புதன், 12 செப்டம்பர், 2012

சாதியம் சுமக்கும் பெண்ணுடல்



கௌரவக் கொலைகள் - சாதியத்தின் கோர முகம்

நெடுந்துயர் சுமக்க தன்னை நீண்ட கடுந்துயர்ப் பயணத்திற்குத் தயார்ப்படுத்திக் கொண்டவள். பதினான்காண்டுகள் கடுமையாக அலைக்கழிக் கப்படுவோம் எனத்தெரிந்தே வனாந்தரத்தின் ஆழத்தில் இறங்கியவள். கணவன் இராமனை நம்பிச்சோதனைகளை உதட்டின் மெல்லிய சுழிப்பால் புறம் தள்ளிப் பின்தொடர்ந்தவள். இரவணனின் அசோகவனத்தில் நம்பிக்கைக் கனவுகளைச் சுமந்து மீட்கும் நாளுக்காகப் பிரிவுற்றிருந்தவள். கடுமையான தருணங்களைப் பலகாலம் சுமந்தவள். அப்போதெல்லாம் படாத மனவலியை இந்தக் கணப்பொழுதில் அனுபவித்தாள். நடப்பது துர்சொப்பனத்தின் தொடர்ச்சி என நினைத்தாள். பிரிவு முடிந்து வாழ்வின் வசந்தத்தை மீட்கும் நேரம்..  சந்தேகத்தின் பெயரால் தீயின் முன் நின்றாள். 

இராவணனின் நிழல் தீண்டாத இராவணச் சிறையில் இராமன் நினைவில் மூழ்கித் திளைத்ததால் பசலை படர்ந்த உடலில் வியர்வை வழிய, நீயும்தான் என்னைவிட்டு பிரிந்திருந்தாய் ஆகவே இருவரும் சோதனையில் இறங்கலாமா? போன்ற ஆயிரம் கேள்விகளைத் தீ படர்ந்த கண்களில் தேக்கி ராமனை நோக்கினாள். அவள் பார்வையின் வெம்மை தாளாமல் நிலம் நோக்கிக் குனிந்த ராமன் நசுங்கிய குரலில் சொன்னான் (மனு) தர்மத்தைக் காக்க, ராஜ குடும்பத்தின் கௌரவம் காக்கப்பட தீயில் நீ இறங்கத்தான் வேண்டும் ஜனகனின் மகளே!

தனது பிறப்பின் பயனே வர்ணங்களைக் காப்பதுதான் என சம்புகனின் உயிரைக் கொய்து நிரூபணம் செய்த இராம கதை இது. வர்ண தர்மத்தின் இராஜ நீதி காக்க, இப்போதும் இதைக் கட்டிக்காக்க கடவுள் இராமன் சீதையைத் தீயில் இறங்க செய்தது சரியே எனப் பட்டிமன்றங்களில் சிகை பிளக்கும் வாதங்களை முழங்கிக்கொண்டே இருக்கின்றனர். கௌரவத்தின் பெயரால் பலியெடுப்பதும் பலிகொடுப்பதும் சமூகத்தின் பொதுப்புத்தியில் கடவுளின் பெயராலே பதிய வைக்கப்பட்டுள்ளது.அத்தகைய சமூகமாய் நமது சமூகம் விளைவிக் கப்பட்டுள்ளது. 

விளைவின் அறுவடையாய் வர்ணங்களைத் தோற்றுவித்த மத கௌரவம், வர்ணங்களின் பிரிவுகளான சாதி கௌரவம், சாதிகள் கட்டிக் காக்கும் குடும்ப கௌரவம் என விஸ்தாரமாய் வளர்ந்து மனித உயிர்களைப் பலிவாங்கிக் கொண்டே இருக்கிறது. அதிலும் குறிப்பாக இப்போது  சாதியங்கள் கட்டிக்காக்கும் குடும்ப அமைப்பே அதிவேகமாய்க் காவுகளைக் கேட்கிறது. இன்னொரு பக்கம் ஒவ்வொரு குடும்பத் திலும் பெண்கள் தலித்துக்களாகவே நடத்தப் பட்டார்கள் என்பதை, 1829 வரை கனவன் இறந்த பின்னும் அவனது கௌரவத்தை நிலைநாட்ட உடன்கட்டை ஏறும் வழக்கம் இருந்த மண் இது என்பதையும் சேர்த்தே புரிந்துக்கொள்ள வேண்டியுள்ளது.

அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியுடன் வளர்ந்த நாகரிகத்தின் உச்சத்தில் மனித சமூகம் இருப்பதாக நம்பப்படும் இக்காலத்திதான் இந்த அவமானம் தொடர்கிறது. இளம் காதலர்களின் உயிர்களை முந்திரி மரத்தில் கட்டிவைத்து ஊரே சேர்ந்து நின்று விறகுகளை அடுக்கி உயிரோடு எரிக்கும் கொடூரத்தை எப்படி ஏற்பது? அவர்கள் செய்த குற்றம் சாதிமறுப்புத் திருமணம் செய்ததுதானெனில் நமது சமூகம் நாகரிக சமூகம் என கம்பீரமாக முழங்கும் முகத்தை எங்கு வைத்துக் கொள்ளும்? சாதி மறுப்புத் திருமணம் இப்படியெனில் பொருளாதாரத் தாழ்வுற்ற காதல் திருமணங்களை ஏற்காமல் கொலை செய்யும் ஒரு சில போக்குகளும் தொடர்வதை எவ்வகையில் சேர்ப்பது?

கற்பிதம் செய்யப்படும் காரணங்கள்..

சாதிய சமூகத்தில் தங்களின் கௌரவத்தைக் கட்டிக் காக்கும், அதற்காக எந்த விலையையும் தருவதற்குத் தயாராய் இருக்கும் குடும்பங்ளே பெரும்பான்மையாய் இருக்கிறது. நாகரிகம் கருதி இதில் பெரும்பான்மையான குடும்பங்கள் புலம்பல்களுடன் நிறுத்திக்கொள்கின்றன. ஆனால் இந்தப் புள்ளியைக் கடக்கும் குடும்பங்கள் கொலைகளில் இறங்குகின்றன. கௌரவக் கொலைகளே இழந்த தங்களின் குடும்ப கௌரவத்தை மீட்கும் என்ற நம்பிக்கைதான் இக்கொலைகள் வளரக்காரணமாகி நிற்கிறது. 

இந்தியாவில் பல காரணங்களுக்காகக் கௌரவக் கொலைகள் நடைபெறுகின்றன. பல சம்பவங்களில் செய்யப்பட்ட கொலைகள் கௌரவக்கொலை என்று தெரியாமல்கூடப் போய்விடுகின்றன. இந்தக் கௌரவக் கொலைகளில் முதல் மற்றும் முக்கியக் காரணமாக இருப்பது சாதி. சாதிமாறித் திருமணம் செய்வதை உலகின் மிகவும் அருவருப்பான நிகழ்வாய்ப் பார்க்கும் கேவலம் இப்போதும் நடக்கிறது. வேறு சாதி ஆணைத் திருமணம் செய்யும் பெண்ணை அப்பெண்ணின் வீட்டார் தங்கள் குடும்ப கௌரவம் பாதித்துவிட்டது என்று கொலை செய்து விடுகின்றனர். 

இதுவல்லாமல் வீட்டில் பார்த்த மாப்பிள்ளையைப் பெண் புறக்கணிப்பது, விருப்பமுடைய வேறு ­ஆணுடன் சென்று விடுவது, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட அப்பாவிப் பெண்ணை வீட்டில் சேர்த்தால் தங்கள் கௌரவம் போய்விடுமென அந்தப் பெண்ணைக் கொலை செய்வது, மறுமணம் செய்ய விரும்பும் பெண்ணை அழிப்பது, கணவனுடன் சேர்ந்து வாழவிரும்பாமல் விவாகரத்துக் கோரும் பெண்ணைக் கொல்வது, குறிப்பாக, ஒரே கோத்திரத்தைச் சேர்ந்த ஆண் - பெண் திருமணம் செய்தால், அவர்கள் அண்ணன், தங்கை முறை என்பதால், அவர்களைக் கட்டப்பஞ்சாயத்து செய்து, ஆண் - பெண் இருவரையும் கொல்வது போன்ற பல காரணங்களுக்காக இந்தியாவில் கௌரவக் கொலை இன்று அதிகமாகத் தலைதூக்கியுள்ளது. தான் தூக்கி வளர்த்த குழந்தையைக் கொஞ்சமும் இரக்கமில்லாமல் கொன்றழிப்பதின் மனநிலை கௌரவத்தின் பெயரால் நியாயப்படுத் தப்படுவதுதான் அநியாயம். இதயமற்ற இந்தக் கொடுஞ்செயலை ஒரு ஊரே கூடி நியாப்படுத்துவது அதைவிட அநியாயமாய் இருக்கிறது.

இந்திய நாடு முழுவதும்..

ஏதோ அங்கொன்று இங்கொன்று என இல்லாமல் இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் வெளியில் தெரிந்தும், தெரியாமலும் கௌரவக் கொலைகள் நடக்கின்றன. குறிப்பாக பஞ்சாப், அரியானா, ராஜதான், பீகார், உ.பி. மாநிலங்களில் கௌரவக் கொலைகள் அதிகம் நடக்கின்றன. ராஜதானில் உள்ள ராஜபுத்திரர்கள் மத்தியில் கௌரவக் கொலைகள் அதிகம் நடக்கின்றன. பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மிகவும் பின்தங்கிய மாவட்டமான தரன் தாரன் மாவட்டத்திலும் கௌரவக் கொலைகள் அதிகளவில் நடக்கின்றன.

அரியானா மற்றும் உத்தரப்பிரதேச மாவட்டங்களில் தொடர்ந்து வரும் கௌரவக் கொலைகள் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளன. டில்லியின் புறநகர்ப் பகுதியான சோனி பட்டில் ப்ளஸ் 2 படிக்கும் மாணவி ஒருவர் அவரது தந்தையால் கொலை செய்யப்பட்டுள்ளார். பிரஜேஷ் சிங் என்பவர் ப்ளஸ் 2 படிக்கும் தனது மகள் அவரது மாமாவைக் காதலித்ததால் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, பள்ளியில் இருந்து நிறுத்தியதுடன் அப்பெண்ணைக் கொலை செய்துள்ளார். இதே போன்று சோனிபட் அருகில் உள்ள பட்டவுடி பகுதியில் பெற்றோரின் எதிர்ப்பை மீறிக் காதலித்தவரை மணந்த மோனிகா மற்றும் வீர் பிரகாஷ் ஆகியோரை மோனிகாவின் சகோதரர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். தற்போது மோனிகாவும், வீர் பிரகாசும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். 

இதே அரியானாவிலும் பெண் ஒருவர் காதலித்துத் திருமணம் செய்து கொண்டதற்காக பெண்ணின் குடும்பத்தினர் காதலனைக் கொன்றுவிட்டு, அப்பெண்ணையும் கொலை செய்ய முயற்சி செய்துள்ளனர். போலீசில் அப்பெண் புகார் செய்ததன் பேரில் அப்பெண்ணின் தந்தை, சகோதரர் உள்ளிட்ட 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேற்கண்ட செய்தி 9 ஜூன்  2012 தினமலர் நாளிதழில் வெளியானது.

இது வட மாநிலங்களில் மட்டும் நடந்த பதிவு. தமிழகத்தில் இப்படிப் பல சம்பவங்கள் நடந்தபோது இத்தகைய நாளிதழ்கள் வாய்மூடி மௌனமாய் இருந்ததுதான் விசித்திரம். மேற்கண்ட செய்தியில்கூட அரியானாவில் நடந்த கொலையில் சாதிய வர்ணம் மிகவும் கவனமாய் மறைக்கப்பட்டுள்ளது. நமது தமிழகத்திலும் தொடர்ந்து பல கௌரவக் கொலைகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

தமிழகத்தில்...

1. தஞ்சாவூர் மாவட்டம் அய்யாநல்லூர் கிராமத்தில் வசித்துவந்த தலித் சமூகத்தைச் சார்ந்த இளையராணியும் கள்ளர் சமூகத்தைச் சேர்ந்த பசுபதி என்பவரும் காதலித்து கடந்த 1.9.2011 அன்று திருமணம் செய்துகொண்டனர். கீழ்சாதிப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டதால் குடும்ப கௌரவம் பறிபோய்விட்டது. எனவே, விவாகரத்து செய்துவிடு. இல்லையென்றால் உன்னைக் குடும்பத்தை விட்டு ஒதுக்கி வைத்துவிடுவோம். சொத்திலும் பங்கு கொடுக்கமாட்டோம் என்று மிரட்டினர். இதனடிப்படையில் பசுபதி தம்முடைய மனைவி இளையராணியிடம் நாம் இருவரும் பிரிந்துவிடலாம் என்று கூறியிருக்கிறார். இதற்கு இளையராணி மறுப்புத் தெரிவிக்க, ஆத்திரமடைந்த பசுபதி கடந்த 15.9.2011 அன்று இரவு அம்மிக் கல்லால் இளைய ராணியின் முகத்தில் கொடூரமாகத் தாக்கி அரிவாளால் கழுத்தில் வெட்டிப் படுகொலை செய்துள்ளார்.

2. திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்தில் வசித்து வந்த தலித் சமூகத்தைச் சேர்ந்த பாலச்சந்தர் (19)என்கிற இளைஞர், மாலதி (18) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்கிற பெண்ணை இரண்டு வருடமாகக் காதலித்து வந்துள்ளார். இந்தக் காதல் விவகாரம் மாலதியின் வீட்டிற்குத் தெரியவந்ததால் மாலதியின் பெற்றோர்கள் அவரைக் கடுமையாக அடித்துச் சித்திரவதை செய்து வீட்டில் அடைத்து வைத்துள்ளனர். அங்கிருந்து தப்பித்த அப்பெண் காதலனுடன் சென்று, கடந்த 25.7.2008 அன்று நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குச் சென்று தங்களுக்குத் திருமணம் செய்து வைக்குமாறு புகார் கூறியுள்ளனர். போலீசார் இரண்டு குடும்பத்தினருக்கும் தகவல் கொடுத்துள்ளனர். காவல்நிலையத்தில் வைத்தே மாலதியின் பெற்றோர்கள் அவரை கடுமையாகத் தாக்கினர்.
கட்டப்பஞ்சாயத்தார்கள் ஊர்க்கூட்டம் போட்டு முடிவு செய்து மூன்று நாட்கள் வீட்டிற்கு வெளியே மாலதி இரும்புச் சங்கியால் கட்டிப்போடப் பட்டுள்ளார். நாய்க்கு உணவு வைக்கக்கூடிய தட்டில் அப்பெண்ணிற்கு உணவு கொடுக்கப் பட்டுள்ளது. ஊர் முழுவதும் கழுவி விடப்பட்டது மட்டுமல்லாமல் அங்குள்ள கோவில் ஒன்று வெள்ளையடிக்கப்பட்டு சுத்தம் செய்யப் பட்டுள்ளது. இறுதியாக மூன்று நாட்கள் கடந்து 28.7.2008 அன்று மாலதிக்கு விஷஊசி போட்டு, அப்பெண்ணைக் கொன்று கண்மாயில் வைத்து எரித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து தமிழரசன் என்பவர் புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கை யும் எடுக்கப்படவில்லை.

3. திருவாரூர் மாவட்டம், அரிதுவார்மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சாதி இந்துவான லெட்சுமி, தலித் சமூகத்தைச் சேர்ந்த சிவாஜி என்பவரைக் காதலித்து வந்துள்ளார். லெட்சுமியின் வீட்டில் இக்காதலுக்குக் கடுமையான எதிர்ப்பு. இதனால் இருவரும் வீட்டை விட்டு ஓடிவந்து திருமணம் செய்து கொண்டு நிலக்கோட்டையில் வசித்து வந்துள்ளனர். ஆறு மாதம் கடந்த பின்னர், லெட்சுமியும் சிவாஜியும் நிலக்கோட்டையில் வசித்து வருவதை அறிந்த லெட்சுமியின் சகோதரர்கள் சுப்பிரமணியன், சிவக்குமார் ஆகியோர் கடந்த 7.9.2008 அன்று லெட்சுமியின் கணவர் சிவாஜி யைக் கடத்திச் சென்று தஞ்சாவூரில் வைத்து அவரைக் கொலை செய்துள்ளனர்.

4. பழனி அருகில் உள்ள க.கலையமுத்தூர் என்கிற கிராமத்தைச் சேர்ந்தவர் பத்ரகாளி (25) த.பெ.அம்மாபட்டியான். தலித் சமூகத்தைச் சேர்ந்த பத்ரகாளி, ஸ்ரீபிரியா என்கிற சாதி இந்துப் பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த ஸ்ரீபிரியாவின் தந்தை சீனிவாசன், அவருடைய உறவினர்கள் ராஜ்கண்ணன், பண்ணாடியான் ஆகியோர் கடந்த 4.11.2009 அன்று ஸ்ரீபிரியா தங்கியிருந்த வீட்டிற்கே சென்று அரிவாளால் வெட்டி கொடூரமான முறையில் படுகொலை செய்துள்ளனர். மூன்று குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டனர். தற்போது இவ்வழக்கு நீதிமன்ற நிலுவையில் உள்ளது.

5. தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த தலித் இளைஞர் வெற்றிவேல் (23) என்பவர் சாதி இந்துப் பெண் சுகன்யா என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். இதனால் ஆத்திரமடைந்த சுகன்யாவின் தந்தை தம்முடைய மகளைக் கடந்த 23.6.2010 அன்று படுகொலை செய்துள்ளார். 

6. சிவகங்கை அருகில் உள்ள கே.புதுக்குளம் கிராமத்தைச் சேர்ந்த மேகலா என்கிற பெண் சிவக்குமார் என்கிற இளைஞரைக் காதலித்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மேகலாவின் தந்தை மற்றும் அவரது சகோதரர்கள் கடந்த 4.7.2010 அன்று சிவக்குமாரைப் படுகொலை செய்தனர். 

7. திருச்சியைச் சேர்ந்த ஜெயா என்பவர் கார்த்திக் என்கிற இளைஞரைக் காதலித்துவந்தார். ஆத்திரமடைந்த ஜெயாவின் தந்தை செல்வராஜ் தம்முடைய மகளை 7.8.2010 அன்று படுகொலை செய்துள்ளார். மேற்கண்ட சம்பவங்கள் அனைத்தும் மதுரையைச் சார்ந்த எவிடென்ஸ் அமைப்பினர் களஆய்வில் கண்டறிந்த உண்மைகளாகும். இந்த அறிக்கை சில உதாரணங்களைத்தான் சுட்டியுள்ளது. ஆனால் இன்னும் குறிப்பிட பல சம்பவங்கள் உள்ளன. 2011 ஆம் ஆண்டு நடந்த அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் 13வது மாநில மாநாட் டில் வைத்த குழு விவாத ஆய்வறிக்கையில் பல தகவல்கள் உள்ளன.

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்திற்கு அருகில் உள்ள புதுக்கூரைப் பேட்டை என்ற கிராமத்தில் வன்னிய சமூகத்தைச் சார்ந்த கண்ணகியைத் தலித் சமூகத்தைச் சார்ந்த முருகேசன் காதல் திருமணம் செய்துகொண்டார். இதனால் ஆத்திரமடைந்த வன்னியசாதியினர் அவர்களை முந்திரி மரத்தில் கட்டி, விஷம் கொடுத்து எரித்துகொன்ற கொடுமை நடந்து வருடங்கள் சிலதான் ஆகின்றன.

திண்டுக்கல் மலைப்பட்டி கிராமத்தில் உயர் சாதியைச் சார்ந்த சங்கீதா என்ற பெண் தலித் சமூகத்தைச் சார்ந்த ஒரு இளைஞனைத் திருமணம் செய்துகொண்டார். இதனால் அவளைக் கொலை செய்ய முடிவெடுத்த கிராமத்தினர் அவரை கொலை செய்ததாக நினைத்து சிதையில் தீமூட்டும் போது அவர் அலறித்துடித்துள்ளார்.

இவையல்லாமல் காதல் ஜோடிகளைப் பிரித்துச் சித்திரவதை செய்வது, பழங்குடிப் பெண்களை வன்புணர்ச்சி செய்த உயர்சாதி இளைஞர் களுக்கு 20 ரூபாய் அபராதம், கட்டப்பஞ்சாயத்து மிரட்டலால் தற்கொலை செய்த பெண், கட்டப்பஞ்சாயத்தை எதிர்த்ததால் கடுமையாகத் தாக்கப்பட்டவர்கள், 15 வயது சிறுமியைப் பாலியல் வன்புணர்ச்சி செய்தவனுக்கே அவளைத் திருமணம் முடிக்கச் சொன்ன பஞ்சாயத்து என நிறைய சம்ப வங்களை இந்த அறிக்கை பட்டியலிட்டுள்ளது.

என்ன செய்ய போகிறோம்..?  

கடந்த 2009ம் ஆண்டு 5474 பெண்களும், 2010ம் ஆண்டு 6009 பெண்களும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதுமட்டுமல்ல 2009ம் ஆண்டில் படுகொலை செய்யப்பட்ட பெண்களின் எண் ணிக்கை 587. இவர்களில் 18 - 30 வயதுடைய பெண்களின் எண்ணிக்கை 183. இதேபோன்று 2010ம் ஆண்டில் படுகொலை செய்யப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 629. இவர்களில் 18 - 30 வயதுடைய பெண்களின் எண்ணிக்கை 236. தற்கொலைகளை ஆய்வு செய்து பார்த்தால் பெரும்பாலான தற்கொலைகள் கௌரவத்தின் அடிப்படையில் நடந்த தற்கொலைகளாக இருப்பதற்கு வாய்ப்புள்ளது.

கௌரவக் கொலைகள் மட்டுமல்ல, கௌரவத் தற்கொலைகளும் கௌரவச் சித்திரவதைகளும் தமிழகத்தில் அதிகளவு நடந்து வருகின்றன. குடும்ப கௌரவத்தை அல்லது நற் பெயரை ஒரு பெண் கெடுத்துவிட்டால் அதற்காக இப்படுகொலை நடத்தப்படுகிறது. யாருக்கான கௌரவம் என்பதை நாம் ஆராயவேண்டும். குடும்ப கௌரவம் என்பது சாதி கௌரவமாகவும் ஆண்களின் கௌரவமாகவும் அடையாளப் படுத் தப்படுகிறது. ஆகவே இதுபோன்ற படுகொலைகள் சாதித் திமிரின் வெளிப்பாடாகும் என்கிறது எவிடன்ஸ் அமைப்பின் ஆய்வறிக்கை. தமிழகத்தில் தொடர்ந்து வெளிவருகிற செய்திகளும் மக்கள் இயக்கங்களுக்குக் கடுமையான சவால்களை விடுக்கிறது. 

காடுவெட்டி குரு என்ற அரசியல்வாதியால் - வன்னிய சாதியில் கலப்புத் திருமணம் நடந்தால் வெட்டி கொலைசெய்யுங்கள் என மேடையில் நின்று முழங்கும் இறுமாப்பையும், பழுத்த அரசியல்வாதி பழ.கருப்பையா நாகரிகத்தைப் பாதுகாக்க சாதிக்கலப்பு கூடாது என பேசும் தைரியத்தையும் எங்கிருந்து பெற்றார்கள்? இவர்களைத் தொடர்ந்து கொங்கு வேளாளர் அமைப்பு உட்பட பல சாதிய அமைப்புகள் இவைகளை வழிமொழிவது எப்படி? 

வரலாற்றின் போக்கில் சூத்திரர்கள் என பார்ப்பனியம் ஒதுக்கிவைத்த இடைநிலைச் சாதிகள் தங்களை உயர்ந்த சாதியாய் கட்டமைத்துக் கொண்டனர். பார்ப்பனியச் சிந்தனையைத் தமதாக்கிக் கொண்டனர். தங்களுக்கென உயர்நிலையையும் அது சார்ந்த கௌரவத்தையும் கட்டமைத்துக் கொண்டனர். இந்த அடிப்படை மீது எழுந்த மனநிலை காரணமாய் உயர்நிலை கௌரவம் பாதிக்காமல் இருக்க இத்தகைய வார்த்தைகளை அள்ளி வீசுகின்றனர். ஜனநாயகத்தைக் கேள்விக்குள்ளாக்கும் இத்தகைய கௌரவம் தனது சாதியில் வேலையில்லாமல் கௌரவத்தைத் தொலைத்து அல்லாடும் இளைஞனுக்கு வேலை வேண்டும் என்று பொங்கியெழ மறுப்பதுதான் ஆபத்தின் உச்சமாய் எழுந்துள்ளது. 

தீர்ப்பும் தீர்வும்...

இந்திய நாட்டின் ஜனநாயகத்திற்கும், அரசியலமைப்புச் சட்டத்திற்கும், நீதித்துறைக்கும் சவால்விடும் அளவு சாதிப் பஞ்சாயத்துக்கள் வளர்ந்து நிற்கின்றன. இவைதான் கௌரவக் கொலைகளை முடிவு செய்யும் இடமாகவும் இருக்கிறது. அங்கு அவர்களுக்கெனத் தனிசட்டம், நீதிமன்றம், தீர்ப்புகள் என அந்த உலகமே வேறு. அங்கு பெண்களைப் பாலியல் வன்புணர்ச்சி செய்பவரின் மீது நடவடிக்கை சாதியையட்டி மாறும். ஆனால் பெண்களுக்கு மட்டும் அங்கு எப்போதும் நீதி கிடைக்காது. இவைகளை எதிர்த்து ஆங்காங்கு போராட்டங்கள் சிறிய அளவில் துவங்கியுள்ளன.  

கௌரவக் கொலைகுறித்து பதில் அளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் அனுப்பியுள்ள எச்சரிக்கை கொஞ்சம் நம்பிக்கையை விதைக்கிறது. இதுபோன்ற கௌரவக் கொலைகளைத் தடுக்க உத்தரவிடக்கோரி சக்தி வாகினி என்ற அமைப்பு, உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் மனு தாக்கல் செய்தது. இம்மனு, நீதிபதிகள் ஆர்.எம்.லொதா, ஏ.கே.பட்நாயக் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவுக்குப் பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கும், உத்தரபிரதேசம் உள்ளிட்ட 8 மாநில அரசுகளுக்கும் தாக்கீது அனுப்ப நீதிபதிகள் உத்தர விட்டுள்ளனர்.

கௌரவக் கொலைகள் தொடர்பாகப் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு மார்க்சிட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் எழுதிய கடிதத்தில், ஜனநாயக விரோதமாக, சாதி அடிப்படையிலான வேறுபாட்டு எண்ணங்கள் மற்றும் நம்பிக்கையால் பாதிக்கப்படும் இளம் ஜோடிகளுக்கு நீதி கிடைக்க வேண்டும். எனவே, இதுபோன்ற கௌரவக் கொலைகளைத் தடுத்து நிறுத்துவதற்கு உறுதியான நடவடிக்கையாக அரசு தனிச் சட்டம் இயற்றவேண்டும். அதற்கான சட்ட மசோதாவை வரும் மழைக்காலக் கூட்டத் தொடரில் மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது இப்பிரச்சனையின் மீதான விவாதத்தை இன்னும் ஆழப்படுத்தியுள்ளது.

இப்பின்னணியில் கௌரவக்கொலையில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை வழங்கலாம் என்று சுப்ரீம்கோர்ட் தெரிவித்துள்ளது முக்கியதுவம் பெறுகிறது. என்ன காரணத்திற்காக கௌரவக் கொலைகள் செய்யப்பட்டாலும் அக்கொலையைச் செய்பவர்களின் வழக்கை அரிதிலும் அரிதாகக் கருதி, அத்தகைய குற்றவாளிகளுக்கு அனைத்து நீதிமன்றங்களும் மரணதண்டனை வழங்க வேண்டும் என்று கௌரவக் கொலை தொடர்பான வழக்கு ஒன்றில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜூ மற்றும் கியான் சுதா மிரா ஆகியோர் தீர்ப்பளித்துள்ளனர். கௌவுரவக் கொலைகள் காட்டுமிராண்டித்தனமான ஒன்று, இது தேசிய அவமானச் சின்னம் இவை போன்ற அநாகரிகமான நடத்தைகளை தடுத்து நிறுத்துவது மிகவும் அவசியமானது. கௌரவக் கொலை செய்யத் திட்டமிட்டிருக்கும் அனைவரும் தங்களுக்கு மரண தண்டனை காத்திருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளவேண்டும் என்று அவர்கள் தீர்ப்பு கூறுகிறது.

ஆனால் பிரச்சனை இதனால் மட்டும் தீரப் போவதில்லை. தீண்டாமை ஒழிப்புச் சட்டமும், நிலச்சீர்திருத்தச் சட்டமும் நமது நாட்டில் செல்லாக் காசாகிய வரலாறு அனைவரும் அறிந்ததுதான். பிரச்சனையின் வேர் சமூகத்தின் வேறு தளத்தில் ஒளிந்துள்ளது. மக்களிடம் ஒரு ஓர்மை உருவாகத் தடையாக அந்த இடைவெளியைத் தங்களின் அடையாள அரசியலின் மூலதனமாக வைத்துப் பிழைப்பு நடத்துபவர்கள்  அனுமதிக்கமாட்டார்கள்.

"உங்கள் சாதியை விட்டு இன்னொரு சாதியின ரோடு திருமணம் செய்து கொள்ளுங்கள் என எவ்வளவுதான் பிரச்சாரம் செய்தாலும் அதை மக்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்களே, ஏன்? சாதி, செங் கற்களால் கட்டப்பட்ட சுவர் அல்ல. ஒரு தடுப்பினை எடுத்துவிட்டால் சாதியினை ஒழித்து விடலாம் என நினைக்க கூடாது. சாதி என்பது ஓர் உணர்வு. அது ஒரு மனநிலை. ஒரு சாதியினர் மற்றொரு சாதியினரை வேறொரு கிரகத்தில் வந்தவர்கள்போலப் பிரித்துப் பார்க்கும் மனநிலையை உடைக்கும் சக்தி அதிகபட்சமாகச் சாதிமறுப்புத் திருமணங்களுக்கு உண்டு. உதிரம் கலந்து ஒருவருக் கொருவர் உறவுகளாகும் பட்சத்தில் சாதி உணர்வு குறையும் வாய்ப்பு இருக்கிறது." - மாமேதை அம்பேத்கர். 

ஆக, கௌரவக் கொலைகளின் சூட்சுமம் இங்குதான் இருக்கிறது. இன்றைய சாதிய அமைப்பு அப்படியே இருக்கும்வரைதான் சாதி அரசியல் உயிரோடு இருக்கும். சாதி அரசியல் உயிரோடு இருக்கும் வரைதான் முதலாளித்துவ அரசியல் செழித்து வளரும். அதனால்தான் இந்த கௌரவக் கொலைகள் குறித்து எந்தக் கட்சிகளும் வாய் திறக்க மறுக்கின்றன, இடதுசாரிகளைத் தவிர. ஒரு சில நீதிமான்கள் சமூக அக்கறையுடன் இருப்பதுபோல மத்திய மாநில அரசுகள் உறுதி யுடன் இந்தச் சமூக அவமானச் செயலுக்கு எதிராகக் கடுமையான சட்டங்களை இயற்றவேண்டும். அந்தச் சட்டங்களையும் ஒரு ஆயுதமாய்ப் பயன் படுத்திக்கொண்டு தீண்டாமைக்கு எதிராகவும், சாதியம் ஒடுக்குமுறைக்கு எதிராகவும் ஜனநாயக உள்ளம் கொண்ட அனைவரும் போராட்டக் களத்தில் இறங்க வேண்டும்.

----------ஆகஸ்ட் செம்மலர் இதழில் வெளிவந்த கட்டுரை ----------

1 கருத்து:

  1. சாதிய அமைப்பு அப்படியே இருக்கும்வரைதான் சாதி அரசியல் உயிரோடு இருக்கும். சாதி அரசியல் உயிரோடு இருக்கும் வரைதான் முதலாளித்துவ அரசியல் செழித்து வளரும்............அய்யா மற்றும் அண்ணன்மார்களை ஆராதிக்கும் நன்பர்களிடம் சேர்க்க வேண்டிய செய்தி இது.பொருளாதார விடுதலையே சாதிய கட்டமைப்பை தகர்க்கும் கட்டுரை அருமை நன்றி தோழரே

    பதிலளிநீக்கு