வெள்ளி, 26 ஜூன், 2015

போதைக்கெதிரான போர்க் களத்தின் இரத்த சாட்சிகள்


உடல் முழுவதும் ஆழமான பல அரிவாள் வெட்டுக்களுடன் இரண்டு உடல்கள், இல்லை இல்லை, இரண்டு தோழர்கள்கள் துடித்து அடங்கிய அந்த நிமிடங்களை.. அந்த தவிப்பை... அந்த அழுகையை... அந்தகோபத்தை எப்படி விவரிப்பதென பலநாட்கள் வார்த்தைகளை தேடியலைந்திருக்கிறேன், அவர்களை மருத்துவமனைக்கு தூக்கிச்சென்று கண்ணெதிரில் தவிக்க தவிக்க அவர்கள் சுவாசம் அடங்கிய 1999ம் ஆண்டு ஜூன் 26ம் தேதியின் அந்த கொடூர இரவு இப்போதும் என் வாழ்வில் மறக்க முடியாத இரவாய் அசைந்தாடிக்கொண்டே இருக்கிறது, எனக்கு மட்டுமல்ல,அப்போது இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தில் பணியாற்றிய மாநிலம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான ஊழியர்களுக்கும் அந்த இரவு மறக்கமுடியாத இரவுதான். 16 ஆண்டுகள் கழித்து இப்போதும் என்னால் அதே கசிந்துருகும் உணர்வோடு அந்த இரவை உணர முடிகிறது.

இரண்டு போராளிகள், அதுவும் இளம் தோழர்கள், அவர்கள் குடும்பத்தின் எதிர்கால கனவுகள், அவர்களின் காதல் கதைகள், அவர்கள் சந்ததியின் தொடர் கண்ணிகள் அறுபட்டது, தேசத்தின் அடையாளமான கூலிப் பட்டாளத்தால் கருவருக்கப்பட்ட கதை இது. சமூகத்தின் மீது ஆளும் வர்க்கத்தின் அக்கறையற்ற அரசியல் விளையாட்டின் அத்தாட்சிகள் அவர்கள். பணம் கிடைத்தால் எதையும் செய்யலாம் என்ற உலகமய அரசியலின் உதாரணங்கள் அவர்கள். காவல்துறை ஏவல்துறையாய் மாறும் என்பதன் இரத்த சாட்சிகள் அவர்கள்.அவர்கள்? குமார் - ஆனந்தன் என்ற மாவீரர்கள். மக்கள் வாழ்வின் உன்னதத்திற்காக கடலூர் மண்ணில் விதைக்கப்பட்ட வீரிய விதைகள். போதைக்கு எதிரானபோர்களத்தில் இப்போதும் வாலிபர் இயக்கத்திற்கு உத்வேகம் அளிப்பவர்கள். அந்த போராளிகள் வீழ்த்தப்பட்ட சரிதத்தின் சாரம் இது. அப்போது அரசாங்கம் மொத்த சாராயகடைகளையும் நடத்தத் துவங்கவில்லை.

தனியார்ஒயின் ஷாப்புகள் பச்சை விளக்குகளை தெருத்தெருவாக எரியவிட்ட காலம் அது. இவைகளுக்கு இணையாக கள்ளச்சாராயம் ஆறாக ஓடி ஆளும் கட்சியினருக்கும், காவல் தூறையினருக்கும் மாமுல் வாழ்க்கையை சீர்படுத்திய நாட்கள் அவை. ஊரில் வேலையற்று திரிந்த இளம் தலைமுறைக்கு வேலைவாய்ப்பு அலுவலங்களாய் சாராயம் காய்ச்சும் இடங்கள் மாறிய பொழுது அது. கல்லைத்தான், மண்ணைததான், காய்ச்சித்தான், குடிக்கத்தான், கற்பித்தானா என பராசக்தியில் வசனம் எழுதிய தமிழினத் தலைவரின் ஆட்சியில் சாராயம் காய்ச்சுதல் மாடி மற்றும் குடிசைத் தொழிலாக நடந்துகொண்டிருந்தது. ஆனால் இதுகுறித்து யாராவது பேசினாலோ, எழுதினாலோ தமிழக முதல்வர் பொறுத்துக்கொள்ள மாட்டார். உடனடியாக வீர வசனங்களை அள்ளி வீசுவார்.

கள்ளச் சாராயப் பானைகள் மீது எனது அரசின் துப்பாக்கி தோட்டாக்கள் பாயும். கள்ளச்சாரயத்தை எதிர்த்து போராடுபவர்களை நான் மாலையிட்டு வரவேற்பேன்‘’ என சட்டமன்றத்தில் தலைவர் ஓங்கிமுழங்கி, அந்த ஓசை அடங்கும் முன்பு, கள்ளச்சாராய வியாபாரிகளின் வீச்சரிவாள்கள் இரண்டு இளைஞர்களின் உடல்களில் இறங்கியது. வியாபாரிகளால் வெட்டி வீழ்த்தபட்ட இரண்டு இளம் உடல்களுக்கு மாலை அணிவிக்கக்கூட அவர் வரவில்லை. அதைவிட கேவலம் உடனடியாக கடலூர்மாவட்டம் கள்ளச்சாராயம் இல்லாத மாவட்டமாக அறிவிக்கப்பட்டதுதான். கள்ளச்சாராயம் இல்லாத மாவட்டமாக அறிவிக்கப்பட்டால் அதற்கு ஆதாரம் வேண்டாமா? 2,39,304 லிட்டர் கள்ளச்சாராயம், 8,03,780 லிட்டர் ஊறல், 69,589 லிட்டர் கள் ஆகியவைகள் அழிக்கப்பட்டது. 2,646 போலி மது பாட்டில்களும், 4,620 லிட்டர் எரி சாராயமும், கடத்தலில் ஈடுபட்ட 164 வாகனங்களும் கைப்பற்றப்பட்டதாக 28.06.1999ஆம் தேதி கடலூர் மாவட்ட காவல்துறை அறிக்கை முதல்வர் அறிக்கையின் முகத்தில் கரி பூசும் விதமாக செய்தித்தாள்களில் வெளிவந்தது. இந்த அன்றைய காவல்துறையின் அறிக்கை குமார் ஆனந்தன் படுகொலைக்கு இரண்டு நாள்களுக்கு பிறகு வந்தது.

கள்ளச்சாராயமே இல்லாத மாவட்டத்தில் ஐந்து மாதங்களில் கிட்டத்தட்ட பத்தாயிரம் பேர் கள்ளச்சாராயம் விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டதன் ரகசியம் வெளிப்பட்டது. உண்மை எப்போதும் உறங்குவதில்லை என்பதற்கு இதைவிட சாட்சி தேவையா? காட்டுநாயக்கர் என்ற இருளர் சமூகத்தில் படித்து முன்னுக்கு வந்த முதல் தலைமுறை இளைஞன் குமார், காவல்துறையில் வேலை கிடைத்து சாதி சான்றிதழ் கிடைக்காமல் காத்திருந்தான். ஆனந்தன் சிறுவயதில் தந்தையை இழந்து பள்ளி படிக்கும் பருவத்தில் வேலைக்குச் செல்லும் நிலையில் வளர்ந்தவன். இந்த இரு இளைஞர்களும் கடலூர் புதுப்பாளையம் பகுதியில் நற்பணி மன்றத்தில் பல சமூகச் சேவைகளை செய்துவந்தனர். அப்போது அவர்களுக்கு அறிமுகமான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் அவர்களை தனது நடவடிக்கையால், போராட்ட குணத்தால் ஈர்த்தது.தெருவை மட்டும் சுத்தம் செய்தால் போதாது தேசம் முழுவதும் சுத்தம் செய்யப்பட வேண்டும் என்ற அரசியலை புரிந்துகொண்ட அந்த இருவரும் சிகப்பு நட்சதிரம் பொறிக்கப்பட்ட வெள்ளைக் கொடியை கையில் ஏந்தி கடலூர் நகராட்சியின் அவலங்களை மட்டுமல்ல ஆளும் வர்க்கத்தின் கொள்கைகளையும் எதிர்த்து போராட கற்றுக்கொண்டனர்.

இந்நிலையில் கெடிலம் ஆற்றின் கரையில், புதுப்பாளையம் பகுதியில் கள்ளச்சராயம் எல்லையை மீறி ஓடத்துவங்கியது. பெண்கள் மாலை வேலையில் வெளியே வரவே அஞ்சினர், இளம் தலைமுறை சாராயத்திற்கு அடிமையாகும் கொடூரம் அரங்கேறத்துவங்கியது. வாலிபர் சங்கத் தோழர்கள் காவல்துறையினருக்கு மனுகொடுக்கத்துவங்கினர். காவல்துறை வாரராவாரம் ஒப்பந்தம் போட்டு மமூல் பெறுவதால் அக்கடைகளை அப்புறப்படுத்துவதுபோல் நடிப்பார்கள். பிறகு மீண்டும் கடைகள் இயங்கத்துவங்கும். மீண்டும் மனு, மீண்டும் கவல்துறை நாடகம் என தொடர்ந்தது. ஒருகட்டத்தில் வாலிபர் சங்கத்தின் தொடர் இயக்கத்தால், மாவட்ட காவல்துறை அதிகாரிகள் தலையீட்டால் கள்ளச்சாராய கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. சிலர் கைது செய்யப்பட்டனர். சிலமாதங்கள் அவர்களால் கடைகளை நடத்த முடியவில்லை. கடைகள் மூட காரணமாக இருந்த வாலிபர் சங்கதோழர்கள் மீது கள்ளச்சாராய வியாபாரிகள் வன்மத்துடன் திரிந்தனர். 

வாலிபர் சங்க தோழர் கனகராஜ் 1998ம் ஆண்டு பட்டபகலில் மார்கெட் பகுதியில் விரட்டிவிரட்டி கொடூரமாக வெட்டப்பட்டார், அவர் பிழைத்தே அதிசயமானது. அதைகண்டித்து இயக்கங்கள் நடத்தப்பட்டது. அப்போதே காவல்துறை விழித்துக்கொண்டிருந்தால் ஓராண்டு கழித்து இரண்டு உயிர்களை பாதுகாத்திருக்க முடியும். ஆனால் ஆளும் கட்சி பிரமுகர்கள், காவல்துறை கரும் புள்ளிகள், கள்ளச்சாராய வியாபாரிகள் என்றமுக்கோணக் கூட்டு ஒன்றாய் நின்றதால் உத்வேகம் பெற்ற சமூகவிரோதிகள் கூட்டம் 1999 ஆம் ஆண்டுஜூன் மாதம் கூலிப்பட்டாளத்தை தயார் செய்தது. கொலை நடந்த அன்று மீண்டும் மீண்டும் காவல்துறையினருக்கு எச்சரித்துக்கொண்டே இருந்தோம். ஆனால் காவல்துறையின் மிகமோசமான அலட்சியத்தால் அன்று இரவு தேசத்தை நேசித்த அந்த இரண்டு இளைஞர்களும் வெட்டி வீழ்த்தப்பட்டனர்.

இதோ அந்த சம்பவம் நடந்து 16 ஆண்டுகள் கடந்துவிட்டது. இப்போது சாராய கடைகளை அரசாங்கமே ஆகப்பெரும் உற்சாகத்துடன் நடத்திக்கொண்டிருக்கிறது. இளம் தலைமுறையினர் போதைக்கு அடிமையாவது அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. வேலையும், கல்வியும் கேட்டு உயரவேண்டிய இளைஞர்களின் கரங்கள் போதயால் நடுங்கிக்கொண்டிருக்கிறது. கடலூர் மாவட்டத்தில் இப்போது நாள் ஒன்றுக்கு 1.75 கோடி ரூபாய் மதிப்புள்ள சாராயம் விற்பனையாகிறது. தமிழகத்தில் ஆண்டுக்கு 25 ஆயிரம் கோடிக்கு மேல் லாபம் வருகிறது என்ற காரணத்தால் தமிழக அரசு, பள்ளிகள், நீதிமன்றங்கள், கோவில்கள், பேருந்து நிலையங்கள் என மக்கள் கூடும் இடங்களாய் பார்த்து சாராயக் கடைகளை திறந்து வருகிறது.வேலையில்லா திண்டாட்டத்தை எதிர்த்து மட்டுமல்ல, சாதிய கலவரங்களுக்கு எதிராக மட்டுமல்ல, ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதில் மட்டுமல்ல, போதை கலாச்சாரத்திற்கு எதிராகவும் ஆயிரக்கணக்கான குமார் - ஆனந்தன்கள் போராடி வருகின்றனர். நம்பிக்கை இருக்கிறது அவர்களுக்கு, ஒரு குமார் வீழ்த்தப்பட்டால் ஓராயிரம் தோழர்கள் எழுந்துவருவார்கள் என்று. அதுதான் வாலிபர் சங்க வரலாற்றில் நடந்தது. இப்போது போதையெனும் சீரழிவிலிருந்து தமிழக இளைஞர்களை பாதுகாக்கும் கடமையை வாலிபர் சங்கத்தின் தோள்களில் வரலாறு சுமத்தி உள்ளது. தியாக வரலாறு கொண்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் இந்த சவாலை ஏற்று இதோ குமார் - ஆனந்தன் என்ற தியாகிகள் கொடுத்த அக்னியை கையில் ஏந்தி புறப்பட்டு வீதிவீதியாக சென்றுகொண்டிருக்கிறது. வெந்து தணியும் காடு.

------------------------------------------------------------------------------26.06.2015 தீக்கதீர் நாளிதழ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக