நேற்று தோழர் ஆர்.முத்துசுந்தரம் நினைவு தினம் என முகநூலில் தோழர்கள் இட்ட பதிவுகளை பார்த்தேன். அந்த மகத்தான ஆளுமை குறித்த நினைவுகள் சுழல துவங்கியது. அதில் ஒரு நினைவுக் குறிப்பு இது.
1991 ஆம் ஆண்டு நான் இந்திய மாணவர் சங்கத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த காலம், அது. அப்போது கடலூரில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் ஒரு நிகழ்வில் தோழர் ஆர்.எம்.எஸ் பேச வந்திருந்தார். தலைப்பு ”வெள்ளிப் பணி மலை மீது உலாவுவோம். அவர் நன்றாகப் பேசுவார் என்று தோழர்கள் சொன்னார்கள். கடலூர் சென்றேன். கூட்டம் துவங்கும் முன்பு ஒரு பெட்டிக்கடை வாசலில் ஒரு மெல்லிய உருவம் சிகிரெட் பிடித்தபடி நின்றது. அவருடன் சில அரசு ஊழியர் சங்க தோழர்கள் பேசிக்கொண்டிருந்தனர். ஆர்.எம்.எஸ் எனத் தோழர்கள் அடிக்கடி பேசியதை கேட்டு பெரிய தலைவர் என்ற பிம்பம் எழுந்தது. அங்கு நின்று கொண்டிருந்த தோழர்களிடம் எப்போது நிகழ்ச்சி துவங்கும் உங்கள் தலைவர் வந்துவிட்டாரா என்று கேட்டேன். அங்கு சிகெரெட் பிடித்துக்கொண்டிருந்த மெல்லிய உருவம் சிரித்துக்கொண்டே சொன்னது “வந்துகொண்டே இருக்காரு தோழர் சீக்கிரம் ஆரம்பிக்கலாம்”
எங்களுக்கு தலைவர்கள் என்றால் கே.பாலகிருஷ்ணன், சி.கோவிந்தராஜன், எஸ்.துரைராஜ், ஜி.கலியபெருமாள், டி.ராஜாராமன், மூசா போன்றோர்கள்தான். எல்லோரும் ஆஜானுபாகுவான உருவங்கள். அந்த கற்பனையில் ஆர்.எம்.எஸ் அவர்களை எதிர்ப்பாத்துக்கொண்டிருந்தேன். கூட்டம் துவங்கியது தோழர் டி.புருஷோத்தமன் கணீர் குரலில் பேசி ஆர்.எம்.எஸ் அவர்களை மேடைக்கு அழைத்தார். எனக்கு ஆச்சரியத்தை அடக்கவே முடியவில்லை. சிகிரெட் பிடித்த அந்த மெல்லிய உருவம் மேடை ஏறியது. மைக் ஸ்டேண்டைவிட கொஞ்சம் சதை பிடிப்போடு இருந்த அந்த உருவமா ஆர்.எம்.எஸ்? இவர் பேசுவாரா?
மனிதர் பேச பேசக் காதே இல்லாத பாம்பு மகுடிக்கு தலை ஆடும் சூட்சுமம் போல அந்த அந்த மனிதர் அந்த அரங்கத்தைக் கட்டிப் போட்டார். எனக்கு உடல் சிலிர்த்தது. அப்படி ஒரு குரலும் அதிலிருந்து தெளித்த சொற்களும், சொல்ல வந்ததை மிக எளிதாகக் கோபம் கொப்பளிக்க சொல்லும் வல்லமை அந்த மனிதனுக்கு இயல்பாய் வாய்த்ததா அல்லது இயக்கம் அளித்த கொடையா என தெரியவில்லை. ஆளும் வர்க்கத்தின் மீது இருந்த கோபத்தை அவர் பேசுவதைக் கேட்போர் மீது மிக எளிதாக அவரால் மடை மாற்றம் செய்ய முடிந்தது. பிறகு அவரது நிகழ்வுகளை நான் தவற விட்டதே இல்லை.
1993 – 94 கல்வியாண்டில் சிதம்பரம் அரசு கலைக்கல்லூரியில் நடந்த தேர்தலில் பொருளியல் துறையின் செயலாளராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். அக்கல்லூரியில் இந்திய மாணவர் சங்கத்திற்கும் பா.ம.க மாணவர் அணிக்கும் நடந்த சுவராசியமான சம்பவங்களை தனியாக எழுதலாம். ஒவ்வொரு வேலை நிறுத்தத்தின் போது இரு அமைப்புகளுக்கும் தகராறு நடப்பது அங்கு இயல்பாக இருந்தது. இந்த சூழலில் ஒவ்வொரு துறை பேரவை நிறைவு விழாக்களும் வெட்டி நிகழ்வுகளாக நடைபெறும். மாணவர்களிடம் வசூல் செய்து கும்மாளம் அடிக்கும் நிகழ்வாக நடந்துகொண்டிருந்தது.
பொருளியல் பேரவை நிறைவு விழாவை மிகவும் பயன் உள்ள நிகழ்வாக நடத்த அங்கிருந்த மாணவர் சங்க தோழர்களும் எனது நண்பர்களும் திட்டமிட்டோம். ஒரு நல்ல பேச்சாளரை அழைத்து நிகழ்வை நடந்த திட்டமிட்டோம். எங்கள் துறை தலைவர் பேரா.ஜெயராமன் மிகவும் மகிழ்வுடன் ஒப்புக்கொண்டார். எனக்கு யோசனை செய்ய வேண்டிய அவசியம் இல்லாமல் மனதில் தோன்றிய பெயர் தோழர் ஆர்.எம்.எஸ். அரசு ஊழியர்கள் சங்க தோழர்கள் மூலம் அவரது தேதியை வாங்கி அழைப்பிதழ் போட்டாகிவிட்டது.
நிகழ்ச்சி அன்று தோழர் ஆர்.எம்.எஸ் குறித்த நேரத்தில் கல்லூரிக்கு வந்துவிட்டார். கல்லூரியின் எதிரில் உள்ள ”பெருசு” தேநீர்க்கடையில் அமர்ந்து ஒரு சிகிரெட் பிடித்துக்கொண்டிருந்தார். அவர் அருகில் அவருடன் நான் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது பேரவை எற்பாடுகளைக் கவனித்துக்கொண்டிருந்த எனது நண்பர்கள் அஸ்லாமும், சங்கரும் வேகமாக வந்து ”மச்சான், எப்படா உங்க தோழர் வருவாரு” என்றனர். நான் சிரித்துக்கொண்டே கொஞ்சம் நேரத்தில் வந்துவிடுவார். நீங்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டைப் பாருங்கள் என்றேன். அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலச் செயலாளர், சிறந்த பேச்சாளர் என நாங்கள் செய்த பில்ட் அப்பை பார்த்து அவர்கள் ”பெரிய்ய்ய்ய்ய்ய தலைவரை” எதிர்பார்த்திருந்தனர். ஆனால் என்னை விட குள்ளமாக என்னைப் போல ஒல்லியாக சிகெரெட் பிடிக்கும் ஒரு உருவத்தை அவர்கள் எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லைதான்.
முதலில் எங்கள் கல்லூரி முதல்வர் அனந்தபத்மநாபன் அவர்கள் அறைக்குச் சென்று அறிமுகம் செய்தேன். அவர் இவர் உருவத்தை ரசித்ததாக தெரியவில்லை. பிறகு நிகழ்வு நடைபெறும் அரங்காம் சென்றோம். நான் வரவேற்புரை ஆற்றிவிட்டு தோழர் ஆர்.எம்.எஸ் அவர்களைப் பேச அழைத்தேன். அளவுதான் கூச்சல் துவங்கியது. கூட்டத்தை கலைக்க ஒரு கூட்டம் திட்டமிட்டிருந்தது தெரிந்தது. நானும் எனது சகாக்களும் ஆத்திரத்துடன் எழுந்தோம். ஆர்.எம்.எஸ் சிரித்துக்கொண்டே என் கையை பிடித்து அமரச் சொன்னார்.
மைக் அருகில் சென்றார். ”ஏய்” என ஒரு ஓசை எழுப்பினார். கூச்சல் இட்ட அனைவரும் திரும்பினர். ”தோ பார், இஷ்டம் இருந்தால் உள்ளே இரு. இல்லை என்றால் வெளியே போ. நான்கு பேர் இருந்தாலும் நான் பேசுவேன்.” என ஆக்ரோஷமாக முழங்கினார். யாருமே இதை எதிர்பார்க்கவில்லை. சட்டென ஒரு மயான அமைதி. அந்த இடத்தை பிடித்து ஏறத்துவங்கினார் அப்படி ஒரு உரை வீச்சு அது. ஒரு மணி நேரம் பதினைந்து நிமிடம். உரைந்து நின்றது அரங்கம். அவர் நன்றி என்று முடித்த போது எழுந்த கரவொலி அடங்க நேரமானது. எனது கல்லூரி முதல்வர் அங்கு நடந்த ரசவாதம் புரியாத திகைப்பில் இருந்தார். அவரை அறிமுகம் செய்த போது அவர்கள் கண்களில் இருந்த அலட்சியம் இப்போது மரியாதை மிகுந்து காணப்பட்டது. எங்கள் துறைத் தலைவர் மிகவும் பெருமிதம் மிக்க நன்றியை ஆர்.எம்.எஸ் அவர்களுக்குச் சொன்னார். எனது சகாக்கள் ”மாப்ள .. உண்மையில் அவரு பெரிய்ய்ய்ய்ய்ய தலைவர் தாண்டா” என்றனர்
ஒரு நட்சத்திரம் மேகங்களுடன் கடந்து செல்வது போல நானும் எனது சகாக்களும் அவரை கல்லூரியிலிருந்த வெளியே அழைத்து வந்தோம்.
தன்னுடைய பேச்சாற்றலால், எழுத்தாற்றலால், சங்க செயல்பாட்டினால் மாநில செயலாளர், மாநில பொதுச்செயலாளர் மற்றும் அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளன தலைவராக உயர்ந்த ஆர்.எம்.எஸ் என்ற ஆளுமையிடம் அதற்குப் பிறகு மிக நெருக்கமாகப் பழக வாய்ப்புகளை மாணவர் மற்றும் வாலிபர் சங்கம் எனக்கு வழங்கியது.
உங்கள் நினைவுகள் உரமேற்றும் நினைவுகள் தோழர் ஆர்.எம்.எஸ்.
- எஸ்.ஜி.ரமேஷ்பாபு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக