புதன், 5 செப்டம்பர், 2012

வேலுநாச்சியார் என்கிற உதாரண வீரம்!


விடுதலைப் போரில் பெண்கள் - 2



1857 ஆம் ஆண்டு வெடித்து துவங்கி இரண்டு ஆண்டுகள் நீடித்த தொடர்ச்சியான கலகங்கள்தான் இந்தியாவின் முதல் விடுதலை போராட்டம் என்று அறியப்பட்டது. வெள்ளையர்கள் இதை சிப்பாய் கலகம் என்று பதிவு செய்தனர். ஆனால் 1700 ஆம் ஆண்டு  இறுதியிலும் 1800ஆம் ஆண்டு  துவக்கத்திலும் தென்னிந்தியாவில் இந்த போராட்டங்களுக்கு இணையாக, எழுச்சி மிகுந்த போராட்டங்கள் நடந்தன.

போராட்டத்திற்கு திட்டமிட்டவர்கள், செயல்படுத்தியவர்கள் மற்றும் பல்வேறு மக்கள் பிரிவை சேர்ந்த தேசபக்தர்கள் தென்னிந்திய விடுதலை போராட்ட வரலாற்றில் மட்டுமின்றி நாட்டு விடுதலைக்காக இந்தியா முழுவதும் நடைப்பெற்ற போராட்டங்களின் வரலாற்றிலும் தங்கள் ஆளுமை முத்திரையப் பதித்துவிட்டுச் சென்றனர்.  வீரன் வேலுதம்பி, பழசிராஜா, வேலுநாச்சியார், கட்டபொம்மன், மருது சகோதரர்கள் என இவர்களின் பட்டியல் பெரியது. வீரம் நிறைந்த்து. உத்வேகம் கொள்ளச்செய்வது.

இந்த மண்ணிற்காக தங்கள் உயிரையே அர்ப்பனம் செய்த இந்த தேசபக்தர்களின் புகழ்மிக்க வீரச்செயல்கள் ஒன்றுக்கு ஒன்று தொடர்பற்ற தனித்தனியான வீரசாகசங்களாகவே பலகாலம் கருதப்பட்டு வந்தது. இது சரியான சித்தரிப்பு அல்ல என்பதை பின்பு வந்த ஆய்வுகள் தெரிவித்தன. தென்னிந்திய மாநிலங்களான தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகியவற்றுடன் மஹாராஸ்டிரத்தையும் உள்ளடக்கிய பகுதி முழுவதும் பரவியிருந்த ஒரு விரிவான இயக்கத்தின் பகுதியாகவே இப்போராட்டங்கள் நடைபெற்றன. பல போராளிகளுக்கு இடையில் இடையிறா தொடர்பு இருந்தது. இந்த கூற்று உண்மையாக இருந்த காரணத்தினால்தான் வேலுநாச்சியாருக்கு ஹைதர் அலியின் படை உதவி கிடைத்தது.   

இந்திய விடுதலைப் போராட்டம் கோடிக்கணக்கான மக்கள் திரளுடன் நடந்தது தொழிற்புரட்சிக்குப்பின் வந்த நவீன அரசியல் காலத்தில்தான். எனினும், மன்னராட்சி காலத்தில்கூட மக்களை வெள்ளையர்களுக்கு எதிராக திரட்டிய சம்பவங்கள் பல நடந்ததுண்டு. அதில் மறக்க முடியாத தடம் பதித்தவர்தான் வேலுநாச்சியார் ஆவார்.

1730ஆம் ஆண்டு, இராமநாதபுரம் மன்னர் செல்லமுத்து சேதுபதி - சக்கந்தி முத்தாத்தாளுக்கு ஒரே பெண் மகளாக பிறந்தார் வேலுநாச்சியார். எனினும் ஆண் பெண் பேதம் இல்லாமல் ஆண் வாரிசு போலவே வளர்க்கப்பட்டார். வாள்வீச்சு, அம்பு விடுதல், ஈட்டி எறிதல், குதிரையேற்றம், யானையேற்றம் என்று எல்லா போர்க் கலைகளையும் கற்றார். வீர விளையாட்டுக்கள் மட்டுமன்றி கல்வி கற்பதிலும் வேலு நாச்சியார் திறமை மிக்கவர்தான். பத்து மொழிகள் தெரியும். சிறுவயதில் வேலுநாச்சியாருக்கு தெரிந்த ஒரே மூன்றெழுத்து வார்த்தை வீரம். தெரியாத மூன்றெழுத்து வார்த்தை பயம். தன்னுடைய 16 வது வயதில் 1746ல் சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதரை திருமணம் செய்துகொண்டார். முத்து வடுகநாதர் என்பவர் சிவகங்கை பாளையத்தை ஆண்ட மன்னர் ஆவார். 1749ல் இவரின் தந்தைய இறந்தவுடன் இவர் சிவகங்கைச் சீமையின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றார். வெள்ளையரை எதிர்த்து விடுதலைக்குரல் கொடுத்த பாளையக்காரர்கள் வரிசையில் இவர் குறிப்பிடத்தக்கவர்.

1752ல் மதுரையை ஆண்ட விசயகுமார நாயக்கர் மீது பிரிட்டிஷ் கும்பெனி கேப்டன் கோப் போர் தொடுத்து மதுரையை கைப்பற்றினர். அதையறிந்த முத்துவடுகநாதர் மதுரை மீது போர் தொடுத்து அங்கிருந்த கேப்டன் கோப்பையும் அவர் படைகளையும் விரட்டியடித்து மீண்டும் விசயகுமார நாயக்கரையே மதுரை மன்னராக பதவி அமர்த்தினார். இதனாலேயே நவாப், பரங்கி மற்றும் கும்பெனி படைகளுக்கு சிவகங்கை மீது கோபமும் தீராப்பகையும் எழுந்தது.

இச்சமயத்தில் கும்பினியர் தலைவனாக லார்டு ஸ்டீகார்ட் என்பவன் பதவியேற்றான். முதல் வேலையாக முத்துவடுகநாதர் சிவகங்கை சார்பாக கும்பினியருக்கு திரை செலுத்த வேண்டும் என்று தூதனுப்பினான். அவனது நோக்கம் எப்படியும் சிவகங்கையை பணியவைக்க வேண்டும் என்பதுதான். அவனது தூதை முத்துவடுகர் மறுத்ததால் கான்சாகிப் மூலம் கொலை மிரட்டலும் விட்டுப்பார்த்தான் டீகார்டு. இரண்டுக்குமே இவர் பணியாததால் 1963ஆம் ஆண்டில் மன்னர் காளையார் கோவிலுக்குச் சென்ற சமயம் பார்த்து சிவகங்கை மீது போர் தொடுத்து சூறையாடினான். இதையறிந்த முத்துவடுகநாதர் கலவரத்தைத் தடுத்து கான்சாகிப்பையும் விரட்டினார்.

இந்த சமயத்தில் வெள்ளைய படை ஒன்று இராமநாதபுரத்தைக் கைப்பற்றியது. இதுவரை சிவகங்கைக்குக் கட்டாத வரியைத் திருப்பித் தறுமாறும் இராமநாதபுரத்தைக் குடக்கூலிக்கு தறுமாறும் செய்திவந்தது. அதற்கு மறுத்து இராமநாதபுரத்தின் மீது படையெடுக்க மறவர் சீமைப் படைகளுடன் சேர்ந்து எதிரிகளின் துப்பாக்கி மற்றும் பீரங்கிப்படை மீது போர் தொடுத்து இராமநாதபுரத்தை மீண்டும் தன் ஆட்சியின் கீழ் கொண்டுவந்தார். இனிமேல் வடுகநாதரை வெல்ல முடியாது என்றறிந்த பரங்கியர் அன்றிரவே சிவகங்கை மீது இனி போர் தொடுப்பதில்லை என சமாதானம் பேசினர். அதை உண்மையென வடுகநாதர் நம்பினார். சமாதானம் என்று கூறியதால் பாதுகாப்புகளைக் குறைத்து விட்டு இதுவரை இறந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்த 1772 ஜூன் 25 ஆம்தேதி காளையர் கோவிலுக்குச் சென்றுவிட்டார் வடுகநாதர். இதையறிந்த வெள்ளையரக்ள் காளையர் கோவிலுக்கு முத்துவடுகநாதரைக் கொல்ல பான்சோர் என்ற தளபதியின் கீழ் ஒரு படையை அனுப்பியது. கோவிலுக்குச் சென்றதால் ஆயுதம் எடுத்துக் கொள்ளாமல் சென்ற வடுகநாதரை பான்சோர் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றான். வடுகநாதரின் மூத்த மகளும் கொல்லப்பட்டார்.

இந்த சமயத்தில் இந்திய நாடு முழுவதும் ஆண் வாரிசு இல்லாமல் உள்ள நாட்டை தாமே எடுத்து நடத்தலாம் என்று ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய கம்பெனி ஒரு புதிய சட்டத்தை விதித்திருந்தது. இதனை பயன்படுத்தியே பல நாடுகளை தன்னுடன் இணைத்துக்கொண்டது. இந்த அடிப்படையில் ஆண் வாரிசு இல்லாத சிவகங்கையை தன்னுடன் இணைப்பதாக அறிவித்து ஆக்கிரமித்தது.

கனவன் படுகொலையை தொடர்ந்து வேலுநாச்சியார் நாட்டின் பொறுப்பை ஏற்றார். வெள்ளையரக்ள் தொடர்ந்து போர்தொடுத்ததால் ஏற்பட்ட நெருக்கடியைச் சமாளிக்க இடம் மாறி மாறிச் சென்றார். வீரத்தில் மட்டுமல்ல, விவேகத்திலும் நுட்பமானவர். நவாபையும் ஆங்கிலேயர் படையினரையும் வீழ்த்த மன்னர் ஹைதர் அலியின் உதவியை நாடுவது என்று தீர்மானித்தார். ஏனென்றால் ஆங்கிலேயருக்கும் நவாப்புக்கும் பரம எதிரி ஹைதர் அலி. தான் ஒளிந்திருந்த காடுகளிலிருந்து ஹைதர் அலிக்கு உதவி கேட்டு கடிதம் எழுதினார். அப்போது ஹைதர் அலி திண்டுக்கல்லிலிருந்தார். 

கடிதங்களை ஹைதர் அலியின் அரண்மனையின் முன்பு மூன்று குதிரை வீரர்கள் வந்து நின்றார்கள். வேலு நாச்சியாரிடமிருந்து வருவதாகச் சொன்னார்கள். ஹைதர் அலி அவர்களை உள்ளே வரவழைத்தான். வேலு நாச்சியார் வரவில்லையா? என்று ஹைதர் அலி கேட்க, தன் தலைப்பாகையை கழற்றினான், ஒரு வீரன், அது வேலு நாச்சியார். ஹைதர் அலியுடன் உருது மொழியை சரளமாகப் பேச அவருக்கு மேலும் ஆச்சர்யம். அந்த வீரமங்கையின் உருது மொழித் திறமையையும், அறிவு சாதுர்யத்தையும், விடுதலை வேட்கையையும் கண்டு ஆச்சர்யப்பட்டார் ஹைதர் அலி, அவரிடம் தனது வேதனைகளையும் இலட்சியத்தையும் விளக்கினார் வேலுநாச்சியார். எல்லாவற்றையும் கேட்ட ஹைதர் உதவிகள் பல செய்வதாக உறுதியளித்தார். 

ஏழாண்டு காலம் திண்டுக்கல் கோட்டை, விருப்பாட்சிக் கோட்டை, அய்யம்பாளையம் கோட்டை என இடம் மாறி மாறி முகாமிட்டு வாழ்ந்து வந்தார் வீரமங்கை. இதற்கிடையில் தமது எட்டு வயது மகளையும் பாதுகாக்க வேண்டிய நிலை அவருக்கு இருந்தது. அமைச்சர் தாண்டவராய பிள்ளையின் முயற்சியினால் சிவகங்கை மக்கள் பிரதிநிதிகள் வேலுநாச்சியாரோடு கலந்து பேசி கம்பனி எதிர்ப்புப்படை ஒன்று உருவாக்கப்பட்டது. மருது சகோதரர்கள் இப்போராட்டத்திற்க்கு தலைமை தாங்கினர்.

1780 ஐப்பசித் திங்கள் ஐந்தாம் நாள் வேலுநாச்சியார் தலைமையில் ஒரு படை திண்டுக்கல்லிலிருந்து சிவகங்கை நோக்கிப் புறப்பட்டது. ஹைதர் அலி 5000 குதிரை வீரர்களையும் 5000 போர்வீரர்களையும், பீரங்கிப்படை ஒன்றையும் அனுப்பி வைத்தார். படை காளையார் கோயிலை கைப்பற்றியது. சிவகங்கையில் வேலுநாச்சியார், தம்மைக் காட்டிக் கொடுக்காது வெள்ளையரால் வெட்டுண்ட உடையாளுக்கு வீரக்கல் ஒன்றை நட ஏற்பாடு செய்தார். கணவன் இறந்த பின்னும் மூட நம்பிக்கைகளை கடைபிடிக்காமல் தனது கழுத்தில் விலைமதிப்புக் கொண்ட திருமாங்கல்யத்தை சுமந்த ராணி, உடையாள் மீதுள்ள பாசத்தால் தமது திருமாங்கல்யத்தை முதல் காணிக்கையாகச் செலுத்தி அஞ்சலி செலுத்தினார். இந்தக் கோயில் கொல்லங்குடி வெட்டுடையகாளியம்மன் கோயில் என்று அழைக்கப்படுகிறது.

இறுதியாக சிவகங்கை நகரைக் கைப்பற்ற சின்னமருது, பெரிய மருது, தலைமையில் படை திரட்டப்பட்டது. விஜயதசமி அன்று சிவகங்கை அரண்மனைக்குள்ளே இருக்கும் ராஜராஜேஸ்வரி தெய்வத்தை வணங்க கூட்டம், கூட்டமாக பெண்கள் வருவது வழக்கம். அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள திட்டமிட்டார் வீரமங்கை வேலுநாச்சியார். வெளியே ஆங்கிலேயர் படை காவல் காத்துக் கொண்டிருக்கும் நேரத்தில், வேலுநாச்சியாரும் அவரோடு இருந்த பெண்கள் படையும், ஆயுதங்களை ஆடைக்குள் மறைத்துக் கொண்டு கூட்டத்தோடு கூட்டமாக அரண்மனைக்குள் உள்ளே இருந்த கோவிலுக்குள் சென்று திடீர் தாக்குதல் நடத்தியது. இதை ஆங்கிலேயப் படைகள் எதிர்பார்க்கவில்லை.

வெட்டுண்டு விழுந்தார்கள் ,துடித்து உயிர் அடங்கினார்கள். வால்வீச்சில் தப்பித்து பிழைத்தவர்கள் நாட்டைவிட்டு நெடுந்தூரம் ஓடினார்கள். சிவகங்கை கோட்டை மீது பறந்த அருவருப்பான ஆங்கிலேயரின் கொடி இறக்கப்பட்டது. சிவகங்கை நாட்டின் கொடி ஏற்றப்பட்டது. வேலுநாச்சியார், தனது ஐம்பதாவது வயதில், தனது கணவரைக் கொன்ற ஜோசப் ஸ்மித்தையும் தளபதி பான் ஜோரையும் தோற்கடித்தார். பலகாலம் தொடர்ந்து ஆட்சி நடத்தினார்.

1793ல்  அன்பு நிறைந்த இதயம் கொண்ட வேலு நாச்சியாருக்கு தனது பேத்தியின் மரணத்தால் துயரம் அதிகமானது. அதன் பிறகு விருப்பாட்சி அரண்மனையில் தங்கினார். பெரும் போராட்டங்களை நடத்தி நாட்டை மீட்ட, மதிநுட்பம் கொண்ட வேலுநாச்சியார் டிசம்பர் 25, 1796 அன்று இறந்தார்.

அந்த மகத்தான வீரமங்கையின்  இறுதிப்போராட்டத்தின் வெற்றிக்கு வித்திட்ட
மற்றும் ஒரு வீராங்கனை பற்றி நாம் பிறகு பேசலாம். போர்களத்தில் வெற்றிக்காக அவள் தன்னையே அர்ப்பனம் செய்தவள். அவள் பெயர் குயிலி..

-----------------மகளிர் சிந்தனை மாத இதழில் வரும் தொடர் (2012 செப்டம்பர்)  -------------------------------------


1 கருத்து: