கல்வி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கல்வி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 6 டிசம்பர், 2011

அம்பேத்கர் நினைவு தின நிகழ்ச்சிகள் தேவையா?


உலகில் தோன்றிய மாமனிதர்கள் தங்களுடைய இருப்புக்கு பின்னால் தங்கள் அடையாளங்களினூடாக வாழ்ந்துக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களை தங்கள் குழுக்களுக்கான அடையாளமாய் மாற்றிக்கொள்ள பலர் தொடர் முயற்சியர்சிகளை மேற்கொண்டாலும் அவர்களது மேதமை அதையும் தாண்டி சமூகம் முழுமைக்குமான உந்துசக்தியாக திகழ்கிறது.

அத்தகைய ஆளுமைகளில் அம்பேத்கர் ஒரு மகத்தான இடத்தை பிடித்தவராவார். அவர் சமூகத்தில் பல தளங்களில் தன்னுடைய பங்களிப்பை செய்துள்ளார். அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்கிய சட்ட மேதை. கொலம்பியா பல்கலைக்கழகத்தில் தினமும் 18 மணி நேரம் பயின்று 1916ல் எம்.ஏ பட்டம் பெற்றவர். நியூயார்க் நகரில் 2000 புத்த்கங்களை வாங்கியவர். லண்டன் மியூசியத்தில் காலையில் நுழைந்து இரவு காவலர் வந்து கூறுகிறவரை படித்து டாக்டர் பட்டம் பெற்றவர். இப்படியாக அவரது பரிமாணங்களை சொல்லிக்கொண்டே போகலம் ஆனால் அவர் இந்திய நாட்டில் ஒடுக்கப்பட்ட மக்களாக தள்ளிவைக்கப்பட்ட பெருந்திரள் சமூகத்திற்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்பணித்த மாமேதையாவார்.

அந்த மக்கத்தான மனிதனின் கல்விச் சிந்தனைகள் கல்வியை நேசிக்கும் அனைவரும் உள்வாங்க வேண்டிய கருத்து பெட்டகங்களாகும். 1891 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி பிறந்து 1956 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி மறைந்த அம்பேத்கர் தன்னுடைய வாழ்நாள் அனுபவத்தினூடாக ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வியின் அவசியத்தை கண்டுணர்ந்தார். ஆரம்ப கல்வியில் அவர் வயதையத்த குழந்தைகள் கையில் புத்த்கங்களையும், உணவு பைகளையும் சுமந்து வந்த போது அவர் கூடுதலக சாக்கு பையையும் சுமந்து வந்தார். இன்னும் பிற அவலங்கள் அவர் வாழ்க்கையில் கடுமையான உறுதியை கொண்டு வந்தது. விடாப்பிடியுடன் கற்றலின் உச்சிக்கு சென்றார்.

தான் மட்டும் கல்வி பெற்றால் போதாது ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் அது கிடைத்திட தனது சொந்த முயற்சியால் அவர்களுக்கான கல்வி நிலையங்களை துவக்கினார். 1924 ஆம் ஆண்டு மார்ச் 9 ஆம் தேதி மும்பை தாமோதர் ஹாலில் நடந்த கூட்டத்தில் "பஹிஷ்க்ரித் ஹித்காரினி சபா" என்ற அமைப்பை உருவாகினார். விடுதிகள், நூலகங்கள், படிப்பு வட்டங்கள் ஆகியவைகளை தனது நோக்கமாக இந்த அமைப்பு அறிவித்தது. அந்த அமைப்பின் சார்பில் ஷோலாப்பூருக்கு அருகில் இலவச விடுதி ஒன்று கட்டப்பட்டது. பைகுல்லா என்ற இடத்தில் நூலகம் ஒன்றையும், மாணவர்களுக்காக "வித்யா விலாஸ்" என்ற மாதப்பத்திரிக்கையும் உருவாக்கப்பட்டது. 

இதனை தொடர்ந்து 1928 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி அம்பேத்கர் "ஒடுக்கப்பட்டோர் கல்வி கழகம்" என்ற அமைப்பை துவங்கினார். இதன் சார்பில் ஐந்து விடுதிகள் நடத்தப்பட்டதாக தெரிகிறது. 1945 ஆம் ஆண்டு "பீப்பிள்ஸ் எஜுகேஷ்ன் சொஸைட்டி" என்ற அமைப்பை உருவாக்கினார். தானே முன் நின்று பதினைந்து லட்சம் செலவில் (அரசின் உதவி 6 லட்சம்) ஒரு கல்லூரியை உருவாக்கினார். இந்த அமைப்பு இப்போது ஆல்போல் தழைத்துள்ளது. இப்போது ஒன்பது உயர்நிலைப் பள்ளிகளும், பொறியியல் கல்லூரி. சட்டக் கல்லூரி உட்பட பதினான்கு கல்லூரிகளையும், மூன்று விடுதிகளும் ஒரு தொழிற்பயிற்ச்சிக் கல்லூரியும் நடத்தப்படுகிறது. 

சைமன் கமிஷன் இந்தியா வந்த போது, 1813 முதல் பிரிடிஷ் அரசாங்கம் இந்தியாவில் கடைபிடித்த கல்வி கொள்கையை அவர் ஆராய்ந்து கொடுத்த மனு மிகவும் புகழ்பெற்ற மனுவாகும். இந்திய கல்வியை பற்றி ஆராய அமைக்கப்பட்ட ஹன்டர் கமிஷன் புள்ளி விபரங்களை அவர் மிகவும் சாதுர்யமாக பயன்படுத்தி அந்த அறிக்கையை தயாரித்து இருந்தார். அதே போல அவர் 1920 களில் பம்பாய் மாகாண் சட்ட மேலவை விவாதங்களில் கலந்துக்கொண்டு பேசிய பேச்சுக்கள் அவரது கல்வி மீதான அக்கறையை காட்டும்.

வெறும் பட்டப் படிப்பு அல்லது சட்டத்துறைப் படிப்பு படித்து முடிப்பது தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு அதிக பயன் அளிக்காது. அது சாதி இந்துக்களுக்கே பயன்படவில்லை. ஆக விஞ்ஞானத்திலும் தொழில் நுட்பத்திலும் கற்றபதுதான் பயன்தரும். ஆனால் இதை கற்பதற்கான கதவுகள் அவர்களுக்கு அடைக்கப்பட்டிருக்கும். இது அவர்களது சக்திக்கு அப்பாற்பட்டது. எனவே அரசு உதவி இல்லாமல் இது சாத்தியமில்லை என அவர் வாதாடினார்.  

கல்வி அரசின் கையில் இருக்கவேண்டும் என அவர் விடாபிடியாக இருந்த காரணம் அப்போதுதான் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கொஞ்சமேனும் கல்வி கிடைக்கும் என உறுதியா நம்பினார். அது ஒருவகையில் உண்மையும் கூட. ஆனால் இந்திய சாதி அமைப்பை கலைக்க அல்லது சீர்குலைக்க விரும்பாத ஆங்கிலேயர்கள் ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வியில் போதிய ஆர்வம் செலுத்தவில்லை.   

இதற்கு சிறந்த உதாரணத்தை அவர் சைமன் கமிஷனுக்கு கொடுத்த் அறிக்கையிலிருந்து பார்க்கலாம்..

"இப்போது நாம் நமது கவனத்தை ஓர் உண்மையின்பால் செலுத்த வேண்டும்; இதுவரை நாம் பெரிதும் அலட்சியப்படுத்தி வந்த உண்மை அது; இதனை நாம் ஒப்புக் கொள்ளதான் வேண்டும்; அந்த அசைக்க, மறுக்க முடியாத உண்மை இதுதான்; வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திற்கும் பெரிது உகந்ததான, பயனுள்ள, நடைமுறைக்கு ஏற்ற கல்வி அறிவை மிகப்பெரும் திரளான மக்களுக்குக் கிடைக்கச் செய்வது மிக மிக அவசியம்; எத்தகைய கல்வியையும் தங்களது முயற்சியினால் கிடைக்கப் பெற இயலாத துர்பாக்கியசாலிகளாக அவர்கள் இருந்து வருகிறார்கள்" என 1854 ஆம் ஆண்டு ஜூலை 19 ஆம் தேதி இந்திய மக்களுக்கு கல்வியை கொடுக்க பிரிடிஷ் அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பது உண்மையா என அவர் கேட்டார். அப்படி இந்த கவலை உண்மையெனில் இது யாருகான கவலை? சாதி இந்துக்களுக்கும் பிறருக்குமா? அப்படியெனில் தலித்துக்கள் உங்களுக்கு சுமையா? என மறைமுகமாக கேட்டார்.

இவைகளை ஆதாரங்களுடன் அடுக்கினார்...

1881- 82 கல்வியாண்டை அய்வு செய்து அவர் கணக்கிட்டார். அப்போது தொடக்க கல்வி பயின்றவரகள் மொத்தம் 3,15,635 பேர். கிறித்தவர்கள், பிராமணர்கள், இதர இந்துக்கள், முகமதியரக்ள், பார்சிகள், ஆதிவாசிகளும் மலைசாதியினரும், கீழ்சாதி இந்துக்கள், யூதர்களும் ஏனையோரும் என பட்டியல் இட்டதில் தலித்துக்கள் 0.87 சதவிதமே படித்தனர். அதாவது இந்த மொத்த எண்ணிக்கையில் 2,862 பேர் மட்டுமே. (பிராமணர்கள் 20.17 சதம்.)

அப்போது நடுநிலைப் பளிகளில் கல்வி பயின்றவரக்ள் மொத்தம் 11,254 பேர். கிறித்தவர்கள், பிராமணர்கள், இதர இந்துக்கள், முகமதியரக்ள், பார்சிகள், ஆதிவாசிகளும் மலைசாதியினரும், கீழ்சாதி இந்துக்கள், யூதர்களும் ஏனையோரும் என பட்டியல் இட்டதில் தலித்துக்கள் 0.14 சதவிதமே படித்தனர். அதாவது இந்த மொத்த எண்ணிக்கையில் 17 பேர் மட்டுமே. (பிரமணர்கள் 30.70 சதம்.)

அப்போது உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றவரக்ள் மொத்தம் 4959 பேர். கிறித்தவர்கள், பிராமணர்கள், இதர இந்துக்கள், முகமதியரக்ள், பார்சிகள், ஆதிவாசிகளும் மலைசாதியினரும், கீழ்சாதி இந்துக்கள், யூதர்களும் ஏனையோரும் என பட்டியல் இட்டதில் தலித்துக்கள் 0.00 சதவிதமே படித்தனர். அதாவது இந்த மொத்த எண்ணிக்கையில் ஒருவர்கூட இல்லை. (பிரமணர்கள் 40.79 சதம்.)

அப்போது கல்லூரியில் பயின்றவரக்ள் மொத்தம் 480 பேர். கிறித்தவர்கள், பிராமணர்கள், இதர இந்துக்கள், முகமதியரக்ள், பார்சிகள், ஆதிவாசிகளும் மலைசாதியினரும், கீழ்சாதி இந்துக்கள், யூதர்களும் ஏனையோரும் என பட்டியல் இட்டதில் தலித்துக்கள், 0.00 சதவிதமே படித்தனர். அதாவது இந்த மொத்த எண்ணிக்கையில் எவரும் இல்லை. (பிரமணர்கள் 50.05 சதம்.)

ஆக பிரிடிஷ்காரர்கள் இவைகளை கவனிக்க வேண்டுமென கூறினார். அவரது கொள்கை ஒடுக்கப்பட மக்களுக்கு கல்வி கொடுப்பதும், அவர்களை வாழ்க்கையில் முன்னேற்றுவதும் என இருந்த காரணத்தினால் தனது வாழ்வியல் அனுபவ அடிப்படையில் சாதி இந்துக்களை சந்தேகக் கண்ணோடு பார்த்தார். சாதி இந்துக்கள் தாழ்த்தப்பட்ட சமூகத்தை எப்போதும் அடக்கியே வைத்திருப்பார்கள் என்ற உண்மையை கண்டுணர்ந்தார். 

இன்றும் அதுதான் நடக்கிறது. அறிவு ஜீவிகளாக தங்களை புறிந்துக் கொள்கிற ஐ.ஐ.டி "டுபாக்கூர்கள்" முதல் மதிப்பெண் பெறும் தலித் மாணவனை கோட்டா அடிப்படையில் தள்ளிவைத்து, அவர்கள் இடத்தை பரித்து பிழைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

இப்போது சொல்லுங்கள் அன்றைய கல்வியை, சமூக நிலைகளை ஆய்வு செய்த அம்பேத்கர் போல இன்றைய கல்வியையும், சமூகத்தையும் நாம் ஆய்வு செய்யவேண்டுமா இல்லையா?  அவரது நினைவு தினமான டிசம்பர் 6 ஆம் தேதியை ஏன் ஒரு துவக்கமாக நாம் எடுத்துக்கொள்ளக்கூடாது?! 

ஆகவே கனவான்களே! இனி அம்பேத்கர் நினைவு தின நிகழ்ச்சிகள் தேவையா? இல்லையா? நீங்களே முடிவு செய்யுங்கள்.

திங்கள், 18 ஜூலை, 2011

சமச்சீர் - கல்வி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு

கல்வியாளர் ஜே. கிருஷ்ணமூர்த்தியுடன் நேர்காணல் 



ஜே. கிருஷ்ணமூர்த்தி இந்திய அளவிலான கல்வி ஆளுமைகளுள் குறிப்பிடத்தக்கவர். 1953-ல் புதுவையில் பிறந்தவர். புதுவை பெத்தித் செமினார் பள்ளியில் 10ம் வகுப்புவரையும், தாகூர் கல்லூரியில் புதுமுக வகுப்பு மற்றும் பட்டப்படிப்பும், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.எட் படிப்பும் முடித்தவர். 1976ல் பெத்துசெட்டிபேட்டையில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர் பணியில் இணைந்தார். 2003 வரை பட்டதாரி ஆசிரியர் பணி. 2003 நவம்பரில் பூரணாங்குப்பம் நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பொறுப்பு. 2006-ல் துவங்கி இன்றுவரை ஆலங்குப்பம் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்.

புதுச்சேரி நகரத்தினுள் வேலைசெய்ய அழைப்பு வந்தும், அதை நிராகரித்து ஆரோவில் பகுதியில் உள்ள ஆலங்குப்பம் கிராமத்தின் பள்ளியோடு தன்னைக்  கரைத்துக் கொண்டு அங்குள்ள மாணவர்களின், வெற்றியில் தனது வாழ்வின் அர்த்தத்தை தேடிக் கொண்டிருப்பவர். அந்தப் பள்ளியில் உள்ள எந்த ஒரு மாணவரும் இவரை எந்த நேரத்திலும் அணுகி தன்னுடைய குடும்பப் பிரச்சனையை விவாதிக்க முடியும் என்கிற அளவுக்கான ஜனநாயகத்தை தனது பள்ளி வளாகத்தில் உருவாக்கி வைத்துள்ளவர்.

அந்தப் பள்ளியின் இரவு நேரக் காப்பாளர் ‘மலையாளத்தாரை’ நமக்கு அறிமுகம் செய்யும் போது மிகப்பெருமையுடன் ‘‘இவர் எங்க பள்ளியில் மிக முக்கிய அங்கம், பள்ளியின் குடும்ப உறுப்பினர், இங்கு இரவு நேர காப்பாளராக செயல்படுகிறார்’’ என அவருக்குச் சமமான நாற்காலியில் அமரவைத்து அறிமுகம் செய்யும் ஜே.கே வை நீங்கள் எப்படிப் புரிந்து கொள்வீர்கள்.

சகமனிதனுடனான அவரது அன்புமிக்க அணுகுமுறை குறித்து கேள்வி எழுப்பும் போதுதான் அவரது ஆசிரியர் பணியின் மற்றொரு பரிமாணம் தெரியும். ‘1978 முதல் 1985 வரையிலான ஆசிரியர் சங்கப் பணிதான் என்னை ஆசிரியர்கள் இந்த சமூகத்தில் எத்தகைய மாற்றங்களை உருவாக்க முடியும் என அறியவைத்த ஆண்டுகள்’’ என்கிறார்.

1986ல் போபால் கொடூரம் நடந்த சில மாதங்கள் கழித்து ‘‘யூனியன் கார்பைடு பொருட்களைப் புறக்கணிப்பீர்கள்’’ என்ற துண்டுப்பிரசுரம் புதுச்சேரியின் அனைத்து மக்களிடமும் சென்றடைந்தது. கீழே புதுச்சேரி அறிவியல் இயக்கம் என்ற வாசகத்துடன். அப்போதுதான் புதுவை அறிவியல் இயக்கத்தை ஜே. கிருஷ்ணமூர்த்தி, டாக்டர். தி. சுந்தர்ராமன். மருத்துவ மாணவர் ஜார்ஜ், பொறியாளர் மதன கோபால், டாக்டர் ராமானுஜம், டாக்டர் ராமதாஸ், தனபால் ஆகியோருடன் மேலும் சிலர் இணைந்து துவக்கினர். 1986 முதல் ‘‘அறிவியல் மக்களுக்கே’’ என்ற முத்திரை வாசகத்துடன் இயங்கும் புதுவை அறிவியல் இயக்கத்தின் ஊழியனாகத் தன்னை இணைத்துக்கொண்டு பணியாற்றுகிறார். 1994 முதல் 1996 வரை தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளராகப் பணியாற்றினார். துளிர் பத்திரிகையை உருவாக்கிய முக்கிய நபர்களில் இவரும் ஒருவர். துளிர் என்ற அறிவியல் பத்திரிகை முதல் இதழ் வெளியானது புதுச்சேரியிலிருந்துதான்.

அறிவியல் இயக்கம் மட்டுமல்ல 1989ல் புதுவை அறிவொளி இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு 1996 வரை அதில் பெருமிதப்படத்தக்க பங்களிப்பை செலுத்தியவர். அறிவொளி இயக்கத்தின் மாநிலத் திட்ட  ஒருங்கிணைப்பாளராக, தேசிய எழுத்தறிவு ஆணையத்தின் ஆலோசகராக, BGVSன் தமிழகத்தின் பயிற்சி ஒருங்கிணைப்பாளராக என இவரது உழைப்பு அபாரமானது. இவரது அறிவொளி இயக்க அனுபவம் தனியே பதியப்பட வேண்டிய அவசியம் நிறைந்தவை. அவருடன் நடத்திய உரையாடலிலிருந்து...

கல்வியாண்டுத் துவக்கத்தில், சமச்சீர் கல்வி 
அறிமுகமாகும் என எல்லோரும் எதிர்பார்த்த வேளையில் இப்படி ஒரு சிக்கல், ஏற்பட்டது குறித்து?
சமச்சீர் கல்வி என்பது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு என்பதை முதலில் பதிவு செய்ய விரும்புகிறேன். நான்குவிதமான பாடத்திட்டங்களை ஒரே முறையில் மாற்றியதும் வரலாற்று சாதனைதான். இந்த சமச்சீர் கல்வியில் உள்ள குறைகளைக் களைய வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால் அது சமச்சீர் கல்வி அமலாக்கத்தை நிறுத்திவிட்டுச் செய்யவேண்டும் என்ற அவசியத்துடன் தொடர்புடையது அல்ல. திட்டத்தை அமலாக்கிக் கொண்டே குறைகளைக் களையலாம். அதுதான் மாணவர்களின் எதிர்காலம் குறித்த அக்கறை உள்ள செயலாக இருக்கும். தற்போது நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது.

நான்கு பாடத்திட்டங்களை ஒரே பாடத்திட்டமாக்கியது வரலாற்று சாதனை என்கிறீர்களே.. அப்படியென்றால்?
நிச்சயமாக. இதில் சந்தேகம் இல்லை. தமிழக பாடத்திட்டம், மெட்ரிகுலேஷன் பாடத்திட்டம், ஓரியண்டல், ஆங்கிலோ இந்தியன் பாடத்திட்டம் என்ற நான்கு முறைகள் மாற்றப்பட்டுள்ளது அனைத்து மாணவர்களுக்கும் நல்லது. இந்த நான்கு பிரிவுகளின் தேவை என்ன? தனியார் கல்வி நிறுவனங்கள் செழித்து வளரவும், பாடநூல் அச்சிடும் பல்வேறு வணிக புத்தக நிறுவனங்கள் கொள்ளை லாபம் அடிக்கவும்தான் பயன்பட்டது. மக்களிடம் உருவாக்கப்பட்ட ஆங்கில மோகத்திற்கு தீனிபோட இந்த மெட்ரிக் பள்ளிகள் உதவின. இதற்கு தரம் என்ற பெயரில் விளம்பரம் வேறு செய்யப்படுகிறது.

அப்படியானால் தரம் என்ற வாதம் எதைச் சார்ந்துள்ளது., தனியார் பள்ளியினர் சமச்சீர் கல்வி வந்தால் தரம் பாதிக்கப்படும் என்கிறார்களே?
தரம் என்ற அளவுகோளை யார் தீர்மானிப்பது. ஒரு உதாரணம் சொல்கிறேன். மூன்று மாதங்களுக்கு முன்பு தனியார் மற்றும் அரசுக் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மத்தியில் ஒரு சர்வே எடுப்பதற்காக ஒரு தேர்வு நடத்தப்பட்டது. அதாவது அவர்கள் நடத்தும் பாடத்திலிருந்து கேள்விகள் தயாரிக்கப்பட்டு இந்தத் தேர்வு நடந்தது. இந்தத் தேர்வு முடிவில் 60-70 சதவிகிதம் தனியார் கல்லூரி ஆசிரியர்கள் மிகவும் மோசமாகத் தேர்வை எழுதியிருந்தனர். ஆனால் அதே அளவு அரசுக் கல்லூரி ஆசிரியர்கள் சிறப்பான முறையில் தேர்வை எழுதியிருந்தனர். இதிலிருந்து நீங்கள் எந்த முடிவுக்கு வருவீர்கள்? இன்று நாட்டின் மிக உயர்ந்த பொறுப்பில் உள்ளவர்களில் 90 சதம் பேர் அரசுப் பள்ளிகளிலும், தாய்மொழியிலும் படித்தவர்கள் தான். ஆக தரம் என்பது எவ்வளவு அதிகமான அழுத்தமான பாடங்களை நடத்துவது என்பதில் இல்லை. எவ்வளவு தெளிவாக மாணவர்கள் கற்றுக் கொள்கிறார்கள் என்பதுதான். தரம் என்ற சொல்லைப் பயன்படுத்தி தங்கள் லாபவேட்டையைத் தொடரவே தனியார் கல்வி நிலையங்கள் திட்டமிடுகின்றன.

சமச்சீர் கல்வி பாடத்திட்டங்கள் குறித்து..?
இயல்பாகவே மாணவர்களை ஈர்க்கும் தன்மையுடன் வண்ணமயமாக அச்சிடப்பட்டு நிறைய படங்களுடன் புத்தகம் வெளிவந்துள்ளது இன்னும் சிறப்பாக உள்ளது. செயல்முறையில் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு ஏராளமாக உள்ளது. இது போன்ற ஏற்பாடுகள் தான் மாணவர்களை ஆர்வத்துடன் படிக்கத் தூண்டும். இதில் குறிப்பிட வேண்டிய ஒரு முக்கியச் செய்தி, ஒரு நல்லமாற்றம் என்னவெனில் வகுப்பறைக்குள் அதிக நடவடிக்கைகளும் வீட்டுப்பாடச் சுமை குறைந்தும் இருப்பதுதான்.
இந்த வகையிலான புத்தகங்கள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களைச் சேர்ந்து இயக்கும் தன்மை கொண்டது. ஆசிரியர்-மாணவர்களின் உறவுப் பாலமாக புத்தகங்கள் அமைந்துள்ளன. முன்பு ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டே இருப்பார். மாணவர்கள் வெறும் பார்வையாளர்களாக இருப்பர். இப்போது பார்வையாளர்களான மாணவர்களை பங்கேற்பாளர்களாக மாற்றிட புதிய சமச்சீர் கல்வி பாடத்திட்டங்கள் ஒரு முயற்சியைத் துவக்கி உள்ளன. மாணவர்கள் படிப்பு எனும் தளத்தில் தாங்களாக பங்கேற்க சில வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கணிதத்தில் செயல்முறை வடிவியலும், புள்ளி விபர சேகரிப்பு சம்பந்தப்பட்ட வரைபடங்களும் மிகவும் எளிமையாக இருக்கின்றன. பாடங்களின் எண்ணிக்கைகளைக் குறைத்து தரத்தை உயர்த்தியுள்ளார்கள்.

பொதுவாக தமிழகத்திலும், புதுவையிலும் கல்வி நிலை எப்படி உள்ளதாகக் கருதுகிறீர்கள்?
NCERT, ASER ரிப்போர்ட் கணக்குப்படி தமிழகம் தரமான கல்வி வழங்குவதில் முதலிடத்தில் உள்ளது. ஆனால் புதுச்சேரி கடைசியிலிருந்து இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. எழுத்துக்களைக் கூட இன்னும் அடையாளம் காட்டத் தெரியாத 30 சதமான மாணவர்கள் புதுச்சேரியில் உள்ளனர். தேசிய அளவில் 23 சதம் என்பதையும் விஞ்சியது இது. அனைத்துப் பள்ளிகளிலும் எடுத்த சர்வே இது. ஒரு வேளை அரசுப் பள்ளிகள் மட்டும் எனில் இன்னும் கூட குறையும் என நினைக்கிறேன். 35 வருட ஆசிரியர் பணியின் காரணமாய் ஆசிரியர் சமூகத்தில் உள்ள எனக்கு இது மனக்குனிவை ஏற்படுத்துகிறது.

வளர்ச்சிக் குறியீட்டில் (EDI) புதுச்சேரிதானே முதலிடம் வகிக்கிறது?
ஆமாம் EDI யில் புதுச்சேரி மாநிலம்தான் முதலிடம். அதாவது ஒரு கிலோமீட்டருக்கு ஒரு துவக்கப்பள்ளி, மூன்று கிலோ மீட்டருக்கு ஒரு நடுநிலைப்பள்ளி, ஐந்து கிலோ மீட்டருக்கு ஒரு மேல்நிலைப்பள்ளி போன்றவையும், கழிப்பிடம், குடிநீர், ஆய்வகம், நூலகம் போன்ற அடிப்படை வசதிகளில் தன்னிறைவும் தகுதியான பயிற்சி பெற்ற ஆசிரியர்களும், 1:25 என்ற ஆசிரியர், மாணவர் விகிதமும் இருக்கிறது. இது பாராட்டத்தக்கதுதான். இருப்பினும் மாணவர்களின் அடைவுத் திறனை அதிகரிக்கவில்லை என்ற உண்மையும் பின் தொடர்வது வேதனையானது. இந்த இரண்டும் கடுமையான முரண்பாட்டை முன்வைக்கின்றன.

இந்த முரண்பாட்டை எப்படிப் புரிந்து கொள்வது?
இரண்டு விஷயங்களில் நாம் கருத்தை செலுத்தலாம். ஒன்று ஆசிரியர்கள் தங்கள் பயிற்சி காலத்தில் பெறுகின்ற பயிற்சி மட்டுமல்லாமல் ஆசிரியரான பிறகும் அவர்களுக்கு பயிற்சி தரப்படுகிறது. ஆனால் வகுப்பறையில் இந்த பயிற்சி பயன்படவில்லை என்பதுதான் பிரச்சனை. இது ஏன் என்பதுதான் ஆசிரியர் சமூகப் பிரதிநிதியாக எனக்குள் நான் எழுப்புகின்ற கேள்வி. எனவே கல்வியாளர்கள், அரசு, சமூக அக்கறை உள்ள சங்கங்கள் இந்த ஆசிரியர்களின் குறைந்தபட்சத் திறனை வளர்க்கும் ஆசிரியர்களாக மாற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும்.
ஆசிரியர்கள் கடுமையாக உழைக்கிறார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது. பிரச்சனை என்னவெனில் கடுமையாக உழைப்பவர்கள் மட்டும் போதாது. மாணவர்களின் பிரச்சனைகளை முகம் கொண்டு பார்ப்பவர்களாகவும் அவர்கள் இருக்க வேண்டும் என்பதுதான். ஒரே கிராமத்தில் ஒரே விதமான கூலித் தொழிலாளிகளின் பிள்ளைகளில் ஒருவன் தனியார் பள்ளியிலும், ஒருவன் அரசுப் பள்ளியிலும் படிக்கின்ற போது அரசுப் பள்ளியில் படிக்கின்ற மாணவனின் அடைவுத் திறன் குறைவாக இருந்தால் அதற்கு யார் பொறுப்பு என்பது முக்கியமான கேள்வி இல்லையா?
இரண்டாவதாக நமது வகுப்பறைகளை இன்னும் ஜனநாயகப்படுத்த வேண்டும். அதாவது மாணவர்களின் பங்கேற்பை அனைத்து மட்டங்களிலும் உறுதிப்படுத்த வேண்டும். ஆசிரியர் மாணவர் இணைந்த பங்களிப்பை உருவாக்க வேண்டும். அதாவது சமன் செய்யப்பட்ட இயக்கம் வகுப்பறைக்குள் வேண்டும். பாடம் நடத்துவது ஆசிரியர் வேலையாகவும், கற்பது மாணவர்கள் கடமையாகவும் பிரிந்து நிற்கிறது. கற்பதும், கற்பிப்பதும் இருசாராருக்கும் பொதுவானதாய் மாற வேண்டும். இது பொதுவாக இல்லாததால் ஒருபக்க இயக்கம் மட்டுமே உள்ளது.

அப்படியானால் இந்த இருபக்க இயக்கம்  தனியார் பள்ளிகளில் இருக்கிறதா?
இல்லை. அப்படி எளிதாகப் புரிந்து கொள்ள வேண்டாம். நாம் அரசுப் பள்ளிகளின் பிரச்சனைகளைத் திறந்த மனதுடன் விவாதிக்கின்றோம். எனவேதான் தனியார் பள்ளிகள் திறமை என்ற வாதத்தால் இதனை திசைதிருப்பி மக்களை அழைக்கிறது. தனியார் பள்ளிகளில் இருப்பதும் ஒருபக்க இயக்கம்தான். அது மதிப்பெண் சார்ந்த ஒரு பக்க இயக்கமாகும். அதாவது அங்கு தரமான கல்வி என்பது தேர்ச்சி சார்ந்த இயக்கமாக கட்டணமாக்கப்படுகிறது. அவர்களுக்கு அதுதான் முக்கியம். அங்கு இன்றைய நாட்டின் தேவை சார்ந்த சந்ததியை உருவாக்குவதில் அக்கறை இல்லை. சந்தைக்குத் தேவையான சந்ததியை உருவாக்குவது. அவர்களின் நோக்கமாக உள்ளது. அதுவும் 1990 க்குப்பின் பன்னாட்டுச் சந்தையின் தேவையைக் கொண்டே சந்ததியை உருவாக்குகிறார்கள்.
ஆக கடுமையாக உழைக்கும் ஆசிரியர்கள் மாணவர்களின் முகம் கொண்டு அவர்களைப் புரிந்து கொள்பவர்களாக இருப்பதுடன், வகுப்பறைகள் ஜனநாயகத் தன்மையுடன் இருபக்க இயக்கம் உள்ளதாகவும் இருக்கும் இரு விஷயங்களும் முக்கியமானவை.

சந்தை சார்ந்த மாணவ சந்ததி உற்பத்தி குறித்து இன்னும் பேசலாமே?
நிச்சயமாக. அடிப்படை ஆராய்ச்சிகள் கேள்விக் குறியாக மாறி இருக்கின்றன. இயற்கை ஆதாரங்கள் பாதுகாக்கப்படுவதும், அதை வளர்த்தெடுப்பதும் விவாதத்திற்கு வரவில்லை. 80 சதவிகித மக்கள் வறுமையில் உழல்கின்றனர். தொலைந்துபோன தங்கள் வாழ்க்கையை உழைப்பால் அவர்கள் தேடித்திரிகின்றனர். இப்படியான ஒரு சூழலில் மக்கள் குறித்தும், சமயச்சார்பு, இறையாண்மை போன்ற நடவடிக்கைகளில் மாணவ சமூகம் இயல்பாக கவனம் செலுத்தும் சந்ததியாக வெளிவராதது ஏன்? வகுப்பறைதான் ஒரு நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கிறது எனில் அந்த இடத்தில் மேற்கண்ட விவாதங்கள் நடக்கிறதா? வகுப்பறை ஜனநாயகம் என்பது ஆசிரியரும் மாணவரும் சமமாக இணைந்து கற்றலில் பங்கேற்பது. ஆனால் நடப்பது என்ன? அதிகாரம் ஙீ அடங்குதல் என்ற ஒரு பக்க இயக்கம்தானே. இது சமூகத்தில் ஒரு அங்கமாக வரும் மாணவனை அதிகாரம் செலுத்தும்; அல்லது அடங்கிப்போகும் ஒருவனைத்தானே உருவாக்கும்.
ஆக சமூகத்திற்கான மாணவர்களை சந்தைக்கான மாணவர்களாக மாற்றுவது சரியான வளர்ச்சியா? அதுவும் குறிப்பாக மதிப்பெண்களே அவர்கள் எதிர்காலத்தை தீர்மானிக்கும் என்றால் அவர்களின் சமூக அக்கறை எப்படி இருக்கும்.

பாடத்திட்டம் இதற்கு ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறதுதானே?
நிச்சயமாக. சிறந்த எதிர்கால சமுதாயத்திற்கான பாடத்திட்டம் என்பதிலிருந்து அன்றைய ஆட்சியாளர் களின் தேவையை உள்ளடக்கிய பாடத்திட்டங்களாக மாற்றப்படுவது வேதனைக்குரியது. கல்வியாளர்களும் இந்த மாற்றத்திற்கு ஏற்ப தங்களை தகவமைத்துக் கொள்கிறார்கள். இருப்பினும் பாடத்திட்டம் அதிகபட்சம் நமது நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு உட்படுத்தப்பட்ட பிரதான அம்சங்களை இன்னும் இழந்துவிடவில்லை.
பாடத்திட்டம் எப்படி இருப்பினும் அதை அடிப்படையாக வைத்து வகுப்பறையை எப்படி நடத்துகிறோம் என்பது முக்கியம். ஆசிரியர்கள் நினைத்தால் இந்தப் பாடத்திட்டத்தை வைத்தும் மாற்றத்தை உருவாக்க முடியும்.
நமது நாட்டின் இருபெரும் தலைவர்களான ஜோதிபாசுவும் இந்திராகாந்தியும் வெளிநாட்டில் ஒரே பல்கலைக்கழகத்தில்தான் படித்தார்கள். அங்கு வரும் இந்திய மாணவர்களுக்கு ஆங்கில டியூஷன் நடத்தினார்கள். அவர்களின் சிந்தனைப் போக்கு இரு துருவங்களாகப் பிரிந்து நின்றது. இதில்  அவர்களின் வகுப்பறைக்குப் பங்கு இல்லை என சொல்ல முடியுமா?

பாடத்திட்டத்தை தீர்மானிக்கும் கல்விக் கொள்கை குறித்த உங்கள் விமர்சனம் என்ன?
நாற்பது ஆண்டுகளுக்கு முன் அதாவது 1970களில் சோவியத் யூனியனில் ஒரு பரிசோதனை நடத்தப்பட்டது. அதாவது அப்போதெல்லாம் அங்கு ஐந்து வயது நிறைவடைந்தால்தான் பள்ளியில் சேர்க்க முடியும். ஆனால் அதே சமயம் அமெரிக்கா போன்ற நாடுகளில் மூன்று வயது நிறைவடைந்தால் மழலையர் பள்ளிகளில் சேர்க்கலாம். இரண்டு வருடம் முன்பே குழந்தைகள் கல்வி நிலையத்திற்கு வரும் முறையை நாமும் ஏன் செய்யக்கூடாது என்று எண்ணிய சோவியத் அரசு, அதற்காக பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர் அடங்கிய குழுக்களை உருவாக்கியது. ஒன்றியத்திற்கு ஒரு பள்ளி என்ற அடிப்படையில் மாதிரிப் பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டது. அவ்வப்போது பெற்றோர்களுடன் கலந்துரையாடல், குழந்தைகளின் விருப்பங்களைக் கேட்டறிதல் என நடந்தது.
இறுதியாக பெற்றோர்களின் உதவியுடன் ஒரு அறிக்கை தயாரிக்கப்பட்டது. 1. வகுப்பறை செயல்பாடுகள் குறைந்த அளவு இருக்க வேண்டும். 
2. விளையாட்டுக்கான நேரம் கூடுதலாக்கப்பட வேண்டும். 3. ஓய்வுக்கான சூழல் இருக்க வேண்டும். 4. எழுத்துப் பயிற்சி மிகக் குறைந்த அளவே வேண்டும் என ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டது. இது நாடு முழுவதும் சுற்றுக்கு விடப்பட்டது. பெற்றோர்களிடம் விவாதம் நடத்தப்பட்டது. இரண்டுவருடம் முன்பே கல்விக்கூட ஒழுங்குமுறைக்கு குழந்தைகள் பழகுவது மகிழ்ச்சி என்றாலும் ‘‘எங்கள் குழந்தையின் விளையாட்டுப் பருவம் இரண்டு வருடம் திருடப்பட்டு விடுமோ என அஞ்சுகிறோம்ÕÕ என பெரும்பாலான பெற்றோர்கள் கருத்துச் சொன்னார்கள். இந்த எண்ணம் குழந்தைகளுக்கு ஏற்படாத வண்ணம் அமலாக்க வேண்டும் என்றனர். அதற்கு பின்னரே சோவியத் அரசு இந்த முறையை ஏற்றுக் கொண்டது.
எனவே பெற்றோர் மாணவர் பங்கேற்புடன் கல்வித் திட்டம் அமலாவதுதான் ஒரு சிறந்த சமூக அமைப்பின் அடிநாதமாய் இருக்க முடியும். இங்கு அப்படி இருக்கிறதா? ஆசிரியர்கள், கல்வியாளர்கள் இவர்களுக்குத் துணையாக பெற்றோர்களும் மாணவர்களும் இணைந்து கல்விக்கொள்கையைத் தீர்மானிக்கும் சமூகமே கல்வியில் சிறந்த சமூகமாக இருக்க முடியும். கல்வித் திட்டம் மாறும்போது ஒரு வருடம் பரிசோதனையின் அடிப்படையில்தான் அது தீர்மானிக்கப்பட வேண்டும்.
அதே போல் சமூக, அறிவியல், புவியியல் உள்ளிட்ட மாற்றங்கள் அன்றைய  நவீன மாற்றங் களுடன் போதிக்கப்படும் வகையில் கல்விக் கொள்கை இருப்பது அவசியமானது. மேற்கண்ட அடிப்படையில் அதாவது பெற்றோர், மாணவர், ஆசிரியர், கல்வியாளர்கள், அரசு ஆகியோர் இணைந்து கல்விக் கொள்கைகளை உருவாக்க இன்னும் நீண்ட தூரம் பயணம் செல்ல வேண்டி இருக்கிறது.
இதற்கு மாற்றாக எதை முன்வைக்க விரும்புகிறீர்கள்?
பாவ்லோ பிரையர் கருத்துக்களைத்தான் நானும் முன்மொழிய வேண்டியுள்ளது. அவர் சொன்னார் ‘‘கல்வி என்பது நடுநிலையாக இருக்க முடியாது. அது வர்க்கம் சார்ந்துதான் இருக்க முடியும். இருக்கும். கல்விப் பரிமாற்றத்தில் நீங்கள் எந்தப்பக்கம்?
எல்லாவற்றையும் இழந்து தொலைந்துபோன வாழ்க்கையைத் தங்கள் உழைப்பால் தேடித்திரியும் மக்கள் பக்கமா அல்லது பலர் வாழ்க்கையைத் தொலைக்க காரணமான சுரண்டுபவர்கள் பக்கமா?” எனவே கல்வி என்பது வர்க்கம் சார்ந்துதான் இருக்க முடியும் என்பதில் நானும் உறுதியாக இருக்கிறேன். கல்வியே அப்படி எனில் பாடத்திட்டமும் அப்படித்தான் இருக்கும். உங்களுக்கு ஏற்றுக்கொள்ளச் சிரமமாக இருந்தாலும் உண்மை இதுதான்.
ஆள்பவர்களின் நலன் சார்ந்தே கல்வி காலகாலமாக இருந்துள்ளது. உயர்கல்விக்குப் போகப்போக இந்த உண்மை உங்களுக்கு தெளிவாகப் புரியும். அங்கு யாரை நிர்வகிக்க அல்லது எதை கற்பிக்க அல்லது எந்த சந்தைக்காக மாணவர்கள் உற்பத்தி செய்யப்படுகின்றனர். கல்வி தங்கள் வாழ்க்கையை மாற்றிக் கொள்ளும் ஒரு கருவியாக இருக்க வேண்டும். இந்த வெளிச்சத்தில் பார்த்தால் இன்றைய நிலை புரியும்.
ஏழைகள் அதாவது உழைப்பாளி மக்கள் வாழ்க்கையில் மாற்றம் வரவேண்டுமானால் அதற்கு தேவையான கல்விச்சூழலும், கல்வி முறையும், நாளைய சமூகத்தை உருவாக்கும் ஜனநாயகப்படுத்தப் பட்ட வகுப்பறைகளும் தேவை. இதுவே சிறந்த அரசியலாக இருக்க முடியும்.

------- ஜூலை 2011 புதிய புத்தகம் பேசுது இதழுக்காக நான் எடுத்த பேட்டி

ஞாயிறு, 24 ஏப்ரல், 2011

நாவரசு கொலையும் 15 ஆண்டுகால காத்திருப்பும்


இந்திய மாணவர் சங்கத்தின் கடலூர் மாவட்ட செயலாளராக பணியாற்றிய காலத்தில் சிதம்பரத்தில் நாங்கள் நடத்திய போராட்டங்களில் முக்கியமானது நாவரசு படுகொலையை கண்டித்து நடத்திய போராட்டங்கள். 1996 ஆண்டு தீபாவளி முடிந்த ஓரிரு நாட்களில் கொட்டும் மழையின் போது சிதம்பரம் நீதிமன்றத்திற்கு ஜான்டேவிட் அழைத்துவரப்பட்டான். நாங்கள் அவன் வருகைக்காக காத்திருந்தோம் நாங்கள் என்றால் இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த கல்லூரி, பள்ளி மாணவர்கள் 200 பேர். மழையில் நனைந்தபடி கிட்டதட்ட ஒருமணிநேரம் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டோம். ராகிங் என்ற கொடூரத்திற்கு முற்றுபுள்ளி வைத்திடு! ஜான்டேவிட்டுக்கு உரிய தண்டனை கொடுத்திடு! இதுவே எங்கள் கோஷ்மாக இருந்தது. காவல்துறை வாகனத்தில் ஜான்டேவிட் வந்து இறங்கியதும் மொத்த்க்கூட்டமும் அவனை நோக்கி முன்னேறினோம். அது காவல்துறைக்கும் எங்களுக்குமான தள்ளுமுள்ளாக மாறியது. 

மீடியாக்களில் செய்தி பரவியதும், சிதம்பரத்தில் உள்ள அனைத்துகட்சி நண்பர்களும் மறுநாள் முதல் நீதிமன்ற வளாகத்தினை சுற்றி திரண்டனர். சிதம்பரத்தின் புகழ்பெற்ற வழக்குரைஞரும், சமீபத்தில் மரணமடைந்த திரு. வெங்கட்ராமன் அவர்கள் ஜான்டேவிட்டுக்கு ஆதரவாக ஆஜரானார். எங்கள் கோபம் அவர் மீது திரும்பியது. அவருக்கு எதிராக நாங்கள் கோஷ்மிடத் துவங்க (கொஞ்சம் வரம்புமீறிய தடித்த வார்த்தைகள் வந்தது. பிறகு வருத்தப்பட்டோம் - அவரும்தான்) அவர் நிலமையை புரிந்துக்கொண்டு அந்த வழக்கிலிருந்து விலகினார். அதற்கு பின்தான் விருதாசல ரெட்டியார் ஜான்டேவிட்டுக்கு ஆதரவாக வழக்காடினார். சிதம்பரம் நீதிமன்றத்திற்கு முன்பாக தொடர்ந்து நாங்கள் ஜான்டேவிட் வரும்போதெல்லாம ஆர்பாட்டத்தை நடத்தினோம். பின்பு வழக்கு கடாலூர் செசன்ஸ் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது.

சம்பவத்தை செய்திதாள்களின் வழியே நினைவு படுத்திக்கொள்வோம்:
சென்னை பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் பொன்னுசாமி மகன் நாவரசு (17); 1996ம் ஆண்டு, கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைக் கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்த நாவரசு, அதே ஆண்டு நவம்பர் 6ம் தேதி, வகுப்பிற்கு சென்றவர் விடுதிக்குத் திரும்பவில்லை. நவம்பர் 7ம் தேதி, சென்னையில் மாநகர பஸ் ஒன்றில் கேட்பாரற்று கிடந்த சூட்கேசில், தலை, கை, கால்கள் வெட்டி எடுக்கப்பட்ட ஆண் உடல் மட்டும் கிடந்தது. இதுகுறித்து சென்னை மாநகர போலீசார் வழக்கு பதிந்து, கொலை செய்யப்பட்டவர் யார் என்பது குறித்து விசாரித்து வந்தனர். நாவரசு காணாமல் போனது குறித்து அவரது தந்தை பொன்னுசாமி, நவம்பர் 10ம் தேதி கொடுத்த புகாரின் பேரில், அண்ணாமலை நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். அதில், நாவரசுவை நவம்பர் 6ம் தேதி மதியம், அதே மருத்துவக் கல்லூரியில் படிக்கும் இரண்டாம் ஆண்டு மாணவர் ஜான் டேவிட் தனது அறைக்கு அழைத்துச் சென்றது தெரிய வந்தது. நவம்பர் 11ம் தேதி ஜான் டேவிட், ராஜமன்னார்குடி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சரணடைந்தார். அவரை போலீசார், நவம்பர் 18ல் தங்கள் காவலில் எடுத்து விசாரித்தனர். அதில், தேர்வு எழுதி விட்டு வந்த நாவரசுவை, ஜான் டேவிட் வழிமறித்து தனது அறைக்கு அழைத்துச் சென்று ராகிங் செய்துள்ளார்.அப்போது, ஜான் டேவிட் தாக்கியதில் நாவரசு மயங்கி விழுந்துள்ளார். அவர் இறந்து விட்டதாகக் கருதிய ஜான் டேவிட், வெளியில் தெரியாமல் இருக்க, தனது படிப்பிற்காக ஆய்வகக் கூடத்தில் பயன்படுத்தும், டிசக்ஷன் கருவிகளை பயன்படுத்தி நாவரசுவின் தலை, கைகள் மற்றும் கால்களை தனித்தனியாக துண்டித்துள்ளார்.

தலையை பாலிதீன் கவரில் சுற்றி, கல்லூரி வளாகத்தில் உள்ள குட்டையில் வீசியுள்ளார். பின்னர் உடலை பாலிதீன் கவரில் சுற்றி, பெரிய சூட்கேசில் அடைத்துள்ளார். அதேபோன்று, கைகள் மற்றும் கால்களை தனியாக, பேக் செய்து, சென்னை செல்லும் ரயிலில் ஏற்றிச் சென்றுள்ளார். செல்லும் வழியில், கைகள் மற்றும் கால்களை ஆற்றில் வீசியுள்ளார். உடல் இருந்த சூட்கேசை, சென்னையில் டவுன் பஸ்சில் வைத்துவிட்டு சிதம்பரம் திரும்பி வந்ததும், போலீசார் சந்தேகிக்கவே கோர்ட்டில் சரணடைந்தது தெரிய வந்தது.அதைத் தொடர்ந்து, போலீசார் ஏற்கனவே பதிவு செய்த வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தினர்.

 ஜான் டேவிட் குறிப்பிட்ட அண்ணாமலை பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள குட்டையில் தேடியதில், நாவரசுவின் தலை சிக்கியது; செங்கல்பட்டு அருகே கால்கள் சிக்கின. இதையும், சென்னையில் கண்டெடுக்கப்பட்ட உடலில் இருந்து எடுத்த திசுக்களை ஆய்வு செய்ததில், இறந்தது நாவரசு என்பது உறுதி செய்யப்பட்டது.கல்லூரியில், ராகிங் கொடுமையால் மாணவர் நாவரசு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம், உலகளவில் பெரும் பீதியை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, இந்த வழக்கில் தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்தியது. ஜான் டேவிட் மீது 1997ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி, கடலூர் செஷன்ஸ் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில், அரசு தரப்பில் சிறப்பு வக்கீலாக முன்னாள் நீதிபதி கந்தசாமியும், ஜான் டேவிட் தரப்பில் பிரபல வக்கீல் விருத்தாசலம் ரெட்டியாரும் ஆஜராகி வாதிட்டனர்.

நீதிபதி சிங்காரவேலு முன்னிலையில் நடந்த இந்த வழக்கில், 78 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்; 120 ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.வழக்கை விசாரித்த நீதிபதி சிங்காரவேலு, 1998, மார்ச் 11ம் தேதி தீர்ப்பு கூறினார். அதில், ராகிங் காரணமாக நாவரசுவை கொடூரமான முறையில் கொலை செய்த குற்றத்திற்கு ஆயுள் தண்டனையும், கொலை செய்த தடயங்களை மறைத்ததற்காக மற்றொரு ஆயுள் தண்டைன என, ஜான் டேவிட்டிற்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். அதைத் தொடர்ந்து ஜான் டேவிட், கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.கடலூர் செசன்ஸ் கோர்ட் அளித்த தீர்ப்பை எதிர்த்து ஜான் டேவிட், சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, சந்தேகத்திற்கு இடமின்றி குற்றம் நிரூபிக்கப்படாததால், ஜான் டேவிட்டை விடுதலை செய்து உத்தரவிட்டார்.

உலகமே அச்சுறும் வகையில் நடந்த கொடூர கொலை வழக்கில் கைதான ஜான் டேவிட்டிற்கு விதிக்கப்பட்ட தண்டனையை ஐகோர்ட் ரத்து செய்ததை எதிர்த்து தமிழக அரசு, டில்லி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, முகுந்தகம் சர்மா ஆகியோர் அடங்கிய சுப்ரீம் கோர்ட் பெஞ்ச், மருத்துவக் கல்லூரி மாணவர் நாவரசுவை கொடூரமான முறையில் கொன்ற, அவரது சீனியர் மாணவர் ஜான் டேவிட்டிற்கு, கடலூர் செஷன்ஸ் கோர்ட் விதித்த இரட்டை ஆயுள் தண்டனை சரியானதே என, தீர்ப்பளித்தது.

ஆக இப்படியக ஒரு கொடூர கொலையை செய்தவன் தண்டனை பெற 15 ஆண்டுகாலம் ஆகியுள்ளது. அதுவும் சென்னை நீதிமன்றம் அவனை விடுதலை செய்ததுதான் உச்சக்கட்ட சோகம். நீதி மன்றங்கள் மீது பல வழக்குகளில் மக்கள் நம்பிக்கை இழந்துள்ள நிலையில் இந்த தீர்ப்பு கொஞ்சம் நம்பிக்கையை விதைக்கிறது. ஆனால் ஒரு உலகறிந்த  கொலைகாரனுக்கு  பதினைந்து ஆண்டுகால தாமதம் கொஞ்சம் ஓவர்தான். நாவரசு மரணத்தை தொடர்ந்து 1998 ஆம் ஆண்டு உச்சநீதி மன்றத்தில் ராகிங் தடுப்பு சட்டம் இயற்றப்பட்டது. ஆனால் அத்துடன் ராகிங் கொடுமைகள் ஒழியவில்லை. தொடர்ந்து ராகிங் கொலைகள் தமிழகத்தில் நடந்துக்கொண்டுதான் இருக்கிறது. இது ஒரு சமூக உணர்வுடன் சம்பந்தப்பட்டது.
 சமூகப் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அதிகமிருக்கும் பகுதிகளின் கல்வி நிலையங்களில் ராகிங்கும் அதிகமிருக்கும் என்று சொல்கிறார்கள் சமூக ஆய்வாளர்கள். 1600களில் ஐரோப்பாவிலும் பிற பகுதிகளும் தாழ்ந்த வர்க்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு "நாகரீகம் புகட்டும்" வழி என்று அன்றைய ராகிங்கை (பென்னலிசம் என்று அப்போது அழைத்தார்கள்) அர்த்தப்படுத்தினார்கள். எனினும் அது கொலைகளுக்கும் சித்ரவதைக்கும் வழிவகுத்ததால் 1700களில் அதை தடை செய்தார்கள். 18, 19ஆம் நூற்றாண்டுகளில் பிரிட்டன் பள்ளிக்கூடங்களில் அது மீண்டும் தலை காட்டியது. இந்தியாவில் ராகிங் வேரூன்றுவதற்கு சமூகப் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் உதவியிருக்கின்றன. சமூக மாற்றமே இப்படிபட்ட சம்பவங்களை தடுத்து நிறுத்த நிறந்தர தீர்வு என்பதை இளம் தலைமுறைக்கு உரத்து சொல்ல வேண்டியுள்ளது. 

புதன், 6 அக்டோபர், 2010

கோவிந்தராஜன் குழு நிர்ணயித்த கட்டணம் செல்லும்


தமிழகத்தில் தனியார் பள்ளி களுக்கு நீதிபதி கோவிந்தராஜன் குழு நிர்ணயித்த கல்விக்கட்ட ணம் செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் செவ்வாயன்று தீர்ப்பளித்தது.

தமிழகத்தில் கல்வி தீவிரமாக வணிகமயமாக்கப்பட்டுள்ள நிலையில், ஆயிரக்கணக்கில் முளைத்துள்ள தனியார் பள்ளிகள் கல்விக்கட்டணம் என்ற பெயரில் ஒவ்வொரு ஆண்டும் மிகப்பெரும் கொள்ளையை நடத்தி வருகின் றன. இதற்கு எதிராக இந்திய மாண வர் சங்கம் உட்பட மாணவர்கள், இளைஞர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் அமைப்புகள் தொடர்ந்து போராடி வருகின்றன. இத்தகையப் போராட்டத்தில் எழுந்த நிர்ப்பந்தம் காரணமாக, தனியார் பள்ளிகளில் நடக்கும் கட்டணக்கொள்ளையை கட்டுப்படுத்தும் நோக் கில் நீதிபதி கோவிந்தராஜன் தலைமையிலான குழுவை தமிழக அரசு அமைத்தது. இந்தக்குழு பள்ளிகளில் ஆய்வு செய்து கல்விக் கட்டணத்தை நிர்ணயித்தது.

கோவிந்தராஜன் குழு நிர்ணயித்த கட்டண விகிதமே மிக அதிகமானது என்ற விமர்சனம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே எழுந்தது. ஆனால் ஏற்கெனவே மிக அதிகமாக கட்டணக் கொள்ளை நடத்தி வரும் தனியார் பள்ளி நிர்வாகங்களோ, கோவிந்த ராஜன் குழு நிர்ணயித்த கட்டண விகிதத்தை ஏற்க மறுத்தன. இது தொடர்பாக கோவிந்த ராஜன் குழு விடம் தனியார் பள்ளி நிர்வாகங்கள் முறையிட்டன. எனினும், நடப்புக் கல்வியாண்டில், இக்குழு நிர்ணயித்த கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என நீதிபதி கோவிந்தராஜன் அறிவித்தார். இதை எதிர்த்து தனியார் பள்ளிக் கூட்டமைப்பு சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், பெற்றோர்களின் கருத்தை அறிந்து கொள்ளாமல் கோவிந்தராஜன் குழு நிர்ணயித்த கட்டண விகிதத்தை அமலாக்க இடைக்கால தடை விதித்தது.

தடை விதிக்கப்பட்ட உடனே, தனியார் பள்ளிகள் தங்கள் இஷ் டம்போல் வரைமுறையற்ற கட்டணக்கொள்ளையை உடனடியாக தீவிரப்படுத்தின. இதற்கு எதிராக இந்திய மாணவர் சங்கமும் பெற்றோர்களும் தன்னெழுச்சியாக கட்டணக் கொள்ளையை எதிர்த்து போராடி வந்தனர். நீதிமன்றத்தின் தடையை எதிர்த்து தமிழக அரசு உடனடியாக மேல்முறையீடு செய்யவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து வலியுறுத்தியது. ஆனால் தமிழக அரசு அதை அலட்சியப்படுத்திய நிலையில், இந்திய மாணவர் சங்கம், ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் பெற்றோர்கள் மேல்முறையீடு செய்தனர்.

இந்த மேல்முறையீட்டு மனு செவ்வாயன்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.ஒய்.இக்பால், பி.எஸ். சிவஞானம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், நீதிபதி கோவிந்தராஜன் குழு நிர்ணயித்த கல்விக்கட்டணம் செல்லும் என்று அறிவித்தனர். தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* தமிழகம் முழுவதுமுள்ள 6 ஆயிரத்து 400 தனியார் கல்வி நிறுவனங்கள், கோவிந்தராஜன் குழு கட்டண விகிதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அவர்களது எதிர்ப்பினை நீதிமன்றம் தள்ளு படி செய்கிறது.

* இந்த அனைத்துகல்வி நிறுவ னங்களும் 2010 ஜூன் மாதத்தில் துவங்கிய கல்வியாண்டில் வசூ லித்த கட்டணத்தைத்தவிர கூடுதலாக எந்த கட்டணமும் வசூலிக் கக்கூடாது. அதாவது இந்தக்கட்டணமும் 2009-10ஆம் கல்வி யாண்டில் நிர்ணயிக்கப்பட்ட அளவே இருக்க வேண்டும். 2010 மே 7ஆம் தேதியிட்ட கோவிந்தராஜன் குழுவின் உத்தரவில் நிர்ணயிக்கப்பட்டதைவிட கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்பட்டிருந்தால், கூடுதலாக வசூலிக்கப்பட்ட தொகை மாணவர்களின் டெபாசிட் தொகையாக வைத்திருக்கப்படவேண்டும்; இந்ததொகை குறித்து கட்டண நிர்ணயக்குழு எடுக்கும் இறுதிமுடிவுக்கு கல்வி நிறுவனங்கள் கட்டுப் படவேண்டும்.

* மேற்கண்ட 6 ஆயிரத்து 400 கல்வி நிறுவனங்களால், இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்பு, கூடுதல் கட்டணம் ஏதும் வசூலிக்கப்பட்டிருந்தால் அந்தத்தொகையும் டெபாசிட் தொகையாக வைக்கப்பட வேண் டும். இதுகுறித்தும் கட்டண நிர்ணயக்குழு மேற்கொள்ளும் இறுதி முடிவுக்கு கட்டுப்பட வேண்டும்.

* கட்டண நிர்ணயக்குழுவின் உத்தரவை ஏற்றுக்கொண்ட 4 ஆயிரத்து 534 கல்வி நிறுவனங்கள், இக்குழுவின் உத்தரவில் அனுமதிக்கப்பட்டுள்ள அளவைவிடக் கூடுதலாக எந்தத்தொகையும் வசூலிக்கக்கூடாது.

* எதிர்ப்பு தெரிவித்துள்ள கல்வி நிறுவனங்களின் கருத்துக்களை கட்டண நிர்ணயக்குழு தனிப்பட்ட முறையில் கேட்டுக் கொள்ளலாம். கட்டண நிர்ணயக் குழு, தனியார் பள்ளிகளின் கோரிக்கைகளை பரிசீலித்து 4 மாதத்திற்குள் இறுதி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

* 6 ஆயிரத்து 400 கல்வி நிறு வனங்களும் தங்களது கருத்துக் களை கமிட்டியிடம் தெரிவிக்க அனுமதிக்கப்படுகிறது.

* எந்த ஒரு கல்விநிறுவனமும் எந்தப் பெற்றோரிடமிருந்தும் எந்தவிதமான கூடுதல் கட்டண மும் வசூலிக்க அனுமதி இல்லை.

இவ்வாறு அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

------------------------------------------------------------------------------நன்றி தீக்கதிர்

புதன், 29 செப்டம்பர், 2010

பள்ளிக் கட்டணம் : தடுமாறும் அரசு





ஜூலை 2009ல் தமிழ்நாடு சட்டமன்றம் தமிழ்நாடு பள்ளிகள் (கட்டணம் வசூல் ஒழுங்குபடுத்துதல்) மசோதாவை நிறைவேற்றியது. பின்னர் ஆளுநர் ஒப்புதலுடன் சட்டமானது. இச்சட்டத்தை செயல்படுத்த விதிகளும், சட்டத்தின்படி கட்டணம் தீர்மானிக்கும் குழுவும் அமைக்கப்பட்டது. மாநில அளவில் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழுவும், மாவட்ட அளவில் முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் குழுவும் அமைக்கப்பட்டு இக்குழுக்களின் செயல்பாடுகளும் தீர்மானிக்கப்பட்டன.

கட்டணம் தீர்மானிக்க காரணிகள் :

- அமைவிடத்திற்கு தகுந்தாற் போல்

- உள்கட்டமைப்பிற்கு தகுந்தாற்போல்

- எதிர்கால வளர்ச்சிக்கு தேவையான நிதி

- குளிர் சாதன வசதி, நூறு விழுக்காடு தேர்ச்சி

உட்பட பல காரணிகள் வகுக்கப்பட்டிருக்கிறது.

சமச்சீர் கல்வி கொள்கைக்கு முரணானது
மேற்சொன்ன காரணிகள் தமிழ்நாடு அரசு கொள்கை முடிவாக அறிவித்திருந்த "தரமான கல்வியை சமச்சீராக அனைவருக்கும் வழங்கும் சமச்சீர்க் கல்வி கொள்கைக்கு எதிரானது. அனைத்துப் பள்ளிகளிலும் உள்கட்டமைப்பு ஒரே சீராக இருக்காது எனச் சட்டப்படி ஒப்புக்கொள்வதாக அமைந்துள்ளது. குளிர் சாதன வசதி போன்றவை கற்றலுக்கு தொடர் பில்லாதது. பள்ளியின் அடிப்படை தேவை யாக ஏற்றுக்கொள்ள முடியாது. 100 சதவீத தேர்ச்சிக்கு பள்ளிகள் பின்பற்றும் விதிகளுக்கு முரணான நடைமுறைகள், குழந்தை உரிமை மீறல் ஆகியவை யாவரும் அறிந்ததே. 100சத வீத தேர்ச்சி என்பது கல்வியின் இலக்காக இருக்க முடியாது. 10 வருடம் பள்ளிக் கல்வியை முடித்த மாணவர் எத்திறன்களை பெற்றிருக்க வேண் டும் என அறிந்துகொள்ள, நெட்டுரச் செய்து பெறப்பட்ட 100சதவீத தேர்ச்சி பயன் படுமா? திறன்களை வளர்த்திடாமல் தேர்ச்சியை மட்டும் காட்டும் பள்ளிகள் தரமானவையா? இவ்வாறான விமர்சனங்கள் இச்சட்டத்தின் மீது வைக்கப்பட்டது. பெற்றோரை, மாணவரை கருத்தில் எடுத்துக் கொள்ளாமல் பள்ளி நிர்வாகம் அதன் தேவை மட்டுமே கருத்தில் எடுத்து உருவாக்கப்பட்ட சட்டம் இது.

கட்டணம் தீர்மானிக்கும் குழுவில் மாவட்ட அளவில் கூட பெற்றோரின்/மாண வரின் பிரதிநிதி கிடையாது. தீர்மானிக்கப்பட்ட கட்டணம் குறித்து குழுவிடம் கருத்து தெரிவிக்க மேல் முறையீடு செய்ய பெற்றோருக்கு சட்டத்தில் வாய்ப்பில்லை. ஆனால் இவ்வாய்ப்புகள் பள்ளி நிர்வாகத்திற்கு தரப்பட்டுள்ளது.

சட்டமே கூடாது

நிர்வாகத்திற்கு இவ்வளவு சாதகமான சட்டத்தைக் கூட எதிர்த்து தனியார் பள்ளிகள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்கள். நாங்கள் முதலீடு செய்து பள்ளியை உருவாக்கி உள்ளோம். ஆசிரியர் சம்பளம் முதல் அனைத்தையும் நாங்களே தருகிறோம். எனவே எங்கள் கட்டணத்தை தீர்மானிக்க எங்களுக்கே உரிமையுண்டு. இதில் அரசு தலையீடு கூடாது என்பதே அவர்களின் வாதம். அவர்களின் வாதம் உயர்நீதிமன்றத் திலும், உச்ச நீதிமன்றத்திலும் நிராகரிக்கப் பட்டது. பிரிவு 11 தவிர சட்டம் செல்லும் எனவும் நீதியரசர் கோவிந்தராசன் தலைமையில் இயங்கும் குழு தன் பணியை தொடரலாம் என நீதிமன்றங்கள் கூறிவிட்டன.

குழுவின் நடவடிக்கை

நீதியரசர் கோவிந்தராசன் தலைமை யிலான குழு 22 கேள்விகளை அடங்கிய படி வத்தை தயார் செய்து அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி வைத்தது. விடைகளுடன் திரும்ப பெறப்பட்ட படிவங்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமை யிலான குழு சரிபார்த்தது. உப குழுக்கள் அமைக்கப்பட்டு பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை எடுத்துக்கொண்டு பள்ளிகளுக்கு நேரடியாக சென்று ஒவ்வொரு பதிலும் ஆய்வு செய்து சரிபார்க்கப்பட்டது. அதன்பின், மேலும் சில விளக்கங்கள் கேட்கப்பட்டன. அதுவும் பெறப்பட்டது. பள்ளிகள் தந்த தகவலின் அடிப் படையில் கட்டணம் பள்ளிக்குப் பள்ளி, வகுப் பிற்கு வகுப்பு தனித்தனியாக தீர்மானிக்கப் பட்டு பள்ளி முதல்வர்கள் கையில் நேரடியாக மாவட்ட கல்வி அலுவலர் மூலம் சீல் வைக்கப்பட்ட கவரில் வழங்கப்பட்டது.

கட்டண மர்மமும் - பெற்றோரின் தவிப்பும்

ஒவ்வொரு பள்ளிக்கும் தீர்மானிக்கப்பட்ட கட்டணம் எவ்வளவு என பள்ளியின் முதல்வர் மற்றும் தாளாளர் தவிர வேறு எவருக்கும் தெரியாது. அந்தந்த பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்க்கோ, பயிலும் மாணவர்க்கோ கூட அது தெரியாது. அவ்வளவு ரகசியமாக அரசால் தரப்பட்டு, பள்ளியால் மறைக்கப்பட வேண் டிய காரணம் என்ன? அரசு நிர்ணயித்த கட்டணத்திற்கு மேல் வசூல் செய்தால் நட வடிக்கை! அதிக கட்டணம் வசூல் குறித்து புகார் வந்தால் அங்கீகாரம் ரத்து!

என விதவிதமான தலைப்புகளில் ஊடகங்கள் செய்தியை வெளியிட்டு வந்தன. தீர்மானித்த கட்டணம் என்ன? என்று தெரிந்தால்தானே வசூலிப்பது அதைவிட அதிகமா என அறிந்து புகார் சொல்ல! அரசு நிர்ணயித்த கட்டணம் என்ன என்று பொதுமக்களுக்கு அறிவித்தால்தானே அதைவிட அதிகம் வசூலிக்கப்படுகிறதா என்று தெரிந்து கொள்ள!

வெளிப்படைத் தன்மையில்லா சூழ்நிலை யில் எந்த கட்டணம் கட்டுவது என தவித்து நிற்கின்றனர் பெற்றோர். தவிப்பு கொதிப்பாகி மறியலாகவும் முற்றுகையாகவும் மாறியது. அரசோ மவுனம் காத்தது. பள்ளி நிர்வாகமோ பெற்றோரை பந்தாடத் தொடங்கியது.

பள்ளிகளின் மேல் முறையீடு

தனக்கிருந்த மேல்முறையீடு செய்யும் உரிமையை பயன்படுத்தும் பொறுமை கூட இல்லாமல் கட்டணம் தீர்மானிக்கப்பட்டு பள்ளிகளுக்கு தரப்பட்டவுடனேயே பள்ளிகளை திறக்க மாட்டோம் என சில தனியார் பள்ளி நிர்வாகிகள் சங்கம் அறிவித்தன.

தனியார் பள்ளிகளின் மிரட்டலுக்கு அரசு அடிபணியாது என பள்ளிக் கல்வி அமைச்சர் உறுதியுடன் கூறினார். அதே உறுதி முத லமைச்சரிடம் இல்லாமல் போனதுதான் வேதனை. செம்மொழி மாநாட்டை எப்படி யாவது நடத்தி முடிப்பதையே தன் வாழ்நாள் லட்சியமாக கொண்டு செயல்பட்டுக் கொண் டிருந்த வேளையில் அவருக்கு பெற்றோரின் தவிப்பு புரியவில்லை. தனியார் பள்ளி முதலாளிகளின் மிரட்டலே பெரிதாக இருந்தது. அதனாலேயே, மேல் முறையீடு செய்தால் உரிய முறையில் பரிசீலிக்கப்படும் என்றார். முதலமைச்சர் இவ்வாறு கூறும் வரை சில நூறு மேல் முறையீடு மனுக்கள் மட்டுமே வந்திருந்தது. முதலமைச்சரின் இந்த அறிவிப்பு தனியார் பள்ளிகளுக்கு தெம்பூட்டியது. உற்சாகமடைந்த தனியார் பள்ளிகள் மேல் முறையீட்டு மனுக்களை குவிக்கத் தொடங்கின. ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் நீதிபதி கோவிந்தராஜன் குழுவால் பெறப்பட்டது.

கட்டணம் ஏற்க மறுத்ததற்கு சொல்லப்பட்ட காரணங்கள்

தங்களுக்கு கட்டணம் மூன்றாண்டு களுக்கு பொருந்தும் எனத் தெரியாது.

கட்டணம் தீர்மானிக்கத்தான் கேள்விகள் கேட்கப்பட்டன என்றும் தெரியாது.

இந்த கட்டணத்தை வைத்து பள்ளி நடத்த முடியாது.

இப்படி காரணம் கூறிய பள்ளிகள்தான் உயர் நீதிமன்றத்தில் சட்டத்தையே செல்லாது என அறிவிக்கக் கோரிமனு செய்தவர்கள். சட்டத்தில் மூன்றாண்டுகளுக்கு பொருந்தும் என எழுதி உள்ளதே அது தெரியாமலா வழக்கு போட்டார்கள்? நீதியரசர் கோவிந்தராசன் குழுவிடம் இருந்து கேள்விகள் வந்தால் வேறு எதற்கு வரப்போகிறது? எங்கிருந்து கேள்வி வந்தாலும் பதில் ஒன்றாகத்தானே இருக்க முடியும். வேறு வேறு நபர்களிடமிருந்து கேள்விகள் வந்தால் பதிலும் வேறு வேறாகவா இருக்கும்? எனவே, இந்த இரண்டு கூற்றும் நியாயமற்றவை. மேலும், இந்த ஆண்டு அரசு நிர்ணயித்த தொகையை வசூல் செய்தால் பள்ளியை நடத்த இயலாது என்றால் கடந்த ஆண்டு வசூல் உபரி இருந்திருக்கும் அல்லவா? அதை என்ன செய்தார்கள்?

கல்வி உரிமைச் சட்டம் 2009

பொதுப் பள்ளி மூலம் கல்வி உரிமையை வழங்காமல் தனியார் - அரசு கூட்டு என்ற அளவில் அறிமுகமாகியிருக்கும் கல்வி உரிமைச் சட்டத்தில் கூட பள்ளியை நிர்வகிக்க ஒரு நிர்வாகக் குழு அமைக்கப்பட வேண்டும். அந்த குழுவில் 75 பேர் பெற்றோராகவும் அதில் 50 பெண்களாகவும் சமூகத் தின் அனைத்து பிரிவு மக்களையும் பிரதி நிதித்துவப்படுத்தும் வகையில் இட ஒதுக் கீட்டுடன் அக்குழு பள்ளியை நிர்வகிக்க வேண்டும்.

ஒவ்வொரு பள்ளியும் இத்தகைய நிர்வாகக் குழுவை அமைத்து அதன்மூலம் ஆசிரியர் நியமனம் முதல் பள்ளிக் கட்டணம் தீர்மானிப் பது வரை அனைத்து நிர்வாகப் பணிகளையும் அதுவே செய்ய வேண்டும். எனவே, பள்ளி நிர் வாகத்தை முதலில் இவர்கள் சட்டப்படி நிர்வாகக் குழு அமைத்து அதனிடம் ஒப்படைக் கட்டும்.

பள்ளியை தொடங்க அரசுதான் அனுமதி அளிக்கிறது. நிர்வகிக்க இயலாவிட்டால் அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும். பள்ளி யை அரசே ஏற்று நடத்த வேண்டும். அல்லது பள்ளியை என்ன செய்வது என்று அரசு தான் முடிவு செய்ய வேண்டும். அவ்வாறு இருக்க பள்ளியை மூடுவேன் என்று மிரட்டுவது சட்ட விரோதமானது.

அரசு யார் பக்கம்?

பொறுப்புணர்வுடன் சிக்கலை தீர்த்து அமைதியான கற்றல் சூழலுக்கு வழி செய்ய வேண்டும். தனியார் பள்ளி நிர்வாகம்தான் பெரியது என்ற எண்ணத்தை அரசு கைவிட்டு, மக்கள் தேர்ந்தெடுத்திருக்கும் அரசு, அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கையையும் ஆராய்ந்து பெற்றோரின் கொதிப்பை தணிப்பதற்கும் சிக்கலை தீர்ப்பதற்கும் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.


-பு.பா. பிரின்ஸ் கஜேந்திரபாபு
கட்டுரையாளர் : பொதுச் செயலாளர், பொதுப் பள்ளிக்கான மாநில மேடை

திங்கள், 23 ஆகஸ்ட், 2010

கும்பகோணத்தில் எரிந்து சிதைந்த்து உங்கள் குழந்தைகள் இல்லைதானே?

    
16.07.2004 ஆண்டு காலையில் கும்பகோணத்தில் 94 குழந்தைகள் கல்வி வியாபார தீயால் பொசுக்கப்பட்டனர். அந்த கொடூரம் நிகழ்ந்து ஆறு ஆண்டுகள் உருன்டோடி விட்டது. அந்த சம்பவம் நிகழ்ந்த சில மணி நேரங்களில் அங்கு சென்றதும், எரிந்து உருகி கிடந்த பிஞ்சுகளை பார்த்ததும், அவர்களின் பெற்றோர்கள் கதறி துடித்ததும் நேற்று நடந்தது போல இன்னும் கண்முன்னே உள்ளது.
சம்பவம் நடந்தது பத்திரிக்கைகள் பக்கம் பக்கமாய் கவர் ஸ்டோரிகளை தீட்டினர், தீயே உனக்கு இதயம் இல்லையா? சாவே உனக்கு சாவு வராதா? என்றெல்லாம் கருப்பு வண்ணத்தில் போஸ்டர்கள் தமிழகம் முழுவதும் ஒட்டப்பட்டது. நமது அரசாங்கம் வழக்கம் போல உடனடியாக விசாரனை கமிஷன் அமைத்தது. இந்த தேசத்தில் மலிவாகவும் விரைவாகவும் அமைக்கப்படுவது கமிஷன்கள் மட்டும்தான் என்பது மீண்டும் நிருபனமானது.  கூரை இருக்கும் பள்ளிகள் உடன் அப்புறப்படுத்தப்பட்டன. கூரை உள்ள பள்ளிகளுக்கு அனுமதி இல்லை என அரசு அறிவித்தது. இந்த கலோபரங்களில் அந்த குழந்தைகள் மரணத்திற்கு அந்த கும்பகோணம் பள்ளியில் இருந்த கூரை மட்டுமே காரணம் என்று காரணம் காட்டப்பட்டது. எரிந்தது வெறும் தீயா? பற்றியது வெறும் கூரை மட்டும்தானா? கருகியது வெறும் பிஞ்சுகளின் உடல்கள் மட்டும்தானா?
   இல்லை நிச்சயம் இல்லை. கல்வி வியாபாரிகளின் லாபவெறியால் அந்த குழந்தைகள் குடிசைகளில் வைத்து எரிக்கப்பட்டனர். குறுகலாக உயர்ந்து நின்ற ஒரே கட்டிடத்தில் சரஸ்வதி ஆங்கிலப் பள்ளி, சரஸ்வதி தொடக்கப் பள்ளி, கிருஷ்ணா பெண்கள் உயர்நிலைப் பள்ளி ஆகியவைகளை நடத்தி அதனுள் ஆயிரக்கணக்கான மாணவர்களை ஆட்டுக்குட்டிகளை போல அடைத்து பணம் ஒன்றே குறிக்கோலாய் அலைந்தவர்கள் லாப வெறிதானே இந்த கொலைகளுக்கு காரணம். அந்த கல்வி நிலைய பணவெறியர்கள் மட்டுமல்ல, அந்த பள்ளிக்கு அனுமதி வழங்கியவர்கள், அந்த பள்ளியை இத்தனை ஆண்டு காலம் அனுமதித்த அரசாங்கம் ஆகியவர்கள் குற்றவாளிகள் இல்லையா? குற்றம் நடந்து ஆறு ஆண்டுகள் கடந்துவிட்டது. இன்றுவரை குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை.
    அப்போது இருந்த ஜெயலலிதா ஆட்சிமாறியது. கருனாநிதியின் ஆட்சி வந்தது. இருப்பினும் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாமல் இழுத்தடிக்கப்பட்டது. குழந்தைகளை இழந்த பெற்றோர்கள் மற்றும் மக்கள் இயக்கங்கள் தொடர்ந்து போராடியதன் விளைவாக வழக்கு வேகம் பிடித்தது. அதன் பின்பு 24 நபர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 486 நபர்கள் சாட்சிகளாக சேர்க்கப்பட்டனர். தேனொழுக பேசும் தற்போதைய முதல்வர் வார்த்தைகளை நம்பிய அப்பாவி பெற்றோர்கள் எப்படியும் நீதி கிடைக்கும் என்று நம்பினர். ஆனால் நடந்தது சோகமானது. ஆறு ஆண்டுகளாக இந்த சாட்சிகளில் ஒருவர் கூட விசாரிக்கப்பட்டவில்லை. வழக்கு இன்னும் முழுமையான விசாரனைக்கு வரவில்லை. ஆனால் குற்றப்பத்திரிக்கையில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பழனிசாமியும் மாவட்ட தொடக்க கல்வி இயக்குனர் கண்ணனையும் வட்டாச்சியர் பரமசிவத்தையும் இந்த வழக்கிலிருந்து விடுவித்துள்ளனர். நமது நீதிமான்கள் குற்றம்சாட்டப்பட்ட குற்றவாளிகளை ஒரு சாட்சியைகூட விசாரனை செய்யாமல் விடுவித்துள்ளனர். குற்றவாளிகளில் இன்னும் பலர் அரசு சம்பளம் பெற்று ஆடம்பரமாய் வாழ்ந்து வருகினறனர். குழந்தைகளை தீயில் பறிகொடுத்த பெற்றோர்கள் நடுவீதியில் ஆற்றாமையால் ஆறாய் கண்ணீர் வடித்துக்கொன்டிருக்கின்றனர்.
    நமது நீதிமான்கள் தானாகவே இவர்களை விடவில்லை நமது தமிழக அரசாங்கம் இந்த மூன்று பேரையும் இந்த வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தது. ஆகவே விடுவிக்கப்பட்டனர் என்று இவ்வழக்கில் அரசின் சார்பில் ஆஜராகும் வழக்கறிஞர் மதுசூதனன் கூறுகிறார். இது நியாயமா? நீதியா? அரசின் இந்த வஞ்சகம் சரியானதா? எளிவர்கள் குழந்தைகள் எரிந்து கரிக்கட்டையாய் ஆனால் ஆள்பவர்கள் இப்படிதான் நடந்துக்கொள்வார்களா? கன்றுவின் மரணத்திற்கு நீதி கேட்ட பசுவின் கேள்விக்கு தனது மகனை தேர்ச்சக்கரத்தில் பலியிட்ட மனுநீதி அரசனின் வாரிசு என்று இலக்கிய வாய்வீச்சு வீரர்களின் ஆட்சியில் இந்த அநீதி நடக்கலாமா?   
 இவர்கள் இலட்சனம் கூட நமக்கு தெரியும். ஆனால் சமூகத்தின் பொதுவெளியில் இதை எதிர்த்து ஆத்திரம் வர மறுப்பதுதான் மிகவும் ஆபத்தானது. இந்த கொடூரத்தை நமது ஊடகங்கள் வழக்கம் போல மூடி மறைத்து அன்றைய தினத்திலும் மாணாட மயிலாட உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் மூழ்கினர். செய்திதாள்களில் ஓரத்தில் இந்த செய்தி மறைக்கப்பட்டது. போபால் விஷவாயு தீர்ப்பில் அய்யோக்கியன் ஆண்டர்சன் குற்றவாளி பட்டியலில்  இருந்தும் அவனை கைது செய்ய வக்கில்லாத அரசும், அவனுக்கு தண்டனை தர மறுக்கும் நீதிமன்றமும் உள்ள நமது தேசத்தில் சமூக பொதுவெளி போராட்டங்களே நீதியை பாதுகாக்கும். 
நண்பர்களே கும்பகோணத்தில் எரிந்து சிதைந்த்து நமது குழந்தைகள் இல்லைதானே? அதனால் மவுனமாய் இருக்க போகிறோமா? இல்லை வீதியில் இறங்கி போராட போகிறோமா? கும்பகோணத்தில் பற்றிய தீ தேசத்தை எரித்தும் முன் விழித்திடுவோம்!

ஞாயிறு, 13 ஜூன், 2010

நன்கொடை கொள்ளை தடுப்பு - ஒரு ஆலோசனை




தமிழகத்தில் சமச்சீர்கல்வி கேட்டு போராட்டங்கள் தொடர்ந்துக்கொண்டிருக்கும் சூழலில், தமிழக அரசு வழக்கம் போல நாங்கள் அதைச்செய்வோம் என்று அறிவித்தது. சமச்சீர்கல்வி கேட்ட இடத்தில் பாடதிட்டங்களை சில வகுப்புகளுக்கு ஒரே மாதரி மாற்றி அமைத்துவிட்டு சமச்சீர் கல்வி கொடுத்துவிட்டதாக மார்தட்டிக்கொண்டிருக்கிறது. "சமச்சீர்கல்வி கொடுத்த சரித்திர நாயகனே" என்று போஸ்டர் வேறு. அதுசரி இலங்கைக்கு தனது பாராளுமன்ற உறுப்பினர்களை அனுப்பிவிட்டு "இலங்கை பிரச்சனையை தீர்த்த இந்திய  தலைவா" என்று போஸ்டர் ஒட்டியவர்கள்தானே!

ஜூன் மாதம் பெற்றோர்களுக்கு கடுமையான சோதனை மிக்க மாதம். நன்கொடை என்ற பெயரில் தநியார் கல்வி "கடைகள்" அடிக்கும் கொள்ளைக்கு அளவே இல்லை. இக்கல்வி நிறுவனங்களின் கட்டணத்தை முறைபடுத்த அமைக்கப்பட்ட கோவிந்தராஜன் குழு மூவாயிரம் முதல் பதினோராயிரம் வரை கட்டணத்தை நிர்ணயம் செய்தது. அவ்வுளவுதான் கொதித்தெழுந்துவிட்டார்கள் நம்முடைய கல்வி வள்ளள்கள். அது எப்படி தனியார் பள்ளிகளின் உரிமையில் அரசு தலையிடலாம் என போராட துவங்கிவிட்டனர். ஊடகங்கள் வாயிலாக பள்ளிகளை திறக்க மாட்டோம், கட்டணத்துக்கு ஏற்ப தரமற்ற கல்விதான் கொடுப்போம் என அரசுக்கு சவால் விடுக்கின்றனர். மற்றொருபுறம் அவர்கள் கட்டணத்தை கொஞ்சமும் குறைக்காமல் "துண்டு சீட்டு பில்" போடுகின்றனர். வாங்கிய தொகைக்கு ரசீது கேட்டால் வேறு பள்ளியில் சேர்த்துக்கொள்ளுங்கள் என மிரட்டல் வேறு. அரசாங்கம் சட்டம் எல்லாம் இவர்களை எதுவும் செய்யமுடியவில்லை. தினமும் செய்தி தாள்களில் அரசு அதிகாரிகள் அதிரடி சோதனை என்று செய்தி வந்துக்கொண்டே இருக்கிறது. எனினும் தனியார் பள்ளிகளில் கொள்ளை தொடர்கிறது.

பெரம்பலூரில் உள்ள கோல்டன் கேட்வே ("தங்க வாயில்" யாருக்கு என்று அவர்கள் வாங்கும் கட்டணத்தை பார்த்தால் தெரியும்) என்ற பள்ளியில் எல்.கே.ஜி சேர்க்க கட்டணம் 16 ஆயிரம். கடந்த 05.06.10 அன்று இந்திய மாணவர் சங்கமும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும் பெற்றோர்களுடன் இனைத்து நடத்திய போராட்டத்திற்கு பிறகு 6 ஆயிரம் ரூபாய் கட்டணத்தில் குறைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் உள்ளிட்ட பலஇடங்களில் போராட்டம் நடந்தால் அங்குள்ள பள்ளிகள் கட்டணத்தை குறைத்துள்ளன. சட்டம் போட்டு தடுக்கமுடியாததை மக்கள் போராட்டம் தடுக்கும் அனுபவம் மிகவும் முக்கியமானது.

1990 களில் நான் இந்திய மாணவர் சங்கத்தின் கடலூர் மாவட்ட செயலாளராக பணியாற்றிய போது சிதம்பரம் நகரில் (Anti Donation Action Committee - ADAC) அடாக்  என்ற அமைப்பை மாணவர்கள், பொற்றோர்கள், சமூக அமைப்புகளை ஒன்றினைத்து உருவாகினோம். ஜூன் மாதத்தில் அந்த நகரில் நன்கொடை வாங்கும் பள்ளிகளுக்கு எதிராக வலுவான போராட்டங்களை செய்தோம். அது பெருபாலும் தகராறில்தான் முடியும். பிறகு காவல்துறை அரசு அதிகாரிகள் தலையிடுவார்கள். அந்த நகரில் எந்த பள்ளிகளாலும் நன்கொடை கொள்ளையை தொடர முடியவில்லை. பல பெற்றோர்கள் எங்களது எஸ்.எப்.ஐ அலுவலகத்திற்கு வந்து தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்துக்கொள்வர்.

 இது ஒரு சிறிய அனுபவம்தான் எனினும் இதை நாம் தமிழகம் முழுவதும் ஏன் பயன்படுத்த கூடாது? அரசு அனைத்து வட்டங்களிலும் இப்படிபட்ட நன்கொடை கண்காணிப்பு குழுக்களை ஏன் ஏற்படுத்தக்கூடாது. பெற்றோர்கள், மாணவர்கள், அணைத்து அரசியல் கட்சியை சார்ந்தவர்கள், சமூக ஆர்வளர்கள், அரசு அதிகாரிகள் கொண்ட குழுவாய் அது இருக்கும் போது அதிகாரிகளின் தவறும் தடுக்கப்படும். முனைப்பான மக்கள் பங்கேற்பும் கிடைக்கும். 
திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக்கொண்டே இருக்குது, அதை சட்டம் போட்டு தடுக்குற கூட்டம் தடுத்துக்கொண்டே இருக்குது, கல்வி திருடர்கள் தானாய் திருந்தமாட்டார்கள். திருடும் கூட்டத்தை மக்கள் ஒன்றினையாமல் தடுக்க முடியாது. அரசு மக்களை பயன்படுத்துமா?  மக்களை பார்வையாளர்களாக வைத்தே ஆட்சியை தக்கவைப்பவர்களா இதை செய்வார்கள் ?
                                           18.06.2010 அவள் விகடன் இதழில் வந்த பேட்டி

வியாழன், 22 ஏப்ரல், 2010

காமராஜர் பிறந்த மண்ணில் அரசு உயர்கல்வி நிலையங்கள் இல்லை



படங்கள்
1 .போராட்டத்தை துவக்கி வைத்து பேசும் மார்க்சிஸ்ட் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி  
2 .வாழ்த்துரை வழங்கிய மாநில செயலாளர் எஸ். கண்ணன் 
3 .போராட்டத்தில் கலந்துக்கொண்ட தோழர்கள் மற்றும் தலைமையேற்ற மாவட்ட தலைவர்கள் பாலசுப்பிரமணியன்,  முருகன்   
4 போராட்த்தை முடித்துவைத்து மாநிலத்தலைவர்  ரமேஷ்பாபு  






எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்ற, தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, பெருந்தலைவர் என்றெல்லாம் புகழப்படுகிற, இறந்த பிறகு பாரத ரத்னா விருது வழங்கப்பட்ட, பொதுவாக காமராஜர் என்றழைக்கப்படும் குமாரசாமி காமராஜ்  தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மட்டுமல்ல கல்விக்கண் திறந்த தலைவர் என்றும் அழைக்கப்படுபவர்.
1954 ஆம் ஆண்டு அப்போதைய சென்னை மாகாணத்தின் முதலமைச்சராகி 9 ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராக பதவி வகித்தார். தமிழகத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.  ராஜாஜி கொண்டு வந்திருந்த 'குலக்கல்வித் திட்டத்'தினைக் கைவிட்டதும், அவர் காலத்தில் நிதிநிலையைக் காரணம் காட்டி மூடப்பட்டிருந்த 6000 பள்ளிகளைத் திறந்ததும், மேற்கொண்டு 12000 புதிய பள்ளிகளைத் தோற்றுவித்ததும் காமராஜரின் தலைசிறந்த பணிகளாகும். அவரது ஆட்சிக் காலத்திற்குள் தமிழகத்தில் பள்ளிகளின் எண்ணிக்கை 27000 ஆனது. அவரது மதிய உணவுத் திட்டம் இன்று உலக அளவில் பாராட்டப்படும் திட்டமாகும். அதன் பலனாக பள்ளிகளில் படிப்போரின் எண்ணிக்கை 37 சதவீதமாக உயர்ந்தது. (வெள்ளையர் காலத்தில் இது 7 சதவீதமாக இருந்தது). பள்ளிகளில் வேலைநாட்கள் 180-லிருந்து 200 ஆக உயர்த்தப்பட்டது.

இவர் பிறந்த மாவட்டம் விருதுநகர். தென்மேற்கில் திருநெல்வேலி மாவட்டமும், மேற்கில் கேரள மாநிலமும் வடமேற்கில் தேனி மாவட்டமும் இம்மாவட்டத்தின் எல்லைகளாக அமைந்துள்ளன. இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 17,51,301 மக்கள் இம்மாவட்டத்தில் வசிக்கின்றார்கள். இதில் 44.39% நகர் புற மக்கள் தொகையாகும். அருப்புக்கோட்டை, காரியாபட்டி, இராஜபாளையம், சாத்தூர், சிவகாசி, ஸ்ரீவில்லிப்புத்தூர், திருச்சுழி, விருதுநகர் ஆகிய வட்டங்களை கொண்ட இங்கு தீப்பெட்டி தொழிற்சாலைகள் சிவகாசி சாத்தூர் விருதுநகர் பகுதிகளிலும், வெடிபொருட்கள், ஆப்செட்பிரஸ் சிவகாசி பகுதிகளிலும், நிப் தொழிற்சாலை சாத்தூர் பகுதியிலும், கைத்தறி விசைத்தறி நெய்யும் தொழில்கள் ரஜபாளையயம் பகுதியிலும், சென்னை சிமென்ட் துலுக்கப்பட்டியிலும், தமிழ்நாடு சிமென்ட், தமிழ்நாடு ஆஸ்பெட்டால் கம்பெனிகள் ஆலங்குளம்பகுதியிலும், டிவிஎஸ் வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் கம்பெனி ஆவியூர் பகுதியிலும் அமைந்துள்ளது. நிறைய தொழிற்சாலைகளும் தொழிலாளர்களும் நிறைந்துள்ள
இம்மாவட்டத்தில் தற்போது 1426 துவக்கப்பள்ளிகளும், 171 நடுநிலைப்பள்ளிகளும், 76 உயர்நிலைப்பள்ளிகளும், 107 மேல்நிலைப்பள்ளிகளும், 12 அறிவியல் மற்றும் கலைக்கல்லூரிகளும், 4 ஆசிரியர் பயிற்சிபள்ளிகளும், 4 பொறியியல் கல்லூரிகளும், 8 பாலிடெக்னிக்குகளும், 15 ஐடிஐகளும் உள்ளன.
ஆனால் இந்த மாவட்டத்தில் ஒரு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியோ, பொறியியல் கல்லூரியோ, மருத்துவ கல்லூரியோ கிடையாது. தற்போது இரண்டு அமைச்சர்கள் அந்த மாவட்டத்தில் உள்ளதுதான் கூடுதல் சிறப்பு. ஒருவர் பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ராமச்சந்திரன் இவர் மொத்தம் ஏழு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார், அடுத்தவர் தங்கம் தென்னரசு இவர் பள்ளி கல்வித்துறை மந்திரி. ஆனாலும் இவர்கள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஆனால் 20 ஆண்டுகளுக்கு மேலாக மாணவர், இளைஞ்ர் அமைப்புகள் போராட்டங்களை நடத்திவருகின்றனர். அந்த மாவட்டத்தில் உள்ள மாணவர்கள் மேல்படிப்புக்கு வெளி மாவட்டங்களையே நம்பி உள்ளனர். இதில் கொடுமை என்னவென்றல் கடந்த கால் நூற்றாண்டுகளாக 10 மற்றும் 12 வகுப்பு தேர்வில் முதலிடம் பிடிக்கும் மாணவர்கள் இம்மாவட்டத்தை சார்ந்தவர்களே!
சமீபத்தில் விருதுநகரில் வி.வி.எஸ் எண்ணெய் கம்பெனியின் சார்பில் நடத்தப்பட்ட சுயமரியாதை இயக்கத்தின் ஸ்தாபக தலைவர்களில் ஒருவரான வி.வி.ராமசாமி அவர்களின் நூற்றாண்டு விழாவில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ். ராமச்சந்திரன், முதல்வரின் மகள் கனிமொழி ஆகியோர் கலந்துக்கொண்டனர். அந்த மேடையில் விருதுநகர் வியாபாரிகள் சங்க தலைவர் வி.வி.எஸ். யோகன் அந்த மாவட்டத்திற்கு அரசு உயர்கல்வி கழகங்கள் வேண்டும் என்ற கோரிக்கை வைத்த போது மூவரும் ஒப்புக்கொண்டனர். ஆனால் அதுகுறித்த எந்த முயற்சியும் துவக்கப்பட்டவில்லை.
தற்போது அம்மாவட்டத்தில் அரசின் சார்பில் மருத்துவ மற்றும் உயர் கல்வி நிறுவனங்களை துவக்க வேண்டுமென தீவிரமான போராட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஈடுபட்டு வருகிறது. கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி காலை 10 மணிக்கு துவங்கி 20 ஆம் தேதி காலை 10 மணிவரை 48 மணி நேர உண்ணா விரத்தத்தை நடத்தினர். அனைத்து தரப்பு மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் போராட்டம் நடந்தது. போராட்டத்தை வாழ்த்திப்பேசிய விருதுநகர் வியாபாரிகள் சங்க தலைவர் வி.வி.எஸ். யோகன் " அரசு கல்லூரி துவங்கினால் 100 ஏக்கர் நிலத்தை கொடுக்க இங்குள்ள மக்கள் தயார்" என்றார். பிரச்சனை நிலமோ, பணமோ அல்ல தேவை அரசுக்கு செய்ய வேண்டும் என்ற மனம்தான். இலவச தொலைகாட்சி பெட்டிக்கு 2000 கோடியை ஒதுக்கமுடியும் அரசாங்கத்தால் விருதுநகர் மாவட்ட கல்வி வளர்ச்சிக்கு சில கோடிகளை வழங்க முடியாதா? தமிழக அரசு நடத்தும் சாராயக்கடைகளில் கடந்த ஆண்டு கிடைத்த விற்பனை வரி வருவாய் மட்டும் 14 ஆயிரம் கோடி. ஆக பணம் பிரச்சனை அல்ல. திட்டமிட்டே ஒரு மாவட்டத்தை ஒதுக்கும் ஏற்பாடு இது. கல்விக்கண் திறந்த காமராஜர் பிறந்த மண்ணிற்கு இந்த அவலம்.
ஆனால் இந்த அவலத்தை காங்கிரஸ் கட்சியினர் பொறுத்துக்கொண்டா லும்  இந்திய ஜனாயக வாலிபர் சங்கம் ஏற்காது என்ற அடிப்படையிலும், விருதுநகர் மாவட்டத்தில் அரசு கல்லூரிகளை துவக்கவும் தொடர்ந்து போராடும் என முடிவு செய்துள்ளது. இனியும் தொடர் போராட்டங்களை நடத்த முடிவு செய்துள்ளது.
போராட்டங்கள் தோற்றதாக வரலாறு இல்லை.

திங்கள், 8 மார்ச், 2010

அண்ணாமலை பல்கலைக்கழகம் புதைத்தது பிணங்களை மட்டும் அல்ல - சமூக நீதியையும்

 
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி ஹோலி பண்டிகையில் ஈடுபட்டிருந்த பொறியியல் துறை மாணவன் சுபித்குமார் விபத்தில் படுகாயம் அடைந்தார். பல்கலைக்கழக மருத்துவல்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அந்த மாணவனுக்கு உரியமுறையில் சிகிச்சை அளிக்காமல் பாண்டிச்சேரிக்கு அனுப்புகின்றனர். அங்கு அந்த மாணவன் உயிர் இழக்கிறார். தங்களது மருத்துவமனையில் உயிரிழந்தால் எங்கு பிரச்சனையாகுமோ என்று அஞ்சி அந்த மாணவன் புதுச்சேரிக்கு அனுப்பியுள்ளனர். உயிரைக் காப்பாற்ற வாய்ப்பிருந்தும் அவர்களது அலட்சியத்தால் பரிதாபமாக ஒருமாணவனின் உயிர் போகிறது. இதனைத் தொடர்ந்து மாணவர்கள் பதிவாளர் மற்றும் துணைவேந்தர் அலுவலகத்தை நோக்கிச் செல்கின்றனர். சக மாணவன் உயிரிழந்ததால் ஆத்திரமடைந்த அந்த மாணவர்களை சமாதானம் செய்ய வேண்டிய  பதிவாளர் மற்றும் துணைவேந்தர் மாணவர்களை சந்திக்க மறுத்தது மட்டுமல்ல காவல்துறையின் உதவியை நாடுகின்றனர். ஆத்திரமடைந்த மாணவர்கள் தகறாரில் ஈடுபடுகின்றனர்.
      உடன் நமது கடமை தவறாத காவல்துறை அதிகாரிகளின் தடிகள் வேகம் கொள்கின்றன. நூற்றுக்கணக்கான மாணவர்கள் துரத்தித் துரத்தி தாக்கப்படுகின்றனர். வழிதெரியாமல் ஓடிய மாணவர்கள் கண்ட இடத்தில் விழுந்து ஓடுகின்றனர். காவல்துறை விரட்டி விரட்டி அடிக்கிறது. பல்கலைக்கழக நிர்வாகத்திடம் உள்ள அன்பை வெளிக்காட்ட சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம காவல்துறை பொங்கி எழுந்து வாலைக் குழைத்து நிர்வாகத்திற்கு சேவை செய்வது வரலாற்றுப் பின்னணி கொண்டது. இதே பல்கலைக்கழகத்தில் 1978 ஆம் ஆண்டு இன்றைய முதல்வர் கருணாநிதிக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. அப்போது அதைக் கண்டித்து போராட்டம் நடத்திய மாணவர்களை காவல்துறை கடுமையாகத் தாக்கியதில் உதயகுமார் என்ற மாணவர் கொல்லப்பட்டான். முன்னாள் துணைவேந்தர் பொன்னுசாமியின் மகன் நாவரசு, ஜான்டேவிட் என்ற சக மாணவனால் கொடூரமாக படுகொலை செய்யய்யப்பட்டான். விவசாய ஆராய்ச்சி மாணவன் இளந்திரையன் மர்ம மரணம் அடைந்தான். சிவசக்தி என்ற ஊழியருக்கு தவறான சிகிச்சையளித்து அவர் மரணமடைந்து போராட்டம் நடந்துள்ளது, சதீஸ்கரை சார்ந்த சேத்னா என்ற மாணவி வழிகாட்டாளரின் பாலியல் துன்புறுத்தலால் பல்கலைக்கழக விடுதியில் தற்கொலை செய்து கொண்டது என இன்னும் பல கொலைகள், மரணங்கள் இந்த பல்கலைக்கழக வளாகத்தில் நடந்துகொண்டுதான் உள்ளது.
      இப்போது பிப்ரவரி 28 அன்று இரவு நடத்திய தாக்குதலில் காயம்பட்ட பல மாணவர்கள் உயிர்ப் பிழைக்க ஓடி மரணமடைந்தது மக்கள் மனதை வேதனைப்படுத்துவதாக உள்ளது. மார்ச் ஒன்றாம் தேதி ஜார்கண்டைச் சார்ந்த சுபீந்தர் சிங் என்ற மாணவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மார்ச் இரண்டாம் தேதி பிகாரைச் சார்ந்த சர்பாஸ் ரேப் மற்றும் ஆஷிஸ் ரஞ்சன் குமார் ஆகிய இரண்டு மாணவர்களின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சடலங்கள் காவல்துறையின் கடுமையான தாக்குதலின் சாட்சியாய் இருக்கிறது. இப்படி கடுமையாக மாணவர்களைத் தாக்க காவல்துறைக்கு அதிகாரம் கொடுத்தது யார்? பல்கலைக்கழக மாணவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டிய நிர்வாகம் மாணவர்களை சந்திக்க மறுத்தது ஏன்? தாக்குதலால் மறைந்து போன மூன்று உயிர்களுக்கு யார் பொறுப்பு?
விபத்தில் காயமடைந்த மாணவனை 80 கிலோமீட்டர் தூரம் அனுப்பாமல் பொறுப்பாக சிகிச்சை அளித்திருந்தால் அவனைக் காப்பாற்றி இருக்கலாம். சரி! அதன் பிறகு துணைவேந்தரோ அல்லது பதிவாளரோ மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தால் மற்ற மூன்று மாணவர்கள் சாவைத் தடுத்திருக்கலாம்.
      தமிழக அரசு தற்போது நடந்த சம்பவங்களுக்கு கோட்டாச்சியர் தலைமையில் விசாரணைக் குழுவை அமைத்துள்ளது. இது வேடிக்கையானது. ஏனெனில் கடலூர் மாவட்டத்தின் அரசு எந்திரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தினை எதிர்த்து எதுவும் செய்ய முடியாது என்பது அந்த மாவட்டத்தில் உள்ள குழந்தைகளுக்குக் கூட தெரியும். தெரிந்தே அமைக்கப்பட்ட கமிஷன் இது. எனவே பணியில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதி அளவில் விசாரணை மேற்கொண்டால்தான் உண்மைகள் வெளிவரும்.
வரைமுறைகளை மீறும் நிர்வாகம்
      1922 ஆம் ஆண்டு சிதம்பரம் அண்ணமலைநகரில் தான் நடத்திவந்த மீனாட்சிக் கல்லூரியை பல கலைகள் கற்பிக்கும் பெரும் நிறுவனமாக்க இராஜா சர் அண்ணாமலை செட்டியார் கனவு கண்டார். அந்த கல்லூரியின் கட்டிடங்கள் மற்றும் ரூபாய் 20 இலட்சம் நிதியை தமிழக அரசிடம் ஒப்படைத்தார். அவரது கல்வி ஆர்வத்தைப் பார்த்த தமிழக அரசு அவர், அவரது சந்ததியினர் நிறுவனர் மற்றும் இணைவேந்தர் என்ற பதவி வகிக்கும் வகையில் அண்ணாமலை பல்கலைக்கழக சட்டத்தை 1929 ஆம் ஆண்டு உருவாக்கி பல்கலைக்கழகம் அமைக்க வழிவகை செய்தது.  சிறந்த கல்வி நோக்கத்துடன் துவக்கப்பட்ட பல்கலைக்கழகம் ராஜாவின் வழித்தோன்றல்களால் இன்றைய தினம் வியாபார நிறுவனம் போல செயல்படுகிறது.
      1984 ஆம் ஆண்டுக்குப் பிறகு தற்போதைய இணைவேந்தர் பொறுப்பேற்ற பிறகு ஏழைகளுக்கு அங்கு கல்வி எட்டாக்கனியாக மாறியது. பல்கலைக்கழகம் என்பது பலகலை வியாபார நிறுவனமானது. துவக்கத்தில் பொறியியல், மருத்துவம், பல்மருத்துவம், விவசாயம், கல்வியியல், மருந்தியல், மேலாண்மை போன்ற பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கை வியாபாரமாக்கப்பட்டது. இதனால் பலகோடி ரூபாய்கள் கொள்ளையடிக்கப்பட்டது. சிதம்பரம் நகரம் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் மாணவர்களைப் பிடிக்க பல்கலைக்கழக தரகர்கள் உள்ளனர். இவர்கள் தங்களது தரகு பணத்திற்காக ஒட்டுண்ணிகள் போல பல அரசியல் கட்சி போர்வையில் பல்கலை கழக நிர்வாகத்தை ஆதரித்து நிற்கின்றனர்.
      1998 பின் ஆசிரியர் மற்றும் ஊழியர்கள் நியமனங்களும் விற்பனைப் பொருளாகின. இன்று இந்த பல்கலைக்கழகத்தில் இடஒதுக்கீடு என்பது பணி நியமனத்தில் கொஞ்சமும் கடைபிடிக்கப்படுவதில்லை. பணம் அது மட்டுமே எதையும் தீர்மானிக்கும் காரணியாக மாறி உள்ளது. அலுவலக உதவியாளர் பதவிக்கு 7 - 8 லட்சம், இளநிலை உதவியாளர் பதவிக்கு 10 - 12 லட்சம், சிறப்பு அதிகாரி (ஸ்பெஷல் ஆபிஸர்), அனுமதி அதிகாரி (லைசன்ஸ் ஆபிஸர்) மற்றும் விரிவுரையாளர் பதவிக்கு 22 முதல் 25 லட்சம் என்று வியாபாரம் கொடிகட்டி பறக்கிறது. நிர்வாக சீர்கேடும், ஊழல் நிலையும் பல்கலைக்கழகத்தினை சீரழித்து வருகிறது.
      மாணவர் சேர்க்கையில் பெறப்படும் பெரும் தொகை பல்கலைக்கழக நிதியில் சேர்க்கப்படுவதில்லை. சாதாரண தொகையில்லை எல்லாம் லட்சங்களில்தான். இதன் விளைவு மதிப்பெண்கள் உள்ளிட்ட பல தகுதிகள் இருந்தும் பணம் இல்லாத ஏழை மாணவர்களுக்கு இந்த கல்வி நிறுவனம் எட்டாக்கனியாகவே உள்ளது. இந்த சட்டப்பூர்வமற்ற வசூல் துணைவேந்தர் மற்றும் பதிவாளர் அலுவலகங்களிலேயே நடப்பதுதான் கொடுமை. கால வரையரையின்றி செமஸ்டர் வகுப்புகள் முடிந்ததும் சேர்க்கை நடக்கிறது. மாணவர்களிடம் பெறப்படும் திரும்பப்பெறும் வைப்புத் தொகையும் திரும்ப அளிக்கப்படுவதில்லை. ஏற்புடைய காரணங்கள் இருந்தும் வருகைப் பதிவேடு குறைவை காரணம் காட்டி தேர்வுக்கு அனுமதிக்க பல்லாயிரங்கள் வசூலிக்கப்படுகிறது.
      அதே போல பதவி நியமனங்களை கல்வித் தகுதி மற்றும் திறமையை அடிப்படையாக இல்லாமல் பெரும் தொகைகள் மட்டுமே தீர்மானிக்கின்றன. 2001 ஆம் ஆண்டு 1285 என்றிருந்த ஆசிரியர்கள் எண்ணிக்கை 2006 நவம்பரில் 2800 என்ற எண்ணிக்கையாக உயர்ந்து, தற்போது  3200 என்று உள்ளது. 2001 ஆம் ஆண்டு 3000 ஆக இருந்த ஊழியர்கள் எண்ணிக்கை 2006 நவம்பரில் 6500 என்று உயர்ந்து, 2009 இறுதியில் 8500 என்று உயர்ந்துள்ளது.  பணி நியமன வரைமுறைகளை பின்பற்றாமல், கல்விக் குழுவின் முறையான அனுமதி பெறாமல் சட்டத்திற்கு புறம்பாக, இட ஒதுக்கீடு கொள்கைக்கு எதிராக இவை நடந்துள்ளது. இதனால் தற்போது 150 கோடி நிதிபற்றாக்குறையில் இந்த பலகலைக் கழகம் (நிறுவனம்) உள்ளது. இதன் தொடர்ச்சியாய் எங்கு பணம் எதற்காக இருப்பினும் அதில் கையை வைக்க நிர்வாகம் தயங்குவதில்லை. உதாரணம் ஓய்வூதியர் நிதியையும் இவர்கள் விதிக்குப் புறம்பாக வேறு செலவுகளை செய்ய பயன்படுத்துகின்றனர். இந்த முறைகேட்டுக்கு ஆதரவளிக்கும் நபர்கள் ஓய்வு பெரும் வயதை எட்டினாலும் பிறந்த தேதியைத் திருத்தி பணியில் தொடர ஏற்பாடு செய்யப்படுகிறது.
யு.ஜி.சி விசாரணை
      இந்த நிலையில் அண்ணாமலை பல்கலைக்கழகம் குறித்த பல புகார்களை பல்கலைக்கழக மானியக் குழுவிற்கு ஆசிரியர் மற்றும் ஊழியர் சங்கங்கள் அனுப்பின. பல்கலைக்கழகத்தில் நடக்கும் முறைகேடுகளை, அத்துமீறல்களை விசாரிக்க பல்கலைக்கழக மானியக் குழு நான்குபேர் கொண்ட கமிட்டியை நியமித்தது. ஹைதராபாத் மொழியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் பேரா. அபிப் மௌரியா தலைவராகவும், கர்நாடக பல்கலைக்கழக துணைவேந்தர் பேரா. எஸ்.கே.சைதாபூர் (உறுப்பினர்), பெங்களூர் தேசிய சட்ட பல்கலைக்கழகத்தின் முன்னால் இயக்குனர் டாக்டர். ஏ.ஜெயகோவிந்த் (உறுப்பினர்) பல்கலைக்கழக மானியக் குழுவின் இணை இயக்குனர் பேரா. ராஜேஷ் ஆனந்த் செயலராகவும் கொண்ட இந்த கமிஷன் கடந்த 2009 ஆகஸ்ட் 27 மற்றும் 28 தேதிகளில் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் விசாரணை நடத்தி அறிக்கையை சமர்பித்துள்ளனர்.
      2007 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27 ஆம் தேதி பல்கலைக்கழக மானியக் குழு அண்ணாமலை பல்கலைக்கு இங்கு நடக்கும்முறைகேடுகள் குறித்து விளக்கம் கேட்டு அனுப்பிய மனுவை இவர்கள் கண்டுகொள்ளவில்லை என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இத்தகைய புகார்களை கமிஷன் உறுப்பினர்களும் கேள்விப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். பல்கலைக்கழக மானியக் குழு விசாரிக்க வந்தால் என்னென்ன சொல்ல வேண்டும் என்பது இங்குள்ளவர்களுக்கு நிர்வாகத்தால் சொல்லிக்கொடுக்கப் பட்டுள்ளதையும் அவர்கள் கண்டறிந்துள்ளனர். பலரிடம் விசாரணை செய்து கமிஷன் கீழ்காணும் முடிவுகளுக்கு வந்துள்ளது.
      1. ஆசிரியர் மற்றும் ஊழியர்கள் அளவுக்கு அதிகமாக நியமிக்கப்பட்டுள்ளது உண்மை. இது பல்கலைக்கழக சட்டம் பிரிவு 22 ஜி (இணைப்பு) படி குற்றம். 14.03.2009 அன்று நடந்த செனட் கூட்டத்தில் நியமனம் சம்பந்தமான எதிர்ப்பையும் மீறி நிர்வாக உயர் பொறுப்பில் உள்ளவர்கள் பலகோடி பெற்றுக்கொண்டு பலரை நியமனம் செய்துள்ளனர்.
      2. பணம் பெற்றதற்கான ஆதாரம் இல்லை என்ற காரணத்தினாலேயே இது உண்மை இல்லை என்றாகிவிடாது. அளவுக்கு அதிகமான நியமனமே அதன் உண்மைத் தன்மையை உறுதிபடுத்துகிறது.
      3. தகுதியற்ற ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக ஒரு மாணவன் கொடுத்த புகார் உண்மையானது. தகுதியற்ற ஆசிரியர்கள் பணத்தை பெற்றுக்கொண்டு மதிப்பெண்களை இடுவது உண்மை என இக்குழு கருதுகிறது. 
      4. பொறியல் கல்லூரியில் 2002 - 03 முதல் 2008 - 09 வரை ஏழு ஆண்டுகளில் ஆண்டுக்கு பல்கலைக்கழக மானியக் குழு அனுமதித்த மாணவர்கள் எண்ணிக்கை ஆண்டுக்கு 810 பேர் மட்டுமே. அப்படியெனில் 7 ஆண்டுகளில் 5670 மாணவர்கள் மட்டுமே பயின்றிருக்க வேண்டும். ஆனால் சட்டவிதிகளை மீறி இவர்கள் சேர்த்த மாணவர்களின் எண்ணிக்கை 14,929 அதாவது 9,259 மாணவர்களை அதிகமாக சேர்த்துள்ளனர்.
      5. முனைவர் பட்டம் தார்மீகமற்ற முறையில் கொடுக்கப்படுவதாக ஒரு முன்னாள் துணைவேந்தரின் மகள் கூறிய குற்றச்சாட்டை பல ஆசிரியர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். இது மிகவும் அநீதியானது.
      6. தமிழக அரசின் ஓய்வு பெறும் வயது 60. ஆனால் அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் வயது 68. இதுவே இவர்களது சட்டத்தை மீறும் செயலுக்கு சிறந்த எடுத்துகாட்டு.
      7. மதிப்பெண் பட்டியல் பதிவாகும்போது பல குற்றங்கள் நடப்பதை கமிஷன் ஆமோதிக்கிறது.
      8. எஸ்.சி, எஸ்.டி மக்களுக்கான இட ஒதுக்கீடு இந்த பல்கலைக்கழகத்தில் மிக மோசமான முறையில் சீரழிக்கப்படுகிறது. குறிப்பாக பேராசிரியர்கள், முதுநிலைப் பேராசிரியர்கள் பணி நியமனத்தில் அறவே கடைபிடிக்கப்படவில்லை. இது பல்கலைக்கழக மானியக் குழு மற்றும் அரசின் இடஒதுக்கீட்டு கொள்கைக்கு முற்றிலும் முரணானது. சமூகநீதியை சீரழிக்கும் இந்த செயல் மோசமான முன்னுதாரணம்.
      9. இங்கு நடக்கும் அத்துமீறல்களுக்கு துணைவேந்தர் பொறுப்பேற்க மறுப்பது சரியல்ல. அவருக்கு பொதுவாக அனைவர் மத்தியிலும் நல்ல பெயர் இருந்தாலும், பதிவாளர் மற்றும் தேர்வு துறைத் தலைவர் மீது குறிப்பிடத்தக்க புகார்கள் உள்ளது.
      10. சிதம்பரம் தொகுதியின் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் பொன்னுசாமி பல்கலைக்கழக மானியக் குழுவுக்கும், பாராளுமன்ற மனித மேம்பாட்டுத் துறைக்கும் அனுப்பி உள்ள மனுவில் "அண்ணாமலை பல்கலைக்கழகம் ஒரு கல்வி நிலையமாக இல்லாமல் நிறுவனம் போல செயல்படுகிறது" எனக் குறிப்பிட்டுள்ளார். கட்டுப்பாடற்ற ஆசிரியர் ஊழியர் நியமனங்கள் இதற்கு சான்றாக உள்ளது.
      இப்படி கடுமையான குற்றச்சாட்டுகளை பல்கலைக்கழக மானியக் குழு விசாரணைக் கமிஷன் வைத்தும் அந்தப் பல்கலைக்கழகத்தின் மீது தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது வியப்பானது அல்ல. இணைவேந்தரின் செல்வாக்கு அத்தகையது. கிண்டி குதிரை பந்தய மைதானத்தில் ஓடும் அவரது பந்தயக் குதிரைகள் பல கோடி மதிப்புள்ளது எனில் அவரது மற்ற மதிப்பைச் சொல்லி தெரிய வேண்டியதில்லை. சமூகநீதியை குழிதோண்டிப் புதைத்து, இன்று மூன்று மாணவர்களையும் குழிதோண்டிப் புதைத்துள்ள பல்கலைக்கழகத்தை எதிர்த்து ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் மக்கள் போராட்டமே அதை சாத்தியப்படுத்தும்.
===================================================================================================================
      * ஆதாரங்கள்: யு.ஜி.சி கமிஷன் ரிப்போர்ட். பல்கலை ஆசிரியர் சங்கப் பிரசுரம்