திங்கள், 11 நவம்பர், 2024

வள்ளலார் சர்வதேச மையம் ஆதரவும் எதிர்ப்பும்


 சத்திய ஞானசபை வளாகத்தில்...

வள்ளலாரின் கருத்துகளைப் பரவலாக்கும் விதமாக, வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படும்என்று 2021 சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது தி.மு.. அதன்படி, தி.மு. ஆட்சிக்கு வந்ததும் அது குறித்த ஆணை வெளியிடப்பட்டு, ரூ.99.9 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டது. அந்தக் கட்டுமானங்களுக்காகச் சத்திய ஞானசபை வளாகத்தில் இருக்கும் பெருவெளி தேர்வுசெய்யப்பட்டது.

சத்திய ஞானசபை, தருமசாலை, அருட்பெருஞ்ஜோதி மண்டபம் தவிர்த்து, மீதமிருக்கும் திறந்த வெளியே `பெருவெளிஎன்று அழைக்கப்படுகிறது. இந்த நிலையில் சர்வதேச மையத்திற்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் பலவிதமான கருத்துக்கள் உருவானது. ஆதரிப்பவர்கள் மத்தியில் இரண்டு கருத்து, எதிர்ப்பவர்கள் மத்தியில் இரண்டு கருத்துக்கள் எனவும், வடலூர் சபையில் போராட்டம், நீதி மன்றத்தில் வழக்குகள் என வள்ளலாரின் சர்வதேச மைய அறிவிப்பு முக்கிய விவாத பொருளாக மாறியுள்ளது.

எதிர்ப்பில் இரண்டு வகை...

பெருவெளியில் சர்வதேச மையம் வரவே கூடாது எனக் கூறும் பாமக, அதிமுக, நாம் தமிழர், தமிழ்த் தேசிய இயக்கங்கள் எதிர்ப்பின் தன்மை ஒரு வகையிலும், பாஜக உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகளின் எதிர்ப்பு ஒரு வகையிலும் உள்ளது. திமுக அறிவித்த திட்டம் என்பதால் திமுக முழு ஆதரவும், சர்வதேச மையத்தை ஆதரிக்கும் அதே நேரத்தில் உரிய மாற்று ஆலோசனைகளுடன் மார்க்சிஸ்ட் கட்சியும் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றன.

சனாதனத்திற்கு எதிராகச் சமரச சன்மார்க்கம் என்னும் தமிழர்களின் சமத்துவ மெய்யியலை மீட்டெடுத்த திருவருட்செல்வர் வள்ளலார் வாழ்ந்து வழிகாட்டிய வடலூர் பெருவெளியை, ஆய்வு மையம் என்ற பெயரில் திமுக அரசு வலுக்கட்டாயமாகக் கையகப்படுத்து வதைக் கண்டித்து என்ற முழக்கத்துடன் தமிழ்த் தேசிய அமைப்புகள் எதிர்ப்பை பதிவு செய்கின்றனர், “ஒளிக்கோயிலின் தீப ஒளியைப் பக்தர்கள் வழிபடு வதற்காக உருவாக்கப்பட்ட பெருவெளியில், வள்ளலார் பன்னாட்டு மையத்தை அமைக்கத் துடிப்பது வள்ளலாரின் விருப்பத்திற்கும், நோக்கத்திற்கும் எதிரானது என்பதால் அந்த முயற்சியைக் கைவிட வேண்டும். பெரு வெளிக்குப் பதிலாக அருகிலுள்ள காலி இடங்களில் பன்னாட்டு மையத்தை அமைக்கலாம்என பா..கவும் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கின்றன. இவர்கள் வள்ளலார் சன்மார்க்கத்தை எதிர்க்கவில்லை. ஆனால் பெருவெளியில் வேண்டாம் என்கின்றனர்.

ஆனால் பாஜகவும் அதன் போர்வைக்குள் ஒளிந்திருக்கும் அமைப்புகளும் எதிர்ப்பதன் அடிப்படை வேறு. வள்ளலார் சனாதனத்தின் உச்ச நட்சத்திரம் என வள்ளலார் குறித்த எந்த அடிப்படை அறிவும் இல்லாத தமிழகத்தின் ஆளுநர் பேசியதை ஆதரிப்பவர்கள் இவர்கள்.

ஜீவ ஒழுக்கமாவது ஆண்மக்கள், பெண் மக்கள் முதலியவர்கள் இடத்திலும் சாதி, சமயம், மதம், ஆசிரமம், சூத்திரம், கோத்திரம், குலம், சாஸ்திர சம்பந்தம், தேச மார்க்கம், உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்னும் பேதம் நீக்கி எல்லாரும் நம்மவர்களாகச் சமத்தில் கொள்ளுவது” (வள்ளலார் எழுதிய ஆறாம் திருமுறை உரைநடை பகுதி) சனாதனத்திற்கு எதிராக இத்தனை அழுத்தமாக எழுதிய வள்ளலாரைத்தான் சனாதனத்தின் உச்ச நட்சத்திரம் என்று கூறி இந்துத்துவ அமைப்புகள் அவரை தன்வசப்படுத்த முயல்கின்றன.

தற்போது அப்பகுதியை ஆய்வு செய்யும் மாநில தொல்லியல் துறை அதிகாரிகள் மீது நம்பிக்கையில்லை என்பதால், மத்திய தொல்லியல் துறை அதிகாரிகள் கொண்ட குழுவை அமைத்து ஆய்வு செய்ய வேண்டும்என வழக்கு தொடர்ந்து மத்திய அரசின் பக்கம் பிரச்சனையைத் தள்ள இந்துத்துவ அமைப்புகள் முயல்கின்றன. மாநில அரசு உருவாக்கும் சர்வதேச மையம் தங்கள் திரிபுவாத கருத்துக்கு எதிராக இருக்கும் என்பதால் வடலூரில் சர்வதேச மையம் அமையக்கூடாது எனக் கூப்பாடு போடுகின்றனர். அதற்குப் பெருவெளியைக் காரணமாய் முன்வைக்கின்றனர்.

1867 ஆம் ஆண்டு பார்வதிபுரம் கிராமத்தைச் சேர்ந்த 47 நபர்கள் 105 ஏக்கர் நிலத்தை வள்ளலாருக்குத் தானமாகக் கொடுத்தனர். அங்குதான் சத்திய ஞான திருச்சபை அமைந்துள்ளது. தைப்பூச காலங்களில் லட்சக்கணக்கில் கூடும் பக்தர்களுக்கு எந்தத் தொந்தரவும் இருக்கக்கூடாது என்பதற்காக அந்தப் பெருவெளியில் எந்த கட்டுமான நிகழ்வும் நடத்தக் கூடாது என்று வள்ளலார் கூறியிருப்பது உண்மைதான்..

ஆனாலும், பெருவெளியில் சமரச வேத தருமசாலையைச் சேர்ந்த வைத்திய சாலை, சாஸ்திர சாலை, உபகாரச்சாலை, விருத்தி சாலை, உபாசனாசாலை, யோகசாலை, விவகாரச் சாலை - இவற்றைக் குறித்து சமரச வேத சன்மார்க்க சங்கத்தவர்கள் ஏற்படுத்திக்கொண்ட கையொப்ப ஏற்பாடு (திருவருட்பா உரைநடை பகுதி, பக்கம்: 622. 3.கிளைச் சாலைகள் 1867 தலைப்பில்) என்பதைக் கவனிக்கத் தவறுகின்றனர். அல்லது மறைக்கின்றனர்.

நூலனிந்து வேத சடங்குகளின் போதும் உச்சரிக்கும் காயத்திரி மந்திரம் இங்கு இல்லை. அதற்கு மாற்றாக மகா மந்திரம், கோவில் - சிலைவழிபாடு - கருவறை இல்லை, அனைவரையும் சமமாக மதிக்கும்ஞானசபை’. ஆதிசங்கரர் சுமந்த காவிக் கொடிக்குப் பதிலாக வெள்ளை நிறக்கொடி. அவர் வாழ்ந்த 19 ஆம் நூற்றாண்டில் நிலவிய தீண்டாமை உள்ளிட்ட சமூக கொடுமைகளுக்கு எதிரான கிளர்ச்சி எல்லாம் சேர்ந்ததுதான் சுத்த சன்மார்க்கமாகும்.

வடலூரில்மற்றவர் பசியை ஆற்ற முயல்பவர் புண்ணியர்கள், அவர்கள் எல்லாத் தெய்வங்களுக்கும் மேலானவர்கள்என்று கூறிய வள்ளலார் வழியில் நடைபெறும் சன்மார்க்க வழிபாட்டைக் கெடுக்கத் தொடர்ந்து முயற்சிகள் நடந்து வருகிறது. 18 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு இந்துத்துவ வாதிகள் எடுத்த முயற்சி முறியடிக்கப்பட்டது முக்கிய நிகழ்வாகும்.

சத்தியஞான சபையில் உருவ வழிபாடு கூடாது

வள்ளலாரின் கொள்கைக்கு மாறாக அங்குச் சிவலிங்கம் போன்ற சிலைகளை வைத்து இந்துத்துவ அமைப்புகள் உருவ வழிபாடு நடத்தியதை எதிர்த்து தொண்டர் குல பெருமாள் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். கடந்த 2006-ம் ஆண்டு அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மனுதாரரின் கோரிக்கையைப் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டது.

வள்ளலார் கடந்த 1872-ம்ஆண்டு வகுத்த வழிபாட்டு விதிகளின்படி சத்தியஞான சபையில் உருவ வழிபாடு கூடாது. அங்கு ஜோதி தீபம் மட்டுமே காட்டப்பட வேண்டும். வேதம், ஆகமம், இதிகாசம், புராணம், சைவம், வைணவம், வேதாந்தம், சித்தாந்தம் போன்ற மதம் சார்ந்த நடவடிக்கைகளில் லட்சியம் வைக்க வேண்டாம் என வள்ளலார் கூறியுள்ளார். சத்தியஞான சபை வள்ளலாரால் உருவாக்கப்பட்டது என்பதால், அவர் வகுத்த சட்டதிட்ட நெறிமுறைகளின்படியே அந்த சபை நடத்தப்பட வேண்டும். என இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டது.

இந்து அறநிலையத்துறையின் அந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். 2010-ம் ஆண்டு அந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே.சந்துரு, “வள்ளலாரால் உருவாக்கப்பட்ட சத்தியஞான சபையில் வள்ளலாரின் கோட்பாடுகளுக்கு எதிராக உருவ வழிபாடு கூடாது. இதுதொடர்பாக அற நிலையத் துறை பிறப்பித்த உத்தரவு சரியானதுதான்என்று கூறி, அந்த வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். (திரு சபாநாத ஒளி சிவாச்சாரியார் vs  ஆணையர் - திரு. நீதிபதி கே.சந்துரு. W.P NOs. 22886 and 22887 of 2007 and M.P NOs.1, 2,1 & 2 of 2007)

அந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் டி.ராஜா, டி.வி.தமிழ்ச்செல்வி அடங்கிய அமர்வும்வடலூர் வள்ளலார் சத்தியஞான சன்மார்க்க சபையில் உருவ வழிபாடு கூடாது என்ற தனி நீதிபதியின் உத்தரவு செல்லும். அது தொடர்பான இந்து அறநிலையத் துறையின் உத்தரவும் செல்லும்என்று தீர்ப்பளித்தனர். (W.A.Nos 2262 & 2263 of 2011)

வள்ளலாரின் சுத்த சன்மார்க்க கொள்கையைத் திரித்து, அவரை ஒரு சனாதனவாதி என்று மத அடிப்படைவாதிகள் கட்டமைக்க முயற்சி செய்யும் நேரத்தில் அவரது உண்மையான சமூகப் பார்வையை, சமரச சுத்த சன்மார்க்க நெறிகளை, அதன் கொள்கைகளை உலகிற்கு அறிவிக்கும் வகையில் அவர் நினைவாக ஒரு சர்வதேச மையத்தை வடலூரில் அமைக்கத் தமிழக அரசு எடுத்த முயற்சியை வரவேற்பது அவசியமாகிறது.

ஆதரிப்போரில் இருவகை

தி.மு. அரசு அறிவித்த காரணத்தினாலேயே இதை ஆதரிக்க வேண்டும் எனப் பலர் ஆதரித்து வருவதும். மாற்றுக் கருத்துச் சொல்வோரை வள்ளலாருக்கு எதிரானவர்களாகவும், சர்வதேச மையம் வர விரும்பாதவர்கள் போல சித்தரிப்பதும் நடந்தேறி வருகிறது. தைப்பூசத்தின் போது கொடியேற்றும் உரிமை பார்வதிபுரம் மக்களுக்கும், பல்லக்கைச் சுமக்கும் உரிமை கருக்குழி உள்நாட்டு மீனவ மக்களுக்கும் வழங்கியது வள்ளலார்தான். நிலம் கொடுத்த பார்வதிபுரம் மக்களுக்கு அவர் கொடுத்த முதல் மரியாதை இது. சர்வதேச மையம் அமைக்க அவர்களின் கருத்துக் கேட்பதுதானே முறை!

மிக சிறந்த சீர்திருத்தவாதியான வள்ளலார் அவர்களுக்கு வடலூரில் சர்வதேச மையம் அமைப்பது மிகச்சிறந்த வரலாற்றுப் பணி, ”நாம் முன் பார்த்தும் கேட்டும் லட்சியம் வைத்துக் கொண்டிருந்தவிதம், ஆகமம், புராணம், இதிகாசம் முதலிய கலைகள் எதனினும் லட்சியம் வைக்க வேண்டாம். ஏனென்றால் அவைகளில் ஒன்றிலாவது குழூஉக்குறி யன்றித் தெய்வத்தை இன்னது என்றும் தெய்வத்தினுடைய உண்மை இன்னாதென்றும் கொஞ்சமேனும் புறங்கவியச் சொல்லாமல் மண்ணை போட்டு மறைத்து விட்டார்கள்என்று சொன்ன வள்ளலாரைச் சனாதனிகள் மறைக்கத் துடிக்கும் வேலையில் அவரது உண்மை நெறியை உலகிற்கு உரத்துச் சொல்ல அவரது அறநெறியைப் பரப்ப இந்த மையம் உதவும்.

வடலூரில் உள்ள மக்களின் கருத்துக்களுடன் ஒத்துழைத்து சர்வதேச மையத்தின் பணி செல்ல வேண்டும். பெருவெளியில் மையம் வேண்டாம் எனப் போராடிய மக்கள் மீது வழக்கிடுவதற்குப் பதிலாகப் பெரு வெளிக்குச் சொந்தமான 45 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து வைத்துள்ளோர் மீது வழக்குகள் போட வேண்டும். 157 ஆண்டுகளுக்கு முன் வள்ளலாரால் உருவாக்கப்பட்ட சபையின் முகப்பு கடலூர் - விருத்தாசலம் சாலையில் செல்வோருக்குத் தெரியும் வகையில் தொடர்ந்து இருந்திட, இப்போதுள்ள சபையில் மேற்கு பகுதியில் சர்வதேச மையம் அமைதல் நலம்.


----------------------------------------------------------------------------------------------------------------------

கட்டுரையாளர் : எஸ்.ஜி.ரமேஷ்பாபு, சிபிஐ(எம்) மாநிலக்குழு உறுப்பினர்

13.05.2024 அன்று *தீக்கதிர்* நாளிதழில் வெளியான கட்டுரை


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக