திங்கள், 16 நவம்பர், 2026

தோற்றவரை மதிப்பதே விளையாட்டு





 :19 வயதுக்குட்பட்டோர் ஆசியக் கோப்பை வெற்றியும் இழந்த கண்ணியமும் 

 

19 வயதுக்கு உட்பட்டோர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி நவம்பர் 14 அன்று ஓமனின் அல் அமராத் மைதானத்தில் இந்தியா–பாகிஸ்தான் இடையே நடந்தது. 1989-ல் தொடங்கிய இந்தத் தொடரின் 13-வது பதிப்பு இது. 2025 இறுதிப் போட்டியில் இந்தியாவை வென்ற பாகிஸ்தான், இந்தத் தொடரின் லீக் ஆட்டத்திலும் இந்தியாவை வீழ்த்தியிருந்ததால் எதிர்பார்ப்பு உச்சத்தில் இருந்தது.

முதலில் ஆடிய பாகிஸ்தான் 339 ரன்கள் குவித்து, இத்தொடரின் இறுதிப் போட்டியில் அதிகபட்ச ஸ்கோர் என்ற சாதனை படைத்தது. 42-வது ஓவரில் 252 ரன்னுக்கு 8 விக்கெட் இழந்து தோல்வியின் விளிம்பில் நின்ற இந்தியாவுக்கு, 48 பந்துகளில் 85 ரன்கள் தேவைப்பட்டன. மணல் சவுகானும் மோகித் உல்வாவும் அபாரமாக ஆடி, கடைசிப் பந்தில் மூன்று ரன் தேவை என்ற நிலையில் பவுண்டரி அடித்து இந்தியாவை வெற்றி பெறச் செய்தனர். இறுதிப் போட்டியின் அதிகபட்ச ஸ்கோரை விரட்டி வென்ற சாதனையும் இந்தியா வசமானது. இதுவரை இந்தியா 9 முறையும், பாகிஸ்தான், வங்கதேசம் தலா 2 முறையும், ஆப்கானிஸ்தான் ஒருமுறையும் இக்கோப்பையை வென்றுள்ளன; 2012-ல் இந்தியாவும் பாகிஸ்தானும் கோப்பையைப் பகிர்ந்துகொண்டன.

வெற்றிக் களிப்பா, வெறுப்பா?

வெற்றியில் இளம் வீரர்கள் துள்ளிக் குதித்தது இயல்பு. ஆனால் தோற்ற பாகிஸ்தான் வீரர்களிடமும் அந்நாட்டுப் பார்வையாளர்களிடமும் நம் இளம் வீரர்கள் நடந்துகொண்ட விதம் அருவருப்பாக மாறியது. இரு அணி வீரர்களுக்கும் இடையே அணி நிர்வாகிகளும் நடுவர்களும் நின்று தடுக்கப் படாதபாடு பட்ட காட்சி தொலைக்காட்சியில் அதிர்ச்சியளித்தது. மற்ற அணிகளை வெல்லும்போது வராத ஆக்ரோஷம் பாகிஸ்தானை வெல்லும்போது மட்டும் எப்படி வருகிறது? இது இளம் மனங்களில் திட்டமிட்டுப் பதியவைக்கப்பட்ட ஒன்று. அதன் பின் வீரர்களை வரிசையாக அமர வைத்துத் தியானம் செய்வது போல எடுத்த படங்களையும் காணொலிகளையும் சமூக ஊடகங்களில் பரப்பி, “ஜெய் ஸ்ரீராம்”, “இந்து சமயத்தின் வெற்றி” என்று மத வெறியர்கள் கொண்டாடி வருகின்றனர். இதற்கு முன் கண்டிராத காட்சிகள் இவை. விளையாட்டு வீரர்களை மதத்தின் பெயரால் அணிதிரட்டும் இந்தப் போக்கு ஆபத்தானது.

சாம்பல் சொல்லும் பாடம்

1882 ஆகஸ்ட் 29 அன்று லண்டன் ஓவல் மைதானத்தில் இங்கிலாந்தை 7 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி, இங்கிலாந்து மண்ணில் தனது முதல் டெஸ்ட் வெற்றியைப் பெற்றது ஆஸ்திரேலியா. “இங்கிலாந்து கிரிக்கெட் இறந்துவிட்டது; அதன் சாம்பல் ஆஸ்திரேலியாவுக்குக் கொண்டு செல்லப்படும்” என்று “தி ஸ்போர்ட்டிங் டைம்ஸ்” இதழ் கிண்டலாக இரங்கல் செய்தி வெளியிட்டது. அதிலிருந்து பிறந்ததுதான் “ஆஷஸ்” தொடர். 140 ஆண்டுகளுக்கும் மேலாக இரு நாடுகளின் கௌரவப் போட்டியாக நடந்தாலும், அதில் வெறுப்புக்கு இடமில்லை. விளையாட்டு, மனங்களை வெல்வதற்கானது; வெறுப்பை விதைப்பதற்கானது அல்ல. ஆனால் இந்தியாவில் இந்தியா–பாகிஸ்தான் போட்டி ஒரு யுத்தம் போல விளம்பரப்படுத்தப்படுகிறது. “யாரிடம் தோற்றாலும் பரவாயில்லை, பாகிஸ்தானிடம் மட்டும் தோற்கக் கூடாது” என்று வெறியேற்றப்படுகிறது.

எது தேசப்பற்று?

1987
பிப்ரவரியில், பிரதமர் ராஜீவ் காந்தியின் அழைப்பை ஏற்று, பாகிஸ்தான் ஜனாதிபதி ஜியா உல் ஹக் ஜெய்ப்பூரில் இந்தியா–பாகிஸ்தான் டெஸ்ட் போட்டியைக் காண வந்தார். 2005 ஏப்ரலில், தில்லி ஃபிரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடந்த ஒருநாள் போட்டியை அன்றைய பிரதமர் மன்மோகன் சிங்கும் பாகிஸ்தான் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப்பும் இணைந்து கண்டு ரசித்ததும் இதே இந்தியாவில்தான். பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, அது கட்டமைத்த “தேசபக்தி” பிம்பம் விளையாட்டையும் விட்டுவைக்கவில்லை. பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு வருவதும், இந்திய அணி பாகிஸ்தான் செல்வதும் நிறுத்தப்பட்டன. பாகிஸ்தானிடம் தோற்றால் அது தேசத்துக்கே அவமானம் என்று பிரச்சாரம் செய்யப்பட்டது. எல்லைப் பிரச்சனை கிரிக்கெட் மைதானத்தின் பவுண்டரி எல்லை வரை விரிவுபடுத்தப்பட்டது. 

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, 2025 செப்டம்பர் 14 ஆசியக் கோப்பை டி20 போட்டியில் இந்தியக் கேப்டன் சூர்யகுமார் யாதவ், பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகாவுடன் கைகுலுக்கவில்லை; இந்திய வீரர்கள் கைகுலுக்காமலேயே மைதானத்தை விட்டு வெளியேறினர். வெற்றியை இந்திய ராணுவத்துக்கு அர்ப்பணிப்பதாக சூர்யகுமார் அறிவித்தார். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவரும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான மொஹ்சின் நக்வியிடமிருந்து ஆசியக் கோப்பையைப் பெற இந்திய அணிகள் மறுத்தன. இவற்றையெல்லாம் சங் பரிவார் கூட்டம் தேசபக்தச் செயலாகக் கொண்டாடித் தீர்த்தது. அதன் விளைவுதான் இன்று இளம் வீரர்களின் நெஞ்சில் நஞ்சாக விளைந்து நிற்கிறது.

விளையாட்டு உணர்வு

1896-
ல் தொடங்கிய நவீன ஒலிம்பிக் போட்டிகளின் அடிப்படை நோக்கம், மனிதர்களிடையே ஒற்றுமை, அமைதி, நட்பு, உடல் வலிமை, மன உறுதி ஆகியவற்றை வளர்ப்பது. வெறும் பதக்கப் போட்டியாக அது தொடங்கப்படவில்லை. ஆனால் 1936 பெர்லின் ஒலிம்பிக்கை ஹிட்லர் நாஜிப் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்திய வரலாறும் உண்டு. அந்த வரலாற்றை மோடி அரசு திருப்பிக் கொண்டு வர நினைக்கிறது. கார்ப்பரேட் விளையாட்டான கிரிக்கெட் கோடிகளைக் குவிப்பதோடு, அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா பிசிசிஐ செயலாளராக இருந்து இன்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராக “உயர்ந்துள்ள” சூழலில், அவர்களின் பிரச்சாரக் களமாகவும் மாற்றப்படுவது கவலையளிக்கிறது.

2014
ஆசியக் கோப்பையில் நடந்த இந்தியா–பாகிஸ்தான் போட்டி நினைவுக்கு வருகிறது. கடைசி ஓவரை வீசிய ரவிச்சந்திரன் அஸ்வினின் பந்துகளில் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்கள் அடித்து, இந்தியாவின் வெற்றியைப் பறித்துச் சென்றார் ஷாகித் அப்ரிடி. போட்டிக்குப் பின் அப்ரிடியிடம் சென்ற அஸ்வின், “சகோதரரே, சிறப்பாக வீசிய என் இரண்டு பந்துகளையும் உங்கள் அபார பலத்தால் சிக்ஸர்களாக்கியதற்கு மனதாரப் பாராட்டுகிறேன்” என்றார். இதுதான் விளையாட்டு உணர்வு. வென்றவர்கள் தோற்றவர்களைக் கண்ணியத்தோடு நடத்துவதும், தோற்றவர்கள் வென்றவர்களின் வெற்றியை மதிப்பதும்தான் விளையாட்டின் கண்ணியம். இழந்த அந்தக் கண்ணியத்தை இந்திய வீரர்கள் மீட்டெடுக்க வேண்டும். 

- எஸ்.ஜி. ரமேஷ்பாபு 

(16.11.2026 அன்று தீக்கதிரில் வந்த கட்டுரை) 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக