மானுட விடுதலை...

நேர்பட பேசு! வையத் தலைமைகொள்!
தமிழகத்தில் தீண்டாமையே இல்லை.. இல்லை.. இல்லவே இல்லை! என அமைச்சர்கள் சட்டமன்றத்தில் அறிவிக்கிறர்கள். அடுத்த சில நாட்களில் தீண்டாமை இல்லாத கிராமங்களுக்கு 10 லட்சம் பரிசு என அம்மா அறிவிக்கிறார். வடிவேலுவுடன் என்னதே கண்ணையா பேசும் வசனங்களை அம்மாவும் அமைச்சர் பெருமக்களும் பேசிக்கொண்டிருக்கிறாரக்ள். "தம்பி இருக்கு ஆனா இல்ல,.." உண்மையில் தமிழகத்தின் நிலை என்ன?

கீழ்தஞ்சையில் உழைப்பாளி மக்களை அடிமைகளாக வைத்திருந்த நிலபிரபுகளை எதிர்த்தும் சாணிப்பால், சவுக்கடி தண்டனையை எதிர்த்தும், தீண்டாமைக் கொடுமைகளுக்கு முடிவு கட்டும் வகையிலும் போராடிய தோழர் பி.சீனிவாசராவ் அவர்களின் நினைவு தினமான செப்டம்பர் 30 அன்று நேரடி நடவடிக்கைகளை மேற் கொள்வது என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி முடி வெடுத்தது. அதனடிப்படையில் கோவை, ஈரோடு, சேலம், திருவண்ணாமலை, திருப்பூர், வேலூர், புதுக்கோட்டை மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் நேரடி நடவடிக்கைகளுக்கு அறைகூவல் விடுக்கப்பட்டது. 

காளப்பட்டி

கோயம்புத்தூர் காளப்பட்டி மாரியம்மன் கோவிலுக்குள் அருந்ததிய மக்களும் இதர தாழ்த்தப்பட்ட மக் களும் அனுமதிக்கப்படாத நிலை இருந்தது. அவர்களை அழைத்துக் கொண்டு ஆலயத்துக்குள் நுழைவது என்று முடிவெடுத்து நடந்த நேரடி நடவடிக்கை வெற்றி பெற்றுள்ளது. அரை நூற்றாண்டு காலமாகவே இந்தக் கோவிலுக்குள் நுழைவது என்பது அருந்ததிய மக்களைப் பொறுத்தவரை வெறும் கனவாகவே இருந்து வந்தது. இன்றைய தினம் அப்பகுதி அருந்ததிய மக்களும் இதர பகுதி அருந்ததிய மற்றும் இதர தாழத்தப்பட்ட மக்களும் ஆலயத்திற்குள் சென்று வழிபட்டனர். அவர்கள் ஆனந்தக் கண்ணீரோடு வழிபட்டதோடு, ஆலயநுழைவுப் போராட்டத்திற்கு தங்கள் நன்றியையும் தெரிவித்துக் கொண்டனர். உணர்ச்சிகரமான நிகழ்வாக இருந்த இந்தப் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, ஆதித் தமிழர் பேரவை, ஆதித்தமிழர் விடுதலை முன்னணி, பல வர்க்க, வெகுஜன அமைப்புகள் உள்ளிட்ட பல் வேறு ஜனநாயக மற்றும் தலித் அமைப்புகள் பங்கேற்றன. 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்ற இந்தப் போராட்டம் மிகவும் எழுச்சிகரமான வகையில் அமைந்தது. பங்கேற்றவர்களில் பாதிப்பேர் தலித் அல்லாத உழைப்பாளி மக்கள் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

வாவிக்கடை

ஈரோடு வாவிக்கடை அண்ணமார் - மதுரை வீரன் கோவில் அருந்ததிய சமூகத்தினரின் சொந்தக் கோவிலாகும். தனக்கு ஏன் முடி வெட்டவில்லை என்று ஒரு தலித் வாலிபர் கேட்டதற்காக கோவில் வழிபாட்டு உரிமையை ஆதிக்க சக்திகள் வன்முறை வெறியாட்டம் நடத்தி மறுத்தன. கடந்த ஐந்து ஆண்டுகளாக சொந்தக் கோவிலுக்குள் நுழைந்து வழிபட முடியாத நிலை இருந்து வந்தது. நேரடி நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக கோவிலுக்குள் அருந்ததிய மக்களேடு செல்வது என்று முன்னணி சார்பில் அறிவிக்கப்பட்டது. நியாயமான இந்தக் கோரிக்கைக்கு இருந்த ஆதரவைக் கண்டு மாவட்ட நிர்வாகம் நடத்திய பேச்சுவார்த்தை யின் அடிப்படையில், செப்டம்பர் 29 ஆம் தேதியன்றே இரு தரப்பு மக்களும் ஒற்றுமையாக கோவிலுககுள் சென்று வழிபட்டனர். இரு தரப்பிலிருந்தும் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இந்த ஒற்றுமை தொடர வேண்டும் என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் வலியுறுத்தப்பட்டது. 

காட்டுமரக்குட்டை

சேலம் வட்டம் காட்டுமரக்குட்டை கிராமத்தில் தலித் மக்களுக்கு பாதை மறுக்கப்பட்டு வந்தது. நேரடி நடவடிக்கையாக பாதை அமைக்கும் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. மாநகரத்தின் பல பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான மக்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் ஆகியோர் இணைந்து பாதை அமைக்கும் போராட்டத்திற்கு தயாராகி வந்தனர். இந்நிலையில் செப்டம்பர் 29 ஆம் தேதியன்று பேச்சுவார்த்தைக்கு அழைத்த மாவட்ட நிர்வாகம், தலித் மக்கள் செல்ல தடைவிதிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த கற்களை உடனடியாக அகற்றி விடுவது என்றும், அந்தப் பொதுப் பாதையை தலித் மக்கள் பயன் படுத்திக் கொள்ளலாம் என்றும் கூறியது. மேலும் மூன்று மாதத்திற்குள் இதில் சாலை அமைத்துத் தருவது என்றும் எழுத்துப்பூர்வமாக மாவட்ட நிர்வாகம் உறுதியளித் துள்ளது.

கலசப்பாக்கம்

திருவண்ணாமலை கலசப்பாக்கம் அம்பேத்கர் நகர் பாதை அமைக்கும் நேரடி நடவடிக்கைக்கு அறைகூவல் விடப்பட்டிருந்தது. இந்தப் போராட்டத்தில் பங்கேற்க நூற்றுக் கணக்கான மக்கள் திரண்ட நிலையில் உடனடியாக அந்தப் பாதையை அமைத்துத் தருவதாக மாவட்ட நிர்வாகம் உறுதிமொழி தந்தது. மேலும், பஞ்சமி நிலம் ஒன்று சம்பந்தமான பிரச்சனையிலும், அதைப் பெற்றுள்ள பயனாளிகள் நிலத்தை உடனடியாகப் பயன்படுத்திக் கொள்ள எந்தத்தடையும் இல்லை என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.

நடுவேலம்பாளையம் 

திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஒன்றியம் நடுவேலம்பாளையத்தில் 5.2 ஏக்கர் பஞ்சமி நிலம் சட்ட விரோதமாக தலித் அல்லாதவர்கள் கையில் உள்ளது. அந்த நிலத்தை வீட்டுமனைகளாக மாற்றி விற்பனை செய்வதற்கான வேலையும் நடந்து கொண்டிருந்தது. இதைத் தடுத்து அதை தலித் மக்களுக்கு பெற்றுத் தரும் வகையில் நேரடி நடவடிக்கைக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அழைப்பு விடுத்தது. நூற்றுக்கணக்கான மக்கள் போராட்டத்தில் பங்கேற்ற நிலையில் பேச்சுவார்த்தைக்கு மாவட்ட நிர்வாகம் முன்வந்தது. அந்த நிலம் விற்பனை செய்யப்படு வதற்கு தடைவிதித்து, அதற்கான உத்தரவை துணைப் பதிவாளருக்கு உடனடியாக அனுப்ப ஒப்புக் கொண்டனர். மேலும் அக்டோபர் 3 ஆம் தேதியன்று பஞ்சமி நிலத்தை புதிய பயனாளிகளிடம் ஒப்படைப்பது பற்றிய பேச்சுவார்த்தைக்கூட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்யப் பட்டுள்ளது.

வாலாஜாபேட்டை

வேலூர் வாலாஜாபேட்டை படவேட்டம்மன் கோவிலை ஒட்டி தலித் மக்களுக்கான பாதையை மறித்து ஆதிக்க சக்திகளால் தீண்டாமைச்சுவர் கட்டப்பட்டு வந்தது. இதை நேரடி நடவடிக்கை மூலம் அகற்றுவது என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி விடுத்த அறைகூவலை ஏற்று ஏராளமான அளவில் மக்கள் திரண்டனர். பெரும் அளவில் மக்கள் திரள்வதைத் தடுக்க காவல்துறையின் அட்டூழியம் கட்டவிழ்த்து விடப்பட்டது. வரும் வழியிலேயே மக்களைக் கைது செய்வது, மிரட்டுவது போன்ற வேலைகள் நடந்தன. கைது நடவடிக்கைகளுக்குப் பிறகே ஆர்.டி.ஓ. நேரடியாக பேச்சு வார்த்தைக்கு முன்வந்தார். அக்டோபர் 10ஆம் தேதியன்று மாவட்ட வருவாய் அலுவலர்(டி.ஆர்.ஓ) முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைக்கு முழுத்தீர்வு காண்பது என்று அப்போது முடிவு செய்யப்பட்டது. அதுவரையில், தீண்டாமைச் சுவரின் கட்டுமானப் பணியை மேற்கொண்டு தொடர அனுமதிக்கமாட்டோம் என்றும் ஆர்.டி.ஓ உறுதியளித்தார்.

கறம்பக்குடி

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் 86 தலித் குடும்பங்களுக்கு நிலம் ஒதுக்கப்பட்டு பட்டாவும் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் அதைப் பயன்படுத்திக் கொள்ள அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் நேரடி நடவடிக்கையாக அந்த நிலத்தில் குடியேறுவது என்று முன்னணி சார்பில் அறிவிக்கப்பட்டு மக்கள் ஏராளமான அளவில் திரண்டனர். எழுச்சிகரமாக மக்கள் திரண்டதைக் கண்ட மாவட்ட நிர்வாகத்தின் தரப்பில் ஆர்.டி.ஓ பேச்சுவார்த்தைக்கு முன்வந்தார். பட்டாவின் நகலை மக்கள் காட்டியபோது, தள்ளிப் போடுவதற்கான உத்தியாக பட்டாவின் உண்மை நகல் இருந்தால்தான் நாங்கள் பேச முடியும் என்று இழுத்தடிக்கத் துவங்கினர். துரிதமாகச் செயல்பட்ட சிலர் ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே பட்டாவின் உண்மை நகல்களேடு வந்ததால் அதிகாரிகள் திகைத்துப் போயினர். அந்த இடத்தை சென்று பார்வையிட்ட பிறகே முடிவு செய்வேம் என்று அதிகாரிகள் கூறியபோது, மக்களும் சளைக்காமல், பரவாயில்லை; நாங்கள் இங்கேயே காத்திருக்கிறேம் என்று கூறினர். ஆனால் போராடும் மக்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இதனால் போராட்டம் தீவிரமடையும் நிலை உள்ளது. 

மரியநாதபுரம்

திண்டுக்கல் மரியநாதபுரத்தில் பிரதான சாலையை அடைய தலித் மக்கள் பயன்படுத்தும் பாதை மறிக் கப்பட்டு சுவர் கட்டப்பட்டிருந்தது. இதை நேரடி நடவடிக்கை மூலம் அகற்ற தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அழைப்பு விடுத்தது. இதை அறிவிக்கும் வகையில் ஏற்கனவே அந்த சுவரைப் பார்வையிட்டிருந்த முன்னணியின் மாநிலத் தலைவர் பி.சம்பத் பங்கேற்கும் பத்திரிகையாளர் சந்திப்புக்கு செப்டம்பர் 12 அன்று ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. இந்நிலையில் அச்சுவரை எழுப்பியிருந்த சௌந்தரராஜா மில் நிர்வாகம், அந்தச்சுவரை அப்புறப்படுத்திக் கொள்ளலாம் என்று திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் கே.பாலபாரதியிடம் ஒப்புதல் கடிதம் தந்தது. இதைத் தொடர்ந்து அன்றைய தினமே மக்கள் திரண்டெழுந்து அந்தச் சுவரை அப்புறப்படுத்தினர். கடந்த சட்டமன்றக்கூட்டத் தொடரில், தமிழகத்தில் தீண்டாமைக் கொடுமையே இல்லை என்று சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்த அமைச்சர்களுக்கு, அவர்கள் சொன்னது மகாபொய் என்பதைத்தான் இந்தப் போராட்டங்களும், வெற்றிகளும் காட்டுகின்றன. 

இன்னும் ஏராளமான கொடுமைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் இத்தகைய கொடுமைகளை முழுவதுமாக ஒழித்துக்கட்ட ஜனநாயக சக்திகளை இணைத்துக் கொண்டு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தொடர்ந்து போராடி வருகிறது.. இந்தப் போராட்டங்களில் எழுச்சியோடு பங்கேற்ற பல்லாயிரக்கணக்கான தலித் மக்களுக்கும், அவர்களின் உரிமையை நிலைநாட்ட களத்தில் இறங்கிப் போராடிய தலித் அல்லாத இதர பகுதி உழைப்பாளி மக்களுக்கும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, ஆதித்தமிழர் பேரவை, ஆதித்தமிழர் விடுதலை முன்னணி, பகுஜன் சமாஜ் கட்சி, பல்வேறு வர்க்க, வெகுஜன அமைப்புகள் அனைத்தும் பாராட்டுகுறியன. 
 ---------------------------------- நன்றி : தீக்கதிர் நாளிதழ்--------------------------------

0 comments

bookmark
bookmark
bookmark
bookmark
bookmark