சனி, 28 பிப்ரவரி, 2015

ஜானகி: மலேஷியாவில் உருவான புயல்

விடுதலைப்போரில் பெண்கள் - 18
         



                                                                                                                             
               1931 ஆம் ஆண்டு, மார்ச்சில் காந்தி - இர்வின் ஒப்பந்தம் கையெழுத்தானதும் காந்தி பின் வருமாறு அறிவித்தார்: ''ஒரு காலம் கடந்துச் சென்றுவிட்டது, புதியகாலம் தொடங்கிவிட்டது. சட்ட மறுப்பு இயக்கமும், சிறை செல்வதும் அல்லது நேரடி நடவடிக்கையும் உடன்பாட்டிற்கு முன்பு பின்பற்றப்பட வேண்டிய முறையாக இருந்தது. அதன் பிறகு விவாதமும் பேச்சு வார்த்தையும் அதனிடத்தை எடுத்துக்கொண்டன"''.  இதைவிட தெளிவாக குஜராத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் சொன்னார் ''நேரடி நடவடிக்கையின் சாயல் கொண்ட அனைத்தும் நிராகரிக்கப்பட்டு, பேச்சுவார்த்தைகள், விவாதங்கள், பேரங்கள் மூலம் பெற்றுவிடலாம். சட்டமறுப்பு இயக்கத்தை நிறுத்தி வைத்ததன் மூலம் இபொழுது நாம் ஒழுங்கு கட்டுப்பாடு  கொண்ட கீழ்ப்படிதல் என்ற காலகட்டத்துள் வந்துள்ளோம்.'' ( இந்தியாவில் பிரிடிஷ் ஆட்சி 1919 - 1947. பக் 34)

               1946 பிப்ரவரி 15  மவுன்பேட்டனுக்கு முன்பு இந்தியாவின் வைஸ்ராயாக இருந்த வேவல் தனது நாட்குறிப்பில் இப்படி எழுதியுள்ளார். '' அது ஒரு எச்சரிக்கை நாளாக இருந்தது: சுற்றுலா நாளாக இல்லை. இந்திய தேசிய ராணுவத்திடம் சரணடைவதைப் பற்றி கூறிய போர்ட்டரை பார்த்தேன். அஞ்சல் துறை வேலைநிறுத்தம் தொடர்பாக பெவூரைச் சந்தித்தேன். இந்திய விமானப்படைக் கலகம் தொடர்பாக கார் அவர்களைச் சந்தித்தேன். இரயில்வே வேலைநிறுத்தம் தொடர்பாக கிரிபின், கான்ரன் ஸ்மித் ஆகியோரை சந்தித்தேன். இறுதியாக இவை எல்லாவற்றுக்கும் உட்சபச்சச் சோகமாக பம்பாய் இராயல் இந்தியக் கலகத்தைப் பற்றியும், இந்திய தேசிய இராணுவம் தொடர்பான வழக்கு விசாரணை குறித்தும் தலைமை தளபதியைச் சந்தித்தேன்'' ( இந்தியாவில் பிரிடிஷ் ஆட்சி 1919 - 1947., பக் 399.)

               மகாத்தமா காந்தியின் நிலைபாடு எப்படி யதார்த்ததிற்கு மாறாக இருந்தது என அவர் அறிவித்த 14 ஆண்டுகள் கழித்து வேல்ஸ் நாட்குறிப்பு எளிதாய் புரிய வைத்திருக்கும். உண்மை நிலையும் அதுதான். கன்னத்தை திருப்பி காட்ட இருந்த கூட்டத்திற்கு நிகராக, திருப்பித் தக்கவும் பெருங்கூட்டம் தயாராக இருந்தது. காங்கிரசும் காந்தியும் மட்டும் இந்திய விடுதலைப் போராட்டத்தின் பாதயை தீர்மாணிக்கவில்லை. இந்தியாவின் விடுதலை போராட்ட பாதைகள் பல்வேறு தடங்களில் பயணித்தது. காங்கிரஸ் கட்சி, புரட்சிகர கம்யூனிஸ்டுகள், தீவிர புரட்சிகர அமைப்புகள், சுபாஷ் பாபுவின் இந்திய தேசிய ரணுவம்இஸ்லாமிய அமைப்புகள், சமூக விடுதலை, சாதிய ஒடுக்குமுறை, பெண் விடுதலை இல்லாத விடுதலை எங்களுக்கு வேண்டாம் என்ற சீர்த்திருத்த அமைப்புகள், நிலத்திற்கான தெலுங்கானா போராட்டம் என பலவடிவங்களில் பிரிடிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நின்ற சூழல் தேசத்தில் இருந்தது.    

               இந்திய தேசிய ராணுவம் அமைத்த சுபாஷ் சந்திர போஸ் அதன் யுத்த தந்திர வடிவமைப்பிலும், போராட்ட திட்டமிடலிலும், அணி திரட்டலிலும் இருந்தார். அவர் சென்ற இடமெல்லாம் மக்கள் திரண்டனர். மலேஷியாவில் இருந்த இந்தியர்களைச் சந்தித்து இந்தியாவின் விடுதலைக்குத் தங்களால் இயன்றதை வழங்குமாறு கேட்டுக் கொள்ள விரிவான சுற்றுபயணம் மேற்கொண்டார். அங்கு அவர் சென்ற இடமெல்லாம் இந்தியர்கள் திரண்டனர். அவர் பேசிய இடங்களிலெல்லாம் தமிழர்கள் தங்கள் வீடுகளில் இருந்த நகைகளை எல்லாம் எடுத்துக் கொடுத்தனர் அப்போது அங்கிருந்த ஒரு இளம் பெண் உடனே சற்றும் தாமதிக்காமல் தான் அணிந்திருந்த தங்கக் கம்மல்களைக் கழற்றிக் கொடுத்தார், அப்படி அந்த இளம் பெண் தனது நகைகளை கொடுத்திட அவருக்கான ஒரு அரசியல் பின்னணி இருந்தது. இளம் வயதில் பெருமைமிகு அரசியல் பின்னணியுடன் இருந்த அந்த பெண்ணின் பெயர் ஜானகி ஆதி நாகப்பன்.

                              1946 ஆகஸ்ட் மாதம் மலேசிய இந்தியர் காங்கிரஸ் தொடங்கப்பட்டபோது அது இந்தியாவின் சுதந்திரத்திற் காகவும், இந்திய தேசிய இராணுவத்திற்காகவும், சிறைக்குச் சென்றவர்களை மீட்பதற்காகவும் சேவை செய்ய பிறந்த கட்சியாகவே இருந்தது. மலேசிய இந்தியர்களை வழிநடத்த ஓர் அரசியல் அமைப்புத் தேவை என்று அப்போதைய சுதந்திரப் போராளிகள் முடிவு எடுத்தனர். எனவே அப்போது மிகச்சிறந்த வாய்ப்பாக கிடைத்த இந்தியத் தேசிய இராணுவத்தில் சேர்ந்து சேவையாற்றுவது என முடிவு செய்தனர். அத்தகைய தேசப்பற்றுமிக்க மலேசிய காங்கிரஸ் இயக்கத்தில் தன்னை இளம் வயதிலேயே இணைத்துக் கொண்டவர் ஜானகி.

               அதன் விளைவாக தனது நகைகளை மட்டுமல்ல தனது வாழ்வையும் இந்திய தேசிய ராணுவத்திற்கு அர்ப்பணிக்க அவர் தயாரானார். அவருடைய குடும்பத்தில் இருந்த யாரும் இதை விரும்பவில்லை. இந்திய விடுதலையை விரும்பினார்கள். ஆனால் அதற்காக தனது குடும்பத்திலிருந்து ஒருவரை அதுவும் இளம் பெண்ணை அனுப்ப அவர்கள் விரும்பவில்லை. அவரது குடும்பத்தில் பலமான எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக, ஜானகி தந்தையாருக்கு இது மொத்தமாய் பிடிக்கவில்லை. ஜானகி ஆதி நாகப்பன் பிடிவாதமாக இருந்து இறுதியில் பெற்றோர்களின் சம்மதத்தைப் பெற்றார்.

               இந்திய தேசிய இராணுவத்தில் முதன்முதலில் சேர்ந்த மலேஷியப் பெண்களில் ஜானகியும் ஒருவர். ஆனால் அவர்களுள் அவர் மிக முக்கியமான ஆளுமை நிறைந்தவர். வசதியான குடும்பத்தில் பிறந்து சொகுசான வாழ்க்கை வாழ்ந்தவர். முதல் நாள் படையில் கொடுக்கப்பட்ட உணவைப் பார்த்து ஜானகி மிரண்டு போநது மட்டுமல்ல, கண்கள் கலங்கவும் செய்தார். ஆனால் மனம் கலங்கவில்லை. ஜானகி போர்ப்படையின் கடுமையான விதிகளுக்கும், கட்டுப்பாடுகளுக்கும், நெறி முறைகளுக்கும் தன்னை முழுமையாக உட்படுத்திக்கொண்டார். வலி மிகுந்த வாழ்க்கை அது. ஆனால் மனவைலிமை அவரை எழுச்சியுற செய்தது. எதற்கும் ஈடு கொடுக்க முடியும் என நம்பினார். இராணுவ வாழ்வில் தொடக்க காலத்தில் மிகவும் அவதியுற்றாலும், அவர் சோர்ந்துவிடவில்லை.

`              1946 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 3, 4, 5 ஆம் தேதிகளில் நடைபெற்ற ம.இ.கா. அமைப்புக் கூட்டத்தில் கலந்து கொண்ட டான்ஸ்ரீ ஆதி நாகப்பனுக்கும் இவருக்கும் அறிமுகம் ஏற்பட்டது. போர்க்களம் காதலை எப்போதும் புறம்தள்ளியதில்லை. போர்க்களத்தில் இரு இதயங்கள் அன்பு கொண்டன. அது காதலாய் மலர்ந்தது. தோழமைகள் புடைசூழ, எதிகாலம் கடுமாயான சவால்கள் நிறைந்தது எனத்தெறிந்தே  இருவரும் 1949 இல் திருமணம் செய்துக்கொண்டனர்.

               காலப் போக்கில் இராணுவ வாழ்க்கை ஜானகியிடம் குழந்தைப் போல பழகிப்போனது. அவரது அர்பணிப்பும், தேச பக்தியும், மக்கள்: மீதான அன்பும் ராணுவத்தில் இருந்த அனைவரையும் ஈர்த்தது. படை அதிகாரிகளுக்கான முக்கிய தேர்வில் ஜானகி முதல் நிலையில் தேர்ச்சிப் பெற்றார். அதன் விளைவாக பின்னர், இந்திய தேசிய இராணுவத்தின் முதல் பெண்கள் படைப் பிரிவான ஜான்சி ராணிப் ரெஜிமெண்டில் துணைத் தளபதியாகப் பொறுப்பேற்றார். ஜான்சிராணிக்கு ஒரு ஜல்காரிபாய் போல கேப்டன் லட்சுமிக்கு பின்பலமாய் இவர் களமாடினார். .

               பெண்கள் ஆயுதம் ஏந்திய ஜான்சி ராணிப் படைக்குத் துணைத் தளபதியாகப் பதவி ஏற்ற ஜானகி ஆதி நாகப்பன், பர்மா-இந்தியா போர் முனையிற் போரில் ஈடுபட்டார். போர்களம் மேலும் உறுதிக்கொள்ளச் செய்தது. கடுமையான தாக்குலில் காயம் அடைந்து குணம் அடைந்தார். விடுதலைக்கு பின்னாளில் அவர் ஜான்சி ராணிப் படையைப் பற்றி அனுபவ குறிப்புகளை கொண்டு ஒரு நூலையும் எழுதியுள்ளார்

               இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தில் அவரின் அரிய சேவைகளைப் பாராட்டி இந்திய அரசாங்கம் மிகவும் தாமதாமக பத்மஸ்ரீ விருதை வழங்கி கௌரவித்தது. 1997ஆம் ஆண்டுதான் இவ்விருது கொடுக்கப்பட்டது. இந்தியாவின் பத்மஸ்ரீ விருதைப் பெறும் முதல் மலேசியர் எனும் பெருமையும் இவரையே சாரும். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஜானகி ஆதி நாகப்பன் சமூக பொதுச் சேவைகளிற் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டார். இன்னொமொரு முக்கியமான தகவல் 1946ஆம் ஆண்டு, மலேசிய இந்திய காங்கிரசின் முதற் தலைவர் ஜான் திவியுடன் இணைந்து மலேசிய இந்திய காங்கிரஸ் அமைப்பை உருவாக்கியவரும் இவரே.
               மலேசிய இந்திய காங்கிரஸ் சார்பில் மலேசிய நாடாளுமன்றத்தின் மேலவை உறுப்பினராக 1980 ஆம் ஆண்டில் பொறுப்பேற்றார். அந்தப் பதவியை 1986 ஆம் ஆண்டு வரை ஆறு ஆண்டுகள் வகித்தார். விடுதலைக்கு பின்பு மலேசிய நாடாளுமன்றத்தின் மேலவையில் இடம் பெற்ற முதல் இந்திய வம்சாவளிப் பெண்மணி இவர்தான். அவரது காதல் கனவன் டான்ஸ்ரீ ஆதி நாகப்பனின் அரசியல் ஈடுபாட்டிற்கும் பொதுப் பணிகளுக்கும் தொடக்க காலத்தில் இருந்து பேருதவியாக ஆத்மபலமாய் இருந்து வந்தார். இவருடைய கணவரின் பெயரில் ஆண்டுதோறும் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் டான்ஸ்ரீ ஆதி நாகப்பன் இலக்கிய விருது வழங்கப்பட்டு வருகிறது. மலேசியாவில் மிகச் சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு அந்த விருது வழங்கப்படுகிறது. விடுதலைக்கு பின்பு பல ஆண்டுகள் மக்கள் சேவையில் தன்னை அற்பணித்துக்கொண்ட கேப்டன் லட்சுமியின் பரம்பரை இவர் என நிருபனம் செய்த இவரைப்போல இன்னும் பலரை சந்திக்கலாம்.

                                                                                                                             (தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக