வியாழன், 26 மே, 2011

கலகக்காரனின் குரல் - கவிதைகள் - 4


அது 2007 மே மாதம் இந்திய ஜனாயக வாலிபர் சங்கத்தின் அகில இந்திய மாநாடு சென்னையில் நடந்த சமயம். அந்த மாநாட்டிற்காக ஒரு பிரசார ஒலிநாடா வெளியிடுவது என முடிவு செய்து அந்த பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது நடந்த கயர்லாஞ்ச்சி கொடுரம் என்னை மிகவும் பாதித்து இருந்தது. சாதி ஆதிக்கம்  ஒரு குடும்பத்தை கொடுரமாக வேரறுத்த கதை அது. இந்திய நாட்டின் சாதி ஆதிக்கத்தை உலகம் காறிஉமிழ்ந்த கதை அது. இரண்டு ஏக்கர் நிலத்தை வைத்திருந்த பாவத்தின் சம்பளமாக அம்மா, மகள், இரண்டு மகன்கள் உயிரை கொடுத்த வன்மத்தின் கதை. அந்த வலியை இந்த ஒலிநாடாவில் கொண்டு வரவேண்டும் என நினைத்தேன்.  

அந்த ஒலிநாடாவில் வரும் பாடல்களை எழுத திருகழிகுன்றத்தில் இரண்டுநாள் முகாம் நடத்தினோம். நிறைய நல்ல பாடல்கள் வந்தது.  அங்கு ஆதவன் தீட்சண்யா வந்திருந்தார். கயர்லாஞ்ச்சி குறித்து பாடல் கேட்டேன். பலமணி நேரம் ஏதும் பேசாமல் அமர்ந்திருந்தார். மாலை நான்கு மணிக்கு அவரிடம் சென்றேன் .. 
"தோழர்  ஒரு பாட்டுதானே கேட்டேன்...."
"ஆமாம் ரமேஷ் .... ஒரு பாட்டுதான் ..."
"இன்னும் எழுதலையா ..."
"எப்படி எழுதுவது .. அதான் யோசிக்கிறேன் ..."

அவரது முகத்தில் ஒரு இனம்புரியாத உணர்வு தெரிந்தது. மெல்ல அங்கிருந்து நகர்ந்தேன். கொஞ்சம் நேரம் கழித்து என்னை அழைத்தார். இந்த பாடலை கொடுத்தார். படித்ததும்தான் தெரிந்தது. ஒரு வலியை உள்வாங்கி எப்படி எழுதுவது என.

ஊரே மறந்த கதையொன்றை
உள்ளம் பதற சொல்ல வந்தேன்
பாரே புகழும் அகிம்சை மண்ணின்
பாவக் கதையொன்றை சொல்லவந்தேன்

தவமா தவமிருந்து நான் பெத்தப் பிள்ளைக - எங்க
தவத்துல துளுத்து வந்த கொழுந்து மல்லிக
சவமா கிடக்குதிப்போ பூமியிலே - இதை
சகிச்சுக் கிடப்பதும் சாமிகளா?

(ஊரே)

ஆலா விழுதிறங்கி அருகுபோல் வேரோடி
நாலா திசையுமெங்கள் நரம்பா கிளையோடி
வாழையடி வாழையா வாழப்பொறந்த பாதியில

(ஊரே)

அப்பன் ஆத்தா எங்களாட்டம் அடிமையா வாழ வேணாம்
ஆண்ட வூட்டு தொழுவத்துல சாணியள்ளி மாள வேணாம்
சாதி வெஷந் தீண்ட நுரை தள்ளிச் சாகாம
தாவித் தப்பியோட தங்கங்கள படிக்க வச்சோம்

(ஊரே)

படிச்சும் பலனில்லே பாவி மக்க பூமியில
அடிச்சே கொன்னாங்க கயர்லாஞ்சி வீதியிலே
தன்னந்தனி மரமா நான் கதறி அழுஞ்சத்தம் - இந்த
புண்ணிய பூமியைத்தான் புதைக்குழிக்கு தள்ளாதோ

(ஊரே)

எம் பொண்டுபுள்ள பொனம்தொட்ட புழுதி பறந்துவந்து
அவங்க கண்ணப் புடுங்காதோ கருவறுக்கப் பாயாதோ
வெம்பி அழும் எனது வேதனை சுடுமூச்சில்
வெந்து அழியாதோ வெங்கொடுமைச் சாதி மனம்
(ஊரே ) 

இன்னும் இந்த மண்ணில் சாதியின் பெயரால் நடக்கும் கொடுரங்களை ஆளும் வர்க்கங்கள் அனுமதித்துக்கொண்டுதான் இருக்கின்றன.இந்த அனுமதி  உங்களுக்கும் எனக்கும் கோபம் வரும்வரைதான் என்பதை நாம் உரத்து சொல்ல இந்த பாடல் ஒரு நெம்புகோலாய்  இருக்கும். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக