ஞாயிறு, 20 செப்டம்பர், 2015

மதம் அதன் இயல்பில் இல்லாதபோது ...



மோடி பதவியேற்றது முதல் நாடு முழுவதும் நாள் ஒன்றுக்கு இரண்டு மதக்கலவரங்கள் நடந்து வருகிறது என்ற தகவல் நமது ஊடகங்களால் அவ்வுளவு பெரிதாக கண்டுக்கொள்ளப்படவில்லை. மதத்தின் பெயரால் கலவரங்களில் அல்லது கொலைகளில் ஈடுபடுபவர்கள் எவ்வித அச்சமும் இல்லாமல் அதில் ஈடுபடமுடிகிறது. இதற்கு ஆதரவான தார்மீக உணர்வும், ஆதரவும் மோடியின் ஆட்சியில் எப்படி கிடைக்கிறது என்பது வரலாற்றுப் பூர்வமாக புரிந்துக்கொள்ளப்பட வேண்டியதாகிறது.   

பல்லாண்டுகாலமாக மக்களின் நம்பிக்கை சார்ந்து மட்டுமே இருந்த மதம், நவீன அரசியலின் முடிவெடுக்கும் அதிகாரத்தை எங்கிருந்து பெற்றது? அது நவீன அரசியலில் காலடி எடுத்துவைக்க அடிப்படை எங்கு உருவானது? மன்னர்களும் படைகளும் மட்டுமே கோலோச்சிய அரசியலில் மக்கள் பங்கெடுத்தது எப்போது? இவைகளை கொஞ்சமேனும் தொடர்பு படுத்தாமல் இன்றைய அரசியலின் மதவாத நடவடிக்கையை நம்மால் புரிந்துக்கொள்ள முடியாது.

ஒற்றுமையை குலைக்க பயன் படுத்தப்பட்ட மதம்:

1857ம் ஆண்டு நடந்த ஆங்கிலேயர்களுக்கு எதிரான முதல் விடுதலைப் போராட்டம் இஸ்லாமியர்களும் இந்துக்களும் மதம் கடந்து நடத்திய தீரம் மிகுந்த போராட்டம் ஆகும். பிரிடிஷ்காரர்களுக்கு எதிராக இந்திய சமூகத்தில் முதல் மாபெரும் ஒன்றினைவாக இது திகழந்தது. இந்தியாவை தொடர்ந்து ஆள வேண்டுமெனின் இந்த ஒற்றுமைமை சீர்குலைக்காமல் முடியாது என்பதையும் ஆங்கிலேயர்கள் புரிந்துக்கொண்டனர். அந்த போராட்டத்தை இரத்த வெள்ளத்தில் மூழ்கடித்த பிறகுதான் கிழக்கிந்திய கம்பெனியிடமிருந்து நேரடியாக ஆட்சியதிகாரத்தை ஆங்கிலேய அரசாங்கம் பெற்றுக்கொண்டது. 

அதன் பிறகு பல ஆண்டுகள் கழிந்து ஆயுதங்களற்ற அரசியல் போராட்டங்கள் துவங்கின. அரசியல் இயக்கங்கள் தோன்றின. முதல் விடுதலைப் போருக்கு 26 ஆண்டுகள் கடந்து 1885ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி தோன்றிய பின்னணி ஆங்கிலேய அரசாங்கத்திடம் இந்திய உயர் வர்க்கத்திற்கு சலுகைகள் பெறுவதாகவே இருந்தது. ஆனால் அதன் பிறகு வெகுஜனங்களை ஈர்க்கும் சக்தியாக மாற்றம் கொண்டது. அதுவும் காந்தி அவர்கள் தலைமையேற்றதும் அதன் வீரியம் அதிகமானது. இதே நேரத்தில்தான் நவீன அரசியல் சகாப்தம் இந்தியாவில் ஏற்பட்டது. தொழிற்சாலைகளும், ஒரு ஆலையின் கீழ் திரண்ட தொழிலாளர் திரளோடும், பரவலாக படித்த முதல் தலைமுறையோடு எழுந்தது.

இதற்கிடையில் நாடெங்கிலும் பரவிக்கொண்டிருந்த தேசிய விழிப்புணர்வும், ஆங்கிலேய எதிர்ப்பு போராட்டத்தையும் அடக்குவதற்காகா அனைத்து வழிகளையும் ஆங்கிலேயர்கள் பயன்படுத்த துவங்கினர். அதில் முக்கியமானது மதரீதியாக மக்களை பிரித்தாள்வது ஆகும். இதன் ஒரு பகுதியாக கேர்சன் பிரபு வங்காளத்தை பிரிக்க முயன்றது ஆகும். இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்குமிடையில் பகைமையை உருவாக்க இது பயன்பட்டது. தேசிய இயக்கத்தின் தலைமையில் இரு மத்தத்தை சார்ந்த மக்களும் போராடியதால் அந்த ஒற்றுமைக்கு வெற்றி கிடைத்தது.

இந்த தோல்வி ஆங்கிலேயர்கலை இரு பக்கம் உள்ள மதவாத அமைப்புகளுக்கும் தூபம் போட்டு வளர்க்க தேவையை உருவாக்கியது. ஒத்துழையாமை இயக்கமும், காங்கிரஸ் மற்றும் கிலாபத் இயக்கங்களும் சேர்ந்து வளர்த்து வந்த ஒற்றுமையும் ஆவேசமும் சௌரி சௌரா சம்வத்தை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டதால் தேக்க நிலையை அடைந்தது. இந்த நிலையை பயன்படுத்தி ஆங்கிலேயர்கள் இந்துமதவெறியர்களை தூபம் போட்டு வளர்த்தனர். பல்வேறு இடங்களில் வகுப்பு மோதல்கள் வெடித்தது.

இந்து முஸ்லீம் ஒற்றுமை, அகிம்சை, தீண்டமை ஒழிப்பு போன்ற முழுக்கங்கங்கள் வகுப்பு கலவரங்கள் மூலம் பின்னுக்கு தள்ள முயற்சிக்கப்பட்டது. இது ஒரு புறம் எனில் மற்றொரு பக்கம் ஆங்கிலேயர்கள் உருவாக்கிய வேலை வாய்ப்புகளில் வாய்ப்பு பெருவதற்காக வகுப்புவாத தீ பற்றவைக்கப்பட்டது, 

விடுதலை முழக்கத்துடன் இணைக்கப்பட்ட மதம்:

மதம் இந்திய விடுதலைப் போராட்டத்தின் மையப்பகுதிக்கு வர ஒரு முக்கிய காரணமாக இந்திய தேசிய காங்கிரஸ் தலைமை பீடத்தில் அமர்ந்திருந்த பால கங்காதர திலகர், பிபின் சந்திர பால், லாலா லஜபத் ராய் ஆகியோர் முக்கிய காரணமாய் இருந்தனர். பார்ப்பன சிந்தனைகளையும், பிற்போக்குதனங்களையும் இவர்கள் முழுமையாக உளபூர்வமாக நம்பினர். மேற்கண்ட மூவரும் ஆரிய சமாஜம், பிரம்ம சமாஜம் ஆகியவற்றுடன் கொண்டிருந்த நெருக்கத்தின் காரணமாகவும், தங்களுக்கே உரித்தானதொரு தினி சமூக கண்ணோட்டத்தின் காரணமாகவும் மற்றவர்களால் கூர்ந்து கவனிக்கத்தக்கவர்களாக இருந்தனர். 

காங்கிரசிலும் இந்துமகாசபையிலும் ஒரே நேரத்தில் அங்கம் வகித்து செயல்பட லாலா லஜ்பத் ராய்க்கு தடையேதும் இருந்ததில்லை. சிவாஜி பூஜைகளையும், வினாயகர் விழாக்களையும் விடுதலை போராட்டத்தின் ஒரு பகுதியாக சித்தரித்து காட்டுவதில் திலகருக்கு எந்த தயக்கமும் இருந்ததில்லை. ஆனால் 1920களுக்கு பின் காங்கிரசில் பிறந்த காந்தி யுகம் இந்த பாதைகளுக்கு நேர் எதிர் நிலைபாட்டை எடுத்தது. 1932 ஜூலை 13 தேதி  ""யங் இந்தியா""வில் காந்தி ''அரசியலில் திலகரின் கொள்கையைவிட கோகலே அவர்களின் கொள்கையைதான் நான் பெரிதும் ஆதரிப்பேன்"" என எழுதிய பின்னணியில் இதை புரிந்துக்கொள்ளலாம்.

மைய அரங்கிற்கு வர முயன்ற மதவாதம்:

இந்தியாவில் காங்கிரஸ்காரர்கள் - கம்யூனிஸ்டுகள் - சோசலிஸ்டுகள் - முஸ்லீம் லீக் அமைப்பினர் - பல்வேறு புரட்சிகர குழுக்கள் ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து தீரத்துடன் போராடிக்கொண்டிருந்த போது இந்து மாகா சபையும், ஆர்.எஸ்.எஸ் இயக்கமும் ஆங்கிலேயர்களுக்கு சேவை செய்துக்கொண்டிருந்தனர். அதிலும் குறிப்பாக ஆர்.எஸ்.எஸ் தன்னை ஒரு காலாச்சார அமைப்பு என்ற போர்வைக்குள் ஒளித்துக்கொண்டு ஒரு அகண்ட பாரதத்தை அமைக்கும் கனவில் இருந்தது. நானாஜி தேஷ்முக் வெளிபடையாகவே கூறினார் ""தங்களுக்கு அரசியல் ரீதியான கடைமைகளும் இல்லை, இந்து கலாச்சாரத்தை பாதுகாக்கின்ற இந்து ராஷ்டிரத்தை அமைப்பதற்கான கலாச்சார கடமைகள் மட்டுமே இருக்கிறது""

ஆனால் அவர்களின் நோக்கம் வகுப்புக் கலவரங்கள் மூலம் இந்த நாட்டை ஒரு மதவாத நாடாக மாற்றுறுவதாகவே இருந்தது. ஆர்.எஸ்.எஸ் துவங்கிய இரண்டாம் ஆண்டில் (1927) நாக்பூரில் நடந்த முதல் ஷாகா முடிந்த இரண்டாம் வாரத்தில் நன்கு திட்டமிடப்பட்ட வன்முறை கலவரத்தை இஸ்லாமிய மக்களுக்கு எதிராக துவக்கியது. அதன் தொடர்ச்சி விடுதலைக்கு பின்னரும் தொடர்ந்தது. ஜபல்பூர், ராஞ்சி, அலிகர், பீவாண்டி, அகமதாபாத், ஹைதராபாத், பகல்பூர், பதௌன், மீரட், கரீம்கஞ்ச், சயிஸ்ப, நாசிக், பம்பாய், கன்னியாகுமரி, கோவை, தலைச்சேரி என தொடர்கிறது.

1970ல் பிவாண்டி, ஜல்கோன், மகத் ஆகிய இடங்களில் நடந்த வகுப்பு கலவரங்கள் குறித்து விசாரித்த மதன் கமிஷன் கீழ்வருமாறு குறிப்பிடுகிறது. ""வகுப்பு மோதல்கள் திடீரென எதிர்பாராமல் தோன்றுபவை அல்ல. ஒரு குறிபிட்ட கால திட்டமிட்ட செயல்களின் மூலமே அவை வெடிக்கின்றன. வகுப்புவாத வன்முறையைத் தூண்டும் பிரச்சாரங்கள், வகுப்புவாத சாயம் பூசப்படும் சின்னஞ்சிறு மோதல்கள், இட்டுக்கட்டப்பட்ட பொய்கதைகளையும், அவதூறுகளையும் திட்டமிட்டு பிரச்சாரம் செய்தல். இவற்றின் மூலமாக மனித மனங்களில் மாச்சர்யங்களையும், பகைமையையும் விதைத்து அவர்களின் சிந்தனைப் போக்கை வன்செயல்களில் ஈடுபடத் தூண்டுவது இவைதான் கலவரங்களுக்கான செயல் திட்டம்""

இதர சமூதாயங்களின் ஆச்சாரங்களை நையாண்டி செய்தல், குறிப்பக முஸ்லீம்களை தேச துரோகிகள் - பாக்கிஸ்தான் ஏஜெண்டுகள் என பிரச்சாரம் செய்தல், ஓட்டு பெருவதற்காக முஸ்லீம்களை இங்குள்ள அரசியல் கட்சிகள் ஆதரிப்பதாக பிரச்சரம் செய்தல், இந்துக்களின் உரிமைகளையும், வாய்ப்புகளையும் முஸ்லீம்கள் தட்டிப்பரிப்பதாக கூறுதல், பிரிவினையின் போது முஸ்லீம்களால் நடத்தப்பட்டதாக கூறப்படும் கொடூரமான கற்பனை கதைகள், கடந்த கால முஸ்லீம் மன்னர்கள் கோவில்களை தகர்த்தார்கள் என தொடர்ந்து பிரச்சாரம் செய்தல் என சாதாரன மத நம்பிக்கை கொண்ட மக்களிடம் அவர்கள் செய்கின்ற பிரச்சாரம் சமூகத்தில் ஒருவிதமான ஆதரவை அவர்கள் பெற தளம் அமைக்கிறது.    

வினைக்கு எதிர்வினையாக:

இந்து மதவாதிகளில் இந்த திரட்டளுக்கு எதிராக இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளும் தங்களை ஒன்றினைக்க தொடர் முயற்சிகளை மேற்கொண்டன 1906 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட முஸ்லீம் லீக் விடுதலைப் போரில் முக்கிய பங்காற்றியது. ஆனால் 1925 ஆண்டுக்கு பின்னால் அதன் தலைவர்களில் ஒருசிலர் சிந்தனை மாறத்துவங்கியது. காரணம் 1925ல் துவங்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ். இயக்கம் இந்துஸ்தான் என்ற கோஷத்தை முன்வைத்து வகுப்புவாத திரட்டலை மேற்கொள்ளத் துவங்கியதும் அதற்கு எதிர்வினையாக பாகிஸ்தான் என்ற கோஷம் உருவாக துவங்கியது. 

பெரும்பான்மை இந்துக்கள் கொண்ட நாட்டில் சிறுபான்மை இஸ்லாமியர்களுக்கு எவ்வித பாதுகாப்பும் இருக்காது என பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. நாடு முழுவது நடந்த வகுப்புக் கலவரங்கள் இந்த அச்ச உண்ர்வை மேலும் வலுவூட்டியது. இதைதான் ஆங்கில ஆட்சியாளர்களும் எதிர்பார்த்து காத்திருந்தனர். 

இஸ்லாமியர்களுக்கான தனி தேசத்தின் தேவை வலியுறுத்தப்பட்டதை அவர்கள் மறைமுகமாக ஆதரித்தனர். ஏற்கனவே அவர்கள் 1.89 லட்சம் சதுர மைல் பரப்பளவு கொண்ட, 8 கோடி மக்கள் வசித்து வந்த வங்காத்தை 1905ம் ஆண்டு மத அடிப்படையில் பிரித்தத்ற்கு கடுமையான எதிர்ப்பு இருந்தது. இந்த எதிர்ப்பு அடங்கவேண்டுமாயின் இஸ்லமியர்கள் தனிநாடு கோரிக்கை அவர்களுக்கு அவசியமானதாக இருந்தது.

ஆனால் இஸ்லாமியர்களும் இந்துக்களும் இணைந்து அரசியல் ரீதியாக ஒற்றுமையாக தொடர்ந்து போராடியதன் விளைவாக 1911ம் ஆண்டு கிழக்கு வங்கமும் மேற்கு வங்கமும் ஒரே வங்கமாக மீண்டும் இணைந்தன. இந்த ஆங்கிலேயர்களின் தோல்வி அவர்களுக்கு தீரா வடுவாக இருந்தது. எனவே ஒரு பிருமாண்டமான நிலப்பரப்பும், மக்கள் தொகையும் கொண்ட நாட்டை அப்படியே வைத்திருத்தல் நலமல்ல என உண்ர்ந்தனர். அதற்கு இந்திய நாட்டின் ஒற்றுமையான இயல்பை உடைக்க மதத்தை பயன்படுத்தினர்.

இரு மத அடிப்படைவாத சக்திகளும் ஒன்றுக்கொன்று பரஸ்பரம் உதவிகொண்டன, இரு அடிப்படைவாத அமைப்புகளையும் ஆங்கிலேய அரசாங்கம் தூபம் போட்டு வளர்த்தது. அதன் விளைவுகளை தேசம் அறுவடை செய்து 68 ஆண்டுகள் ஆகின்றது. பாக்கிஸ்தான் போல இந்துஸ்தான் படைக்கத்துடிக்கும் அமைப்புகள் மெல்ல மெல்ல தேசமெங்கும் பரவி வருகிறது. அந்த கொள்கையை கொண்ட ஒரு அமைப்பில் நச்சு பாம்பு ஆட்சியதிகாரத்தை கைபற்ற முடிந்திருக்கிறது.

மதம் அதன் இயல்பில் இல்லாதபோது:

இப்போது பிரச்சினை மதம் அல்ல. மதவாதம்தான். காந்தியை விட சிறந்த இந்து மதபற்றாளர் யாரும் இல்லை. ஆனால் அவர் மதத்தை தனக்கான தனிபட்ட பண்பாக வைத்திருந்தார். அதனால்தான் அவரது பிராத்தனை கூட்டங்களில் ஈஸ்வர அல்லா தேரே நாம் என முழுங்க முடிந்தது. அவரது பிராத்தனைகளில் இந்து - இஸ்லாம்- கிருத்துவ மத வாசகங்களை சொல்ல முடிந்தது. ஆனால் மத அடிப்படைவாதம் பிற மதங்களின் மீது துவேஷ்த்தையே அடிப்படையாக கொண்டு இயங்குவது. அதனால்தான் மாற்று மதத்தவர் மீது அவர்களால் அன்பு பாராட்ட முடியவில்லை. கொடூர கொலைகளையும், அரக்கத்தனமான தாக்குதலைகளையும் நடத்த முடிகிறது.

இந்திய விடுதலைப் போரட்டத்தின் தலைமை பொறுப்பில் இருந்த இந்திய முதலாளிகளுக்கு நீண்டகாலம் காங்கிரஸ் பேரியக்கம் தங்களின் வளங்களை பெருக்க சேவை செய்யும் கருவியாக இருந்தது. இந்திய தேசிய முதலாளிகள் இப்போது மாபெரும் சர்வதேச சந்தையில் போட்டியிரும் அளவு பன்னாட்டு பெருமுதாளிகளாக வளர்ச்சி பெற்றுள்ளனர். காங்கிரஸ் மீதான கவர்ச்சி நவீன பொருளாதர கொள்கை அமலாக்கத்தால் உதிரத்துவங்கியதும் அந்த இடத்தில் அதே கொள்கையை அதைவிட அதிகம் நேசிக்கும் ஒரு கட்சியை அமர வைத்துள்ளனர். ஆனால் இப்போது நடந்திருப்பது ஆட்சி மாற்றம் மட்டுமல்ல.

இந்திய அரசியல் கட்டமைப்பை, மக்களின் வாழ்க்கை, மதசார்பற்ற பண்புகளை, மதத்தின் பெயரால் சிதைத்து போடும் ஒரு தத்துவ மாற்றம். இந்து மதவாத அமைப்புகளின், சித்பவன பார்பனர்களின் கனவான இந்து ராஸ்டிரம் அமைப்பதற்கான முயற்சி. அதனால்தான் ஆர்.எஸ்.எஸ் சேவகனான மோடியின் ஆட்சியில் நாள் ஒன்றுக்கு இரண்டு மதக் கலவரங்கள் நடப்பதை பார்த்துக்கொண்டு இருக்கிறோம். சமூக கட்டமைப்பில் மதம் அதன் இயல்பில் இல்லாமல் அரசியல் அரங்கில் நுழைகின்றபோது சமூக இயல்பை நாசப்படுத்தும் என்பதற்கான துவக்கம்தான் இது. இனிதான் அதன் முழு பரிமாணம் இனிதான் சமூகத்தின் பொதுபுத்தியை ஆட்கொள்ள இருக்கிறது.

இந்திய வரலாற்றின் வழிநெடுக மதம் தன் அடையாளத்தை தூவியபடியே வந்துள்ளது. மதம் மதவாதமாக மாறாமல் பாதுகாக்க அதை ஒட்டுமொத்தமாக புரக்கணிக்காமல், அதன் இயல்பை உள்வாங்கி செரிக்கவேண்டி இருக்கிறது, மார்க்ஸ் கூறுவது போல ""ஒடுக்கப்பட்ட மக்களின் ஏக்கப் பெருமூச்சாக, இதயமற்றவர்களின் இதயமாக, துன்பங்களை மறக்கச் செய்யும் (அபின்) போதைபொருளாக"" வினையாற்றும் போது நாம் இன்னும் ஆழமான விவாதங்களை முன்னெடுக்க வேண்டியுள்ளது. விவாதங்களை துவக்குவோம்!   

-- ஆகஸ்ட் இளைஞர் முழக்கம் இதழில் வெளியான எனது கட்டுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக