Friday, October 4, 2024

மக்கள் சீன புரட்சி ஒரு அறிமுகம் - 1




 

            சீன மக்கள் குடியரசு தனது 75வது ஆண்டை வெற்றிகரமாக எட்டியுள்ளது. அக்டோபர் 1 அன்று அந்நாடு முழுதும் எழுச்சிமிகு உற்சாக கொண்டாட்டங்கள் நடைபெற்றன. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான புரட்சி ஏற்பட்டு, சோசலிச ஆட்சி மலர்ந்ததன் 75ஆம் ஆண்டு தினத்தையொட்டி தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள தியானன்மென் சதுக்கத்தில் தேசியக் கொடி ஏற்றும் விழா நடைபெற்றது. அதில் 1,20,000க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர் - நாடு முழுவதும் விழாக் கோலம் பூண்டது.

கடந்த 75 ஆண்டுகளில் சீனாவின் வளர்ச்சி

  1.  உலகின் 2ஆவது பெரிய பொருளாதாரமாக உயர்வு
  2.  சராசரி ஆண்டு ஜிடிபி வளர்ச்சி 9% 
  3.  தனிநபர் வருமானம் 76 மடங்கு அதிகரிப்பு
  4.  சராசரி ஆயுட்காலம் 35 முதல் 78 ஆக உயர்வு
  5.  தீவிர வறுமை ஒழிப்பு
  6. ள்கட்டமைப்பு - தொழில்நுட்ப முன்னேற்றங்கள்
  7.  உலகின் மிகப்பெரிய அதிவேக ரயில்வே மற்றும் விரைவுச்சாலைக் கட்டமைப்பு
  8.  அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம்
  9.  கடுமையான காற்று மாசுபாடு 83% குறைவு
  10.  சுற்றுச்சூழல் குறித்த பொதுமக்கள் திருப்தி 91%க்கும் மேல் உயர்வு

எதிர்கால இலக்குகள்

  1.  2035க்குள் சோசலிச நவீனமயமாக்கல்
  2.  2049க்குள் அனைத்து அம்சங்களிலும் சிறந்த நவீன சோசலிச நாடாக மாறுதல்மேற்கண்ட முன்னேற்றங்களுடன் சில சவால்களையும் சீனா எதிர்கொள்கிறது.
  3.  தொடர்ச்சியான பொருளாதார வளர்ச்சி
  4.  முக்கிய தொழில்நுட்பங்களில் உள்ள தடைகளை சமாளித்தல்
  5.  மக்கள்தொகை முதிர்ச்சி 
  6.  ஏற்றத்தாழ்வுகளை மேலும் குறைத்தல்

75ஆம் ஆண்டு விழா நிகழ்வில் பேசிய சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், எதிர்காலத்தில் உள்ள சவால்கள் குறித்து எச்சரித்தாலும், சீன மக்கள் மேலும் குறிப்பிடத்தக்க சாதனைகளை நிகழ்த்துவார்கள் என்றும், மனித குலத்தின் அமைதி மற்றும் வளர்ச்சிக்கு மேலும் பங்களிப்பு களைச் செய்வார்கள் என்றும் உறுதியளித்தார். 300 சீர்திருத்த நடவடிக்கைகள்; செயற்கை நுண்ணறிவு, பசுமை ஆற்றல், உயிரி மருத்துவம் போன்ற துறைகளில் 1 டிரில்லியன்  டாலர் மதிப்பிலான துணைத் தொழில்கள் உருவாக்கம் உள்ளிட்ட எதிர்காலத் திட்டத்துடன்,  மேலாதிக்கம், காலனித்துவம் தவிர்ப்பு; உலக அமைதிக்கான பங்களிப்பு; சீன பாணி நவீன சோசலிசத்தை நோக்கிய பயணம் ஆகிய உறுதிகளோடு மக்கள் சீனம் முன்னேறும் என்றும் ஜின்பிங் தெரிவித்தார்.

            03.10.2024  அன்று தீக்கதிர் வெளியான செய்தியை தொடர்ந்து எழுந்த சிந்தனைகள் விளைவாக இந்த நாடு குறித்த ஒரு எளிய அறிமுகத்தை இளம் தலைமுறைக்கு செய்திட வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. இது மிகப்பெரிய உழைப்பை கோரும் பணிதான். ஆயினும் முயற்சி செய்யலாம் என துவங்கி இருக்கிறேன்.

             ஒப்பீட்டளவில் இந்தியாவிற்கு இணையான நாகரீகத்தை கொண்ட, ஆனால் வாழ்நிலையில்  மிகவும் பின் தங்கிய ஒரு நாடு, இந்தியாவுக்கு சம காலத்தில் விடுதலையை பெற்று இன்று உலகின் வல்லரசாய் பிருமாண்டமாக வளர்ந்து நிற்க காரணங்கள் என்ன?  வரலாறு என்ண சொல்கிறது. ஒரு வரலாற்று பயணம் செல்லலாம். நானும் கற்றுகொள்வேன். நீங்களும் கற்றுக்கொள்ளலாம். உங்களுக்கு தெரிந்த தகவல்களை எனக்கு சொல்லி கொடுங்கள்.

முன்னொரு காலத்தில்....  

             நான்காயிரம் ஆண்டுகளாக மன்னர்கள் ஆட்சி இருந்தாலும் கடைசி  275 ஆண்டுகள் சீனாவை ஆண்ட சிங் வம்ச (1636-1911) முடியாட்சி ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்து, சீனாவை குடியரசு நாடாக நிறுவிய முயன்ற சன் - யாட் - சன் முயற்சிக்கு (தோல்வியடைந்தாலும்) பின்பு, மக்களை திரட்டி மாவோ தலைமையில் நீண்ட நடைபயணம் நடத்திய கம்யூனிடுகளின் மகத்தான  புரட்சி சீனாவை விடுதலை செய்தது.

            உலகின் மிகப்பெரிய கண்டம் ஆசியா அதில் மிகப்பெரிய நாடு சீனா நிலப்பரப்பில் மட்டுமல்ல ஜனத்தொகையிலும் கூட, உயர்ந்திருக்கும் மலை தொடர்களையும் கொண்ட சீனாவுக்கு சொந்தமாக 3000க்கும் மேற்பட்ட தீவுகள் இருக்கிறது. அது மட்டுமல்ல உலகத்தின் மிகப் பழமையான சரித்திர ஏடுகள் இருப்பதும் சீனாவில் தான்.

            சீனாவின் வடக்கு  எல்லையில் இருந்து  நீங்கள் நடக்க துவங்கி தெற்கு எல்லையை சென்று அடைய வேண்டுமானால் கடக்க  5500 கிலோ மீட்டர் பயணம் செய்ய வேண்டும்.  கிழக்கு எல்லை துவங்கி மேற்கு எல்லையை தொட்டு விட நீங்கள் கடக்க வேண்டிய தூரம் 5000 கிலோமீட்டர். சீனாவின் எல்லை புறத்தின் சுற்றளவு 26 ஆயிரம் கிலோமீட்டர் ஆகும். 

            நிலவியல் அடிப்படையில் சீனாவை வடக்கு சீனா, தெற்கு சீனா, மத்திய சீனாவென்று மூன்று பகுதிகளாக அழைக்கலாம். வடக்கு சீனா நகரங்கள் குறைந்த, கிராமங்கள் நிறைந்த களிமண் பூமியாகும். புன்செய் தானியங்கள் அதிகம் நிறைந்த இடம். நிலக்கரி, இரும்பு முதலிய சுரங்க பொருட்கள் ஏராளமாக கிடைக்கின்ற இடம். தெற்கு சீனா மலை பாங்கான ஆனால் கடற்கரை ஓரமாக உள்ள இடம். நெல், காப்பி, தேயிலை முதலியவை உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு நிறைய நகரங்களும், துறைமுக நகரங்களும் உண்டு. மத்திய சீனா நீர் வளமும் நிலவளமும் நிறைந்த பகுதி. நெல் முதல் பருத்தி வரையிலும் கோதுமை முதல் தேயிலை வரையிலும் இங்கே விளைகின்றன.

            வடக்குப் பகுதி பணிகள் உறைந்து கிடக்கும் போது தெற்கு பகுதி வெயில் அனலாய் தகிக்கும். வடகிழக்கில் ஒரு தொழிலாளி தன் வேலையை முடித்து மதிய உணவுக்கு செல்கின்ற பொழுது வடமேற்கில் உள்ள தொழிலாளி தன் காலை பணிகளை துவங்கியிருப்பான். அதாவது இரண்டு பிரதேசத்திற்கும் நான்கு மணி நேர வித்தியாசம். உலகத்தில் உள்ள நீண்ட நதிகளில் இரண்டு சீனாவில் ஓடுகின்றது. ஒன்று "யாங்சி" (பெரிய நதி அல்லது பச்சை நதி)  இதன் நீளம் 6300 கிலோமீட்டர். மற்றொன்று ஹோயங்கோ (மஞ்சல் நதி ) இதன் நீளம் 5464 கிலோமீட்டர்.

            மகத்தான சீன புரட்சி மேற்கணட் பகுதிகளிலும், ஆறுகளிலும்,  விவசாயத்திலும், அடிப்படை கட்டுமான பணிகளிலும், மக்களின் வாழ்க்கை தரத்திலும்  நிறைய பிரமிக்கதக்க மாறுதல்கள்  உருவாகி இருக்கிறது.  அவற்றைப் பின்பு பார்க்கலாம். அதற்கு முன் வரலாறு நிறைய இருக்கிறது.

- எஸ்.ஜி.ரமேஷ்பாபு

No comments:

Post a Comment