Friday, October 18, 2024

யாங்சி ஆறு: மகிழ்ச்சியின் விளைநிளம் - பேரழிவின் தூதன்


 

மக்கள் சீன புரட்சி அறிமுகம் - 3

 

 

இரு நதிகள் குறித்த சீன புராணம்:       

               முன்பு ஒரு காலத்தில் பூமியை ஒரு பயங்கரமான வறட்சி தாக்கியது. வட்சியென்றால் வறட்சி அப்படி ஒரு வறட்சி! அதுவும் தீய சக்திகளால் உண்டாக்கப்பட்ட வறட்சி! வயல் வெளிகளில் திடீரென தீ பற்றி எரிந்தன! எப்படி தீ பற்றுகிறது என யாருக்கும் தெரியவில்லை! அப்போது சீனாவின் உள்ளூரில் இருந்த  கடவுள்கள்  நிலமைய சமாளிக்க முடியாமல் வானத்தை நோக்கி உதவி கேட்டனர். கடவுள்களுக்கே இந்த நிலை எனில் மனிதர்கள் எங்கு செல்வர்.

               உடனே கருணை உள்ளம் படைத்த வானம்  மக்களுக்கு உதவ ஒரு பச்சை டிராகனையும் அதனுடன் ஒரு மஞ்சள் டிராகனையும் அனுப்பியது. அந்த இரண்டு டிராகன்களும்  பூமிக்கு வந்து பார்த்தன.  வாங் மற்றும் லியாங் என்ற பெயர் கொண்ட இரண்டு பேய்கள்தான் தன்னுடைய படையில் உள்ள அரக்கர்களை எல்லா இடங்களிலும் தீ வைத்து எரிக்க அனுப்பின என்பதை கண்டுபிடித்தன.

               அதே நேரத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்கள் வலியால் துன்பமுற்றனர், கோபம் தலைக்கேறி ஒருவரையொருவர் காயப்படுத்திக்கொண்டனர். இதை பார்த்த இரண்டு டிராகன்களும், இரண்டு துறவிகள் போல் மாறுவேடமிட்டு,  மருந்துகள் மற்றும் மந்திரங்களால்  மக்களுக்கு சிகிச்சையளிக்கத் தொடங்கின. மூன்று மாதங்களுக்குப் பிறகு, பலர் குணமடைந்து தங்கள் இயல்பு வாழ்க்கையைத் தொடர்ந்தனர்.

               பிரச்சினையை உருவாக்கி மக்களை வதைத்த வாங் மற்றும் லியாங் ஆகிய பேய்கள் தங்கள் மந்திரம் உடைந்ததைப் பற்றி கேள்விப்பட்டதும், அப்பேய்கள் பச்சை மற்றும் மஞ்சள் டிராகன்களை எதிர்த்துப் போராட 50,000 அரக்கர்களைக் கொண்ட ஒரு படையையே அனுப்பின.

               டிராகன்களுக்கும் அரக்க படைகளுக்கும் பயங்கரமான போர் மூண்டது. 7 பகல் மற்றும் 7 இரவுகள் இடைவிடாத போர். அரக்கர்களின் படைகள் கிட்டத்தட்ட அடித்து நொறுக்கப்பட்டு தோற்கடிக்கும் சூழல் உருவானது. இதை கண்டு கடும் கோபம் கொண்ட ​​​​வாங் மற்றும் லியாங் பேய்கள் மயக்கமடைந்த மக்கள் மற்றும் இறந்த அரக்கர்களின் உடல்களை கொண்டு இரண்டு நெடுவரிசைகளை உருவாக்கி, டிராகன்களை அழிக்க தீவைத்தன.

               இந்த கொடுந்தீயை நிறுத்த, பச்சை மற்றும் மஞ்சள் டிராகன்கள் இரண்டு குளிர் நதிகளாக உருமாறி, மூன்று தினங்கள் நெருப்புடன் போராடியதன் விளைவாக தீ அணைக்கப்பட்டது. அத்துடன் இரண்டு பேய்களும் அனைத்து அரக்கர்களும் வீழ்ந்தப்பட்டார்கள்.

               ஆனால் கடுமையாக போராட்டம் நடத்திய நிறைய காயமடைந்த  பச்சை மற்றும் மஞ்சள் டிராகன்கள் பூமியை தொடர்ந்து பாதுகாக்க, படிப்படியாக பூமியின் ஒரு பகுதியாக மாறின. அதாவது  பச்சை நதி யாங்ஸே  நதியாகவும்  மஞ்சள் நதி ஹுவாங் ஹெயாகவும் மாறின. அன்றிலிருந்து டிராகன்கள் சீனர்களில் தொடர் அடையாளமாக மாறியது. மஞ்சள் டிராகனை கடந்த வாரம் பார்த்தோம் இப்போது பச்சை டிராகனை பார்ப்போம் வாருங்கள்!

யாங்சி  நதி:  ஒரு பார்வை :


            
நைல் மற்றும் அமேசான் நதிகளுக்கு பிறகு யாங்சி நதிதான், ஆசியாவின் மிக நீளமான நதி ஆகும். அதாவது  உலகின் மூன்றாவது நீளமான நதி. ஒரே நாட்டிற்குள் முழுமையாக ஓடும் ஆறுகளில் உலகில் மிக நீளமானது இது. யாங்சி நதி 6,300 கிமீ நீளம் கொண்டது. மேற்கிலிருந்து கிழக்காக சுமார் 3,200 கிமீ மற்றும் வடக்கிலிருந்து தெற்கே 1,000 கிமீ வரை விரிவடைந்து, 1,80,8500 சதுர கிமீ பரப்பளவை தன்னிடம் கொண்டுள்ளது. திபெத்தின் பீடபூமியில் அதன் மூலத்திலிருந்து கிழக்கு சீனக் கடல் வரை, 10 மாகாணங்களுக்கு எல்லையாக செல்கிறது. இந்த நதி நான்கில் மூன்று பங்கு மலைகள் வழியாக எழில் கொஞ்ச வழிந்து செல்கிறது.

               யாங்சி எட்டு முக்கிய துணை நதிகளைக் கொண்டுள்ளது. அதன் இடது கரையில் யாலுங், மின், ஜியாலிங் மற்றும் ஹான் ஆறுகளும் வலது கரையில் வு, யுவான், சியாங் மற்றும் கான் ஆறுகளும் செல்கின்றன. சீனாவின் வரலாறு, கலாச்சாரம், பொருளாதாரம் ஆகியவற்றில் யாங்சி ஒரு பெரிய பங்கு வகிக்கிறது. சாங் ஜியாங் (நீண்ட நதி), டா ஜியாங் (பெரிய நதி), ஜியாங் (நதி), ஜின்ஷா ஜியாங்  (தங்க மணல் ஆறு),  தொங்கியன் ஆறு (சொர்கத்தைக் கடந்து செல்லும் ஆறு) மற்றும் டுவோடோ ஆறு என்ற பெயர்களால் யாங்சி அழைக்கப்படுகிறது.

               யாங்சி சீன நாட்டின் முதன்மையான நீர்வழிப்பாதை மட்டுமல்ல, இதன் படுகை சீனாவின் பெரிய தானியக் களஞ்சியமாகும். சீன தேசிய மக்கள்தொகையில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியைக் இந்த படுகை கொண்டுள்ளது. யாங்சி திபெத் பிராந்தியத்தின் எல்லையில் தெற்கு கிங்காய் மாகாணத்தில் உள்ள டாங்குலா மலைகளின் சரிவுகளில் பனிப்பாறை உருகும் நீரில் உருவாகிறது.

               ஏராளமான கிளைகள், துணை நதிகள், ஏரிகள், பழங்கால ஆற்றுப்படுகைகள் மற்றும் சதுப்பு நிலங்களைக் கொண்டுள்ளது. பெரும் வெள்ளத்தின் போது டெல்டா பகுதி முழுவதுமாக நீரில் மூழ்கும். சுமார் 2,410 சதுர கிமீ பரப்பளவைக் கொண்ட தை ஏரி, டெல்டாவில் உள்ள பல ஏரிகளில் மிகப்பெரியது.இந்தப் பகுதியில் உள்ள யாங்சியின் இன்றைய படுகையானது சமவெளியின் உயரத்திற்கு சற்று மேலே உள்ளது. இதனால், சுற்றியுள்ள பகுதியை வெள்ளநீரில் இருந்து பாதுகாக்க, முக்கிய மற்றும் பிற ஆறுகளின் கரைகள் கட்டப்பட்டுள்ளன. யாங்சியில் கரைகள் கட்டப்பட்ட மொத்த நீளம் சுமார் 2,740 கிமீ ஆகும். பல ஏரிகளின் கரைகளில் வெள்ளப் பாதுகாப்புக்காக அணைகளும் கட்டப்பட்டுள்ளன. 

பேரழிவின் தூதன்  யாங்சி: 

 


 மஞ்சள் நதியை போல யாங்சி நதியின் பதிவுசெய்யப்பட்ட வரலாறு முழுவதும் பேரழிவு வெள்ளங்கள் நிகழ்ந்துள்ளன. கிமு 206 முதல் 1960 வரையிலான காலகட்டத்தில், சீனா 1,030 க்கும் மேற்பட்ட பெரிய வெள்ளங்களை இந்த நதியால் சந்தித்துள்ளது. குறிப்பாக பெரிய அளவிலான வெள்ளம் யாங்சியில் 50 முறைக்கும் அதிகமாகவும், துணை நதியான ஹான் ஆற்றில் 30 முறைக்கும் அதிகமாகவும் ஏற்பட்டுள்ளது. சராசரியாக, யாங்சே படுகை ஒவ்வொரு 50 முதல் 55 ஆண்டுகளுக்கு ஒருமுறை பேரழிவு வெள்ளத்தின் காட்சியாக இருந்து வருகிறது. 

1870, 1896, 1931, 1949, மற்றும் 1954 ஆகிய ஆண்டுகளில் யாங்சி படுகை வெள்ளத்தில் மூழ்கியது. இவற்றில், 1931 மற்றும் 1954 வெள்ளம் தேசிய பேரழிவுகளாகும். 1931 ஆம் ஆண்டு வெள்ளம், கடுமையான, தொடர்ச்சியான பருவமழையால் விளைந்தது, இது படுகையின் பெரும்பாலான நடுத்தர மற்றும் கீழ் பகுதிகளை உள்ளடக்கியது. அந்த ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில், ஆற்றின் வெள்ள அலைகள் 24  இடங்களில் உள்ள அணைகள் மற்றும் மதகுகளை  அழித்து, 90,000 சதுர கிமீ நிலத்தை வெள்ளத்தில் மூழ்கடித்தது. 4 கோடி மக்கள் வீடற்றவர்களாக அல்லது வேறுவிதமாக பாதிக்கப்பட்டனர்.    

 நான்ஜிங் மற்றும் வுஹான் நகர்ப்புறம் உட்பட பல மக்கள் வாழ்விடங்கள் நீருக்கடியில் இருந்தன. வுஹானில் நான்கு மாதங்களுக்கும் மேலாக 6 அடிமுதல் 20 அடிவரை தண்ணீர் நின்றது என்றால் அதன் தீவிரத்தை உங்களால் கற்பனை செய்துகொள்ள முடியும்  

மகிழ்ச்சியின் விளைநிலம் யாங்சி: 

 


 யாங்சி  பொருளாதாரம் பெரும்பாலும் விவசாய பொருளாதாரமாகும் இதன்  படுகை சீனாவின் பயிர் உற்பத்தியில் கிட்டத்தட்ட பாதி பங்களிக்கிறது, சினாவில் உற்பத்தியாகும் மொத்த அரிசியின் மூன்றில் இரண்டு இங்குதான் உற்பத்தியாகிறது. பருத்தி, கோதுமை, பார்லி, சோளம், பீன்ஸ் மற்றும் சணல் ஆகியவை இப்பகுதியில் உற்பத்தியாகிறது இதில் கிழக்கு சிச்சுவான் மாகாணம் குறிப்பிடத்தக்கது,  " வளமான நிலம்" என்ற பெயரில் இப்பகுதியை அழைக்கின்றனர். இங்குள்ள மண் மிகவும் வளமானது, மேலும் தட்பவெப்ப நிலையும் விவசாயத்திற்கு மிகவும் சாதகமாக உள்ளது. மிதமான காலநிலை பட்டுப்புழு வளர்ப்பு, பட்டுப்புழுக்களை வளர்ப்பதன் மூலம் மூல பட்டு உற்பத்திக்கு உதவுகிறது.

 மற்றொரு பக்கம் யாங்சி நதி மற்றும் அதனுடன் தொடர்புடைய துணை நதிகள் மற்றும் ஏரிகள் மீன்களால் நிறைந்துள்ளன. மீன்பிடி வர்த்தகம் பரவலாக வளர்ச்சியடைந்துள்ளது மற்றும் இப்பகுதியின் பெரும்பாலான மக்களுக்கு முக்கிய வாழ்வாதாரமாக உள்ளது. சீன நதிகளில் நூற்றுக்கணக்கான மீன் இனங்கள் காணப்படுகின்றன, அவற்றில் பெரும்பாலானவை யாங்சே மற்றும் அதன் துணை நதிகளில் வாழ்கின்றன. சுமார் 30 மீன் இனங்கள் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்தவை. பொருளாதார ரீதியாக மிகவும் மதிப்புமிக்கது.

இவற்றையெல்லாம் கடந்து சீனாவின் யாங்சி ஆற்றின் மேல் கட்டப்பட்டிருக்கும் மூன்று ஆழ்பள்ளத்தாக்கு அணை எவ்வாறு மனித குலத்தின் ஒரு தலைசிறந்த பொறியியல் கட்டுமானம் என்பதை அறிய, நாம் அதை சுற்றிப்பார்க்க வேண்டும். பிறகு ஒரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம், ஆனால் அந்த அணை குறித்து கனவு கண்ட நவசீன சிற்பி, செஞ்சேனையின் மகத்தன படைத்தலைவன், வரலாற்றை உருவாக்கிய மனிதன் மா - சே -துங்கின் கவிதையை பார்ப்போம்  

மேற்கே மேல் நோக்கி கல் சுவர்கள் நிற்கும்...

மலைத் தெய்வம் அங்கேயே இருந்தால்,

இப்படி மாறிப்போன உலகத்தைக் கண்டு வியந்து போவாள்!

 

அடிப்படை தகவல்கள்:  https://www.britannica.com/place/Yangtze-River



No comments:

Post a Comment