திங்கள், 20 ஜனவரி, 2025

தோழர் லெனின்: சரித்திர மருத்துவர்

 



 

மாமேதை லெனின் மறைந்து 100 ஆண்டுகள் உருண்டோடிவிட்டது. அந்த மகத்தான மார்க்சியவாதியின் நினைவு தினம் நாளை (1942 ஜனவரி 21)  இன்றைய தீக்கதிர் நூலாற்றுப்படை பகுதியில் அவர் குறித்த என்னுடைய பதிவு வந்துள்ளது. படித்து உங்கள் நண்பர்களுக்கும் இந்த மகத்தான புரட்சித் தலைவரை அறிமுகம் செய்யுங்கள்.

- எஸ்.ஜி.ரமேஷ்பாபு 

------------------------------------------------------------------- 

கம்யூனிசம் என்றால் என்ன? கம்யூனிசம் என்பது பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்கான சூழ்நிலைகள் பற்றிய கொள்கை விளக்கம் ஆகும். பாட்டாளி வர்க்கம் என்றால் என்ன? பாட்டாளி வர்க்கம் என்பது சமுதாயத்தில் நிலவுகிற, முற்றாகத் தன் உழைப்பை விற்பனை செய்வதன் மூலம் மட்டுமே வாழ்ந்து வருகிற, எந்த வகையான மூலதனத்திடம் இருந்தும் லாபம் பெற்றுக் கொள்ளாத ஒரு வர்க்கமாகும். இந்த வர்க்கத்தின் இன்பமும் துன்பமும், வாழ்வும் சாவும், இதன் இருப்பும்கூட உழைப்புக்கான தேவையின் மீதே சார்ந்திருக்கின்றன. அதன் காரணமாக, மாறிக்கொண்டே இருக்கும் வணிக நிலைமையின் மீதும், கட்டுப்பாடற்ற வணிகப் போட்டியின் புரியாத போக்குகளின் மீதும் சார்ந்திருக்கின்றன. ஒரு சொல்லில் கூறுவதெனில், பாட்டாளி அல்லது பாட்டாளி வர்க்கம் என்பது 19-ஆம் நூற்றாண்டின் உழைக்கும் வர்க்கத்தைக் குறிக்கிறது. 

அழிக்க முடியாத திசைவழி

மாமேதை ஏங்கெல்ஸ் 1847-ல் கம்யூனிஸ்ட் லீக்கிற்காக எழுதிய கம்யூனிசத்தின் கோட்பாடுகள் (Principles of communism) என்ற வரைவில் மேற்கண்ட வரிகளை விவரித்தார். பாட்டாளி வர்க்க மக்களின் விடுதலைக்காக கார்ல் மார்க்சும் - பிரெடெரிக் ஏங்கெல்சும் உருவாக்கிய தத்துவத்தை நடைமுறைப் படுத்திய சரித்திர மருத்துவர்தான் லெனின்.  54 வயதுவரை மட்டுமே வாழ்ந்த மாமேதை விளாடிமிர் இலியிச் லெனின், பாட்டாளி வர்க்கப் புரட்சியின் மூலம் உலகம் முன்னேறிச் செல்ல  ஓர் அழிக்க முடியாத திசை வழியைக் காட்டிச்  சென்றுள்ளார். மார்க்சியம் எனும் அறிவியலின் சாராம்சத்தை உட்கிரகித்தவர் மட்டுமல்ல, தன்னுடைய நிகழ் காலத்திற்கு அதை நடைமுறைப் படுத்தி ரஷ்யப் புரட்சியை நடத்தி, உலகில் முதல் சோசலிச நாட்டை நிறுவிய மகத்தான  புரட்சித் தலைவர் ஆவார். 

சித்தாந்தமும் நடைமுறையும்

“தத்துவஞானிகள் அடிக்கடி உலகைப்  பல வழிகளில் வியாக்கியானம் செய்திருக்கிறார்கள், எனினும் முக்கிய பிரச்சனை என்ன வெனில் அதனை மாற்றுவதேயாகும்” என்ற மாமேதை கார்ல் மார்க்சின் வார்த்தைகளை அடியொற்றி, மார்க்சிய தத்துவத்தை நடை முறையில் இணைப்பதில் எப்போதுமே லெனின் தலைமகனாய் இருந்தார். அதற்கு ஆகச்சிறந்த உதாரணம் சோவியத் புரட்சியை நடைமுறைப்படுத்திக் காட்டியதாகும். புரட்சிகர இயக்கத்தைத் தடம் புரளாமல் அனைத்துவிதமான திரிபுகளையும் எதிர்த்து நின்ற லெனின், நடைமுறை உத்தியில் மேதையாகவும், மார்க்சியக் கோட்பாட்டாளராகவும், போர்த்தந்திர வாதியாகவும் இருந்தார். 

புரட்சியின் முன்னோடி

நம்மால் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாத சவால்களை அவர் எதிர்கொண்டார். போல்ஷ்விக் கட்சியிலிருந்த முக்கிய தலைவர்களே 1917ல் புரட்சி ஏற்படாது எனச் சொன்னபோது மிக அழுத்தமாக இல்லை அது நிகழும் என முன் அறிவித்தவர் லெனின் ஆவார். அவர் என்ன ஆருடம் சொன்னாரா? இல்லை ஒவ்வொரு சூழலுக்கும் தேவைக்கும் ஏற்ப சரியான மற்றும் பொருத்தமான நடை முறை உத்திகளை வகுத்து, பயன்படுத்துவதில் வல்லவராய் இருந்த காரணத்தினால் அவரால் முன்னறிவிக்க முடிந்தது. புரட்சியின் தத்துவம் “கம்யூனிசப் புரட்சி வெறுமனே ஒரு தேசிய நிகழ்வாக மட்டும் இருக்காது, அது நாகரிகமடைந்த நாடுகள் அனைத்திலும் ஏககாலத்தில் நிகழும். அதாவது குறைந்தபட்சம் இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளில் ஏககாலத்தில் நிகழும்” என ஏங்கெல்ஸ்  1847ல், அதாவது ரஷ்யப் புரட்சியின் 70  ஆண்டுகளுக்கு முன்னர் தனது கம்யூனி சத்தின் கோட்பாடுகள் என்ற புத்தகத்தில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் மேற்கண்ட நாடுகளைவிட ஒப்பீட்டளவில் தொழில்துறை முழு வளர்ச்சி பெறாத ரஷ்யாவில் மகத்தான பாட்டாளி வர்க்க புரட்சி வெற்றிபெற காரணம், மார்க்சியத்தை மேம்படுத்திய லெனினிசம் ஆகும். 

அமைதியும் புரட்சியும்

1917ல் சோவியத் ஒன்றியம் அமைந்த போது உலகப்போரின் கொடூரம் அச்சுறுத்திக் கொண்டிருந்தது. ரஷ்ய மக்களுக்கு வேண்டியது அமைதியும் உணவும் என்பதை முற்றாக உணர்ந்த லெனின் அமைதிக்காக எந்த விலையையும் கொடுக்க தயாராக இருந்தார். ஆனால் அவர் அளவு அவரது சகாக்கள் இல்லை என்பது வேதனையான உண்மை. உதாரணமாக ஜெர்மானியர்களை ஆசைகாட்டி மயக்குவதும் ஆனால் சமாதான உடன் படிக்கையில் கையெழுத்திட மறுப்பதுமாகத் தமது ஜாலவித்தைத் தந்திரத்தைக் காட்டிக் கொண்டிருந்தார் த்ரோத்ஸ்கிய் என்ற படைத் தளபதி. அப்போது லெனின் சொன்னார்: “அவர்களுடன் விளையாடாதீர்கள். முன் வைக்கப்படும் முதல் உடன்படிக்கையில், அது  எவ்வளவு மோசமாகயிருந்தாலும் சரி, கையெழுத்திடுங்கள். இல்லாவிட்டால் நாம் இன்னும் படுமோசமான உடன்படிக்கையில் கையொப்பம் இட நேரும்.” ஆனால் தாமதமானதால் மிக மோசமான சமாதான உடன்படிக்கையில் ருஷ்யர்கள் பிரேஸ்த்லித்தோவ்ஸ்க்கில் கையெழுத்திட வேண்டியதாயிற்று. 

மக்களின் குரல்

எனினும் எப்படி கம்யூனிடுகள் வீரமாய் எழுந்தனர்? பொது மக்களின் எண்ணங்களை நேரடியாகப் பிரதிபலிக்கும் சாதனமாகவும் அவற்றை வெளியிடும் ஒலிக்கருவியாகவுமே, அங்கே கம்யூனிஸ்ட் கட்சி பணியாற்றியது. சோவியத்துக்களை கம்யூனிஸ்டுகள் உண்டாக்கவில்லை. மக்களின் வாழ்க்கையிலிருந்து அவை தாமே உதித்தன. கம்யூனிஸ்ட்டுகள் ஒரு செயல்திட்டத்தை தங்கள் மூளையில் உருவாக்கி, பிறகு  அதை வெளியில் எடுத்து மக்கள் மேல் ஒட்டி  வைக்கவில்லை. மாறாக நேரே மக்களிடமிருந்தே அவர்களின் செயல்திட்டத்தை எடுத்துக் கொண்டனர். ‘நிலம் குடியானவர்களுக்கு’, ‘தொழிற்சாலைகள் தொழிலாளர்களுக்கு’, ‘சமாதானம் உலகம்முழுவதற்கும்’ என்று  மக்கள் கோரி வந்தார்கள். இந்தக் கோஷங்களை அவர்கள் பதாகைகள் மீது பொறித்துக் கொண்டு மக்களுடன் சேர்ந்து அணிநடை நடந்து அதிகாரப் பீடத்தில் அமர்ந்தனர். மக்களைப் புரிந்துகொள்வதில்தான் அவர்கள் வலிமை அடங்கியுள்ளது. உண்மையில் கம்யூனிஸ்ட்டுகள் மக்களைப் புரிந்துகொள்ள வேண்டியதில்லை. அவர்களேதாம் மக்கள். கம்யூனிஸ்டுகள் மக்களின் உடலும் உயிருமாகத் திகழ்ந்தார்கள். 

புரட்சியின் சவால்கள்

உண்மையில் புரட்சியின் ஆண்டில் எல்லைகளை சுற்றி எதிரி நாட்டுப் படைகளும், உள்  நாட்டில் சதி செய்யும் கூட்டமும், ஆலைகளையும் நிலங்களையும் இழந்த அடிப்படைவாதிகளும் குழப்பத்தை உருவாக்கினர். அச்சமயத்தில் இரும்பு போன்ற உறுதியான அறிவுத் தெளிவும், எஃகு போன்ற நரம்புகளுமே நிலைமையைச் சமாளித்திருக்க முடியும். அது லெனின் என்ற மனிதரெனத் தனியாகச் சொல்லவும் வேண்டுமோ? கண்டிப்பான ஒழுங்கும், கட்டுப்பாடும் எல்லா துறைகளிலும் உருவாக்கப்பட்டன. தொழிலாளர்களின் மனப்பாங்கு கடுமையாகி, சோவியத் இயந்திரத்தின் தளர்வான பகுதிகள் சீர்செய்யப்பட்டன. கம்யூனிஸ்டுகள் செயலில் இறங்கியபோது, கடுமையாகவும், திறம்படவும் எதிரிகளைத் தாக்கினர். எங்கே சட்டெனச் செயலாற்ற வேண்டும் என்பதை லெனின் மிகச்சரியாக அறிந்திருந்தார். அதனால்தான் புரட்சி என்ற குழந்தை தவழத்துவங்கியது. 

நடைமுறைத் தந்திரம்

அதே சமயம் எங்கே மெதுவாகச் செல்ல வேண்டும் என்பதும் மாமேதை லெனினுக்குத் தெரிந்திருந்தது. புரட்சிக்கு முன்பும் பின்பும் லெனின் நாட்களைப் பதிவு செய்த ரைஸ் வில்லியம்ஸ் பதிவை பார்க்கலாம்: தொழிலாளர்களின் பிரதிநிதிக் குழு ஒன்று லெனினிடம் வந்து தங்கள் தொழிற்சாலையைத் தேசிய உடைமையாக்கும் ஆணையை அவர் பிறப்பிக்க முடியுமா என்று கேட்டது. “முடியுமே” என்று ஒரு வெற்று நமூனாவை எடுத்தார் லெனின். “இதில் என் பங்கு மிக எளியது. நான் செய்ய வேண்டியதெல்லாம் இந்த நமூனாக்களை எடுத்து இதோ இந்த இடத்தில் உங்கள் தொழிற்சாலையின் பெயரை எழுதி, இதோ இங்கே என் பெயரை ஒப்பமிட்டு, கமிஸாரின் பெயரை இந்த இடத்தில் எழுதுவதுதான்” என்று கூறினார். தொழிலாளர்கள் மிக்க மகிழ்ச்சி அடைந்து அது “மிக நல்லது”  என்றார்கள்.

“ஆனால் இந்த நமூனாவில் நான் கையெழுத்திடுவதற்கு முன் உங்களைச் சில கேள்விகள் கேட்க வேண்டும். முதலாவதாக உங்கள் தொழிற்சாலைக்கு வேண்டிய கச்சாப் பொருள்களை எங்கிருந்து பெறுவது என்பதை அறிவீர்களா?” என வினவினார் லெனின். அவர்கள் தங்களுக்கு அது தெரியாது என்று வேறு வழியின்றி ஒப்புக் கொண்டார்கள். “கணக்கு வைத்துக் கொள்வது உங்களுக்குப் புரியுமா? உற்பத்தியைத் தொடர்ந்து நடத்துவதற்கான முறையைத் தயாரித்து வைத்திருக்கிறீர்களா?” என்று தொடர்ந்து கேட்டார் லெனின். இந்த அற்ப  விஷயங்கள் பற்றித் தங்களுக்கு அதிகமாகத் தெரியாது என்று தொழிலாளிகள் கூறினார்கள். “கடைசியாக, தோழர்களே, உங்கள் உற்பத்திப் பொருள்களை விற்பதற்கான சந்தையைக் கண்டுபிடித்து விட்டீர்களா?” என்று விடாது வினவினார் லெனின். “இல்லை” என்று அவர்கள் மீண்டும் பதில் அளித்தார்கள்.

முதலமைச்சர் சொன்னார்: “நல்லது தோழர்களே, உங்கள் தொழிற்சாலையை எடுத்துக்கொள்வதற்கு நீங்கள் இன்னும் ஆயத்தமாகவில்லை என்று உங்களுக்குப் படவில்லையா? வீடு சென்று இந்த விஷயங்களைப் பற்றி திட்டம் வகுங்கள். அது கடினமாயிருக்கும். நீங்கள் பல தவறுகள் செய்வீர்கள். ஆனால் கற்றுக் கொள்வீர்கள். பிறகு சில மாதங்கள் சென்றதும் வாருங்கள். உங்கள் தொழிற்சாலையைத் தேசிய உடைமை ஆக்குவோம்.” அதுதான் லெனின், இதுதான் அவரது மேதமை. துல்லியமான நிலைமைகள் குறித்து  துல்லியமான ஆய்வு என்பது இதுதான். இது மார்க்சியத்தின் அடிப்படை மட்டுமல்ல; உயிர்நாடியும்கூட!

தேசிய இனங்களின் விடுதலை

ஒரு தேசிய இனம் மற்ற தேசிய இனங்களை ஒடுக்கும் பொழுது ஒரு நாட்டின் உழைக்கும் வர்க்கம் விடுதலை அடைய முடியாது என்பதே, தேசிய இனம் பற்றிய விஷயத்தில் லெனினின் ஆழ்ந்த பார்வையாகும். இந்த புரிதலும் சோவியத் ஒன்றியத்தை உருவாக்க முக்கிய பங்களிப்பு செய்துள்ளது.  ஜாரின் ரஷ்யாவில் ஒடுக்கப்பட்ட அனைத்து தேசிய இனங்களுக்கும் மார்க்சிய அணுகுமுறையை  பின்பற்றி, சுய நிர்ணய உரிமை அளிக்க போல்ஷெவிக் கட்சிக்குள் லெனின் உறுதியான நிலைப்பாட்டை எடுத்திருந்தார். தேசிய இனங்களின் விடுதலை என்று பேசினால் மட்டும்  போதாது. இந்த விடுதலை தேசிய இனங்களுக்கு இடையே சமத்துவத்தை ஏற்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். தேசிய  இனங்களுக்கிடையே உள்ள பொருளாதார, சமூக ஏற்றத் தாழ்வுகள் நீக்கப்பட்டு சமத்துவத்திற்கான உண்மையான அடித்தளம் அமைக்கப்பட வேண்டும் என்றார். 

சமத்துவத்தின் வெற்றி

இந்த கொள்கையின் விளைவுகள் உண்மையிலேயே அற்புதமானவை. பொருளாதார, சமூக, கலாச்சார தளங்களில், நூற்றுக்கும் மேற்பட்ட தேசிய இனங்கள் அடைந்த முன்னேற்றம் மிக வேகமாகவும் முன் எப்போதும் காணாத விதத்திலும் இருந்தது. புதிய சோவியத் அரசு ரஷ்ய இனம் அடைந்த முன்னேற்றத்தை இதர வளர்ச்சி அடையாத இனங்களும் அடைய உதவ வேண்டும் என்பதைத் தேசிய இனக் கொள்கையின் அடிநாதமாக வலியுறுத்தியது.

சோவியத் சாதனைகள் 

தொழில்துறையில், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், ஜியார்ஜியா மற்றும் அர்மேனியா ஆகிய பகுதிகள்  ரஷ்யக் குடியரசுக்குக் கூடுதலாக முன்னேறின. கல்வியில் மோசமாக, பின்தங்கிய நிலையிலிருந்த மத்திய ஆசியக் குடியரசுகள் முன்னேற்றம் அடைந்து, பல மேற்கத்திய நாடுகளில் உயர் கல்வி பெறும் மாணவர்கள் எண்ணிக்கையை விடக் கூடுதலான எண்ணிக்கையிலிருந்தனர். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, 1940 வாக்கில், மத்திய ஆசியக் குடியரசுகளில் ஆயிரம் மக்களுக்கான மருத்துவர் விகிதம் இந்தியாவில் 1956-ல் இருந்ததை விட அதிகமாக இருந்தது. சம வேலைக்குச் சம கூலி என்ற கொள்கை தொடர்ந்து கூலியைச் சமப்படுத்துவதை உறுதி செய்தது.

வரலாற்றின் புதிய அத்தியாயம்

இதுவரை இப்படி ஒரு புரட்சிக்கும், தொழிலாளி வர்க்க ஆட்சிக்கும் எந்த முன் மாதிரியும் இல்லை. பாதை இல்லாத கரடுமுரடான சூழலில், புதிய பாதையில் சோசலிசம் பயணிக்கத் துவங்கிய ஆண்டு 1917. அதன் பிரதான மேய்ப்பர் எந்த அதிகாரத்திலும் இருந்து பழக்கப்பட்டவர் இல்லை.  

புரட்சியின் தாக்கம்

சோவியத் புரட்சியின் அதிர்வுகள் மூன்றாம் உலக நாடுகளின் விடுதலையை விரைவு  படுத்தியது. காலனித்துவத்திலிருந்து விடுதலைப் பெற்று புதிதாக உருவான நாடுகளுக்குப் பாதுகாப்பு அரணாக, அவர்கள் வளர்ச்சியில் பரிவுகொண்ட உற்ற தோழனாகச் சோவியத் நாடு விளங்கியது.  1990களில் சோவியத் தகர்வுக்கு பின் ஏகாதிபத்தியம் உலகில் ஒற்றை துருவ ஆட்சியை நோக்கி நடைபோடத் துவங்கியது. தாளார மயம், உலகமயம், தனியார் மயம் என்ற தாரக மந்திரத்தை முழங்கி மக்களைத் துயரத்தின் பிடியில் ஆழ்த்தி உள்ளனர். உலகம் முழுவதும் வலதுசாரிகள் மேலெழுந்து வருகின்றனர். கம்யூனிடுகள் ஆட்சி அமைத்தால் எத்தகைய சமூகம் உருவாக்கப்படும் என்பதற்கு அத்தாட்சியாக லெனினும் சோவியத் சாதனைகளும் முன்னே நிற்கின்றது. அது உழைப்பாளி வர்க்கமாக மக்களைத் திரட்ட வழிகாட்டுகிறது.

- எஸ்.ஜி.ரமேஷ்பாபு

 

“லெனின் வாழ்க்கையில் சில ஏடுகள்”

சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக்குழு சார்பில் மார்க்சிய - லெனினியக் கழகத்தின் ஆய்வாளர்களால் எழுதப்பட்ட நூலின் மறுபதிப்பு

வெளியீடு : திசைகள் பதிப்பகம், சிதம்பரம் பக்கங்கள் : 112 / விலை : ரூ.110

 

1 கருத்து:

  1. "தோழர் லெனின்: சரித்திர மருத்துவர்" என்ற இந்த கட்டுரை, லெனினின் வாழ்க்கையும் அவரது வரலாற்றுப் பங்களிப்புகளும் சமூக மாற்றத்தில் எவ்வளவு முக்கியமானவை என்பதை சுவாரஸ்யமாகவும் ஆழமாகவும் விளக்குகிறது.

    லெனினின் கருத்துக்களை ஒரு மருத்துவரின் பணி போல சமூக நோய்களை நிவர்த்தி செய்யும் வடிவில் காட்டிய வரலாற்றுத் தரவுகள், எங்களுக்கு புதிய கோணத்தைப் பரிமாறுகிறது. சமூக சமத்துவம், தொழிலாளர் நலன், மற்றும் மக்களின் சுயமரியாதை குறித்து லெனின் மேற்கொண்ட போராட்டங்களை நீங்கள் சரளமாக விவரித்துள்ளீர்கள்.

    கட்டுரையின் எழுத்து முறை நேர்மையானதும் நுட்பமானதும், லெனினின் புரட்சிகர மனப்பாங்கை எங்களின் மனதில் ஆழமாக பதியச் செய்கிறது. சமூக நீதியை நோக்கிய தேடலுக்கு இது ஒரு சிறந்த வழிகாட்டுதலாக உள்ளது.

    நன்றி!
    ராஜேஷ்
    கொடைக்கானல்

    பதிலளிநீக்கு