செவ்வாய், 23 ஜூன், 2026

ஹைட்ரோ கார்பன் கிணறுகளும் கடலூர் மாவட்டமும்

 



கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை–கிள்ளை கடற்பகுதியில் முன்மொழியப்பட்டுள்ள ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எச்ஓஇசி (Hindustan Oil Exploration Company Limited (HOEC) நிறுவனம் தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்திடம் கடலோர ஒழுங்கு முறை அனுமதிகோரி விண்ணப்பித்துள்ளது. இந்த நிறுவனம் காவிரி படுகையின் புதுச்சேரி-ஏனாம் கடலோர (PY-1 (Puducherry-Yanam Offshore Field) பகுதியில் 4புதிய ஹைட்ரோகார்பன் உற்பத்தி கிணறுகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்ட மதிப்பு சுமார் ரூ. 425 கோடி. புதிய கிணறுகள் ஏற்கெனவே உள்ள கடல்சார் தளத்துடன் (offshore platform) மற்றும் கடலடிக் குழாய் (subsea pipeline) அமைப்புடன் இணைக்கப்பட உள்ளன. இந்த கிணறுகள் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை கடற்கரையிலிருந்து சுமார் 18கிலோமீட்டர் தொலைவில் வங்கக்கடலில் கடலோர ஒழுங்காற்று மண்டலம் - 4-(Coas tal Regulation Zone-IV- A) என வகைப்படுத்தப்பட்ட பகுதிக்குள் வருகிறது. இந்த கிணறுகளை எதிர்த்து மக்கள் போராடத் துவங்கி உள்ளனர்.

ஏன் கடலுக்குள் இந்த கிணறுகள்?

ஏனெனில் இங்கு நிலப்பகுதியில் இவற்றை துவங்க முடியாது. பரங்கிப்பேட்டை ஒன்றியம், தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்பாட்டுச் சட்டம் 2020-ன் கீழ் வருகின்ற பகுதியாகும். இந்த சட்டம் காவிரி டெல்டா பகுதியின் வேளாண்மை, நீர்வளம் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க இயற்றப்பட்டது. இப்பகுதியில் ஹைட்ரோ கார்பன் (எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு) ஆய்வு மற்றும் உற்பத்தித் திட்டங்கள், மீத்தேன் எடுப்புத் திட்டங்கள், ஷேல் கேஸ் திட்டங்கள், நிலக்கரி படுகை மீத்தேன் திட்டங்கள், லிக்னைட் மற்றும் நிலக்கரி சுரங்க திட்டங்கள், விவசாயம் மற்றும் நீர் வளத்திற்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் பெரிய சுரங்கத் தொழில்கள் தடை செய்யப்பட்டுள்ளன. காவிரி டெல்டாவை தமிழ்நாட்டின் “நெற்களஞ்சியம்” ஆகப் பாதுகாத்தல், உணவு பாதுகாப்பை உறுதி செய்தல், நிலத்தடி நீர் வளத்தைப் பாதுகாத்தல், விவசாய நிலங்களைத் தொழில்துறை நிலங்களாக மாற்றுவதை தடுத்தல், விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்தல் உள்ளிட்டவையே இதன் நோக்கம். எனவே இப்போது கடலைக் குறிவைத்து ஹைட்ரோ கார்பன் கிணறுகள் வருகின்றன.

எதற்காக எதிர்க்கிறோம்?

ஏற்கெனவே இறால் பண்ணைகளால் ஆபத்துக் குள்ளாகி இருக்கும் பிச்சாவரம் காடுகள், நிலத்தடி நீரைத் தினம் உறிஞ்சும் நெய்வேலி பாதிப்பு, அபாய நிலையில் உள்ள சிப்காட் வளாகங்கள், அனுமதியற்ற இறால் பண்ணைகள், அதன் பாதிப்புகள் எனப் பல காரணங்கள் உள்ளன

1.பிச்சாவரம் சதுப்புநிலக் காடுகளை பாதுகாக்க: இது இந்தியாவின் மிக முக்கியமான மாங்குரோவ் சூழலமைப்புகளில் ஒன்றாகும். இது புயல், கடல் கொந்தளிப்பு, சுனாமி போன்ற இயற்கைப் பேரிடர்களின் தாக்கத்தைக் குறைக்கிறது. பல மீன் இனங்கள், இறால், நண்டு போன்ற உயிரினங்களின் இனப்பெருக்க மற்றும் வளர்ப்பு பகுதியாக உள்ளது. கடலுக்குள் செல்லும்முன் பல மீன் குஞ்சுகள் இங்கு வளர்கின்றன. இதனால் கடலோர மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு நேரடி ஆதாரமாக உள்ளது. நூற்றுக் கணக்கான தாவர மற்றும் விலங்கு இனங்களுக்கு வாழிடமாக உள்ளது. பல வகையான பறவைகள், ஊர்வன, மீன்கள் மற்றும் நுண்ணுயிர்கள் இங்கு காணப்படுகின்றன. வலசைப் பறவைகளின் முக்கிய தங்குமிடமாகவும் விளங்குகிறது.

மாங்குரோவ் காடுகள் கார்பன் களஞ்சியங்களாக செயல்படுகின்றன. உலகின் மிகவும் திறன் வாய்ந்த “Blue Carbon Ecosystems” வகைகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றன. மாங்குரோவ் மரங்களின் வேர்கள் மணல் மற்றும் வண்டலைப் பிடித்து கரையோர நிலத்தைப் பாதுகாக்கின்றன. கடற்கரை அரிப்பைக் குறைக்கின்றன. கடல்சார் உயிரினங்களுக்கு ஏற்ற சூழலை உருவாக்குகிறது. பிச்சாவரம் என்பது வெறும் சதுப்புநில காடு அல்ல; தமிழ்நாட்டின் கடலோர பாதுகாப்பு, மீன்வளம், உயிரியல் பன்முகத்தன்மை மற்றும் காலநிலை சமநிலையைக் காக்கும் இயற்கை அரண். இந்த சதுப்புநிலக் காட்டைச் சுற்றியே 4 ஹைட்ரோ கார்பன் கிணறுகளும் வருகின்றன. இதனால் இக்காடுகள் அழியும் அபாயம் ஏற்படும்.

2. நிலத்தடி நீரை உறிஞ்சும் நெய்வேலி நிறுவனம்:

நெய்வேலி நிலக்கரி சுரங்கங்களில் நிலக்கரி எடுப்பதற்காக நிலத்தடி நீரைத் தொடர்ந்து வெளியேற்றுவது அவசியமாக உள்ளது. ஏனெனில் லிக்னைட் படுகையின் கீழ் அழுத்தமுள்ள நீரடுக்குகள் உள்ளன. நெய்வேலி நிறுவனம் ஒரு ஆண்டுக்கு 170மில்லியன் கன மீட்டர் தண்ணீரை வெளியேற்றுகிறது. எளிதாக புரிந்துகொள்ள இந்த நீரானது 5 ½ மாதங்களுக்கு சென்னை குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்ய வல்லது. 16கிலோ மீட்டர் நீளமுள்ள வீராணம் ஏரியை 4முறை முழுமையாக நிரப்பவல்லது. இதன் விளைவாக தற்போது கடற்கரையிலிருந்து பல கிலோ மீட்டர் தூரம் நிலத்தடி நீர் உப்பு நீராக மாறிவிட்டது. இதனால் பாதுகாப்பட்ட வேளாண் மண்டல பகுதிகளில் விவசாயம் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. இவ்வளவு பாதிப்புகளை உருவாக்கும் இந்த நிறுவனத்தின் “சமூகப் பொறுப்பு நிதி” (சிஎஸ்ஆர் நிதி) வட மாநில ஆலயங்களுக்கே அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

3. கடலூர் சிப்காட் தொழிற்பேட்டை: தமிழ்நாட்டின் மிகப் பெரிய இரசாயன மற்றும் மருந்துத் தொழில் மையங்களில் ஒன்றாகும். மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் “கடுமையாக மாசடைந்துள்ள தொழில் மண்டலம்” பட்டியலில் இடம்பெற்ற தொழிற் பேட்டையாகும். அதாவது மிகவும் ஆபத்தான இரசாயன பகுதி. காற்று மாசுபாடு, நீர் மாசுபாடு, விவசாய பாதிப்பு, மீனவர் வாழ்வாதார பாதிப்பு, உடல்நல பாதிப்புகள் அதிகம் உள்ள பகுதி. குடிகாடு, தைக்கால், சோனன்சாவடி, ஈச்சங்காடு உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் விவசாய நிலங்களின் உற்பத்தித்திறன் மற்றும் மண் தரம் பாதிக்கப்பட்டு போராடி வருகின்றனர். அதை விட மிகப்பெரிய கொடுமை ஒன்றிய அரசின் தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் (நீரி) கடலூர் சிப்காட் பகுதியை ஆய்வு செய்துவிட்டு மாநிலத்தின் பிற பகுதிகளைவிட இப்பகுதியில் புற்று நோய் வருவதற்கு 25மடங்கு அதிக வாய்ப்பிருப்பதாக தங்கள் ஆய்வு முடிவைக் கொடுத்தனர். ஆனால் மாவட்ட நிர்வாகம் எந்தவிதமான நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.

4. பரங்கிப்பேட்டை அனல் மின் நிலையம்: .எல்&எப்.எஸ் நிறுவனம் தொடர்ந்து அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக சுடு பதத்தில் கடலில் வெந்நீரைக் கலந்து வருவதால் இக்கடலோரங்களில் மீன் வளம் மிகவும் குறைந்து வருகிறது. இப்பகுதி மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்ல, தினமும் காரைக்காலிலிருந்து குட்ஸ் வண்டியில் வரும் நிலக்கரி இறங்குவதும், அனல் மின் நிலைய உயர் கோபுரங்களிலிருந்து வெளியேறும் புகையும் சின்னூர் துவங்கி புதுப்பேட்டை வரை உள்ள பல கிராமங்களில் கரித் துகள்களாகப் படியும் அவல நிலையும் உள்ளது.

5. இறால் பண்ணைகள்: பரங்கிப்பேட்டை, நஞ்சை மகத்துவாழ்க்கை, தா.சோ.பேட்டை, தெற்கு பிச்சாவரம் பகுதிகளில் அரசின் அனுமதி பெறாத இறால் பண்ணைகள் நூற்றுக்கணக்கில் இயங்கி வருகின்றன. இந்த இறால் பண்ணைகளில் கொட்டப்படும் இரசாயன மருந்துகள் அருகில் உள்ள உயிர் நிலங்களை அழித்து வருகின்றன.

அதிரும் கிணறுகள்

கடலூர் மாவட்டம் இத்தகைய பாதிப்புக்கு உள்ளாகி உள்ள சூழலில்தான் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல பகுதி கடல் பகுதியில் 4 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் வருகின்றன. கடலடியில் எண்ணெய் அல்லது எரிவாயு இருப்பதைக் கண்டறிய நில அதிர்வு நடத்துவார்கள். அதற்காக காற்ற ழுத்த அலைகளைக் கடலுக்குள் அனுப்பி எதிரொலி களை ஆய்வு செய்வார்கள். கடலில் பெரிய துரப்பண மேடை (Oil Rig) அமைக்கப்படும். கடலடியில் ஆயிரக்கணக்கான மீட்டர் ஆழம் வரை துளையிடப்படும். எண்ணெய் மற்றும் எரிவாயு குழாய்கள் மூலம் மேடைக்குக் கொண்டு வரப்படும். அங்கிருந்து கப்பல்கள் அல்லது கடலடிக் குழாய்கள் மூலம் கரைக்கு அனுப்பப்படும். இதன் விளைவுகள் என்ன?

பதறும் கடற்கரை

கடலுக்குள் ஹைட்ரோ கார்பன் கிணறுகளை தோண்டும் போது நில அதிர்வு ஆய்வில் பயன் படுத்தப்படும் ‘ஏர் கன்ஸ்’ (Air Guns) மிகுந்த சத்தத்தை உருவாக்கும். மீன்கள், இறால்கள், டால்பின்கள் போன்ற கடல் வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கம் பாதிக்கப்படும். மீன்கள் இடம்பெயரக்கூடும். மீன்வள பாதிப்பு அதிகமாகும். கிணறு அல்லது குழாய்களில் எண்ணெய் கசிவு ஏற்பட்டால் கடல் மாசுபடும். மீன்கள், கடற்பறவைகள், பவளப்பாறைகள் பாதிக்கப்படும். மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். துரப்பண பணிகள் கடலடிப் பாறைகள் மற்றும் உயிரினங்களைப் பாதிக்கும். பவளப் பாறைகள் சேதமடையும். துரப்பணத்தில் பயன் படுத்தப்படும் ரசாயனங்கள் மற்றும் கழிவுநீர் கடலுக்குள் கலக்கும் அபாயம் உள்ளது. இதனால் கடலடி சூழல் மோசமாகப் பதிக்கும். எரிவாயு எரிப்பு (Gas Flaring) மூலம் கார்பன் டையாக்சைடு, மீத்தேன், நைட்ரஜன் ஆக்சைடுகள் போன்றவை வெளியேறுகின்றன. இதனால் காற்று மாசுபாடு அதிகமாகும். ஹைட்ரோகார்பன் எரிப்பதால் கரியமில வாயுக் கழிவுகள் அதிகரிக்கின்றன. உலக வெப்ப மயமாதலுக்குப் பங்களிக்கின்றன.

ஆகவே தமிழக அரசு அதிமுக, திமுக ஆட்சியில் இக்கிணறுகளுக்கு அனுமதி கொடுக்காமலிருந்ததை போலக் கடலூர் மாவட்ட மக்களை பாதுகாக்க முன்வர வேண்டும்.

கட்டுரையாளர்:

- எஸ்.ஜி.ரமேஷ்பாபு

ஒருங்கிணைப்பாளர்கடலோர மக்கள் வாழ்வுரிமை இயக்கம்

23.06.2026 - தீக்கதிர் நாளிதழ் 

2 கருத்துகள்: