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் முயற்சியால் அக்குழந்தைகள் பட்டியலில் சேர்க்கப்பட்டன.

முதலில் பலியாவது...

2004 சுனாமி, 2005 மழை, வெள்ளம், 2008 நிஷா புயல், 2009 நீலம் புயல், 2011 தானே புயல், இப்போதைய புயல், மழை வெள்ளத்தில் அனைத்து பகுதி மக்களுக்கும் பாதிப்பு என்றாலும் விளிம்பு நிலை மக்களுக்குதான் அதிகம் பாதிப்பு. இந்திய சமூக அமைப்பின் வடிவமைப்பு இதற்கு ஒரு காரணம். எல்லா தலித் குடியிருப்புகளும் ஊருக்கு ஒதுக்குப்புறமாய், வயல்களின் ஓரம், வாய்க்கால்கள், வடிகால்கள் ஓரம் அமைந்திருப்பது கூடுதலான பிரச்சனை அவர்களுக்கு. நீர்நிலைகளை கொஞ்சம்கூட பராமரிக்காத நிர்வாகத்தின் மெத்தனப் போக்கிற்கு முதலில் பலியாவது ஊரின் ஒதுக்குப் புறமாய் தள்ளிவைக்கப்பட்டுள்ள இம்மக்களின் குடியிருப்புகள்தான்.

நவம்பர் 8ஆம் தேதி துவங்கிய மழை பல நாட்கள் பொழிந்து முடிந்தது. மழை நின்ற ஏழு தினங்கள் கடந்து, கடந்த 24ஆம் தேதி வரை வில்லியநல்லூர், அத்தியாநல்லூர், பெரியபட்டு, சிலம்பிமங்களம் உள்ளிட்ட பல தலித் குடியிருப்புகளில் வீடுகளைச் சுற்றித் தண்ணீர் தேங்கி நிற்கிறது. தேங்கி நிற்கும் நீரால் அங்கு துர்நாற்றம் வீசத்துவங்கி உள்ளது. உள்ளாட்சி அமைப்புகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கச்சொல்லும் பணியை மேற்க்கொண்டுள்ளோம். உண்மையில் தலித் மக்களின் எளிய வாழ்வாதாரம் சமீப புயல், மழை, வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கூலிவேலைக்கு செல்லும் வாய்ப்பு முற்றிலும் அடைக்கப்பட்டதால் அவர்களின் உணவுத் தேவை மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. 

தேசிய தலித் கண்காணிப்பகம் - தலித் மனித உரிமைக்கான தேசிய பிரச்சாரம் - புதுதில்லி மற்றும் இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையம் ஆகிய அமைப்புகள் சார்பில் மூன்று நாட்கள் சிதம்பரம் வட்டத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு “மழை வெள்ள நிவாரணப் பணிகளில் நிகழும் சாதியப் பாகுபாடுகள் மற்றும் புறக்கணிப்பு ஆய்வு அறிக்கையை” கடந்த 25ஆம் தேதி வெளியிடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அந்த அறிக்கை 20 கிராமங்களில் 8392 குடியிருப்புகளில் ஆய்வு செய்துள்ளது. இதில் தலித் குடியிருப்புகள் 3424 ஆகும்.

“மண் மற்றும் கீற்றுச் சுவர்களால் அமைக்கப்படிருந்த குடிசைகள் அனைத்தும் சேதமடைந்திருந்தன. எந்த தலித் கிராமங்களிலும் அரசு நிவாரண முகாம்களை அமைக்கவில்லை, ஏற்கனவே அமைக்கப்பட்ட நிவாரண முகாம்களும் தூரத்தில் இருந்தன. அரசு கொடுப்பதாக விளம்பரப்படுத்தப்பட்ட தார்பாலின் ஷீட்கள் எந்தக் குடியிருப்புக்கும் கிடைக்கவில்லை.”

“குடிநீர் பெரிய பிரச்சனையாக உள்ளது. இருக்கும் ஓரிரண்டு குழாய்களிலும் சாக்கடை நீர் கலந்துவிட்டதால் குடி நீர் எடுக்க நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. கழிப்பிடம் மற்றும் மாதவிடாய் போன்ற சுகாதாரம் தொடர்புடைய அனைத்தும் மொத்தமாய் புறம் தள்ளப்பட்டுள்ளது.” 

“கணக்கெடுத்த கிராமங்களில் மூன்று பேர் இறந்துள்ளனர் இதில் இருவர் தலித்துகள், பாதிப்படைந்த கான்கிரீட் மற்றும் கூரை வீடுகளில் 1276 தலித்துகளுடையது, 61 வீடுகள் தலித் அல்லாதோருடையது. இறந்த கால்நடைகளில் 274 தலித்துகளுடையது, 18 தலித் அல்லாதோருடையது.” போன்ற பலவற்றை இவ்வறிக்கை சுட்டிகாட்டுகிறது. 

உண்மையில் கடந்த 14ஆம் தேதி இரவு சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் பரங்கிப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடத்திய இரவு போராட்டம்தான் தா.சோ. பேட்டை இருளர் குடியிருப்புப் பகுதிக்கு குடிநீரையும், நஞ்சைமகத்துவாழ்க்கை, மடுவங்கரை, அகரம் போன்ற தலித் குடியிருப்புகளுக்கு அரிசி மூட்டைகள் மற்றும் குடிநீரையும், பாரதி நகர் இருளர் பகுதிக்கு உணவு பொட்டலங்களையும் கொண்டு சென்றது.

கணக்கெடுப்பில் பாரபட்சம்

பாதிப்புகளுக்கு உள்ளான குடிசைகளை கணக்கெடுப்பது மிகவும் பாரபட்சமான முறையில்தான் இருக்கிறது. ஊருக்கு இரண்டு அல்லது மூன்று குடிசைகள்தான் பாதிக்கப்பட்டதாகக் கணக்கெடுக்கப்பட்டது. மாவட்ட நிர்வாகம் 17,150 வீடுகள் சேதமடைந்திருப்பதாகக் கூறியது இத்தகைய கணக்கெடுப்பில்தான். குடிசையின் நான்கு சுவர்களும் முழுமையாக விழுந்திருந்தால்தான் அது முழுப் பாதிப்பு கணக்கில் வரும், மூன்று சுவர்கள் விழுந்திருந்தாலோ, கூரை மொத்தமாக நாசமடைந்திருந்தாலோ அது முழுப் பாதிப்பு கணக்கில் வராது. முழுமையாகப் பாதிப்படைந்திருந்தால் ஐந்தாயிரம், மூன்று பக்கம் விழுந்தாலோ, கூரை முழுவதுமாக பாதித்திருந்தாலோ, தண்ணீர் தேங்கி மண் தரை முழுமையாக பள்ளமாகி இருந்தாலோ பகுதி பாதிப்பு என நான்காயிரம்தான். இதை வைத்துக்கொண்டு ஒரு குடிசைக்கு தேவையான கீற்றுகளைக்கூட வாங்க முடியாது என்பதுதான் யதார்த்தம். 

இதற்கே போராட வேண்டியிருக்கிறது. கடந்த 16ஆம்தேதி மக்கள் நலக்கூட்டணியின் சார்பில் மதியம் மூன்று மணிக்கு துவங்கி மறுநாள் விடியற்காலை 3 மணிவரை நடத்திய காத்திருப்புப் போராட்டத்திற்குப் பிறகுதான் ஒரு கிராமத்தில் உள்ள அனைத்து குடியிருப்புகளையும் கணக்கெடுக்க ஒப்புக்கொண்டனர். ஒவ்வொரு பிரச்சனையையும் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லவும் போராட வேண்டிய சூழல்தான் இப்போதும் கடலூரில் நிகழ்கிறது. நூற்றிற்கும் அதிகமான சாலை மறியல் மாவட்டம் முழுவதும் நடந்துள்ளது. இப்போதும் நடந்துக் கொண்டிருக்கிறது. 

அதிகாரிகள் வரவில்லை என, வந்தாலும் முழுமையாகக் கணக்கெடுப்பதில்லை என, கணக்கெடுத்து நிவாரணம் கொடுப்பதில் பாரபட்சம் என, கொடுக்கும் நிவாரணத் தொகையில் பாதித் தொகை பிடிக்கப்படுகிறது என குடிநீர் வேண்டுமென, கால்நடைகளை கணக்கெடுக்கவில்லையென, பாதிக்கப்பட்ட பயிர்களின் சேதாரத்தை கணக்கிடவில்லையென போராட்டங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அமைச்சர் பெருமக்கள், அதிகாரிகள் கடலூரில் இயல்பு நிலை திரும்பியதை நிரூபிக்க படாதபாடுபடுகின்றனர்.ஒரு பெரும் பாதிப்பின் வலிகளைப் பேசும்போது அனைத்துத் தரப்பு மக்களின் பிரச்சனைகளுக்காகவும் குரல் கொடுக்க வேண்டியது ஒரு உழைக்கும் மக்கள் இயக்கத்தின் கடமை. எனினும், கடையனுக்கும் கடையோனாய் இந்த சாதிய சமூகம் ஒதுக்கி வைத்துள்ள சமூக மக்களின் வாழ்க்கைப் பாதிப்புகளை உரத்துச் சொல்ல வேண்டியது மிக முக்கிய அரசியல் பணியாகிறது. ஆட்சியாளர்கள் எப்போதும் புறம் தள்ளிவைத்துள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையைப் பாதுகாப்பது அனைத்து சமூக மக்களின் அவசியக் கடமையாவதை இந்த வெள்ளம் மீண்டும் நினைவூட்டுகிறது.

--- 28.11.2015 அன்று தீக்கதிர் நாளிதழில் வெளியான எனது கட்டுரை----

சனி, 28 நவம்பர், 2015

போராட்டப் புயல் வீசிய இரவு...


மெல்லிய தூறல்கள் விழுந்துக் கொண்டிருந்த வெள்ளியன்று இரவு (13.11.2015) 8 மணிக்கு கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் அந்தப் போராட்டம் துவங்கியது. எந்த அறிவிப்பும் இல்லாமல் துவங்கிய போராட்டம் அது. வெள்ள நிவாரண பணிகளில் ஈடுபட்டிருந்த எங்கள் குழுவின் மொத்த கோபத்தின் வெளிப்பாடு அந்த போராட்டம். இயற்கை பேரிடரின் துயரத்தை அரசாங்கம் மட்டும் எதிர்கொள்ள முடியாது என்ற புரிதலுடன்தான் போராட்டத்தில் அமர்ந்தோம். ஆனால் அதிகாரிகளின் அலட்சியமும், அரசாங்கத்தின் மெத்தனமும்தான் நாங்கள் இரவு நேரத்தில் போராட்டம் துவங்க காரணமாகியது. மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே போராட்டம் நடைபெற இதுவே காரணமாகும். சட்டமன்ற உறுப்பினரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களும் தீபாவளிக்கு முதல் நாளே நிவாரண பணிகளில் ஈடுபட்டிருந்தனர். மழையும் புயலும்முடிந்த பிறகுதான் மாவட்டத்தின் மொத்த பாதிப்பும் தெரியவந்தது. உயிர் சேதம், பயிர்கள் சேதம், வாழை, கரும்பு, முல்லை உள்ளிட்ட விளை பொருட்களின் சேதம், மின்சாரம் அடியோடு துண்டிப்பு, குடிநீர் இல்லாமல் தவிப்பு என மக்கள் நரக வேதனையை அனுபவிக்க துவங்கினர்.

நூற்றுக்கணக்கான குடியிருப்பு பகுதியில் வெள்ளம் சூழ்ந்து உணவு மிகப்பெரிய பிரச்சனையானது. ஆனால் நிவாரண பணிகளோ ஆமை வேகத்தில்தான் நடந்தது. ஆனால் உடனடியாக அரசு மின்னல் வேகத்தில் செயல்பட்டு இயல்பு நிலையை உருவாக்கியது போல நாடகமாடத் துவங்கியது. கடலூர் மாவட்டத்திற்கு ஐந்து மந்திரிகள் வந்தனர். பிரச்சனையே அதுதான். எல்லா அதிகாரிகளும் அவர்கள் பின்னால் அணிவகுக்க துவங்கிவிட்டனர். குறிப்பாக எதிர்கட்சிகள் இருக்கும் தொகுதிகள் புறம்தள்ளப்பட்டது. சிதம்பரம் தொகுதியில் குறிப்பாக பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் 13ம் தேதி இரவு வரை யாருக்கும் ஒரு உணவு பொட்டலம் கூட வழங்கப்படவில்லை. 11ம் தேதி இரவு வட்டார வளர்ச்சி அலுவலரிடம் சட்டமன்ற உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் கரிகுப்பம் கிராமத்தில் இருளர் வாழும் பகுதியில் தண்ணீர் சூழ்ந்துள்ளது, உடனடியாக அங்குஉணவு பொட்டலங்களை அனுப்புங்கள் என கூறியதும் அவர் உடனடியாக அனுப்புவதாக சொன்னார் ஆனால் 13ம் தேதி இரவு வரை அங்கு எந்த உதவியும் போகவில்லை.

13ம் தேதிவரை த.சோ.பேட்டை இருளர்கள் குடியிருப்பு, சோத்து கொல்லை, செஞ்சேரி, மடுவங்கரை, பெரியமதகு, நஞ்சைமகத்து வாழ்க்கை உள்ளிட்ட கிராமங்களுக்கு ஒரு சொட்டு குடிநீர்கூட கிடைக்கவில்லை அதாவது 5 தினங்களாக. மேலும் நாங்கள் சென்ற 16 கிராமங்கள் இன்னும் இருளில்தான் மூழ்கி உள்ளது. மண்டபம் கிராம மக்கள் வேறு வழியில்லாமல் போராடிய போது சிதம்பரம் காவல்துறை அவர்களை கடுமையாக தாக்கியது. ஒரு மாற்று திறனாளி ஓட வழியில்லாமல் கடுமையாக தாக்கப்பட்டார். இவைகள் உருவாக்கிய கோபம்தான் 13ம் தேதி இரவு போராட்டமாக மாறியது.போராட்டம் துவங்கியதும் வழக்கம் போல காவல்துறையினர் பாய்ந்து வந்து நின்று கொண்டனர்.

அதிகாரிகள் வந்தனர். எந்தவித உதவியும் இல்லாத குறிப்பிட்ட கிராமங் களுக்கு உதவிகள் கிடைக்கும் வரை இங்கிருந்து எழுந்து செல்லமாட்டோம் என கூறிவிட்டோம். நேரம் கடந்துக்கொண்டே இருந்தது. அதிகாரிகள் மாறி மாறி சட்டமன்ற உறுப்பினரிடம் பேசினர். காலையில் நிவாரண பணிகளை செய்து விடுகிறோம் அவர் ஒரே வார்த்தையில் மறுத்துவிட்டார். முடியாது!

உடன் அசுர வேகத்தில் பணிகள்துவங்கியது. இரவு 11 மணிக்கு உணவு பொட்டலங்கள் தயாராகி கிராமங்களுக்கு சென்றது. டேங்கர் வண்டிகளில் இரு கிராமங்களுக்கு குடிநீர் சென்றது. அரிசி மூட்டைகள் அரசு வண்டியில் வந்து இறங்கி கிராமங்களுக்கு சென்றது. அலட்சியமாக மக்களை கவனித்த வட்டார வளர்ச்சி அலுவலர் இடமாற்றம் செய்யப்பட்டார். உடனடியாக ஒரு சிறப்பு அதிகாரி பரங்கிப்பேட்டை ஒன்றியத்திற்கு நியமிக்கப்பட்டார். இனி முழு நிவாரணபணிகளையும் அவரே கவனிப்பார் என உத்தரவு வந்தது. அதன்பிறகுதான் 11.30 மணி அளவில் போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தோழர்களும் போராட்டத்தை முடித்துக்கொண்டோம். 

அதே நாளில் வெள்ள நிவாரண பணிகளில் ஈடுபட்டிருந்த மாதர் சங்கத் தோழர்கள் பண்ருட்டி பெரியகாட்டுபாளையம், சின்ன காட்டுபாளைம், மேட்டுக்குப்பம் பகுதியில் நிவாரண பணிகளில் ஏற்பட்ட பாரபட்சத்தை கண் டித்து மக்களுடன் மறியலில் ஈடுபட்டனர். ஆயிரக்கணக்கான மக்கள் திரண்ட அந்த போராட்டத்தின் நியாயத்தை உணர்ந்த அதிகாரிகள் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு 957 குடும்பத்தார்களுக்கு ரூபாய் 47.08,500 (சுமார் ஐந்து லட்சம்) நிதியை பெற்றுக்கொடுத்தனர். ஆளும் கட்சியினரின் நிவாரண உதவி பாரபட்சம் மேலும் போராட்டங்களை கடலூர் மாவட்டத்தில் அதிகப்படுத்தவே செய்யும். இதோ இந்த பதிவை எழுதி கொண்டிருக்கும் போது கரிகுப்பம் கிராமத்தின் இருளர் குடியிருப்பிலிருந்து தொலைபேசி அழைப்பு.. “தோழர் நாங்க இருளர் காலனியிலிருந்து பேசுறோம்.. வீடுகளை சுத்தி நின்ன தண்ணியில விழுந்து மூணு வயசு கொழந்த செத்து போச்சு, உடனே வாங்க தோழர்... காலையில செத்து போச்சுயாருமே வரல..” மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள் அங்கு சென்றுக் கொண்டிருக்கிறார்கள்.

----- 15.11.2015 அன்றைய தீக்கதிரில் வந்த பதிவு-----