செவ்வாய், 1 அக்டோபர், 2024

மே தினத்தை முதலில் பாடிய கவிஞர் தமிழ் ஒளி நூற்றாண்டு

 

வஞ்சகக் காலன் வருவதும் போவதும்
வாழ்க்கை நியதியடா - எனில்
செஞ்சொற் கவிதைகள் காலனை வென்று
சிரிப்ப தியற்கையடா !
 
ஆம். இந்த வரிகளை எழுதிய, காலனை வென்று வாழும் கவிதைகளை இயற்றிய மகத்தான மக்கள் கவிஞர் தமிழ் ஒளி பிறந்த நூறாண்டு விழா ஆண்டு இது. இந்திய நாடு விடுதலை பெற்றபோது 23 வயது இளைஞன், பாவேந்தர் பாரதிதாசனுக்கு 33 வயது இளையோன் கவிஞர் தமிழ் ஒளி பிறந்தது 1924 செப்டம்பர் 21 தேதியாகும்.
 
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியை அடுத்த ஆடூர் என்னும் சிற்றூரில் சின்னையா, செங்கேணி அம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். விசயரங்கம் என்பது தமிழ் ஒளியின் இயற்பெயர். பட்டுராசு என்றும் அவர் அழைக்கப்பட்டார். குறிஞ்சிப்பாடி அருகில் பிறந்தாலும், தமது தொடக்கக் கல்வியைப் புதுவை முத்தியாலுப்பேட்டை நடுநிலைப் பள்ளியில் கற்றார். உயர்கல்வியைக் கலவைக் கல்லூரியில் படித்தார். இடையில் சென்னையில் வாழ்ந்த பத்தாண்டுகள் போக 1965 மார்ச் 24 ஆம் தேதி 41 ஆம் வயதில் அவர் இறக்கும் வரை மீதம் உள்ள வாழ்க்கையை புதுச்சேரியில் கழித்தார்.
 
பாவேந்தரை அறிமுகம் செய்த முரசு
 
கவிஞர் தமிழ் ஒளி மாணவராக இருந்தபோதே பாரதியார், பாரதிதாசன் கவிதைகளில் மனம் பறிகொடுத்தார். பாரதிதாசனின் தொடர்பும் அவருக்குக் கிடைத்தது. நாள்தோறும் குயில் தோப்புக்குச் சென்று பாரதிதாசனிடம் தாம் எழுதிய கவிதைகளைப் படித்துக் காட்டிப் பாராட்டும் பெற்றார். எப்படி இந்த பழக்கம் ஏற்பட்டது என்றால், புரட்சிக் கவிஞர் மகன் மன்னர் மன்னனும், தமிழ் ஒளியும் ‘முரசு’ என்ற கையேடு இதழை நடத்தினர். அதில் தமிழ்ஒளி எழுதிய கவிதைகள் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் கவனத்தைக் கவர்ந்தன. பாரதிதாசன் தமிழ் ஒளியை அழைத்துப் பாராட்டி அவரை உற்சாகப்படுத்தினார். ‘முரசு’ இதழை அரசு தடை செய்தது. அதை நடத்தியவர்கள் மீது வழக்கு தொடர்ந்தது. மன்னர் மன்னன் இளம் வயது காரணமாக விடுதலை செய்யப்பட்டார். தமிழ் ஒளி பிணையில் வெளிவந்தார்.
 
 சுதந்திர நாளையொட்டி அகில இந்திய வானொலியில் பன்மொழிப் புலவர் பேராசிரியர் தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் தலைமையில் நடை பெற்ற கவிதை நிகழ்ச்சியில் பங்குகொண்டு ‘சுதந்திரம்’ என்ற தலைப்பில் தமிழ் ஒளி கவிதை வாசித்தார். எல்லோரும் உணர்வு மிகுந்து சுதந்திரத்தை கொண்டாடி மகிழ்ந்த போது, உழைக்கும் மக்களின் வாழ்வை மேம்படுத்த இந்தச் சுதந்திரம் பயன்பட வேண்டும் என்ற அறிவு நோக்கில் கவிதை புனைந்தவர் கவிஞர் தமிழ் ஒளி. அக்கவிதையை ஓமந்தூர் இராமசாமிரெட்டியார் அருகிலிருந்து கேட்டு வெகுவாகப் பாராட்டினார் என்பது முக்கிய செய்தி.
 
துவக்க கால அரசியல் களம்
 
கவிஞர் தமிழ் ஒளி திராவிடர் மாணவர் கழகத்தில் தொடக்கக் காலத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார். திராவிடர் கழக மாணவர் மாநாட்டில் கலந்து கொண்டு பாரதிதாசன் கொடுத்தனுப்பிய வாழ்த்துக் கவிதையை அம்மாநாட்டில் படித்தார். அந்த தொடர்பி னூடாக எழுந்த சிந்தனைகள் கவிதைகளாக வெளிப்பட்டது.
 
“இந்தியை இங்கே அழைக்கின்றீர்கள்-கூர் / ஈட்டியை நெஞ்சில் நுழைக்கின்றீர்கள்” / “காரிருள் இன்றும் விடியவில்லை-எம் / காற்றனை இன்றும் ஒடியவில்லை! / “ இதர்மிசை இந்தி உயர்குவதோ-எங்கள் / செந்தமிழ் அன்னை அயர்குவதோ?” -என்று ‘தமிழ்நாடு’ என்ற ஏட்டில் எழுதி இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்கு வலுவூட்டினார்.
 
சி.பா.ஆதித்தனாரின் ‘நாம் தமிழர்’ இயக்கத்தின் சார்பாக ஈரோடு சின்னசாமி நடத்திய ‘சமநீதி’ மற்றும் ‘தமிழன்’ ஆகிய ஏடுகளில் இந்தி மொழித் திணிப்பை எதிர்த்து கவிதைகள் எழுதினார்.
 
மொழிவழி மாநிலம் அமைத்து கன்னியாகுமரியை தாய்த் தமிழகத்துடன் இணைக்கும் எல்லைப் போராட்டம் நடைபெற்றபோது கவிஞர் தமிழ்ஒளி தமிழர்களுக்கு பின்வருமாறு அழைப்பு விடுக்கின்றார்.
 
“தன்குமரி எல்லை தனைச் சார்ந்த தமிழகத்தில்/ எல்லாம் தமிழர்க்கே என்றெழுந்த போர் முரசம் / எல்லோரும் கேட்டே எழுகின்ற நேரமிது”
“தம் மொழிக் கல்வியைக் கற்பதிலார்- அவர்/ துமிழ்மொழி கற்க நமை வருத்தி வாய் மொழி பெற்று மகிழ்ந்திடுவார்-அவர் / வாழ்க்கையில் ஞானம் வருவதயில்லை” -என்ற கவிதை வரிகள் மூலம் தாய் மொழிப் பற்றினையும், 
தமிழ் வழிக் கல்வியையும் அன்றே வலியுறுத்தியுள்ளார். விஜயரங்கம், விஜயன் சி.வி.ர என்பன கவிஞர் தமிழ் ஒளியின் புனை பெயர்கள் ஆகும். முன்னணி, புதுமை இலக்கியம், சாட்டை போன்ற இதழ்களில் பணியாற்றினார். மாணவப் பருவத்தில் திராவிட நாடு, குடியரசு, புதுவாழ்வு ஆகிய திராவிட இதழ்களிலும் கவிதைகளை எழுதினார்.
 
வாழ்க்கை கற்றுக்கொடுத்த சிகப்பு சிந்தனை
 
மற்றொரு பக்கம் உலக நிகழ்வுகளை, சமகால அரசியலை, உழைக்கும் மக்கள் வாழ்க்கைப் பாடுகளை, சாதியின் பெயரால் நடக்கும் கொடுமைகளை, வீதியில் அலையும் மனிதர்களை நேரடியாக கண்ணுற்ற கவிஞரின் சிந்தனைகள் விரிந்த களம் நோக்கி பேசத் துவங்கியது. பொதுவுடமைக் கொள்கையே உண்மையான சமூக மாற்றத்திற்கான திறவுகோல் என கண்டார். 
 
சனயுகம் என்னும் மாத இதழைத் தம் சொந்த முயற்சியில் நடத்தி மார்க்சியக் கருத்துகளைப் பரப்பத் துவங்கினார். இரண்டாம் உலகப்போர் நடந்துகொண்டிருந்த காலக்கட்டத்தில் பாசிசத்துக்கு எதிராக உலகத்தில் இருக்கும் அனைத்து எழுத்தாளர்களும் குரல் எழுப்ப வேண்டும் என்ற அறைகூவல் உலகம் முழுக்க எழுந்தது. அதன் ஒரு பகுதியாக இந்திய முற்போக்கு எழுத்தாளர் அமைப்புகள் உருவாயின. முதலில் தோன்றியது லண்டனில்தான். தொடர்ந்து இந்தியாவில் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தொடங்கப்பட்டது. அதற்குப் பிறகு, தமிழ்நாட்டில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை தொடங்கியவர் கவிஞர் தமிழ் ஒளி.
 
1947 ஆம் ஆண்டு வாக்கில் அவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராக தன்னை இணைத்துக் கொள்கிறார். மேதினத்தை முதலில் அரசியல் களத்தில் கொண்டாடியது மாமேதை சிங்காரவேலன் என்றால் முதலில் அதை கவிதையாக வடித்தது கவிஞர் தமிழ் ஒளி ஆவார். சோவியத் புரட்சியை தமிழில் முதலில் பாடியது எட்டயபுரத்து கவிஞர் என்றால் சீனப் புரட்சி குறித்து தமிழில் நான்கு கவிதைகள் புனைந்தது ஆடூர் கவிஞனாவார்.
 
1948 இறுதியில் ‘கம்யூனிஸ்ட் கட்சி’ இந்திய அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டபோது, கட்சி பிரச்சார சாதனங்கள் அனைத்தும் முடக்கப்பட்டன. அந்தச் சூழலில் ‘முன்னணி’ ஏடு முகிழ்ந்தது. கவிஞர் குயிலனும், தமிழ் ஒளியும் இணைந்து செயல்பட்டனர். இந்த ஏட்டில்தான் சீனப் புரட்சி குறித்த அவரது கவிதைகள் வெளி வந்தன.
 
‘உழவனின்’ பொங்கல் கனவு, ‘நெசவாளி’ விரும்பாத தீபாவளி, துயரச் சுமை தூக்கும் ‘துறைமுகத் தொழிலாளி’ கடலைப்பார்த்து கண்ணீர் சிந்தும் ‘மீனவர்’, மீளாத் துயரில் ஆழ்ந்திருக்கும் ‘சலவைத் தொழிலாளி’, எப்போதும் ஏக்கப் பெருமூச்சுவிடும் ‘அரிசன மக்கள்’, வீதியில் நின்று கையேந்தும் ‘கழைக்கூத்தாடி’, விதியை நொந்து விடிவு காணாத விதவையர் பற்றிய கவிதைகள் அனைத்துமே தமிழ் ஒளியின் புரட்சிப் பாடல்கள் தாம். கவிஞன் அடிப்படையில் ஒரு கலைஞன். கற்பனை ஊற்றெடுக்கும் அவன் உள்ளம், பரந்த உள்ளம். அங்கே உவமைகள் ஒளி வீசும். அணி நலன்கள் அலை புரளும். கலை ஓவியமாகக் கவிதை வடிவம் பெறும் என்று சஞ்சீவி கூறுவது உண்மைதான். வாழ்க்கைப் பாடுகள் அவருக்கு கவிதைகள் உருவாக கச்சாவானது(மூலமானது).
 
ஆணவக் கொலையை காவியத்தில் பதிவு செய்த கவிஞர்
 
கவிஞர் தமிழ்ஒளியின் காப்பியம் வீராயி. சிதைந்த சேரி, வீராயி தப்பினாள், நிலைபெற்ற உறவு, வாழ்வில் இடி, அண்ணன் எங்கேடி, கொலைகாரன், மன்றினில் வீரன், சிதறிய குடும்பம், தேயிலைத் தோட்டத்திலே, மாரி இறந்தான், காதலன் கிடைத்தான், கண்ணீர் வெள்ளம், கப்பல் ஏறினர், மங்கையுடன் வந்தான், பறைச்சியா?, பயப்படாதே, புரட்சி மணம், நாடு செய்த தீமை, முடிந்தது வாழ்வு ஆகிய உட்பிரிவுகளால் ஆனது. கவிதை வடிவில் இயற்றப்பட்ட காப்பியம் இது.
 
வீராயி என்ற ஒடுக்கப்பட்ட சாதியைச் சார்ந்த பெண்ணின் வாழ்க்கைப் பாடுகளை, சாதியின் பெயரால் அவள் விரட்டப்பட்ட நிலையை, நாடுவிட்டு நாடு கடந்தும் விரட்டும் அவலத்தை பேசும் காவியம் இது. ஆனந்தன் என்ற மாற்று சாதி இளைஞர் இவளை விரும்பி திருமணம் செய்து கொள்கிறான். தங்களை உயர் சாதி என்று நம்பும் அவனது சாதியை சேர்ந்த சாதி ஆதிக்கவாதிகள் ஆனந்தனையும் வீராயியையும் ஆணவப் படுகொலை செய்வதுடன் கப்பியம் நிறைவு பெறுகிறது. அனேகமாக ஆணவக் கொலையை காவியத்தில் பதிவு செய்த கவிஞர் தமிழ் ஒளியாகத்தான் இருப்பார்.
 
பொதுவாக கம்யூனிஸ்டுகள் சாதிப் பிரச்சனையிலும், மொழி பிரச்சனையிலும் அக்கரை காட்டியதில்லை என போகிற போக்கில் எப்போதும் விமர்சனங்களை வீசுவோர் உளர். அத்தகையோர்களுக்கு தோழர் தமிழ் ஒளியை அறிமுகம் செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
 
கவிஞர் தமிழ் ஒளி, 9 காப்பியங்கள், 2 குறு நாவல்கள், 30 சிறுகதைகள், 20 ஓரங்கநாடகங்கள், 3 மேடைநாடகங்கள், 100 குட்டிநாடகங்கள், 3 ஆய்வு நூல்கள், பல்வேறு ஆய்வுக்கட்டுரைகள் எழுதியு ள்ளார். அவை அனைத்தும் வாழ்க்கை குறித்து எழுதப்பட்ட படைப்புகளாகும். சிவாஜிகணேசன் நடித்த வணங்காமுடி திரைப்படம் தமிழ் ஒளியின் நாடகத்தை வைத்து எடுக்கப்பட்டது. சில படங்களில் பாடல்கள் எழுதி உள்ளார்.
 
அந்த மகத்தான மக்கள் கவிஞர் நூற்றாண்டு விழாவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பெருமையுடன் கொண்டாடுகிறது.
 

( - எஸ்.ஜி.ரமேஷ்பாபு / 27.09.2024 அன்று தீக்கதிர் நாளிதழில் வெளியான கட்டுரை)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக