cpi (m) லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
cpi (m) லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 12 செப்டம்பர், 2026

த.வெ.க வெற்றி: நவீன அரசியலின் புதிய யுத்தம்

நூல் அறிமுகம் 

 

 இடதுசாரிகள் ஆதரவுடன் த.வெ.க அரசு அமைந்து ஒரு முழு சட்டமன்ற கூட்டத்தொடர் முடிந்துள்ளது. .வெ.கவின் கொள்கை எதிரியான பா..கவுக்கு எதிராக வார்த்தை வராமலும், அப்படி ஏதேனும் வார்த்தைகள் வந்தால், அதை மாண்புமிகு அமைச்சரே கூறினாலும் அவை குறிப்பிலிருந்து நீக்கி மிக ஜாக்கிரதையாகக் கூட்டத்தொடர் முடிந்திருக்கிறது. மானிய கோரிக்கைகளில் மக்கள் நலன் சார்ந்து எது விவாகத்திற்கு வரவேண்டுமோ அது வராமல் மிக கவனமாகப் பார்த்துக்கொண்டனர். அதற்கு அவர்கள் செய்த மலிவான யுக்திகள் தமிழக அரசியலுக்கு மிகவும் புதியது.

 உதாரணமாக “நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள், கட்டிடங்கள், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாடு, மனித வள மேலாண்மை” குறித்த மானிய விவாதத்தில் உதயநிதி கட்டிய கார் ரேஸ் மைதானம் பிரதான விவாதமாயிற்று. ”சிறப்பு திட்டச் செயலாக்கம், நீதி நிர்வாகம், எரிசக்தி, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள், சட்டம், இந்து சமய அறநிலைய” விவாதத்தின் போது பழனி நில பத்திரப் பதிவு மோசடி பின்னுக்குத் தள்ளப்பட்டது. "சமூகநீதி, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலன்" விவாதத்தின் போது திமுகவைத் தலித்துக்களுக்கு எதிரான சக்தியாய் விவாதத்தின் கூர்முனை திருப்பப்பட்டது. ”காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள்” விவாதத்தின் போது மிசா குறித்தும் முதல்வரின் உருவ கேலியும்அமைச்சர் நிர்மல் குமார் அவசரகால நிலை கைது குறித்து பேசியதும் அனல் பரந்தது.

தேசிய கல்விக்கொள்கையின் முக்கிய பரிந்துரை தனியார் பல்கலைக்கழகங்களை அதிகப்படுத்த வேண்டும் என்பதுதான். அதை ஏற்றுத் தனியார் பல்கலைக்கழகங்கள் திருத்தச்சட்டம் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மிசா குறித்த அமளியில் திமுக வெளியேறியவுடன் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் தனியார் பல்கலைக்கழகங்கள் மேலும் அதிகரிக்கும். கல்வி வணிகம் தடையில்லாமல் நடக்கும். பல்கலைக்கழகம் நடத்து நில வரைமுறையைக் குறைத்து இனி பல கல்லூரிகளே பல்கலைக் கழகமாகும் வாய்ப்பை இந்த அரசு உருவாக்கி உள்ளது.

எதிர்க்கட்சிகளும் கேள்விக்குப் பதில் இது இல்லையே எனக் கேட்ட கேள்விக்குப் பதில் வாங்குவதை விட த.வெ.க அமைச்சர்கள் சீண்டலுக்கு இறையாகி திமுக உறுப்பினர்கள் நின்றனர். பல நினைப்பதுபோல ”பாவம் எல்லோரும் புதுசு தான” என்றோ, விவரம் இல்லாமல், அல்லது அறிவு இல்லாமல் தற்குறி தனமாக அவர்கள் சட்டமன்றத்தில் பேசுவதாக நினைத்தால் நாம்தான் ஏமாறுகிறோம் அல்லது ஏமாற்றப்படுகிறோம். .வெ.க தலைமை திட்டமிட்டே மிக சாதுரியமாகச் சதுரங்கத்தில் காய்களை நகர்த்துகின்றனர். அவர்கள் திறமையான காய் நகர்தலில் எதிர்க்கட்சிகளின் பிம்பங்கள் வெட்டுப் பட்டுக்கொண்டே இருக்கிறது. அவர்கள் விரிக்கும் வலை தெரியாமல் எதிர்க் கட்சிகள் தங்களது நகர்தல் புரியாமல் விழி பிதுங்கி நிற்கின்றனர்.

அப்படியெனில் ஆட்சிக்கு வந்த சில நாட்களில் இந்த திறமை அவர்களுக்கு வந்ததா? இல்லை

டிஜிட்டல் போதையில் நாம் யாரையும் தேர்ந்தெடுக்கவில்லை - அவர்கள் நம்மை அடிமைப்படுத்தி இருக்கிறார்கள்” இப்படி ஒரு நீண்ட தலைப்புடன் திருப்பூர் குணா - ஜீவா - ஆர்.கே.சண்முகவேல் ஆகியோர் இணைந்து எழுதிய புத்தகம், .வெ.க வெற்றிக்கான காரணங்கள் இன்னும் பிடிபடாமல் குழம்பிக்கொண்டிருக்கும் நண்பர்களுக்கு நிச்சயம் ஆதாரங்களுடன், தர்க்க ரீதியாகப் புரியவைக்கிறது.

தவெக அரசின் முதல் பட்ஜெட் அறிவிப்பு. பட்ஜெட்டில், 3,200 கோடியிலான தமிழ்நாடு சுடர் (TN-SUDAR) நவீன மாணவர் விடுதிகள் திட்டம், 15,000 " " (MY-HOME - Metropolitan Youth and Family Housing) திட்டம், 5,050 கோடியில் வெள்ளிமலை நீரேற்றுப் புனல்மின் திட்டம், 4,000 கோடியில் கோவை அரியலூர் 765-டுங மின் பாதை திட்டம், 8,000 கோடியில் எண்ணூர் அனல்மின் நிலைய குஉஙூ விரிவாக்கத் திட்டம் என பெரும்பாலான திட்டங்கள் அனைத்தும் அரசு - தனியார் கூட்டாண்மை (Public - Private Partnership - PPP) அடிப்படையிலான திட்டங்கள்தான்.

இந்த திட்டங்களை நிறைவேற்றும் ஏஞ்சல் முதலீட்டாளர்கள்தான் நமது டெல்லிக்கான சிறப்புப் பிரதிநிதி கே. வெங்கட் நாராயணா, அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, கே.ஜி. அருண் ராஜ், முதல்வரின் தனிச்செயலர் விஷ்ணு ரெட்டி உட்படப் பலரும், பட்ஜெட்டில் அதிகம் பேசப்பட்ட Al தொழில்நுட்பம் மற்றும் பசுமை ஆற்றல் உள்ளிட்டவற்றில் எல்லாம் சோகோ ஸ்ரீதர் வேம்பு, இன்போசிஸ் நாராயண மூர்த்தி முதல் ஓபன் சொசைட்டி ஜார்ஜ் சோரஸ் போன்ற முகங்களே.”

அந்த புத்தகத்தின் முன்னுரையில் ஆசிரியர்கள் எழுதியதைத்தான் மேலே படித்தீர்கள்.

 முகநூல், இண்ஸ்டாகிராம், எக்ஸ், மின்னஞ்சல் உள்ளிட்ட இணைய ஊடகங்களில் விருப்ப பொத்தான்களை வைத்தும், நாம் தொடர்ந்து பார்க்கும் நிகழ்ச்சிகளை வைத்தும் நமது உளவியலைக் கணித்து நம்மை எப்படி ஒரு வலை பின்னலில் கார்ப்ரேட்டுக்கள் சிக்க வைக்கிறார்கள் என்பதையும், நமது ஒப்புதலை எப்படி பெருக்கிறார்கள் என்பதையும் புரிந்துகொள்ள இந்த நூல் மிகவும் உதவும். இணையத்தை முன்வைத்து தனி மனித உளவியலில் நடத்தப்படும் இந்த யுத்தம் வணிகத்தில் தொடங்கி அரசியலுக்குத் தாவிய டிஜிட்டல் பயங்கரவாதமாய் உரு கொண்டு நிற்கிறது. நம்முடைய விருப்பங்கள், தேடல்கள் மற்றும் இரசனைகளைப் புரிந்துகொண்டு, நமக்குப் பிடித்தமான பொருட்கள், விளம்பரங்கள் மற்றும் பதிவுகளைச் சமூக ஊடகங்கள் மற்றும் இணையதளங்கள் மூலம் பரிந்துரைக்கும் தொழில்நுட்பம் வளர்ந்து வருகிறது.

2010-க்குப் பிறகு மெஷின் லேர்னிங் மற்றும் செயற்கை நுண்ணறிவு நுட்பங்களை பயன்படுத்தி, பயனர் ஒரு வீடியோவை எவ்வளவு நேரம் பார்க்கிறார், எங்கு நிறுத்துகிறார் என்பதையெல்லாம் கணக்கிட்டு உங்களை ஒரு பொருள் மீது நாட்டம் கொள்ள செய்து வாங்கும் சாகசத்தை செய்கின்றன.

 வலைத்தளத்தில் ஒரு பொருளைத் தொடும்போது ட்ராக்கிங் முறை வேலை செய்கிறது. அந்த பொருள் நமக்குப் பிடிக்குமா, பிடிக்காதா என மெஷின் லேனிங் யோசிக்கிறது. அதை நொடிப்பொழுதில் திரையில் காட்டி ஆட்டெக் இயங்குகிறது. இந்த இணைப்புதான் இன்றைய டிஜிட்டல் சந்தையின் இரகசியம் என எழுதும் ஆசிரியர்கள் இதை அரசியலுக்கு எப்படி பயன்படுத்துகிறனர் என்பதுதான் அதிர்ச்சியின் உச்சம்.

"மனிதர்களின் உணர்வுகளை அடிப்படையாக வைத்து அவர்களை மூளைச் சலவை செய்யும் வித்தையைக் கற்றுக்கொண்ட கார்ப்ரேட்டுகள் இணையத்தில் உலவும் ஒவ்வொரு தனி மனிதனையும் பகுத்துப் பார்க்கின்றனர். நீங்கள் பயந்த சுபாவம் உடையவரா? அப்படியெனில் எதற்கு? எளிதில் உணர்ச்சிவசப்படுகிறவரா? அப்படியானால் விசயத்தில்? என்ன கோபக்காரரா? எந்த அளவில்? பிற்போக்காளரா? முற்போக்காளரா? அல்லது நிலைமைக்கேற்ப வேசம் போடுகிறவரா? இப்படித் துல்லியமாக மதிப்பிட்ட பிறகு, நம்மை எப்படிக் கையாள்வது என்று முடிவெடுக்கின்றனர். (பக் 32)

சுருக்கமாக: தரவுப் பகுப்பாய்வின் மூலம், நம் ஒவ்வொருவரின் தரவுகளையும் நமக்கு எதிராகவே பயன்படுத்தி, நாம் எதை நினைக்க வேண்டும், யாரை வெறுக்க வேண்டும், எதை வாங்க வேண்டும், யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை நம் ஆழ்மனதில் புகுத்தி, நம்முடைய சுயசிந்தனையையே சிதைத்து ஒரு புதிய செயற்கையான உளவியலை இந்த டிஜிட்டல் உலகம் கட்டமைக்கிறது.”

இதை எப்படி விஜய்யின் பட்டாளம் தமிழகத்தில் தேர்தலுக்கு பயன்படுத்தியது என்பது இந்த புத்தகத்தில் படிக்கப்படிக்க அதிர்ச்சியாய் இருக்கிறது.

தவெகவில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் டிஜிட்டல் யுத்தப் பேர்வழிகள் என்பதைத் தங்களது பலமாகக் கூறுகிறார்கள். அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் தொழில்நுட்பத்துறை நிபுணர், அரசியல் தரவுப் பகுப்பாய்வாளர் (Political Data Analytics), அதிமுக, பிஜேபி கட்சிகளின் தகவல் தொழில்நுட்பப் பிரிவைக் கையாண்ட அனுபவம் மிக்கவர்.

ஜான் ஆரோக்கியசாமி அரசியல் உத்தி வகுப்பாளர் மற்றும் ஆலோசகர், தேர்தல் வியூக வகுப்பாளர், இவரது தலைமையிலான JPAC Persona என்ற நிறுவனம், டிஜிட்டல் பிரச்சார உத்திகள் மற்றும் அல்காரிதம் மேலாண்மையில் முக்கியப் பங்காற்றி வருகிறது.

கபில் சாஹூ - பிரசாந்த் கிஷோர் குழுவில் முக்கியமானவர்களில் ஒருவராக இருந்தவர், பின்னர் தனியாகத் தேர்தல் வியூக நிறுவனத்தைத் தொடங்கியவர், தவெகவின் வெற்றிக்கான வியூக வகுப்பாளர்களில் முதன்மையானவர்.

ஜகதீஷ் பழனிசாமி -இவர் தொடங்கிய திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தின் பேரிலான"தி ரூட் (The Route)" நிறுவனம்தான் தேர்தல் காலத்தில் தவெகவுக்கான "வார் ரூம்"களை நிர்வகித்தது, இவரது ஒருங்கிணைப்பில் 35,000 வரைக்குமான வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் குழுக்கள் இருந்தன.” (பக் 64)

மேலும் அரசியல் முதலீட்டுக் குடும்பமான மார்டின் மருமகன் ஆதர் அர்ஜுனா வி.சி.க கட்சியில் நுழைந்த அக்கட்சியின் உறுப்பினர்களின் மொத்த தரவைவும் சுருட்டியது. அவரது அரசு சாரா நிறுவனமான வாய்ஸ் ஆப் காமன்ஸ் பவுண்டேஷன், அவரது மனைவி டெய்ஸியின் அரைஸ் நுண்கடன் நிறுவனம் 32 மாவட்டங்களில் கிளை பரப்பி இயங்கி வருகிறது. இவர்களிடம் அரைஸ் சக்தி என்ற டிஜிட்டல் ஆப், அஷ்விதா ஷெட்டியின் போதி அறக்கட்டளை (பக் 65) மேலும் பல என்.ஜி.ஓகள், நடிகர் விஜயின் கோடியைத் தாண்டும் இண்ஸ்டா பாலோயர்கள் என இவர்கள் தங்களது வேர்களை கோடிக்கணக்கான மக்களின் அலைப்பேசிகள் மூலம் தமிழகம் முழுவதும் நுழைத்து பரவி உள்ளதை திமுக / அதிமுக கட்சிகள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

கரூரில் நடந்த 41 மரணங்களுக்கும் விஜய்க்கும் கொஞ்சமும் பொறுப்பில்லை என எப்படி நம்பவைத்தனர்? இணையத்தை எப்படி திறமையாகப் பயன்படுத்தி தேர்தலில் வென்றனர்? மக்கள் பிரச்சினைகளை விவாதிக்காமல் ரீல்ஸ் சட்டமன்ற கூட்டத்தொடர் நடத்தித் தனது கட்சியினரை எப்படி ஆட்டு மந்தைகளாக வைத்திருக்கின்றனர்? நடுநிலையான சபாநாயகர் என இப்போதுள்ள சபாநாயகரைக் கட்டமைத்து எப்படி ஏமாற்றுகின்றனர்? முகம் மறைத்துள்ள இணைய வாரியர்கள் மூலம் எதிர் நிலையை எடுப்பவர்களை நிலைகுலையச் செய்கின்றனர்?

இவற்றை புரிந்துகொள்ள நான் மேலே சொன்ன புத்தகம் நிச்சயம் உதவும். அவசியம் வாங்கி படியுங்கள்!

 ஆனால் ஒன்று அவர்கள் இணையத்தை பயன்படுத்திய உண்மை. ஆனால் அது மட்டுமே வெற்றிக்கு காரணமில்லை. 1967 க்கு பிறகு திராவிட இயக்கங்களின் ஆட்சியில் தமிழகத்தில் உயர்ந்து வந்த கிராம – நகர்ப்புற வேலையின்மையும், கார்ப்ரேட்டுகளின் கொள்கையை அமலாக்கியதும், இன்னும் ஒழிக்கப்பட முடியாத தீண்டாமை கொடுமைகளும், கீழ் மட்டம் வரை பெருக்கெடுத்து ஓடிய லஞ்ச லாவண்யங்களும் வென்றவர்களுக்கு பெருந்தீனியாய் அமைந்தது என்பதையும் இணைத்தே பார்க்க வேண்டும்.

- எஸ்.ஜி.ரமேஷ்பாபு




நூல்: டிஜிட்டல் போதையில் நாம் யாரையும் தேர்ந்தெடுக்கவில்லை - அவர்கள் நம்மை அடிமைபடுத்தி இருக்கிறார்கள்”

அசிரியர்கள்: திருப்பூர் குணா - ஜீவா - ஆர்.கே.சண்முகவேல்

வெளியீடு: பொன்னுலகம் புத்தக நிலையம்

விலை: 125

தொடர்புக்கு: 94866 41586, 88707 33434