அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 29 நவம்பர், 2025

SIR குறித்து கேள்வி கேட்போரை எதிர்த்து...

SIR குறித்து கேள்வி கேட்போரை எதிர்த்து சங்கிகள் கதறி அல்லது குதறி வருகின்றனர்.

இந்த தேர்தல் சீர்திருத்தம் அடிப்படை மக்கள் குடியுரிமையை கேள்வி கேட்கிறது என்றுதான் பலமுறை சொல்லி இருக்கிறோம். அதை யாரும் நம்ப தயாரில்லை.   

ஏனெனில் உங்களது 

1.  தேர்தல் ஆணையம் கொடுத்த  வாக்காளர் அடையாள அட்டை 

2. தமிழக அரசு கொடுத்த  ரேஷன் கார்டு அட்டை 

3. மத்திய மாநில அரசுகள் கொடுத்த பான் கார்டு 

4.  தமிழக அரசு கொடுத்த ஓட்டுனர் உரிமை அட்டை 

5. எல்லாவறிற்கும் மாற்று என்று சொன்ன ஆதார்  அடையாள அட்டை    

 இவை எதையும்  நம்பாமல் நவ பாசிச பாஜக புதிய ஆவனங்ககளை கேட்கிறது   

ஆனால் கடந்த 20 ஆண்டுகளாக வளர்ந்து வரும் இரண்டு தலைமுறைக்கு குடியுரிமை பறிப்பும் அதற்காக சங்கீ தலைமை செய்யும் தொடர் பிரச்சாரமும் தெரியாது.

மோடியின் ஆலகால விஷக் கூட்டம் ஆயிரம் பொய்களை 20 ஆண்டுகளாக இணையதளத்தில் பதிவேற்றிய வருகின்றன..

இவர்கள் அனைத்தும் பொய்யின்றே தெரியாமல் இரண்டு பத்தாண்டு தலைமுறை அதை நம்பிய வளர்ந்து வருகிறது.. வாட்ஸ் ஆப் தமைமுறை அறிய வேண்டிய உண்மைகள் நிறைய உள்ளது

தொடர்ந்து சொல்கிறேன் ..... 

அவர்களுக்கான ஒரு சிறு உதாரணத்தை கீழே பதிவிட்டு இருக்கிறேன்.   

இந்தியாவில் சட்டவிரோதமாகக் குடியேறியிருக்கும் பதினோரு கோடி ரோஹிங்க்யா முஸ்லிம்களும், எட்டு கோடி வங்காளதேச முஸ்லிம்களும்

தலைப்பு  இதுதான் ..  

இந்தியாவில் அகதிகள் குறித்த தவறான தகவல்களும் சமூக ஊடகங்களின் வதந்திகளில் முக்கியப் பங்காற்றுகின்றன. அகதிகளின் எண்ணிக்கையை ஊதிப்பெரியதாகக் காட்டி மக்களிடையே அச்சத்தை உருவாக்கிவிடுகின்றன அத்தகைய வதந்திகள்.

மியான்மரில் ரோஹிங்க்யா மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடியினால் அகதிகளாக வெளியேறுவதை, இந்தியாவை ஆக்கிரமிக்கவே அவர்கள் வருவதைப் போன்ற தோற்றத்தை உருவாக்க முயல்வதைப் பார்க்கமுடிகிறது

அதுமட்டுமில்லாமல், 'வங்காளதேச அகதிகள்'' என்கிற வார்த்தைப் பிரயோகமே இந்திய அரசியலில் எப்போதும் ஒரு பிரபலமான விவாதக் கருப்பொருள்தான்.

அதனைப் பயன்படுத்தி, ஒவ்வொருமுறையும் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் அகதிகளின் எண்ணிக்கையை கற்பனைக்கு எட்டாத அளவுக்கு உயர்த்திக்காட்டுவதை, வெறுப்பரசியலை விதைப்போரும் வதந்திகளைப் பரப்புவோரும் வழக்கமாகவே செய்து வருகின்றனர

பரப்பப்பட்ட செய்தி:

இந்தியாவில் ரோஹிங்க்யா முஸ்லிம்களின் மக்கள்தொகை பதினோரு கோடியாக அதிகரித்துவிட்டது: அதேபோல எட்டு கோடி வங்காளதேச முஸ்லிம்களும் சட்டவிரோதமாக இந்தியாவில் வாழ்கின்றனர்.

உதாரணமாக:

"
டீசல் மற்றும் பெட்ரோலின் விலை 5 ரூபாய் உயர்ந்தாலே பாரத் பந்த் அறிவித்துப் போராடுகிறீர்கள். ஆனால் நீங்கள் ஆதரிக்கும் எட்டு கோடி வங்காளதேசத்து முஸ்லிம்களும் ரோஹிங்க்யா முஸ்லிம்களும் உங்கள் குடும்ப உறுப்பினர்களா என்ன? இரட்டைவேடம் போடும் காங்கிரஸ் கட்சி."

உண்மை என்ன?

அந்த எண்ணிக்கை முற்றிலும் தவறானது. பதினோரு கோடியென்பது, மியான்மர் தேசத்தின் ஒட்டுமொத்த மக்கள் தொகையை விடவும் இரண்டு மடங்கு ஆகும்.

இந்தியாவில் வாழும் ரோஹிங்க்யா மக்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கையே 40000 தான் என்று மத்திய உள்துறை விவகார இணையமைச்சர் கிரண் ரிஜ்ஜு 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நாடாளுமன்றத்திலேயே தெரிவித்தார். அந்த 40000 த்திலும், 16000 பேர் ஐநா சபையால் பதிவு செய்யப்பட்ட சட்டப்பூர்வமான அகதிகள் ஆவர்.

2017 ஆம் ஆண்டு ஐநா சபை வெளியிட்ட சர்வதேச புலம்பெயர்ந்தோர் குறித்த அறிக்கையில், இந்தியாவில் வாழும் வங்காளதேச அகதிகளின் எண்ணிக்கை 31 இலட்சம் என்றே குறிப்பிடப்பட்டிருக்கிறது.

------------------------------------------------------------------------ 

 மேலும் சங்ககிகளின் பொய்களை அறிய ...

ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் திட்டமிட்டுப் பரப்பப்படுகிற பொய்செய்திகளாலும் கட்டுக்கதைகளாலும் இந்தியாவின் சமூகச்சூழலே ஆட்டங்கண்டிருக்கிறது.

கும்பல்படுகொலைகள், கும்பல் வன்முறைகள், அவதூறுகள், கலவரங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுக்கும் அவை இட்டுச்சென்றிருக்கின்றன.

இந்தியாவின் ஜனநாயகத்தன்மைக்கும் அச்சுறுத்தலாகவே அவை தொடர்ந்து இருக்கின்றன. “


இந்தியா ஏமாற்றப்படுகிறது” என்னும் இந்நூல், ஆல்ட் நியூஸ் என்கிற இணையதளக் குழுவினால் எழுதப்பட்டு, பிரதீக் சின்ஹா, மருத்துவர் சுமையா ஷேக் மற்றும் அர்ஜுன் சித்தார்த் ஆகியோரால் தொகுக்கப்பட்டிருக்கிறது.

தந்திகளைப் பரப்புவோரை அடையாளங்காட்டி, அவற்றை மிகத்தெளிவாகத் திட்டமிட்டே உருவாக்கும் பிரச்சார எந்திரங்களை அம்பலப்படுத்தி, அச்சுறுத்தும் வகையிலான கட்டுக்கதைகளைக் கண்டறிவதற்கான உத்திகளை வாசகர்களுக்கு விளக்கிச்சொல்லும் பணியினையும் இந்நூல் சிறப்பாக செய்கிறது.    


புதன், 23 ஏப்ரல், 2025

ஸ்பைடர் மேன் துவங்கி ஸ்டீவன் ஹாக்கிங் வரை: எனது வாசிப்பு பாதை!

 ஏபரல் 23 உலக புத்தக தினம் :

 

  பள்ளி நாட்களில் பாடப் புத்தகங்களைப் பார்த்துப் பயந்த நான், முதலில் என்னைப் படிக்கத் தூண்டிய புத்தகங்கள் எவை என அசைபோடுகிறேன்.

     காமிக்ஸ் புத்தகங்களே என்னை முதலில் ஈர்த்தவை. லயன் காமிக்ஸ் வெளியிட்ட ஸ்பைடர் மேன். நீங்கள் இப்போது பார்க்கும் அழகான ஸ்பைடர் மேன் இல்லை! புரபெரஸ் பெல்ஹாம் உருவாக்கிய நீண்ட காதுகள் கொண்ட, முதுகில் இரண்டு சிலிண்டர்களை சுமந்த  ஸ்பைடர் மேன் அவர்.

     அதைத் தொடர்ந்து இரும்புக்கை மயாவி, ஜானி நீரோ, C.I.D. லாரன்ஸ் & டேவிட், வேதாளர், ரிப் கிர்பி, சார்லின் மாண்ட்ரேக், பிலிப் காரிகன், கேப்டன் டைகர், லார்கோ வின்ச், தோர்கல், ரிப்போர்டர் ஜானி, ப்ளூகோட் பட்டாளம், சிக் பில், டிடெக்டிவ் ரபின், மர்ம மனிதன் மார்டின், கேப்டன் பிரின்ஸ், பேட்மேன், சாகச வீரர் ரோஜர், C.I.D. மார்ஷல், ப்ருனோ ப்ரேசில் போன்ற காமிஸ்  ஹீரோக்களுடன் பயனித்தேன்.   

     பின்புதான் தெரிந்தது இவர்கள் எல்லாம் பிரிட்டிஷ், அமெரிக்கா, இத்தாலி, பெல்ஜியம் போன்ற நாடுகளில் வெளிவந்த கதைகளில் இருந்த நாயகர்கள் என! நான் பிறந்த 1972-ஆம் ஆண்டு முத்து காமிக்சின் முதலாவது புத்தகம் இரும்புக்கை மாயாவி எனும் தலைப்பில் வெளிவந்தது என்று பின்பு அறிந்துகொண்டேன். அப்படியெனில் ”தமிழ் இரும்புக்கை மாயாவியும்” நானும் ஒத்த வயதுடையவர்கள். ஆஹா!

     அனேகமாக 100க்கும் மேற்பட்ட கமிக்ஸ் புத்தகங்கள் என்னிடம் இருந்தது. என் டிரங் பெட்டியில் என் ஆடைகளைவிடப் புத்தகங்களே அதிகம். எனது நண்பர்கள் 5 பைசா அல்லது 10 பைசா கொடுத்து வாங்கி படிப்பார்கள். அதில் வரும் காசு அடுத்த புதிய புத்தகம் வாங்க உதவியது.

     அதன் பிறகு அம்புலி மாமா போன்ற எழுத்துக்கள் மிகுந்த புத்தகங்கள் பக்கம் கவனம் திரும்பியது. எழுத்துகளுக்கு மனதில் சித்திரங்களை வரையும் தன்மை உண்டு என்ற அற்புதம் அப்போதுதான் புரியத் துவங்கியது. எங்கள் வீட்டில் துக்ளக் பல பத்தாண்டுகள் வந்துகொண்டிருந்தது. எனது தந்தை சோ வின் தீவிர வாசகர். மரக்காணத்தில் எனது பெரியம்மா குமுதம், ராணி, ராணி முத்து இதழ்களை தொடர்ந்து வாசிப்பார். இவையும் பரிச்சயமானது.

அந்த நேரத்தில்தான் ராஜேந்திர குமார் ”ஙே” என எழுதிக்கொண்டிருந்தார். அவரை தொடர்ந்து சுஜாதாவின் கணேஷ் - வசந்த், ராஜேஷ்குமாரின் விவேக் - ரூபாலா, பட்டுக்கோட்டை பிரபாகரின் பரத் - சுசீலா (சுசீலாவின் பனியின் வசனங்கள் தனி ரகம்), சுபாவின் நரேன் - வைஜ் என்று அவர்கள் இணைகளை முன்வைத்து மிகச் சுவராசியமான துப்பறியும் கதைகளை எழுதிக் குவித்தனர். ஒவ்வொருவருக்கும் ஒரு எழுத்து நடை, அவர்களின் மிக நுட்பமாகக் கதை நகர்த்தும் விதம் ஒரு தனி உலகத்திற்கு அழைத்துச் சென்றது. அதிலும் சுஜாதாவின் உரையாடல் வேறு ரகத்தில் இருக்கும். அவருடைய விஞ்ஞான சிறுகதைகள் மிகவும் புதுமையானவை. பல நாட்கள் முழு இரவு படித்த நாட்கள் உண்டு.

     இதனூடாக பொன்னியின் செல்வன் தூதாக வத்தியதேவன் ஒருபக்கம் குந்தவையை பார்க்கக் கிளம்பினான். அது ஒரு தனி உலகமாக விரிந்தது. பார்த்திபன் கனவும், கடல் புறாவும் எழுத்து பிரமாண்டங்களை விதைத்தது. மன்னர்களின் அரண்மனைகளும், வீரர்கள் நின்ற போர் களங்களும், ஆட்சியின் சுவை ரசிக்க நடந்த துரோகங்களும் கண் முன் எழுந்து நின்றது. 

     அந்த நேரத்தில் இந்திய மாணவர் சங்கத்தில் முழு ஈடு பாட்டுடன் பணியாற்றத் துவங்கினேன். அப்போதுதான் முதன் முறையாக என் கையில் சவுத் விஷன் வெளியீடான ”நினைவுகள் அழிவதில்லை” கிடைத்தது. அந்த புத்தகம் எனக்குள் ஒரு பெரிய தாக்கத்தை விதைத்தது. 

     புத்தகங்களின் படிப்பைப் பொறுத்தவரைக் கற்பனை உலகில் வாழ்ந்த என்னைக் கன்னத்தில் அறைந்து இழுத்த புத்தகம் அது. ஆம் அந்த கற்பனைகளை மிஞ்சும் நிஜங்கள் இருக்கத்தான் செய்தன. கையூர் தியாகிகள் குறித்த நிரஞ்சனாவின் நாவல் அது.  கன்னடத்திலிருந்து மலையாளத்திற்குப்  போய் மலையாளத்திலிருந்து தமிழில் தோழர் பி.ஆர்.பரமேஸ்வரன் மொழிபெயர்த்த நாவல். மக்களுக்காக அவர்கள் வாழ்க்கைக்காக தங்கள் உயிரைக் கொடுக்கும் மகத்தான மனிதர்கள் முன்பு இரும்புக்கை மாயாவிகள் எறும்புகளைப் போல் தெரிந்தனர்.

     அன்று துவங்கியது தீவிர அரசியல் வாசிப்பு. மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் தோழர் குணசேகரன் அப்போது மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் அவர் 1991 ஆம் ஆண்டு  சிதம்பரம் வட்ட மாநாட்டிற்கு வந்தபோது ஒரு புத்தக பட்டியல் கொடுத்துப் படிக்கச் சொன்னார் மார்க்சிய மெய்ஞானம், அரசியல் பொருளாதாரம், மனிதக் குரங்கிலிருந்து மனிதன் உருவானதில் உழைப்பின் பாத்திரம் போன்ற நூல்களைக் கொண்ட பட்டியல் அது. அந்த வயதில் அவைகள் புரியவில்லை எனினும் தொடர்ந்து வாசித்துப் புரிந்துகொள்ள முயன்றேன். அதில் என்னை மிகவும் ஈர்த்த புத்தகம் மார்க்சிய மெய்ஞானம் தான். 

      எங்கள் சிதம்பரம் கீற்றுக் கொட்டாய் கட்சி அலுவலகம் மிகவும் உற்சாகமாக எங்களுக்கான படிக்கும் சூழலை உருவாக்கியது. என் பால்யத்தின் பல ஆண்டுகளின் இரவு அங்குதான் கழிந்தது. மார்க்சிஸ்ட்  கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் கே.பாலகிருஷ்ணன் எங்களுடன் உரையாடியதும், அவர் மார்க்சிய  நூல்களுடன் அம்பேத்கர், பெரியார் நூல்கள், மட்டுமல்ல அப்போது சிபிஎம் கட்சியிலிருந்து பிரிந்து சென்ற தமிழ்த் தேசிய பொதுவுடைமை கட்சியின் நூல்கள் உட்பட எல்லாவற்றையும் படிக்கச் சொல்வார்.

     1992 ஆம் ஆண்டு தோழர் கே.பாலகிருஷ்ணன் அவர்களுடன் 35 நாட்கள் கடலூர் மத்தியச் சிறையிலிருந்தது மறக்க இயலா அனுபவம்.   அந்த நாட்களில் அவர் சிறையில் எடுத்த கட்சி வகுப்புகள் சிறையிலிருந்து வந்து மேலும் படிக்கத் தூண்டியது. தொடர்ந்து படிக்கப் பேரார்வத்தைத் தூண்டியதாக அவரது உரைகள் அமைந்தன. ஆயுள் தண்டனை கைதிகளைக் கொண்ட ஒரு கட்சி கிளையை அங்கு உருவாக்கியது தனிக் கதை.

     இப்போது தனியார் தொலைக்காட்சியில் பணியாற்றும் தோழர் ஆர்.கோவிந்தராஜன் எப்போதும் என்னுடைய ஆதர்சம். ஏனெனில் அவருடன் அணுக் குண்டு துவங்கி மணல் குன்று  வரை எதையும் நீங்கள் விவாதிக்க முடியும். 10 மணி நேரம் நீங்கள் பேசினாலும் அய்யயோ அதற்குள் நேரம் கடந்துவிட்டதா என அவர் இழப்பை உணர்வீர்கள். அவருடன் பேச அல்லது விவாதிப்பதற்காகவே நிறைய நூல்களைப் படித்தேன்.

     தற்போது மார்க்சிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்டச் செயலாளராக இருக்கும் தோழர் ஜி.மாதவன், இப்போது மும்பையில் வசிக்கும் தோழர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் எனது வாசக பரப்பைப் பெரிதாக்க உதவிய தோழர்கள். மார்க்சிஸ்ட் கட்சியை நான் தேர்ந்தெடுக்காமல் விட்டிருந்தால் இப்படி ஒரு படிக்கும் பழக்கம் எனக்கு வந்திருக்குமா தெரியாது. இதன் பொருள் இக்கட்சியில் இல்லாதவர்கள் படிப்பார்வம் இல்லாதவர்கள் என்றில்லை. என் வாழ்வனுபவத்தில் எனது கட்சி என் நூல் பயணத்தை உற்சாகப்படுத்தியது என்பதுதான்.  

     ஒருபக்கம் மார்க்ஸ் என்னை ஈர்த்த அதே சமயம் இலக்கிய நூல்களும், வள்ளலாரும், திருமூலரும் என்னை ஈர்க்கத்தான் செய்தனர். கீழடிக்குப் பிறகு சங்க இலக்கிய நூல்கள் குறித்த ஒரு புதிய தரிசனம் கிடைத்தது. சங்ககால மனிதன் வாழ்வின் வெளிச்சங்களைப் பரப்பியது அது. சங்ககால மனிதர்கள் வாழ்வின் தடயங்களைச் சங்க இலக்கியங்கள் வைத்திருப்பதை கீழடி ஆய்வு மெல்லச் சொல்லத் துவங்கி உள்ளது. மதுரைக் காஞ்சி சொல்லும் மதுரை வீதிகளின் பரப்பு மெல்ல விரிகிறது.  

     நான் சொந்தமாக வீடு கட்டிய போது என் தோழமை கீதாவும் மகன் சத்யாவும் எனக்கென ஒரு நூலக அறையை அமைத்துக்கொள்ள மகிழ்வுடன் அனுமதித்தனர். எனது வீட்டில் உள்ள  நூலக அறையில் நுழையும் போதெல்லாம் பயமாக இருக்கிறது. அய்யோ இன்னும் இவ்வுளவு புத்தகங்களைப் படிக்கக் காத்திருக்கிறதே என! இன்னும் வாங்க வேண்டிய நூல்கள் எண்ணிக்கையும் அதிகம் என! களப்பணிகளுக்கு ஊடாக படிப்பதற்கும் எழுதுவதற்கும் நேரம் கண்டறிவது சிரமமான பணியாக மாறி உள்ளது.  எனினும் இவற்றைச் செய்துதானே ஆக வேண்டும்.


    ஸ்டீவன் ஹாக்கிங் இப்போது உற்சாகமான தகவல்களை சொல்லுவதைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன். அந்த மகத்தான சிந்தனையாளன் மறைந்த பிறகும் அறிவியல் அதிசயங்களை விளக்கிக்கொண்டிருக்கிறான். கடவுள் இல்லை என 30 ஆண்டுகளுக்கு முன் நான் புரிந்து கொண்டதற்கு ஆதாரம் கொடுத்துக் கொண்டிருக்கிறார், மொத்த உடலும் சுருங்கி அவன் வாழ்ந்த, அவனது சக்கர நாற்காலியின் ஒரு பல் சக்கரமாக இருந்திருந்தால் அவனோடு ஒன்றும் நெருக்கமாக இருந்திருக்கலாமோ?

     

 புத்தகங்களைப் படிப்பது ஆகாய வெளிகளை, வனாந்தரங்களை கடந்து செல்லும் ஒரு நீண்ட பயணம் அதற்கு முடிவு கிடையாது, நாம் இறங்கிக்கொள்ளும் நிறுத்தம் வரும் வரை படித்துக்கொண்டிருக்கலாம். ஆக, எனது நிறுத்தம் வரும் வரை படிக்க வேண்டும் என்பதுதான் எனது இலக்காகக் கொண்டிருக்கிறேன்.      

- எஸ்.ஜி.ரமேஷ்பாபு       

 

வெள்ளி, 1 நவம்பர், 2024

அல்வாவிற்கு பதிலாக பாயாசமா : விஜய் அண்ணனுக்கு ஒரு கடிதம்!

 


த.வெ.க தலைவர் அண்ணன் விஜய் அவர்களுக்கு!

அன்பு நிறைந்த வணக்கம்.

          வயதாகி அரசியலுக்கு வந்த நடிகர்கள், தன் படங்களின் வெளியீட்டின் போதெல்லாம் அரசியலுக்கு வருவேன் என பூச்சி காட்டி, தள்ளாத வயதானதும் அரசியலுக்கு வரவில்லை என அறிவித்த நடிகர், அரசியலுக்கு வந்தும் குழப்பாய் அலையும் நடிகர்களுக்கு மத்தியில் ஒப்பீட்டளவில் இளம் வயதில், புகழின் உச்சத்தில் இருக்கும் போது அரசியல் கட்சியை துவக்கிய உங்களுக்கு முதலில் வாழ்த்துக்கள்!

          'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று சொன்னபோதே நாம் நம் எதிரியை முடிவுசெய்துவிட்டோம். நாட்டைப் பாழ்படுத்தும் பிளவுவாத அரசியல் செய்வோர்தான் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை ரீதியான முதல் எதிரி, ”திராவிட மாடல் ஆட்சி என்று பெரியார், அண்ணா பெயரை வைத்து தமிழ்நாட்டைச் சுரண்டிக் கொள்ளையடிக்கும் ஒரு குடும்ப சுயநலக் கூட்டம்தான் அடுத்த எதிரி” என்ற வார்த்தைகளும்.

          ”கொள்கை கோட்பாட்டளவில் திராவிடம், தமிழ் தேசியம் ஆகிய இரண்டும் நமது இரண்டு கண்கள், நம்மோடு கூட்டணி வைப்பவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கீடு” என நீங்கள் விடுத்த அழைப்பும், அதிகாரப் பகிர்வு, சாதிவாரி கணக்கெடுப்பு ஆதரவு,  சாதி, மதம், இனம், மொழி, பாலினம், பணம் என்று பிரிக்கும் பிளவுவாத அரசியலையும், ஊழல் மலிந்த அரசியல் கலாசாரத்தையும் எதிர்ப்பது என்று சிறப்பாக பேசினீர்கள். வாழ்த்துக்கள்.

          ஆனால் உங்கள் குழுப்பம் எங்கு துவங்கியது? “ஒரு கூட்டம் யார் அரசியலுக்கு வந்தாலும் அவர்கள் மீது குறிப்பிட்ட ‘கலரைப்’ பூசி, ‘ஃபாசிசம்’ என்று பேசிக்கொண்டு, சிறுபான்மை, பெரும்பான்மை பயத்தைக் காட்டுகிறார்கள்” என்பதில்தான் துவங்கியது.

          திருமலை படத்தில் வாழ்க்கை ஒரு வட்டம்டா எனும் போதும், போக்கிரி படத்தில் கஞ்சா பிடிக்க போலிஸ் வரும் கைப்பந்தாட்ட காட்சியிலும், பிகில் படத்தில் ”பிகிலு கப்பு முக்கியம் பிகிலு” என அப்பா விஜய் சொல்லும் போது மகனாக நீங்கள் தோன்றும் காட்சியிலும், சர்கார் படத்தில் பழ.கருப்பையாவை மேடையில் வைத்துக்கொண்டு பேசும் காட்சியிலும் இருந்த அந்த அபாரமான நடிப்பாற்றலை விக்கிரவாண்டி மேடையிலும் கண்டு உங்கள் ரசிகர்களை போல நானும் பிரமித்தேன்.

          அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் “திமுகவுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி முதல் நிலையில் நின்று போராடிக் கொண்டிருக்கிறார். எங்கள் போராட்டக் களத்தின் மறு வடிவமாகத்தான் தவெக மாநாட்டை பார்க்கிறோம். எங்களின் எண்ணங்கள் ஒன்றாக இருக்கின்றன. எங்களுடைய எதிரிகள் ஒன்றாக இருக்கிறார்கள்”என்று சொன்னது கொஞ்சம் குழப்பமாகதான் இருக்கிறது. எனெனில் நீங்கள் திமுக மட்டுமே ஊழல் கட்சி என குறிப்பிட்டது, அவரை உற்சாகபடுத்தி இருக்கக்கூடும்.

          நேற்று வரை என் தம்பி விஜய் என் அரசியலைத்தான் பேசுகிறார் என வழக்கம்போல உளறிக்கொட்டிக்கொண்டிருக்கும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ”திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்று இல்லை. அது இரண்டும் கண்களாக இருக்க முடியாது, கொடிய புண்ணாகத்தான் இருக்கும்” என்று பொரிந்து தள்ளி இருப்பதும் கவனத்தில் கொள்ளதக்கதுதான். அது இருக்கட்டும்,

          மாநாடு நடைபெறும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்-அவுட்கள் குறித்து சமூக ஊடகங்களிலும் அரசியல் அரங்கிலும் பரவலாக விவாதிக்கப்படுகிறது. ஒருபுறம் வேலுநாச்சியார், காமராஜர், பெரியார், மறுபுறம் அம்பேத்கர், சுதந்திர போராட்டர் வீரர் அஞ்சலை அம்மாள் ஆகியோருக்கு நடுவே நீங்கள் நிற்பது போன்று கட்-அவுட் அமைக்கப்பட்டுள்ளது. அண்ணா, இந்தா கட் அவுட்டுகளுக்கு பின்னால் இருக்கும் சாதிய கணக்கீடு தெரியாத அப்பாவிகள் அல்ல தமிழக மக்கள்!

          அதுவல்லாமல், ஜனநாயகத்தில் மன்னர்களுக்கு எந்த வேலையும் இல்லை, ஆனாலும் சேர, சோழர், பாண்டிய மன்னர்களுக்கும் கட் - அவுட் வைத்தது அபத்ததின் உச்சத்தை தொட்டுள்ளீர்கள்! இருக்கட்டும் உங்களுக்கு உள்ள குழப்பத்தை எப்படியும் பேசி தீர்கலாம்.

          ஆனால் உங்கள் மாநாடு உரையில் நீங்கள் திட்டமிட்டு தவிர்த்த மூன்று  பிரச்சினையின் தீவிரத்தை சுட்டிகாட்ட விரும்புகிறேன்.

1.  உங்கள் உரையில் எங்கும்  இந்திய நாட்டை சுரண்டி கொழுக்கும் கார்ப்ரேட் சக்திகள் குறித்த வார்த்தைகளை தப்பி தவறியும் சொல்லவில்லை.  கத்தி படம் முழுக்க முழுக்க விவசாயத்தில் கார்ப்ரேட் கம்பெனிகள் அடிக்கும் கொள்ளையை பற்றி வசனங்களுக்கு வாய் அசைத்தது நீங்கள்தான். ஆனால் உழைப்பாளி மக்களின் சொத்துக்களையெல்லாம் கார்ப்ரேட் கம்பெனிகளுக்கு தாரைவார்க்கும் அரசியலை நீங்கள் தொடவே இல்லை.  நூறு நாள் வேலைக்கு  இரண்டு லட்சம் கோடியை வெட்டி சுருக்கிய ஒன்றிய பிஜேபி அரசு, அதானிகளுக்கும் அம்பானிகளுக்கும் பல லட்சம் கோடிகளை வரி சலுகையாக வழகுவது உங்களுக்கு பெரிய பிரச்சினையாக தெரியவில்லை போலும்.

2. ஊழலுக்கு எதிராக சிலம்பாட்டம் ஆட தயார் என அறிவித்த நீங்கள் ஊழல் வழக்கால் தண்டனை பெற்ற ஒரு கட்சி குறித்து எதுவும் பேசாததும், தேர்தல் பத்திரங்கள் மூலம் கோடி கோடியாய் வாரி சுருட்டியவர்களையும், கொடுமையான கொரோனா நோய் தொற்று காலத்தில் பி.எம் கேர்ஸ் மூலம் பல்லாயிரம் கோடி கொள்ளை அடித்தவர்கள் குறித்தும் வாய் திறக்காததும் உங்கள் ஊழல் எதிர்ப்பை பல் இளிக்க வைக்கிறது என்பதை புரிந்து கொள்வீர்களா?

3. இறுதியாக பாசிசம் குறித்த உங்கள் பேச்சு எத்தனை புரிதல் அற்றது என்பதை அறிவீர்களா? பாசிசம் என்பது மதத்தின் பெயரால், சாதியின் பெயரால், இனத்தின் பெயாரால் அல்லது ஏதோ ஒரு அடையாளத்தின் பெயரால் எதிரிகளை கட்டமைத்து அவர்களை வெறுத்தொதுக்குவது. அரசிலை அதிகாரத்திற்காக படுகொலைகளை செய்வது. சிறுபான்மையினரை குறிவைத்து அழிப்பது. இந்த அம்சங்கள் அனைத்து பொருந்துகிற பாசிச பாஜக குறித்து ஒரு வார்த்தைகூட பேசாமல் உங்களால் ஒரு மாநாடு நடத்த முடியும் என்றால், தமிழக மக்களுக்கு அல்வாவுக்கு பாயாசம் கொடுப்பது நீங்கள்தான் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்! 

          இதுவரை தமிழக மக்களுக்கு பல கட்சிகள் அல்வா கொடுத்தனர், புதிதாக நீங்கள் பயாசம் கொடுக்க கிளம்பி உள்ளீர்கள் என்பதை தவிர வேறென்ன உங்களிடம்  வித்தியாசம் உள்ளது. சமதர்மம் என்பது வார்த்தைகளில் இல்லை அண்ணா, அது கொள்கையின் வெளிபாடு. உங்கள் கொள்கை பிரகடனம் வெற்று வார்த்தைகளாய் காற்றில் கரையாமல் இருக்க வேண்டுமெனில் சமூகத்தின் உண்மையாக பிரச்சினைகளை கண் கொண்டு பாருங்கள்! நன்றி!

அன்புடன்

எஸ்.ஜி.ரமேஷ்பாபு

புதன், 19 அக்டோபர், 2016

வீதிக்கு வந்த இஸ்லாமிய பெண்கள்


விடுதலைப்போரில் பெண்கள் – 25



தேசம் போற்றிக் கொண்டாடுகின்ற முதல் இந்திய விடுதலை போரின் நூறு ஆண்டுகளுக்கு முன்பே அதாவது  1757 ஆம் ஆண்டிலேயே  ஆங்கிலேயரை எதிர்த்து வீரசமர் புரிந்தவர் சிராஜ் – உத்- தெளலா என்கிற இஸ்லாமி மன்னர்தான். அதுபோலவே ஒரு இஸ்லாமிய பெண்ணும் முதல் விடுதலை போருக்கு முன்பே ஆங்கிலேயரை எதிர்த்து களமாடி உள்ளார். அவர் கண்ணனூர் ராணி பீபி கேரளாவின் துறைமுகப்பட்டினமாக விளங்கிய கண்ணனூரை பதினெட்டாம் நூற்றாண்டில் ஆட்சி செய்தவர் ராணி பீபி. ஆங்கிலேயருக்கு சிம்மசொப்பனமாய் விளங்கிய மைசூர் திப்பு சுல்தானின் ஆதரவாளராக கேரளத்தில் தாய்மண்ணை நேசித்தவர் இவர்.
இந்தியர்களை அடக்கியாளும், இந்திய வளங்களை சூரையாடும்  ஆங்கிலேயர்களின் படை வீரர்கள் வழியாகச் செல்லக்கூடாது என்று தடை விதித்தார். இதனால் ஆத்திரமடைந்த ஆங்கிலேயர்கள் இவர் மீது போர் தொடுத்தனர். 1783 ஆம் ஆண்டு திடீரென கண்ணனூரை ஆங்கிலேயர்கள் தாக்கினார்கள். நவீன ஆயுதங்களோடு நடத்தப்பட்ட  திடீர் தாக்குதலில் ராணி பீபியின் படை தோல்வியடைந்தது. அவரையும் அவரது குடும்பத்தினரையும் ஆங்கியேலர்கள் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறையில் அடைத்தவுடன் ராணியின் எல்லைப்பகுதியை தாங்கள் பயன்படுத்திக் கொள்ள ஒப்புதல் வழங்குவது போல போலி ஆவணம் தயாரித்து ராணியிடம் படித்துக் காண்பிக்காமல் ஒப்பந்தம் வாங்கி ஆங்கிலேயர் தங்களுடைய ராணுவ முகாமிற்கு பயன்படுத்திக் கொண்டனர். ராணி விடுதலை செய்யப்பட்டார். 
1784 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து கண்ணனூரில் ஆங்கியேலயரின் முகாம் செயல்படத்தொடங்கியது. மீண்டும் 1790 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மறுபடியும் ஓர் ஒப்பந்தத்தை தயார் செய்து கையெழுத்திடுமாறு ராணி பீபியை நிர்பந்தம் செய்தனர். ஆனால் முதல் முறை ஏமாற்றப்பட்ட ராணி பீபி இதை மறுத்ததுடன் திப்பு சுல்தான் படைக்கு ஆதராவாக செயல்பட போவதாக பகிரங்கமாக அறிவிப்பும் செய்தார். இதன் காரணமாகவே மீண்டும் ராணி கைது செய்யப்பட்டார். மீண்டு வரமுடியாத சூழலில் மறைந்தார் இவர்.
1857 ஆம் ஆண்டிலும் நடந்த முதல் விடுதலைப் போரில் அயோத்தியின் அடையாளமாய் மாறிப் போன ஹஜ்ரத் மஹல் வாரிசுகளாக விடுதலை அடையும்வரை போராடிய இஸ்லாமிய பெண்கள் குறித்த தகவல்கள் அறிதாகவே கிடைக்கிறது. பேகம் ஹஜ்ரத் மஹலின் சமகாலத்தில் ஜான்ஸி ராணியுடன் பிரிட்டீஷாருக்கு எதிராகப் போர்க்களத்தில் வாளேந்தி நின்ற மற்றொரு வீரமங்கை ஹஸன் மஹ்பர் பேகம். ஜான்ஸியின் ஒரு படைப்பிரிவுக்குத் தலைமை தாங்கிய வீரம் மிக்கவர் மஹ்பர், 1858 ஜுன் 18 – இல் நடைபெற்ற குவாலியர் யுத்தத்தில் ஜானஸியுடன் வீர மரணம் அடந்தார்.
திண்டுக்கல் மாவட்த்தில் உள்ள பேகம்பூருக்கு ஒரு வரலாறு இருக்கிறது. அது நிறைமாத கர்பினியாக ஆங்கிலேயரை எதிர்த்து போர்களத்தில் நின்ற ஹைதர் அலியின் சகோதரி பேகம் சாஹிபா  வாழ்ந்த மண் என்பதுதான். பேகம் சாஹிபா என்ற அந்த ஊர், அதன் பின்னர் பேகம் சாஹிபா நகராக மாறி, அதன் பின்னர் பேகம்பூர் என மருவியது. அவர் கணவர் நவாபு மீறா றசாலிக்கான் சாயபு. இவர் திண்டுக்கல் சீமை ஜாகீர்தாரராக இருந்தார். கி.பி.1772 குழந்தை பிறந்து ஏழாம் நாள் காலமானார் சாஹியா.  மீறா றசாலிக்கான் சாயபு போராளியான தன் மனைவி அடக்கம் செய்த இடத்தில் பள்ளிவாசல் கட்டி, கோரியும் கட்டி காசினாயி தோப்பு, பேகம்பூர், பனங்குளம், சின்னபள்ளபட்டி ஆகிய ஊர்களில் நன்செய், புன்செய் நிலங்களை மானியமாக விட்டு ஒன்பது குடும்பங்களுக்கு  நிலங்களை கொடுத்து பள்ளிவாசல் பணிகளை கவனிக்க ஏற்பாடு செய்தார்.
“ஆங்கிலேயர்களைக் கூண்டோடு அழித்து விடவேண்டும் என்று ஆண்டவனைத் தொழும்படி முஸ்லிம் தாய்மார்கள் குழந்தைகளிடம் கூறியதை நான் நேரில் கேட்டேன்என டில்லி மன்னர் மீது நடந்த வழக்கு சாட்சியத்தின் போது  ஆங்கில பெண் ஆல்ட்வெல் கூறியதை சாவர்க்கர் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். அத்துனை தேசபக்தி இஸ்லாமிய தாய்மார்களுக்கு.
1919ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13 அன்று பஞ்சாப் ஜாலியன் வாலாபாக்  மைதானத்தில் நடந்த கூட்டத்தில் கொடூரன் ஜென்ரல் டயர் நட்த்திய துப்பாக்கி சூட்டில் மரணமடைந்தவர்  உமர் பீபி. இவர் 1864 ஆம் ஆண்டு அமிதசரசில் பிறந்தவர். தொடர்ந்து பல்வேறு தேசவிடுதலை இயக்கங்களில் பங்கு கொண்டவர்.  இவரின் கணவர் இமாமுதீன் இவருக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார்.  இந்த துப்பாக்கிச் சூட்டில் இறந்த நூற்றுக்கனக்கானோரில் முக்கியமானவர் இவர். ஜாலியன் வாலாபாக் துப்பாக்கிச் சூட்டில் ஏராளமான முஸ்லீம்கள் கொல்லப்பட்டாலும் விபரங்கள் மிக்க்குறைவே.
என் பிள்ளைகள் சிறையில் இருக்கும் போது ஒரு வேளை ஆங்கிலேயர்களிடம் மன்னிப்பு கேட்டு விடுதலையானால் அவர்களின் குரல் வளையை நெறித்துக் கொல்வேன் என்று வீரமுழக்கமிட்டவர் தாயார் பீபியம்மாள். 1922 ஆம் ஆண்டு சுதந்திரப் போராட்டத்தைப் பற்றியும், கதர் ஆடையைப் பற்றி மக்களுக்கு எடுத்துரைக்கவும், சுதந்திரப் போராட்டத்திற்கு நிதி திரட்ட இளையான்குடி இப்ராகிம் ஷாவுடைய பங்களாவில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்த பீபியம்மாள், மீன்பஜார் முதல் காதர் பிச்சை தெருவரை மக்கள் வெள்ளத்தில் மிதந்து வந்தார்
இதே போல தென்காசி சையது குருக்கள் பள்ளிவாசல் மைதானத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஆக்ரோஷ்மாக உருதுமொழியில் பேசி நிதி திரட்டினார். தினமும் பயணங்கள் கூட்டங்கள் கலந்துரையாடல்கள் என இயங்கிக்கொண்டிருந்தார். இவ்வாறு சுதந்திர வேட்கையுடன் இந்தியா முழுவதும் சுற்றப்பயணம் செய்த பீபியம்மாள் 1924 ஆம் ஆண்டு 72வது வயதில் காலமானார். பீபியம்மாள் விருப்பபடி அவரது உடல் கதர் துணியால் சுற்றப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.
இவர் மட்டுமல்ல திருச்சி பீமநகர் வயன்வித்தார் தெருவில் வசித்த மரியம் பீவி என்னும் விடுதலைப் போராட்ட வீராங்களை நாகபுரியில் நடந்த  கொடிப் போராட்டத்தில் கலந்து கொண்ட்தால் கடலூர் சிறையில் ஆறுமாதம் அடைக்கப்படார்.
அதேபோல் 1937 ஆம் ஆண்டு உத்திரப் பிரதேச சட்ட மேலேவை உறுப்பினராகவும், 1969 ஆம் ஆண்டு முதல் 1971 ஆம் ஆண்டு வரை உத்திரப்பிரதேச அமைச்சராக பதவி வகித்த பேகம் அயிஜாஸ் ரசூல் ஒரு மகத்தான விடுதலைப் போராட்ட வீராங்கனையாவார்.
மேலும் கரூர் நன்னா சாகிப் மற்றும் அவரது மனைவி பியாரி பீவி ஆகிய இரண்டு பேர்களும் ஒத்துழையாமை இயக்கத்திலும், தனி நபர் சத்தியாகிரகத்திலும் பங்கேற்றார்கள். 1920 ஆம் ஆண்டிலிருந்து 1943 ஆம் ஆண்டுவரை விடுதலைப் போராட்டங்கள் பலவற்றில் ஈடுபட்ட நன்னா சாகிப் திருச்சி, அலிப்புரம் சிறைகளில் தண்டனை அனுபவித்திருக்கிறார். அவரது மனைவி பியாரிபீவி தனிநபர் சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டு நிறைமாதக் கர்ப்பிணியாகச் சிறை சென்றார். இஸ்லாமியரளை கொச்சைப்படுத்தும் காவி பயங்கரவாதத்திற்கு எதிராய் இவர்களை மக்களுக்கு அறிமுகம் செய்யவேண்டியுள்ளது.
இதைவிட உற்சாகமான செய்தி உண்டு. 1938 ல் இந்து முஸ்லிம் ஒற்றுமைக்காக பம்பாயில் காந்திஜியும் ஜின்னாவும் சந்தித்து பேசியபோது ஜின்னாவைச் சந்திக்க வந்த ஒரு பெண்ணும் வந்திருந்தாள். ஜின்னாவின் இல்லத்தில் மூன்று மணி நேரம் நடந்த பேச்சு வார்த்தை முடிந்த பின் காந்திஜி பத்திரிகை நிரூபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது “என்னிடம் உண்மை நிறைந்த பெண்ணொருத்தி இருக்கிறாள். இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காக அவள் தன் உயிரையும் சந்தோசமாகக் கொடுப்பாள் என்று சொல்லி தன் அருகில் நின்ற அப்பெண்ணை நிருபர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். அப்பெண்தான் குமாரி அமாதுல் ஸலாம். விடுதலைக்கு மட்டுமல்ல மக்கள் ஒற்றுமைக்கும் உழைத்தவர்கள் இஸ்லாமிய பெண்கள்.
“என் தோள்களின் மீது இரண்டு சிங்கங்கள் அமர்ந்திருக்கின்றனஎன காந்தியால் வருணிக்கப்பட்ட அலி சகோதரர்களின் தாயாரான ஹாஜியா ஆலாஜிபானு என்ற ஃபீயம்மாள் தன் கையால் நெய்த துணியைக் காந்திஜிக்கு  அளித்து,  இதனைக் கத்ராக (கௌரவமாக) ஏற்றுக் கொள்ளுங்கள் என்றார். அன்றிலிருந்து தான் அந்த ஆடைக்கு கதர் ஆடை என்ற பெயர் வந்தது என்ற தகவலும் உண்டு.
உதவிய  நூல்கள்: 1.மக்கள் தாரகை, மறைக்கப்பட்ட வரலாறுகளும் மறைக்கப்படும் உண்மைகளும். 2.விடுதலை போரில் முஸ்லிம்கள், வி.என்.சாமி, மதுரை. 3.மறுக்கப்பட்ட உண்மைகளும்..மறைக்கப்பட்ட நியாயங்களும், அனிஸ்தீன், அகமதுநிஸ்மா பதிப்பகம், சென்னை. 4. B.L. Grover, S. Grover, A New Look At Modern Indian History 5. தினமணி,29.04.1938.மறுபிரசுரம்:29.04.1977
(தொடரும்)
-       எஸ்.ஜி.ரமேஷ்பாபு