அந்த கிராமத்தின் பெயர் வெய்யலூர். அக்கிராமத்தின் தலித் பகுதியில் யாராவது மரணமடைந்தால் பிணத்தை ஊரினுள் எடுத்துச்செல்ல அனுமதி இல்லை. வயல்வெளியில் இறங்கிதான் எடுத்துச்செல்ல வேண்டும். மழைக் காலத்தில் யாராவது இறந்தால் வயல்வெளியில் தண்ணீரில் இறங்கிச்செல்ல முடியாதே? இருக்கட்டும் தண்ணீர் வடிகின்றவரை பிணத்தை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள்! இதுதான் அந்த ஊரின் வழக்கமாக இருந்து வந்தது. ஒரு மழைக்காலத்தில் கர்ப்பிணி பெண் ஒருவர் இறந்துப் போக பிணத்தை ஊருக்குள் அனுமதிக்க முடியாது என மறிக்கின்றனர். எந்த சாதி ஆதிக்க வெறியர்கள் அனுமதி மறுத்தார்களோ அதே சமூகத்தைச் சேர்ந்த ஒரு மனிதநேய உள்ளம்இத்தகவலை மார்க்சிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்ட அலுவலகத்திற்குச் சொன்னது. கட்சியின் அன்றைய மாவட்ட செயலாளரும், இன்றைய கட்சியின் மத்திய குழு உறுப்பினருமான கே. பாலகிருஷ்ணன், செங்கல்மேடு ஜி.கலியபெருமாள், பண்ணப்பட்டு ஏ. கணபதி உள்ளிட்டோர் தலைமையில் நூற்றுக்கணக்கான தோழர்கள் திரண்டு அக்கிராமத்திற்கு சென்றனர். சவ ஊர்வலம் தயாரானது.
ஊருக்குள் தலித் பிணத்தை அனுமதிப்பதில்லை என சாதி வெறியர்கள் திரண்டு நின்றனார். மனித நாகரீகத்தின் அநீதிக்கெதிரான போர்க்களத்தில் செங்கொடி எப்போது பின்வாங்கியது? ஒரு கையில் செங்கொடியை உயர்த்தி, மற்றொருகையில் பாடையைச் சுமந்தனர் மார்க்சிஸ்ட் தலைவர்கள். தோழர்கள்கள் புடைசூழ ஊர்வலம் ஊருக்குள் புகுந்தது. ஆயுதங்களுடன் நின்றவர்கள் மெல்ல மெல்லப் பின் வாங்கினர். காரணம் பாடையை சுமந்து, அதற்கு பாதுகாப்பு அரணாக வந்தவர்களில் அவர்களுடைய சாதியைச் சேர்ந்தவர்களும் அரணாக வந்துகொண்டிருந்தார்கள். ஆம். அந்த அதிசயம் நடக்கதான் செய்தது. அவர்கள் சாதி உணர்வுகளை கடந்த மார்க்சிஸ்ட்டுகள். அப்பகுதி விவசாயிகளின் பிரச்சினைக்காகவும், பிற்படுத்தபட்ட மக்களின் நலனுக்காவும் இதே செங்கொடியும், இதே தலைவர்களும் பல போராட்டங்களை நடத்தியதை அம்மக்கள் அறிந்து வைத்திருந்தார்கள். இதுதான் செங்கொடியின் பாரம்பரியம்.
இம்மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக சாதி கவுரவத்தின் பெயரால் கொலைகள் நடப்பதும், சாதி மறுப்பு திருமணம் செய்பவர்கள் மிரட்டப்படுவதும், தாக்கப்படுவதும் அதிகரித்து வருகின்ற சூழலில்தான் மார்சிஸ்ட் கட்சி ஆணவக் கொலைகளுக்கு எதிரான மாநாட்டை இன்று (செப்.29) கடலூரில் நடத்துகிறது. சாதியின் பெயரால் ஆண்டாண்டுகாலமாக ஒடுக்கிவைக்கப்பட்ட மக்கள் திரள் தங்களின் உரிமையை பல வழிகளில் மீட்க எழுகின்றபோது அவர்களுடன் நின்று ஆதரவளிப்பதுதான் ஜனநாயக இயக்கங்களின் கடமையாகும்.ஆனால் சாதிய மோதல்கள் நடக்கும்போதெல்லாம் தமிழகத்தை ஆண்ட கட்சியும் சரி, ஆளும் கட்சியும் சரி கண்களை இறுக்க மூடிக்கொள்கின்றன. பிரச்சனையில் பங்கெடுக்கும் இயக்கங்களை தவிர மற்ற அனைத்து முதலாளித்துவ கட்சிகளும் அமைதியாகவே இருக்கின்றன. ஊருக்குள் வரும் தேரைக் கொளுத்தினாலும் சரி, அல்லது சேரி என்றழைக்கப்படும் ஊரையே கொளுத்தினாலும் சரி அதை சாதி ஆதிக்க தாக்குதலாக பார்க்காமல் “சாதி கலவரம்“ என்றே சொல்கிற ஊடகங்கள் பொதுவிவாதத்தை தூண்ட மறுக்கின்றன.
இதற்குபின்னால் சாதிய சமூகத்தின் வன்மம் மறைந்துள்ளது. “அதுசரி அவன் ஏன்யா ஊருக்கார பொண்ணைக் காதலிக்கிறான்,” என்ற கேள்வியில் ஒளிந்திருப்பது என்ன விதமான உணர்வு? தன் மகன் எதிர்கால தமிழக முதல்வராகவே மாறிவிட்ட கனவில் இருக்கும் அய்யாஅவர்கள் “தலித் இளைஞர்கள் கூலிங் கிளாஸ் அணிந்தும், டி சர்ட், ஜீன்ஸ் அணிந்தும்தங்கள் சாதி பெண்களை கவர்கிறார்கள்,” என்று கூறியதன் வேறுவகை வெளிப்பாடுதானே? அறிவியல் தொழில்நுட்பமும், நாகரீகம் வளர்ந்த காலத்தில் இளைஞர்கள் பழகுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ள சூழலில் கொஞ்சமேனும் நம்பிக்கை அளிக்கும் சாதி மறுப்பு திருமணங்களை குற்றமாகவும், அந்த திருமணங்களை எற்றுக்கொள்ளும் பெற்றோர்களை குற்றவாளிகளாகவும் உணரவைக்கும் நிலையை மாற்ற வேண்டாமா? தன் சமூக பெண்ணை காதலித்த குற்றத்திற்காக கோகுல்ராஜின் தலையை அறுத்தெரிந்ததற்காகத் தேடப்படும் நபர் வாட்ஸ் அப்பில் தினமும் காவல்துறைக்கு ஆணை பிறப்பிக்க முடிகிறது!
கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரித்த டி.எஸ்.பி. விஷ்ணு பிரியாவின் மரணத்திற்கு ஆதாரம் கொடுப்பதாக தன்னை தியாகியாக்கிக் கொள்ள குரல் பதிவை அனுப்ப முடிகிறது! படை பல பராக்கிரமம் பொருந்திய தமிழககாவல்துறையோ வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. சாதி ஆணவக் கொலைகளை தடுத்துநிறுத்த அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றால் நிச்சயமாக இந்த வன்முறை அதிகரிக்கவே செய்யும். சமூக சீர்த்திருத்த தலைவர்கள் வாழ்ந்தமண் என பெருமிதம் பேசிக்கொண்டிருப்பதில் மட்டும் பயன் இல்லை. அரசு இயந்திரத்தின் அடிமுதல் நுனிவரை புரையோடிப்போய் உள்ள சாதி உணர்வை கலைந்திட அறிவியல்பூர்வமான நடவடிக்கையும் அணுகுமுறையும் தேவை. தமிழகத்தை ஆள்பவர்களும் ஆண்டவர்களும் தங்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் தேர்விலேயே சாதிபார்க்கும்போது அதிகாரம் கையில் இருக்க சாதியத்தின் ஆணிவேரை அல்ல அதன் நுனியைக்கூட சாய்க்கப்போவதில்லை.
ஒன்றுபட்ட மக்கள் இயக்கம் மட்டுமே அரசு எந்திரத்தை நடவடிக்கை எடுக்கவைக்கும்.இந்திய நாடு முழுவதுமே சாதி அணவக் கொலைகளை எதிர்த்து போராடிவரும் மார்க்சிஸ்ட் கட்சி பொது சமூகத்திற்குவேண்டுகோள் விடுக்க இந்த மாநாட்டைநடத்துகிறது. பொதுச் செயலாளர் சீத்தாரம் யெச்சூரி கலந்துகொள்ளும் இம்மாநாடு, இப்போதே இப்பிரச்சினையை பரவலான மக்களின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளது.மக்களிடையே விவாதத்தையும் தூண்டி விட்டுள்ளது. அந்த விவாதம் விரிவடைய, சமுதாய மனசாட்சி விழிப்படைய “சாதி ஆணவக் கொலைகளுக்கு எதிராக இணைந்து நிற்போம் வாரீர்” என அனைத்து சமூக மக்களையும் அறைகூவி அழைக்கிறது மாநாடு.
29அன்றைய தீக்கதிர் நாளிதழில் வெளியான எனது கட்டுரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக