சிபிஐ(எம்) லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிபிஐ(எம்) லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 1 டிசம்பர், 2015

மரணம் மீண்டும் நினைவூட்டுகிறது...


நடுங்கித்தான் போனேன்.. எட்டு மாத பிஞ்சுக் குழந்தையின் உயிரற்ற உடலை “அய்யோ தோழரே குழந்தைய பாருங்க” என என் கைகளில் வைத்த போது. பரங்கிப்பேட்டை அகரம் தலித் குடியிருப்பு தோழர்கள் சூழ்ந்து நிற்க, அந்த குழந்தையின் பெற்றோர்களுக்கு என்ன பதில் சொல்வது என தெரியாமல் தவித்து நின்ற தருணம் அது. பிஞ்சுக் குழந்தை தூங்குவது போல என் கைகளில். அந்த களங்கமற்ற முகம் இப்போதும் கண்களில் நிழலாடிக்கொண்டே இருக்கிறது. சுனாமியில் பிணங்களை சுமந்த அனுபவம் உண்டு எனினும் இது வேறு கொடூரம். குடியிருப்புகளைச் சுற்றித் தேங்கி நின்ற தண்ணீரில் தவழ்ந்து விழுந்து மூழ்கி இறந்த இரண்டாவது குழந்தையின் உடல் இது. அக்குழந்தையின் வீட்டை பார்வையிட்டபோது அங்கு தண்ணீரோடு வறுமையும் சூழ்ந்திருந்தது தெரிந்தது. அதற்கு முதல் நாள்தான் கரிகுப்பம் இருளர் குடியிருப்பில் தேங்கி நின்ற தண்ணீரில் 3 வயது குழந்தை மூழ்கி இறந்து கிடந்தது. மதிமுக பொது செயலாளர் வைகோவும், சிபிஎம் மத்தியக் குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணனும் அக்குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறினர்.

வெள்ளத்தால் மரணமடைந்த கணக்கை முடிந்த அளவு வெட்டிச் சுருக்க நினைக்கும் அதிகாரிகள், குழந்தைகளை உயிரினக் கணக்கில் சேர்த்துக்கொள்ள மறுத்தனர். ஆடுகளைக்கூட கணக்கெடுக்கும் அதிகாரிகள் குழந்தைகளைச் சேர்த்துக்கொள்ள மறுத்து சொன்ன காரணம் விசித்திரமானது. 18 வயதுக்கு மேல் இறந்தால்தான் கணக்கில் வருவார்கள். அப்போதுதான் நஷ்டஈடு கிடைக்கும் என்று புதிய கதையை சொன்னார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் முயற்சியால் அக்குழந்தைகள் பட்டியலில் சேர்க்கப்பட்டன.

முதலில் பலியாவது...

2004 சுனாமி, 2005 மழை, வெள்ளம், 2008 நிஷா புயல், 2009 நீலம் புயல், 2011 தானே புயல், இப்போதைய புயல், மழை வெள்ளத்தில் அனைத்து பகுதி மக்களுக்கும் பாதிப்பு என்றாலும் விளிம்பு நிலை மக்களுக்குதான் அதிகம் பாதிப்பு. இந்திய சமூக அமைப்பின் வடிவமைப்பு இதற்கு ஒரு காரணம். எல்லா தலித் குடியிருப்புகளும் ஊருக்கு ஒதுக்குப்புறமாய், வயல்களின் ஓரம், வாய்க்கால்கள், வடிகால்கள் ஓரம் அமைந்திருப்பது கூடுதலான பிரச்சனை அவர்களுக்கு. நீர்நிலைகளை கொஞ்சம்கூட பராமரிக்காத நிர்வாகத்தின் மெத்தனப் போக்கிற்கு முதலில் பலியாவது ஊரின் ஒதுக்குப் புறமாய் தள்ளிவைக்கப்பட்டுள்ள இம்மக்களின் குடியிருப்புகள்தான்.

நவம்பர் 8ஆம் தேதி துவங்கிய மழை பல நாட்கள் பொழிந்து முடிந்தது. மழை நின்ற ஏழு தினங்கள் கடந்து, கடந்த 24ஆம் தேதி வரை வில்லியநல்லூர், அத்தியாநல்லூர், பெரியபட்டு, சிலம்பிமங்களம் உள்ளிட்ட பல தலித் குடியிருப்புகளில் வீடுகளைச் சுற்றித் தண்ணீர் தேங்கி நிற்கிறது. தேங்கி நிற்கும் நீரால் அங்கு துர்நாற்றம் வீசத்துவங்கி உள்ளது. உள்ளாட்சி அமைப்புகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கச்சொல்லும் பணியை மேற்க்கொண்டுள்ளோம். உண்மையில் தலித் மக்களின் எளிய வாழ்வாதாரம் சமீப புயல், மழை, வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கூலிவேலைக்கு செல்லும் வாய்ப்பு முற்றிலும் அடைக்கப்பட்டதால் அவர்களின் உணவுத் தேவை மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. 

தேசிய தலித் கண்காணிப்பகம் - தலித் மனித உரிமைக்கான தேசிய பிரச்சாரம் - புதுதில்லி மற்றும் இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையம் ஆகிய அமைப்புகள் சார்பில் மூன்று நாட்கள் சிதம்பரம் வட்டத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு “மழை வெள்ள நிவாரணப் பணிகளில் நிகழும் சாதியப் பாகுபாடுகள் மற்றும் புறக்கணிப்பு ஆய்வு அறிக்கையை” கடந்த 25ஆம் தேதி வெளியிடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அந்த அறிக்கை 20 கிராமங்களில் 8392 குடியிருப்புகளில் ஆய்வு செய்துள்ளது. இதில் தலித் குடியிருப்புகள் 3424 ஆகும்.

“மண் மற்றும் கீற்றுச் சுவர்களால் அமைக்கப்படிருந்த குடிசைகள் அனைத்தும் சேதமடைந்திருந்தன. எந்த தலித் கிராமங்களிலும் அரசு நிவாரண முகாம்களை அமைக்கவில்லை, ஏற்கனவே அமைக்கப்பட்ட நிவாரண முகாம்களும் தூரத்தில் இருந்தன. அரசு கொடுப்பதாக விளம்பரப்படுத்தப்பட்ட தார்பாலின் ஷீட்கள் எந்தக் குடியிருப்புக்கும் கிடைக்கவில்லை.”

“குடிநீர் பெரிய பிரச்சனையாக உள்ளது. இருக்கும் ஓரிரண்டு குழாய்களிலும் சாக்கடை நீர் கலந்துவிட்டதால் குடி நீர் எடுக்க நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. கழிப்பிடம் மற்றும் மாதவிடாய் போன்ற சுகாதாரம் தொடர்புடைய அனைத்தும் மொத்தமாய் புறம் தள்ளப்பட்டுள்ளது.” 

“கணக்கெடுத்த கிராமங்களில் மூன்று பேர் இறந்துள்ளனர் இதில் இருவர் தலித்துகள், பாதிப்படைந்த கான்கிரீட் மற்றும் கூரை வீடுகளில் 1276 தலித்துகளுடையது, 61 வீடுகள் தலித் அல்லாதோருடையது. இறந்த கால்நடைகளில் 274 தலித்துகளுடையது, 18 தலித் அல்லாதோருடையது.” போன்ற பலவற்றை இவ்வறிக்கை சுட்டிகாட்டுகிறது. 

உண்மையில் கடந்த 14ஆம் தேதி இரவு சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் பரங்கிப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடத்திய இரவு போராட்டம்தான் தா.சோ. பேட்டை இருளர் குடியிருப்புப் பகுதிக்கு குடிநீரையும், நஞ்சைமகத்துவாழ்க்கை, மடுவங்கரை, அகரம் போன்ற தலித் குடியிருப்புகளுக்கு அரிசி மூட்டைகள் மற்றும் குடிநீரையும், பாரதி நகர் இருளர் பகுதிக்கு உணவு பொட்டலங்களையும் கொண்டு சென்றது.

கணக்கெடுப்பில் பாரபட்சம்

பாதிப்புகளுக்கு உள்ளான குடிசைகளை கணக்கெடுப்பது மிகவும் பாரபட்சமான முறையில்தான் இருக்கிறது. ஊருக்கு இரண்டு அல்லது மூன்று குடிசைகள்தான் பாதிக்கப்பட்டதாகக் கணக்கெடுக்கப்பட்டது. மாவட்ட நிர்வாகம் 17,150 வீடுகள் சேதமடைந்திருப்பதாகக் கூறியது இத்தகைய கணக்கெடுப்பில்தான். குடிசையின் நான்கு சுவர்களும் முழுமையாக விழுந்திருந்தால்தான் அது முழுப் பாதிப்பு கணக்கில் வரும், மூன்று சுவர்கள் விழுந்திருந்தாலோ, கூரை மொத்தமாக நாசமடைந்திருந்தாலோ அது முழுப் பாதிப்பு கணக்கில் வராது. முழுமையாகப் பாதிப்படைந்திருந்தால் ஐந்தாயிரம், மூன்று பக்கம் விழுந்தாலோ, கூரை முழுவதுமாக பாதித்திருந்தாலோ, தண்ணீர் தேங்கி மண் தரை முழுமையாக பள்ளமாகி இருந்தாலோ பகுதி பாதிப்பு என நான்காயிரம்தான். இதை வைத்துக்கொண்டு ஒரு குடிசைக்கு தேவையான கீற்றுகளைக்கூட வாங்க முடியாது என்பதுதான் யதார்த்தம். 

இதற்கே போராட வேண்டியிருக்கிறது. கடந்த 16ஆம்தேதி மக்கள் நலக்கூட்டணியின் சார்பில் மதியம் மூன்று மணிக்கு துவங்கி மறுநாள் விடியற்காலை 3 மணிவரை நடத்திய காத்திருப்புப் போராட்டத்திற்குப் பிறகுதான் ஒரு கிராமத்தில் உள்ள அனைத்து குடியிருப்புகளையும் கணக்கெடுக்க ஒப்புக்கொண்டனர். ஒவ்வொரு பிரச்சனையையும் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லவும் போராட வேண்டிய சூழல்தான் இப்போதும் கடலூரில் நிகழ்கிறது. நூற்றிற்கும் அதிகமான சாலை மறியல் மாவட்டம் முழுவதும் நடந்துள்ளது. இப்போதும் நடந்துக் கொண்டிருக்கிறது. 

அதிகாரிகள் வரவில்லை என, வந்தாலும் முழுமையாகக் கணக்கெடுப்பதில்லை என, கணக்கெடுத்து நிவாரணம் கொடுப்பதில் பாரபட்சம் என, கொடுக்கும் நிவாரணத் தொகையில் பாதித் தொகை பிடிக்கப்படுகிறது என குடிநீர் வேண்டுமென, கால்நடைகளை கணக்கெடுக்கவில்லையென, பாதிக்கப்பட்ட பயிர்களின் சேதாரத்தை கணக்கிடவில்லையென போராட்டங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அமைச்சர் பெருமக்கள், அதிகாரிகள் கடலூரில் இயல்பு நிலை திரும்பியதை நிரூபிக்க படாதபாடுபடுகின்றனர்.ஒரு பெரும் பாதிப்பின் வலிகளைப் பேசும்போது அனைத்துத் தரப்பு மக்களின் பிரச்சனைகளுக்காகவும் குரல் கொடுக்க வேண்டியது ஒரு உழைக்கும் மக்கள் இயக்கத்தின் கடமை. எனினும், கடையனுக்கும் கடையோனாய் இந்த சாதிய சமூகம் ஒதுக்கி வைத்துள்ள சமூக மக்களின் வாழ்க்கைப் பாதிப்புகளை உரத்துச் சொல்ல வேண்டியது மிக முக்கிய அரசியல் பணியாகிறது. ஆட்சியாளர்கள் எப்போதும் புறம் தள்ளிவைத்துள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையைப் பாதுகாப்பது அனைத்து சமூக மக்களின் அவசியக் கடமையாவதை இந்த வெள்ளம் மீண்டும் நினைவூட்டுகிறது.

--- 28.11.2015 அன்று தீக்கதிர் நாளிதழில் வெளியான எனது கட்டுரை----

சனி, 28 நவம்பர், 2015

போராட்டப் புயல் வீசிய இரவு...


மெல்லிய தூறல்கள் விழுந்துக் கொண்டிருந்த வெள்ளியன்று இரவு (13.11.2015) 8 மணிக்கு கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் அந்தப் போராட்டம் துவங்கியது. எந்த அறிவிப்பும் இல்லாமல் துவங்கிய போராட்டம் அது. வெள்ள நிவாரண பணிகளில் ஈடுபட்டிருந்த எங்கள் குழுவின் மொத்த கோபத்தின் வெளிப்பாடு அந்த போராட்டம். இயற்கை பேரிடரின் துயரத்தை அரசாங்கம் மட்டும் எதிர்கொள்ள முடியாது என்ற புரிதலுடன்தான் போராட்டத்தில் அமர்ந்தோம். ஆனால் அதிகாரிகளின் அலட்சியமும், அரசாங்கத்தின் மெத்தனமும்தான் நாங்கள் இரவு நேரத்தில் போராட்டம் துவங்க காரணமாகியது. மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே போராட்டம் நடைபெற இதுவே காரணமாகும். சட்டமன்ற உறுப்பினரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களும் தீபாவளிக்கு முதல் நாளே நிவாரண பணிகளில் ஈடுபட்டிருந்தனர். மழையும் புயலும்முடிந்த பிறகுதான் மாவட்டத்தின் மொத்த பாதிப்பும் தெரியவந்தது. உயிர் சேதம், பயிர்கள் சேதம், வாழை, கரும்பு, முல்லை உள்ளிட்ட விளை பொருட்களின் சேதம், மின்சாரம் அடியோடு துண்டிப்பு, குடிநீர் இல்லாமல் தவிப்பு என மக்கள் நரக வேதனையை அனுபவிக்க துவங்கினர்.

நூற்றுக்கணக்கான குடியிருப்பு பகுதியில் வெள்ளம் சூழ்ந்து உணவு மிகப்பெரிய பிரச்சனையானது. ஆனால் நிவாரண பணிகளோ ஆமை வேகத்தில்தான் நடந்தது. ஆனால் உடனடியாக அரசு மின்னல் வேகத்தில் செயல்பட்டு இயல்பு நிலையை உருவாக்கியது போல நாடகமாடத் துவங்கியது. கடலூர் மாவட்டத்திற்கு ஐந்து மந்திரிகள் வந்தனர். பிரச்சனையே அதுதான். எல்லா அதிகாரிகளும் அவர்கள் பின்னால் அணிவகுக்க துவங்கிவிட்டனர். குறிப்பாக எதிர்கட்சிகள் இருக்கும் தொகுதிகள் புறம்தள்ளப்பட்டது. சிதம்பரம் தொகுதியில் குறிப்பாக பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் 13ம் தேதி இரவு வரை யாருக்கும் ஒரு உணவு பொட்டலம் கூட வழங்கப்படவில்லை. 11ம் தேதி இரவு வட்டார வளர்ச்சி அலுவலரிடம் சட்டமன்ற உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் கரிகுப்பம் கிராமத்தில் இருளர் வாழும் பகுதியில் தண்ணீர் சூழ்ந்துள்ளது, உடனடியாக அங்குஉணவு பொட்டலங்களை அனுப்புங்கள் என கூறியதும் அவர் உடனடியாக அனுப்புவதாக சொன்னார் ஆனால் 13ம் தேதி இரவு வரை அங்கு எந்த உதவியும் போகவில்லை.

13ம் தேதிவரை த.சோ.பேட்டை இருளர்கள் குடியிருப்பு, சோத்து கொல்லை, செஞ்சேரி, மடுவங்கரை, பெரியமதகு, நஞ்சைமகத்து வாழ்க்கை உள்ளிட்ட கிராமங்களுக்கு ஒரு சொட்டு குடிநீர்கூட கிடைக்கவில்லை அதாவது 5 தினங்களாக. மேலும் நாங்கள் சென்ற 16 கிராமங்கள் இன்னும் இருளில்தான் மூழ்கி உள்ளது. மண்டபம் கிராம மக்கள் வேறு வழியில்லாமல் போராடிய போது சிதம்பரம் காவல்துறை அவர்களை கடுமையாக தாக்கியது. ஒரு மாற்று திறனாளி ஓட வழியில்லாமல் கடுமையாக தாக்கப்பட்டார். இவைகள் உருவாக்கிய கோபம்தான் 13ம் தேதி இரவு போராட்டமாக மாறியது.போராட்டம் துவங்கியதும் வழக்கம் போல காவல்துறையினர் பாய்ந்து வந்து நின்று கொண்டனர்.

அதிகாரிகள் வந்தனர். எந்தவித உதவியும் இல்லாத குறிப்பிட்ட கிராமங் களுக்கு உதவிகள் கிடைக்கும் வரை இங்கிருந்து எழுந்து செல்லமாட்டோம் என கூறிவிட்டோம். நேரம் கடந்துக்கொண்டே இருந்தது. அதிகாரிகள் மாறி மாறி சட்டமன்ற உறுப்பினரிடம் பேசினர். காலையில் நிவாரண பணிகளை செய்து விடுகிறோம் அவர் ஒரே வார்த்தையில் மறுத்துவிட்டார். முடியாது!

உடன் அசுர வேகத்தில் பணிகள்துவங்கியது. இரவு 11 மணிக்கு உணவு பொட்டலங்கள் தயாராகி கிராமங்களுக்கு சென்றது. டேங்கர் வண்டிகளில் இரு கிராமங்களுக்கு குடிநீர் சென்றது. அரிசி மூட்டைகள் அரசு வண்டியில் வந்து இறங்கி கிராமங்களுக்கு சென்றது. அலட்சியமாக மக்களை கவனித்த வட்டார வளர்ச்சி அலுவலர் இடமாற்றம் செய்யப்பட்டார். உடனடியாக ஒரு சிறப்பு அதிகாரி பரங்கிப்பேட்டை ஒன்றியத்திற்கு நியமிக்கப்பட்டார். இனி முழு நிவாரணபணிகளையும் அவரே கவனிப்பார் என உத்தரவு வந்தது. அதன்பிறகுதான் 11.30 மணி அளவில் போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தோழர்களும் போராட்டத்தை முடித்துக்கொண்டோம். 

அதே நாளில் வெள்ள நிவாரண பணிகளில் ஈடுபட்டிருந்த மாதர் சங்கத் தோழர்கள் பண்ருட்டி பெரியகாட்டுபாளையம், சின்ன காட்டுபாளைம், மேட்டுக்குப்பம் பகுதியில் நிவாரண பணிகளில் ஏற்பட்ட பாரபட்சத்தை கண் டித்து மக்களுடன் மறியலில் ஈடுபட்டனர். ஆயிரக்கணக்கான மக்கள் திரண்ட அந்த போராட்டத்தின் நியாயத்தை உணர்ந்த அதிகாரிகள் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு 957 குடும்பத்தார்களுக்கு ரூபாய் 47.08,500 (சுமார் ஐந்து லட்சம்) நிதியை பெற்றுக்கொடுத்தனர். ஆளும் கட்சியினரின் நிவாரண உதவி பாரபட்சம் மேலும் போராட்டங்களை கடலூர் மாவட்டத்தில் அதிகப்படுத்தவே செய்யும். இதோ இந்த பதிவை எழுதி கொண்டிருக்கும் போது கரிகுப்பம் கிராமத்தின் இருளர் குடியிருப்பிலிருந்து தொலைபேசி அழைப்பு.. “தோழர் நாங்க இருளர் காலனியிலிருந்து பேசுறோம்.. வீடுகளை சுத்தி நின்ன தண்ணியில விழுந்து மூணு வயசு கொழந்த செத்து போச்சு, உடனே வாங்க தோழர்... காலையில செத்து போச்சுயாருமே வரல..” மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள் அங்கு சென்றுக் கொண்டிருக்கிறார்கள்.

----- 15.11.2015 அன்றைய தீக்கதிரில் வந்த பதிவு-----

புதன், 4 ஜூலை, 2012

கேரள படுகொலைக்குப் பின்னால்.... ஒளிந்தாடும் உண்மைகள்!




கேரள காங்கிரஸ் அரசு மக்களிடமிருந்து முற்றிலும் தனிமைப்பட்டிருந்த  சூழ்நிலைமையில் டி.பி.சந்திர சேகரன் என்கிற முன்னால் சிபிஐ(எம்) உறுப்பினர் படுகொலை செய்யப்பட்ட அந்த துரதிருஷ்டவசமான சம்பவம் நடந்தது. அதைத் தொடர்ந்து அடுத்தடுத்து நடந்த நிகழ்வுகள், தனது நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு  காங்கிரஸ் அரசு நடந்த கொலைச் சம்பவத்தை கார்ப்பரேட் ஊடகங்களின் உதவியோடு திட்டமிட்டு பயன் படுத்திக் கொள்ள அனைத்துவிதமான முயற்சிகளையும் மேற் கொண்டது. சுருக்கமான உண்மை என்னவென்றால், டி.பி.சந்திரசேகரனின் கொடூரமான கொலைச் சம்பவத்தை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி தனது குறுகிய அரசியல் லாபத்திற்காக அப் பட்டமாக பயன்படுத்திக் கொண்டது என்பதே.

இந்தக் கொலையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டித்தது; தனது கடுமையான எதிர்ப்பினை வெளிப்படுத்தியது. கொலைக்கு காரணமானவர்களை கண்டறிய உறுதியான விசாரணை நடத்தப்பட வேண்டுமென்று கட்சி வலியுறுத்தியது. அதுமட்டுமல்ல, கட்சியின் எதிரிகளால் திட்டமிட்டு பிரச்சாரம் செய்யப்படுவது போல இந்தக் கொலையில் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று எந்தவெரு சந்தேகத்திற்கும் இடமின்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதிபட அறிவித்தது.

ஆனால் காங்கிரஸ் தலைமை, இந்தக் கொலை தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீது பழி சுமத்தி அரசியல் நெருக்கடியிலிருந்து தங்களை மீட்டுக்கொள்ள மிகக்கடுமையாக முயற்சித்தது. கொலைச் சம்பவம் நடந்த உடனே, இந்தக் கொலையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதான் செய்தது என்று மத்திய உள்துறை இணையமைச்சர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் அப்பட்டமாக பழி சுமத்தினார். கொலை நடந்த மறுநாள் மே 5ம்தேதி மாநிலந் தழுவிய கடையடைப்பிற்கு காங்கிரஸ் அழைப்பும் விடுத்தது.

இச்சம்பவம் நடந்த உடனே காங்கிரஸ் தலைவர்களால் வெளியிடப்பட்ட சில அறிக்கைகள், அவர்கள் ஒரு போதும் சந்திரசேகரனின் உயிரைப் பாதுகாப்பது குறித்து கவலைப்படவில்லை என்பதை பளிச்செனக் காட்டின. சந்திரசேகரனுக்கு அச்சுறுத்தல் இருப்பது குறித்து தனக்கு தெரியும் என்று ஊடகங்களிடம் அமைச்சர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் கூறுகிறார்; தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக சந்திர சேகரனே தன்னிடம் தெரிவித் திருப்பதாகவும் அமைச்சர் கூறுகிறார். காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டுமென்று சந்திர சேகரன் வேண்டுகோள் விடுத்தபோதிலும் கூட, அத்தகைய ஏற்பாடு செய்வதற்கு உம்மன்சாண்டி அரசாங்கம் திட்டவட்டமாக மறுத்தது. இது, அரசுத்தரப்பில் நிகழ்த்தப்பட்ட ஒரு அப்பட்டமான அலட்சியப் போக்கு என்பதை யாரும் மறுக்க முடியாது.

ஆனால் பின்நாட்களில், காவல்துறை பாதுகாப்பு அளிக்க முன்வந் ததாகவும் அதை ஏற்றுக்கொள்ள சந்திரசேகரனிடம் நிர்ப்பந்தித்ததாகவும், ஆனால் போலீஸ் பாதுகாப்பை ஏற்றுக்கொள்ள சந்திரசேகரன் மறுத்து விட்டதாகவும் முதலமைச்சர் கூறுகிறார். காவல்துறை ஒருவருக்கு பாதுகாப்பு அளிப்பது என்று முடிவுசெய்துவிட்டால் அதற்கான உத்தரவை சம்பந்தப்பட்ட காவலர்களுக்கு பிறப்பிக்கும்; அதே உத்தரவு பாதுகாப்பு அளிக்கப்பட உள்ள நபருக்கும் கொடுக்கப்படும். இது தான் அரசுத்துறையின் வழக்கமான நடைமுறை. சம்பந்தப்பட்ட நபர் தனக்கு அளிக்கப்படும் பாதுகாப்பை வேண்டாம் என்று மறுத்தால், அதற்கான மறுப்புக்கடிதத்தை அவர் அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

சந்திரசேகரனுக்கு உண்மையிலேயே காவல்துறை பாதுகாப்பு அளிக்க முன்வந்திருந்தால், அதை ஏற்றுக்கொள்ள சந்திர சேகரன் மறுத்திருந்தால், இப்போது முதலமைச்சர் கூறுவது போல நடந்திருந்தால், பாதுகாப்பு அளிப்பதற்காக அரசு போட்ட உத்தரவை காண்பிக்கத் தயாரா? சந்திரசேகரன் தனக்கு பாதுகாப்பு வேண்டாம் எனக்கூறி அரசுக்கு எழுதியுள்ள மறுப்புக் கடிதத்தை வெளியிடத் தயாரா? இரண்டு கடிதங்களையும் வெளியிட்டு நிரூபிக்க முடியுமா?

இந்த இரண்டு ஆவணங்களையும் அரசு வெளியிடத் தவறினால், பொருத்தமான நேரத்தில் அரசு தலையிட்டு இருக்குமானால் மேற்கண்ட துயரமான கொலைச் சம்பவம் தவிர்க்கப்பட்டிருக்கும் என்பதே மிகத் தெளிவான முறையில் நிரூபிக்கப்படும்.

இத்தகைய மிக முக்கியமான உண்மைகளையெல்லாம் மறைத்துவிட்டு, இந்த சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் தலைமை இப்போது கொஞ்சமும் வெட்கமில்லாமல் முதலைக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ஊடகங்களின் துணையோடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக ஒரு திட்டமிட்ட சதிராட்டத்தை துவங்கியிருக்கிறார்கள். இந்தக் கொலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை எப்படியேனும் குற்றவாளி ஆக்குவது என்பதே இவர்கள் நோக்கம். இப்படிச் செய்வதன் மூலம் தங்களுக்குள் ஏற்பட்டிருக்கும் கடுமையான அரசியல் நெருக்கடியை தீர்த்துக்கொள்ள முடியும் என்று காங்கிரஸ் கூட்டணி அரசு நம்புகிறது. இதற்கு ஏற்றாற்போல கார்ப்பரேட் ஊடகங்கள், திரிக்கப்பட்ட கதைகளையும், திட்ட மிட்ட பொய்ச் செய்திகளையும் புலனாய்வு இதழியல் என்ற பெயரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக உற்பத்தி செய்த வண்ணம் இருக்கின்றன. 
இந்த சம்பவம் நடந்த முதல் நாளிலிருந்தே, எந்தவெரு ஆதாரமும் இல்லாமல், மேற்கண்ட கொலை கண்ணூரில் இருந்துவந்த ஒரு கும்பலால் நடத்தப்பட்டது என்று தொடர்ந்து ஊடகங்களின் ஒரு பகுதியினர் பிரச்சாரம் செய்து கொண்டேயிருக்கிறார்கள். தங்களது பொய்ப் பிரச்சாரத்திற்கு வலுசேர்க்கும் விதமாக ஏராளமான கட்டுக்கதைகளையும் திட்டமிட்டே அவிழ்த்துவிடுகிறார்கள். உண்மையில் மேற்கண்ட கொலையில் சம்பந்தப்பட்ட கொலையாளிகளால் பயன் படுத்தப்பட்ட இன்னோவா கார் கண்ணூரில் உள்ள சோக்லி என்னுமிடத்தில் இருந்ததை கண்டுபிடித்து காவல்துறையிடம் கூறியதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள்தான். ஆனால் இந்த உண்மையை மறைத்து விட்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீது பழிபோட இந்த ஊடகங்கள் தீவிரமாக முயல் கின்றன. 

துவக்கத்தில், சம்பந்தப்பட்ட காரின் உரிமையாளர் நவீன் தாஸ் மார்க்சிஸ்ட் கட்சியின் ஆதரவாளர் என்று ஊடகங்கள் பிரச்சாரம் செய்தன. டி.வி. சேனல்கள், பிரேக்கிங் நியூஸ் என்ற பெயரில் கட்டவிழ்த்துவிட்ட இந்த அப்பட்டமான பொய்ச்செய்தியையே அச்சு ஊடகங்களும் தொடர்ந்து பல நாட்களுக்கு விடாமல் கூறிவந்தன. பின்னர், அந்த காரின் உரிமையாளருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது நிரூபிக்கப்பட்டது. அதுமட்டுமல்ல, அந்த கார் ஒரு காங்கிரஸ் காரருக்கு சொந்தமானது என்பதும் உறுதி செய்யப்பட்டது. இந்த உண்மைகள் தெளிவாக தெரியவந்த நிலையிலும் கூட மேற்கண்ட ஊடக நிறுவனங்கள் அதை ஏற்றுக்கொள்ள தயாராகயில்லை; மார்க்சிஸ்ட் கட்சிக்கு எதிராக தவறான செய்தி வெளியிட்டதை திருத்திக் கொள்ளவும் தயாராகயில்லை. 

இந்த வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடித்து நீதியின் முன் நிறுத்த இரவு-பகலாக பாடுபட்டுக் கொண்டிருப்பதாக சொல்லிக் கொள்ளும் மலையாள நாளேடான மாத்ருபூமி, மே 6ம் தேதியன்று முதல் பக்கத்தில் போனில் அழைத்தது யார்? என்ற தலைப்பில் கட்டம் கட்டி ஒரு செய்தியை வெளியிட்டது. அந்தச் செய்தி, சந்திரசேகரன் கொலைசெய்யப் படுவதற்கு சற்றுமுன்பு அவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது என்றும், அவரது மோட்டார் வாகனம் வள்ளிக்காடு லீக் ஹவுஸ் அருகில் விபத்தில் சிக்கிவிட்டதாகவும் அவர் உடனே அங்கு செல்லுமாறு தொலைபேசியில் பேசியவர் கூறியதாகவும் தெரிவிக்கிறது. மேலும், சந்திர சேகரனை தொலைபேசியில் அழைத்தது யார் என்பது குறித்து மிகத் தெளிவான தகவல் காவல் துறையிடம் சிக்கியிருக்கிறது என்றும் ஆதாரப்பூர்வமாக தங்களுக்கு தெரியும் என அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது. ஆனால் மறுநாள், அதே நாளேடு அச்செய்தி முற்றிலும் தவறானது என்று பல்டி அடித்தது. முதல் நாள் ஆதாரப்பூர்வமானது என்று கூறி வெளியிட்ட செய்தியை மறுநாளே பொய்யானது என்று எழுதியது. ஒரு தொலைபேசி அழைப்பின் அடிப்படையி லேயே சந்திரசேகரன் வள்ளிக்காடு பகுதிக்கு சென்றார் என்ற தகவல் பொய்யானது என்று மறுநாள் வெளியான செய்தியில் மாத்ருபூமி எழுதியது.

உண்மையில் சந்திரசேகரனுக்கு கடைசியாக வந்த தொலைபேசி அழைப்பு, அவரது சொந்த கட்சியான ஆர்.எம்.பி.கட்சியின் ஆதரவாளர் ஒருவரிடமிருந்தே வந்தது; இந்தத் தகவல், மேற்கண்ட செய்தி வெளியான மறுநாள் முதல் ஊடகங்களில் காணாமலே போய்விட்டது. மாறாக, குறிப்பிட்ட சில உள்ளூர் பிரச்சனைகள் குறித்து பேசுவதற்காகவே அந்த தொலைபேசி அழைப்பு அவருக்கு வந்ததாக போலீஸ் தகவல் கூறுவதாக குறிப்பிட்டு ஊடகங்கள் முடித்துக் கொண்டன.

இப்படியாக இந்த விவகாரத்தின் துவக்க நாட்கள் முதலே மாத்ருபூமி நாளேட்டின் புலனாய்வின் உண்மை முகம் அப்பட்டமாக அம்பலமாகிக் கொண்டே இருக்கிறது; ஆனால் இத்தகைய ஊடகங்களால் உற்பத்தி செய்யப் பட்ட, முற்றிலும் திரிக்கப்பட்ட கதைகளின் அடிப்படை யிலேயே காவல்துறை நகர்ந்து கொண்டிருக்கிறது.

திரிக்கப்பட்ட கதைகள்

மற்றெரு மலையாள நாளேடான மத்யமம், மே 6ம்தேதி ஒரு செய்தி வெளியிட்டது. சந்திரசேகரனை கொலைசெய்வது என்ற சதித்திட்டம் வாளயம் எனும் இடத்தில் உருவாக்கப்பட்டதாகவும், இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டு பகுதிக் குழுக்களுக்கு தொடர்பு உள்ளது என்பதுமே அச்செய்தி. இந்த செய்திக்கு வலுசேர்ப் பதற்காக, மார்க்சிஸ்ட் கட்சியின் ஒஞ்சியம் பகுதிச்செயலாளரும் அவரது குடும்பத்தி னரும் தங்களது வீட்டைவிட்டு வெளியேறி ஓடிவிட்டதாகவும் எழுதப்பட்டது. ஆனால் உண்மையில் கட்சியின் ஒஞ்சியம் பகுதிச் செயலாளர் சி.எச்.அசோகன், என்ஜிஓ யூனி யன் மாநாட்டில் பங்கேற்பதற்காகவே சென்றார் என்பது நிரூபிக்கப்பட்டது. எனவே இந்தக் கதையும் பொய் என்பது நிரூபணமானது.

பின்னர், சந்திரசேகரனை கொல்வதற்கான சதித்திட்டம் வாளயத்தில் ஒரு திருமண மண்டபத்தில் வைத்து உருவாக்கப் பட்டது என்று பொய்ச்செய்தி உலா வந்தது. இதை பிரேக்கிங் நியூஸ் என்ற பெயரில் டி.வி. சேனல்கள் இடைவிடாமல் ஒளிபரப்பின. இந்த சதியை உருவாக்கியதற்காக நாடபுரம் காவல்துறையினரிடம் மார்க்சிஸ்ட் கட்சித் தோழர்கள் சிலர் பிடிபட்டிருப்பதாகவும் அந்த பிரேக்கிங் நியூஸ் கூறியது. ஆனால் அது உண்மையில்லை என்பது நிரூபணமாகி, சம்பந்தப்பட்ட தோழர்கள் சில மணி நேரங்களிலேயே விடுவிக்கப்பட்டனர். ஆனால் அந்தத் தகவலை மட்டும் ஊடகங்கள் வெளியிடாமல் முற்றிலுமாக மறைத்தன.

அடுத்து இதே ஊடகங்கள், இந்தக் கொலை வழக்கில் வாளயம் பகுதியில் மார்க்சிஸ்ட் கட்சியின் குறிப்பிட்ட சில ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக ஒரு செய்தியை வெளியிட்டன. ஆனால் உண்மையில் டி.வி. சேனல்கள் பிளாஷ் நியூஸ் என்ற பெயரில் குறிப்பிட்ட அந்த சில தோழர்கள் கைது செய்யப்பட்டதாக செய்தி வாசித்துக் கொண்டிருக்கும்போது, சம்பந்தப்பட்ட அவர்கள் அனைவரும் தங்களது வேலைத் தளங்களில் வேலை செய்துகொண்டிருந்தார்கள்.

அவர்கள் எந்தவிதத்திலும் கைது செய்யப்படவில்லை என்பது அப்பட்ட மாக தெரிந்தபோதிலும் கூட தவறான செய்தி வெளியிட்டுவிட்டோம் என்று மேற்படி ஊடகங்கள் ஒரு சிறு கவலையைக் கூட வெளிப்படுத்தவில்லை; தவறான செய்தியை திருத்திக்கொள்ளவும் இல்லை; இத்தகைய திரிக்கப்பட்ட கதைகளால் ஏதுமறியாத அப்பாவி மக்களின் கவுரவம் சிதைக்கப்பட்டதை பற்றி இந்த ஊடகங்கள் கவலைப்படவில்லை.

இந்த நிலையில், மேற்கண்ட கொலை விவகாரத்தில் ஆர்எஸ்எஸ் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என செய்தி வெளியானது. அப்படி வெளியான உடனேயே, ஊடகங்கள் எவ்விதத் தயக்கமுமின்றி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த நபர்களையும் கூட இந்தக் கொலைக்காக திட்டமிட்டு பயன்படுத்தியுள்ளது என்று கொஞ்சம் கூட கூசாமல் செய்தி வெளியிட்டன.

சந்திரசேகரன் கொல்லப்பட்ட உடனேயே வேறெரு கதையையும் ஊடகங்கள் உலவவிட்டன. கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்பு சந்திரசேகரனுக்கு வள்ளிக்காடு பகுதியிலிருந்து வந்த தொலைபேசி அழைப் பிற்கான சிக்னல், கண்ணூர் மத்திய சிறைக்கு அருகில் அமைந்துள்ள தொலைத்தொடர்பு கோபுரத்திலிருந்து சென்றிருக்கிறது; எனவே அவரை கொல்வதற்கான சதி கண்ணூர் மத்திய சிறையில் உருவானது என்பதே அந்தக் கதை. பின்னர், கொலைக்கான சதி மாஹேயில் ஒரு மதுக்கூடத்தில் மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்கள் முன்னிலையில் உருவாக்கப் பட்டதாகவும் ஒரு கதையை ஊடகங்கள் உலவவிட்டன.

சந்திரசேகரன் கொல்லப்பட்ட நாள் முதல் ஊடகங்கள் கட்டவிழ்த்துவிட்ட இத்தகைய ஏராளமான கதைகள் அனைத்துமே முற்றிலும் பொய்யானவை; திரிக்கப்பட்டவை; ஜோடிக்கப்பட்டவை; திட்டமிட்டு விஷம் கக்குபவை என்பது அப்பட்டமாக அம்பலமானது.

இந்தச் செய்திகளை வெளியிட்ட அனைத்து ஊடகங்களும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை குறி வைத்து தாக்குவதில் ஒன்று பட்டு நிற்கின்றன; இந்தக் கொலை வழக்கில் கட்சி மீது பழி சுமத்துவதற்காக எந்த எல்லைக்கும் செல்வதற்கு இவை தயாராக இருக்கின்றன என்பதையே இந்த பொய்க்கதைகள் தெளிவுபடுத்துகின்றன.

மே 10ம்தேதி மத்யமம் நாளேடு ஒரு செய்தி வெளியிட்டது. சந்திரசேகரன் கொலைக்கு காரணமாக சந்தேகிக்கப்படும் பின்னணி குறித்த செய்தி அது. சந்திரசேகரனுக்கும் தொழிலதிபர் ஒருவருக்கும் இடையே பகைமை இருந்து வந்ததாகவும் இதுவே அவரது கொலைக்கு காரணமாக இருக்கக் கூடும் என்று அச்செய்தி கூறியது. ஆழியூரில் ஒரு நீர் பூங்கா திட்டம் மற்றும் குடிநீர் பாட்டிலிங் ஆலை போன்றவற்றை அமைப்பதற்கு எதிராக சந்திரசேகரன் தலைமையில் ஒரு இயக்கம் நடந்தது என்பதை இதற்கு பின்புலமாக அச்செய்தி தெரிவிக்கிறது. இந்தத் தகவல் உண்மையில் உயர்நீதிமன்றத்தின் முன்பு ஜாமீன் மனு தாக்கல் செய்த போது மார்க்சிஸ்ட் கட்சியின் பகுதிச் செயலாளர் சி.எச். அசோகனால் முன்பு ஒருமுறை குறிப்பிடப்பட்ட தகவலே. எனவே இதில் புதிதாக இந்த ஏடு கண்டு பிடித்துச் சொல்லும் அளவிற்கு ஒன்றும் இல்லை. எனினும் கூட இந்தச் செய்தியிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீதே பழிசுமத்தப்பட்டது.

சம்பவம் நடந்த நாள் முதலே ரபீக் என் பவர்தான் இந்த கொலையைச் செய்த முக்கிய குற்றவாளி என காவல்துறை தெரிவிப்பதாக மேற்கோள்காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வந்தன. அந்தச் சமயத்தில் ரபீக்கை பற்றி ஏராளமான செய்திகள் இடம்பெற்றன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீது குற்றம்சாட்டப்படும் பல வழக்குகளில் ரபீக்கிற்கு தொடர்பு இருக்கிறது என்றெல்லாம் கூட கதைகள் பரப்பப்பட்டன. மே 7ம்தேதி வெளி யான மலையாள மனோரமா நாளேடு உட்பட பல ஊடக நிறுவனங்கள், ரபீக், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு ஆதரவாளர் என்றே அறிவித்துவிட்டன. அதுமட்டுமல்லாமல் கொலையாளிகளால் பயன்படுத் தப்பட்ட இன்னோவா காரில் ரபீக்கின் கைரேகைகள் பதிவாகியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் செய்திகளை அள்ளித்தெளித்தன. 

ஆனால், ரபீக்கிற்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் எந்தத்தொடர்பும் இல்லை என்பது உடனடியாக நிரூபிக்கப்பட்டது. உடனே ஊடகங்கள் ரபீக் என்பவரின் உண்மை முகத்தை மறைக்கத் துவங்கிவிட்டன. அவரை முதலில் குற்றவாளி என்று சொன்ன அதே ஊடகங்கள், இன்னோவா கார் ஒன்றை ஒரு சுற்றுப்பயணத்திற்காக அமர்த்தித் தருமாறு ரபீக்கிடம் கேட்கப்பட்டதாகவும், அவர் கார் அமர்த்தித் தந்துவிட்டு வெளிநாடு சென்று விட்டதாகவும் ஆதாரப்பூர்வமாக தெரியவந்திருப்பதாக புதிய கதையை அவிழ்த்துவிட்டன. ஆனால் சில நாட்களில் ரபீக் வடகரா நீதிமன் றத்தில் சரணடைந்தார்; நீதிமன்றத்திலிருந்து காவல்துறையினர் அவரை வெளியே அழைத்து வந்தனர்.

கோயபல்ஸ் பாணி பிரச்சாரம்

காவல்துறையினரால் கைது செய்யப்பட்டவர்கள் காவல்துறையிடம் அளித்த தகவல்களை திரித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை குறிவைத்து தாக்கும் விதமாக மேற்கண்ட ஊடகங்கள் எண்ணற்ற கட்டுக் கதைகளை அவிழ்த்துவிட்ட வண்ணம் இருந்தன. ஆனால், கைது செய்யப் பட்டவர்கள் பின்னர் கூறும்போது, காவல்துறையிடம் தாங்கள் அளித்த உண்மையான தகவல்கள் அனைத்தும் ஊடகச் செய்திகளில் வெளியான போது முற்றிலும் மாறு பட்டவையாக இருக்கின்றன என்பதை அதிர்ச்சியுடன் தெரிவித்தனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை குறி வைத்து தாக்கும் இவர்களது மிகக்கொடூரமான ஊடக ராஜ்யத்தில் உண்மை பலமுறை படுகொலை செய்யப்பட்டிருக்கிறது.

ஒரு பொய்யை திரும்பத் திரும்ப கூறிக் கொண்டே இருப்பதன் மூலம் மக்கள் மத்தியில் இதுதான் உண்மையோ என்று நம்பவைக்கிற கோயபல்ஸ் பாணி பிரச்சாரம், கேரளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் செல்வாக்கை சிதைக்கும் நோக்கத்தோடு அரங்கேற்றப்பட்டு வருகிறது. ஊடக நிறுவனங்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செல்வாக்கை குறைக்கும் தங்களது நோக்கத்திற்கு உதவாத எந்தவெரு செய்தியையும் திட்டமிட்டே, தெரிந்தே அப்பட்டமாக நிராகரிக்கின்றன.

------- நன்றி தீக்கதிர்------------------------------------------------------------------

சனி, 14 ஜனவரி, 2012

நேர்மையான வழக்கறிஞர்களே! இது நியாயமா?


தமிழகம் மற்றும் புதுவையில் 12 .01 .12  அன்று வழக்கறிஞர்கள் வேலை நிறுத்ததம் செய்தனர். அதுவும் மார்க்சிஸ்ட் கட்சியை கண்டித்து என்றதும் பலருக்கும் ஆச்சரியம்தான்.    வழக்கறிஞர்கள் உரிமைக்காக தொடர்ந்து போராடி வரும் ஒரு அரசியல் இயக்கத்தை எதிர்த்து எதற்கு இந்த போராட்டம். அப்படி என்ன அந்த கட்சி தவறு செய்தது ? 

அந்த இயக்கம் செய்த தவறு இதுதான் ...

தூத்துக்குடி மாவட்டத்தில் தெய்வச்செயல்புரம் என்ற கிராமத்தில் அம்மக்களிடம் நீண்ட காலமாக 915 ஏக்கர் நிலம் அங்குள்ள 213 விவசாய குடும்பங்கள் பயன்பாட்டிலும் அனுபவத்திலும் இருந்து வந்தது.

சாதரண உழைப்பாளி மக்களின், விவசாயிகளின் நிலத்தை திருநெல்வேலியைச் சார்ந்த மேடைத் தளவாய் திருமலையப்பன் என்பவர் தூத்துக்குடி வழக்கறிஞர் பி.செல்வம் (ஃபிராடு நம்பர் 1) அவர்களின் சகோதரர்களான 1. பி.சண்முகவேல், 2.பி.சங்கரன் மற்றும் இவர்களது பினாமிகளான 3.ஜெயக்குமார், 4. சொர்ணம், 5.சின்னமுத்து, 6.ஆறுமுகம், 7.பேச்சிமுத்து ஆகியோருக்கு மேற்கண்ட விவசாயிகளின் நிலத்தில் 542 ஏக்கரை 2008-ல் மோசடியாக கிரயம் செய்து கொடுத்தார்.

இதுமட்டும் அல்லாமல் மிச்சமுள்ள 373 ஏக்கர் நிலம் பி.செல்வம் (ஃபிராடு நம்பர் 1) மூலமாக மற்றவர்களுக்கு மோசடியாக கிரையம் செய்யப்பட்டது. இந்த மோசடிக்கு எதிராக 3-8-2009 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவருமான கே.பாலகிருஷ்ணன் தலைமையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளும் கலந்து கொண்ட முற்றுகைப் போராட்டம் நடந்தது. இரவு 12 மணிக்கு ஆர்.டி.ஓ. போராட்டத்தில் கலந்து கொண்ட தலைவர்களையும், விவசாயிகளையும் சந்தித்து நிலத்தை மீட்டுக் கொடுப்பதாக கொடுத்த உத்தரவாதத்தின் அடிப்படையில் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

இதற்கிடையில், மோசடிக் கிரயப்பத்திரத்தை வைத்து பி. செல்வத்தின் (ஃபிராடு நம்பர் 1) சகோதர்களும், மற்றவர்களும் தங்களுக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி தங்கள் பெயரில் பட்டா மாற்றம் செய்து கொண்டார்கள். கிராமத்து மக்கள் ஆட்சேபித்தவுடன் தாசில்தார் மற்றும் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி அளிக்கப்பட்ட பட்டாவை ரத்து செய்தார்கள்.

தற்பொழுதும் அந்த 915 ஏக்கர் நிலத்தில் மேற்கண்ட 213 விவசாயிகள்தான் சாகுபடி செய்து வருகிறார்கள். நிலம் விவசாயிகளுக்கு சொந்தமென்றும், நடைபெற்றது மோசடிக் கிரயம் என்றும் அறிவித்த அதிகாரிகள் இது குறித்து மோசடியாக கிரயம் பெற்றவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து பிரச்சனையை தீர்த்துக் கொள்ளட்டும் என்று அறிவித்து விட்டார்கள்.

கடந்த 2010ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தெய்வச்செயல்புரம் கிராமத்து மக்களுடைய பயிர் கடுமையான பாதிப்புக்குள்ளானது. தங்களுக்கு நட்டஈடு வழங்க வேண்டுமென விவசாயிகள் அரசுக்கு மனு செய்திருந்தார்கள். மேற்கண்ட பி.செல்வத்திடம் (ஃபிராடு நம்பர் 1 னிடம்) மோசடிக்கிரயம் பெற்றவர்கள் சார்பாக பயிருக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லையென்று முதலமைச்சர் உள்ளிட்டு வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.

ஆனால் அதிகாரிகள் வெள்ளத்தால் பாதிக் கப்பட்ட நிலங்களைப் பார்வையிட்டு நட்டஈட்டுக்கு உத்தரவிட்டனர். வெள்ளத்தால் பயிருக்கு எந்த பாதிப்புமில்லை என முதல்வருக்கு கடிதமெழுதிய பி. செல்வத்தின் (ஃபிராடு நம்பர் 1) மற்றும் அவரது சகோதரர்கள் இருவர் உள்ளிட்டவர்கள் விவசாயிகளுக்கு சேர வேண்டிய 9 லட்ச ரூபாய் நட்டஈட்டுத் தொகையை 26-2-2011ல் போலி ஆவணங்களைக் காட்டி முறைகேடாக பெற்றுச் சென்று விட்டனர்.
இந்த மோசடியை ஆட்சேபித்து உரியவர்களுக்கு நட்டஈட்டுத்தொகையை பட்டுவாடா செய்ய வேண்டு மென்று அதிகாரிகளைச் சந்தித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது. இதன்மீது விசாரணை நடத்திய ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் திருமதி பி.வசந்தா அவர்கள் பட்டா எண் 31-ல் கண்ட புல எண்களில் சாகுபடி செய்துள்ளதாக போலி ஆவணங்களைக் காட்டி மேற்படி வங்கியிலிருந்து நிவாரணத்தொகையை கீழ்க்கண்ட 6 பேர்கள் முறைகேடாகப் பெற்றுச் சென்றுள்ளார்கள். 1. த.பி.சங்கரன் வ(ஃபிராடு நம்பர் 2), 2. பி.சண்முகவேல் (ஃபிராடு நம்பர் 3), 3. சொர்ணம், 4.சின்னமுத்து, 5.ஆறுமுகம், 6.ஜெயக்குமார் மேற்படி 6 நபர்களின் வங்கிக் கணக்கினை முடக்கம் செய்திட வேண்டும் - என உத்தரவிட்டார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எடுத்த முயற்சியினால் அரசு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நிலச் சொந்தக்காரர்களான விவசாயிகளுக்கு நட்டஈட்டை வழங்கினார்கள். போலி ஆவணங்கள் மீது தவறான முறையில் நட்டஈட்டுத் தொகையை பட்டுவாடா செய்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தெய்வச்செயல்புரத்தில் பி.செல்வம் (ஃபிராடு நம்பர் 1) மற்றும் அவர்களது சகோதரர்களும் மற்றும் அவர்களது கூட்டாளிகளும் சேர்ந்து செய்த மிகப்பெரிய நிலமோசடிக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2008-ம் ஆண் டிலிருந்து தொடர்ந்து போராடி வருகிறது.

தெய்வச்செயல்புரத்தில் வெள்ளத்தால் பயிர்ச்சேதம் ஏற்படவில்லையென முதல்வருக்கு மனு செய்துவிட்டு, பயிர் பாதிப்பிற்கு அரசு நட்டஈடு வழங்கிய போது போலி ஆவணங்களைக்காட்டி நட்ட ஈட்டுத் தொகையை அபகரிப்பதற்கு துணையாக நின்ற பி.செல்வம் (ஃபிராடு நம்பர் 1) அவர்கள் தெய்வச்செயல்புரத்தின் கிராமத்து விவசாயிகளுக்கு தொடர்ச்சியாக தீங்கிழைத்து வருகிறார்.

விவசாயிகளின் மரங்களை வெட்டிச்சென்றது, கல்தூண் வேலியை உடைத்து கம்பிகளை நாசப்படுத்தியது, அடியாட்களுடன் விவசாயிகளை தாக்குவது, கம்பி வேலிகளை திருடிச் சென்றது போன்ற செயல்களுக்காக விவசாயிகள் கொடுத்த மனுவின் பேரில் வழக்கறிஞர் பி.செல்வம் (ஃபிராடு நம்பர் 1) மற்றும் அவரது கூட்டாளிகள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். பி.செல்வத்தின் செயல் ஒரு சமூக விரோத செயல். இவன் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டு மென்றுதான் 2012 ஜனவரி 5,6 தேதிகளில் தூத்துக்குடியில் நீதி மன்ற புறக்கணிப்பு நடந்தது.

தெய்வச்செயல்புரம் கிராமத்து விவசாயிகளின் நிலத்தை அபகரித்த, நில மோசடி செய்த பி.செல்வத்தின் (ஃபிராடு நம்பர் 1) மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் வாங்கக்கோருவதை மறு பரிசீலனை செய்ய வேண்டு மென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்டத் தலைவர்கள் வழக்கறிஞர்களை சந்தித்து வேண்டுகோள் விடுத்தார்கள். அப்பொழுது பி.செல்வம் (ஃபிராடு நம்பர் 1) மற்றும் அவரது நண்பர்களால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள் தாக்கப்பட்டார்கள்.

இதில் காயம்பட்ட கட்சித் தோழர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பி.செல்வமும் (ஃபிராடு நம்பர் 1) அவரது நண்பர்களும் மருத்துவமனைக்குள் சென்று நகரச்செயலாளர் அர்ச்சுணன் உள்ளிட்ட தோழர்களை கடுமையாகத் தாக்கியுள்ளனர். மருத்துவ மனைக்குள் சென்று கட்சித் தலைவர்களை தாக்கிய செல்வம் மற்றும் அவரது நண்பர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது.

அன்று இரவு (6-1-2012) கட்சியின் மாவட்டச்செயலாளர் தோழர். கனகராஜ் வீட்டிற்குள் பெட்ரோல்குண்டு வீசப்பட்டுள்ளது. இதில், வீட்டில் தனியாக இருந்த கனகராஜின் மனைவி விஜயா காயமடைந்துள்ளார். பெட்ரோல் குண்டு வீசியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டு மென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி வருகிறது.

இவைதான் தூத்துக்குடியில் நடந்த சம்பவங்கள். கிராமத்து விவசாயிகளே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியோ வழக்கறிஞர் என்ற அடிப்படையில் பி. செல்வத்தின் (ஃபிராடு நம்பர் 1) மீது புகார் கொடுக்கவில்லை. காவல்துறையும் அந்த அடிப்படையில் வழக்கு பதிவு செய்யவில்லை. தெய்வச்செயல்புரத்தில் அவர் செய்த நிலமோசடி மற்றும் சமூக விரோதச்செயல்கள் மீதுதான் காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

இதில் எங்கு வழக்கறிஞர்கள் மீது குற்றச்சாட்டு வந்தது?

ஏமாற்றுபவர் வழக்கறிஞர் என்பதால் அவரை ஆதரிக்கலாமா? 

இதற்க்காக ஏன் வழக்கறிஞர்கள் வேலை நிறுத்தம் செய்கின்றனர். இது சரியானதுதானா ?

வழக்கறிஞர்கள் நேர்மையானவர்கள் எனில் யார் பக்கம் நிற்பார்கள்?

உழைப்பாளி மக்கள் நிலங்களை சுருடிய ஃபிராடுக்கு நீங்களும் ஆதரவா என்ற கேள்வி உண்மையானவர்களில் மனசாட்சியை  சுடாதா?

நிலம் திருடிய திருடனுக்கு நீங்கள் ஆதவாய் நிற்பீர்களா என்ற கேள்வியை ஒதுக்கிவைக்க முடியுமா ?

கேள்விகளை வைத்துவிட்டோம் பதிலை நீங்கள் சொல்லுங்கள் நேசத்திற்குரிய வழக்கறிஞர்களே ...!

(சி.பி,.ஐ.எம் மாநில செயலாளர் தோழர் ஜி.ராமகிருஷ்ணன் கடித்ததிலிருந்து எழுதப்பட்டது)