முதல் நாள் மாலை துவங்கி விடிய விடிய கைகள் கட்டப்பட்டு, அடி வாங்கி உடல் கிழிந்து தளர்ந்து கிடந்தார் முருகேசன். மறுநாள் காலை.. கடுமையாக தாக்கப்பட்டு தள்ளாடியபடி காரில் கொண்டு வரப்பட்ட கண்ணகியும் அவர் அருகில் கைகால் கட்டப்பட்டு கிடத்தப்பட்டார். முந்திரி காட்டில் ஊரார் கூடி நிற்க இருவருக்கும் விஷம் புகட்டினர். கண்ணகி வாயை திறக்க மறுத்ததும் அவர் காதில், மூக்கில் விஷம் ஊற்றப்பட்டது. கண்ணகியின் பெற்றோரும் உடனிருக்க இருவரின் உயிர் அடங்கும் நேரத்தில் கொளுத்தப்பட்டனர். உடல்களை எரிப்பதற்கு முன்னேற்பாடுகள் தயாராக இருந்தது. தனித்த சுடுகாடுகளில். மேற்கண்டது திரைப்படத்தின் காட்சியோ.. நாவலின் பகுதியோ அல்ல இது. கடலூர் மாவட்ட விருத்தாசலம் பகுதியில் உள்ள புதுக்கூரைப்பேட்டை கிராமத்தில் நடந்த கொடூரம் முருகேசனும் கண்ணகியும் செய்த குற்றம் சாதி மறுத்துகாதலித்ததுதான்.
அதிலும் வேதனை என்னவென்றால் முருகேசன் ஆதிதிராவிட சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் அவரது தாயாரும் உறவினர்களும் புதரின் மறைவிலிருந்து கத்தி அழக்கூட வாய்ப்பில்லாமல் இந்த நிகழ்வின் சாட்சிகளாய் நின்றதுதான். இதுதான் நமது `நாகரீக’ சமூகத்தின் கேவலமான சாதிய முகம். கவுரவத்தின் பெயரால் கொலைகள் நடப்பது இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. சமூக ஆய்வறிக்கைகள் கூற்றுபடி 25 நாடுகளில் கவுரவத்தின் பெயரால் கொடூரமான கொலைகள் நடக்கிறது. உலகில் அதிகமாக கவுரவத்தின் பெயரால் கொலைகள் நடப்பது துருக்கியில்தான். மைதானத்தின் மத்தியில் இடுப்புடன் மண்ணில் புதைத்துவிட்டு ஊரே கூடி நின்று கல்லால் அடித்து,சிதில் சிதிலாக உடலைசிதைப்பது என்னவகையான மனநிலை? கவுரவத்தின் பெயரால் இவை யாவும் நியாயப்படுத்தப்படுகிறது. இப்படி நடக்கும் கொலைகளுக்கு மதம், இனம், எல்லைகள் போன்ற ஏதோ ஒன்று காரணமாய் அமைகிறது.
இந்தியாவில் மதமும் மதம் சார்ந்த பிரிவுகளும், சாதியும் அந்த அமைப்பு உருவாக்கும் சாதி ஆணவமும் கொலைகளை நோக்கி தள்ளுகிறது. இந்தியாவில் பஞ்சாப்பில்தான் அதிக சாதி மறுப்பு திருமண கொலைகள் நடக்கிறது. அடுத்த இடங்களில் உத்திர பிரதேசமும், ஹரியானாவும் தொடர்கிறது. சாதி மறுப்பு திருமணங்கள் அதிகம் நடப்பது பஞ்சாப்பில்தான். அங்கு நடக்கும் மொத்த திருமணங்களில் 22 சதம் சாதி மறுப்பு திருமணங்கள். அடுத்த இடத்தில் கேரளம் உள்ளது. அங்கு நடக்கும் திருமணங்களில் சாதி மறுப்பு திருமணங்கள் 19 சதமாகும். தமிழகத்தில் நடக்கும் சாதிமறுப்பு திருமணங்களில் எண்ணிக்கை வெறும் 2 சதம்தான். ஆனால் நடக்கும் திருமணங்கங்களின் எண்ணிக்கைக்கும் நடக்கும் கொலைகளுக்குமான சதவிகிதத்தில் முதலிடம் பிடிப்பது தமிழகம்தான். ஆனால் தமிழகத்தில் கவுரவத்தின் பெயரால்கொலைகளே நடக்கவில்லை என காவல்துறையினரும், முதலைமைச்சர்களும் சத்தியம் செய்கிறார்கள்.
இந்தியாவில் பிறப்பவர்கள் பிறக்கும்போதே சாதி முத்திரையோடுதான் பிறக்கிறார்கள். அவர்களின் உடல்களை வளர்ப்பது பெற்றோராக இருந்தாலும், அவர்களது மனநிலையை விஷம் கொடுத்து வளர்ப்பது சாதியம்தான். இந்திய சமூகத்தை பீடித்துள்ள சாதி என்ற பௌதீகம் நவீன உலகின்நுட்பங்களை தனதாக்கிக்கொள்ள முயற்சித்துக்கொண்டே இருகிறது. இந்த நூற்றாண்டின் இணையற்ற கண்டுபிடிப்பான இணைய வெளியை முழுமையாக பயன்படுத்திக்கொள்கிறது. சாதி பெருமிதம் குறித்து வெறுப்பேற்றும் பணிகளை இணையம் முழுவதும் செய்து வருகின்றனர்.இது, நிகழ் சமூகத்தின் பிரதிபிம்பம். சாதி மறுப்பு திருமணங்களை செய்யும் குடும்பங்களை சாதி உறவுகள்தான் அலைக்கழிக்கின்றது. உனது குடும்பம் இனி வெளியில் தலைகாட்ட முடியுமா? என்ற கேள்வியில் துவங்குகிறது அவர்களது கோரத்தாண்டவம். இதுநாள் வரையில் தனது குடும்பத்தின் மீதான கவுரவம் இனி என்னாகுமோ என்ற அச்சத்தை அந்த குடும்பங்களில் விதைக்கிறது.தனது உறவுகள் மத்தியில் இனி தலைகாட்ட முடியுமா என்ற எண்ணமும், தாழ்ந்த சாதியை சார்ந்த ஆணோ பெண்ணோ தனது குடும்பத்தில் வந்து சேர்ந்தால் என்னாகும் என்ற பதட்டமும், சமூகம் இனி என்ன சொல்லும் என்ற கற்பிதமும் கொலை அல்லது தற்கொலையை நோக்கி தள்ளுகிறது.
இதுதான் தர்மபுரியில் திவ்யாவின் தந்தையையும், புதுக்கூரைப்பேட்டையில் கண்ணகி, முருகேசனையும் காவு வாங்கியது. மற்றொரு பக்கம்ஒவ்வொரு குடும்பத்தை உன்னிப்பாய் கவனித்து வரும் சாதியம், தனது சாதியில் இரத்த கலப்பு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறது. உலகின் எந்த மூலையில் நீங்கள் இருந்தாலும் உங்களது சாதிய சங்கங்களால் உங்களை எளிதாகதொடர்பு கொள்ள முடியும். மனித வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் சாதியை கடந்து போகாவண்ணம் நமது வாழ்க்கை கட்டமைக்கப்பபட்டுள்ளது. இது இன்று நேற்று ஏற்பட்டதல்ல. இதற்கான வரலாற்று பின்னணி இருக்கிறது.
வனத்தின் மகளான தாடகையையும், நான்காம் வர்ணத்தவனாகிய சம்புகனையும் இராமபிரான் கொலைசெய்தது எதற்காக? ஏகலைவனின் கட்டைவிரல் துரோணனால் வெட்டப்பட்டது எதனால்? மாவீரன் கர்ணன் போட்டியிலிருந்து தூக்கி எறியப்பட காரணம் என்ன? எல்லாவற்றையும் நானே படைத்தேன்.. இந்த பாழாய் போன சாதி அமைப்பு முறையும்.. எனவே எதையும் படைத்த என்னால்கூட மாற்ற முடியாது என சூத்திரதாரி கண்ணனின் உபதேசம் மீண்டும் மீண்டும் போதிக்கப்படுவது எதனால்? சாதி மீறலில் எந்த எந்த குற்றத்திற்கு என்ன தண்டனை என சட்டமியற்றிய மனுவுக்கு ஏன் சிலைகள் நிறுவப்படுகிறது? எல்லாவற்றிற்கும் காரணம் ஒன்றுதான். சாதிய அமைப்பை பாதுகாப்பது.
சாதிய அடுக்கில் உயர் வகுப்பை சேர்ந்த முத்துப்பட்டன் கடைநிலையில் உள்ள அருந்ததிய சமூகத்தை சார்ந்த அக்காள் - தங்கைகளின் மீது காதல் கொண்டான். அதன் பொருட்டு அவன் தன் நிலையை இறக்கிக்கொண்டு செருப்பு தைக்கும் தொழில் கற்றான், அந்த பெண்களை மணம் முடித்தான். அதன் விளைவாக ஆதிக்க வெறியர்களால் கொடூரமாக கொலை செய்யப்பட்டான். அதன்பின் அவன் தெய்வமாக்கப்பட்டன். இப்போதும் நெல்லை மாவட்டம் முத்துப்பட்டன் கோவிலில் செருப்பு வைத்து வழிபடுவது தொடர்கிறது. தருமபுரியில் இரயில் தடத்தில் மண்டை ஓடு சிதறக் கிடந்த இளவரசனும், திருச்செங்கோட்டில் தலை அறுக்கப்பட்டு கிடந்த கோகுல்ராஜூம், மாறுகால் மாறுகை வாங்கப்பட்ட மதுரை வீரன் கதையின் தொடர்ச்சிதானே!சாதி இந்துப் பெண்ணை காதலித்து சாதிமறுப்பு திருமணம் செய்தான் தஞ்சை சூரக்கோட்டை மாரிமுத்து. ஆத்திரம் கொண்ட ஆதிக்கவெறியர்களால் அவனது ஆணுறுப்பு அறுந்தெறியப்பட்டது. அப்போது சாதி மீறலுக்கு எதிராக சட்டமியற்றிய மனுவின் சிரிப்போசை கேட்டிருக்கும்தானே? இன்னும் நாட்டார் தெய்வங்கள் கதைகளை தேடிச்சென்றால் சாதி மறுப்பால் கொலையான சாமிகளின் எண்ணிக்கை நிறைய கிடைக்கும்.
ஆக வரலாற்று பூர்வமாக இச்சமூகத்தில்கவுரவத்தின் பெயரால் கொலைகள் நடந்துகொண்டே இருக்கிறது. எத்தனையோ சமூக சீர்திருத்தவாதிகள், புரட்சியாளர்கள் இம்மண்ணில் தோன்றி இதற்கெதிராக சண்டமாருதம் செய்துள்ளனர். ஆனாலும் அனைத்தையும் சாதி உள்வாங்கி செரித்து நிற்கிறது. முற்போக்கு கருத்துகளை கொண்ட இஸ்லாமிய மதமும், கிருத்துவ மதமும்கூட இந்திய சாதி அமைப்பிடம் தோற்றுப்போனது. ஏற்றத் தாழ்வான சமூகத்தின் பிரிக்கமுடியாத அம்சம் இதுவாகிப் போனது. சாதியத்திற்குள் இருக்கும் ஒருவர் தலித்துகளிலிருந்து தனது வாழ்க்கைத் துணையை தேர்தெடுப்பதையே சாதி மறுப்பு திருமணம் என சட்ட ரீதியாக வரையறுத்துள்ளது அரசாங்கம். அவ்வாறு மணம் புரிபவர்களை ஊக்கப்படுத்தவும், பாதுகாக்கவும், தேவையான உதவிகளை செய்வதற்கும் ஆற்றல் இல்லாமல் தவித்து நிற்கிறது அரசு நிர்வாகம். இதற்கு காரணம்,ஆட்சியாளர்களிலும், காவல் மற்றும் நீதித்துறையிலும் இன்னும் பிற அரசு இயந்திரங்களிலும் உள்ளவர்களிடம் ஓங்கியிருக்கும் சாதிய உணர்வுதான்.
தன் சாதியின் தூய ரத்தத்தில் இன்னொரு சாதியின் இரத்தம் கலப்பதை தீட்டாக கருதாத ஒரு சமுதாயத்தில் மட்டுமே ஆணவக் கொலைகளை தடுக்க முடியும். சாதிய கொடுமைகளை அல்லது படிநிலையை வெறும் ரத்தக்கலப்பினால் மட்டுமே குலைத்துவிட முடியாது, ஆனால் ரத்தக்கலப்பு நிகழாமலும் மாற்றிவிட முடியாது. ஆனால் இதற்கான முயற்சிகள் இரத்த வெள்ளத்தில் மீண்டும் மூழ்கடிக்கப்படுகிறது. ஆனால் ஆதிக்கத்தை திணிக்கும் சாதியினரின் பிள்ளைகளுக்கு வேலை வாய்ப்பும், கல்வியும் நெடுங்கனவாய் இருந்தாலும் அதுகுறித்தெல்லாம் இவர்களுக்கு கவலை இல்லை. அரசியலை நாடகமாக நடத்தும் இவர்கள் காதலை நாடகம் என்கின்றனர்.எனவே உழைப்பாளி மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் சக்திகளுக்கு எதிராக போராடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சாதி ஆணவக் கொலைகளுக்கு எதிராக பிரமாண்டமான மாநாட்டை கடலூரில் நடத்துகிறது. எப்படியேனும் காதலை காரணம் வைத்து கலவரத்தை தூண்ட நினைக்கும் சாதி ஆதிக்க வெறிக்கெதிராக, உழைப்பாளி மக்களை திரட்டி சாதி மறுப்பு திருமணம் செய்வோருக்கு ஆதரவாக சமூக பொதுபுத்தியை மாற்றிட அழைக்கிறது. இது எதோ சாதி மறுப்பு திருமணங்களுக்கு ஆதரவான மாநாடு மட்டுமல்ல.. சாதி ஆதிக்கத்தை எதிர்த்து மக்களை ஒன்றுபடுத்தும் போராட்டத்தின் ஒரு பகுதியும் ஆகும்.
25.09.2015 #தீக்கதிர் நாளிதழில் வெளியான எனது கட்டுரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக