மானுட விடுதலை...

நேர்பட பேசு! வையத் தலைமைகொள்!



இன்றைய இளைய தலைமுறைக்கு இந்திய விடுதலைப் போரின்வரலாற்றை, அதன் வீரம் மிக்க நினைவுகளை, தியாக வேள்விகளை அறிமுகம்செய்ய வேண்டியது அவசியக் கடமையாகிறது.  காவி இருள் சூழும் அபாயம் இந்திய நாட்டை நோக்கி வேகமாய் நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. தேசத்தின்விடுதலைக்கு தங்கள் உயிரையே விலையாய் கொடுத்த தியாகிகளை மத துவேஷத்தால் தேச துரோகிகளாக சித்தரிப்பது எவ்வளவு பெரிய கயமைத்தனம், எத்தகைய வன்முறை அது? அகண்ட இந்து ராஷ்டிர கொடுங்கனவின் தத்துவ பின்னணி இஸ்லாமியர்களை குறிவைத்து வளர்வது எத்துனை பெருந்துயர்? வளர்ந்தெழுந்த  விடுதலைப் போரின் விதையாய் விழுந்த இஸ்லாமியர்கள் வரலாற்றை மீட்டெடுத்து, காவி இருளின், கொடுங்கனவின் தடுப்பு அரணாக முன்நிறுத்த வேண்டியது மதச்சார்பற்ற சக்திகளின் கடமையாகிறது. வரலாறு என்ன சொல்கிறது? கொஞ்சம் பயணிக்கலாம்.

1857ல் நடந்த முதல் விடுதலை போரின் நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஆதாவது 1757-ல் சிராஜ்-உத்-தௌலா ஆங்கிலேயரை எதிர்த்து நடத்திய பிளாசிப் போர்தான் பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராய் இம்மண்ணில் நடந்த முதல் பெரிய யுத்தம். அவரது வழியை பின்பற்றி அடுத்த 190 ஆண்டுகள் இஸ்லாமியர்கள் இந்த நாட்டின் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய வரலாறு மிகப்பெரியது. குறிப்பாக தமிழகத்தில் உள்ள இஸ்லாமியர்கள் இந்த வீரம் மிகுந்த போராட்டத்தில் கொஞ்சமும் பின்தங்கவில்லை.

1800-1801 ஆண்டுகளில் ஆங்கிலேயர்க்கு எதிராகத் தென்னிந்திய குறு நில மன்னர்களும் பாளையக்காரர்களும் ஒருங்கிணைந்த கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர். மலபார் கேரளவர்மா, மருது பாண்டியர், திப்புசுல்தானின் குதிரைப்படைத் தலைவராகப் பணியாற்றிய கனீஷ்கான் (Khan-i-Jah-Khan), மராத்தியில் சிமோகா (Shimoga) பகுதியை ஆண்ட தூண்டாஜி வோக் (Dhondaji Waug), விருப்பாச்சி பாளையக்காரர் கோபால நாயக்கர், திண்டுககல் பாளையக்காரர் போன்றோர் மகத்தான கூட்டமைப்பை உருவாக்கினர்.

இக்கூட்டமைப்பின் சார்பில் வடக்கு-தெற்கு ஆட்சியாளர்களை இணைக்கும் வாயிலாக கனீஷ்கான் செயல்பட்டார். இந்தப் புரட்சிப்படை யுத்தத்திற்குத் தலைமைப் பொறுப்பு கனீஷ்கானிடம் ஒப்படைக்கப்பட்டது. இக்கூட்டமைப்பின் முக்கிய திட்டமே கோவை - சேலம் பகுதிகளைக்  கைப்பற்றுவதாகும். 4000 குதிரைப்படை வீரர்களுடன் இத்தாக்குதலில் கனீஷ்கான் ஈடுபட்டார்.  ரகசியமாகத் தீட்டப்பட்ட இத்திட்டம்  தோல்வியில் முடிந்தது. இக்கிளர்ச்சியில் கைதான 42 பேருக்கு சேலம் கலெக்டர் மாக்லியோட் (Macleod) உத்தரவுப்படி சேலம் ராணுவ கோர்ட்டில் தூக்குத்தணடனை என தீர்ப்பு வழங்கப்பட்டு அனைவரும் தூக்கிலிடப்பட்டனர் (1)

பாஞ்சாலங்குறிச்சி சீமையை ஆண்ட வீரப்பாண்டிய கட்டப்பொம்மன் இராமநாதபுரத்திற்கு கலக்டர் ஜாக்ஸன் துரையைச் சந்திக்க சென்றபோது அதில் வீரமிகு இஸ்லாமிய தளபதிகள் பலரும் அஞ்சாமல் சென்றனர்
மம்மது தம்பியும் முகம்மது தம்பியும்
மார்க்கமுள்ள தம்பி வரிசையுந்தான்
தர்ம குணவான் இபுராமு சாகிபும்
தம்பி இசுமாலு ராவுத்தனும்…
என்று அவரோடு சென்ற தளபதிகளைப் பட்டியலிட்டுக் காட்டுகிறது  வீரபாண்டிய கட்டபொம்மன் கதைப்பாடல். (2)

மலேசியாவின்  பினாங்கு தீவில் வாழும் தமிழர்கள் கிளிங்கர்கள் எனப் பிறமொழி பேசுபவர்களால் அழைக்கப்பட்டனர். இதன் பின்னால் சுதந்திரப் போராட்ட வீரர்களின்  தியாக வரலாறு மறைந்துள்ளது. மருது சகோதரர்கள் ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டு இறுதியில் தூக்கிலிடப்பட்ட பின்பு ஆங்கில அரசு அவரது குடும்பத்தைச் சார்ந்த இளைஞர்கள் மற்றும் தளபதிகள், வீரர்கள் என 72 பேரைப் பினாங்கு தீவிற்கு  நாடு கடத்தி விலங்கிட்டு, கைகால்களை இரும்புச் சங்கிலியால் பிணைத்து நடமாட விட்டிருந்தனர். அவர்கள் நடக்கும் போது சங்கிலிச் சத்தம் கிளிங் கிளிங் எனக் கேட்டதால் அக்கைதிகள் கிளிங்கர்கள் என அழைக்கப்பட்டனர். நாளடைவில் அப்பெயர் அங்கு குடியேறிய தமிழர்களை அழைப்பதற்குரிய பெயராக மாறியது.

அத்தகைய  கைதிகள் கூட்டத்தில் தலைமையேற்ற இருவரில் ஒருவர் இளைய மருதுவின் மகன் முத்துவடுகு என்ற துரைச்சாமி. மற்றவர் முக்கிய படைத் தளபதிகளில் ஒருவரான சேக் உசேன் என்ற இஸ்லாமிய இளைஞர். இச்சப்பட்டி அமில்தார் சேக் உசேன் என்று அழைக்கப்பட்ட இவர், கிளர்ச்சிப் படையின் முதல் தாக்குதலுக்குத் தலைமை தாங்கினார்.  (3)

சென்னையில் பிறந்து உத்திரப் பிரதேசத்தில் வாழ்ந்தவர் மௌல்வி செய்யது அஹ்மதுல்லாஹ் ஷாஹ். விடுதலைக்காக வடஇந்தியாவின் பல பகுதிகளில் யாத்திரை செய்தவர். லக்னோவில் ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் ''ஆங்கிலேயர்களைக் கொன்று குவித்து தேசத்திலிருந்து அவர்களை ஒழித்தாலன்றி நாம் நம் தாய் நாட்டை பாதுகாக்க முடியாது'' என்று முழக்கமிட்டார். ஆங்கில அரசு அவருக்குத் தூக்குத் தண்டனை விதித்தது.(4)

1920 - இல் ஈரோட்டில் நடைபெற்ற உலமாக்களின் மாநாட்டில் முழுக்க முழுக்க தேசிய பிரச்சனைகளே பேசப்பட்டன. மௌலான முகம்மது அலி இம்மாநாட்டில் ஆற்றிய உரை அன்று தமிழக உலமாக்கள் தேசிய நடவடிக்கைகளில் வேகமாக ஈடுபட உந்து சக்தியாக அமைந்தது. பள்ளிவாசல்களையும் அரபிக்கல்லூரி – மதரசாக்களையும் சுதந்திரத்தைப் பற்றிச் சிந்திக்கின்ற – பேசுகின்ற – செயல்பாட்டுக்குரிய களங்களாக மாற்றின. இக்காலகட்டத்தில் திண்டுக்கல்லை மையப்படுத்தி உலமாக்கள் பலர் இந்த தேசிய இயக்கத்தை ஆங்கிலேயருக்கு எதிராக உயர்த்திப் பிடித்துள்ளனர். மௌலானா அப்துல் ஹமீது பாக்கவி அவர்கள்  கதராடை அணியாத மணமகனின் திருமணத்தில் உலமாக்கள் கலந்து கொள்ளக்கூடாது என பகிரங்க அறிவிப்பை விடுத்தார்.  அதற்கு அன்றைய உலமாக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருந்தது.(5)

ஆண்களுக்கு நிகராக இஸ்லாமிய பெண்களும் களம் கண்டனர். 1922ல் தென்காசி சையது குருக்கள் பள்ளிவாசல் மைதானத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய தேசபக்தை பீபியம்மாள் ”என் பிள்ளைகள் சிறையில் இருக்கும் போது ஒரு வேளை ஆங்கிலேயர்களிடம் மன்னிப்பு கேட்டு விடுதலையானால் அவர்களின் குரல் வளையை நெறித்துக் கொல்வேன்” என்று ஆவேசம் பொங்க உருதுமொழியில் பேசி நிதி திரட்டினார். அவர் பேசியதை தமிழில் திருச்சியைச் சேர்ந்த முர்தஸா சாகிப் மொழி பெயர்த்தார். இதே சுதந்திர வேட்கையுடன் இறுதி வரை இந்தியா முழுவதும் சுற்றப்பயணம் செய்த பீபியம்மாள் 1924 ஆம் ஆண்டு காலமானார். பீபியம்மாள் விருப்பபடி அவரது பூதவுடல் கதர் துணியால் சுற்றப்பட்டே நல்லடக்கம் செய்யப்பட்டது.

அதே போல திருச்சி பீமநகர் வயன்வித்தார் தெருவில் வசித்த மரியம் பீவி என்னும் விடுதலைப் போராட்ட வீராங்களை நாகபுரி கொடிப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறைத் தண்டனை பெற்றார். இவருடைய கணவர் பெயர் அப்துல் கரீம். இஸ்லாமிய பெண்கள் வீதியில் இறங்கி போராடினால் என்னாகும் என காட்ட ஆங்கிலேய அரசு மரியம் பீவிக்கு ஆறு மாத சிறைத் தண்டனை வழங்கி கடலூர் சிறையில் அடைத்தது.

கரூர் நன்னா சாகிப் மற்றும் அவரது மனைவி பியாரி பீவி ஆகிய இரண்டு பேர்களும் ஒத்துழையாமை இயக்கத்திலும், தனி நபர் சத்தியாகிரகத்திலும் பங்கேற்றார்கள். 1920 ஆம் ஆண்டிலிருந்து 1943 ஆம் ஆண்டுவரை விடுதலைப் போராட்டங்கள் பலவற்றில் ஈடுபட்ட நன்னா சாகிப் திருச்சி, அலிப்புரம் சிறைகளில் தண்டனை  அனுபவித்திருக்கிறார்.   தேசத்தின் மீது அளவில்லா பற்றுக்கொண்ட அவரது மனைவி பியாரிபீவி தனிநபர் சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டு நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்தாலும் வீரமுழக்கமிட்டு மகிழ்ச்சியுடன்  சிறை சென்றார்.

இந்திய தேசிய ராணுவத்தின ஒற்றர்ப் படைப்பிரிவு மலேசியாவிலுள்ள பினாங்கு தீவில் இயங்கி வந்தது. இந்த ஒற்றர் படையின் முதல்கட்ட நடவடிக்கையாக ஐந்து ஒற்றர் படை வீரர்கள் கேரளாவின் கோழிக்கோடு அருகிலுள்ள தண்ணூர் கடற்கரையில் 27-12-1942- இல் நீர் மூழ்கிக் கப்பல் மூலம் வந்திறங்கினர். இதே நேரத்தில் பர்மாவில் இருந்து அரகடகன் வழியாக மற்றொரு குழு இந்தியாவிற்குள் நுழைந்தது. இவ்வீரர்கள் தங்களது பணிகளை ரகசியமாக மேற்கொண்டு வரும்போது சிலரால் காட்டிக் கொடுக்கப்பட்டு அனைவரும் கைதானர்.

சென்னை கோட்டையில் விசாரிக்கப்பட்டு அனைவரும் சென்னை சிறையில் அடைக்கப்பட்டனர். விசாரணை நடத்திய நீதிபதி மாக்,  நால்வருக்கு மரணதணடனையும் 14 பேருக்கு ஐந்தாண்டுகள் சிறைத்தண்டனையும் வழங்கினார். மரண தண்டனைப் பெற்ற மற்ற நால்வர்  வைக்கம் அப்துல் காதர்,  பவுஜாசிங், எஸ்.சி.பரதன், ஆனந்தன். இந்த ஒற்றர்படை வழக்கில் ஐந்தாண்டுகள் கடுஞ்சிறைத் தண்டனைப் பெற்ற 14 பேருள் தமிழ்நாடு கீராம்பூரைச் சேர்ந்த முஹம்மது கனி என்ற இஸ்லாமிய இளைஞரும் உண்டு (7)

இதுமட்டுமல்ல சிப்பாய்க் கலகத்தின் போது கண்ணில் பட்ட இந்தியர்களைச் சுட்டுக் கொன்ற நீல் சிலை தகர்க்கும் போராட்டம் சென்னையில் 1927ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடை பெற்றது. இதில் பங்கேற்ற இராமநாதபுரம் முஹம்மது சாலியா முன்று மாதமும், சென்னையைச் சேர்ந்த அப்துல் மஜீது, லத்தீப், இராமநாதபுரம் மஸ்தான், பண்ருட்டி முஹம்மது உசேன் போன்றோர் 6 மாதம் முதல் 2 வருடம் வரையும் கடுங்காவல் தண்டனை பெற்றனர்

1921 - இல்  கள்ளுக்கடை மறியல் போராட்டத்தில் நிலக்கோட்டைத் தாலுகாவில் சிறை  சென்ற மதுரை ஹாஜி முகம்மது மௌலானா சாஹிப்,  உத்தமபாளையம் முகம்மது மீரான் என்ற ஹாஜி கருத்த ராவுத்தர், மதுரை நகரின் வீதிகளில் தான் இயற்றிய பாடல்களைத் தன் மனைவியுடன் பாடிக்கொண்டு உலா வந்து சுதந்திர எழுச்சியை ஊட்டிய வா. ஏ.ந.வ. முகையதீன் அபதுல் காதிர், வில்லுப்பாட்டில் ஒரு பாவலராகத் திகழ்ந்த தாராபுரம் பி.என்.அப்துல் கபீர் , ஒத்துழையாமை இயக்கப் பிரச்சார பாவலர் விருதுநகர்  அப்துல் ரகுமான்.  விஸ்வநாததாஸ்,  செங்கோட்டை கிட்டப்பா, கே.பி.சுந்தராம்பாள் போன்றோர் எழுச்சியூட்டி வந்த காலகட்டத்தில், அவர்களுக்கு நிகராகப் பல நாடக மேடைகளில் சுதந்திர கீதம் இசைத்தவர் காதர்பாட்சா. 'சுதந்திர முரசு' 'விலாவர் ஜரினா' போன்ற தேசபக்தி நாடகங்களில் பாடி நடித்து சுதந்திரப் போராட்டத்திற்கு  தனது பங்களிப்பைச் செய்தவர் மதுரை ஏ.பி.மொய்தீன்.  வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் தீவிரமாக பங்கேற்று 'ஆத்திரம் கொள்' என்பது போன்ற பல சுதந்திர கீதங்களைப் பாடியவர் கவிஞர் கா.மு. ஷெரிப். என தேசபக்தர்களின் பட்டியல் தொடர்கிறது.

1973ம் ஆண்டு தமிழக அரசு புத்தகம் ஒன்றை வெளியிட்டது. அதில் நேதாஜியின் தேசிய இராணுவத்தில் பணியாற்றிய தமிழர்களின் பட்டியலை வெளியிட்டிருந்தது. அப்பட்டியலில் 25% மேற்பட்ட முஸலி¬ம்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கெல்ல்லாம் உச்சமாய் இந்திய சுதேசி வர்க்ககத்தின் லட்சியக் கனவான 'சுதேசி ஸ்டீம் நேவிகேசன்' - என்ற சுதேசிக் கப்பல் கம்பெனியை வ.உ.சிதம்பரம் பிள்ளை 16-10-1906 - இல் நிறுவினார். இந்நிறுவனத்திற்கு பங்குதாரர்களைச் சேர்க்கும் முயற்சியில் அவர் இறங்கியபோது அவருக்கு நம்பிக்கைக் கரம் நீட்டியவர் ஹாஜி ஏ.ஆர். பக்கீர் முகம்மது ராவுத்தர் சேட் ஆவார். ரூபாய் இரண்டு லட்சம் மதிப்புள்ள 8000 பங்குகளை அவர் தனது கம்பெனி சார்பாக வாங்கினார்.

கட்டுரையின் நீளம் கருதி இத்தோடு முடிக்கிறேன். இத்தகைய தியாக சீலர்களை மத்தியில் ஆட்சி பொறுப்பேறுள்ள பிஜேபி கொச்சைப் படுத்துகிறது. என்ன செய்ய போகிறோம்? இந்த வரலாற்றை மக்களிடம் கொண்டு செல்வது நமது கடமையல்லாவா?

உதவியவை: 1 (* K.Rajayyan, South Indian Rebellion, The First War of Independence. 1800-1803,, PP.110-111.). 
2. பேராசிரியர்  நா.வானமாமலை பதிப்பித்து 1971-இல் வெளியான வீரபாண்டிய கட்டபொம்மு கதை பாடல்
 3.  Miltry consultations, Vol.307(19.1.1803), P.1249 - இல் பினாங்குக்கு நாடு கடத்தப்பட்ட 72 பேர் பெயர் பட்டியலில் சேக் உசேன் பெயர் இடம் பெற்றுள்ளது. 
4.சாவர்க்கர்,எரிமலை,பக்கம்.65. 
5.Shan Muhammad, Freedom Movement in India – The Role of Ali Brothers, P.153.  
6.மக்கள் தாரகை, மறைக்கப்பட்ட வரலாறுகளும்…மறைக்கப்படும் உண்மைகளும், சென்னை. 
7. மா.சு.அண்ணாமலை, சும்மா வரவில்லை சுதந்திரம். தினமணிச்சுடர்.4.8.1996.,பக்கம்.9. 
8.  ச.கா.அமீர் பாட்சா, 'இந்திய விடுதலையில் இஸ்லாமியரின் பங்களிப்பு',குர்ஆனின் குரல்,மார்ச் 1998,பக்கம் 39-40.. 

----------------------- 2016 ஆகஸ்ட்  இளைஞர் முழக்கம் இதழில் நான் எழுதிய கட்டுரை --------------------

0 comments

bookmark
bookmark
bookmark
bookmark
bookmark