இடது ஓரத்தில் 10 வயதில் நான்😀 |
பரங்கிப்பேட்டையில் பிறந்து, மரக்காணம், சேத்தியாதோப்பு, சிதம்பரம், கடலூர், பாண்டிசேரி என வாழ்ந்ததும். மாணவர் இயக்க வேலை நிறுத்தங்களும், சுவர் எழுத்தும், உண்டியல் வசூலும், வாலிபர் இயக்கம் மாநிலம் தழுவிய அறிமுகமும், மார்க்சிஸ்ட் கட்சியில் போராட்ட களங்களில் வளர்ந்தவன் என்பதும், கட்சியின் முழுநேர ஊழியனான வாய்பின் காரணமாக வாசிப்பும் எழுதும் வாய்ப்பும் கிடைத்த ஒருவனின் அனுபவங்கள் ஒருவேலை உங்களை வசீகரிக்க கூடும்..
1. கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு நிறுத்தம்
முதல் மழை பொழிகிற போது எழுகிற மண் வாசனை போல, இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் பிடிக்கிற போது கிளர்ச்சியூட்டும் அந்த வாசம் போல, இதழ்களில் வந்தமரும் இளையராஜா பாடலின் முனுமுனுப்பு மாலைவரை தொடர்வது போல, சில காட்சிகள், சில மனிதர்களின் சாயல்கள், சில பாடல்கள், சில வார்த்தைகள், சில தூறல்கள், சில விளம்பரங்கள் உங்களுக்கு எதையாவது நினைவூட்டக்கூடும். அப்படிதான் 45 ஆண்டுகளை கடந்தும் எனது பள்ளி நினைவுகளுடன் ஒட்டிக்கொண்டு நீந்தி வந்திருக்கிறது கோபால் பல்பொடி.
மரக்காணம் அது எப்போதும் என் நினைவுகளில் துள்ளல் கொடுக்கும் ஒரு ஊரின் பெயர். நீங்கள் சென்னை முதல் நாகப்பட்டினம் வரை செல்லும் கிழக்கு கடற்கரை சாலையின் ஒரு நிறுத்தமாக அந்த ஊரை அறிந்திருக்கக்கூடும். உப்பளங்களை கடந்து வரும்போது ”மரக்காணம் இறங்கே..” என்ற நடத்துனரின் வார்த்தைகளுடன் ஒரிரு நொடிகளில் நீங்கள் அந்த ஊரை கடந்திருக்க வாய்ப்பிருக்கிறது.
ஆனால் அந்த ஊரில் மின்சாரம் முழுமையாக அறிமுகமாகாத தலைமுறையில் ஆரம்ப பள்ளி வாழ்க்கையை வாழ்ந்தவர்கள் நாங்கள். எங்கள் பெரியம்மா வீட்டின் மண்ணெண்ணை விளக்குகள் அதிகபட்சம் இரவு எட்டு மணிக்கு மேல் எரிந்தது கிடையாது. மாலை வேலைகளில் எனது பாட்டி இரத்தினகண்ணம்மாளும், பெரியம்மா பழனியமாளும் சாம்பல் வைத்து விளக்கின் மீது இருக்கும் கண்ணாடி சிம்னிகளை துடைப்பதை ஒரு முக்கிய பணியாக வைத்திருந்தனர். அடுப்பில் இருக்கும் சாம்பலை அப்படியே போட்டு கண்ணாடியை துடைக்க முடியாது, அதில் உள்ள திருநீரு போன்ற மெல்லிய சாம்பலினை பிரிப்பது எங்கள் பணி. மின்சாரம் வீடுகளுக்குள் வரும் வரை மாலை வேலையில் இது எப்போது நடைபெறும் நிகழ்வு.
இப்போது சென்னை ஈ.சி.ஆரில் செல்வோர் மரக்காணம் போருந்து நிறுத்ததில் இருக்கும் ஒரு சிவன் கோவிலை பார்க்க முடியும். சாலை விரிவாக்கம் ஊரின் முகத்தோற்றத்தை மாற்றிவிட்டது. முன்பெல்லாம் மாலை 6 மணிக்கு மேல் சிவன் கோவில் பக்கம் செல்வதோ, சால்ட் ஆபிஸ் உள்ள பங்களாரோட்டிற்கு செல்வதோ சாகசம்தான். எங்களை போன்ற சிறியவர்களுக்கு இப்பகுதி எல்லாம் தடை செய்யபட்ட பகுதிகளாகும். சிவன் கோயில் எதிர் பக்கம்தான் எங்கள் ஊரின் சுடுகாட்டு பாதை. தாமரை குளங்களால் நிறைந்த பகுதி அது. வரிசையாக இருக்கும் தாமரை குளங்களுக்கென கதைகள் உண்டு. மகாபாரத போரில் கடோத்கஜனோ கும்பகர்ணனோ சென்ற காலடி தடங்களால் ஏற்பட்ட பள்ளங்கள்தான் குளங்களாக மாறின என்பர். புனைவுகளுக்கு உள்ள பலமே அதுதானே! யாரையும் எங்கேயும் நடக்க வைக்க முடியும்.
என் அம்மாவை பெற்ற எங்கள் தாத்தா செல்வராஜ் அவர்கள் போலீஸ் ஏட்டு. கடலூர் புதுநகரில் பணியாற்றியவர். எங்கள் தாத்தா செல்வராஜிக்கும் எங்கள் பாட்டி ரத்தினகண்ணாம்பாளுக்கும் முன்று குழந்தைகள். முதலில் எனது பெரியம்மாள் பழனியமாள், அடுத்து எனது தாயார் ஞானமணி, அடுத்து பாலசுப்பிரமணியன் என்கிற எங்கள் மணி மாமா. சந்தை தோப்பு தெருவில் சுமார் 50 செண்ட் அளவிளான தென்னை தோப்புடன் கூடிய வீடு அது. கல்லும், சுண்ணாம்பும், மண்ணும் வைத்து எழுப்பிய சுவர்தான், ஆனால் அது எத்தனை வலிமையானது என அந்த வீட்டை இடிக்கும்போதுதான் தெரிந்தது. வீட்டின் மேலே பணை வாரைகள், அதன் மீது தெண்ணங்கீற்று, அதன் மீது ஜம்பு எனும் விழல் அடுக்கப்பட்டு கம்பீரமாக நிற்கும் வீடு அது. வீட்டின் முன்பு அகல வாக்கில் நான்கு தென்னை மரம்.
லட்சுமி என எங்கள் பாட்டி பெயர் சொல்லி அழைக்கும் பசுமாடு, அந்த மாடு இறந்தபோது எங்கள் பாட்டி ஓங்கி அழுதது இப்போதும் நினைவிருக்கிறது. எப்போதும் குளிர்ந்த நீர் நிறைந்து நிற்கும் கிணறு. அந்த கிணற்றை ஒட்டி நிற்கும் பிருமாண்டமான பலா மரம், தென்னை தோப்பிற்குள் அத்துனை சுவை மிக்க இரண்டு மாமரங்கள், நாங்கள் ஊஞ்சல் கட்டி ஆடும் கிளேரியா மரங்கள், தோப்பை சுற்றி மண்ணால் எழுப்பபட்டிருக்கும் கடகால் மீது வளர்க்கப்படும் காட்டாமணி செடிகள், (கடகால் பேய் கதை இருகிறது அதை வேறொரு நேரத்தில் சொல்கிறேன்) தோப்பின் இறுதி எல்லையில் எழுந்து நிற்கும் யூக்ளிபட்டீஸ் என அழைக்கபடும் தைல மரங்கள் என அந்த வீட்டின் சித்திரம் எங்கள் எல்லோருக்கும் அத்தனை பிரியமானது.
கபாலி கடை கெட்டி சட்னியுடன் வரும் மசால் வடையும், முருகேசன் கடை தோசையும் மிகவும் பிரியமான உணவுகள். மாலையில் சந்தைதோப்பில் லட்சுமி ஆயா கூறு கட்டி விற்கும் மரவள்ளி கிழங்கும் பிடித்தமானவை. கனகராஜ் அண்ணாச்சி கடை அப்போதுதான் விரிவாக்கம் பெற துவங்கியது. ஊருக்கு பரோட்டா அறிமுகமான காலமும் அதுதான். பெரிய தோசை கல்லில் இரண்டு நீண்ட தோசை திருப்பிகளை வைத்து மிகவும் தேர்ந்த ஒரு இசை கலைஞன் வாசிப்பது போல ”டகட.. டகட.. டகடி.. டகட... டக்டிகடட... என பரோட்டா மாஸ்டர் எழுப்பும் இசை, தூரத்தில் இருளில் இருக்கும் எங்கள் பெரியம்மா வீட்டில் மட்டுமல்ல, ஊர் முழுவதும் இசையாய் மிதந்து செல்லும். இரைச்சலற்ற இரவு பொழுதுகள் அவை. டேப் ரிக்கார்டர் இருந்தால் அது பெரிய கவுரவ பொருளாக பார்க்கப்பட்டது.
பல அக்காக்கள்
குறித்தும் பல அத்தைகள் குறித்து சாடைமாடையாக பல கதைகள் உலா வந்தன. எனது பெரியப்பா வழி அண்ணனின் நண்பர்கள் தங்கள்
மரியாதையை உயர்த்திக்கொள்ள குறிப்பிட்ட ஒரு யுவதியுடன் தன்னை இணைத்து சிலாகித்து பேசிக்கொண்டனர். எங்கள் ஊரின் காதல் மையமாக தைலந்தோப்புகளே பணியாற்றின. சாதி
இறுக்கம் இருந்த ஊராக இருந்தாலும் காதலை சாதி என்ன செய்துவிட முடியும்? சாதி ஒழுங்கை
கண்காணிக்கும் பெருசுகள் மீசை முறுக்கி நடைப்போட்டனர்.
அதில் ஒரு பெரிய மனிதரின் சாயலில் ஒரு குறவர் இன பெண்ணுக்கு ஒரு மகன் இருந்ததை நீண்டகாலம்
நமுட்டு சிரிப்புடன் பெரியவர்கள் பேசிக்கொள்வதை பத்து வயது நிறப்பிய எங்களை போன்ற சிறுவர்கள்
புரியாமல் கேட்டுக்கொண்டிருந்தோம்.பின்புதான் புரிந்தது ஆணாதிக்க வக்ரங்களுக்கும், வன்முறைகளுக்கும் சாதி தடையில்லை என...
தாத்தாவுடன் சைக்கிளில் சென்று பள்ளிக்கு வெளியில் இறங்கினேன்....
(மிச்சம் இருக்கிறது நினைவுகள்)
உப்பள ஊரிலிருந்து உப்புக் கரிக்காத நீரோட்டமாய் நினைவுகள். மிச்சத்தை எதிர்பார்க்கிறேன்.
பதிலளிநீக்குபின்னூட்டத்திற்கு நன்றி தோழர், தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன்.
நீக்குஅருமை தங்களுடன் பயணித்து தங்களின் சந்தை தோப்பிற்கே சென்ற ஒரு உணர்வு
பதிலளிநீக்குநன்றி பேராசிரியரே! தொடர்ந்து பயணிக்கலாம்.
நீக்குரமேஷ்பாபு குறிப்பிட்ட பாலசுப்ரமணி நான்தான் ரமேஷ்பாபுவின் தா ய் மாமன். குறிப்பிட அனைத்தும் என் இளமை காலத்தை நினைவூட்டும் நீங்காத பொற்காலம் தொடரட்டும் நினைவலைகள் வாழ்த்துக்கள் ரமேஷ்..
நீக்குthank u mams
நீக்கு