சனி, 28 பிப்ரவரி, 2015

காதல் ஒரு மதசார்பற்ற செயல்பாடு!




உலகின் எல்லா உயிரினங்களிடமும் நீக்கமற நிறைந்திருக்கிறது காதல். காதல் எல்லா அடக்குமுறைகளையும் கடந்து பயணிக்கிறது. மனிதன் தோன்றிய உடன் தனக்கான இணை தேடும் முயற்சியின் முதல் வெளிப்பாடான காதல், இப்புவியின் கடைசி மனித ஜீவராசி இருக்கும் வரை தொரடத்தான் போகிறது. காதல் மனித குலத்தின் மகத்தான உணர்வு. ப்ரியங்களை விதைத்து வாழ்க்கையை அறுவடை செய்யும் ஒரு மகோன்னதம். காதலர் தினம் என்று கார்ப்ரேட் உலகமயம் அடையாளப் படுத்திய தினத்தில் மட்டுமல்ல. ஒவ்வொரு தினத்திலும் காதலுடன் வாழும் மனிதர்களால் நிறைந்தது இந்த பூமி. எனினும் சமீப காலமாய் காதல் மீதும் காதலர்கள் மீதும் நிகழ்கின்ற பயங்கரங்கள் அதிர்ச்சிகரமாய் இருக்கிறது. சாதி மதம், இனம் இவைகள் சார்ந்த கவுரவம் ஆகியவை ஆங்காங்கே காதல் எதிர்ப்புகளை வன்முறையை நோக்கி அழைத்துச்செல்கின்றன.


காதலர் தினத்தில் கையில் தாலி கயிறுகளுடன் அலையும் மதவெறியர்கள் சகோதர சகோதரிகளைகூட காதலர் தினதன்று வெளியில் நடமாட முடியாமல் தடுகின்றனர். பொதுவெளியில் காதலுடன் செல்லும் இளம் பெண்கள் கடுமையாக தாக்கப்படுகின்றனர். மாதம் ஒரு ஒளிக்காட்சியாவது மின்னணு ஊடகங்களில் வெளிவந்து பதறசெய்கிறது. பூங்காக்களில் புகுந்து சிவசேன, பஜ்ரங்தள், ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சார்ந்தவர்கள் நேரடியாக தாக்குவது மோடி ஆட்சிக்கு வந்த பின் சட்டபூர்வமாக நடக்கிறது. காதலித்த காரணததால் ஊர் பஞ்சாயத்து முன்பு உயிரோடு கொளுத்தப்படுவதும், பெற்றோர்களே விஷம் கொடுத்து குழந்தைகளை கொள்ளும் செய்திகளும் இரத்தத்தை உரைய வைக்கிறது. எங்கிருந்து வருகிறது இந்த வன்மம்? சாதி மத கலப்பு நடந்தால் அது பெண்ணை முதலில் குறிவைப்பது ஏன்? இப்போது இந்திய சூழலில் இவைகளை ஆதரிக்கும் விவாதங்கள் பெருகுவது எப்படி என்பதை கூர்ந்து நோக்க வேண்டியுள்ளது.


இன்றைய காதல் எதிர்ப்பின் வெளிப்பாடு பிரிவினை அரசியல் சார்ந்து அறநெறிகளற்று மிகவும் கீழதரமான மதவாத திரட்டலை முன்வைக்கிறது. காதலால் கசிந்துருகி கண்ணீர் மல்க பல பெண்களை திருமணம் செய்யும் கடவுள்களை முதன்மையாக கொண்ட இந்து மதம் மட்டுமல்ல எல்லா மதங்களும் காதலை எதிக்கத்தான் செய்கின்றன. அதேபோல உலகில் உள்ள எல்லா மதங்களும் பெண்களை இரண்டாம் நிலையிலேயே வைத்துள்ன. பெண்களுக்கான வாழ்கை விதிகளை மிகவும் கவனத்துடனும், கட்டுப்பாட்டுடனும் வகுத்துள்ளன. அவர்களது நன்னடத்தையில்தான் சமூக ஒழுக்கம் கட்டுண்டு கிடப்பதாக போதிக்கின்றன. 


பெண்கள் கற்புநிலை அற்றவர்களாகவும், நிலையான மனம் அற்றவர்களாகவும், நட்புத்தன்மை அற்றவர்களாகவும் இயற்கையாகவே படைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தச் சுபாவம் பெண்களைப் படைக்கின்ற போதே பிரம்மனால் கொடுக்கப்பட்டிருக்கிறது. படுக்கை, ஆசனம், அலங்காரம், காமம், கோபம், பொய், துரோகசிந்தனை போன்றவைகள் பெண்களுக்காகவே படைக்கப்பட்டிருக்கிறது. பெண்களுக்கு என்று மந்திரங்கள் இல்லை. பெண்களுக்கு மனச்சுத்தி கிடையாது. பெண்களின் பாவத்தை போக்குவதற்கான மந்திர உபதேசமும் கிடையாது. பெண்கள் பொய்யைப் போன்று பரிசுத்தம் அற்றவர்கள். (மனுதர்மம், சுலோகம் 15 - 18)


ஆண்கள் பெண்களை நிர்வகிப்போர் ஆவர். இதற்குக் காரணம் அல்லாஹ் அவர்களில் சிலருக்குச் சிலரைவிட உயர்வை அளித்திருக்கிறான் என்பதும், ஆண்கள் தங்களுடைய செல்வத்திலிருந்து செலவு செய்கிறார்கள் என்பதுமாகும்;. எனவே, ஒழுக்கமான பெண்கள் கீழ்படிந்தே நடப்பார்கள். மேலும் ஆண்கள் இல்லாதபோது (அப்பெண்கள்) அல்லாவின் பாதுகாப்பிலும், கண்காணிப்பிலும் இருக்கின்ற காரணத்தால் அவர்களின் உரிமைகளைப் பேணுவார்கள். மேலும் எந்தப் பெண்கள் குறித்து அவர்கள் (தம் கணவர்கள்) மாறு செய்வார்கள் என்று நீங்கள் அஞ்சுகின்றீர்களோ அந்தப் பெண்களுக்கு, நல்லறிவு புகட்டுங்கள் படுக்கைகளிலிருந்தும் அவர்களை ஒதுக்கி வையுங்கள், மேலும் அவர்களை அடியுங்கள். (குர் ஆன் அத் 4.34,35)

இதுதான் மதங்களின் அடிப்படை பார்வையாக உள்ளது.. பெண்களை உடமையாக பார்க்கும் இந்த தத்துவ அடிப்படையில் இயங்கும் மதவாத அமைப்புகள் பெண்களுக்கான கட்டுப்பாடுகளை கடுமையாக்குகின்றன. தாலிபான்கள் புர்க்காவை கட்டாயப்படுத்தினால் இந்திய தாலிபான்கலான ஆர்.எஸ்.எஸ் இந்துக்கலாச்சாரம் என்ற பெயரில் கட்டுப்பாட்டை போதிக்கிறது. காதல் என்ற சொல் மத அடிப்படைவாதிகளுக்கு வேம்பாய் கசக்கிறது. காதல் ஒரு மதச்சார்பற்ற செயலபாடாய் இருப்பதால்தான் அதன்மீது கோபம் வருகிறது. மதம் மாறச்செய்யும் ஒரு கருவியாய் காதலை உருவகம் செய்து பிரச்சாரம் நடக்கிறது..  


இந்து மதவெறியர்கள் சமீபமாக லவ் ஜிஹாத் என்ற வார்த்தையை திட்டமிட்டு பிரச்சாரம் செய்து வருவது மதவாத திரட்டலின் புதிய பரிமாணம் ஆகும். இந்தியாவில் முஸ்லிம்கள் அல்லாத இளம் பெண்களை முஸ்லிம் இளைஞர்கள் காதல் வயப்படுத்தி, திருமணம் செய்து, பின்னர் அவர்களைத் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுத்துகிறார்கள் என்று தேசிய பெண்கள் ஆணையத்தின் தலைவர் லலிதா குமாரமங்கலம் ஊடகங்களில் அறிவிப்பதும், இது ஒரு சர்வதேச சதி என்றும் பாஜக கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்  யோகி அதியநாத் சொல்வதும்,

  உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சில இந்து மத அமைப்புகள், அம்மாநில இந்து மதப் பெண்கள் முஸ்லிம்களை நண்பர்களாக ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று பிரச்சாரம் செய்வதும், இந்து மதத்தைச் சேர்ந்த பெண்கள் அனைவரும் 'லவ் ஜிகாத்' குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்று சிவ சேனை கட்சி கூறுவதும் ஆபத்தான போக்காய் முன்வந்துளளது. .


இந்த 'லவ் ஜிகாத்' பிரச்சாரத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், சிவ சேனை கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் "உலகம் முழுவதிலும் உள்ள இஸ்லாமியத் தீவிரவாதிகள், இந்தியாவுக்கு எதிராக ஜிகாத் நடத்த திட்டமிட்டுள்ளனர். லஷ்கர்-இ-தொய்பா, சிமி, அல்-காய்தா போன்ற தீவிரவாத அமைப்புகள் இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்ற நினைக்கின்றனர். அதன் ஒரு பகுதிதான் 'லவ் ஜிகாத்'. நமது வீட்டு பெண்களை காதல் என்ற பெயரில் முட்டாளாக்கி, பின்னர் பர்கா அணிந்து கொண்டிருக்கும் ஐந்தில் ஒரு பெண்களாக மாற்றிவிடுகின்றனர்" என்று தலையங்கம் எழுதுகிறது.

இந்துமத அடிப்படைவாத ஆட்சியை நிறுவ காவி பரிவாரங்கள் தொடர்ந்து முயற்சியை எடுத்துவருவதும் அதற்கு தடையாக யார்வந்தாலும் பலியிடுவதும் இந்திய வரலாற்றில் ஒன்றும் புதிதாதனல்ல. ஆனால் ஆட்சி அதிகாரத்தை மதவெறியர்கள் முழு பலத்துடன் பெற்றுள்ள இன்றைய சூழல் ஆபத்தை அதிகரிக்கச்செய்கிறது. தினம் தினம் மதவெறியை தூண்டும் பேச்சுக்களையும், செயல்களையும் திட்டமிட்டு பலமுணையில் செய்து பதட்டத்தை தக்கவைத்துக்கொண்டே இருக்கின்றனர். அதன் ஒரு பகுதியாகதான் காதலும் காதலர்களும் காதல்தினமும் கையாளப்படுகிறது. எனவே காதலர் தினத்தத்தை ஊரைக்கூட்டி கொண்டாடுவது மதவெறி எதிப்பு நடவடிக்கயாக வடிவம் பெறுகிறது. சாதிமத பேதங்களை கடந்த ஒரு முற்போக்கு நிகழ்வாகிறது. ஆதலினால்...............


-------------2015 பிப்ரவரி இளைஞர் முழக்கம் இதழில் வெளிவந்தது-------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக