மானுட விடுதலை...

நேர்பட பேசு! வையத் தலைமைகொள்!

விடுதலைப்போரில் பெண்கள் - 19

                                                  
                                                                                                    -
               1919 ஆண்டு ''இந்திய அரசுச் சட்டம் -1919'' பிரிடிஷ் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டது. இது  இந்தியாவில் சில அரசியல் மாற்றங்களை கொண்டு வந்தது. இந்திய விடுதலை இயக்கத்தின் ஒரு சில வேண்டுகோள்களைப் பூர்த்தி செய்யவும் இச்சட்டம் இயற்றப்பட்டது. ஆனாலும் அவர்கள் அதில் திருப்தி அடையவில்லை என்பது வேறுவிஷயம். பிரிடிஷ் அரசின் இந்தியத் துறைச்செயலர் எட்வின் மோண்டெகு மற்றும் இந்திய வைசுராய் கெம்ஸ்ஃபோர்ட் பிரபு ஆகியோரின் பரிந்துரைகளான மோண்டெகு - கெம்சுஃபோர்ட் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த இச்சட்டம் இயற்றப்பட்டது.
               
     இச்சட்டம், இந்தியாவில் மத்திய அளவிலும் மாகாண அளவிலும் இரட்டை ஆட்சி முறையை அறிமுகப்படுத்தியது. இவ்வாட்சி முறையில், நிர்வாகத் துறைகள் இரு வகையாக பிரிக்கப்பட்டன. சட்டம், நிதி, உள்துறை முதலிய முக்கிய துறைகள் பிரித்தானிய ஆளுனர் அல்லது வைசுராயின் நிர்வாகக் குழுவின் நேரடிக் கட்டுப்பாட்டிலும், கல்வி, சுகாதாரம், உள்ளாட்சி, விவசாயம், தொழில் முதலியவை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய சட்டமன்றங்களின் கட்டுப்பாட்டிலும் இயங்கின. அதுவரை ஆளுனருக்கு பரிந்துரைகள் மட்டுமே செய்யக் கூடிய சட்ட மன்றம் விரிவு படுத்த்தப்பட்டு சட்டங்கள் இயற்றும் அதிகாரமும் அதற்கு வழங்கப்பட்டது. ஆனால் எல்லாம் ஒரு கட்டுக்குள்தான்.

  நாடாளுமன்றமும், மாநில சட்டமன்றங்களும் விரிவுபடுத்தப்பட்டன. சட்டமன்ற உறுப்பினர்களுள் ஒரு பகுதியினரை நேரடித் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. புதிய மேலவையாக மாநிலங்களவை உருவாக்கபப்ட்டது. மன்னர் அரசுகளுக்கு (சமஸ்தானங்கள்) மாநிலங்களவையில் இடங்கள் ஒதுக்கப்பட்டன. 1919-29 வரை பத்து ஆண்டுகளுக்கு இந்த புதிய ஆட்சிமுறை நடைமுறையிலிருக்குமென்றும் அதன்பின்னர் அதன் செயல்பாட்டை ஆராய ஒரு குழு அமைக்கபபடு மென்றும் தீர்மானிக்கபப்ட்டது. அதாவது தங்களுக்கு ஒத்துவந்தால் சரி இல்லையேல் வேறு ஒரு சட்டம் அறிமுகமாகும் என்துதான் இதற்கு அர்த்தம். இப்புதிய ஆட்சிமுறையின் கீழ் 1920 ஆம் ஆண்டு முதல் தேர்தல்கள் நடத்தப்பட்டன.

               இச்சட்டம் தமிழகத்தில் நீதிக்கட்சி போன்ற கட்சிகளால் வரவேற்கப்பட்டது. ஆனால் இந்திய தேசிய காங்கிரஸ் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை; தேர்தல்களிலும் பங்கு கொள்ள மறுத்துவிட்டது. இதனால் இந்த தேர்தலில் தமிழகத்தில் நீதிக்கட்சி ஆட்சியை அமைத்தது. இந்த பின்னணியில்தான் விடுதலைப் போரட்டம் தொடர்ந்தது. தமிழகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட பல தேசபக்தர்கள் கடுமையான அடக்குமுறைகளை தொடர்ந்து சந்தித்து வந்தனர். குறிப்பாக தமிழகத்தில் பெண்கள் பெருமளவில் போராட்டக் களத்தி இறங்கிய காலமாய் அது இருந்தது.  

   அடிப்படைவாத கருத்துக்கள் மேலோங்கிய சமூக கட்டுப்பாட்டின் எல்லைகள் ஒரு வரம்புக்குள் பெண்களை அடைத்து மூடியது. ஆனால் வீடுகளில் அடைப்பட்டுக் கிடந்த தமிழக பெண்களை விடுதலைப் போரும், அன்றைய அரசியலும் வீதிக்கு அழைத்து வந்தது. அன்னிபெசன்ட் அம்மையார் காங்கிரஸின் ஆதரவோடு சென்னையில் துவக்கிய ஹோம்ரூல் (சுயஆட்சி) இயக்கத்தில் பலர் பங்கெடுத்தனர்.  பிரிடிஷ் அரசை எதிர்த்து போர்க்கொடி தூக்கியதால் அன்னிபெசட் சிறை வைக்கப்பட்டார். இந்த சம்பவம் ஏராளமான பெண்களை இவர் இயக்கத்தில் சேருமாறு தூண்டியது. அதில் குறிப்பிடத் தக்கவர் பம்பாய் மருத்துவக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த சென்னையைச் சேர்ந்த மாணவி சிவகாமு அம்மா ஆவார். தான் மருத்துவராகி நாட்டிற்கு சேவை செய்வதைவிட விடுதலைப் போராட்டத்தின் மூலம் ஏராளமான தேச சேவை செய்ய முடியமென்றுணர்ந்தார். 

   அதனால் தனது மருத்துவ படிப்பை விட்டுவிட்டு 1917-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னை வந்தார். அப்போது அன்னிபெசன்ட்  கைதினை கண்டித்து சென்னையைச் சேர்ந்த சுமார் 300 பெண்கள் திருமதி டாரதி ஜீன ராசதாஸா தலைமையில் பொதுக் கூட்டம் நடத்தினர். அக்கூட்டத்தில் சிவகாமு அம்மாள் வீர உரையாற்றினார். அதைத் தொடர்ந்து அன்னிபெசன்ட் அம்மையார் படமும் சுயஆட்சி கொடியும் கையில் ஏந்தி கடுமையான அடக்குமுறைகளையும், தடை உத்தரவையும் மீறி பெண்கள் ஊர்வலமாகச் சென்றார்கள். பின்னர் அவர்  விடுதலை பெற்று சென்னை வந்தபோது ஏராளமான பெண்கள் அவரை சூழ்ந்து வாழ்த்துத் தெரிவித்தனர்.

               புதிய ஆட்சிமுறையின் கீழ் முதன்முறையாக தேர்தல்கள் நடத்தப்பட்ட அதே 1920 ஆம் ஆண்டுதான் காந்தியின் தலைமையில் ஒத்துழையாமை இயக்கம் துவங்கியது. அப்போது தமிழகத்தில் நீதிகட்சி ஆட்சி அமைந்தது. சட்டமன்றத்தில் பிராமணர் அல்லாதாருக்கான இட ஒதுக்கீடு, இந்து அறநிலையத் துறை, தேவதாசி முறை ஒழிப்பு, பள்ளிகளில் இலவச சத்துணவு திட்டம், தொடர் வண்டியில் பிரமாணர்களின் தனி உரிமை பறிப்பு, கல்லூரிகளில் பிராமணர் அல்லாதார் இட ஒதுக்கீடு, பெண்ணகளுக்கு சொத்துரிமை போன்ற முற்போக்கு திட்டங்களை நீதிக்கட்சி ஆட்சி அறிவித்தாலும் தேசியம், தேசிய விடுதலை போன்ற கோஷங்களுக்கு பின்னால்தான் மக்கள் திரண்டனர். 

              பிருமாண்டமமாக நடந்த ஒத்துழையாமை போராட்டத்தின் அடிப்படை சத்தியம், அகிம்சை, சாத்வீக எதிர்ப்பு என காந்தி அறிவித்தார். இதனால்தான் காந்தியடிகள் இப்போராடங்களில் பெருமளவில் பெண்கள் கலந்து கொள்வதை விரும்பினார். அதற்காக பெண்கள் நாடு முழுவதும் திரட்டப்பட்டனர், பின்பு திரண்டனர்.  அந்நியத் துணிகளைப் புறக்கணித்தல், அத்துணிக் கடைகள் மற்றும் மதுபானக்கடைகள் இவற்றை மறியல் செய்தல், கதர் துணி நெய்தல் போன்ற செயல்களில் பெண்கள் உற்சாகத்துடன் தொடர்ந்து ஈடுபட்டார்கள். ஒத்துழையாமை இயக்கத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது மதுபான கடைகள் மறியலாகும். தமிழகத்தில் இப்போராட்டத்தை தந்தை பெரியார் முன்னின்று நடத்தினார். போராட்டம் வெற்றிகரமாக நடைப்பெற்றுக் கொண்டிருந்தபோது சென்னை அரசு அவரையும் மற்றும் பல தொண்டர்களையும் கைது செய்து சிறையிலடைத்தது.
          
     ஆனால் போராட்டம் அதன் பின்தான் உச்சத்தை அடைந்தது. தந்தை பெரியாரின் மனைவி நாகம்மாளும், தந்தை பெரியாரின் சகோதரி கண்ணம்மாளும் மறியல் போராட்டத்தை ஈரோட்டில் தொடர்ந்து நடத்தினர். நூற்றுகணக்கானவர்கள் தினமும் இப்போராடத்தில் கலந்துக்கொண்டனர். இப்போராட்டத்தை நிறுத்திவிடலாமா என்று காங்கிரஸார் காந்தியடிகளிடம் கேட்டபோது, அவர் உண்மையான மனதுடன் சொன்னார் ""கள்ளுக்கடை மறியல் போராட்டத்தை நிறுத்தி விடுவது என்பது என் கையில் இல்லை, அது ஈரோட்டில் உள்ள இரண்டு பெண்களிடம் தான் இருக்கிறது"" அந்த இரு பெண்களின் தலைமையில் நடந்த போராட்டம் அவ்வுளவு தீவிரமாக இருந்தது.

               இந்த ஒத்துழையாமை இயக்கத்தின் மற்றொரு அம்சம், கதர் உற்பத்தியைப் பெருக்குவதன் மூலம் அந்நியத் துணிகளைப் புறக்கணித்து அரசுக்கு  நஷ்டத்தை உருவாக்குவது. இந்த கதர் விற்பனையை மிகச் சிறப்புடன் நிறைவேற்றியவர் மதுரையைச் சேர்ந்த பத்மாசனி அம்மாள் ஆவார். இவரது கணவர் ஸ்ரீனிவாச வரதன் கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டு கைதானவுடன் அவர் நடத்தி வந்த பாரத ஆசிரமத்தை திறம்பட நடத்தியதோடு, கதர் விற்கவும், பெண்களை காங்கிரஸ் அங்கத்தினராகச் சேர்க்கவும், பொதுக் கூட்டங்களில் பேசவும் அயராது உழைத்தார். நகைகளை அணிவதை தவிர்த்தார். ஒரு வேளை சாப்பாடு, அதுவும் தனக்கு சாப்பாட்டிற்கு தேவையான வசதியிருந்தும் காலையிலெழுந்து நூல்நூற்று அதில் வரும் வருமானத்தைக் கொண்டுதான் சாப்பிடுவார். மாலையில் வீடு வீடாகச் சென்று கதர் விற்பார். கதர் நெய்வதும், விற்பதும், வாங்குவதும் தண்டனைக்குரிய செயல்களாக இருந்த நேரத்தில்தான் இந்த தீரச்செயலைச் செய்தார். 

  அரசின் ஆணையை மீறி அரசாங்க பதவியிலிருப்பவர்களாயிருந்தாலும் கண்டிப்பாக ஒரு கெஜம் துணியாவது வாங்கும்படி செய்து விடுவார். பெண்களை ஒரு முழம் ரவிக்கைத் துணியாவது வாங்கும்படி தூண்டுவார். 1857-ஆம் ஆண்டு புரட்சி வீரர்களின் சரித்திரங்களை உணர்ச்சியுடன் எடுத்துச் சொல்லி கூட்டத்தி இருப்போரை எழுச்சியிற செய்யும் உரைவீச்சாளராய் திகழ்ந்தார். ஏராளமான சொற்பொழிவுகள் ஆற்றி தமிழ் மக்களிடம் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தியதோடு ஐநூறுக்கும் மேற்பட்ட பெண்களை காங்கிரஸ் உறுப்பினர்களாகவும் ஆக்கினார்.

               கதர் உற்பத்தியை பெருக்க வேண்டுமென்று 1924-ஆம் ஆண்டில் இவ்வம்மையாரும் மேலும் தாயம்மாள், திருமதி. ஜோஸப், திருமதி. சுந்தரமையங்கார், சுப்புலட்சுமி அம்மாள், டி.வி.எஸ். சௌந்தரம் ஆகிய பெண்களும் காங்கிரஸின் உதவியால் மதுரையில் "சகோதரிகள் சங்கம்" என்ற அமைப்பை நிறுவினார். அச்சங்கத்தில் வெள்ளிக்கிழமை தோறும் சுமார் முப்பது பெண்கள் இரண்டு மணிநேரம் நூல் நூர்பார்கள். அவர்களுக்கு வேண்டிய ராட்டினமும் பஞ்சும் தேசியப் பள்ளிக்கூடத்திலிருந்து கொடுக்கப்பட்டு வந்தது. இவர்களுடன் தாயாரம்மாள், சீதையம்மாள், முனியம்மாள், டாக்டர் பிச்சைமுத்து அம்மாள் ஆகியோரும் பணி புரிந்தனர். பல தேசியம் சம்பந்தமான செய்திகளையும் இவர்கள் விவாதித்தார்கள். இங்கு வரும் பெண்களுக்கும் ராட்டின பயிற்சி அளித்ததோடு அவர்களுக்கு கல்வியும் கற்றுக் கொடுத்தனர். போராட்ட காலங்களில் ஈடுபட்ட பெண்களுக்கு பெருத்த ஊக்கமளித்தது இச்சங்கம். அந்நியத் துணிகளைப் புறக்கணிப்பதற்கு இவர்கள் தொண்டு மிகவும் உதவியது.

               இரண்டு ஆண்டுகள் தொடர்ந்த ஒத்துழையாமை இயக்கம் உண்மையில் ஒரு கட்டத்தில் மிகவும் எழுட்சியை உருவாக்கியது. இந்திய நாடே எழுந்து நின்றது. பல இடங்களில் காவல்துறையினர் அடித்தால் திருப்பி அடிக்க மக்கள் தயாரானார்கள். அதன் உச்சம்தான் சொளரி சொளரா எனும் இடத்தில் காவல் நிலையம் கொளுத்தப்பட்டது. இதையே காரணமாக வைத்து காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கததை வாபஸ் வாங்கினார். இது போராட்டத்தில் ஈடுபட்ட லட்சக்கணகான மக்களை சோர்வுற செய்தது, கோபப்பட செய்தது, காந்தியின் மீதும் காங்கிரஸ் மீது நம்பிக்கையின்மையை விதைத்தது. இவ்வியக்கத்தில் ஈடுபட்ட பல பெண்கள் வேறு திசையில் போராடத்தை முன்னெடுக்கதுவங்கியதும் நடந்தது.

               ஆயுதமேந்திய போராடங்களிலும், சாத்வீக போராடங்களிலும், சமூக சீர்திருத்த போராங்களிலும், உழைப்பாளி மக்களின் உரிமைப் போராட்டங்களிலும் எப்போதும் பெண்கள் சலைத்தவர்கள் அல்ல என்பதை நிருபிக்க இன்னும் பல வீராங்கனைகளை நாம் சந்திக்க இருக்கிறோம்.

(தொடரும்)

0 comments

bookmark
bookmark
bookmark
bookmark
bookmark